புதிய முப்பெரும் குற்றவியல் சட்டம் : புதிய காலனிய பாசிசச் சட்டம் - முழுக் கட்டுரை தொகுப்பு

சமரன்

புதிய முப்பெரும் குற்றவியல் சட்டம் : புதிய காலனிய பாசிசச் சட்டம் - முழுக் கட்டுரை தொகுப்பு

பகுதி -1

தற்போது மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நீதிமன்றத்தின் அதிகாரங்களை பறித்து போலீஸ் ராஜ்ஜியமாக கட்டியமைக்க கொண்டு வரப்பட்டிருக்கிறது. அனைத்து மக்களையும் குற்றவாளியாக மாற்றுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யவும் இந்துத்துவ ஆட்சியை நிலைப்படுத்தவும், பாசிச மயமாக்குவதற்காகவுமே இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. காலனிய கால சட்டத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு அதை விட கொடூரமான மக்கள் விரோத புதிய காலனிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

ஏற்கெனவே அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களை - சட்டப் பிரிவுகளை மாற்றியும் திருத்தியும் - புதிய பெயரில் டிசம்பர் 2023, 20ஆம் நாளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது பாஜக அரசு. 

குற்றத்தின் தன்மையை வரையறுப்பது, அதற்கான தண்டனை என்ன என்பதை வரையறுக்கும் இந்திய தண்டனைச் சட்டத்திற்கு (Indian Penal Code, 1860) மாற்றாக 358 பிரிவுகளைக் கொண்ட பாரதிய நியாய சன்ஹிதா - BNS (பாரதிய நீதிச் சட்டம்) என்ற சட்டமும்; 

குற்றத்தை வரையறுத்த பிறகு அதை நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் நடைமுறை சட்டமான 533பிரிவுகளைக் கொண்ட குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டத்திற்கு (Crimal Procedure Code, 1983) பதிலாக, 531பிரிவுகளைக் கொண்ட பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா - BNSS(பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம்) என்ற சட்டமும்; 

அந்த தண்டனையை நிரூபிக்க சாட்சியத்தை கையாளும் வழிமுறைகளை வரையறுக்கும் இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் (Indian Evidence Act, 1872) பதிலாக 170பிரிவுகளைக் கொண்ட பாரதிய சாக்ஷ்ய அதிநியாயம் - BSA(பாரதிய சாட்சிய சட்டம்) என்ற சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

இச்சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டிசம்பர் 12ஆம் நாள் மக்களவையில் அறிமுகம் செய்தார். டிசம்பர் 20ம் தேதி குரல் வாக்கெடுப்பு முறையில் நிறைவேற்றப்பட்டு, டிசம்பர் 25ல் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது. ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது (notification).

இந்த சட்டங்களுக்கான முதல் கட்ட வரைவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி மக்களவையில் அமித்ஷா தாக்கல் செய்தார். பிறகு இந்த மூன்று சட்டங்களையும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பியது பாஜக அரசு. அக்குழுவின் பாஜக எம்.பி.க்களே கூட சட்டத்தின் பல அம்சங்களை ஏற்காமல் திருத்தங்களை கூறியிருக்கிறார்கள். எனில் இச்சட்டத்தின் நோக்கம் எவ்வளவு வன்மமானது என்பதை அறியலாம். நிலைக்குழுவின் மற்ற கட்சி உறுப்பினர்களும் இச்சட்டத்தில் எங்கும் விரவிக் கிடக்கும் தெளிவற்ற கூறுகளை எதிர்த்துள்ளார்கள். ஆனால், சிலவற்றை மட்டுமே பெயரளவிற்கு திருத்தியது. ஆனால் திருத்தம் செய்த சட்டத்தை தாக்கல் செய்வதற்கு மாறாக அச்சட்டத்தையே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நாடகமாடியது. மக்களை ஏமாற்ற பெயரளவுக்கு திருத்திய அச்சட்டதையே மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்து சட்டத்தை நிறைவேற்றியும் விட்டது. இரண்டாவது முறை திருத்தி தாக்கல் செய்தபோது அமித்ஷாவே ஒவ்வொரு எழுத்தையும் பிழை திருத்தம் பார்த்ததாக கூறியதுதான் நகைப்புக்குரிய ஒரு மோசடி.  (BNSSல்பிரிவு 187ல் police custody என்பதை policy custody என குறிப்பிட்டுள்ளதும், பிரிவு 532ல் சன்ஹிதா என்பதை முன்பு பயன்படுத்திய code என்ற வார்த்தையையே திருத்தாமல் பயன்படுத்தியும் இருக்கிறது. அமித்ஷா பிழை திருத்தம் செய்வதற்கு கூட தகுதியில்லாதவர் என்பது தனிக் கதை). ஜனநாயகத்தை காப்பாற்றுவது எழுத்துப்பிழைகள் அல்ல. ஜனநாயகத்தின் புதைகுழியாக உருவாக்கியிருக்கும் சட்டப் பிரிவுகளே. அவை பிழையற்று இருக்கிறது என்பது, எள்ளளவும் திசைவிலகாமல் செயல்படுத்தி மக்களின் இரத்தம் குடிக்கும் நோக்கோடு கோரப்பற்களோடு காத்திருக்கிறார்கள் என்பதேயாகும்.

இதை தாக்கல் செய்தபோது கோயபல்ஸ் அமித்ஷா, முப்பெரும் குற்றவியல் சட்டங்களில் உள்ள 475 காலனியக் கால அடிமை சரத்துகளை நீக்கியுள்ளோம் என்று கூச்சநாச்சம் இல்லாமல் பொய் பேசினார். உண்மையில், புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் - போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றும் நோக்கோடு முன்பிருந்ததை விட கொடிய கருப்புச் சட்டங்களாக கொண்டு வரப்பட்டிருக்கிறது. மக்களை கைது செய்தது முதல் விசாரணை நடத்தி அவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டு கருணை மனு செய்வது வரையிலான அனைத்து நிலைகளிலும் கொஞ்ச நஞ்ச ஜனநாயக மற்றும் அரசியல் உரிமைகளைக்கூட இச்சட்டங்கள் விழுங்கிவிட்டன. மக்கள் மீது சுமத்தப்படும் நெருக்கடியால் எழும் எதிர்ப்புகளை நசுக்கவும், பாசிசத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ஏதுவாக இந்த மூன்று குற்றவியல் சட்டங்களையும் மாற்றியமைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

புதிய குற்றவியல் சட்டத்தை உருவாக்கிய முறையே ஜனநாயக விரோதமானது

2023 ஆகஸ்ட் மாதம் எதிர்கட்சிகள் மணிப்பூர் பிரச்சினையில் வெளிநடப்பு செய்திருந்தபோது முதல் சட்ட வரைவை கொண்டு வந்தது. அதை ஆய்வுக்கு என்ற பெயரில் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பியது. 3 மாதத்திற்கு பிறகு டிசம்பர் 12 அன்று அதையே திருத்தி புதிய சட்டமாக உள்துறை அமைச்சர் மீண்டும் தாக்கல் செய்தார்.

இந்த சட்டம் தாக்கல் செய்த மறுநாள் டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத்தில் மஞ்சள் புகை குண்டு வீச்சு நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை என எழுந்த விவாதத்தை காரணம் காட்டி 144 எம்.பி.க்கள் அவையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்கள். மீதமிருந்த ஆளுங்கட்சி எம்பிக்களின் பலத்தைக் கொண்டு மட்டுமே குரல் வாக்கெடுப்பு மூலம் டிசம்பர் 20ல் எவ்வித விவாதமுமின்றி இந்த மூன்று சட்டங்களுடன் சேர்த்து மொத்தம் ஏழு சட்டங்களையும் பாசிச முறையில் நிறைவேற்றியிருக்கிறது பாஜக அரசு. இதில் பத்திரிகையாளர், சமூக ஊடகம் ஆகியவற்றின் சுதந்திரத்தை பறிக்கும் சட்டமும், டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவும் அடங்கும்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மொழிவுரிமைக்கும் எதிரான புதிய குற்றவியல் சட்டங்கள்

உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக மாற்ற வேண்டும் என்று இன்றும் போராடிக் கொண்டிருக்கிற வேளையில் இன்னொரு இந்தி மொழி திணிப்பை (அதாவது சட்டங்களின் பெயரை (சமஸ்கிருதமயமான) இந்திஒலி அமைப்பில் ஆங்கில எழுத்தில் அதாவது வாட்ஸ்அப்பில் பயன்படுத்தப்படும் விசைப்பலகையில் தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்வது போல) கொண்டு வரப்பட்டதையும் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது. 

இதில் பாரதீய என்ற வார்த்தை இந்துத்துவத்தை குறிக்கும் வார்த்தையாகும். ஹெட்கேவர் 'ராஷ்டிரிய' என்பதற்கும் 'இந்து' என்று பொருள். அதனால் இந்து என்ற முன்னொட்டு தேவையில்லை என்று கூறினார். அதே வழிமுறையில் கோல்வால்கரும் தனது சிந்தனைக் கொத்து என்ற நூலில், "பாரதீய" என்ற வார்த்தைக்கு இந்து என்ற பொருளைத்தான் குறிக்கிறது என்று கூறியுள்ளார். கோல்வார்க்கரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் "இந்து நீதிச் சட்டம்", "இந்து மக்கள் பாதுகாப்புச் சட்டம்", "இந்து சாட்சிய சட்டம்" என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் பாரதிய ஜனதா கட்சி (இந்து மக்கள் கட்சி) பாரதிய என்ற சொல்லை திட்டமிட்டே சேர்த்திருக்கிறது. 

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் சட்டங்கள், சட்ட வரைவுகள் போன்றவற்றில் எந்த மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைப் பற்றி அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348 கூறுகிறது. இந்தப் பிரிவின் படி அனைத்து சட்டங்கள், கட்டளைகள், விதிகள், ஒழுங்குமுறைகள், உத்தரவுகள் மற்றும் துணைச் சட்டங்கள் ஆகியவை ஆங்கிலத்தில் இருக்கும் என்றும் அந்த விதி கூறுகிறது. இந்த அந்நிய மொழி திணிப்பு திருத்தமே அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும்போதும் விவாதம் இல்லாமலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே போல் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் ஒவ்வொரு சட்டத்தையும், தீர்ப்புகளையும், ஆணைகளையும் அந்தந்த மாநில அலுவலக மொழியில் வெளியிடலாம், ஆனால் ஆங்கில மொழியாக்கத்தை அதனுடன் வெளியிட வேண்டும் என்கிறது ஆட்சி மொழிச் சட்டம்; ஏற்கெனவே 8வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள மாநில அலுவலக மொழியாக இருக்கக்கூடிய 22 மொழிகளை மறுத்து இன்று அனைத்து அலுவலக நடவடிக்கைக்கும் ஆங்கிலம், இந்தியை மட்டுமே ஏற்கிறது. இதை மாநிலத்திற்குள்ளேயே ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு இயங்கும் அனைத்து மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அமைப்புகளுக்கும் நீட்டிக்கிறது.மொழி பயன்பாட்டில் ஆங்கிலம், இந்தி என்ற இரண்டு தளைகளை இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களும் சுமக்க வேண்டியுள்ளது. இதை எதிர்த்து அனைத்து தேசிய இனங்களின் மொழிகளையும் ஆட்சி மொழியாக அங்கீகரிக்க வேண்டி நாம் போராட வேண்டியிருக்கிறது.

புதிய சட்டங்களில் முக்கியமான மாற்றங்களாவன:

பாரதிய நியாய சன்ஹிதாவில்

 1. அரசு பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவும், அனைத்து அரசியல் உரிமைகளையும் ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தைகளான தேசப் பாதுகாப்பு, இறையாண்மை, ஒற்றுமை சீர்குலைவு என்பதை 7 பிரிவுகளில் திட்டமிட்டு சேர்த்திருக்கிறது. 
 2. அரசியல் சட்டத்திற்கு விரோதமான சிறப்புச் சட்டமான ஊபா சட்டத்தினை நீக்குவதற்கு மாறாக அந்தச் சட்டத்தின் பயங்கரவாத சரத்துகளை பிரிவு 113ல் சேர்த்திருக்கிறார்கள்.
 3. 124ஏ தேசத்துரோக குற்றத்தை நீக்கியதாக கூறிவிட்டு, அதை பிரிவு 152ஆக மாற்றியதோடு இந்திய இறையாண்மை அல்லது ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து ஏற்படுத்துதல் என்ற தெளிவற்ற வார்த்தையை கூடுதலாக இணைத்து பிரிட்டிஷ் காலனியச் சட்டத்தைவிட மிகக் கொடிய புதிய காலனியச் சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
 4. கும்பல் கொலையை பிரிவு 103(2)ல் தனியாக வரையறுத்திருக்கிறது. மதம் என்ற வார்த்தையை திட்டமிட்டு இப்பிரிவில் தவிர்த்து இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாகவே விதிவிலக்கை அளித்திருக்கிறது இச்சட்டப் பிரிவு. 
 5. "வஞ்சகமான வழிமுறைகளில்... அடையாளத்தை மறைத்து.. திருமணம் செய்து கொள்வது" (பிரிவு 69) என்ற வார்த்தைகள் சங்கிகளின் லவ் ஜிகாத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறையாக இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
 6. இனி உண்ணாவிரதப் போராட்டம் (பிரிவு 226) நடத்தினால் அவர்களை குற்றவாளிகளாக சிறையலடைத்து தண்டிக்க முடியும். இத்திருத்தம் மூலம் அமைதிவழியில் போராடும் அரசியல் உரிமை முற்றிலுமாக பறிக்கப்பட்டிருக்கிறது.
 7. இனி கருணையைக் கூட இந்த ஆளும் வர்க்கத்திடம் எதிர்பார்க்க முடியாது என்பதை இச்சட்டத்தின் மூலம் தெளிவு படுத்தியிருக்கிறது. கருணை மனு தாக்கல் செய்வதற்கு கால வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் மீது குடியரசு தலைவர் முடிவு செய்வதற்கான கால அளவு வரையறை நிர்ணயம் செய்யப்படவில்லை. காலதாமதமானால் நீதிமன்றத்திற்கு செல்லும் உரிமை வெளிப்படையாக மறுக்கப்பட்டிருக்கிறது.

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவில்

 1. தண்டனைகளை நிறுத்தி வைத்தல், தள்ளுபடி செய்தல், மாற்றியமைத்தல் (பிரிவு 475 மற்றும் பிரிவு 476 BNSS) ஆகிய அதிகாரங்களை மாநில அரசிடமிருந்து பறித்துவிட்டது.
 2. கைவிலங்கு இடுவது (பிரிவு 43(3)) இனி காவல்துறையின் உரிமையாக மாற்றப்பட்டுள்ளது. 
 3. முதல் தகவல் அறிக்கை பதியாமலேயே குற்றம் நடந்திருக்கிறதா என விசாரணை நடத்த 14 நாட்கள் அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது (பிரிவு 173 BNSS). அதே போல், எந்தவொரு நபரையும் காவல்நிலையத்தில் கைது செய்யாமலேயே 24 மணி நேரத்திற்கு போலீஸ் வசம் வைத்துக் கொள்ளலாம்
 4. போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும் காலத்தை 15 நாட்களுக்கும் மேலாக நீட்டித்து போலீஸ் பிடியிலேயே குற்றவாளியை கொண்டு வந்துள்ளது (பிரிவு 187 BNSS). 
 5. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான காலம் 90 நாட்களுக்கு மேல் நீட்டிக்கும் அதிகாரத்தையும் (பிரிவு 193ன் படி) கொடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு காலம் வரையில் நீட்டிக்கலாம் என வரையறை செய்யவில்லை. அதனடிப்படையில் பிணை மறுக்கப்படும் நிலையை உருவாக்கியுள்ளது.
 6. காவல்துறை சாட்சிகளின் விசாரணையை இனி செல்போன் உட்பட டிஜிட்டல் முறையிலேயே பேசி பதிவு செய்ய அதிகாரம் வழங்குகிறது (பிரிவு 180 BNSS). இது நியாயமான விசாரணைக்கும், சாட்சிகள் புரிந்து கொண்டு சாட்சியத்தை பதிவு செய்வதற்கான வாய்ப்பில்லாமல் தவறான முறையிலேயே இது பயன்படுத்தப்படும். இந்த டிஜிட்டல் பதிவு ஆவணத்தை வைத்தே தண்டனையை வழங்குவது ஆபத்தானது.
 7. ஆயுதப் படையை வைத்து பலப்பிரயோகம் செய்து கூட்டத்தைக் கலைப்பதற்கு நடைமுறையிலிருக்கும் கு.வி.மு.ச சட்டம் 130 (1)ன் படி மாவட்ட ஆட்சியர் அல்லது துணை மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கி ஆணையிட வேண்டும். ஆனால் BNSS 150ன் படி வட்டாட்சியரே ஆயுதம் கொண்டு கூட்டத்தைக் கலைக்க காவல்துறைக்கு ஆணையிட முடியும். கீழ்நிலை அதிகாரிகளை பலிகடாவாக்கி தன் விருப்பம் போல் காவல்துறை அதிகாரிகள் செயல்பட வழி வகுத்துள்ளது.
 8. காவல் விசாரணை அனைத்தையும் வீடியோ பதிவாக செய்ய வேண்டும் (பிரிவு 176(3)). தடவியல் நிபுணர்களின் அறிக்கையும் கட்டாயமாக தாக்கல் செய்யப்பட வேண்டும். பிரிவு 349 BNSSன் படி கைது செய்யப்படாத சூழ்நிலையிலும் எவரிடமிருந்தும் கட்டாயப்படுத்தி கையெழுத்து, கைரேகை, குரல் மாதிரி ஆகியவற்றை பெற முடியும். 
 9. சொத்துக்களை பற்றுகை செய்வதற்கும், பறிமுதல் செய்வதற்கும், அதை முடக்கி வைப்பதற்கும் காவல்துறைக்கு எல்லையில்லா அதிகாரம் கொண்ட கொடிய சட்டம் காவல்துறையிடம் குவிக்கப்பட்டிருக்கிறது (பிரிவு 107). 
 10. குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்படாமலேயே அதாவது தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து(Without appearance) நீதிபதியும் காவல்துறையும் உடன்பாட்டுக்கு வந்து ஒருதலைபட்ச விசாரணை நடத்தி தண்டனை அளிக்க முடியும் (பிரிவு 356).
 11. பொது சேவை (பிரிவு 23) என்ற தண்டனை முறையை கொண்டு வந்திருக்கிறது.இதை இன்னொரு முறையில் சொல்ல வேண்டுமென்றால் வெட்டி வேலை என்பார்களே, கூலி இல்லாமல் வேலை செய்யும் முறையைத்தான் பொதுச் சேவை என்கிறார்கள். எது பொதுச் சேவை என்பதை வரையறுக்கவில்லை. இதை தவறாக பயன்படுத்தவும் பிற்போக்கான கருத்துகளையும், மதவாதத்தையும் புகுத்த வழிவகை ஏற்படும். 

பாரதீய சாக்ஷ்ய அதிநியாவில்

 1. டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்படும் சாட்சியங்களை கணினியை இயக்கும் நபர்கள் கூட அங்கீகரித்து வழங்கப்படும் சான்றை சாட்சியமாக ஏற்கப்படும்.
 2. டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்படும் சாட்சியங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அல்லாதவர்கள் வழங்கிய சான்றைக் கொண்டு தாக்கல் செய்த ஆவணங்களையும் முதல்நிலை சாட்சியங்களாக (Primary evidence) வரையறுக்கப்பட்டுள்ளன. 

இவை குற்ற வழக்குகளில் தண்டிக்கவே பயன்படும். உரிமையியல் வழக்கில் எவ்வித சரிபார்ப்புமின்றி மோசடியாக உருவாக்கப்பட்ட ஆவணங்கள் கூட ஏற்கப்படும் சூழலை உருவாக்கியுள்ளது.

மேற்கண்ட மாற்றங்கள் யாவும் நாம் அரைகுறையாக அனுபவித்து வந்த அரசியல் மற்றும் சிவில் உரிமைகளை கூட குற்றங்களாக மாற்றப்பட்டுள்ளதை தெளிவுபடுத்துகிறது. ஊபா, என்.ஐ.ஏ. போன்ற கருப்புச் சட்டங்களையும் இந்த குற்றவியல் சட்ட வரைவின் சட்டப்பிரிவுகளுள் மோடி அரசு சேர்த்திருக்கிறது. இதை பொதுச் சட்டங்களில் கொண்டு வந்ததன் மூலம் அனைவரையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்க எத்தனிக்கிறது. அதேபோல் நாடு எப்போதும் பயங்கரவாதத்தின் பிடியிலேயே இருப்பதாக அச்சுறுத்துகிறது. 

மேற்கண்ட மாற்றங்களில் தேவையான பிரிவுகளை விளக்கமாக அடுத்த இதழில் காண்போம்.

(தொடரும்...)

சமரன் (ஏப்ரல் மாத இதழில்)

===============================================================================================

பகுதி -2

சிவில் உரிமையை பறித்து போலீசு ராஜ்ஜியமாக மாற்றும் குற்றவியல் சட்டங்கள்

அரசியல் உரிமை, சிவில் உரிமை, தனி மனித உரிமை என அனைத்தையும் பயங்கரவாதமாக மாற்றுக்கின்ற பாரதிய நியாய சன்ஹிதா - BNS (பாரதிய நீதிச் சட்டம்)

காவல்துறை சொல்லுகின்ற எந்த செயலையும் ஒருவர் செய்ய மறுத்தாலே அவருக்கு சிறை நிச்சயம் என்கிறது புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு 172 BNSS. கைவிலங்கிடும் உரிமையை தன்விருப்பம் போல் செயல்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் வழங்கியிருகிறது. புகாரைப் பெற்று முதல் தகவல் அறிக்கை பதிவதற்கும் காவல்துறைக்கே அதிகாரம். புகார் பதியப்பட்டாலே அவர்களின் பெயர்களை பொதுவெளியில் அறிவிப்பு செய்கின்ற அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. ஏற்கென உயர் அதிக்கரப் பதவியிலிருந்தவர்கள் அமல்படுத்திக்கொண்டிருந்த அதிகாரமெல்லாம் புதிய சட்டத்தில் கீழ்நிலை அதிகாரிகளே அதிகாரத்தை செலுத்த முடியும் என மாற்றப்பட்டுள்ளது. இதுவரையில் நாம் போராடி பெற்ற அனைத்து அரசியல் உரிமைகளையும் இந்த சட்டம் பறித்துவிட்டது. அந்த உரிமைகளை குற்ற நடவடிக்கையாகவும் வரையறுத்துள்ளது.

தேசப் பாதுகாப்பு, இறையாண்மை, ஒற்றுமை சீர்குலைவு என்ற பெயர்களில் அரசு பயங்கரவாதத்தினை நியாயப்படுத்தி ஒடுக்கும் கருவியாக இச்சட்டம்

அரசு பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவும், அனைத்து அரசியல் உரிமைகளையும் பறித்து ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்ற இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவித்தல் என்ற தெளிவற்ற வார்த்தைகளை பெருங்குற்றங்களுக்கான பிரிவு உட்பட 7 இடங்களில் சேர்த்திருக்கிறது. இவ்வார்த்தைகள் இதுவரையில் அரசியல் உரிமைக்காக போராடுகின்ற இயக்கங்கள், ஜனநாயக சக்திகளை ஒடுக்கவே பயன்படுத்தி வந்திருக்கிறது. இது பாசிசத்தை மேலும் பலப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.

இனி எவரும் கேள்வி கேட்கக் கூடாது. அரசின் கொள்கைகளை எதிர்த்து போராட மட்டுமல்ல பிரச்சாரம் செய்து மக்களை திரட்ட முயற்சிக்கக் கூட அனுமதியில்லை. வழக்கமாக செய்யப்படும் ஸ்டிரைக், பந்த் மட்டுமல்லாமல் உண்ணாவிரதம் கூட இனி குற்ற நடவடிக்கையாக பார்க்கப்படும். இது பிரிட்டிஷ் காலனிய ரௌலட் சட்டத்தை விடவும் மிகக் கொடூரமான சட்டமாக மாற்றப்படும் வார்த்தைகளாகும். இந்த வார்த்தைகளை பயன்படுத்திய கொடூர சட்டப் பிரிவுகளைப் பார்ப்போம்.

பாரத நீதிச் சட்டம் பிரிவு 113

இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை, அல்லது பொருளாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினாலோ அல்லது அச்சுறுத்தலுக்கு வாய்பிருந்தாலோ தீவிரவாத செயல் என்று வரையறுக்கிறது. இதை புதிய பிரிவாக இணைத்திருக்கிறது. 

பாரத நீதிச் சட்டம் பிரிவு 152

வேண்டுமென்றே அல்லது தெரிந்தே, பேச்சிலோ அல்லது எழுத்திலோ, அல்லது அடையாளமாகவோ, அல்லது காணக்கூடிய வகையிலோ, அல்லது மின்னணு தகவல்தொடர்பு முறையிலோ பிரிவினைவாத நடவடிக்கைகளின் உணர்வுகளை ஊக்குவித்தல் இந்தியாவின் இறையாண்மை அல்லது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று வரையறுக்கிறது. 

பாரத நீதிச் சட்டம் பிரிவு 197 (1)

எப்போதுமே மக்கள் மீது தவறாகப் பயன்படுத்தக்கூடிய மற்றொரு சட்டப் பிரிவு IPC பிரிவு 153B, அதை தற்போது புதிய BNSS பிரிவு 197ஆக உருமாற்றப்பட்டுள்ளது. இதில் "இந்தியாவின் இறையாண்மை ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு அல்லது பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் தவறான தகவல்களை உருவாக்குதல் அல்லது வெளியிடுதல்" என்று முந்தையச் சட்டத்தோடு "மின்னணு சாதனங்களின் வழியாகவும்" என்று கூடுதலாக சேர்க்கப்பட்டு தொடர்கிறது. 

மேற்கண்ட மூன்று பிரிவுகளிலும் கருத்துகளை பரப்புதல், சட்டத்தின் மீதான நம்பிக்கைக்கு எதிராக பேசுதல், அதாவது சதி செய்தார்கள், தயாரித்தார்கள் என பொய்யாக தேசியவெறி கூச்சல் எழுப்பி பயங்கரவாதிகளாக சித்தரித்து சாய்பாபா முதல் எல்லோரையும் எப்படி சிறையிலடைத்து தண்டித்தார்களோ அதையே இப்போது இந்த பொது குற்றவியல் சட்டத்தின் மூலம் செய்யப்போகிறார்கள். இச்சட்டத்தின் படி சமூக ஊடங்களில் செய்யும் அரசியல் பரப்புரையை கூட உணர்வைத் தூண்டினார்கள், ஊக்குவித்தார்கள் என்று கூறி தண்டிப்பதற்கு இந்த தெளிவற்ற சொற்கள் பயன்படப் போகிறது. தேசத்தின் பாதுகாப்பு, தேசத்தின் இறையாண்மை ஆகியவை எல்லாம் பாசிசவாதிகள் வழக்கமாக எழுப்புகிற கோஷங்கள். அதாவது, மக்களை ஒடுக்குவதற்கும், அரசு பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதற்கும் இந்த வார்த்தைகளையே கருவியாக பயன்படுத்தி வருகிறார்கள். இப்போது அந்த வார்த்தைகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு பயங்கரவாத சட்டமான ஊபா சட்டத்தின் மறு உருவமாக தண்டனைச் சட்டம்

ஆள்தூக்கி சட்டமான ஊபா சட்டத்தில் உள்ள பிரிவு 18ஐ பாரதிய நீதிச் சட்டப் பிரிவு 113(3)ஆகவும், பிரிவு 19ஐ பிரிவு 113(6)ஆகவும், பிரிவு 20ஐ பிரிவு 113(5)ஆகவும், பிரிவு21ஐ பிரிவு 113(7)ஆகவும் வார்த்தைகளைக் கூட மாற்றாமல் அப்படியே கொண்டு வந்திருக்கிறது. ஊபா சட்டத்திலாவது ஒரு இயக்கத்தையோ அல்லது நபரையோ தீவிரவாத இயக்கம் என அறிவித்து பட்டியலிட வேண்டும். அது போன்ற முறைகளைக் கூட இச்சட்டம் வலியுறத்தவில்லை. அதாவது ஒரு அமைப்பை பயங்கரவாத அமைப்பாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இச்சட்டத்தின் மூலம் சிறையிலடைக்க முடியும், தண்டிக்க முடியும். இது ஊபா சட்டத்தைவிட கொடிய சட்டமாக மாறப் போகிறது என்பதையே காட்டுகிறது.

பாரதிய நீதிச் சட்டப் பிரிவு 113 

சமூகத்தின் வாழ்க்கைக்கு அவசியமான ஏதேனும் பொருட்கள் அல்லது சேவைகளை சீர்குலைத்தல், இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் உள்ள இந்திய பாதுகாப்புக்கு பயன்படுத்தும் சொத்துக்களுக்கு இழப்பை ஏற்படுத்துதல்; அல்லது அரசு தேவைக்கு வைத்திருக்கும் சொத்துகளை அழித்தல், சேதத்தை உருவாக்குதல் போன்றவை பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கமான மக்கள் போராட்டங்களை எல்லாம் பயங்கரவாத செயல்களாக மாற்றப்படும் ஆபத்தான பிரிவு இது. 

அரசாங்கத்தின் ஏகாதிபத்திய-உள்நாட்டு கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களை கேள்விக்குட்படுத்தினால் அவர்களை தீவிரவாதிகளாக அறிவித்து இந்த சட்டத்தின் 113வது பிரிவின் மூலம் ஒடுக்க முடியும். எல்கர்பரிஷத் வழக்கில் பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சிறைக்காவலில் இறந்த பாதிரியார் ஸ்டான் சுவாமி உட்பட மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் இன்னும் கொடுஞ் சிறைக்குள்தான் இருக்கின்றனர். இந்த வழக்கில் இதுவரையில் யாருக்கும் தண்டனை வழங்கப்படாமலேயே அவர்கள் பலவருடங்களாக சிறைக்கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். சமீபத்தில் எவ்வித ஆதாரமில்லாத நிலையில் தானே குற்றமற்றவர் என நிரூபித்து சாய்பாபா விடுதலையானார் என்பதே இந்த வழக்கின் நிலைமையை புரிந்துக்கொள்ள ஆதாரமாகும். ஆனால் 3,600 நாட்கள் பிணையில் வெளிவர முடியாத வகையில் பொய் வழக்கு போட்டவர்கள் மீது எவ்வித நடவடைக்கையும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட இவருக்கு இழப்பீடும் இல்லை. இவ்வளவு கொடுமையான கருப்புச் சட்டமான ஊபா சட்டத்தின் பிரிவுகளை ஒரு முழு பிரிவில் அடக்கியிருக்கிறது. பாரதிய நீதிச் சட்டமல்ல, இது இந்துத்துவ அநீதிச் சட்டம்.

ஸ்ரீமதி படுகொலைக்காக நியாயம் கோரிய போராட்டம், என்.எல்.சி.க்கு எதிரான போராட்டம், விவசாயிகள் நடத்திய போராட்டம் போன்ற மக்கள் போராட்டங்கள் கூட இனி தீவிரவாதிகளின் செயல்கள் என்று மாற்றப்படலாம். இனி அரசாங்கத்தை எதிர்த்து போராடும் சாதாரண பொதுமக்கள் உள்ளிட்ட எவரும் தீவிரவாதியாக சித்தரித்து சிறையிலடைக்கப்படலாம். அசாதாரணமான சூழ்நிலை எப்போதும் இந்தியாவில் நிலவிக் கொண்டிருப்பதாக கருத்துருவை உருவாக்கி அவர்களை அச்சுறுத்தல் மனநிலையிலேயே வைக்கப்படவே இந்த பிரிவு ஆளும் வர்க்கத்திற்கு தேவைப்படுகிறது. 

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் கொண்டுவந்த இதச பிரிவு 124ஏ, புதிய காலனிய பாரதிய நீதிச் சட்டப் பிரிவு 152ல் தேசத் துரோக குற்றமாக ஒப்பனை மாற்றம்

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் இந்திய தண்டனைச் சட்டத்தில் ராஜதுரோக சட்டம் 124ஏ கொண்டுவரப்பட்டது. அன்று சுதந்திரத்திற்காக போராடியவர்களை அடக்குவதற்கு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், அதிகார மாற்றத்திற்குப் பிறகும் புதிய காலனிய ஆட்சியிலும் தொடர்கிறது. 2019ம் ஆண்டில் மட்டும் 96 வழக்குகளை எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்கு இதை பயன்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் மோடி ஆட்சியின் அவலங்களை வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் வினோத் துவா, உத்திரபிரதேசத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற சித்திக் காப்பான் ஆகியோரின் மீது பாய்ந்த தேச துரோக வழக்குகள் எந்தளவுக்கு பாசிச சட்டமாக பயன்படுத்தப்பட்டது என்பதை அனைவரும் அறிவர். 

மே 2022ஆம் ஆண்டு அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு ௐபட்கரே எதிர் ஒன்றிய அரசு (S.G. VOMBATKERE Versus UNION OF INDIA) என்ற வழக்கில் 124ஏ தேசத் துரோக பிரிவை, அடுத்த உத்தரவு வரும் வரை அமல்படுத்தக் கூடாது என நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் அந்த தீர்ப்பை கேலிக்கூத்தாக்கும் வகையில் அமித்ஷா, "இந்த மூன்று புதிய மசோதாக்கள் இந்திய சிந்தனையின் அடிப்படையிலான நீதி அமைப்பை நிறுவ முயல்கின்றன... முன்மொழியப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் காலனித்துவ மனநிலையிலிருந்தும் அதன் சின்னங்களிலிருந்தும் மக்களை விடுவிக்கும்" என்று மக்களவை குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்களை நிறைவேற்றும் முன் கூறினார். காலனிய சட்டத்தை முற்றிலும் நீக்குவதாக இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா வாய்கூசாமல் பொய் பேசினார். அதற்கு மாறாக கொல்லைப்புறத்து வழியாக 124ஏ பிரிவையே புதிய சட்டத்தில் 152வது பிரிவாக கொண்டு வந்துள்ளது. இது மக்களை ஏமாற்றுவது மட்டுமல்ல நீதிமன்றத்தையும் அவமதிக்கும் செயலாகும்.

124ஏ பிரிவானது "அரசாங்கத்தின் மீது வெறுப்பு அல்லது அவமதிப்பை ஏற்படுத்தினால் அல்லது ஏற்படுத்த முயன்றால் அல்லது அவநம்பிக்கையைத் தூண்டினால் அல்லது தூண்ட முயன்றால்" என்பதைத்தான் தேசத் துரோக குற்றமாக வரையறுத்திருக்கிறது. இப்பிரிவை ஒழித்துவிட்டதாகக் கூறி வேறு வார்த்தைகளில் கொண்டுவரப்பட்ட புதிய BNSS சட்டப் பிரிவின்படி, 'நாசகார நடவடிக்கைகள்', 'பிரிவினைவாத நடவடிக்கைகளின் உணர்வுகளை ஊக்குவித்தல்', இந்தியாவின் இறையாண்மை அல்லது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்துவது... மின்னணு தகவல்தொடர்பு அல்லது நிதி வழியைப் பயன்படுத்துதல்..." ஆகிய வார்த்தைகளை கூடுதலாக சேர்த்துள்ளது. இதில் எந்த வார்த்தைகளுக்கும் தெளிவான வரையறையில்லை. முந்தைய சட்டத்திலாவது குறைந்தபட்ச தண்டனையாக 3 வருடம் என இருந்தது. அதையும் இன்னும் கொடூரமாக புதிய சட்டத்தில் 7 வருடமாக உயர்த்திவிட்டது. அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை புதிய சட்டத்திலும் தொடர்கிறது.

அமித்ஷா சொல்வது போல் எந்த காலனிய சட்டமும் நீக்கப்படவில்லை. அவற்றை புதியகாலனிய சொல்லாக்கத்தில் நிரப்பியிருக்கிறார் என்பதே அந்த மாற்றம். இதைத்தான் இவர்கள் இந்தியமயம் என்கிறார்கள். அவர்களின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மேக் இன் இந்தியா என்றுதான் சொல்ல வேண்டும்.

மதவெறியர்கள் செய்தால் கொலையல்ல என்கிறது கும்பல் கொலை பற்றி பாரதிய நீதிச் சட்டப் பிரிவுகள் 103(2) மற்றும் 117(4) (BNS)

[கும்பல் கொலை பிரிவு 103(2)), BNS] அல்லது ஒரு குழுவால் ஏற்படுத்தப்படும் கடுமையான காயத்திற்கான [பிரிவு 117(4), BNS]. கும்பல் கொலை பற்றிய பிரிவில் "ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கும்பல் கொலை குற்றத்தில் இனம், சாதி அல்லது சமூகம், பாலினம், பிறந்த இடம், மொழி, தனிப்பட்ட நம்பிக்கை அல்லது வேறு ஏதேனும் அதை ஒத்த காரணங்கள் அடிப்படையில் ஒன்றாக செயல்பாட்டால்" என்ற வரையறை வைக்கப்பட்டிருக்கிறது. இதில் மதம் என்ற வார்த்தையை திட்டமிட்டு தவிர்த்திருக்கிறார்கள். அதாவது மதவெறியை வெளிப்படையாகக் குறிப்பிடுவதை இந்துத்துவ அநீதிச் சட்டத்தில் தவிர்திருக்கிறார்கள். இந்த சட்டத்தின் மூலம் சங்பரிவாரின் குஜராத், மணிப்பூர் போன்ற மதவெறி கொலைகளை அரங்கேற்றுவதற்கு பாதுகாப்பை கொடுக்கின்றது இந்தச்சட்டம். 

பெண்களின் மீதான வன்முறை தொடுப்பவர்களுக்கும், லவ் ஜிகாதிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கிறது

உச்சநீதிமன்றம் மற்றும் சட்ட ஆணையத்தால் பலமுறை சுட்டிக் காட்டப்பட்ட கணவனால் செய்யப்படும் பாலியல் வன்புணர்வு குற்றத்தை தடுக்க இந்த பிற்போக்கு மதவாதிகள் மாற்றம் கொண்டுவரத் தயாரில்லை. அதே நிலையே புதிய சட்டத்தில் நீடிக்கிறது. ஆனால் உலகெங்கிலும் சுமார் 150 நாடுகளில் கணவனால் பெண்களுக்கு இழைக்கும் பாலியல் கொடுமையை குற்றமாக மாற்றப்பட்டிருக்கிறது. 77 நாடுகளில் அது சட்டமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. பாரதிய நியாய சன்ஹிதா என்ற புதிய சட்டம் பெண்களை சமமாக நடத்துவதை மறுக்கிறது. அதே போல் அவர்களுக்கு அவர்களின் உடலின் மீதான உரிமையை மறுக்கிறது, அவர்களின் சுயமரியாதையை ஏற்கவில்லை. 

இப் புதிய சட்டத்தில் (BNSS) "மோசடி செய்தோ அல்லது வஞ்சக வழிமுறைகளிலோ... அடையாளத்தை மறைத்து... திருமணம் செய்துகொள்வது" (பிரிவு 69) குற்றமாக்கப்பட்டிருப்பது பெண்களின் வாழ்க்கைத்துணை தேர்வு உரிமையை மறுக்கும் உள்நோக்கோடுதான் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இங்கு பாலினம், சாதி, நம்பிக்கை அல்லது மதம் போன்ற எதுவொன்றும் வஞ்சகமான முறையில் மறைத்தல் என்ற குற்றத்திலேயே சேரும். இளைஞர்களின் சுதந்திரமான இணைத் தேர்வை இது முற்றிலுமாக ஒழித்துக் கட்டும். காதல் திருமணங்களை குற்றமாக இது மாற்றும் அல்லது மாற்றப்படும். காதல் திருமணங்கள் செய்துகொள்பவர்களை ஆதிக்க சாதி வெறியர்களும், இந்துத்துவ மத வெறியர்களும் ஆணவப் படுகொலைகளை நாடு முழுவதும் செய்துகொண்டிருக்கும் நிலையில் இந்தச் சட்டம் அவர்களுக்கு சட்ட பாதுகாப்பை வழங்குகிறது. சங்கிகளின் லவ் ஜிகாத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த திருத்தம் வழி செய்திருக்கிறது. பெண்கள் சுயமாக வாழ்க்கைத்துணையை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வது என்பதன் அடிப்படையையே இது தகர்க்கிறது. 

திருமணத்திற்கு முன்பும், அதற்குப் பின்பும் பெண்களை ஆண்களின் சொத்தாகவே கருதுவதும், அவர்கள் ஆண்களின் அதிகாரத்திற்கு உட்பட்டு வாழ மட்டுமே அனுமதிக்கிற ஆணாதிக்கத்தை நிலைநாட்டுகிற சட்டங்களாகும். 

உண்ணாவிரதப் போட்டத்தை குற்றமாக மாற்றியுள்ளது

அகிம்சை போராட்டம் என அறியப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் (பிரிவு 226) அரசுக்கு எதிரான குற்றமாக தண்டிக்க வழிவகை செய்துள்ளது. தற்போதுள்ள இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 309ல் உள்ளதை பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 226 மாற்றியும் கூடுதலாக. "அரசு ஊழியரை சட்டப்படியான கடமையை செய்யவோ அல்லது தடுக்கும் நோக்கத்துடனோ தற்கொலைக்கு முயற்சிக்கும் எவரும்" என்ற வார்த்தைகளை சேர்த்து அரசுக்கு எதிரான குற்றமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பதைக் கூட அரசுக்கு எதிரானது எனக் கருதும் இந்த ஆளும் வர்க்கத்தின் இரக்கமற்ற ஆன்மாவை புரிந்துகொள்ள முடியும்.

தற்போதுள்ள குவிமு சட்டம், சங்கமாக ஓர் இடத்தில் கூடி அரசியல் இயக்கமாக இயங்குவதை, சட்டவிரோதமாக கூடுவதாக கருதி தடுப்பதற்கும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் பிரிவுகள் 154-156ஐ கீழ் அதிகாரம் வழங்கியிருக்கிறது. இந்த எதேச்சதிகார சட்டப் பிரிவை நீக்குவதற்கு மாறாக அதை அப்படியே பிரிவு 193 (BNSS) ஆக மாற்றி கொண்டு வந்திருக்கிறது. எந்தவொரு குற்ற செயலும் நடக்கவில்லை என்றாலும், தனது சொந்த நிலத்தில் கூடும் அரசியல் உரிமையைக் கூட இச்சட்டம் தடுக்கிறது. அது புதிய சட்டத்திலும் தொடர்கிறது. 

குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட கருணை மனு மீது நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது

இந்த பாசிச கொடுங்கோலர்களால் தண்டிக்கப்பட்ட பின்பும் தண்டனையிலிருந்து தப்பித்து உயிர்வாழ கருணை மனு கொடுப்பதற்கு கூட கால நிர்ணயம் செய்துள்ளது. தூக்குத் தண்டனை கைதிகள் கருணை மனுவை கவர்னரிடம் 30 நாட்களுக்குள்ளும், அம் மனு நிராகரிக்கப்பட்டால் குடியரசுத் தலைவரிடம் 60 நாட்களுக்குள்ளும் அளிக்கப்பட வேண்டும். குடியரசுத் தலைவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் கிடப்பில் போட்டாலும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியாது. அந்த கருணை மனு மீது எவ்வளவு காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்பதற்கு எந்த வரையறையும் இச்சட்டத்தில் இல்லை. மரண தண்டனையை விட மரணம் ஏற்படப் போகிறது என்ற அச்சத்துடன் வாழும் கொடூரமான நிலையை உருவாக்கியிருக்கிறது. இந்த சட்டத்தில் பல குற்றங்களுக்கு உச்சபட்ச தண்டனை மரண தண்டனையாக மாற்றிய நிலையில் இது மன்னர் காலத்து சட்டத்துக்கு ஒப்பாக பழிவாங்கும் தண்டனை முறைமையாகவே அமையும். புதிய சட்டப்படி பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலை என்பது சாத்தியமே ஆகியிருக்காது. இதன் பொருள் அரசியல் கைதிகள் பொய்யாக புனையப்பட்ட வழக்கில் எப்போதும் அரசு பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

அடுத்த இதழில் தொடரும்...

- சமரன் (மே மாத இதழில்)

=================================================================================================

பகுதி -3

பாரதீய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா - BNSS (பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம்) என்ற பெயரில் காவல்துறையே அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம்

புதிய குற்றவியல் சட்டம் ஏற்கெனவே இருந்த மாநில உரிமைகளையும் பறித்துள்ளது

தற்போது உள்ள குற்றவியல் விசாரனை நடைமுறைச் சட்டத்தில் (CrPC) தண்டனைகள் வழங்கப்பட்ட பிறகு மாநில அரசு அதை மாற்றும். குறிப்பாக மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அதை மாற்றி விடுதலைகூட செய்வதற்கான அதிகாரம் இருந்தது (பிரிவு 433). ஆனால் இந்த புதிய சட்டம் BNSS பிரிவு 475ன் படி ஆயுள் தண்டனையாக மட்டுமே மாற்ற முடியும். அதுமட்டுமல்ல, முன்பு ஆயுள் தண்டனை மற்றும் கொடுஞ்சிறை ஆகிய தண்டனையை அபராதமாக மாற்றி விடுதலை செய்வார்கள். ஆனால் இனி இந்த தண்டனைகளை அபராதமாக மாற்றி விடுதலை செய்ய முடியாது. 

இந்த தண்டனையை மாற்றுவதை மட்டுமல்ல அதை செயல்படுத்துவதற்கான அதிகாரத்தையும் பறித்திருக்கிறது. தற்போது உள்ள CrPC பிரிவு 435ன் படி தண்டனைகளை நிறுத்தி வைத்தல், தள்ளுபடி செய்தல், மாற்றியமைத்தல் ஆகிய அதிகாரங்களை, மாநில அரசு மத்திய அரசுடன் ஆலோசனையை (Consultation) மட்டும் செய்துவிட்டு செயல்படுத்தியது. ஆனால், புதிய BNSS பிரிவு 477ன் படி மத்திய அரசு உடன்பட்டால் (Concurrence) மட்டுமே இனி மேற்கண்ட அதிகாரத்தை செயல்படுத்த முடியும். அதாவது ஏற்கெனவே இருந்த மாநில அரசின் அதிகாரத்தையும் பறித்திருக்கிறது இச்சட்டம்.

தற்போதைய இந்த அதிகாரத்தின் கீழ்தான் பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலை சாத்தியமானது. இப்படிப்பட்ட மாநில அதிகாரத்தை மாநில அரசுகளின் சட்டமன்ற விவாதங்கள், அல்லது மாநிலங்கள் அவையில் கூட விவாதம் இல்லாமல் மாற்றி இருப்பது கூட்டாட்சி என்பதெல்லாம் வார்த்தை ஜாலம் என்பதை நிரூபித்திருக்கிறது. இதை எதிர்த்து போராட எந்த மாநில அரசும் தயாரில்லை. தமிழக கட்சிகளான திராவிடக் கட்சிகளும் வாய்மூடி மவுனியாக இருக்கிறது. 

மக்களை கைவிலங்கிட்டு விலங்கினும் கீழாக நடத்த அதிகாரமளிக்கும் BNSS பிரிவு 43(3) 

கைவிலங்கு பயன்படுத்துவது முன்பு மனிதவுரிமையை பறிப்பதாக பார்க்கப்பட்டது. கைதிகளை மனிதர்களாக நடத்தாமல் இழிவாக நடத்துவதாக கருதப்பட்டது. ஆனால் புதிய சட்டத்தில் கைவிலங்கு பூட்டுவது இனி காவல்துறையின் உரிமையாக கருதப்படும். சுனில் பத்ரா (1980) வழக்கில் உச்ச நீதிமன்றம் கைவிலங்கிடுவது அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே கைவிலங்கிட வேண்டும் என்ற வழங்கிய தீர்ப்பு தற்போது செல்லாகாசாக்கி விட்டது இச்சட்டம். 

கைவிலங்கிடும் அதிகாரத்தை எந்த சூழ்நிலையிலும் சிறை உட்பட எவ்விடத்திலும் கூடாது என்றும், தப்பித்து போகும் கைதிகள் என தெரிந்தால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கைவிலங்கிடலாம் என மாலிமத் கமிட்டி பரிந்துரைத்த மாற்றத்திற்கு எதிராக இச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.

விசாரணை என்ற பெயரில் முதல் தகவல் அறிக்கை பதியாமலேயே காவல் நிலையத்தில் அடைத்து வைக்கும் அதிகாரம்

முதல் தகவல் அறிக்கை பதிதல் (பிரிவு 173 BNSS). தற்போது ஜீரோ FIR என்ற புதிய முறையை உருவாக்கியிருக்கிறார்கள். 3லிருந்து 7வருடம் வரையிலான தண்டனை உடைய குற்றங்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதியாமலேயே குற்றம் நடந்திருக்கிறதா என விசாரணை நடத்த 14 நாட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதுவரையில் அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது லாக் அப் கொடுமைகள் அதிகரிக்கவும், அதனால் ஏற்படும் லாக் அப் மரணங்கள் நடக்கவுமே வழிவகை செய்துள்ளது.

எந்தவொரு நபரையும் காவல்நிலையத்தில் அடைத்து வைக்கும் அதிகாரத்தை (பிரிவு 170) காவல்துறைக்கு வழங்கியுள்ளது. அதாவது கைது செய்யாமலேயே காவல்நிலையத்தில் 24 மணி நேரத்திற்கு அவர்கள் வசமே தடுத்து வைத்துக் கொள்ளலாம். ஏற்கெனவே யாரை வேண்டுமென்றாலும் விசாரணை என்ற பெயரில் சட்டவிரோதமாக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று பல நாட்கள் விடாமல் சித்தரவதை செய்கிறார்கள். இப்போது 14 நாட்கள் விசாரணை என்ற பெயரிலேயே புகாரை காவல் அதிகாரி வைத்திருக்க முடியும் என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள கொடிய ஆயுதத்தை புரிந்துகொள்ள முடியும்.

கைது செய்யப்படவர்களை போலீஸ் காவலில் எடுக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும் காலத்தை (பிரிவு 167 CrPC) நடைமுறையில் இருக்கும் 15 நாட்களுக்குள் எடுத்து விசாரித்து விட வேண்டும். மிக கொடுங் குற்றத்திற்கு கூட மொத்த காலத்தை 15 நாட்களுக்குள் இருக்கவேண்டும். ஆனால் புதிய சட்டத்தில் (பிரிவு 187 BNSS) போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதை 40-60 நாட்கள் வரை நீட்டித்து அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. குற்றத்திற்கு தகுந்தாற் போல் 2-3 மாதம் என இருந்ததை 4 மாதம் வரை நீட்டித்துள்ளது. எப்போதுமே அச்சத்தின் பிடியில் வைத்திருக்கவே போலீஸ் அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக செந்தில் பாலாஜி, அரவிந்த் கேஜ்ரிவால் உட்பட எதிர்கட்சிகள் மீது போடப்பட்ட பல வழக்குகள் போலீஸ் காவலில் எடுத்து அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கே ஆளும் கட்சிகள் பயன்படுத்துகிறது. அறிவியல் முறையை பயன்படுத்தி விசாரணை செய்வதற்கு மாறாக துன்புறுத்தி வாக்குமூலம் பெறவே இது போன்ற அதிகாரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

குற்றப்பத்திரிகையை குறித்த காலத்தில் தாக்கல் செய்யாத போது மறுக்க முடியாத பிணை உரிமையை இச்சட்டம் 4 மாத காலம் நீட்டிக்கிறது

முந்தைய சட்டத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய குற்றத் தன்மையை பொறுத்து 60 அல்லது 90 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. புதிய சட்டத்தின் கீழ், குற்றப்பத்திரிகையை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும், விசாரிக்க மேலும் 30 நாட்களுக்கு நீதிமன்றம் நீட்டிக்க முடியும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான காலம் 90 நாட்களுக்கு மேல் நீட்டிக்கும் அதிகாரத்தையும் (பிரிவு 193ன் படி) இதில் கொடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு காலம் வரையில் நீட்டிக்கலாம் என வரையறை செய்யவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றால் சட்டப்படியாகவே மறுக்கமுடியாத பிணை உரிமையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். ஆனால் புதிய சட்ட வரைவு பிணை உரிமையை மறுத்து பிணையில் விடாமல் 4 மாதம் வரை சிறையில் வைத்திருக்க முடியும் என்கிறது. இது ஊபா, குண்டாஸ், தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற சிறப்புச் சட்டங்களில் இருந்ததை பொதுச் சட்டத்திற்கு கொண்டுவந்திருக்கிறது. மக்கள் எல்லோரையுமே பயங்கரவாதிகளாகவும், அச்சுறுத்தலாகவும் கருதுகிறது. காரணம் இன்றைய பாசிச ஒடுக்குமுறை கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடுபவர்களை சிறையிலடைத்தே இவர்களின் அதிகாரத்தை தக்கவைக்க வேண்டியிருக்கிறது.

தனி மனித உரிமையை சட்டப்படியே பறிக்கும் அதிகாரம்

குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டால் மட்டுமே அவரிடம் உயிரியல் மாதிரிகள், கைரேகைகள் ஆகியவை சேகரிக்க முடியும். ஆனால் இப்போது நீதித்துறை நடுவர், குற்றவியல் BNSS சட்டப் பிரிவு 349 படி கைது செய்யப்படாத சூழ்நிலையிலும் எவரிடமிருந்தும் கட்டாயப்படுத்தி கையெழுத்து, கைரேகை, குரல் மாதிரி ஆகியவற்றை பெற முடியும். இது முற்றிலும் ஆபத்தானது. தனி நபர் உரிமையை பாதிக்கக் கூடியது. குற்றவியல் ஆளறி அடையாளச் சட்டம், 2022ன் படி காவல்துறை துணை ஆய்வாளரே கைது செய்யாமல் சந்தேகத்தின் பேரிலேயே உயிரியல் மாதிரிகளைப் பெற அதிகாரம் உண்டு. மறுத்தால் கைது செய்து சிறையிலடைக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றவியல் சட்டங்களில் கட்டாயமாக பெறப்படுகின்ற தகவல்களை பாதுகாப்பதற்கு மாறாக அவற்றை பொது நோக்கத்திற்கு என்ற வரையறையின் கீழ் அனைவருக்கும் பகிர்வதற்கு தகவல் பாதுகாப்பு சட்டம் வழிவகை செய்கிறது.

காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு வெளியே கைது செய்யப்பட்ட நபர்களின் தகவல்களை அறிவிப்பு பலகையில் அறிவிப்பு செய்ய வேண்டுமென்ற தற்போதைய குவிமுச சட்டப் பிரிவு 41C சட்டப் பிரிவில் கூறியுள்ள வார்த்தையோடு டிஜிட்டல் முறையிலும் பட்டியலிடவேண்டும் எனவும் புதிய BNSS சட்டப் பிரிவு 37 கூறுகிறது. இது முற்றிலுமாக தனி மனித உரிமையை ஒழித்து வழக்கு பதிவு செய்த ஒரே காரணத்திற்காக அவர்களை அவமானப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. வங்கிகளில் கடன் தராதவர்களின் பட்டியலை வெளியிட்டதால் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகளை நாம் யாவரும் அறிந்ததே. அதே போன்றதொரு நிலையை இப்பிரிவு உருவாக்கியிருக்கிறது. இதை நீக்குவதற்கு மாறாக அதை உலகறியச் செய்ய டிஜிட்டல் வடிவிலும் செயல்படுத்த முனைந்திருக்கிறது.

யூனியன் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக புட்டசாமி தொடுக்கப்பட்ட (2017) வழக்கில், "குடிமக்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்கு அவரின் தனி மனிதத் தகவலை திருடப்படும், கசிவு ஆகும் சூழ்நிலையில், காப்பதிலிருந்து மீறப்படுவதோ அல்லது சேதப்படுத்தப்படுவது போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதற்கு, நமது உள்கட்டமைப்பு வலுவாகவும் பிரமாண்டமாகவும் இருக்க வேண்டும். இதில் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் பட்சத்தில் அது தனியுரிமைக்கான உரிமையை மீறுவதற்கு சமம்" என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்த போதிலும் அதை ஒரு துளியும் அக்கறைக் கொள்ளவில்லை இச்சட்டம்.

இந்த மூன்று குற்றவியல் சட்டங்களோடு "குற்றவியல் ஆளறி அடையாளச் சட்டம் 2022"(ஆகஸ்ட் 2022லேயே நடைமுறைக்கு வந்துவிட்டது) "டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டம் 2023" (ஆகஸ்ட் 2023ல் கொண்டுவரப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவர அறிவிப்பு செய்ய வேண்டிய தயார் நிலையில் இருக்கிறது) ஆகிய இரண்டு சட்டங்களையும் இணைத்துப் பார்க்கவேண்டும். இந்த சட்டங்கள் அனைத்துமே குற்றவியல் சட்டங்களின் ஒரு அங்கமாக மாறுகிறது. தற்போது கொண்டுவந்துள்ள டிஜிட்டல் தகவல் பாதுகாப்புச் சட்டமானது அரசு முகமைகளுக்கு விதிவிலக்கு வழங்கியிருக்கிறது. இது தனியார் நிறுவனங்கள் தனிநபரின் தகவல்களை தவறாகப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் பிரிவுகள் இல்லை. இவை அனைத்தும் தனி நபர் உரிமையை பறிப்பதாக உள்ளது. அது தகவல்களை பாதுகாப்பதற்கு மாறாக வணிகமயப்படுத்தியிருக்கிற சூழ்நிலையில் எந்த தனிமனித உரிமையும் இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் காவல்துறையும், நீதித்துறையும் தனி மனித உயிரியல் மாதிரிகளை எவரிடமிருந்தும் எளிதாக பெறுவதற்கு வழிவகுத்துள்ளது என்பது இந்த நாட்டு மக்களை மனிதர்களாகவே நடத்த தயாரில்லை. டிஜிட்டல் எண்களாக பாவிக்கிறது என்பதே.

எதேச்சதிகார விசாரணை முறையும், சொத்துகளை முடக்கிவைத்தலும் பறிமுதல் செய்தலும்

காவல் விசாரணை அனைத்தையும் வீடியோ பதிவாக செய்ய வேண்டும் (பிரிவு 176(3)). 7 வருடங்களுக்கு மேல் தண்டனை உள்ள வழக்குகளில் தடவியல் நிபுணர்களின் அறிக்கையும் கட்டாயமாக தாக்கல் செய்யப்பட வேண்டும், கைப்பேசியில் காட்சிப் பதிவு செய்து தாக்கல் செய்யலாம் என்று இந்த சட்டம் கூறுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களை அச்சுறுத்தி நடிக்க வைத்து பதிவுசெய்யப்படும் வீடியோக்கள் மற்றும் மிரட்டி பெறும் வாக்குமூலங்களை ஆதாரங்களாக கொண்டே அவர்களை தண்டிக்க வழிவகை செய்துள்ளது.

அதைவிட கொடிய சட்டப்பிரிவு காவல்துறையிடம் குவிக்கப்பட்டிருக்கிறது. முதல் தகவல் அறிக்கை பதிந்துவிட்டாலே சொத்துக்களை பற்றுகை செய்வதற்கும், பறிமுதல் செய்வதற்கும், அதை முடக்கி வைப்பதற்கும் காவல்துறைக்கு எல்லையில்லா அதிக்காரம் வழங்கப்பட்டிருக்கிறது (பிரிவு 107). தேடப்படும் குற்றவாளி என அறிவித்துவிட்டால் அவர்களின் சொத்துக்களை பற்றுகை செய்வதற்கு பிரிவு86 BNSS அதிகாரம் வழங்கியிருக்கிறது. இந்த பாசிச ஆட்சியில் எவரெல்லாம் இந்த ஆட்சியை எதிர்த்து கேள்வி எழுப்பினார்களோ அவர்களின் வீடுகளையெல்லாம் புல்டோசர் கொண்டே அகற்றப்பட்டது. இப்படிப்பட்ட சொத்துக்களை சூறையாடும் புல்டோசர் ஆட்சியில் இது போன்ற காவல்துறை அதிகாரம் இவர்கள் செய்யும் அனைத்து பாசிச நடவடிக்கைக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதாக மாற்றியிருக்கிறது. இந்த பிரிவானது அரசியல் சட்டம் வழங்கியுள்ள சொத்துக்கள் மீதான உரிமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

குற்ற வழக்குகளிலும் இனி ஒரு தலைபட்ச விசாரணை முறையில் தீர்ப்புகள் வழங்கப்படும் (பிரிவு 356)

மிக உச்சபட்சமாக பிரிவு 356ன்படி, குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்கு வராதபோதும் விசாரணை செய்து தண்டனை வழங்க முடியும். விசாரணையைத் தவிர்ப்பதற்காக தலைமறைவாகி விட்டால், உடனடியாக அவரைக் கைது செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்ற நிலையில் அத்தகைய நபர் நேரில் ஆஜராகி வழக்கு நடத்துவதற்கான உரிமையை மறுக்கிறது. வழக்கறிஞரை அமர்த்திக்கொள்ளும் உரிமையும் இதில் சேர்ந்தே பாதிக்கப்படும். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க எந்த சட்டரீதியான வரையறையையும் உருவாக்கவில்லை. பெரும்பாலும் காவல்துறை குற்றவாளிகளை தேடாமலேயே தேடப்படுகின்ற குற்றவாளி என்று அறிவித்துவிடும். இனி புதிய சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி தீர்ப்பும் வழங்கலாம் என்றால் எல்லோரும் காவல்துறையால் தண்டிக்கப்படும் நிலையே உருவாகும். குறிப்பாக பல்வேறு இடங்களில் தனது உரிமைகளுக்காக மக்கள் போராடுகிறார்கள். அவர்கள் மீது கொத்தாக வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. பிறகு அதில் விசாரணை நடத்தியதாக கூறி நீதிமன்ற விசாரணக்கும் வருகிறது. எப்போதோ நடந்த அந்த போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் அதன் பிறகு எங்கு குடியிருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் அவர்கள் அங்கு இல்லை என்று கூறி அவர்களை தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பார்கள். நீதிமன்றத்தில் நீதிபதியும் காவல்துறையும் மட்டுமே கூட்டு சேர்ந்து விசாரணை நடத்துவார்கள். தனக்கு தோதான சாட்சிகளை நிறுத்தி தண்டனையும் வழங்கிவிடுவார்கள். இவை அனைத்தும் இதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தெரியாது. தண்டனை உறுதி செய்யப்பட்டப் பிறகு சுலபமாக தேவைப்படும் நேரத்தில் தேடி சிறையில் அடைத்து விடுவார்கள். இது போன்ற பயங்கரத்தை நினைத்துப் பார்த்தால் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை விட இன்றைய புதிய காலனிய தாசர்களின் அடக்குமுறைகள் மிக பயங்கரமாக இருக்கிறது. இது அரசு பயங்கரவாதத்தின் உச்சம்.

பாரதீய சாக்ஷ்ய அதிநியாம் என்ற சாட்சியச் சட்டம் கருப்புச் சட்டங்களின் நகலாக மாறி விட்டது

டிஜிட்டல் மற்றும் வீடியோ பதிவுகள் முதல்நிலை சாட்சியாக மாற்றப்பட்டுள்ளது

காவல்துறை புகார் பதிவிலிருந்து, குற்ற விசாரணை, வழக்கு விசாரணை என அனைத்து விசாரணைகளும் இனி வீடியோ கான்பரன்சிங் முறையில் செய்ய முடியும். மின்னணு வடிவில் தயாரிக்கப்படும் வீடியோ பதிவில்லாமல் எதுவும் செல்லாது என்று சொல்லப்பட்டாலும், பாரதிய சாட்சிய அதிநியாயம் மூலம் மட்டுமல்ல அதிலிருந்து பெறப்படும் அனைத்து ஆவணங்களையும் முதல்நிலை சாட்சியமாக மாற்றியுள்ளதே ஆபத்தானது. ஏற்கெனவே கைது செய்யப்படுபவர்களிடமிருந்து எப்படி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகிறது என்பதை நன்கு அறிவோம். செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதன் மூலம் தவறான சான்றுகள் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் இரண்டாம் நிலை சான்றுகளாக ஏற்பதற்கு கூட உண்மைத் தன்மைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதன் பொருள் அது முதல்நிலையிலேயே சான்றாக ஏற்கப்படும். அதை மறுக்க வேண்டுமென்றால் அதை குற்றம் சாட்டப்பட்டவரே அது போலியானது, புனைவாக உருவாக்கப்பட்டது என நிரூபிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதை பயங்கரவாதச் சட்டத்தின் இன்னொரு பதிப்பாக மாற்றியுள்ளது பாசிச மோடி அரசு.

2021 பிப்ரவரியில், ரோனா வில்சனின் லேப்டாப்பில் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டிய கடிதக் கோப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பாசிச பாஜகவின் ஏஜென்சியான என்ஐஏ கூறியது. அதை ஆய்வு செய்த போது வில்சனின் கணினியிலேயே இல்லாத மைக்ரோசாப்ட் வேர்டின் புதிய பதிப்பைப் பயன்படுத்தி அந்த போலிக் கடிதம் இந்த கைக்கூலி ஏஜென்சியால் உருவாக்கப்பட்ட உண்மை வெளிவந்தது. ஆவணங்கள் அல்லது மறைக்கப்பட்ட கோப்புறைகள் (folders) எப்போதாவது திறக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அறிக்கை கூறியது. ஏப்ரல் 2021 இல், டிஜிட்டல் தடயவியல் துறையில் ஒரு முன்னணி நிறுவனம், வில்சனின் கணினி ஹேக் செய்யப்பட்டதற்கான "மறுக்க முடியாத" ஆதாரம் இருப்பதாகக் கூறியது. பீமா-கோரேகான் வன்முறைக்கு 11 நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 11, 2018 அன்று இந்த கோப்புகள் அதில் சொருக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட மோசடியான டிஜிட்டல் ஆதாரங்களைத்தான் முதல் நிலை ஆதாரமாக எடுத்துக் கொள்ள இச்சட்டம் வழிவகுக்கிறது. இத்தகைய ஆபத்தான சட்டப்பிரிவு தொழில்நுட்பச் சட்டத்தின் டிஜிட்டல் ஆதாரங்களை சமர்ப்பிக்கும் முறைகளை கேலிக்கூத்தாக்கும் என்பது மட்டும் நிச்சயம். 

குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கான பல்வேறு கமிட்டிகளின் பரிந்துரைகளைப் பற்றி மவுனம் சாதிக்கும் அமித்ஷா

இன்றைய அரசியல் நெருக்கடியான பாசிசக் காலகட்டத்தில் மக்களை ஒடுக்குவதற்கும், பாஜகவின் செயல்தந்திரங்களை செயல்படுத்திக் கொள்ளவும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. 

இந்த குற்றவியல் சட்டத்தை மாற்றியமைக்க ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகத்தால் மே 2020ல் அமைக்கப்பட்ட டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் துணைவேந்தருமான பேராசிரியர் ரன்பீர் சிங் தலைமையிலான குழுவை அமைத்திருந்தது. இந்தக் குழு 2020ம்ஆண்டு உலகமே முடங்கிப் போயிருந்த கொரோனா காலத்தில் ஆன்லைனில் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி ஒரு வரைவை இறுதி செய்து அளித்திருந்தது. அந்த அறிக்கையிலிருந்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறதா என்ற தகவலை கூட சொல்ல மறுக்கிறது. 

காவல்துறை விசாரணை முறையை சீர்திருத்த சட்ட ஆணையம் 154வது அறிக்கையில் விசாரணை முகமையையும், சட்ட ஒழுங்கு பிரிவையும் தனித்தனியான அதிகாரத்தின் கீழ் கொண்டுவர பரிந்துரைத்தது. அதையே மாலிமத் கமிட்டியும், காவல்துறை சீர்திருத்தம் சம்பந்தமாக அமைக்கப்பட்ட பத்மநாபய்யா கமிட்டியும் பரிந்துரைத்தது. அதாவது விசாரணை முகமையை அரசியல் அதிகாரத்தின் கீழ் விசாரணை செயல்படாமல் சுதந்திரமாக செயல்பட நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவர பரிந்துரைத்தது. இது சட்ட ஒழுங்கு துறை காவலர்களை வைத்து அடித்து துன்புறுத்தி சாட்சியம் பெறுகின்ற வழிமுறையை குறைத்து அறிவியல் பூர்வமான விசாரணை முறையை கொண்டுவருவதற்கு வழிவகுக்கும் என்று ஆணையம் பரிந்துரைத்தது. இதற்கு நேரெதிராகவே காவல்துறையில் அதிக அதிகாரம் குவிக்கப்பட்டிருக்கிறது. 

மாநில காவல்துறையின் அதிகாரம் பறிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட என்.ஐ.ஏ. போன்ற வானளாவ அதிகாரம் கொண்ட ஏஜென்சிகளை இந்த சட்டத்தின் எந்த பிரிவும் கட்டுப்படுத்தாது என்பதே உண்மை.

காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் எந்த வழியும் இதில் சொல்லப்படவில்லை. காவல்துறை சீர்திருத்தம், சிறை சீர்திருத்தம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தாமலேயே நீதித்துறை முறைமையை மாற்றியமைத்துள்ளதாக கூறுவது ஏமாற்று. அதாவது விசாரணை கைதிகளை எல்லாம் தண்டனைக் கைதிகளாக மாற்றுவதை நோக்கமாக கொண்டதே இச்சட்டம். குற்றவியல் ஆளறி அடையாளச் சட்டத்தை 2022ல் கொண்டுவந்த போது, பாராளுமன்றத்தில் "விசாரணை ஏஜென்சிகளுக்கு குற்றத்தை நிரூபிப்பதற்கும், தண்டனைகளை அதிகரிப்பதற்கும் தேவை" என அமித்ஷா பேசிய அதே நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்தச் சட்டங்களும் கொண்டுவரப் பட்டிருக்கிறது.

சட்டம் உருவாக்கப்படுவதற்கான அரசியல், பொருளாதர சூழ்நிலை என்ன? அதன் நெருக்கடிகள் என்ன?

2008ல் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடி உச்சத்தை தொட்டது. அதன் பிறகு அதிலிருந்து மீள்வதற்கான எந்த வழியும் இதுநாள் வரை ஏற்படவில்லை. மேற்கண்ட உலகப் பொருளாதார மந்த நிலையால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்கா மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக ஐரோப்பா, ஆசியா என பரவியது. இந்நிலையில் கொரோனா முடக்க காலத்தில் மக்களின் வாங்கும் சக்தியின் வீழ்ச்சி ஒரு பக்கம் நெருக்கடியை ஆழப்படுத்தியது, ஒரு சில ஏகாதிபத்திய நாடுகளின் கார்ப்பரேட்டுகள் முன்னிலும் அதிகமான லாபங்களை கொழித்ததும் நடந்தேறியது. இது ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போட்டியை கூர்மைப்படுத்தியதோடு, ஒடுக்கப்பட்ட நாடுகளை சுரண்டுவதை இன்னும் கடுமையாக்கியது. ஒடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் இந்த சுரண்டலுக்கு தேவையான அனைத்தையும் தனது ஆட்சியதிகாரத்தின் மூலமாக செய்யத் தொடங்கியது. அதற்கு ஏற்கெனவே உள்ள பழைய முறைகளை எல்லாம் தூக்கியெறிந்து முன்னிலும் பிற்போக்கான அடிமைத் தனமான முறைகளை கைக்கொள்ள வேண்டியிருந்தது. அதற்கு ஒரு புறம் வன்முறை மூலமாக அடக்குவதும், இன்னொருபுறம் முந்தைய அவர்களுக்கு ஒத்துவராத சட்டங்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதே நிலைத்தான் இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் ஏற்பட்டது. அதனால்தான் இந்தியாவை முன்னிலும் அதிகமான ஆழமான அடிமைப்படுத்தும் ஒப்பந்தங்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் செய்து கொண்டது. உலக மேலாதிக்க நலனுக்காக அமெரிக்க-நேட்டோ அணி சீன-ரஷ்ய அணியோடு முட்டி மோத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. குறிப்பாக மூலப்பொருளுக்கான போட்டி, மலிவான கூலி உழைப்பைச் சுரண்டல், மிகப் பெரிய சந்தையை அப்படியே கபளிகரம் செய்ய அமெரிக்கா சீனாவுடன் போட்டியிட இந்தியாவை தன்னோடு பிணைத்துக் கொண்டது. அதற்கு இங்குள்ள பல பழையச் சட்டங்களை திருத்தி எளிதாக தனது சுரண்டலுக்கு உகந்த நிலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அப்படி மாற்றப்பட்ட சட்டங்களில் மூலப்பொருட்களை கொள்ளையடிக்க உகந்ததாக சுற்றுச் சூழல் சட்டம் (EIA), வனப் பாதுகப்புச் சட்டம், பல்லுயிர் பெருக்கச் சட்டம் ஆகிய சட்டங்களையும், நீர் வளங்களை தனியார்மய வணிகமயமாக்க அணை பாதுகப்புச் சட்டம், சுரங்கம் மற்றும் கனிமங்கள் திருத்தச் சட்டம் போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அரசு நிதிமூலதன நிறுவனங்களைக் கையகப்படுத்த காப்பீட்டுச் சட்டம், வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் என பலச் சட்டங்களை கொண்டுவந்தது. மலிவான கூலி உழைப்பைச் சுரண்டுவதற்கு உகந்த தொழிற்சாலைச் சட்டம், தொழிலாளர் சட்டம், நிறுவனச் சட்டம் போன்ற சட்டங்களை கொண்டு வந்தது. எல்லாத் துறைகளிலும் சில கார்ப்பரேட்டுகள் மட்டும் ஏகபோகத்தை அடைவதற்குத் தடையாக இருந்த ஏகபோகங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகள் MRTP என அறியப்பட்ட சட்டங்களை ஒழித்து போட்டிச் சட்டம் ஏற்கெனவே கொண்டு வந்திருந்தது சுரண்டலுக்கு மிக வசதியாக இருந்தது. 2023ல் அது இன்னும் வசதியாக திருத்தப்பட்டு ஏகபோகத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இந்த சட்டங்கள் மூலம் இந்திய மக்களின் வாழ்வில் மிக மோசமான மாற்றங்களை உருவாக்கிவிட்டது. வேலையின்மை, நிரந்தரமற்ற அடிமை ஒப்பந்த குறைந்த கூலி முறை, விலையேற்றம் அதை எதிர்த்து போராடுகின்ற தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், அரசு ஊழியர்கள் என அனத்து தரப்பு மக்களும் எதிர்த்து போராடுகின்ற நிலையில்தான் தற்போதுள்ள காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றைக் கொண்டு மக்களை ஒடுக்குகின்ற குற்றவியல் சட்டத்தையும் அவசர அவசரமாக திருத்தியுள்ளது.

இதனடிப்படையிலேயே இந்த மூன்று சட்டங்களையும் ஜனநாயகமற்ற வழிமுறையோடும் ஏற்கெனவே இருக்கிற அரசியல் சட்டம் வழங்கியுள்ளதும், ஏற்கெனவே நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலமாகவும் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பறிக்கின்ற வகையிலும் இந்த குற்றவியல் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாசிச சட்டங்களை எதிர்ப்போம்! சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் போராடுவோம்!!

சில நிமிடங்களில் பல சட்டங்களை விவாதங்களே இல்லாமல் சட்டமாக்கப்படுவது பல பத்தாண்டுகளாக தொடர்கிறது. இப்படி சட்டவிரோதமான பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை எதிர்த்து அந்த சட்ட திருத்தங்கள் அரசியலமைப்புக்கு விரோதமாக உள்ளது என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகளில் பல நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்படாமலேயே தூங்குகிறது, பல வழக்குகள் விசாரணைக்கு உகந்தது அல்ல என தள்ளுபடியும் செய்யப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் இந்த பாசிச அரசு சட்டவிரோதமான முறையில் பாராளுமன்றத்தில் எவ்வித விவாதமும் இன்றி அவசரச் சட்டங்களாக நிறைவேற்றியது. சட்ட வழியில் பாசிசத்தை கொண்டுவருவதும், மக்களுக்கிடையில் சாதி, மதம், இனம் என அனைத்து வேற்றுமைகளையும் பயன்படுத்தி தனது பெரும்பான்மைவாதத்தை விதைத்து மக்களுக்குள் மோத விடுவதும், ஆயுதம் தாங்கிய குண்டர்படைகளை கட்டியமைத்து தாக்குவதும், அதையும் மீறி அரசை எதிர்த்து போராடுபவர்களை இராணுவம், போலீஸ், அரசு எந்திரத்தை கொண்டு அடக்குவதும் என சகல வழிகளிலும் தனது பாசிச ஆக்டோபஸ் கொடுங் கரங்களை நீட்டுகிறது. அமித்ஷாவின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் "இப்போது நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம். அரசுக்கு எதிராக யார் வேண்டுமானாலும் எதுவும் கூறலாம், ஆனால் நாட்டின் கொடி, பாதுகாப்பு, சொத்துக்களில் யாராவது தலையிட்டால் அவர்கள் சிறைக்குச் செல்வார்கள்" என்ற பாசிச வெறிக் கொண்ட பேச்சே அதற்கு சாட்சி. 

இதற்கு சேவை செய்கிற வகையில் தற்போது கொண்டு வரப்பட்டு ஜூலை1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்துப் போராடுவது உழைக்கும் வர்க்கத்தின் கடமையாகும். இல்லை என்றால் நாம் அடிமையினும் கீழாக நடத்தப்படுவது தவிர்க்க முடியாததாகும். இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கப் போவதால், இதை எதிர்த்து அனைத்து மக்களும் ஒன்றாக கரம் கோர்த்து போராடவேண்டியது நமது கடமையாகும். 

(முற்றும்)

- சமரன் (ஜூன் 2024 இதழில்)