இந்துத்துவப் பாசிச மோடி கும்பல் ‘வரைவு தேசிய கல்விக் கொள்கை (DNEP)’ ஒன்றை முன்வைத்துள்ளது. ஒரு பக்கம் ‘கருத்துக் கேட்பு’ நாடகமாடிக்கொண்டே, மறுபக்கம் உயர்கல்வியில் கார்ப்பரேட்டுகளை அனுமதிக்க ரூ.400 கோடியையும், இந்தி மொழியைக் கட்டாயமாகத் திணிக்க ரூ.50 கோடியையும் நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளதன் மூலம் தேசிய கல்விக் கொள்கையை மோடி அரசு நடைமுறைப்படுத்தத் துவங்கிவிட்டது. தமிழக அரசு 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டது. பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பலின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கல்வியாளர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் பரந்த அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் ‘காட்ஸ்’ ஒப்பந்தமும், ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்துவா திட்டமும் கைகோர்க்கும் கல்விக் கொள்கை
மோடி கும்பல் முன்வைத்துள்ள தேசிய கல்விக் கொள்கையானது குருகுலக் கல்வி, குலக் கல்வி, மெக்காலே கல்வி போன்ற கல்வி முறைகளை உள்ளடக்கியதாகவும், ராஜீவ் கும்பலின் புதிய கல்விக் கொள்கையின் முழுமைப்படுத்தப்பட்ட வடிவமாகவும் உள்ளது. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்சிக் கல்வி வரை என கல்வி முழுவதையும் தனியார்மயம் என்பதைத் தாண்டி பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு கல்வி நிறுவனங்களின் தடையற்ற வர்த்தகக் கொள்ளைக்கும் காட்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் திறந்துவிடும் துரோகத்தனமான கொள்கையாக மோடி கும்பலின் கல்விக் கொள்கை அமைந்துள்ளது. ஏகாதிபத்திய நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் முதலாளித்துவ மிகு உற்பத்தி நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களது கல்வித் துறை நெருக்கடிகளைப் போக்குவதற்காகவே மோடி கும்பல் தேசிய கல்விக் கொள்கையை தயாரித்துள்ளது. மேலும், இது ஏகாதிபத்திய அடிமைத் தனத்தையும் இந்துத்துவப் பிற்போக்குத்தனத்தையும் குழந்தைப் பருவத்திலிருந்தே பரப்பி எதிர்காலச் சந்ததியை ஏகாதிபத்திய புதிய காலனியத்தின் கார்ப்பரேட் அடிமைகளாகவும், மனுதர்மவாதிகளாகவும், ஆன்மீகவாதிகளாகவும் மாற்றுகின்ற எதிர்ப்புரட்சிகரக் கல்விக் கொள்கையாகும். அதாவது, உடலால் கார்ப்பரேட்டுகளுக்கும் உள்ளத்தால் இந்துத்துவப் பாசிசத்திற்கும் சேவை செய்ய கொத்தடிமைகளைத் தயார் செய்து தருவதே இக்கல்விக் கொள்கையின் நோக்கமாகும். ஏகாதிபத்திய நிதிமூலதனச் சேவையை உள்ளடக்கமாகவும், இந்துத்துவத்தை வடிவமாகவும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையானது மாநில உரிமைகளை முற்றாகப் பறிப்பதாகவும், சமூக நீதிக்கு சாவுமணி அடிப்பதாகவும், கூட்டாட்சி முறைக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிராகவும் அமைந்துள்ளது.
மோடி கும்பலின் தேசிய கல்விக் கொள்கை உருவாகிவந்த துரோக வரலாறு
1950ஆம் ஆண்டு இந்திய அரசு 14 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி கட்டாயமாக 15 ஆண்டுகள் வழங்கப்படும் என சட்டம் கொண்டுவந்தது. ஆனால் அது இன்றுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. 1965ஆம் ஆண்டு கோத்தாரி கமிஷன் அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையை முன்வைத்தது. அதற்கு ஜி.டி.பி.யில் 6 சதவீதம் நிதி ஒதுக்கவேண்டும் என ஆலோசனை வழங்கியது. 1968ல் இந்திராகாந்தி முன்வைத்த தேசிய கல்விக் கொள்கை கோத்தாரி கமிஷனின் ஆலோசனைகளை நிராகரித்தது. இன்றுவரை மத்திய அரசு 2.5 சதவீதத்துக்கு மேல் கல்விக்கு நிதி ஒதுக்கியதே இல்லை. பாசிச இந்திராவின் கல்விக் கொள்கைதான் முதலில் மும்மொழிக் கொள்கையை பரிந்துரைத்தது. மேலும் 14 வயது வரை இலவச கட்டாயக் கல்வி என்று அதில் கூறப்பட்டிருந்தாலும் இன்றுவரை அது நடைமுறைக்கு வரவேயில்லை.
1986ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்தார். இந்தியாவை 21ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்வதாக கொக்கரித்தார். கல்வித் துறையில் தனியார்மயத்தை அனுமதித்ததுடன் அந்நிய முதலீட்டிற்கும் கதவைத் திறந்துவிட்டார். உலக வங்கி, யுனஸ்கோ, யுனிசெப் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களை கல்வித் துறையில் அனுமதித்தார். அனைவருக்கும் கல்வி என்ற ஜனநாயகக் கோட்பாட்டை ஒழித்துக்கட்டி கல்வியை வியாபாரமாக்குவதற்கு வித்திட்டார். வசதியுள்ளோருக்கு நவோதயா பள்ளி என்ற ஏற்றத்தாழ்வை கல்வித் துறையில் உருவாக்கினார். வசதி படைத்தோருக்கு கிண்டர் கார்டன், டேரா டூன், மாயோ போன்ற பள்ளிகள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் போன்ற உயர்கல்வியில் ஃபோர்ட், ராக்பெல்லர், யுனஸ்கோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டோடு மேட்டுக் குடியினருக்கு மிகவும் நவீனமான உயர்கல்வி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் ஏழைகள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கோ பள்ளிக் கல்வியை ஒழித்து முறைசாரா கல்வி மூலம் தற்குறிகளை உருவாக்குவதற்கு அடித்தளம் அமைத்தார்.
1990 ஆம் ஆண்டில் தாய்லாந்து நாட்டின் ஜாம்டைன் என்ற நகரில் ஏகாதிபத்தியவாதிகளால் கூட்டப்பட்ட மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளையே மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த மாநாட்டை உலக வங்கி, யுனஸ்கோ, யுனிசெப், யுனிபா போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள் நடத்தின. இம்மாநாட்டில் கல்வியை உலகம் முழுவதும் தனியார்மயமாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதனடிப்படையில் உருவாக்கப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம் குழந்தைகளை கல்வியிலிருந்து விரட்டியடிக்கத் துவங்கியது. 1991ஆம் ஆண்டு நரசிம்மராவ் அரசு புதிய பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தத் தொடங்கியது. உலகமயம், தாராளமயம், தனியார்மயம் போன்ற கொள்கைகளை செயல்படுத்தி நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் துரோகத்தை தீவிரப்படுத்தியது. நிதி நெருக்கடியை காரணம்காட்டி மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களிலிருந்தும் கல்வி தரும் பொறுப்பிலிருந்தும் விலகியது. ஏகாதிபத்தியங்களிடம் தொடக்கக் கல்வி, உயர்கல்வியை தாரைவார்க்கத் தொடங்கியது. ஜாம்டைன் மாநாட்டுத் தீர்மானம் பின்னர் காட்ஸ் ஒப்பந்தமாக உருவம் பெற்றது.
காங்கிரசு கும்பல் “காட்” (GATT - General Agreement on Trade and Tariff) எனப்படும் “பொருட்களின் வரி மற்றும் வர்த்தகம் மீதான பொது ஒப்பந்தத்தில்” கையெழுத்திட்டு நாட்டின் அனைத்து துறைகளையும் புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் ஏகாதிபத்திய நிதி மூலதனச் சுரண்டலுக்கு ஆட்படுத்தி புதிய காலனிய ஆதிக்கத்தை தீவிரப்படுத்தியது. இதைத் தொடர்ந்து கல்வி, மருத்துவம், நீர், மின்சாரம் போன்ற சேவைத் துறைகளையும் ஏற்றுமதி-இறக்குமதி செய்யும் வர்த்தகமாக மாற்றியமைக்கும் “காட்ஸ்” (GATS - General Agreement on Trade in Services) எனப்படும் “சேவைத் துறைகளில் வர்த்தகம் மீதான பொது ஒப்பந்தத்திலும்” காங்கிரசு கும்பல் கையெழுத்திட்டு கல்வியை ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளித்துவ வர்க்க கும்பலின் கொள்ளைக்கான ‘கடைச் சரக்காக’ (Tradable Service) மாற்றும் துரோகத்தைத் துவக்கி வைத்தது. இதைத் தொடர்ந்து வாஜ்பாய் ஆட்சியில், யுனெஸ்கோ மாநாட்டில் (1998) பேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி “கல்வி ஒரு வணிகப் பொருள்; அதில் அரசு தலையிடக் கூடாது” என்று வெளிப்படையாகவே காங்கிரசு கும்பலின் கல்விக் கொள்கையை வழிமொழிந்தார். இதை நடைமுறைப்படுத்துவதற்காகவே ‘பிர்லா-அம்பானி’ குழு உருவாக்கப்பட்டு கல்வி கார்ப்பரேட்டுகளின் வர்த்தகப் பண்டமாக மாற்றப்பட வேண்டிய தேவையை முன்வைத்து அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. பிறகு 2005ஆம் ஆண்டில் மன்மோகன்-சோனியா கும்பல் ‘தோகாவில் நடந்த உலக வர்த்தகக் கழக (கீஜிளி) மாநாட்டில், அமெரிக்க ஏகாதிபத்திய பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளித்துவ வர்க்க கும்பலின் தடையற்ற வணிகத்திற்கான கடைச் சரக்காக இந்திய கல்வித் துறையை மாற்றும் உத்தரவாதத்தை வழங்கியது. பிறகு 2015இல் நடந்த ‘நைரோபி’ பேச்சுவார்த்தையில் ஆப்பிரிக்க நாடுகளும் கூட கையொப்பமிட மறுத்துவிட்ட நிலையில், மோடி கும்பல் காங்கிரசு கும்பலின் உத்தரவாதத்தை உறுதிப்படுத்தி கையொப்பமிட்டது. இதனடிப்படையிலேயே பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல் ‘தேசிய கல்விக் கொள்கையைத்’ தயாரித்துள்ளது.
காட்ஸ் ஒப்பந்தமானது, கல்வித்துறையில் எல்லைத் தாண்டிய விநியோகம், வெளிநாட்டு நுகர்வு, வணிகத்திற்கான நேரடி வருகை, வெளிநாட்டு ஆசிரியர் வருகை, இணையக் கல்வி போன்றவற்றைக் கோருகின்றது. அது மட்டுமின்றி “உலகமய யுகத்தில் கல்வியைப் பன்னாட்டு மயமாக்குவது தவிர்க்க இயலாதது” என்று வெளிப்படையாக அறிவிக்கிறது. மேலும் “உலகின் தலைசிறந்த 200 பல்கலைக் கழகங்களில் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் இருப்பைச் சாத்தியமாக்க ஊக்குவிக்கப்படும்; இந்தியப் பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் கிளைகள் அமைத்துக்கொள்ளலாம்; வெளிநாட்டு மாணவர்களும் இங்கு வந்து பயிலும் வகையில் தர மேம்பாடு செய்யப்படும்; வெளிநாட்டு பல்கலைக்கழக ஆசிரியர்கள் இங்கு வந்து நமது பல்கலைக் கழகங்களில் சேவை செய்யலாம்” போன்ற அறிவிப்புகளும் காட்ஸ் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன. மேற்கூறப்பட்ட காட்ஸ் ஒப்பந்தத்தின் அறிவிப்புகள் அனைத்தும் தேசிய கல்விக் கொள்கையில் அச்சுப் பிறழாமல் கொண்டுவரப்பட்டுள்ளன.
அமெரிக்க கல்வித்துறை நெருக்கடியைத் தீர்க்கும் தேசிய கல்விக் கொள்கை
அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாளித்துவ மிகு உற்பத்தி நெருக்கடியானது அந்நாட்டின் அனைத்து துறைகளிலும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. வேளாண்துறை, மோட்டார் வாகனம், தொழில்துறை மற்றும் வர்த்தகத்துறை வீழ்ச்சியின் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டு சீன-ரஷ்ய ஏகாதிபத்திய முகாமிற்கும் அமெரிக்க முகாமிற்குமிடையில் பனிப் போராக வடிவம் பெற்றது. இதனால் அமெரிக்காவின் நெருக்கடி மேலும் ஆழப்பட்டு ஊக நிதி மூலதனம் ஊதிப் பெருத்தது. இதனால் எல்லா துறைகளைப் போலவே அமெரிக்க கல்வித்துறையும் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. “கல்விக் கட்டண உயர்வு; கல்விக்கான நிதி ஒதுக்கீடு வெட்டப்படுதல்; கல்வி நிறுவனங்களை நடத்த முடியாத சூழல்” போன்றவற்றால் அமெரிக்க கல்வித்துறை சந்தித்துவரும் நெருக்கடிகளைப் போக்கவே இந்தியக் கல்வி அமைப்பு ‘தேசிய கல்விக் கொள்கை வாயிலாக’ வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மோடி கும்பல் மருத்துவ உயர்கல்வியில் நீட் தேர்வைப் புகுத்தி அமெரிக்க கல்வித்துறை நெருக்கடியைப் போக்க முயற்சி எடுத்தது. அனிதாக்களைக் கொன்று தின்றபிறகும் அமெரிக்க நிதி மூலதனத்தின் பசி அடங்கவில்லை. ஆகவே, நீட் தேர்வை ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வியின் அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் மோடி அரசு விரிவுபடுத்தவுள்ளது. அனிதாக்களை ஆரம்பக் கல்வியிலேயே கொன்று விடுவதன் மூலம், மருத்துவக் கல்வி பற்றிய அவசியமற்ற கனவுகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் மத்திய அரசின் “நல்லெண்ண” நடவடிக்கையாகும் இது. இந்த “நல்லெண்ணத்திலிருந்தே” ‘நரமாமிச மோடி’ கும்பல் கார்ப்பரேட் பங்குச்சந்தை சூதாடிகளிடம் கல்வியை ஒப்படைத்துள்ளது.
கார்ப்பரேட் பங்குச் சந்தையில் கல்வித்துறை
கல்வி, மருத்துவம் போன்ற சேவைத் துறைகளை மேக்-இன்-இந்தியா திட்டத்துடன் ‘கல்விக் கொள்கை’ இணைக்கிறது. மேக் இன் இந்தியா என்பது இந்தியாவை அமெரிக்காவிற்கு ஏற்றவாறு தயாரிப்பதே (Making india for America) ஆகும். பங்குச் சந்தை சூதாட்டத்திற்கு ‘சமூக பங்குச் சந்தை’ என்று நீசத்தனமாகப் பெயிரிட்டு கல்வியை கார்ப்பரேட் பங்குச் சந்தையுடன் மோடி கும்பல் இணைத்துள்ளது. பெருகி வரும் அமெரிக்க ஊக நிதி மூலதன நெருக்கடியைத் தீர்க்க மோடி கும்பலின் ‘விதேசிய’ கல்விக் கொள்கை உறுதி பூண்டுள்ளது. இதன்படி அந்நிய ஊகநிதி மூலதனச் சூதாடிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளித்துவ வர்க்க பங்குச் சந்தைக் கும்பல்களின் கைகளில் ‘கலைமகள்’ தாரைவார்க்கப்படுகிறாள். கல்வி தரும் பொறுப்பிலிருந்து அரசு முற்றாக விலகி ஹார்வேர்ட், ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் போன்ற பன்னாட்டு பல்கலைக்கழகங்களின் தடையற்ற வணிகத்திற்கு கல்வித்துறை மொத்தமும் திறந்துவிடப்படுகிறது. மோடி கும்பல் கூறும் உலகத்தரமான பல்கலைக்கழகங்கள் மூன்றாம் உலக நாடுகளுக்கென்று ‘வேறு தரத்தை’ நிர்ணயிப்பதாக யுனெஸ்கோ ஆய்வு ஒன்று ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளது. பில்கேட்ஸ், மார்க் ஜூகர்பெர்க் போன்ற அமெரிக்க ‘கொடை வள்ளல்களுக்கும்’, அம்பானி, அதானி போன்ற ‘தர்மபிரபுகளுக்கும்’ கல்வி தாரைவார்க்கப்படுவதாக தேசிய கல்விக் கொள்கை எவ்வித கூச்சமுமின்றி கூறுகிறது. இதன் மூலம் கல்வியானது பெரும் பணக்காரர்களின் ‘உரிமையாகவும், கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் ‘தீண்டாமை’யாகவும் மாற்றப்படுகிறது. மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்களையும் கல்வி அமைப்பிலிருந்து வெளியேற்றி அவ்விடத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI), வெளிநாட்டவர்கள் மற்றும் இந்திய மேட்டுக்குடியினரை தேசிய கல்விக் கொள்கை மாற்றீடு (Replace) செய்கிறது.
ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இந்துத்துவத் திணிப்பு
இந்துத்துவம் என்பது இங்குள்ள சிறுபான்மை மதத்தினருக்கு எதிரானது மட்டுமின்றி, இந்து மதத்திலேயே இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிரான கழிசடை தத்துவமாகும். இஸ்லாமிய வெறுப்பு, தேசிய வெறி, தலித் வெறுப்பு, பெண்களைக் கீழாகக் கருதுவது போன்ற இந்துத்துவப் பிற்போக்கு கழிசடைச் சிந்தனைகளை கல்விக் கொள்கையில் புகுத்துகிறது மோடி கும்பல். எது உயர்ந்த மதம், எது கீழ்சாதி போன்ற வினாக்கள் ஏற்கனவே மத்திய அரசு பாடத்திட்ட (CBSE) தேர்வுகளில் இடம் பெறத் தொடங்கிவிட்டன. இந்தியக் கலாச்சார மீட்பு எனும் பெயரில் மூடநம்பிக்கைகளையும், சீழ்பிடித்த நால்வர்ண கொள்கைகளையும், பார்ப்பனிய பிற்போக்குக் குப்பைகளையும், சாதி-தீண்டாமை இழிவுகளையும், மதவெறி, தேசியவெறியையும் தேசிய கல்விக் கொள்கையில் புகுத்துகிறது மோடி கும்பல். இவ்வாறு எதிர்கால சந்ததியை போலி தேசபக்த போதையில் ஆழ்த்த இந்துத்துவப் ‘போதை வஸ்துவை’ கல்விக் கொள்கையில் கலக்கிறது பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல். ஏனெனில் ‘இந்துத்துவப் போதை’ என்பது ஏகாதிபத்திய நிதி மூலதனச் சேவைக்கு மிகவும் அவசியமானதாகும். இதற்காகவே குருகுலக்கல்வி, குலக்கல்வி, பாடசாலை, ஆன்மீகக் கல்வி போன்ற நிலவுடமை உற்பத்தி முறையைப் பாதுகாக்கும் பிற்போக்கு கல்விமுறைகள் புகுத்தப்படுகின்றன.
குருகுலக் கல்வி என்பது ஆசிரியரை மையமாகக் கொண்டு (மாணவர்களை மையமாகக் கொள்ளாமல்), வேதங்கள், ஆகமங்கள், சோதிடம், புரோகிதம், இதிகாசங்கள், ஆன்மீகம், யோகா போன்றவற்றை தேசியக் கல்விக் கொள்கையில் பாடத்திட்டமாகப் புகுத்துவதாகும். மாணவர்களுக்கு ஒழுக்க நெறியையும், தேசபக்தியையும் குருகுலக்கல்வி முறையே கற்றுத் தரும் என்று 2018இல் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் பங்குபெற்ற குருகுலக் கல்வி மாநாட்டில் மோகன்பகவத் பேசினார். தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் தலையீடு உள்ளது என்பதை இது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது.
தேசிய கல்விக் கொள்கையானது, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை விடலைப் பருவத்தினர் (Adolescents) என வரையறுத்து பள்ளி நேரத்திற்கு அப்பாலும் விடுமுறை நாட்களிலும் அவர்களை ஆபத்தற்ற தொழில்களில் அமர்த்தலாம் எனவும், குடும்பத் தொழில்களில் (அதாவது குலத்தொழில்களில்) ஈடுபடுத்தலாம் எனவும் தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. மூன்றாம் வகுப்பிலேயே நீட் தேர்வைத் திணித்து கல்வியிலிருந்து விரட்டியடிக்கப்படும் குழந்தைகள் தங்களது குலத் தொழில்களில் ஈடுபடலாம் என்கிறது மோடி கும்பல். மலம் அள்ளுபவரின் குழந்தை மலம் அள்ள வேண்டும் என்பதையும், செருப்பு தைப்பவரின் குழந்தை செருப்பு தைக்க வேண்டும் என்பதையும் கல்விக் கொள்கைமூலம் சட்டமாக்குகிறது பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல். அதாவது ‘குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம்’ சட்டவிரோதமாக்கப்பட்டு, குழந்தை உழைப்பு சட்டபூர்வமாக்கப்படவுள்ளது. ராஜாஜியின் குலக்கல்வி முறையை மீண்டும் புகுத்துவதன் மூலம் குழந்தை உழைப்பை சட்டப்படி கட்டாயமாக்குகிறது தேசிய கல்விக் கொள்கை.
இவ்வாறு குருகுலக்கல்வி மற்றும் குலக்கல்வி முறைகள் புதிய காலனிய வடிவில் புகுத்தப்பட்டு, வருங்கால தலைமுறையினரை தற்குறிகளாகவும், பண்டாரங்களாகவும், ஆன்மீகவாதிளாகவும், மனுதர்மவாதிகளாகவும் சிந்தனைத் துறையில் மாற்றியமைத்து, செயலில் அவர்கள் கார்ப்பரேட் குழும விவசாயப் பண்ணைகளில் பண்ணை அடிமைகளாகவும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் கொத்தடிமைகளாகவும், அத்துக் கூலிகளாகவும் அறுபட்டுக் கிழிய வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டுள்ளது தேசிய கல்விக் கொள்கை. இனி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் குப்பை அள்ள மட்டுமே நமது குழந்தைகள் அனுமதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, கல்வி அமைப்பிலிருந்தே அவர்கள் குப்பைக்கூளங்களாகத் தூக்கி எறியப்பட உள்ளனர். இதற்காகவே இடைநிலைக் கல்வியோடு அனேக ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் குழந்தைகளை வடிகட்டுகிறது தேசிய கல்விக் கொள்கை.
இவ்வாறு, மோடி கும்பலின் தேசிய கல்விக் கொள்கையானது ஏகாதிபத்திய நிதி மூலதனச் சேவையை உள்ளடக்கமாகவும், இந்துத்துவப் பாசிசத்தை வடிவமாகவும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தேசத்துரோகக் கல்விக் கொள்கையாகும். அதாவது உடலால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், உள்ளத்தால் இந்துத்துவப் பாசிசத்திற்கும் சேவை செய்ய கொத்தடிமைகளை உருவாக்கும் எதிர்ப்புரட்சிகர கல்விக் கொள்கையாகும். காங்கிரசு கும்பல் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையின் முழுமைப்படுத்தப்பட்ட, மெக்காலே மற்றும் குருகுலக் கல்வி முறையின் ஒருங்கிணைந்த அழுகிப்போன புதிய காலனிய வடிவம்தான் பாஜக அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையாகும். இதன் பொருட்டே தேசிய கல்வி ஆணையம் (ழிணிசி) எனும் ஒற்றை அதிகாரக் கல்வி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஏகாதிபத்தியவாதிகளும், அம்பானி - அதானிகளும், ஆர்.எஸ்.எஸ் கும்பலும் ஆதிக்கம் செலுத்த உள்ளனர்.
மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு மையப்படுத்தப்படும் கல்விச் சந்தை
‘காட்ஸ்’ ஒப்பந்தமானது “இந்தியக் கல்வித் துறையில் அந்நிய முதலீடுகள் நுழைவதற்கு தேசிய இன அடிப்படையிலான தடைகளும், மாநில பாடத் திட்டங்கள், பல்கலைக்கழகங்களோடு இணைக்கப்பட்டுள்ள உயர்கல்வித் துறை போன்ற தடைகளும் உள்ளன” என்கிறது. எனவே இத்தடைகள் நீக்கப்பட்டு கல்வி மீதான மாநில உரிமைகள் முழுவதுமாக பறிக்கப்பட்டு உலகின் மூன்றாவது பெரும் கல்விச் சந்தையான இந்திய கல்விச் சந்தை மையப்படுத்தப்பட்டு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை கார்ப்பரேட் மயமாக்கப்படுகிறது. கல்வித்துறை மாநிலப் பட்டியலிலிருந்து மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்படுகிறது. மத்தியப் பட்டியல் என்பது சாராம்சத்தில் ஏகாதிபத்திய நிதி மூலதனம் மற்றும் இந்திய தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் பட்டியலாகும். இதற்காகவே பிரதமர் தலைமையில் தேசிய கல்வி ஆணையம் (NEC) எனும் ஒற்றை அதிகார மையம் உருவாக்கப்பட்டு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மத்திய கல்வி அமைச்சகமாக மாற்றப்பட்டு மாநில கல்வித் துறையை வெறும் பார்வையாளராக அமர்த்துகிறது தேசிய கல்விக் கொள்கை. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்பதன் கல்வி வடிவம் இது. ஒரே கல்வி எனும் பெயரில் மாநில பாடத் திட்டங்கள் ஒழிக்கப்பட்டு மத்திய பாடத் திட்டம், சர்வதேச பாடத்திட்டங்கள் புகுத்தப்படவுள்ளன.
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கலைக்கப்பட்டு, இந்தியப் பல்கலைக்கழகங்கள் பட்டம் தரும் நிறுவனங்களாகவும், ஆராய்ச்சிக் கூடங்களாகவும் மாற்றப்பட உள்ளன. பல்கலைக் கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டு கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் (Autonomy) வழங்கப்படவுள்ளது. அதாவது கல்லூரிகளே அனைத்துவித கட்டணங்கள், ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட எல்லாவற்றையும் தீர்மானித்துக் கொள்ளலாம் என்கிறது தேசிய கல்விக் கொள்கை. மேலும் கல்லூரிகள் தாங்கள் விரும்பும் பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் கார்ப்பரேட் பங்குச் சந்தை வணிக சூதாடிகளுடன் இணைந்து சர்வதேச பாடத்திட்டத்தை அமல்படுத்த அனுமதிக்கப்படவுள்ளன. ஒற்றை அதிகார கல்வி அமைப்பான தேசிய கல்வி ஆணையத்தின் கீழ் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை கொண்டுவரப்படவுள்ளன. தேசிய தேர்வு முகமை (NTA) உருவாக்கப்பட்டு அனைத்து அகில இந்தியத் தேர்வுகளும் அந்த முகமையின் மூலம் மட்டுமே நடத்தப்படவுள்ளன.
மேலும், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை ஒரே வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு ஷாப்பிங் மால்கள் போன்று கல்வி மால்கள் (Educational Malls) அமைக்கப்படவுள்ளன. ‘இந்தியாவில் படி’ (Study in India) என்ற திட்டத்தின் மூலம் வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI) இந்த மால்களில் அனுமதிக்கப்படுவர். அதாவது, அனிதாக்களை தூக்கில் ஏற்றிவிட்டு அமெரிக்கர்களை மருத்துவராக்கவுள்ளது தேசிய கல்விக் கொள்கை.
இந்திய மருத்துவக் கவுன்சில், தேசிய தொழில்நுட்ப ஆணையம் போன்றவைகள் இனி தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையத்திற்கு ஆலோசனை அமைப்புகளாக மட்டுமே செயல்பட உள்ளன. இந்திய மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டு, மாநில மருத்துவக் கவுன்சில் அமைப்புகள் செல்லாக்காசாக மாற்றப்பட உள்ளன. தேசிய மருத்துவ ஆணையம் (ழிவிசி) எனப்படும் ஒற்றை மருத்துவ அதிகார மையம் உருவாக்கப்பட்டு மருத்துவக் கல்வி மீதான மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. படிப்படியாக பொது மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையும் மைய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டு கார்ப்பரேட் மயமாக்கப்படவுள்ளன.
தேசிய இனங்களை ஒடுக்கும் தேசிய கல்விக் கொள்கை
தேசிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது. மேலும் சமஸ்கிருத மொழி கட்டாயமாக்கப்படும் எனவும், மூன்றாம் வகுப்பிலிருந்து மூன்றாவது மொழி விருப்பப் பாடமாக இருக்கும் எனவும், ஆறாம் வகுப்பிலிருந்து மூன்றாவது மொழி கட்டாயமாக்கப்படும் எனவும் கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கையானது பின்வருமாறு அமல்படுத்தப்படும் என்கிறது மோடி கும்பல்.
1. இந்தி பேசும் மாநிலங்களில்: ஆங்கிலம், இந்தி மொழி மற்றும் மூன்றாவதாக ஏதாவது ஒரு பிராந்திய மொழி.
2. இந்தி பேசாத மாநிலங்களில்: ஆங்கிலம், பிராந்திய மொழி மற்றும் மூன்றாவதாக இந்தி மொழி.
தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பிற்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக எல்லா மாநிலங்களிலும் மூன்றாவது ஏதாவது ஒரு மொழியாக இருக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள இருபத்தி இரண்டு மொழிகளுக்கும் எந்த மாநிலத்திலும் ஆசிரியர்கள் இல்லை. இந்தி ஆசிரியரை கட்டாயமாக நியமிக்கப் போவதாகவும், அதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் மோடி கும்பல் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. எனவே, இந்தியைத் தவிர மூன்றாவது பிராந்திய மொழி எதற்கும் ஆசிரியர் இல்லாத காரணத்தால் இந்தியைக் கற்பது கட்டாயமாக்கப்படுகிறது.
ஆகவே, ஆங்கில மொழியும், இந்தி மொழியும் கட்டாயமாக எல்லா மாநிலங்களிலும் திணிக்கப்படவுள்ளது. மேலும் செத்துப்போன சமஸ்கிருத மொழியும் கட்டாயமாக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது மோடி கும்பல். இந்த மும்மொழித் திணிப்பு என்பது தேசிய இனங்களின் மொழிகளை நசுக்குவதாகும். இந்தியாவின் உற்பத்தி முறை ஏகாதிபத்திய புதியகாலனிய ஆதிக்கத்திற்குச் சேவை செய்கின்ற தரகு முதலாளித்துவ வர்க்க, நிலவுடமை உற்பத்தி முறையாகும். இதற்கேற்பவே கல்வி முறை வடிவமைக்கப்பட்டு வருகிறது. தற்போது ஏகாதிபத்திய நிதிமூலதனச் சுரண்டலுக்குச் சேவை செய்யும் வகையில் இந்துத்துவ வடிவம் தரப்பட்டு கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது மொழித் துறையில் மும்மொழிக் கொள்கையின் ஊடாக நிலைநிறுத்தப்படுகிறது. அதாவது, ஆங்கில மொழித் திணிப்பு என்பது மொழிவழியிலான ஏகாதிபத்திய காலனிய ஆதிக்கமாகும். இந்தி, சமஸ்கிருத மொழிகள் திணிப்பு என்பது மொழிவழியிலான இந்துத்துவ ஆதிக்கமாகும். மும்மொழிக் கொள்கை என்பது சாராம்சத்தில் தேசிய இன ஒடுக்குமுறைக் கொள்கையாகும்.
இந்தியக் கலாச்சார மீட்பு எனும் பெயரில் புகுத்தப்படும் இந்துத்துவப் பிற்போக்குத்தனம் தேசிய இனங்களின் பண்பாட்டு விழுமியங்களை முற்றாக புறக்கணிக்கிறது. மேலும் கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசை மட்டுமே கற்பிக்கப்படும் என்ற அறிவிப்பும் கூட ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிய தனித்துவமான இசை மரபுகள், நாட்டுப்புற இசை போன்றவற்றை அழிக்கும் நோக்கம் கொண்டதாகும். ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அதன் தனித்துவமான அம்சங்களை உள்ளடக்கிய தேசிய மொழி - தாய்மொழியில் கல்வி கற்பித்தல் என்ற முறைக்கு மாறாக ஒற்றைப் பாடத் திட்டம், ஒரே கல்வி எனும் பெயர்களில் வரும் தேசிய கல்விக் கொள்கையானது தேசிய இன உரிமைகளை - தேசிய மொழிகளை நசுக்குவதோடு மட்டுமின்றி தேசிய இனங்களின் இருப்பையே மறுக்கிறது.
ஒரு மொழிக் கொள்கை - தாய்மொழிக் கல்வியே மார்க்சிய-லெனினிய நிலைபாடாகும். மும்மொழிக் கொள்கைக்கு மாற்று இருமொழிக் கொள்கை அல்ல. ஏனெனில் இரு மொழிக் கொள்கை என்பது ஆங்கில மொழி ஆதிக்கத்தை உயர்த்திப்பிடிக்கும் ஏகாதிபத்திய அடிமைத்தனக் கொள்கையாகும். மும்மொழி கொள்கையும், இரு மொழிக் கொள்கையும் - ஆங்கில மொழி ஆதிக்கத்தையும், ஏகாதிபத்திய காலனியாதிக்கத்தையும் உயர்த்திப் பிடிப்பதில் ஒன்றே ஆகும். தாய்மொழிக் கல்வி மட்டுமே அனைவருக்கும் கல்வி என்பதை சாத்தியப்படுத்தும். மேலும் விஞ்ஞானபூர்வ அறிவு வளர்ச்சிக்கும் அது அவசியமானதாகும். ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக, பயிற்று மொழியாக, பாட மொழியாக, நீதிமன்ற மொழியாக மற்றும் வழிபாட்டு மொழியாக தாய்மொழியே இருக்க வேண்டும் எனக் கோருவது ஒவ்வொரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமையாகும். ஆனாலும், கல்வி முறையின் ஏகாதிபத்திய உள்ளடக்கத்தை மாற்றாமல், அதாவது நிலவுகிற உற்பத்தி முறையை மாற்றாமல் - கல்வியின் பொருளியல் அடித்தளத்தை மாற்றாமல், தாய்மொழிக் கல்வியை மட்டும் கோருவது ஏகாதிபத்தியச் சார்பு உள்ளடக்கத்தை விட்டுவிட்டு பயிற்று மொழி என்ற வடிவத்தில் மட்டும் மாற்றம் கோருவதாகும். தேசிய இனங்களின் சமத்துவம் - சுயநிர்ணய உரிமையை நிறைவேற்றும் சோவியத் வடிவிலான மக்கள் ஜனநாயகக் குடியரசில்தான் ஒரு மொழிக் கொள்கை - தாய்மொழிக் கல்வி என்பதற்கு மெய்யான பொருள் கிட்டும்.
சமூக நீதியை ஒழிப்பதே ஏகாதிபத்தியத்தின் நீதி
‘காட்ஸ்’ ஒப்பந்தம் கல்வியை வர்த்தகமாகக் கருத வேண்டும் என்று கூறுகிறது. அதை அப்படியே வழிமொழிந்து ‘இந்தியச் சமூகம்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘இந்தியப் பொருளாதாரம்’ எனவும், ‘கல்விச் சேவை’ என்பதற்கு பதிலாக ‘கல்வி முதலீடு’, ‘கல்வி வருவாய்’ எனவும் கல்விக் கொள்கையில் வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த ஏகாதிபத்திய ‘காட்ஸ்’ நீதியே, சமூக நீதியையும், இட ஒதுக்கீட்டையும் ஒழித்துக் கட்டுவதற்கான அடிப்படையாகும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைத்தும் கார்ப்பரேட் மயமாக்கப்பட்டு இலவசக் கல்விக்கு மூடுவிழா நடத்துகிறது மத்திய அரசு. “காசு உள்ளவன் கல்வி பெறு; காசில்லாதவன் கூலி அடிமையாய் இரு” எனும் ஏகாதிபத்திய உலகமய நீதியை வழிகாட்டும் தத்துவமாகக் கொண்டுள்ள தேசிய கல்விக் கொள்கை, இட ஒதுக்கீட்டிற்கும், சமூக நீதிக்கும் சாவு மணி அடித்துள்ளது.
மூன்று வயதில் இருந்து முன்மழலைக் கல்வி; மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு அகில இந்திய நீட் தகுதித் தேர்வு; எட்டாம் வகுப்பிலேயே தொழிற்பயிற்சி; ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை எட்டு பருவத் தேர்வுகள் (செமஸ்டர்கள்) மற்றும் எதிர்கால படிப்பிற்கான பாடங்களைத் தேர்வு செய்யும் முறை என ஒடுக்கப்பட்ட, நடுத்தரவர்க்க மாணவர்களை படிப்படியாக ‘தகுதி’ என்னும் பெயரில் வடிகட்டி வெளியே துரத்துகிறது தேசிய கல்விக் கொள்கை.
1986ஆம் ஆண்டு கல்விக் கொள்கையை ஆராய முடிவுசெய்து ஆச்சாரியா-ராமமூர்த்தி தலைமையில் 1990ஆம் ஆண்டு ஆய்வுக் குழு ஒன்றை இந்திய அரசாங்கம் அமைத்தது. இக்குழு பெண் கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு தொடக்கப் பள்ளியிலும் அங்கன்வாடி, பால்வாடி போன்றவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றது. அதைவிட முக்கியமாக 0-6 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு கல்வி அடிப்படை உரிமையாக்குவது அவசியம் எனவும் கூறியது. ஆனால் 1991இல் நரசிம்மராவ் அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ஜனார்தன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியானது 0-6 வயது வரையிலான குழந்தைகளின் கல்வி உரிமையை மறுத்துவிட்டது. அதன் பிறகு மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் 2001ஆம் ஆண்டு தாக்கல் செய்த கல்வி சட்டத்திருத்த மசோதாவும் அதே கொள்கையை முன்வைத்தது.
நரசிம்மராவ் ஆட்சிக் காலத்திலிருந்து மத்திய அரசு செயல்படுத்திவரும் மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டமும், 2001ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட கல்வி சட்டத்திருத்த மசோதாவும், சர்வ சிக்ஷா அபியான் திட்டமும் ‘அனைவருக்கும் கல்வி’ என்பதை ஒழித்துவிட்டது. கல்வியை அடிப்படை உரிமையாக்கக் கோரும் 0-14 வயது வரம்பை 6-14 வயது வரம்பாக மாற்றியதன் மூலம் இது செய்யப்பட்டது. இதன் மூலம் 50 சதவீதக் குழந்தைகள் பள்ளிகளிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர்.
கிராமப்புறங்களில் நிலவுகிற அரை நிலவுடைமை உற்பத்தி முறையின் காரணமாகவும், கல்வி தனியார்மயம், வணிகமயம் ஆக்கப்பட்டதன் காரணமாகவும் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வியை தொடர முடியாமல் குழந்தை தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றனர். இனி மாணவர்களின் இடைநிற்றல் பன்மடங்கு உயர்ந்து அவர்கள் சட்டபூர்வமாக குழந்தைத் தொழிலாளர்களாக மாறவோ அல்லது குலத்தொழில்களைச் செய்யவோ நிர்பந்திக்கப்பட உள்ளனர். ஒரு கோடியே 13 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளதாக (இதுவும் குறைவான கணக்கே) அரசே கூறுகிறது. தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால் இது 10 கோடிக்கும் மேல் உயர வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய சுமார் 20 கோடி குழந்தைகளில் ஏற்கனவே 10 கோடி பேர்தான் பள்ளிக்குச் செல்கின்றனர். மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில் நீட் தேர்வு வரும்பட்சத்தில் இடைநிற்றல் பன்மடங்கு பெருகி கோடிக்கணக்கான குழந்தைகள் மலிவான கூலி உழைப்பிற்கு கொத்தடிமைகளாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படவுள்ளனர். ‘தர மேம்பாடு’ எனும் பெயரில் இதற்காகவே அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன (இளைஞர்களை விட குழந்தைகளுக்கு பாதி கூலிதான் தரப்படுகிறது). இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடுவதற்கு திட்டமிட்டு படிப்படியாக மத்திய அரசு செய்து வருகிறது. தமிழக அரசு வரும் கல்வி ஆண்டில் மட்டும் 800 பள்ளிகளை மூடுவதற்கு திட்டமிட்டுள்ளது.
மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தகுதி தேர்வு நடத்தப்பட்டு கல்வி அமைப்பில் இருந்து அவர்கள் வெளியே துரத்தப்பட உள்ளனர். அதுமட்டுமின்றி மதிய உணவு திட்டமும் கூட தொண்டு நிறுவனங்களுக்கோ, தர்ம ஸ்தாபனங்களுக்கோ தாரைவார்க்கபடவுள்ளது.
மருத்துவக் கல்லூரிக்கு ‘நீட்’ தேர்வு என்பதை, அனைத்து உயர்கல்வி பாட பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தி அநேக நடுத்தரவர்க்க மாணவர்களை உயர் கல்வியிலிருந்து வெளியே துரத்தவுள்ளது தேசிய கல்விக் கொள்கை. அதேபோன்று உயர்கல்வியை முடித்து கல்லூரியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு நெக்ஸ்ட் (NEXT) எனப்படும் வெளியேற்றும் தேர்வை (EXIT Exam) அறிமுகப்படுத்துவதன் மூலம் தவறிப்போய் உயர் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைந்துவிட்ட நடுத்தர வர்க்கத்து மாணவர்களையும் வெளியே துரத்தவுள்ளது இக்கல்விக் கொள்கை. அறிவியல் கல்வி முறைக்கு மாறாக மனப்பாடக் கல்வி முறையை (மெக்காலே கல்வி) தீவிரப்படுத்தி கல்வி நிலையங்களை வெறும் கோச்சிங் சென்டர்களாக மாற்றுகிறது தேசிய கல்விக் கொள்கை.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10% இட ஒதுக்கீடு என்ற மோடி கும்பலின் அறிவிப்பானது தேசிய கல்விக் கொள்கைக்குச் சேவை செய்கிறது. இது பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு என்று சொல்லப்பட்டாலும் ஆண்டிற்கு ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது அனைத்து சாதியிலுமுள்ள மேல்தட்டுப் பிரிவினருக்கு மட்டுமே பயன்படும். பொருளாதார ரீதியில், சமூக ரீதியில் பின்தங்கிய சமூகத்தினருக்குப் பயன்படாது. இவ்வாறு மோடி கும்பலின் தேசிய கல்விக் கொள்கையானது இட ஒதுக்கீடு, சமூக நீதி போன்ற சீர்திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டதாக அறிவிக்கிறது.
முதலாளித்துவக் கட்சிகளின் நிலைபாடும் பாட்டாளி வர்க்க நிலைபாடும்
மோடி கும்பலின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன. காங்கிரசு கும்பலின் புதிய கல்விக் கொள்கையின் தொடர்ச்சியே மோடி கும்பலின் தேசிய கல்விக் கொள்கையாகும். ஆனால் ராஜீவ் கும்பலின் கல்விக் கொள்கையை ஆதரித்த மாநில தரகு முதலாளித்துவக் கட்சிகள் மோடி கும்பலின் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நாடகம் போடுகின்றன. ஏனெனில், மத்திய அரசின் தொங்கு சதைகளாக விளங்கும் இக் கட்சிகள் புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளையே தாங்கள் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்துகின்றன.
தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்த போராட்டங்கள் வெறுமனே இந்தி மொழி எதிர்ப்பு போராட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.
திருச்சபைகள், புதிய இடதுகள், ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்கள் மற்றும் திராவிட இயக்கங்கள் கைகோர்த்துக்கொண்டு தேசிய கல்விக் கொள்கையின் இந்துத்துவ வடிவத்தை மட்டுமே - அதுவும் பார்ப்பனியத்தை மட்டுமே எதிர்க்கின்றன. ஏகாதிபத்திய உள்ளடக்கத்தை ஆதரிக்கின்றன. இதற்கு காரணம் ஆரிய இனவாதமும்-திராவிட இனவாதமும் ஏகாதிபத்தியத்திற்கும், திருச்சபைக்கும், கிறித்துவ மிஷனரிகளுக்கும் கள்ளத்தனமாக ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளே ஆகும். ஒன்று காவி நிறக் குழந்தை; மற்றொன்று கருப்பு நிறக் குழந்தை; ஒன்று காவி மடம்; இன்னொன்று கருப்பு மடம். இவ்விரு இனவாத மாயைகளும் பழைய காலனியாதிக்கத்திற்குச் சேவை செய்ததைப் போலவே புதிய காலனிய ஆதிக்கத்திற்கும் சேவை செய்து வருகின்றன. திருச்சபைகள்-தொண்டு நிறுவனங்களின் நிதியில்தான் அரசை எதிர்த்தப் போராட்டங்கள் நடத்தப்படுவதாகக் கூறும் பாஜக ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான் அமெரிக்க திருச்சபை, தொண்டு நிறுவனங்களிடமிருந்து இந்தியாவிலேயே அதிக நிதியுதவி பெறுகின்றது. ஏகாதிபத்திய காலனியாதிக்கத்தை பெருமிதமாக நினைக்கும் இழி புத்தியில் காங்கிரசு-பாஜக கும்பலுக்கும், திராவிட இயக்கங்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
இவ்வாறு, தேசிய கல்விக் கொள்கையின் ஏகாதிபத்திய உள்ளடக்கத்தை எதிர்த்த போராட்டங்களாக இல்லாமல், அதன் வடிவத்தை எதிர்த்தப் போராட்டங்களாகவே நடத்தப்படுவதன் மூலம் தேசிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த புதிய காலனிய அரசியல் மூடி மறைக்கப்படுகிறது; திசைதிருப்பப்படுகிறது. எனவே, “இந்தி-சமஸ்கிருத மொழி திணிப்பு இல்லை; பாட திட்டத்தில் மாற்றம்” என மோடி அறிவித்தால் இப்போராட்டங்கள் கைவிடப்படும் ஆபத்தும் உள்ளது. சில அமைப்புகள் ஏகாதிபத்திய புதிய காலனிய எதிர்ப்பை வெறும் கார்ப்பரேட் நிறுவன எதிர்ப்பாகவும் நடத்துகின்றன.
ஆங்கிலம்-இந்தி-சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் மும்மொழிக் கொள்கையும், இந்தி-சமஸ்கிருத எதிர்ப்பு எனும் பெயரில் ஆங்கில மொழித் திணிப்பை ஆதரிக்கும் திராவிடக் கட்சிகளின் இரு மொழிக் கொள்கையும் நிராகரிக்கப்பட வேண்டிய ஏகாதிபத்திய அடிமைத்தனக் கொள்கைகளாகும். குருகுலக் கல்வி எதிர்ப்பு-மெக்காலே கல்வி ஆதரவு;இந்தி மொழி எதிர்ப்பு-ஆங்கில மொழி ஆதரவு; பார்ப்பனிய எதிர்ப்பு-ஏகாதிபத்திய ஆதரவு போன்ற நீதிக்கட்சி வழிவந்த இழிவான திராவிடக் கொள்கைகள் சாரம்சத்தில் மோடி கும்பலின் தேசிய கல்விக் கொள்கையை அதன் ஏகாதிபத்திய உள்ளடக்கத்தை ஆதரிப்பதன் மூலம் கள்ளத்தனமாக உயர்த்திப் பிடிக்கின்றன.
ஒரு நாட்டின் கல்வி அமைப்பு (Education System) என்பது அந்நாட்டின் உற்பத்தி முறைக்கு ஏற்பவே, அதற்குச் சேவை செய்யும் விதத்திலேயே உருவாக்கப்படுகின்றது. நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையைப் பாதுகாக்க குருகுலக்கல்வியும், காலனியாதிக்கத்தைப் பாதுகாக்க மெக்காலே கல்வி முறையும் உருவாக்கப்பட்டன. போலி சுதந்திரத்திற்குப் பிறகான ‘சமூக நல அரசு கோட்பாட்டிற்கு’ ஏற்ப அரசு பள்ளிகள், கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்குச் சேவை செய்யும் பொருட்டு ‘சமூக நலக் கோட்பாடு’ தூக்கி எறியப்பட்டு ‘சந்தை நலக் கோட்பாடு’ உருவாக்கப்பட்டது; அதற்குச் சேவை செய்யவே ராஜீவ் கும்பல் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தது. தற்போது அமெரிக்காவின் காப்புக் கொள்கைகளுக்கும், ஏகாதிபத்திய ஊக நிதிமூலதனத்தின் புதிய காலனிய ஆதிக்கத்திற்கும் சேவை செய்யும் விதத்தில் ‘தேசிய கல்விக் கொள்கை’யை மோடி கும்பல் தயாரித்துள்ளது. எனவே, உற்பத்தி முறைக்குச் சேவை செய்யும் உள்ளடக்கத்தை விட்டுவிட்டு அந்த உற்பத்தி முறையின் மேற்கட்டுமான அம்சங்கள் கல்வித்துறையில் வடிவமாக புகுத்தப்படுகின்றன என்று பார்க்காமல், வடிவத்தை மட்டுமே எதிர்த்துப் போராடுவது வேரை விட்டுவிட்டு கிளையை வெட்டுவதாகும். இது நேரடியாகவோ மறைமுகமாகவோ தேசிய கல்விக் கொள்கையினை உயர்த்திப் பிடிப்பதும், மறைமுக பார்ப்பனிய ஆதரவும், ஏகாதிபத்திய அடிமைத்தனமுமாகும். இன்னும் சொல்வதெனில் மோடி கும்பலுடன் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தில் போட்டிப் போடுவதேயாகும்.
தேசிய கல்விக் கொள்கையின் ஏகாதிபத்திய உள்ளடக்கம், இந்துத்துவ வடிவம் இரண்டையும் எதிர்த்துப் போராட வேண்டும். இந்துத்துவ வடிவம் என்பது ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்கின்றது என்பதை அம்பலப்படுத்த வேண்டும்.
திருச்சபைகள், கோவில்கள், மதரசாக்கள் உள்ளிட்ட எல்லா மத நிறுவனங்களிடமிருந்து கல்வி-மருத்துவம் பிரிக்கப்படவேண்டும். மத நிறுவனங்கள் மதப் பிரச்சாரம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படலாம். ஆனால் அவை கல்வி நிறுவனங்கள் நடத்துவதை தடை செய்ய வேண்டும். அரசிடமிருந்து மதத்தைப் பிரித்து மதம் தனிநபர் விவகாரமாக மாற்றப்பட வேண்டும்.
சாதி-தீண்டாமை கொடுமைகளுக்கு நியாயம் கற்பிக்கும் பார்ப்பனிய-நால்வர்ண முறை ஒழிக்கப்பட வேண்டுமெனில் அவற்றின் பொருளியல் அடித்தளமான நிலவுடைமை முறை ஒழிக்கப்படவேண்டும். தரகு முதலாளித்துவ வர்க்க-நிலவுடைமை முறையை பாதுகாக்கும் ஏகாதிபத்திய காலனியத்தை வீழ்த்த வேண்டும்.
தேசிய இனங்களின் தேசிய மொழிகளின் சமத்துவம்-சுயநிர்ணய உரிமையை வெல்ல வேண்டும். ஒருமொழிக் கொள்கை-தாய்மொழிக் கல்விக்காகப் போராட வேண்டும்.
ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை பொதுவுடமையாக்கப்பட்டு மக்களுக்கு கட்டாய இலவசக் கல்வி வழங்கப் போராட வேண்டும்.
அரசியலுக்கும் வாழ்க்கைக்கும் நெருக்கமான விஞ்ஞானபூர்வ ‘புதிய ஜனநாயக கல்வி முறைக்காக’ போராட வேண்டும்.
எனவே,
அனிதாக்களின் - ரோகித் வெமுலாக்களின் மூச்சுக்குழலை அறுத்துக் கொல்லும் அறமற்ற தேசிய கல்விக் கொள்கையை...
ஏகலைவன்கள் - சம்பூகன்களின் இரத்தத்தில் எழுதப் பட்டுள்ள ஏகாதிபத்திய கல்விக் கொள்கையை...
முறியடிப்பதற்கு கிளர்ந்தெழுவது சுரணையுள்ள ஒவ்வொரு தேசபக்தனின் கடமையாகும். அதன் பொருட்டு மாணவர்களையும், ஆசிரியர்களையும், பெண்களையும், விவசாயிகளையும், தொழிலாளர்களையும், வணிகர்களையும், தேசிய முதலாளிகளையும் ஒன்று சேர்த்து போராடுவோம் என்று சமரன் அறைகூவி அழைக்கிறது.