விவசாயிகள் போராட்டமும் கோரிக்கைகளும் - தீர்வு என்ன?

சமரன்

விவசாயிகள் போராட்டமும் கோரிக்கைகளும் - தீர்வு என்ன?

விவசாயிகள் மீது தொடுக்கப்படும் மோடி அரசின் அநீதி யுத்தத்திற்கெதிரான 'டெல்லி சலோ' போராட்டம் வெல்லட்டும்!

பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களுக்காகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்காகவும், சொந்த நாட்டு விவசாயிகளின் மீது ஒரு அநீதி யுத்தத்தை தொடுத்து வருகிறது இந்த கார்ப்பரேட் நல பாஜக அரசு. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக பொய் பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்தது இந்த மோடி அரசு. ஆனால் 2020ம் ஆண்டில், அமெரிக்காவின் 'ஒரே நாடு, ஒரே சந்தை' கொள்கைக்கு இந்தியாவின் விவசாயத்தை முழுவதுமாக பலிகொடுத்தது. அதற்காக 3-வேளாண் சட்டத் திருத்தங்களை பாசிச முறையில் கொண்டு வந்தது.

அச்சட்டங்களை எதிர்த்து 16 மாதங்கள் டெல்லியில் கடுங்குளிரிலும், வெயிலிலும், மழையிலும் போராடினர் விவசாயிகள். அதில் 700க்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கியது இரத்தவெறி பிடித்த மோடி அரசு. அவர்களின் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்க பாஜக - ஆர்எஸ்எஸ் குண்டர்களை ஊடுருவ விட்டு கலவரத்தை உண்டாக்கியது; மதவாத - பிரிவினைவாத பிரச்சாரங்களை கட்டியமைத்தது. அம்முயற்சிகளையும், அடக்குமுறைகளையும் தங்களது வீரம் செறிந்தப் போராட்டத்தின் மூலம் முறியடித்தனர் விவசாயிகள். விவசாயிகளின் செஞ்சுறுதி மிக்க இந்த போராட்டங்களை கண்டு அஞ்சி நடுங்கியது மோடி அரசு. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதோடு சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம் இயற்றப்படும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும், லக்கீம்பூர் கேரி படுகொலைக்கு நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் வாக்குறுதிகளை அளித்தது. மோடி அரசின் வாக்குறுதிகளை ஏற்று அப்போது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர் விவசாயிகள். 

டெல்லி சலோ 2.0

2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் விவசாயிகளுக்கு மோடி அரசு அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவே இல்லை. மாறாக 3 வேளாண் சட்டங்களின் அம்சங்களை கள்ளத்தனமாக செயல்படுத்தியே வருகிறது. விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஒரு குழுவை உருவாக்கியது. அக்குழுவின் தலைவராக 3 கொடிய வேளாண் சட்டங்கள் உருவாக்கத்தில் பங்காற்றிய முன்னாள் வேளாண்துறை செயலாளர் சஞ்சய் அகர்வாலையே நியமித்தது. மேலும் அக்குழுவில் பெரும்பான்மையோர் பாஜக - ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். அக்குழுவுடன் 2 கட்டங்களில் விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க அக்குழு ஒத்துக்கொள்ளாததால் பிப்ரவரி-13 அன்று டெல்லி நோக்கிய விவசாயிகள் அணிவகுப்பு (Delhi chalo 2.0) தொடங்கும் என அறிவித்தன. 

அறிவித்தபடி பிப்ரவரி-13, அன்று (அரசியல் சாராத) சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைமையில் பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்தன. 3000க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் சுமார் 50,000 விவசாயிகள் அணிதிரண்டு டெல்லியை நோக்கி விரைந்தனர். 

விவசாயிகளின் மீது அநீதி யுத்தத்தை ஏவிய மோடி அரசு

விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தை அறிவித்தவுடனேயே அதை எப்படியாவது தடுத்து ஒடுக்கி விடும் முனைப்பில் ஈடுபட்டது மோடி அரசு. ஹரியானா -பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் பிப்ரவரி-11 முதலே இணைய சேவைகளை துண்டித்தது. டெல்லியில் கூட்டம் கூடுவதற்கு தடை விதித்ததோடு ஒருமாதக் காலத்திற்கு ஊரடங்கு (144 தடை) உத்தரவையும் பிறப்பித்தது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிட வாய்ப்புள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை மூடியது. டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களை டெல்லிக்குள் செல்லத் தடை விதித்தது. சண்டிகரிலும் 60 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க தலைவர்களை கைது செய்தது. 130க்கும் மேற்பட்ட டிராக்டர்களை பறிமுதல் செய்தது. போராட்டத்தில் கலந்துக் கொண்டால் பாஸ்போர்ட்டை ரத்து செய்துவிடுவோம் என மிரட்டியது. விவசாயிகளுக்கு டீசல் வழங்கக்கூடாது என்று பெட்ரோல் நிலையங்களுக்கு ஆணையிட்டது. கான்கிரீட் மற்றும் இரும்பு தடுப்பரண்கள், முள்வேலிகள் அமைப்பது, சாலைகளில் ஆணிகளைப் புதைப்பது, பள்ளங்களை தோண்டுவது என சிங்கு, திக்ரி, காஜிப்பூர், ஷம்பு, கனௌரி உள்ளிட்ட டெல்லியின் எல்லைப் பகுதிகளை மூடியது. துணை இராணுவப் படைகளையும் போலீசையும் குவித்தது. இவ்வாறு விவசாயிகளை கண்டு அஞ்சி நடுங்கி, எதிரி நாடுகளுக்கு எதிராக ஏதோ போர்த் தொடுப்பது போன்ற தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டது. ஆம்! அவர்கள் மீது ஓர் உள்நாட்டு யுத்தத்திற்கு தயாரானது. 

மோடி அரசின் இந்த சலசலப்புகளுக்கு அஞ்சாத விவசாயிகள் ஷம்பு மற்றும் கனௌரி எல்லைகளின் தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறினர். ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் போராட்டக் களத்தில் இணைந்தனர். கான்கீரிட் தடுப்புகளை டிராக்டர்களில் கயிறு கட்டி இழுத்து அப்புறப்படுத்தியும்; ஷம்பு எல்லையில் மேம்பாலத்தில் இருந்த தடுப்புகளை வீசியெறிந்தும்; சில இடங்களில் மாற்றுப் பாதையில் - டிராக்டர்கள் மூலம் ஆறுகளை கடந்தும் முன்னேறினர். சிலர் எல்லைப் பகுதிகளிலேயே கூடாரம் இட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். அமைதி வழியிலான அப்போராட்டத்தை ஒடுக்கும் வேலைகளில் ஈடுபட்டது மோடி அரசு. காலாவதியாகி -விசமாகிப் போன கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது அதற்கு ட்ரோன்களை பயன்படுத்தியது. தண்ணீரை அதிக வேகத்தில் பீய்ச்சியடிக்கும் தண்ணீர் பீரங்கிகள், செவித்திறனை பறிக்கக்கூடிய ஒலி பீரங்கிகளை பயன்படுத்தி விவசாயிகள் மீது தாக்குதல் தொடுத்தது. ரப்பர் குண்டுகள், பெல்லட் இரும்பு குண்டுகள் கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியது. இவ்வாறு விவசாயிகளின் மீது ஈவிரக்கமின்றி கொடூரமாக தாக்குதல் தொடுத்தது. அரசின் இந்த கொடிய தாக்குதல்களையும் நெஞ்சுரத்தோடு விவசாயிகள் எதிர்கொண்டனர். கண்ணீர்ப்புகை நுரையீரலை பாதிக்காத வகையில் முகக்கவசங்கள் அணிதல், கண்ணாடிகள் அணிதல்; ட்ரோன்களை செயலிழக்க வைக்க பட்டம் விடுதல், பந்துகளை எறிதல் போன்ற தற்காப்பு முறைகளையும் விவசாயிகள் கையாண்டனர். 

பிப்ரவரி 21ல் தாக்குதல் போலீஸ் படைகளை மேலும் குவித்து தாக்குதலை தீவிரப்படுத்தியது. சுபகரன் சிங் என்ற 21 வயது இளம் விவசாயியை மண்டை பிளக்கும் அளவுக்கு கொடூரமாக தாக்கி கொன்றது. பிப்ரவரி 27ம் தேதி கர்னைல் சிங் என்ற 62 வயது விவசாயியின் உடம்பை துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாக்கி கொன்றது. அன்று வரை 6 விவசாயிகள் மோடி அரசின் கொடூர தாக்குதலுக்கு இரையாக்கப்பட்டனர். 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயமடைந்தனர்; கண்பார்வை பறிக்கப்பட்டனர். 

பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களுக்காகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்காகவும், சொந்த நாட்டு விவசாயிகளின் மீது ஒரு அநீதி யுத்தத்தை தொடுத்து வருகிறது இந்த கார்ப்பரேட் நல பாஜக அரசு. விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று பேசிக் கொண்டே அவர்களின் முதுகெலும்பை முறித்து வருகிறது.

விவசாயிகளின் 12 அம்ச கோரிக்கைகள் என்ன?

இவ்வளவு உயிர்த் தியாகங்களையும் அரசின் பாசிச அடக்குமுறைகளையும் தாண்டியும் விவசாயிகள் அரசுக்கு எதிராகவும் தங்களது கோரிக்கைகளுக்காகவும் துணிவுடன் போராடி வருகின்றனர். அவர்களின் தற்போதைய கோரிக்கைகள் தான் என்ன? 

  1. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் அனைத்து கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
  2. விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
  3. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் (MGNREGA) கீழ் (100 நாட்களுக்கு பதிலாக) ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை, தினசரி ஊதியம் ரூ 700 வழங்கப்பட வேண்டும். மேலும் அத்திட்டம் விவசாயத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
  4. 2020 டெல்லி போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.
  5. அக்டோபர் 2021 லக்கிம்பூர் கேரி கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் - உத்திரபிரதேசம் லக்கிம்பூர் மாவட்டம் கேரி கிராமத்தில் மத்திய அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். அதை பொறுத்துக் கொள்ள முடியாத மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயிகள் கூட்டத்தில் காரை ஏற்றி 4 விவசாயிகளை படுகொலை செய்தான். இந்த படுகொலையில் ஈடுபட்ட மற்றும் சம்பந்தப்பட்ட 14 பேருக்கு இதுவரை உரிய தண்டனை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். 
  6. மோடி அரசு கொண்டு வந்த நில அபகரிப்பு சட்டத்தை கை விட வேண்டும். 2013ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் அடிப்படையை நடைமுறைப்படுத்த வேண்டும் - அதாவது, நிலம் கையகப்படுத்துவதற்கு முன் விவசாயிகளிடமிருந்து எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெறவது; நிலத்திற்கான அரசாங்க மதிப்பீட்டை (Guideline value) விட நான்கு மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும்; வேறு இடத்தில் நிலம் ஒதுக்கி முறையாக குடியமர்த்த வேண்டும்; ஒருவேளை அந்த நிலமே குடியிருப்பாக மாற்றப்படுகிறது எனில் அதில் 10% சதவிகிதம் வழங்கிட வேண்டும் போன்ற அம்சங்கள் உள்ளடங்கிய நிலம் கையகப்படுத்தும் சட்டதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  7. மின்சார சட்ட திருத்த மசோதா 2020 ரத்து செய்யப்பட வேண்டும் - விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தை கைவிடுவது; ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு; மின்சாரத் துறையை தனியார் கார்ப்பரேட் மயமாக்குதல் - அம்பானி அதானிகளின் ஏகபோகமாக மாற்றுதல் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்.
  8. நீர்நிலைகள், வனங்கள் மற்றும் நிலத்தின் மீதான பழங்குடியின மக்களின் உரிமைகளை உறுதி செய்தல் வேண்டும் - நில ஒருங்கிணைப்புச் சட்டம், வனப் பாதுகாப்புச் சட்டம், பல்லுயிர் பெருக்கச் சட்டம் என்ற பெயர்களில் பழங்குடி மக்களை காடுகளில் இருந்து அவர்களின் வாழ்விடங்களில் இருந்தும் விரட்டியடித்து வருகின்றன மத்திய மாநில அரசுகள். மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து சங்பரிவார கும்பல்கள் மூலம் கலவரத் தீயை மூட்டி வருகிறது பாஜக அரசு. இச்சட்டங்களையும் அரசின் இந்த கொடூர போக்குகளையும் கைவிட்டு பழங்குடியின மக்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். 
  9. போலி விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்; விதை தரத்தை மேம்படுத்த வேண்டும் - கார்கில், மான்சாண்டோ போன்ற அமெரிக்கா பன்னாட்டு கார்ப்பரேட்களின் ஏகபோகமாக இடுபொருட்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் விவசாயத்தை பெருமளவில் பாதிக்கும் தரமற்ற போலியான விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள் சந்தையில் இறக்குமதி செய்யப்பட்டு கொட்டிக் குவிக்கப்படுகின்றன. இவற்றால் விவசாயிகள் விளைச்சல் குறைந்து பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே இவற்றை முறையாக கண்காணிக்கவும் அபராதம் வழங்கவும் முறையான அமைப்பு செயல்படுத்தப் பட வேண்டும். இறக்குமதி செய்யப்படும் விதைகள் பெரும்பாலும் மலட்டுத் தன்மையுடையவையாக உள்ளன. அவைகளின் தரத்தை மேம்படுத்த உரிய ஆய்வுகளும் அதற்கான நிதி ஒதுக்கிடும் செய்யப்பட வேண்டும். 
  10. மிளகாய் மற்றும் மஞ்சள் போன்ற மசாலாப் பொருட்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் - இவை பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படும் பட்டியலில் உள்ளன. ஏற்றுமதி செய்யப்படும் இவ்வகையான மசாலாப் பொருட்களின் சந்தைப் பலன்கள் அதை விளைவிக்கும் விவசாயிகளை சென்றடையாமல் கார்ப்பரேட்களால் பதுக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றன. இதனை தடுத்து முறைபடுத்துவதற்கு இதற்கென்று தனி தேசிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும். 
  11. அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price -MSP) உத்தரவாதப்படுத்தும் சட்டம் மற்றும் சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின்படி பயிர் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்
  12. உலக வர்த்தக கழகத்தில் (WTO) இருந்து இந்தியா வெளியேற வேண்டும் மற்றும் அனைத்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களையும் (Free Trade Agreements) முடக்க வேண்டும்

ஆகிய 12 அம்சங்களை கோரிக்கைகளாக வைத்துதான் விவசாயிகள் இந்த டெல்லி சலோ 2.0 போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்துதான் விவசாயிகளின் வரலாற்று சிறப்புமிக்க 2021ம் ஆண்டு போராட்டத்தை கைவிட செய்தது. ஆனால், 2 ஆண்டுகள் கழிந்தபின்பும் இன்றுவரையிலும் கூட வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் இந்த நியாயமான - அத்தியாவசியமான கோரிக்கைகளை நிறைவேற்ற வக்கற்ற மோடி அரசு ஆர்.எஸ்.எஸ். - சங்பரிவார கும்பல் மூலம் போராடும் விவசாயிகள் மீது விசம பிரச்சாரங்களை கட்டியமைத்து வருகிறது. அவர்கள் காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதிகள்; அவர்கள் சீனா போன்ற அந்நிய நாடுகளின் நிதி ஆதரவில் செயல்படுபவர்கள்; தேர்தலுக்காக காங்கிரசின் தூண்டுதலின் பெயரில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என வகைதொகையாக கட்டுக்கதைகளை அவிழ்த்து வருகிறது. தேசபக்த வேடமிடும் இந்த இந்துராஷ்டிர கயவர்கள் சீக்கியர்களை கொன்றொழிக்க வேண்டும் என கங்கணம் கட்டி அலைகின்றனர். ஆனால் உண்மையில் இது போராடும் விவசாயிகளுக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் மீதான தாக்குதல்; நாட்டில் பசி பஞ்சத்தை உருவாக்கி உழைக்கும் மக்களை கொன்றொழிக்கும் நடவடிக்கை. 

குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price -MSP) கோரிக்கை

மேலே உள்ள 12 அம்ச கோரிக்கைகளில் பிரதானமாக விவாதிக்கப்படும் குறைந்த பட்ச ஆதரவு விலை பற்றிய கோரிக்கையைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம். 

குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) என்பது சுமார் 60ஆண்டுகளுக்கும் மேலாக ஏட்டளவில் இருந்தே வருகிறது. ஆனால் நடைமுறையில் அதன் மூலம் விவசாயிகள் பயனடையவில்லை என்பதே உண்மை. ஆகையால்தான், சட்டரீதியான ஓர் உத்திரவாதத்திற்காகவும் அதனை நடைமுறையில் செயல்படுத்தவும் வேண்டியே விவசாயிகள் இப்போது போராடி வருகிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் இப்போது இருக்கும் எம்.எஸ்.பி கணக்கீடு உரிய பலனளிக்கவில்லை. சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரை அடிப்படையில் எம்.எஸ்.பி கணக்கீடு செய்து அதற்கு உத்திரவாதம் அளிக்க கோருகின்றனர். 

ஏட்டளவில் 23 விளைபொருட்களுக்கு எம்.எஸ்.பி இருந்து வந்தாலும் நடைமுறையில் அரிசி, கோதுமைக்கு மட்டுமே அது வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் அரசால் கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. சந்தைகளிலோ, மண்டிகளிலோ இருக்கும் தரகர்கள் ஆதிக்கம் செலுத்துவதால் பெரும்பான்மையான விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவாகவோ அல்லது பெருத்த நட்டத்திற்கோ விளைபொருட்களை விற்க வேண்டிய சூழலே நிலவுகிறது. இப்போது இருக்கும் எம்.எஸ்.பி கணக்கீடு முறை கூட சரியாக நடைமுறைப்படுத்தப் படாததால் வெறும் 6% சதவிகித விவசாயிகள் மட்டுமே விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பெறுகின்றனர். மீதம் 94% சதவிகிதம் விவசாயிகள் கடனாளிகளாகவே மாறி வருகின்றனர். நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 60% சதவிகிதம் மக்களான 85கோடிக்கும் மேற்பட்டோரை கடனாளியாக ஆக்கினால் கிராமப் பொருளாதரம் (ஏன் நாட்டின் பொருளாதாரம் என்றே சொல்லலாம்) என்னாவது? 

இதை சரி செய்ய வேண்டுமானால், குறைந்தபட்சம் எம்.எஸ்.பியையாவது சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைபடி மாற்றியமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும். 

ஏற்கனவே இருக்கும் எம்.எஸ்.பி = கையிலிருந்து செலவிடப்படும் அசல் தொகை (All paid -out cost -A2) + குடும்ப உழைப்புக்கான ஊதியம் ((Family Labur -FL) 

இதில், நிலக் குத்தகை மற்றும் இதர இயந்திர செலவினங்களுக்கான வாடகை மற்றும் கடன்களுக்கான வட்டியோ, விவசாயிகளுக்கான லாபமோ எதுவும் சேர்க்கப்படாது. இதைதான் குறைந்தபட்ச ஆதரவு விலை என்று அரசு இதுவரை தீர்மானித்து வருகிறது. இதனால் நிலத்தை குத்தகைக்கு விடும் நிலச்சுவாந்தாரர்களுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை. நிலவாடகை செலுத்தும் விவசாயிகளின் நிலையை நினைத்து பாருங்கள். நில வாடகைக்கு வாங்கிய கடனுக்கு வட்டி, இடுபொருட்களுக்காக வாங்கிய கடனுக்கு வட்டி என தனது குடும்பமே சேர்ந்து உழைத்தாலும் கடனுக்கு வட்டியை கூட கட்டமுடியாமல் இலவச உழைப்பையும் கொட்டி தண்டல்காரர்களுக்கும், மைக்ரோ பைனான்சியர்களுக்கும் கடனாளியாக மாறும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து கொஞ்சமாவது மீள்வதற்கான ஒரு மிதவாத சீர்திருத்த நடவடிக்கைதான் சுவாமிநாதன் கமிட்டியின் இந்த பரிந்துரை.

சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைபடி,

எம்.எஸ்.பி = C2 (Comprehensive Cost) + 50% சதவிகிதம் கூடுதல்

இதில், 

C2 = (இடுபொருட்களுக்கான செலவு + நிலவாடகை) மற்றும் அவைகளுக்காக வாங்கிய கடன்களுக்கான வட்டி + குடும்ப உழைப்புக்கான ஊதியம் (FL) சேர்த்து கணக்கிடப்பட வேண்டும். 

இதற்கும் மேலாக ரமேஷ் சந்த் கமிட்டி பரிந்துரைப்பது, நிலவாடகை மட்டும் கடன்களுக்கான வட்டியோடு இயந்திரங்கள், விவசாய கட்டுமானங்களின் தேய்மானங்கள் அதற்கான முதலீடுகளுக்கான வட்டி, மாடுகள் உள்ளிட்டவைகளுக்கான பராமரிப்பு செலவுகள் என அனைத்து செலவினங்களையும் சேர்க்க வேண்டும் என்கிறது. அதனோடு உழைப்புக்கான ஊதியம் என்பது திறனற்ற உழைப்புக்கான (Unskilled labour) கூலியாகதான் கணக்கிடப்படுகிறது. அது திறனான உழைப்புக்கான (Skilled labour) கூலியாக மாற்ற வேண்டும் என பரிந்துரைக்கிறது. 

விவசாயிகள் கோருவது, ரமேஷ் சந்த் கமிட்டியின் பரிந்துரையைக்கூட அல்ல குறைந்தபட்சம் சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையிலாவது இந்த எம்.எஸ்.பி.யை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே ஆகும்.

ஆனால் இதைக் கூட நிறைவேற்ற வக்கற்றுதான் இந்த அரசு போராடும் விவசாயிகளை ஒடுக்கி வருகிறது. ஒருபக்கம் விவசாயிகளை ஒடுக்கி கொண்டே மறுபக்கம் பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறது. 3வது மற்றும் 4வது கட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவிலும் கூட மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இவ்வாறு கூறுகிறார்: "விவசாயிகளின் கோரிக்கை அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. மத்தியில் புதிய அரசு அமைந்த பிறகு விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். இப்போதைக்கு பருத்தி, சோளம், துவரை, உளுந்து, மசூர் பருப்பு ஆகிய 5 விளைபொருட்களை மட்டும் 5 ஆண்டுகளுக்கு எம்.எஸ்.பி விலையில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்" என்றார். 

சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைபடி கூட அல்ல, ஏட்டளவில் இருக்கும் 23 விளைப் பொருட்களுக்கு ஏற்கெனவே கணக்கிடும் முறையில் கூட எம்.எஸ்.பி யை உத்திரவாதம் செய்ய இந்த அரசு முன்வரவில்லை என்றால் எவ்வளவு பெரிய மோசடி இது. அதுவும் இவர்களின் ஒப்பந்தம் என்பதும் ஏட்டளவில் மட்டுமே. நடைமுறையில் செயல்படுத்த எவ்வித சட்டபூர்வமான ஆதாரமும் கிடையாது. இந்த ஏமாற்று ஒப்பந்த முடிவுகளை விவசாயிகள் நிராகரித்து விட்டனர். அதனால்தான் போராட்டத்தை தொடர்ந்தனர். 

எம்.எஸ்.பி. குறித்த அரசு மற்றும் சங்பரிவாரங்களின் கட்டுக்கதைகள்

ஒருபக்கம் விவசாயிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துக் கொண்டு மறுபக்கம் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அரசே கடனில் மூழ்கி திவாலாகிவிடும் என்ற அளவுக்கு கணக்குகளை கட்டுக்கதைகளாக அள்ளி விடுகின்றனர்.

கட்டுக்கதை 1 : எம்.எஸ்.பி. அடிப்படையில் விளைப்பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் போராடுவதாக கூறுவது. 

கட்டுக்கதை 2 : சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப் படி அனைத்தையும் கொள்முதல் செய்தால் அதற்கு ரூ.40 லட்சம் கோடி தேவை என்றும் (அல்லது) இப்போது இருக்கும் எம்.எஸ்.பி படியே கொள்முதல் செய்தால் ரூ.14 லட்சம் கோடி தேவை என்றும் கூறுகிறார்கள். இவ்வாறு செய்தால் உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் ரூ.10லட்சம் கோடி ஒதுக்கமுடியாது; நாடு வளர்ச்சி அடையாது என்கிறார்கள். 

உண்மையில், விளைப்பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எங்கேயும் கோரி போராடவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான ஒரு சட்டப்பூர்வ உத்திரவாதமான நடவடிக்கையே. மண்டிகளில் எம்.எஸ்.பிக்கும் குறைவான விலைக்கு பொருட்களை கொடுக்கும்படி விவசாயிகளை யாரும் நிர்பந்திக்க கூடாது என்பதே. அப்படி நிர்பந்தித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே ஆகும். 

அப்படியே அரசு கொள்முதல் செய்தாலும், முழுத்தொகையையும் அரசு ஒதுக்க வேண்டிய தேவை இருக்காது. அரசு கொள்முதல் செய்து அதன் பிறகு அந்த தொகை முழுவதையும் திரும்ப பெற்று விடும். இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலும் அரசுக்கு அதனால் லாபம் அதிகரிக்கதான் வாய்ப்பு உள்ளது. எப்போது இழப்பீடு ஏற்படும் சந்தை விலை எம்.எஸ்.பி.யை விட குறையும்போதுதான் ஏற்படும். அதுவும் கொள்முதல் செய்த தொகைக்கும் விற்ற தொகைக்கும் உள்ள வேறுபாடுதான் அரசுக்கு இழப்பீடாக அமையும். அதுவும் ஒரே தருணத்தில் எல்லா விளைபொருட்களுக்கும் அந்த நிலை ஏற்பட போவதில்லை. 

2022-23ம் ஆண்டின் நிலவரப்படி எடுத்துக் கொண்டால் கூட (இப்போதைய கணக்கீட்டின் படி) அரசு இந்த 15 முக்கியமான விளைப்பொருட்களை கொள்முதல் செய்து விற்றிருந்தால் கூட அரசு கூடுதலாக ரூ.26469 கோடி செலவிட்டிருந்தால் போதும். (அட்டவணை -1ல் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலை பார்க்கவும்). அதுவே சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரை படி எம்.எஸ்.பி. யை நிர்ணயம் செய்தால் கூடுதலாக ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கியிருந்தால் போதும். இதனால் விவசாயிகள் கடனாளிகளாக மாற்றப்பட்டிருக்க மாட்டார்கள், தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். கிராமப்புறம் உள்ளிட்ட நாட்டின் பொருளாதாரமும் மேம்பட்டிற்கும் என அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

சிரிசில் (Crisil) வழங்கும் புள்ளிவிவரத்தின் படி, வெறும் ரூ. 21,000 கோடி தற்போதைய எம்.எஸ்.பி. நடைமுறைபடுத்துதலுக்கும், 

ரூ. 1.5 லட்சம் கோடி கோரப்படும் சுவாமிநாதன் கமிட்டியின் எம்.எஸ்.பி படியும் நிதி ஒதுக்கீடு போதும் என்கிறது. கார்ப்பரேட்களுக்கு ஆண்டுக்கு ரூ. 14 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யும் அரசால் விவசாயிகளுக்கு வெறும் ரூ. 21 ஆயிரம் கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாதா என்ன? இன்னும் சொல்லப்போனால், கார்ப்பரேட் - ஆன்லைன் வர்த்தகம் போன்ற ஏகபோகங்களின் சந்தை ஆதிக்கதால்தான் இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடும் தேவைப் படுகிறது.

அரசின் அரசியல் பொருளாதாரக் கொள்கையும் உலக வர்த்தக கழகமும்

அரசு நிலச் சீர்திருத்தம் செய்து நிலங்களை அனைவருக்கும் பகிர்ந்தளித்திருத்தால் நிலத்திற்கான குத்தகை சுமையும் அதன் கடன்களுக்கான வட்டி சுமையும் குறையும்தானே? உரம், விதைகள் உள்ளிட்ட இடுபொருட்களுக்கும் அரசு கூடுதலாக மானியம் வழங்கினால் அதற்கான செலவினங்களும், கடனுக்கான வட்டியும் குறையதானே செய்யும்? பங்குசந்தை சூதாடிகள் மற்றும் கார்ப்பரேட் ஏகபோகங்களை கட்டுப்படுத்தினால் சந்தைவிலை அரசின் கட்டுக்குள் வைக்க முடியுமல்லவா? இங்கு கொட்டிக் குவிக்கப்படும் இறக்குமதி பொருட்களை குறைத்தோ அல்லது அவைகளுக்கு வரிவிதிப்பை அதிகரித்தோ அரசு தனது கடன்சுமையை குறைக்க முடியும் அல்லவா? ஆனால் இதையெல்லாம் ஏன் இந்த அரசு செய்ய மறுக்கிறது. ஏனெனில் இது கார்ப்பரேட்களுக்கான அரசு; இது நிலச்சுவாந்தாரர்களுக்கான அரசு; இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கால்நக்கிப் பிழைக்கும் அரசு. 

ஏகாதிபத்தியங்கள் குறிப்பாக அமெரிக்கா தன் நாட்டில் விவசாயத்திற்கு மானியத்தை அதிகரித்து உற்பத்தியாகும் பொருட்களை இந்தியா போன்ற காலனிய நாடுகளில் கொட்டி குவிக்கிறது. இந்தியா போன்ற காலனிய நாடுகள் உணவில் தன்னிறைவடையாமல் பார்த்துக் கொள்கிறது. விவசாயத்திற்கு வழங்கும் மானியம் மொத்த விவசாய உற்பத்தியில் 10% அளவுக்கு மேல் செல்லக் கூடாது என்கிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த பட்சம் 4% சதவிகிதமாவது வரியில்லாமல் இறக்குமதி செய்ய வேண்டும் என நிர்பந்திக்கிறது. அதற்கு மேல் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எவ்வித தடையும் விதிக்கக் கூடாது வரிகளை குறைக்க வேண்டும் என நிர்பந்திக்கிறது. அதற்கான அடிமை சாசன ஒப்பந்தங்களில் இந்தியா ஏற்கெனவே கையெழுத்திட்டுள்ளது. அவை காலாவதியாகிப் போனாலும் இன்னும் அந்த ஒப்பந்தங்களை முடக்கவில்லை. மாறாக மேலும் மேலும் புதிய புதிய அடிமை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு நாட்டை அமெரிக்காவின் காலடியில் சேர்க்கிறது மோடி அரசு. (2021-22 நிதியாண்டில் மட்டும் இறக்குமதியை 2.4 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் மதிப்பிற்கு -சராசரியாக 50.56% சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. அதன் விவரங்கள் அட்டவணை - 2 லும், வேளாண் பொருட்களின் இறக்குமதி எவ்வாறு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கப்பட்டு வருகிறது என்ற புள்ளி விவரங்கள் படத்திலும் கொடுக்கப் பட்டுள்ளன.) 

விவசாயிகள் இந்த அளவிற்கு போராடியும் கூட, இந்தாண்டு பிப்ரவரி -26ம் தேதி அபுதாபியில் நடைபெற்ற உலகவர்த்தக கழக மாநாட்டிலும் இந்த நிபந்தனைகளை முறித்துக் கொள்ளாமல் வாய் பொத்தி மவுனித்தே வந்துள்ளது பாஜக அரசு. அமெரிக்கா 10% மேல் மானியத்திற்கு வழங்கக்கூடாது என கூறினால் மோடி அரசு 3% சதவிகிதம் கூட விவசாயத்திற்கு மானியம் வழங்குவதில்லை. கடந்த சில பட்ஜெட்களாக விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தே வந்துள்ளது நிர்மலா சீதாராமன் கும்பல். மேலும், 100நாள் வேலைத்திட்டத்தின் படி சராசரியாக வெறும் 21 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சம்பளத் தொகையையும் கூட நிலுவை வைத்துள்ளது இந்த கும்பல். பட்ஜெட்டில் விவசாயத்திற்கு மேலும் 1% சதவிகிதம் நிதி ஒதுக்கினால் கூட விவசாயத்துறையை பெரும் நெருக்கடியில் இருந்து காப்பாற்ற முடியும் என்கின்றனர் சில பொருளாதார வல்லுநர்கள். அதை கூட இந்த அரசு செய்ய மறுக்கிறது. விவசாயத்திற்கு, பட்ஜெட்டில் ஒதுக்கும் நிதி ஒட்டுமொத்த ஜிடிபியில் வெறும் 0.3% சதவிகிதம் மட்டுமே ஆகும். கடந்த 15 ஆண்டுகளில் 30% சதவிகிதம் அளவிற்கான நிலங்கள் பாழாக்கப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டு புள்ளிவிவர படி, 121 மில்லியன் ஹெக்டேர் நிலம் பாழாக்கப்பட்டுள்ளது. இதில் 80% சதவிகிதம் விவசாயம் செய்யாமல் கைவிடப்பட்ட நிலங்களே ஆகும். நம்புங்கள் இதுதான் விவசாய நாடு (?!). விவசாயிகள் பிரச்சினை என்பது தொடர்ச்சியாகவும் விரிவாகவும் விவாதிக்க வேண்டிய ஒன்று. தற்போதைக்கு குறிப்பான அம்சத்தோடு முடித்து கொள்வோம்.

விவசாயிகள் இந்த கோரிக்கைகளையும் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க தன்னெழுச்சியான இந்த போராட்டங்களுக்கும் நாம் ஆதரவளிக்க வேண்டும். அதே வேளையில் அப்போராட்டத்தில் ஈடுபடும் சங்கங்களின் அரசியல் நிலைபாட்டையும் விமர்சிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. விவசாயிகள் இதை ஏதோ தனித்த பிரச்சினையாக கருதி தனியாக போராடி வருகிறார்கள். அரசியல் இயக்கங்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள்; சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற அவர்களின் அமைப்பிலிந்தே பிரிந்து அரசியல் சார்பற்ற அமைப்பு எனும் பெயரில் தனிப்பிரிவாக செயல்படுகின்றனர்; அது தவறு; அது தொண்டு நிறுவன அரசியல் நிலைபாடாகும். இந்த ஆட்சியாளர்களை நிர்பந்தித்தாலே தங்களுக்கு விடிவு கிடைத்துவிடும் என்றும் இந்த கட்டமைப்புகளுக்குள்ளே தமக்கு தீர்வு கிடைத்துவிடும் என்றும் அவர்கள் தவறாக நம்புகின்றனர். சில எம்.எல். அமைப்புகளும் கூட விவசாயிகளின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்தையே பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதையாக அறிவித்து செயல்படுகின்றனர். பாட்டாளி வர்க்கம் ஆற்ற வேண்டிய தலைமை பாத்திரத்தை மறுத்து வால்பிடிக்கும் போக்கில் ஈடுபடுகின்றனர். 

விவசாயிகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு மக்கள் ஜனநாயக புரட்சியே! 

சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகூட கடன்களுக்கான வட்டியை சேர்க்க வேண்டும் என்றுதான் கூறுகிறதே ஒழிய, விவசாயத்தில் கடன்களில்லா அரசு மானியத்தை வலியுறுத்தவில்லை. அக்கமிட்டியின் பரிந்துரையும் கூட நிதிமூலதன ஆதிக்க கும்பல்களின் நலன்களுக்கே சேவை செய்கிறது. அதன் சேவை பாதிக்காத வகையில் ஏகாதிபத்திய - மிதவாத சீர்திருத்தத்தை முன் வைக்கிறது. இந்த மிதவாத சீர்திருத்தம் விவசாயிகளுக்கு தீர்வாக அமையாது என்பது ஒருபக்கம் இருந்தாலும், இதைக் கூட இந்த அரசு உலக வர்த்தக கழகத்தின் ஒப்பந்தகளுக்கு அடிபணிந்திருக்கும் போது செய்ய முடியாது என்பதே நிதர்சனம். அதனால்தான் விவசாயிகள் உலக வர்த்தக கழகத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அதற்கு அடிபணிந்து இந்தியாவின் சந்தையை தடையற்ற வர்த்தகத்திற்கு திறந்து விடும் ஒப்பந்தங்களை முடக்க வேண்டும் என்றும் கோரி போராடுகின்றனர். ஆனால், உலக வர்த்தக கழகத்தின் ஆணைகளுக்கு அடிபணிந்து தன்னுடைய ஆண்டைகளுக்கு சேவை செய்து வருகிறது இந்த அரசு. இதில் பாஜக -காங்கிரசு இரண்டு ஆட்சியாளர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ஏனெனில், 90 களில் ஏற்படுத்தப்பட்ட உலகமய - தாராளமய -தனியார்மய கொள்கைகளால்தான் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் விவசாயம் நிதிமூலதன ஆதிக்க கும்பல்களின் ஏகபோகமாக மாறி வருகிறது. 1995ம் ஆண்டில் டங்கல் திட்டம் எனும் அடிமை சாசனத்தில் காங்கிரசு அரசு கையெழுத்திட்டதிலிந்து இந்தியாவின் விவசாயம் உள்ளிட்ட முக்கியத் துறைகள் அமெரிக்காவின் மேலாதிக்க நலன்களுக்கு பலியிடப்பட்டு வருகின்றன. நாட்டை அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்தின் பிடிக்கு தாரை வார்த்தது நரசிம்மராவ் அரசு. 2008 ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதர நெருக்கடிக்குப் பின் அமெரிக்கா காப்புக் கொள்கைகளை கடைபிடித்து நெருக்கடியின் சுமைகளை இந்தியா போன்ற தனது காலனி நாடுகளில் சுமத்தி வருகிறது. 2020ம் ஆண்டில், அமெரிக்காவின் 'ஒரே நாடு, ஒரே சந்தை' கொள்கைக்கு இந்தியாவின் விவசாயத்தை முழுவதுமாக பலிகொடுத்தது மோடி அரசு.

மறுபக்கம் இந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இரண்டு கட்சிகளும் குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவோம் என வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். பாஜக அரசு கடந்த 2014 தேர்தலில் இருந்தே இந்த பல்லவியை பாடி வருகிறது. ஆனால் இதுவரை செய்யவில்லை. மாறாக மேலும் சுமைகளை விவசாயிகள் மீது சுமத்த சட்டத் திட்டங்களைத்தான் தீட்டி வருகிறது; போராடும் விவசாயிகளை பாசிச முறையில் ஒடுக்கி வருகிறது. ஒருவேளை இந்தியா கூட்டணி வெற்றி பெற்று காங்கிரசு ஆட்சி அமைத்தாலும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்திரவாதம் செய்யாது. அது உலக வர்த்தக கழகத்திலிருந்து வெளியேறாமலும், தடையற்ற வர்த்த ஒப்பந்தங்களை கிழித்தெறியாமலும் சாத்தியமில்லை. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள எந்த மாநில அரசுகளும் கூட விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. விவசாயம் மாநிலப் பட்டியலில் இருந்து பறிக்கப்பட்டு மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டபோது கூட வேடிக்கை பார்த்தன அல்லது ஆதரவளித்தே வந்தன. டெல்லி, 

பஞ்சாபில் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி அரசு போராட்டத்திற்கு அணிதிரளும் விவசாயிகள் மீது தன் பங்கிற்கு அடுக்குமுறைகளை ஏவியே வருகிறது. அதேபோல்தான் கர்நாடகா காங்கிரசு அரசும், கர்நாடாகாவில் இருந்து டெல்லி செல்ல முயன்ற விவசாயிகளை இடைமறித்து கைது செய்தது. திராவிட மாடல் திமுக அரசும் தஞ்சை -திருவாரூர் மாவட்டங்களில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய விவசாயிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது. திருவண்ணாமலை சிப்காட்டிற்கான நில அபகரிப்பிற்கு எதிராக போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து அடக்குமுறையை ஏவியது. 

விவசாயிகள் பிரச்சினை என்பது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல அது ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினை; அது தேசிய இனப் பிரச்சினை. இந்த காவி மட கும்பலும் - கதர் மட கும்பலும் - கருப்பு மடக் கும்பலும் தேசிய இனப் போராட்டத்தை மழுங்கடித்தே வந்துள்ளன. அதை மீறித்தான் பஞ்சாப், கர்நாடாகா, மராட்டியா, மலபார், வங்கம், தெலுங்கானாவில் விவசாய எழுச்சிகள் நடைபெற்றன. தமிழகத்தில் அந்த வகையான எழுச்சிகள் கூட நடைபெறாமல் இந்த ஏகாதிபத்திய கால்நக்கி நீதிக்கட்சியும் அதன் வாரிசுகளும் பார்த்துக் கொண்டனர். எனவே விவசாயிகள் மீதான மோடி கும்பலின் பாசிச ஒடுக்குமுறைக்கு இவர்கள் மாற்றாக இல்லை; இருக்கப் போவதுமில்லை. 

உலக வர்த்தக கழகத்தில் இருந்து வெளிவந்தாலும் விவசாயிகள் பிரச்சினை தீரப்போவதில்லை. இது அதற்கான முதல் படி மட்டுமே ஆகும். சுதேசிய பொருளாதாரத்தை கட்டியமைப்பது, நிலங்களை தேச உடமையாக்குவது, கூட்டுப் பண்ணை விவசாய முறையை உருவாக்குவது - இவற்றின் மூலமே விவசாயிகள் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க முடியும். உலக வர்த்தக கழகம் மட்டுமில்லாமல் இந்தியா அமெரிக்காவுடன் பல்வேறு அடிமை சாசன ஒப்பந்தங்களில் அமெரிக்காவின் புதியகாலனிய ஆதிக்கத்தின் பிடியில் கட்டுண்டு உள்ளது. அந்த அடிமைச் சங்கிலியை தகர்க்காமல் விவசாயிகள் உள்ளிட்ட எவருக்கும் இந்த நாட்டில் விடிவில்லை. அதற்கு பாட்டாளி வர்க்க கட்சியின் தலைமையில் இந்த நாட்டில் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வது ஒன்றே அந்த அடிமைச் சங்கிலியை தகர்ப்பதற்கான ஒரே வழி. 

- சமரன் (மே 2024 இதழில்)