இந்தியாவின் கடும் பொருளாதார நெருக்கடி : அடிப்படைகள் - தரவுகள்

நிதி மூலதனம் என்றாலே பிற்போக்கான அழுகல் தன்மை கொண்டது என்றார் லெனின். வளர்ச்சி என்பது ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்தின் கீழ் சாத்தியமில்லை என்பதை இன்று உலக நாடுகள் அனைத்தும் உண்மையாக்கி வருகின்றன.

இந்தியாவின் கடும் பொருளாதார நெருக்கடி : அடிப்படைகள் - தரவுகள்

ஏகாதிபத்திய ஓநாய்களின் அரசியல் - பொருளாதார கொள்கைகளினால் நெருக்கடிக்கு தள்ளப்படும் நாடுகளின் வரிசையில் இந்தியா

கடந்த தசாப்தங்களில் ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதாரம் முற்றிலுமாக சீரழிக்கப்பட்டு திவால் நிலையை அடைந்தன, அவை அன்று வெறும் செய்திகளாகவே மட்டும் நம்மை கடந்து சென்றன. ஆனால் தற்போது நம்மை சுற்றியுள்ள அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் போன்றவை பொருளாதார நெருக்கடியின் காரணமாக திவால் நிலையை அடைந்துவிட்டன. இலங்கையில் சில ஆண்டுகளாக நீடித்த பொருளாதார மந்தநிலை வெடித்து நிலைமை மிக மோசமாக மக்கள் போராட்டங்களிலும் கலகங்களிலும் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளமும் நெருக்கடியில் சிக்கி சீரழிந்து வருகின்றன. இதே நிலை இன்று இந்தியா எங்கிலும் சிறிது சிறிதாக வெளிப்படத் துவங்கியுள்ளது. இந்தியாவும் மிகப்பெரிய அளவிலான பொருளாதார மந்தநிலையில் சிக்கித் தவிக்கிறது. சீக்கிரத்தில் இலங்கையின் நிலை இந்தியாவிற்கும் ஏற்படலாம் என்ற அபாய சங்கு ஒலிக்கத் துவங்கியுள்ளது.

மூன்றாம் உலக நாடுகளின் இந்த பொருளாதார சீரழிவிற்கு அடிப்படையாக விளங்குவது ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல் - பொருளாதார கொள்கைகளும் யுத்தங்களுமேயாகும்.

இன்றைய இந்தியாவின் அவலநிலை

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் விண்ணையெட்டும் அளவிற்கு நாள்தோறும் உயர்ந்து வருகிறது. சமையல் எரிவாயுவின் விலை ரூ.1100க்கு மேலும், பெட்ரோல்-டீசல் விலை ரூ100க்கு மேலும், சமையல் எண்ணெய்யின் விலை ரூ.200க்கு மேலும் உயர்ந்துள்ளது. இவற்றுடன் சேர்ந்து அனைத்து உணவுப் பொருட்களும், பால் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களும் விலையுயர்ந்து இந்திய மக்கள் பஞ்சம், பட்டினிச்சாவுகளுக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். விலைவாசியுயர்வானது பல குடும்பங்களில் சிறார்களை கல்லூரி படிப்பு மற்றும் பள்ளிப்படிப்பைக் கூட பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளுகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுகுறு முதலீட்டாளர்கள் கடன்சுமை அதிகரிப்பால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். பள்ளிச் சிறுமி ஒருவர் பென்சில் வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லையென பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் இந்தியாவின் அவலநிலையை அப்பட்டமாக வெளிக்காட்டியது. தொடரும் மானியவெட்டு மற்றும் வங்கி கணக்கில் மானியம் என்ற ஏய்ப்பு நடவடிக்கைகள், ரேசன் முறையை ஒழித்துக்கட்ட மேற்கொள்ளும் நடவடிக்கை போன்றவை மக்களை மென்மேலும் வறுமையில் தள்ளி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் 23கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமை நிலைக்கு கீழே சென்றுள்ளதாகவும், 3 கோடிக்கும் மேற்பட்ட மத்தியத்தர வர்க்கத்தினர் ஏழ்மை நிலைக்குச் சென்றுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த எண்ணிக்கை கூட மிகக் குறைவானதே, உண்மையில் இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் ஏழ்மை நிலையிலும், வறுமையிலுமே சிக்கித் தவிக்கின்றனர். மேலும் மேலும் வர்க்க நிலை தாழ்த்தப்பட்டு ஏழ்மையை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் 40 கோடிக்கும் மேற்பட்டோர் வேலையின்மையால் சிக்கித் தவித்தனர். தொடர்ச்சியாக மாதத்திற்கு 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்து வருகின்றனர். வேலைக்குச் செல்வோரும் ஊதிய உயர்வின்றி, ஏற்கனவே இருந்துவந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளும் பறிக்கப்பட்டு கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி வருகிறது. விவசாயக் கூலித் தொழிலாளர்களின் நிலையோ இதைவிட மோசமாக தங்களின் வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு நாடு முழுவதும் வேலைத்தேடி நாடோடிகளாக புலம்பெயர்ச் சூழலிலும் சிக்கித் தவிக்கின்றனர்; அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கக்கூட முடியாத நிலையில் பிளாட்பாரங்களிலும், தகர கொட்டாய்களில் 100 சதுர அடிக்கும் குறைவான சிறிய அறைக்குள் 10க்கும் மேற்பட்டோர் மழையிலும் பனியிலும் வெயிலிலும் அவதியுற்று வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முதலாளித்துவத்திற்கு முந்தைய வாரமுறையிலேயே இன்றும் சுரண்டப்பட்டு வருகின்றனர்.

மறுபுறம் அதானி உலகின் இரண்டாவது பணக்காரனாக வளர்ந்துள்ளார். 60% சொத்துக்கள் 1% பணக்காரர்களிடம் குவிந்துள்ளதும், புதிய பில்லியனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதுமாக மிக மோசமான பொருளாதார இடைவெளியும் ஏற்றத் தாழ்வும் நாட்டிற்குள் அதிகரித்துள்ளது. இரு வேறு துருவங்களாக வளர்ச்சியும் வீழ்ச்சியும் பெருகி வருகிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதும் ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் மேலும் வறிய நிலைக்குச் செல்வதும் அதிகரித்தே வருகிறது. இதைத்தான் வளர்ச்சியென தம்பட்டமடிக்கிறது மோடிக்கு துதிபாடும் கும்பல், இது வளர்ச்சியல்ல புரையோடிப்போன ரணத்தின் வீக்கம்.

ஆனால் இவற்றையெல்லாம் தீர்க்க வக்கற்ற மோடி அரசு மக்களை சாதி-மத-தேசிய இன ரீதியாக பிளவுபடுத்தி அவர்களுக்கிடையே மோதலை உருவாக்குவது, சிறுபான்மை மக்களின் மீது ஒடுக்குமுறைகளை ஏவுவது போன்றவற்றை தொடர்கதையாக்கி வருகிறது இந்த அவலங்களை மூடிமறைக்க 75வது சுதந்திரதினம் என்ற பெயரில் மக்களிடம் தேசபக்தியையும் விற்பனை பொருளாக்கியது.

புதியகாலனியாக நீடிக்கும் இந்தியா

சுதந்திரம் பற்றியும் சுதந்திரப் போராட்டம் பற்றியும் பேசத் தகுதியற்ற மோடி - ஆர்.எஸ்.எஸ் கும்பல் நமக்கு தேசபக்தி பாடம் எடுக்கிறது. பகத்சிங், வஉசி, பாரதி உள்ளிட்ட எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் வீணடிக்கப்பட்டு பிரிட்டனிடமிருந்து தரகுமுதலாளித்துவ பிரதிநிதிகளான காந்தி - நேரு கும்பலுக்கு 1947ல் அதிகாரம் கை மாற்றப்பட்டது. அதன்பிறகு, இந்தியா இன்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் புதிய காலனியாகவே நீடிக்கிறது.

16ஆம் நூற்றாண்டில் - முகலாயர் ஆட்சியின் இறுதிக் காலத்தில் சரக்கு உற்பத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியும், முதலாளிய உற்பத்தியின் வளர்ச்சியும், ஒரு செல்வ வளமிக்க வணிக வர்க்கத்தின் தோற்றமும், பெரிய நகர்ப்புறங்களின் தோற்றமும் காணப்பட்டன. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் வருகையை ஒட்டி உற்பத்தியில் சமூக உறவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. பெரும்பான்மையாக பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு முன் இந்திய சமுதாயம் நிலப்பிரபுத்துவ சமுதாயமாகவே நீடித்தது. இருப்பினும் சரக்கு உற்பத்திப் பொருளாதாரத்தை வளர்த்து இருந்ததால் தனக்குள்ளேயே முதலாளியத்துவத்தின் விதைகளைக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் அது தானாகவே மெதுவாக ஒரு முதலாளிய சமுதாயமாக மாறியிருக்கும். இந்தியாவின் மீதான காலனிய வெற்றியும், மூலதன ஆதிக்கமும் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுத்து அரை நிலப்பிரபுத்துவ காலனிய நாடாக மாற்றியது. பிரிட்டிஷ் வணிக ஏகபோகத்திலிருந்து நிதிமூலதன ஏகாதிபத்தியமாக உருவெடுத்த பின் தனது சுரண்டலை மேலும் தீவிரப்படுத்தியது.

அதன் சரக்குகளுக்கு இந்தியச் சந்தையை திறந்து விட்டது;

ஜமீன்தாரி, இரயத்துவாரி மற்றும் திறைகள் மூலம் விவசாயிகளைக் கொள்ளையடித்து பட்டினியில் ஆழ்த்தியது;

முந்தைய நிலப்பிரபுக்கள், வியாபாரிகள், வணிகர்களை நீக்கி தனக்கு சேவகம் செய்யும் நிலப்பிரபுக்கள், இடைத்தரகர்கள், பேங்கர்கள், வணிகர்கள் கொண்ட வலைப்பின்னலை உருவாக்கியது;

கைவினைத் தொழில் உள்ளிட்ட முதலாளிய வளர்ச்சிக் கூறு காணப்பட்ட அனைத்து ஆலைகளையும் அழித்து தனக்கான 'மேனேஜிங் ஏஜென்சி' மூலமாக தொழில் நிறுவனங்களை, கம்பெனிகளை வளர்த்து கட்டுப்படுத்தியது;

மக்களைச் சுரண்ட பனியா- மார்வாரிகளை கொண்ட புதிய தரகு - வணிக - லேவாதேவிகாரர்களை உருவாக்கியது;

விவசாய வர்க்கம், ஆலைத் தொழிலாளி வர்க்கம் உள்ளிட்ட தேசிய விடுதலை இயக்கங்களை பலவீனமடைய செய்ய காந்தி - நேரு தலைமையில் தரகு வர்க்க நடிப்பு சுதேசிகளை உருவாக்கி சுதந்திரம் மற்றும் முதலாளிய வளர்ச்சிக்கான கூறுகளை நசுக்கியது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் சர்வதேச சூழலில் ஏற்பட்ட மாற்றங்களினால் - பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பலவீனமடைந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியம் வலுப்பெற்றது. உலகின் 3ல் 1 பங்கு நாடுகள் சோசலிச முகாமிற்குள் வந்தது. தேசிய விடுதலை இயக்கங்களின் தீவிர வளர்ச்சிப் போக்கு காரணமாக 1947ல் அதிகார மாற்றம் தவிர்க்க முடியாததாகியது. அமெரிக்காவின் நலன்களுக்குச் சேவை செய்யும் வகையில் ஒப்பந்தங்கள் மற்றும் பம்பாய் திட்டம் அடிப்படையில் தரகு முதலாளித்துவ கும்பலுக்கு அதிகாரம் கைமாற்றப்பட்டு காலனியிலிருந்து அரைக்காலனிய வடிவிலான புதிய காலனிய நாடாக இந்தியா மாற்றப்பட்டது. நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தின் அடித்தளங்கள் பெயரளவிலேயே தகர்க்கப்பட்டு அந்த உற்பத்தி முறை நீடிப்பதற்கும், சாதிய அடக்குமுறைகள் நீடிக்கவும் செய்தது. ரஷ்யாவில் முதலாளித்துவ மீட்சிக்குப் பின் ரஷ்யா சமூக ஏகாதிபத்தியமாக பரிணமித்து இந்தியா மீதும் தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டியது. ரஷ்யா - அமெரிக்கா இரண்டின் அரைக்காலனியாக இந்தியா 70களில் மாற்றப்பட்டது.

சோசலிச ரஷ்யா - சீனாவின் வளர்ச்சியினால் அச்சமுற்ற ஏகாதிபத்தியவாதிகள் சோசலிசம் பரவுவதை தடுக்கவும் ஏகாதிபத்தியங்கள் தங்கள் நெருக்கடியயை தீர்க்கவும் கீன்சியப் பொருளாதார கொள்கைகள் - சீர்திருத்தங்கள், பசுமைப் புரட்சி போன்றவை அமல்படுத்தப்பட்டன. இதனால், பஞ்சம் - பட்டினி ஓரளவுக்கு குறைந்து 1970-80ஆம் ஆண்டுகளில் புதிய பணக்கார விவசாயிகள் வர்க்கமும், புதிய நிலவுடைமை வர்க்கமும், சிறுவிகித தேசிய முதலாளி வர்க்கமும் தோன்றின. அமெரிக்காவுடன் பனிப்போரில் ஈடுபட்டதன் காரணமாக 1980களில் ரஷ்யா பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு சிதறுண்டது. சீனாவிலும் முதலாளித்துவ மீட்சி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகில் சோசலிச இயக்கங்களும் சமூக நலத்திட்டங்களும் துடைத்தெறியப்பட்டன. இந்தியாவும் நெருக்கடியில் தள்ளப்பட்டது. சுரங்கத் தொழில், எஃகு உற்பத்தி உள்ளிட்டவை தேக்கமடைந்து அனைத்து சிறுகுறு தொழில் நிறுவனங்களும் திவாலடைந்தன. பணவீக்கமும், விவசாயப் பொருட்களின் விலையில் மந்தமும் உருவாகியது. ஆனால் பெரும்தரகு முதலாளித்துவ நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நெருக்கடிக்கு ஏகாதிபத்தியங்களுக்கும் - தரகு முதலாளித்துவத்திற்கும் - பெரும் நிலவுடைமையாளர்களுக்கும் சேவை செய்த அரசியல் பொருளாதார கொள்கைகளே காரணம். கீன்சியப் பொருளாதார கொள்கையும் தோல்வியை தழுவியது.

மறுபுறம் IMFன் நிதிமூலதன ஆதிக்கம், காட் (GATT) ஒப்பந்தங்கள், டங்கல் திட்டம் மூலம் இந்தியாவில் அமெரிக்காவின் புதிய காலனியப் பிடி இறுகியது. அது இன்று ஆழமாக வேரூன்றி இந்தியாவின் ஒவ்வொரு துறைகளையும் சீரழித்து விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. கடன்கள், கூட்டுத்தயாரிப்பு ஒப்பந்தங்கள், வெளிநாட்டு பொருட்கள் - வெளிநாட்டு மூலதனம் பெருமளவில் இந்தியாவில் குவியத் துவங்கியது. அமெரிக்காவின் அடியாட்படையாக செயல்பட இந்தியப் பொருளாதாரம் இராணுவப் பொருளாதாரமாகவும் - டாலர் பொருளாதாரமாகவும் மாற்றப்பட்டது. நரசிம்மராவ், மன்மோகன் சிங், வாஜ்பாய் உள்ளிட்ட காங்கிரஸ் - பாஜக கும்பல் மாறி மாறி இந்தியாவை தாரை வார்த்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியகாலனிய பிடியை அதிகரித்தனர்.

புதிய காலனியாதிக்கத்தை தீவிரப்படுத்திய உலகமய - தனியார்மய - தாராளமயக் கொள்கைகள்

90களில் IMF, உலக வங்கிகளை கருவியாகக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவில் டங்கல் திட்டம் மற்றும் காட் ஒப்பந்தம் எனும் வழிகளில் உலகமய - தனியார்மய - தாராளமயக் கொள்கைகளை திணித்தது. நெருக்கடியிலிருந்து மீள, (பாம்பிடமிருந்து தப்பிக்க முதலை வாயில் சிக்கிய தவளைப் போல) இந்திய ஆளும் வர்க்கம் இந்த அடிமை ஒப்பந்தங்களை ஏற்றுக் கொண்டு நாட்டின் அனைத்து துறைகளிலும் இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி பன்னாட்டு ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களுக்கு திறந்துவிட்டது. கார்கில்-மான்சான்டோ போன்ற நிறுவனங்களால் இந்திய வேளாண்துறை பலவீனப்படுத்தப்பட்டு உணவு உற்பத்தியில் தன்னிறைவுப் பெற்றிருந்த நிலையிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைக்குச் சென்றது; அவை ஆணையிடும் விளைப்பொருட்களையே பயிரிடும் நிலை உருவாகியது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு பல நிலங்கள் தரிசு நிலங்களாக பாழ்படத் தொடங்கின. சுயசார்பு, சிறு முதலீட்டு தொழிற்துறை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்துக்கட்டப்பட்டு பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் உலகச்சந்தைக்கான உற்பத்தி கூடமாகவும் - குப்பைத்தொட்டியாகவும் இந்தியா மாற்றப்பட்டது. விளை நிலங்கள் அழிக்கப்பட்டு - நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அந்நிறுவனங்களின் கொள்ளைக்கு தாரைவார்க்கப்பட்டன. உற்பத்தி தொழில் துறையை விட கார்ப்பரேட்களுக்குச் சாதகமான சேவைத்துறையிலும், ரியல் எஸ்டேட் - பங்குச் சந்தை உள்ளிட்ட ஊக வணிகத்துறையிலுமே கடன்களும் முதலீடுகளும் வந்து சேர்ந்தன. இதனால், இந்திய தொழிற்துறை ஏகாதிபத்தியங்களால் விழுங்கப்பட்டது. அறிவுசார் சொத்துரிமை எனும் பெயரில் கண்டுபிடிப்புகள் காப்புரிமை பெறப்பட்டு இந்திய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி கிள்ளியெறியப்பட்டது. தொழில்நுட்பங்களுக்கு ஏகாதிபத்தியங்களையே சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகியது. உயிர் காக்கும் மருந்துகள் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மாறியது.

ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார நெருக்கடியின் சுமைகள் அனைத்தும் நம் நாட்டு உழைக்கும் மக்கள் மீது ஏற்றப்பட்டது. அந்நிய கடன் அதிகரித்ததால், ஒவ்வொரு இந்திய குடிமகனும் கடனுக்கு பொறுப்பாளியாக்கப்பட்டான். கார்ப்பரேட்களுக்கான சேவைத்துறையில் - தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் போல் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் பணக்காரர்களுக்கும்- ஏழைகளுக்குமான ஏற்றத்தாழ்வு முன்னை விட அதிகரித்தது. 2008ம் ஆண்டு மீண்டும் ஏற்பட்ட உலக முதலாளித்துவ பொது நெருக்கடி இந்த உலகமய-தனியார்மய-தாராளமயக் கொள்கைகளின் தோல்வியை நிரூபணமாக்கியது. நாட்டிலிருந்து மூலதனங்கள் பறந்தோடின. வரி ஏய்ப்பில் ஈடுபட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் பாதுகாப்பாக வெளியேறின. நாடு மீண்டும் ஒரு தேக்க நிலையை அடைந்தது. அந்த தேக்க நிலை இன்றுவரை முழுமையாக மீட்டமைக்கப்படவில்லை.

2014ல் வளர்ச்சி என்ற வெற்று கோசத்தின் மூலம் ஆட்சி பீடத்திலேறிய மோடி கும்பல் இன்று இந்தியப் பொருளாதாரத்தை முழுவதுமாக துடைத்தழித்து புதிய காலனிய நுகத்தடியை மேலும் இறுக்கி திவால் நிலையை நோக்கி நாட்டை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

தோல்வியுற்ற பணமில்லா பொருளாதாரமும் - செல்லாக்காசு அறிவிப்பும்

இந்தியாவின் பணப் பரிவர்த்தனையில் 85%க்கும் மேல் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாயை செல்லாது என 2016ம் ஆண்டு அறிவித்தது மோடி அரசு. போதிய மாற்று நோட்டுக்களை புழக்கத்தில் விடாமல் மக்களைப் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளிவிட்டு, எல்லோரும் டிஜிட்டல் முறைக்கு மாற வேண்டும் என உத்தரவிட்டது. நாட்டின் 80% சதவீதம் பேரை பணத்திற்காக வீதிகளில் அலைய விட்டதோடு அவர்களின் சிறுசிறு சேமிப்புகள் அனைத்தையும் சூறையாடி அதை தரகு பெருமுதலாளித்துவ கும்பல்களுக்கு வாரி வழங்கியது. மல்லையா போன்ற கொள்ளை கூட்டத்தின் கடன்களை வாராக் கடன்களாக மாற்றி தள்ளுபடி செய்தது. வங்கித்துறையை பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கு திறந்துவிட்டு ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பலின் ஆதிக்கத்தின் கீழ் நாட்டைத் தள்ளியது.

கருப்பு பண மீட்பு, பணமில்லா பொருளாதாரம் மற்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பது என வேடமிட்டு வந்த இந்த நடவடிக்கை கருப்பு பணத்தை சிறிதும் ஒழிக்கவில்லை, அதிகரிக்கவே செய்தது; பணமில்லா பொருளாதாரம் திட்டமும் தோல்வியடைந்ததையே - நாணய புழக்கம் 2017க்குப் பின் தொடர்ச்சியாக அதிகரித்திருப்பதையே மேலே உள்ள (படம் -1) எடுத்துக் காட்டுகிறது. நோட்டுகளை கூடுதலாக அச்சிடுவதற்கு ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் வரை மக்களின் வரிப்பணத்தை வீணடித்துள்ளது. ஏகாதிபத்தியங்களிடமிருந்து கணக்கில் காட்டப்படாத கருப்புபணமாக NGO நிதிபெறுவதில் முதலிடத்தில் உள்ள பயங்கரவாத சங்பரிவார வளையத்திற்குள் இருந்து கொண்டு பயங்கரவாத ஒழிப்பு நாடகமாடுகிறது. மறுபுறம் இந்த நடவடிக்கை, சிறுகுறு தொழில்களோடு சில்லறை வணிகத்தையும் அழித்து பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தை வலுப்படுத்தியது.

சாமானிய மக்களை சூறையாடும் புதியகாலனிய 'ஜிஎஸ்டி' வரிவிதிப்பு

2017ம் ஆண்டு "ஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி" என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியகாலனியாதிக்கத்திற்குச் சேவை செய்யும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்தியது. திட்டக்கமிசனை கலைத்துவிட்டு உள்நாட்டு பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் அடிவருடிகளை உள்ளடக்கிய 'நிதி ஆயோக்' மற்றும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. OECD, IMF, WTO, உலகவங்கி, ஐ.நா. வளர்ச்சி திட்டக் குழுமம் போன்ற புதியகாலனிய நிறுவனங்களும் TIWB, FTA போன்ற வரிவிதிப்பு அமைப்புகளும் இணைந்து ஏகாதிபத்திய நிதிமூலதன கும்பல்களின் நலன்களுக்காக வரிவிதிக்கும் அதிகாரத்தினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும். இந்தியாவை முழுமையாக சூறையாடவே ஜிஎஸ்டி சட்டம் கொண்டு வந்தன.

கார்ப்பரேட்களுக்கான நேரடி வரிகளான சுங்கவரி, கார்ப்பரேட் வரி, மூலதன ஆதாய வரி போன்றவைகள் குறைக்கப்பட்டன. சாமானிய மக்களுக்கு மறைமுக வரிகள் அதிகரிக்கப்பட்டது. நேரடி வரிச்சுமையும் பெரிய உற்பத்தி நிறுவனங்களுக்கு குறைக்கப்பட்டு சிறுவீத உற்பத்தியாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டது. சிறுகுறு வணிகர்கள் மீதும் கடைசியாக அனைத்து சுமைகளும் நுகர்வோரான பெரும்பான்மை சாமானிய மக்களின் தலையில் விழுந்தது.

இந்தாண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது மோடி கும்பல். இதுவரை வரிவிலக்கு அளிக்கப்பட்ட அனைத்து பொருட்களும் - சேவைகளும் வரிவிதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன. அரிசி, பருப்பு முதல் குழந்தைகளுக்கான பாலுக்கும் பால் பொருட்களுக்கும் கூட ஜிஎஸ்டி, தலை மயிர் முதல் கால் பாதம் வரை பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுக்கும் - மனிதன் பிறக்கும் முதல் இறக்கும் வரை அனைத்து சேவைகளுக்கும் ஜிஎஸ்டி. சுடுகாட்டில் பிணம் எரிப்பதற்கும்- அடக்கம் செய்வதற்கும் கூட ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. கடுமையான எதிர்ப்பிற்குப் பின் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈமச்சடங்குகளுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது, வரிவிலக்கு அளிக்கப்படுகிறது என்பதை பெருமிதமாக மானவெட்கமின்றி நாடாளுமன்றத்தில் பேசுகிறார் நிர்மலா சீதாரமன். வெட்கக்கேடு!

மாநில அரசின் வரி வருவாய் உரிமைகள் முற்றிலும் பறிக்கப்பட்டு மத்தியில் குவிக்கப்பட்டு வருகின்றன. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மத்திய அரசின் வருவாய் கூட பெருகவில்லை. பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளும், அம்பானி அதானிகள் போன்ற உள்நாட்டு தரகு முதலாளித்துவ கும்பலுமே கொள்ளை லாபமடைந்தனர். ஜிஎஸ்டி வரிவிதிப்பால் அந்நிய மூலதனம் தடையின்றி வரும் - நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) அதிகரிக்கும் என இனிப்பாக கதையளந்தது மோடி கும்பல். ஆனால் உற்பத்தி துறையில் மூலதனம் வராமல் ஊக மூலதனமாகவே முதலீடுகள் வந்தன. தொழில் உற்பத்தி துறையில் GDPயும் வீழ்ச்சியடைந்தே வருகிறது.

ஏகபோக நலன்களுக்கு பாதுகாப்புத் துறையை திறந்துவிடல் மற்றும் நாட்டை இராணுவமயமாக்கல்

அரசியல் பொருளாதார பொது நெருக்கடியின் காரணமாக ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையே முரண்பாடுகள் கூர்மையடைந்து வருவதால் அமெரிக்க-நேட்டோ முகாமும் சீன-ரஷ்ய முகாமும் பனிப்போரில் ஈடுபட்டு வருகின்றன. தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக இந்தியாவை தனது அடியாள்படையாக மாற்றி வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். இதற்காக உருவாக்கப்பட்ட ஆசிய-பசிபிக் திட்டம், இந்திய-பசிபிக் திட்டமாகவும் பின் 'குவாட்' என்ற இராணுவ பொருளாதார நடவடிக்கைகளுக்கான அணியாகவும் பரிணமித்தது. ஏற்கனவே போடப்பட்ட நான்கு அடிப்படை பாதுகாப்பு ஒப்பந்தங்களாகிய (Foundation agreements) -

1) பாதுகாப்பு தொழிற்துறை ஒப்பந்தம் (ISA - Industrial Security Annex.),

2) இராணுவ தளவாட பரிவர்த்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் (LEMOA - Logistic Exchange Memorandum of Agreement),

3) பரஸ்பர தொலைத்தொடர்பு இணக்கம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (COMCASA - Communication, compatibility and Security Agreement),

 4) அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA - Basic Exchange and Co-operation Agreement))

மூலம் இந்திய இராணுவத்தை அமெரிக்க இராணுவத்தின் கிளை அமைப்பாக மாற்றியது. இந்திய - சீன எல்லைப் பிரச்சனையை பேசித் தீர்க்க வக்கற்ற மோடி அரசு அதைப் பயன்படுத்தும் அமெரிக்காவின் நலன்களுக்கு நாட்டின் இறையாண்மையை பலி கொடுக்கிறது. இன்று பதற்ற நிலையில் இருக்கும் சீன-தைவான் போர் மேகங்களுக்கிடையே இந்தியா சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகிறது. உக்ரைன் போரில் உள்நாட்டு தரகு முதலாளித்துவ நலன்களிலிருந்து ரஷ்யாவுடன் ஓர் ஊசலாட்டமான உறவைப் பேணுகிறது. இலங்கையிலும் தனது விரிவாதிக்க நலனிலிருந்து அதன் உள்நாட்டு பிரச்சனைகளில் அரசியல் - பொருளாதார - இராணுவ தலையீடு செய்கிறது. ஈழ விடுதலைப் போராட்டங்களுக்கெதிராக இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை ஆளும் இனவெறிக் கும்பலுக்கு உதவி ஈழத்தமிழர்களுக்கு நயவஞ்சகமாக துரோகமிழைத்தது காங்கிரஸ் அரசு, அந்தப் போக்கை இன்றும் பாஜக அரசு தொடர்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க அதை இவ்விரண்டு அரசுகளும் தொடர்ந்து இராணுவ கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அமெரிக்காவின் அடியாள்படையாக செயல்படுவதற்கும் தனது விரிவாதிக்க நலனிலிருந்தும் இராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கி (பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு) இந்திய பொருளாதாரத்தை இராணுவ பொருளாதாரமாக மாற்றியமைத்தது.

நாட்டின் பாதுகாப்பு அரண் என ஆளும் கும்பலாலேயே கூறப்படும் இராணுவத்தை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றவும் கார்ப்பரேட்களுக்கும் - சங்பரிவாரங்களுக்கும் கொத்தடிமைகளையும் கூலிப்படைகளையும் உருவாக்கும் நோக்குடன் அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்தது. இதுவரை இராணுவ ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சலுகைகளை ஒழித்து செலவினங்களை குறைப்பதற்காகவும், பாதுகாப்புத்துறையில் நிரந்தரப் பணியை ஒழிக்கவும் இந்த திட்டத்தை கொண்டு வந்தது. வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறுவது மிகப்பெரிய மோசடி, வெறும் 40ஆயிரம் காலிப்பணியிடங்களை மட்டுமே (அதுவும் 4 வருடங்களுக்கு காண்டிராக்ட் முறையில் மட்டுமே) நிரப்ப உள்ளது. ஆனால் இந்த மோடி அரசு 40 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் எதிர்காலத்தையும் பறித்துள்ளது.

ஜெட் ரபேல் போர் விமானங்கள் - 126ல் 18ஐ பிரான்ஸ் தஸ்ஸோ நிறுவனத்திடமிருந்து வாங்குவது மீதம் 108ஐ தொழில்நுட்பம் பெற்று மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) மூலம் உற்பத்தி செய்வது என்ற கடந்த மன்மோகன்சிங் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை முறித்துவிட்டு, 36 விமானங்களை மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குவது மற்றும் மீதமுள்ள உற்பத்தியை எந்த முன் அனுபவமுமில்லாத - திவாலான அனில் அம்பானியின் 'ரிலையன்ஸ் டிபென்ஸ்' நிறுவனத்திற்கு டெண்டர் முறையில் ஒப்படைத்தது. இதில் சுமார் 60ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது மோடி கும்பல். ஆனால் தற்சார்பு, மேக்-இன் இந்தியா என வாய்ச்சவடால் அடிக்கிறது இந்த விதேசி அரசு.

இந்தியாவின் கடும் பொருளாதார நெருக்கடியை மூடிமறைத்து ஒரு சில கார்ப்பரேட்களின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியாக காட்டும் மோடி கும்பல்

காங்கிரசு - பாஜக அரசுகள் மாறிமாறி கடைப்பிடித்த மேற்கண்ட அரசியல்-பொருளாதார கொள்கைகளால் இந்தியா மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதை கீழ்க்காணும் புள்ளி விவரங்கள் (ஆதாரம்: உலக வங்கி) தெரிவிக்கின்றன.

அ) ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி

1944ல் பிரிட்டன் உட்ஸ் மாநாட்டில் உருவாக்கப்பட்ட சர்வதேச நிதி அமைப்புகள் மற்றும் வர்த்தக அமைப்புகள், ஸ்டெர்லிங் பவுண்டு ஆதிக்கத்திலிருந்து டாலர் ஆதிக்கத்திற்கு வித்திட்டது. டாலர் ஆதிக்கத்திற்கும், டாலர் பொருளாதாரத்திற்கும் தன்னை மாற்றியமைத்துக் கொண்ட இந்தியா தனது நாணயத்தின் மதிப்பை தொடர்ச்சியாக இழந்து வருகிறது. 1980களின் கடைசியில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக அமல்படுத்தப்பட்ட தாராளமய கொள்கைகளுக்குப் பிறகு 1990களிலிருந்து 2000 வரையும், அதேபோல 2008இல் ஏற்பட்ட அமெரிக்க நெருக்கடி உலகப் பொது நெருக்கடியாக மாறிய பிறகும் டாலரின் மதிப்பு உயர்ந்து அதற்கு நிகரான ரூபாயின் மதிப்பு செங்குத்தாக வீழ்ச்சியடைந்திருப்பதையும் இந்த புள்ளி விவரம் நமக்கு எடுத்துரைக்கிறது. இந்த வீழ்ச்சியில் 1992 மற்றும் 2016களில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளும் முக்கிய பங்காற்றியுள்ளன. 1944லிருந்து 2014 வரை 70 ஆண்டுகளில் வீழ்ந்த ரூபாய் மதிப்பின் 50% மோடி அரசின் இந்த 8 ஆண்டுகளில் மட்டும் துரிதமாக வீழ்ந்துள்ளது. (படம்-2)

ஆ) நடப்பு கணக்குப் பற்றாக்குறை (CAD)

ஏற்றுமதியை விட இறக்குமதி தொடர்ச்சியாக அதிகரித்தே உள்ளதால் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்து நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சரிசெய்ய முடியாமல் தொழிற்துறை பாதிக்கப்படுவதும் தேக்க நிலையும் ஏற்படுகிறது. ஏற்றுமதியும் நிதிமூலதன கும்பல்களின் கட்டுப்பாட்டிலே இயங்குகிறது. (படம் - 3)

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு அடிப்படை காரணங்களில் ஒன்றாக இருப்பது ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகங்கள் டாலரில் நடப்பதேயாகும்.  அமெரிக்காவுடனான கட்டுண்ட ஒப்பந்தங்களால் இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிப்பதால் நடப்பு கணக்குப் பற்றாக்குறை (CAD) அதிகரிக்கிறது. இறக்குமதி செய்யப்பட வேண்டிய பொருட்களுக்கு டாலருக்கு ஈடான அதிக ரூபாயை மாற்ற வேண்டியுள்ளதாலும்; ஏற்றுமதி குறைவதால் உற்பத்தித் துறையில் தேக்கநிலை ஏற்படுவதோடு அந்நிய செலாவணி வரவும் குறைகிறது. இதனால் இந்தியாவின் நாணய இருப்பு இரண்டு வகையிலும் குறைகிறது. ஏற்றுமதியும் கூட கார்ப்பரேட் மற்றும் நிதிமூலதன ஆதிக்க கும்பல்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவைகளே இதில் பலனடைகின்றன. சமீபத்தில் அரிசி ஏற்றுமதிக்கான வரியை உயர்த்தியதால் அரிசி ஏற்றுமதி மோசமான வீழ்ச்சியை சந்தித்து இந்திய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது அடுத்த ஆண்டுகளின் வேளாண் பொருளாதாரத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது. அடுத்தபடியாக பணவீக்கம் - உலகளவில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் இந்தியாவிலும் பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணமாகிறது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஃபெடரல் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது.  அமெரிக்காவின் நிதி மூலதனம் நேரடியாகவும் சிங்கப்பூர், மொரீசியஸ் போன்ற அதன் ஏஜெண்ட் நாடுகள் மூலமாகவும் IMF, WTO போன்ற சர்வதேச நிதி முகமைகள் மூலமாகவும் இந்தியாவை கடன் பிடியில் சிக்க வைத்துள்ளது. கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும் ரூ 1330 கோடி டாலர் முதலீடு நாட்டை விட்டு வெளியேறியுள்ளது. அமெரிக்காவின் கடனுக்கான வட்டி விகித உயர்வு இந்தியாவின் கடனை டாலரில் உயர்த்துவதோடு மட்டுமில்லாமல் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியின் காரணமாக இரட்டை மடங்காக உயர்கிறது. இதனால் இந்தியாவின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கிறது. 6%க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பண வீக்கம் 7.1% தாண்டி செல்வதால் உயர் பணவீக்க சிக்கலில் இந்தியா சிக்கித் தவிக்கிறது. உபரி பணப்புழக்கம் சரிபாதியாக குறைந்துள்ளது (கடந்த 4 மாதங்களுக்குள்ளாக ரூபாய் 6 லட்சத்து 70 ஆயிரம் கோடியிலிருந்து ரூபாய் 3 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது).  இந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்த தற்சார்பு உற்பத்தியையும் மக்களின் வாங்கும் சக்தியையும் உயர்த்துவதற்கு மாறாக மோடி ஆட்சியும் வட்டி விகிதங்களை (ரெப்போ ரேட்) உயர்த்துவதன் மூலம் கட்டுப்படுத்த முயல்கிறது. இந்த நடவடிக்கை தற்காலிக தீர்வை அரசுக்கு தந்தாலும், அந்த சுமை மக்களின் தலையிலேயே விடிகிறது. சிறுகுறு நிறுவனங்களின் கடன்கள், விவசாயிகளின் கடன்கள், கல்விக் கடன்கள், வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட சாமானிய மக்களின் கடன் தொகைகளுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கிறது; விலைவாசி உயர்ந்து மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது.

இ) விலைவாசி உயர்வு

நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (consumer price index) 90களுக்கு பிறகு செங்குத்தாக உயர்ந்தே வருகிறது (1990ல் குறியீட்டு எண் 22.9லிருந்து 2021ல் 192.4 ஆக உயர்ந்துள்ளது) அதனுடன் கூடவே பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உயர்வும் ஜெட் வேகத்தில் உயர்ந்தே வருகிறது. (படம் 4)

மறுபுறம் வாங்கும் சக்தி திறன் 80களுக்கு பிறகு இன்று வரை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதோடு 20% குறைந்துள்ளது. அது கொரோனா காலக்கட்டத்தில் படு பாதாளத்தில் வீழ்ந்தது. வாங்கும் சக்தி குறைவதால் மேலும் மேலும் நெருக்கடி தீவிரமடைகிறது.

ஈ) அதிகரிக்கும் அந்நிய கடன் -  குறையும் அந்நியச் செலாவணி கையிருப்பு

இந்தியாவின் அந்நியக் கடனும் 2008 ம் ஆண்டு நெருக்கடிகளுக்கு பிறகு செங்குத்தாக உயர்ந்து வருகிறது 1990ல் 83 பில்லியன் டாலர்களாக இருந்த கடன் 2022 ல் 621 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. (படம் 5).  

அந்நியச் செலாவணி கையிருப்பும் கடனுக்குமான இந்த வித்தியாசம் சொற்ப அளவிலே இருப்பதால் அந்நிய மூலதனம் நாட்டை விட்டு பறந்தால் எப்போது வேண்டுமானாலும் திவாலடையலாம் என்ற நிலையே தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க, தொழில்துறை உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரிப்பதற்கு மாறாக நாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களை- இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரை வார்த்து ஈடுசெய்ய முயற்சித்து வருகிறது. 2022ல் இருப்பும் குறைந்து கடன் அதிகரித்துள்ளது. கடனுக்கு வட்டிகட்ட மேலும் கடன் வாங்குகிறது - பொதுச் சொத்துக்களின் பங்குகளை விற்று பணமாக்குகிறது. கடனை மேலும் மேலும் வாங்கி அம்பானி அதானி உள்ளிட்ட உள்நாட்டு கார்ப்பரேட்களுக்கு வாரி இறைக்கிறது. நாட்டின் தொழிற்துறை உற்பத்தியில் பெருமளவில் பங்கெடுக்கும் சிறுகுறு நிறுவனங்களான MSMEக்கு கடன் - மானியங்கள் அளிப்பதற்கு மாறாக அவைகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காவு கொடுக்கிறது.

உ) உற்பத்தித் துறைகளின் வளர்ச்சியின்மை

இந்திய பொருளாதாரத்தின் உற்பத்தித் துறையில் 60 ஆண்டுகாலமாக எவ்வித பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே கீழ்க்கண்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது. (படம் -6).

ஒருபுறம் வேளாண்துறை மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருப்பதும். கார்ப்பரேட் நலன்களுக்கான சேவைத்துறையின் பங்கு வளர்ந்திருப்பதையுமே இவை காட்டுகிறது. இம்மூன்று துறைகளிலும் பொருளாதாரம் சுதேசிய வளர்ச்சியையொட்டி இல்லாமல் அமெரிக்க நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழே அவற்றின் நலனிலிருந்தே கட்டியமைக்கப்பட்டு வருகிறது.

முதலாவதாக, விவசாயத்துறை - டங்கல் திட்டத்தின் இறுதி வடிவமான வேளாண் விரோத பாசிச சட்டங்கள் மூலம் வேளாண்துறை முழுவதும் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. வேளாண் உற்பத்தியில் நவீன கருவிகள் வந்தாலும் உற்பத்தி உறவுகள் மாற்றியமைக்கப்படாததால் இன்றும் பெருவாரியான நிலக்குவியலானது கோவில்கள், மடங்கள், ஆதினங்களின் கட்டுப்பாட்டிலே உள்ளது. குத்தகை விவசாயமும் நீடிக்கிறது.  பெருவாரியான நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள் நிலங்களை விட்டு விரட்டியடிக்கப்படுகின்றனர். விவசாய கூலித் தொழிலாளிகளின் எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்ய கொண்டுவரப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டமும் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை. கந்து வட்டி - லேவாதேவிகாரர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களாக மாறிவிட்டனர். அவர்கள் இடத்தை மைக்ரோ பைனான்சியர்கள் மாற்றீடு செய்துள்ளனர் - இதுவே வளர்ச்சி, மாறாக விவசாயக் கூலித்தொழிலாளர்களின் வாழ்நிலை மிகவும் மோசமடைந்து பஞ்சப் பராரிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.     

இரண்டாவதாக, தொழிற்துறை - கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிற்துறை உற்பத்தி உள்நாட்டு சந்தைக்கானதாக இல்லாமல் ஏகாதிபத்தியங்களின் தேவைகளுக்கான உற்பத்தி கூடமாக மாற்றப்பட்டு வருகிறது. (செமிகண்டக்டர்கள், லித்தியம் அயன் பேட்டரி போன்ற இன்றைய உலக சந்தைக்கான தொழிற்கூடமாக மாற்றப்பட்டு வருகிறது). சுதேசிய உற்பத்தி கூறுகளை கொண்டிருந்த உற்பத்தித் துறைகளை அழித்தொழித்திருக்கிறது. தொழில்நுட்பங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஏகாதிபத்தியங்கள் உள்நாட்டு உற்பத்தியில் மேலாதிக்கத்தை நிறுவி வருகிறது. இதில் இந்திய தரகு கும்பல்களும் பெரிதும் லாபமடைகின்றன.  மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பது மற்றும் மிகை உற்பத்தியால்  பிரதான தொழிற்துறைகளான ஆட்டோமொபைல்ஸ், ஜவுளி - ஆயத்த ஆடை போன்ற துறைகள் மிகமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளன. தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டு கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் எவ்வித உத்தரவாதமுமில்லாத பணிமுறையால் எப்போது வேண்டுமானாலும் துரத்தப்படலாம் என்று பயந்து பயந்து வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவதுடன் கொத்தடிமைகளாக சுரண்டப்படுகின்றனர். முறைசாராத் தொழிலாளர்கள் மற்றும் சுய தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் உற்பத்தியும் உள்நாட்டு உற்பத்தியின் தேவையிலிருந்து இல்லாமல் Job work எனப்படும் அவுட்சோர்சிங் வேலைகளிலே பெரிதும் ஈடுபடுவதால் ஏற்றுமதி தடைப்படும்போது கடனுக்கு வட்டிகூட கட்டமுடியாமல் பரிதாப நிலையை அவர்கள் சந்திக்க வேண்டியதாகிறது. தேசிய சந்தைக்கான உற்பத்தியில் ஈடுபடும் தேசிய முதலாளிகளின் மூலதனங்கள், இங்கு கொட்டிக் குவிக்கப்படும் அந்நிய இறக்குமதி பொருட்களால் அவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திவாலடைகின்றன. உற்பத்தியிலிருந்து தொடர்ச்சியாக விரட்டப்படுகின்றன. 

கடைசியாக சேவைத்துறை. சேவைத்துறையில் வளர்ச்சி என்பதில் நாம் திருப்தியடைந்துக் கொள்ள எதுவுமில்லை. பெரும்பாலான அந்நிய மூலதனங்கள் மேற்கண்ட இரண்டு துறைகளில் (விவசாயம் மற்றும் தொழிற்துறை) வருவதில்லை ஏனெனில் அந்தத் துறைகள் அவர்களுக்கு கொள்ளை லாபத்தை ஈட்டி தருவதில்லை. உற்பத்தி சாராத சேவைத் துறையிலேயே வருகின்றன. அதிலும் பிரதானமாக 1) பங்குச் சந்தை, பைனான்சிங் மற்றும் பாங்கிங் 2) தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு 3) ரியல் எஸ்டேட் 4) ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் (amazon, flipkart, swiggy, ola, uber, oyo உள்ளிட்டவை). இத்துறைகளில் வரும் மூலதனங்கள் பெரும்பாலும் ஊக மூலதனங்களேயாகும். நெருக்கடி அதிகரிக்கும்போது, பங்குச் சந்தை வீழ்ச்சியடைவதும் இந்த அந்நிய மூலதனங்கள் பறந்தோடுவதும் தொடர் வாடிக்கை நிகழ்வாகி வருகிறது. இதில் ஈடுபடும் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் சூதாடிகள் பெரிதும் லாபமடைகின்றனர். விழலுக்கு இறைத்த நீர் போல அத்துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்நிலையில் அதன் தொடக்கக் கட்டத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. ஆனால் உத்தரவாதமில்லாத வேலை முறையாலும் பணிச்சுமையாலும் பலர் தற்கொலைப் பாதைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். சேவைத்துறையில் அடுத்தபடியாக இருப்பது பாதுகாப்புத் துறை. இத்துறை யாருடைய நலன்களுக்காகச் சேவை செய்கிறது என்பதை நாம் மேலே ஏற்கனவே பார்த்துவிட்டோம். மீண்டும் நினைவூட்டலுக்கு, இத்துறை முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்திய பென்டகனின் இந்திய கிளையாகவும் சீனாவுக்கெதிரான தெற்காசிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் அடியாள் படையாகவுமே மாற்றப்பட்டுள்ளது. இத்துறையால் பலனடைவது அம்பானி கார்ப்பரேட் கும்பலே. அதில் பணியாற்றும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளும் மோடி ஆட்சியில் பறிக்கப்பட்டு விட்டன. ரயில்வே, விமானம், துறைமுகங்கள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறை முற்றிலும் கார்ப்பரேட் மயமாக்கப்பட்டுவிட்டது. இவை அமெரிக்காவின் மாபெரும் மறுகட்டமைப்புத் திட்டத்துடன் பிணைக்கப்பட்டுவிட்டன. இச்சூழலில் பயணக்கட்டணங்கள் உயர்ந்து மக்கள் உற்பத்தியில் ஈடுபடுவது குறைந்துள்ளது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இந்திய சுற்றுலாத் துறையும் தொய்வடைந்து விட்டது. சுகாதாரத் துறையும், கல்வித் துறையும் கார்ப்பரேட்களின் வேட்டைக் களமாக மாற்றப்பட்டுவிட்டன. அனைத்து செய்தி மற்றும் ஊடகத்துறையிலும் அம்பானி அதானிகளின் பங்கு அதிகரித்துள்ளது. ஆகவே சேவைத்துறையின் வளர்ச்சியால் பெரிதும் லாபமடைந்து வருவது ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பலும் அம்பானி அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளுமே என்பது தெளிவாகிறது.

ஊ) மக்களிடையே ஏற்றத்தாழ்வு அதிகரித்தல்

மேற்கண்ட நிலைமைகளால், தொடர்ச்சியாக கார்ப்பரேட்களின் வருமானம் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு பெருகுவதும் மறுபுறம் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் மென்மேலும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதையும் கீழ்க்கண்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது. (படம் - 7)

மேல்மட்ட 10% பணக்காரர்களின் வருமானம் 52% பங்கையும் கீழ்மட்ட 50% மக்களின் வருமானம் வெறும் 8.5% பங்கையுமே கொண்டுள்ளது. அதேப் போல் மேல்மட்ட 10% பணக்காரர்களின் சொத்து மதிப்பு 76% பங்கையும் கீழ்மட்ட 50% மக்களின் சொத்து மதிப்பு வெறும் 2% பங்கையுமே கொண்டுள்ளது.  முதல் 1% பில்லியனர்கள் மாதத்திற்கு சராசரியாக 8லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் வேளையில் பின் பகுதி 50% மக்கள் சராசரியாக மாதம் 4000 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத சூழலில் சிக்கித் தவிக்கின்றனர். இதனால் பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் முன்பை விட தீவிரமடைந்துள்ளது.  இதுதான் வளர்ச்சியா?  

அதேபோல், வேலையின்மையும் அதிகரித்தே வருகிறது. 142 கோடி பேர் உள்ள மக்கள் தொகையில் 47 கோடி பேர் மட்டுமே அனைத்து துறைகளிலும் உள்ள மொத்த தொழிலாளார் பட்டாளமாக கணக்கிடப்படுகின்றனர். இந்த 47 கோடி பேரிலும் 48% பேர் மட்டுமே வேலையில் பங்கெடுக்கின்றனர். மீதமுள்ள 52% பேர் ரிசர்வ் ஆர்மியான வேலையில்லாப் பட்டாளமாகவே உள்ளனர். மேலும் மேலும் வேலையில்லாப் பட்டாளங்களின் எண்ணிக்கை சராசரியாக 9% வரை உயர்ந்து வருகிறது. உற்பத்தித் துறையில் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைந்து வெறும் 18% சதவிகிதமாகியுள்ளது. மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் வேலைவாய்ப்பை உருவாக்க இவர்களிடம் எவ்வித திட்டமும் இல்லை. ஏகபோக முதலாளித்துவ கட்டத்தில் இந்த வேலையின்மை தவிர்க்க முடியாததே. இந்த வேலையில்லாப் பட்டாளம் மூலமும் நிதியாதிக்க கும்பல் தங்கள் நெருக்கடிகளை தீர்த்துக் கொள்ள முயல்கின்றன. ஆனால் வேலைவாய்ப்பு வளர்ச்சி என்ற பெயரில் நாட்டைக் கொள்ளைக் காடாக மாற்றி வருகிறது ஆளும் கும்பல்.

ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கம் நாடுகளுக்கிடையே மட்டுமல்லாமல் ஒரே நாட்டிற்குள்ளும் ஏற்றத்தாழ்வை அதிகரித்தே வருகிறது. இதை மூடிமறைத்து இந்த மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியாக காட்டி ஏமாற்றி வருகிறது. 

மோடியின் வளர்ச்சி கூப்பாடுகளை மறுபதிப்பு செய்யும் புதியகாலனிய தாசர்கள்

தாராளமயக் கொள்கைகளின் தோல்வியால் புதியகாலனியத்தின் பிடி மேலும் இறுகியுள்ளது. மறுபுறம், இந்தியா பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி பொருளாதாரத்தில் 5வது இடத்தை பிடித்து விட்டதாக பெருமை பேச்சுகளும் ஓய்ந்தபாடில்லை. பிரிட்டன் சாம்ராஜ்ஜியத்தின் நேரடி காலனியாக இருந்தபோதும் கூட இந்திய பொருளாதாரம் பிரிட்டன் பொருளாதாரத்தைவிட முன்னிலையில் 2வது 3வது இடங்களுக்குள் இருந்ததுண்டு. (படம் - 8) அதனால் அச்சமயம் பிரிட்டனை விட இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்றும் சுதந்திரநாடு என்றும் கூறியிருக்க முடியுமா? அன்று பிரிட்டனின் நேரடி காலனியாதிக்கத்தில் அதன் கட்டுப்பாட்டில் இந்திய பொருளாதாரம் இருந்தது. இன்று அமெரிக்காவின் புதிய காலனிய கட்டுப்பாட்டில் இந்திய பொருளாதாரம் சீரழிக்கப்பட்டு வருகிறது.

மொத்த ஜிடிபி(GDP)யின் அடிப்படையில்தான் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. மக்கள் தொகையை கணக்கில் கொண்ட ஜிடிபி பெர் கேபிட்டா (GDP per capita) படி இந்தியா 142வது இடத்தில் சோமாலியா, சூடான், உகாண்டா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டுக் கொண்டுள்ளது. அந்த ஜிடிபி பெர் கேப்பிட்டாவும் அம்பானி அதானி உள்ளிட்ட பில்லியனர்களையும் உள்ளடக்கியதே. அந்த 10% பில்லியனர்களை நீக்கிவிட்டால் மீதமுள்ள மக்களின் பொருளாதாரம் என்பது மிக மோசமடைந்துள்ளது என்பது தெளிவாகும். ஜிடிபி கணக்கீட்டில் வீட்டு வேலைகளில் ஈடுபடும் பெண்களின் பங்கினை இந்த முதலாளித்துவ அமைப்பு எப்போதும் கணக்கில் கொள்வதே இல்லை. மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின் ஜிடிபி கணக்கிடும் முறைகளையும் மாற்றியமைத்து 2.5% சதவிகிதம் வரை கூடுதலாக கணக்கிட்டு வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது காலாண்டுக்கும் முந்தைய காலாண்டுக்கும் உள்ள வித்தியாச அடிப்படையில் கணக்கிடாமல், இந்த காலாண்டோடு ஒரு வருடத்திற்கு முந்தைய காலாண்டின் வித்தியாசத்தை கணக்கிடுவது போன்ற முறைகளில் கணக்கை ஏற்றி காண்பிக்கிறது. நடப்பு காலாண்டில் 13% வளர்ச்சி என்பதையும் அவ்வாறே செய்துள்ளது. கொரோனா காலகட்டத்துக்கு முந்தைய நிலையை கூட எட்ட முடியாத நிலையே நீடிக்கிறது. இந்த கணக்கின்படி கூட 16%மாக இருந்திருக்க வேண்டிய வளர்ச்சி 13%தான் என்பதும் கூட இந்தியா நெருக்கடியில் சிக்கியுள்ளதையே காட்டுகிறது.  எனவே இந்த ஜிடிபி வளர்ச்சி என்ற கணக்குகள் சுத்த ஜூம்லா (மோசடி பேச்சே). மோடி கும்பலின் இந்த மோசடி பேச்சையே உலகில் காலனியாதிக்கம் முற்றுப்பெற்றுவிட்டது எனக் கூறி நவீன புதியகாலனிய தாசர்களும் பேசி வருகின்றனர். புரட்சி இல்லாமல் அமைதி வழியிலேயே உற்பத்தி முறை மாற்றியமைக்கப்பட்டு விட்டதாகவும், இந்தியா முதலாளித்துவ நாடாக மாறி விட்டதாகவும், உலகில் காலனியாதிக்கம் முற்றுப்பெற்றுவிட்டதாகவும் பேசித் திரிகிறார்கள் நவீன குருச்சேவ்கள்.

இந்திய நெருக்கடிக்கு அடிப்படையாக விளங்குவது ஏகாதிபத்திய நாடுகளின் மிகை உற்பத்தி நெருக்கடியே

பொதுவாக முதலாளித்துவம் லாப நோக்கில் உபரியை மேலும் மேலும் உற்பத்தியில் ஈடுபடுத்துவது பண்டமாக்குவது, நவீனத்தை புகுத்தி தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளால் பணப்புழக்கமும் வாங்கும் சக்தியும் குறைந்து உற்பத்தி பண்டங்கள் தேக்க நிலையை அடைவதோடு நெருக்கடி ஏற்படுகிறது. முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமான ஏகாதிபத்திய கட்டத்தில் அதிகரித்திருக்கும் லாப வெறி காரணமாக நிதி மூலதன ஏக போகம் தோன்றி மூலதனம் மிகவும் அதிகமாகத் தேவைப்படும் உற்பத்தித் துறையில் குவிவதற்கு மாறாக, அதிக லாபம் ஈட்டித்தரும் ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை உள்ளிட்ட ஊக மூலதனமாக குவிவதால் முன்பை விட பணவீக்கம் மேலும் அதிகரித்து பணப்புழக்கம் குறைகிறது. இது புல்லுருவி முதலாளித்துவமாகும். இதனால் சில உற்பத்தி பண்டங்களின் தேக்க நிலை மேலும் அதிகரிக்கிறது, சில உற்பத்தி பண்டங்களில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்தப் போக்குகள் நெருக்கடியை மேலும் ஆழப்படுத்துகின்றன. இவை ஏகாதிபத்தியங்களிடையே உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கு இட்டுச் செல்கிறது. நெருக்கடியின் சுமைகளை காலனிய நாடுகள் மீதும் தமது சொந்த நாட்டு உழைக்கும் மக்கள் மீதும் சுமத்துகின்றன. இந்தியாவும் இந்த நெருக்கடியிலே இன்று சிக்கித் தவிக்கிறது.           

இந்த பொருளாதார வீழ்ச்சியையும் நெருக்கடிகளையும் தீர்க்க வக்கற்ற மோடி அரசு வருவாயைப் பெருக்கவும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு சுதேசிய உற்பத்தியில் ஈடுபடுவதற்கு மாறாக மென்மேலும் நாட்டை பாதாளத்தில் தள்ளும் பின் வரும் பாசிச நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

பணமாக்கல் திட்டம் & கதிசக்தி திட்டம்

70லட்சம் கோடி ரூபாய் (சுமார் 1ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள - இந்திய மொத்த பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான) மதிப்புடைய பொதுத்துறை நிறுவனங்களை வெறும் 6லட்சம் கோடி ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளது, அதன் மூலம் வரும் வருவாயை கடனுக்கு வட்டி கட்டவும், அமெரிக்கா, அம்பானி அதானிகளுக்கு சேவை செய்யும் நாட்டின் உள்கட்டமைப்புகளை உருவாக்க கதிசக்தி திட்டத்திற்கு செலவிடவுள்ளது. விதை நெல்லையும் விற்று சீரழியும் விதமாக நாட்டின் கேந்திர சேமிப்பான எல்ஐசி பங்குகளையும் தனியாருக்கு விற்று செலவழித்து வருகிறது இந்த ஊதாரி அரசு.

தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே, தொலை தொடர்பு, மின்சாரம், உணவு தானிய கிடங்குகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொழிற்துறைகள், இயற்கை-கனிம வளங்கள், கடல் வளங்கள், இராணுவம் - பாதுகாப்புத் துறை என அனைத்தும் தனியாருக்கு, இதுதான் மோடி அரசின் 8 ஆண்டுகால சாதனை.

வேளாண் விரோதச் சட்டங்களை தொடர்ந்து புதிய மின்சார சட்டம்

டங்கல் திட்டத்தின் இறுதி வடிவமாக இந்திய விவசாயத்தை முற்றாக அழிக்கும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட - 1) அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, 2) வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக அவசரச் சட்டம் 2020, 3) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020- இம்மூன்று சட்டங்களையும் எதிர்த்து விவசாயிகளின் எழுச்சியான தொடர் போராட்டம் மற்றும் நாடு தழுவிய ஆதரவின் காரணமாகவும், மாநில தேர்தல்களை கணக்கில் கொண்டும் தற்காலிகமாக கைவிட்டது மோடி அரசு. ஆனால் இன்று அவைகளை அமைதியாக அமல்படுத்திக் கொண்டே உள்ளது.

விவசாயத்தையும் சிறுவீத தொழில்துறையையும் மேலும் நாசமாக்கும் நோக்கிலும், விலையுயர்வு சுமைகளை சாமானியர்களின் தலையில் சுமத்தும் விதமாக மின் உற்பத்தியை மட்டுமல்லாமல் மின் பகிர்மானத்தையும் தனியார் தரகு கும்பலிடம் ஒப்படைக்கும் நோக்கில் புதிய மின்சார சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

மக்களின் வரிப்பணத்தில் மாநில அரசுகள் உருவாக்கி வைத்திருக்கும் மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கட்டமைப்புகளை முழுவதும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. (ஏற்கனவே ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சூரிய மின்சக்தி கட்டமைப்புகளை அதானி நிறுவனம் மூலம் உருவாக்கியது. அத்திட்டம் மக்களின் பயன்பாட்டளவில் படுதோல்வியடைந்தது, மாறாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்வுக்கு மட்டுமே உதவியது). நேசனல் லோட் டெஸ்பாட்ச் சென்டர் (National Load Despatch Centre) எனப்படும் மையப்படுத்தப்பட்ட நிறுவனத்திற்கு அதிகாரம் முழுவதையும் கொடுத்து மாநில உரிமைகளையும் வருவாயையும் பறித்துள்ளது. இதில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களுக்கும் அம்பானி அதானிகளுக்கும் தானே கடன் அளிக்கவும் உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கும், சிறுகுறு - குடிசை தொழில்களுக்கும், ஏழை மக்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் முழுமையாக வெட்டப்பட உள்ளது. மின்சார வழங்கலில் இருந்த ஸ்லாப் முறை ஒழிக்கப்பட்டு அனைவருக்கும் ஒரே விலையில் மின்சாரம் - அதானிக்கும் ஒரே விலை, மாதம் 3000 கூட சம்பாதிக்க முடியாத ஏழைகளுக்கும் ஒரே விலை. விலையேற்றத்தை மாநில அரசுகளும் அமல்படுத்தத் துவங்கிவிட்டன. நாட்டை இருளில் மூழ்கடிக்கும் அபாயத்தை இச்சட்டம் மூலம் நடைமுறைப்படுத்த உள்ளது.

நீட்-கியூட் தேர்வு - கல்வியிலும் ஏகபோகம்

உலக அளவில் சுகாதாரத் துறைக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய வர்த்தகத் துறையாக கல்வியை மாற்றியுள்ளது ஏகபோக கூட்டம். உலகளவில் சுமார் 2000 லட்சம் கோடி ரூபாய் சந்தையை இத்துறை கொண்டுள்ளது. மக்களுக்கு அத்தியாவசியமாக கிடைக்க வேண்டிய மருத்துவம், கல்வி இரண்டையும் சந்தைப் பொருளாக்கி உழைக்கும் மக்களின், மாணவ மாணவிகளின் உதிரத்தைக் குடித்து பிழைக்கிறது இந்த கேடுகெட்ட நிதியாதிக்க கும்பல்.

கல்வியின் தரத்தை உயர்த்துவதாகக் கூறி ஏழை எளிய மக்களுக்கு உயர்கல்வியை எட்டாக்கனியாக்கி வருவதற்கான வேலையை இந்த நீட் (NEET) கியூட் (CUET) தேர்வுச் சட்டங்கள் மூலம் செய்துள்ளது. நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்புதான் கனவாகிப் போனது என்றால், இன்று கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் கூட கியூட் எனும் பொருளாதார வடிகட்டியை உருவாக்கியுள்ளது. இவற்றின் மூலம் கல்வியில் தனியார்மயத்தை மேலும் ஊக்குவிக்கிறது. இத்தேர்வுகளுக்கு பாடத்திட்டத்தில் உள்ளதை மட்டும் படித்தால் போதுமானதில்லை, வெளியில் லட்சங்களை செலவழித்து கோச்சிங் சென்டர்களுக்கு சென்று படித்தால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்படுவதால் அனிதா போன்ற ஏழை மாணவர்கள் நன்றாகப் படித்தாலும் கூட தூக்கு கயிறுக்கு இரையாகும் நிலையையே உருவாக்கியுள்ளது இந்த கொலைகார மோடிகும்பல்.

நீட் தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து கல்வியில் மாணவர்களை சேர்ப்பதிலும், கல்வி நிறுவனங்களில் பணியாளர்களை நியமிப்பதிலும் கூட ஊழல், வியாபம் ஊழல் மூலம் கல்வித்துறையிலும் ஊழலில் திளைத்துள்ளது மோடி அரசு.

வியாபம், ரபேல் ஊழல் வரிசையில் 5ஜி ஊழல்

சென்ற காங்கிரஸ் ஆட்சியில் மிகப்பெரிய 2ஜி அலைக்கற்றை ஊழலில் சிக்கி ஊழல் மலிந்த ஆட்சியாக பெயர்போனது காங்கிரஸ்-திமுக அரசு. இன்று அவற்றையெல்லாம் பன்மடங்கு விஞ்சும் வகையில் தொடர் ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக அரசு. ரபேல், வியாபம் ஊழல்களைத் தொடர்ந்து 5ஜி அலைக்கற்றையிலும் ஊழல் செய்துள்ளது. 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலம் முறையாக நடந்திருந்தால் 4.5லட்சம் கோடி வரை அரசுக்கு வருவாய் கிடைத்திருக்கும் ஆனால் இதை வெறும் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு ஒதுக்கியதன் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மெகா சைஸ் ஊழலில் திளைத்துள்ளது மோடி கும்பல், மேலும் அரசுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் க்கு பற்றாக்குறையாக இருக்கும் செமிகண்டக்டர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கூட வாங்க வக்கற்று அதை குழித்தோண்டி புதைத்து வாய்க்கரிசி போட்டுள்ளது.

கொரோனா காலத்தில் அதிகம் பரிந்துரைக்கப்பட்டது DOLO650 எனும் பாரசெட்டமால் மாத்திரைகள். அதிலும் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளது. 500mg வரை இருக்கும் மாத்திரைகளுக்கு அரசு நிர்ணயப்படியே விலை இருக்கும். அதற்கு மேல் உள்ளவற்றுக்கு விலையை நிறுவனங்களே நிர்ணயம் செய்யலாம் என்பதால், மருத்துவ கார்ப்பரேட்களுக்கு சேவை செய்து மக்களின் வயிற்றெரிச்சலை சம்பாதித்துள்ளது இந்த ஊழலாட்சி.

ஊழலற்ற ஆட்சி - வளர்ச்சி என்ற முழக்கத்துடன் அன்னா ஹசாரே போன்ற ஏகாதிபத்திய தொண்டு நிறுவனக் கைக்கூலிகளின் உதவியுடன் ஆட்சியைப் பிடித்த மோடி கும்பல் இன்று ஊழலின் ஒட்டுமொத்த வடிவமாக அவதரித்துள்ளது. முற்றிலுமாக தனியார்மயத்தை ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது என்பது இன்று நிரூபணமாகியுள்ளது.

மானியவெட்டு - மாநில உரிமைகள் பறிப்பு

கல்வி, மருத்துவம், வரி வருவாய், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து விதமான மாநில அரசின் சிறு சிறு உரிமைகளையும் பறித்து மூலதன மையப்படுத்தலை மிகத் தீவிரமாக செய்து வருகிறது மத்திய அரசு. மாநில அரசுகள் நிதிக்காக மத்திய அரசிடம் கையேந்தும் நிலையை உருவாக்கியுள்ளது மோடி கும்பல். வரிவருவாயை ஒட்டுமொத்தமாக பிடுங்கிக் கொண்டு மானிய வெட்டுகளை அமல்படுத்துங்கள் அதன் மூலம் செலவு மிச்சமாகும்; மானியங்களால்தான் நிதிநிலை சீரழிகின்றது என பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு வாய்கூட திறக்காத மாநில அரசுகள் அதற்கு அடிபணிந்து தங்களின் ஊழல் மலிந்த ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள தாங்களும் மானிய வெட்டு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விலையேற்ற நடவடிக்கைகளிலும் அம்பானி - அதானி உள்ளிட்ட உள்நாடு பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு மாநில கட்டமைப்புகளை திறந்துவிடும் வேலையில் இறங்கியுள்ளன.

எப்போதெல்லாம் பொருளாதார நெருக்கடியும் மந்தநிலையும் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் மேற்கொள்ளும் முதல் நடவடிக்கை மானிய வெட்டு. ஆனால் கார்ப்பரேட்களுக்கு மானியங்கள், வரிச்சலுகை, கடன் சலுகை. கார்ப்பரேட் கொள்ளை நிறுவனங்களுக்கு இந்த 8 ஆண்டுகளில் மட்டும் 14 லட்சம் கோடி ரூபாய் வரை கடன்களை வாராக்கடன் எனக்கூறி தள்ளுபடி செய்துள்ளது மோடி அரசு. அதேபோல வாரக் கடன்கள் என அறிவித்து சில முதலாளித்துவ நிறுவனங்களை Insolvency and bankruptcy code amendment 2016 சட்டம் மூலம் திவாலடைந்து விட்டதாக அறிவித்து அவற்றை அரசுடமையாக்குவதற்கு பதிலாக பெரும் தரகு முதலாளித்துவ கும்பலுக்கு தாரை வார்க்கிறது. இதைத்தான் வாராக்கடன்களை மீட்டுவிட்டதாக பொய் பேசி வருகிறது மோடி கும்பல். ஆனால் சாமானிய மக்களுக்கு 50க்கும் 100க்கும் மானிய வெட்டு கூடுதல் வரிச்சுமை. மானிய வெட்டு நடவடிக்கைகளுக்கென்றே ஆதார் அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்தி கட்டாயமாக்கியது. அதன் மூலம் பெட்ரோலிய பொருட்கள், சமையல் எரிவாயு, ரேசன் உணவுப் பொருட்கள், மருத்துவம், ரயில்வே, பேருந்து கட்டணங்கள், நூறு நாள் வேலைத்திட்டம், தற்போது மின்சாரம் வரை அனைத்து துறைகளிலும் மானியம் துடைத்தொழிக்கப்பட்டுள்ளது. சேவைக் கட்டணம் என்ற பெயரில் வங்கிகளிலிருந்து மக்களின் சேமிப்பிலும் கை வைத்துள்ளது. கலாச்சார ரீதியான சீரழிவுகளை உருவாக்கி இளைஞர்களை மது, கஞ்சா உள்ளிட்ட போதைகளிலும் ஆழ்த்தி குடும்ப - சமூக உறவுகளை சிதைக்கிறது. சோசலிசத்தின் பாதிப்பில் (சோசலிசம் உலகமெங்கும் பரவுவதைக் கண்டு அஞ்சி அதைத் தடுக்க) உருவாகியிருந்த சிறுசிறு மக்கள் நலத்திட்டங்களுக்கும், சமூக நலத் திட்டங்களுக்கும் மூடுவிழா நடத்தி சந்தை நல அரசாக ஒரு காட்டாட்சியை அரங்கேற்றி வருகிறது.

உண்மையில் மானியங்களால் விவசாயம் உள்ளிட்ட உற்பத்தித் துறை வளர்வதுடன், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் - அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயருமே ஒழிய ஒருபோதும் வீழாது. ஆனால் அதற்கெதிரான இந்த மானிய வெட்டு நடவடிக்கைகளும் கார்ப்பரேட்களுக்கான கடன் சலுகைகளும், வரிச் சலுகைகளும் நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் மேலும் தள்ளும்.

சிறுபான்மை மக்கள் மீது தொடரும் ஒடுக்குமுறையும் புல்டோசர் பாசிசமும்

மென்மையான இந்துத்துவாவையும், பெருந்தேசிய வெறியையும் கடைப்பிடித்த காங்கிரசின் தொடர்ச்சியாக பாஜக கும்பல் தீவிர இந்துத்துவப்போக்கை நடைமுறைப்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார கும்பல்களின் அஜெண்டாவான இந்து ராஷ்டிரத்தை கட்டியமைக்கவும், பொருளாதார நெருக்கடிகளை மூடிமறைக்கவும் பழியை இசுலாமியர்கள் மீது போட்டு அவர்களை பல வழிகளில் ஒடுக்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார கும்பலே நாடு முழுவதும் பல குண்டுவெடிப்புகளை நடத்தியதாக முன்னாள் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் யஷ்வந்த் ஷிண்டே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால் பழியை இசுலாமியர்கள் மீது போடுகிறது இந்த கொலைகார காவிக் கூட்டம். இசுலாமியர்களின் குடியுரிமை, வழிபாட்டு உரிமை, உணவு உரிமை, கல்வி உரிமை என அனைத்தையும் பறித்து வருகிறது; அவர்களின் மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி தாக்கி வருகிறது; பாசிச ஆட்சிக்கு எதிராக போராடும் இசுலாமியர்களின், மாணவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பது என உத்திர பிரதேசத்தில் புல்டோசர் பாசிசம் எனும் புதிய மாடலை உருவாக்கியுள்ளது மோடி - யோகி காவிக் கழிசடை கும்பல்; மத உரிமைகளுக்காக போராடினால் தலையை வெட்டுவோம், வன்புணர்வு செய்வோம் என சபதமேற்கிறது பஜ்ரங்தள் குண்டர் படை. குஜராத் கலவரத்தில் பாலியல் வல்லுறவில் சீரழிக்கப்பட்ட பில்கிஸ் பானு உள்ளிட்ட இசுலாமியர்களுக்கு எதிராக, கொலை - பாலியல் குற்றவாளிகளை நன்னடத்தை மிக்கவர்கள் எனக்கூறி விடுவித்துள்ளது இந்துத்துவ பாசிசத்தின் கைக்கூலியாக செயல்படும் நீதிமன்றங்கள். அவர்களை உச்சி முகர்ந்து இனிப்புக் கொடுத்து வரவேற்றுள்ளது இந்த இந்துமதவெறி அரசு

குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டம், ஊபா உள்ளிட்ட பாசிச கருப்புச் சட்டங்கள்

கோல்வால்கரின் இந்துராஷ்டிரம் என்பது இசுலாமியர்களுக்கு மட்டும் எதிரானதல்ல இந்துமதத்திலுள்ள தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கும் எதிரானதே என்பதை இன்று அதன் பாசிச நடவடிக்கைகள் மூலம் நிரூபித்து வருகிறது மோடி கும்பல். தனது ஆட்சியின் அவலங்களுக்கு எதிராகப் போராடும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் வேட்டையாட முழு முனைப்புடன் இறங்கியுள்ளது. அனைத்து சட்டவிரோத அடக்குமுறை நடவடிக்கைகளையும் இன்று கருப்புச் சட்டங்கள் மூலமாக சட்டப்பூர்வமாக்கியுள்ளது. பாராளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என 40க்கும் மேற்பட்ட மோடி ஆட்சியை விமர்சனம் செய்கிற வார்த்தைகளை பட்டியலிட்டு பாராளுமன்றத்தில் துதிப்பாடுவதை தவிர வேறு எதையும் பேசக்கூடாது என்கிறது; மோடி என உச்சரித்தாலே ஊபா பாயும் அவலத்தை ஏற்படுத்தியுள்ளது; கவுரி லங்கேஷ் உள்ளிட்டோரை கூலிப்படையை ஏவி கொலை செய்து வருகிறது; பிற ஜனநாயக சக்திகளை 'அர்பன் நக்சல்கள்' எனக் கூறி அத்துமீறிய அரசுபயங்கரவாத்தையும் ஊபாவையும் ஏவிவிட்டது. சில கைதிகள் தனது தண்டனைக் காலம் முடிந்தும் கூட இன்றும் விடுவிக்கப்படாத அளவுக்கு அடக்குமுறையை அதிகரித்துள்ளது. அதன் பரிணாம வளர்ச்சியாக இன்று குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

சிறு குற்றத்தில் ஒரு முறை ஈடுபட்டவரையோ அல்லது சந்தேகிக்கப்படும் சிலரையோ எந்த அனுமதியுமின்றி கைது செய்து அவர்களை நிரந்தர குற்றவாளியாக மாற்றுவதோடு அவர்களின் சந்ததிகளையும் குற்றவாளிகளாக வகைப்படுத்தும் சட்டமே இந்த புதியகாலனிய நவீன குற்றபரம்பரைச் சட்டம். ஏற்கனவே சிறுபன்மையினரை தீவிரவாதிகளாகவும், தாழ்த்தப்பட்ட சாதியிலுள்ள உழைக்கும் மக்களை குற்றவாளிகளாகவும் பார்க்கும் நஞ்சை திட்டமிட்டு விதைத்து வந்தது; அவர்களை சட்டவிரோதமாக குற்றபரம்பரையினராக அணுகிய மத்திய மாநில அரசுகள் இனி இந்த கருப்புச் சட்டத்தின் மூலம் சட்டரீதியாகவே வகைப்படுத்தி தாக்குதல் தொடுக்கும். காவல்துறை கொட்டடி மரணங்களும் அதிகரிக்கும். அவற்றுக்கெதிராக சட்டரீதியான போராட்டம் நடத்த வாய்ப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ளது இந்த கொடியச் சட்டம்.

எதிர்க் கட்சிகளின் அவல நிலை

இன்று தீவிரமடைந்திருக்கும் இந்த பாசிசப் போக்குகளுக்கு அச்சாரமிட்டதே காங்கிரஸ் கட்சிதான் என்பது இதுவரையிலான அவர்களின் ஆட்சி நமக்கு கூறுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோதான் எதிரெதிர் கட்சிகள் ஆனால் அவையனைத்தும் ஆளும் வர்க்க கட்சிகள்தான். தாங்கள் ஆட்சியில் இருந்தால் இதே பாசிச மற்றும் அரசியல் - பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடிப்பதும், ஆட்சியிலில்லாத போது அதை எதிர்ப்பது போல நாடகமாடுவதுமே இவர்களின் நிலை. அதிலும் பாசிச நடவடிக்கைகளின் உண்மையான அரசியல் - பொருளாதார காரணங்களை மூடிமறைத்து உப்புச்சப்பில்லாத காரணங்களை கொண்டு மக்களை ஏய்க்கும் - திசைதிருப்பும் நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் குவிக்கின்றன. ஏனெனில் தாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் அதையே அமல்படுத்த வேண்டுமென்பதாலேயேத்தான். ஆம் ஆத்மி, திமுக, திரிணாமுல், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளே இதற்கு மாபெரும் உதாரணமாக தங்களது மாநிலங்களில் ஆட்சி நடத்தி வருகின்றன. மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுடன் சமரசவாதப் போக்கையே கடைப்பிடிக்கின்றன.

எனவே பாஜக கும்பலுக்கு மாற்று காங்கிரசோ அல்லது வேறு எந்த ஆளும் வர்க்க கட்சியோ கிடையாது. அவர்களின் பின்னால் வாலாக பாட்டாளி வர்க்க இயக்கங்கள் மாறாமல் அவைகளுக்கு நேர் எதிராக ஓரணியில் திரள வேண்டும். அதேபோல இன்றைய யுத்தங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய அநீதி யுத்தங்களே. இதில் எந்த ஏகாதிபத்தியத்தையும் சாராமால் அவற்றை நீதி யுத்தமாக மாற்றுவதும்; ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையை பறித்து அவற்றை நெருக்கடிக்குள் தள்ளிவிடும் ஏகாதிபத்திய அரசியல் - பொருளாதாரக் கொள்கைகளுக்கெதிராகவும், நாடுகளுக்கிடையேயும் ஒவ்வொரு நாட்டிற்குள்ளேயும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்திற்கெதிராகவும் கிளர்ந்தெழுவதும்; ஏகாதிபத்தியங்களுக்கும் அம்பானி அதானிகளுக்கும் சேவை செய்யும் மோடி அரசை வீழ்த்தப் போராடுவதும் அதற்காக அமைப்பாவதும் நாட்டு மக்களின் இன்றைய அவசரப் பணியாகியுள்ளது.

- சமரன், (நவம்பர், டிசம்பர் 2022 மாத இதழ்)