மதரசா கல்வி நிறுவனங்களின் மீதான தடை – கல்வியில் பன்னாட்டு ஏகபோக நிதி மூலதன ஆதிக்கத்திற்கு இந்துத்துவத்தின் சேவை
சமரன்
இந்திய அரசின் ஒழுங்கு ஆணையங்களில் ஒன்றான NCPCR (தேசிய குழந்தைகள் உரிமைளின் பாதுகாப்பு ஆணையம்) மதரசா கல்வி நிறுவனங்களின் மீது ஒரு தாக்குதலை தொடுத்துள்ளது. இது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் சிறுபான்மையினர் மீதான தொடர் தாக்குதலின் ஒரு பகுதியாகவும் சிறுபான்மையினரின் மத உரிமை மற்றும் கல்வி உரிமைக்கு எதிராகவும் தொடுத்துள்ளது. பாசிச பாஜக ஆட்சி, தொடர்ந்து தன்னுடைய பன்னாட்டு ஏகபோக தனியார்மய, தாராளமய, வணிகமயமாக்கல் கொள்ளைக்கு வழக்கம்போல காவி நிறத்தை பூசிக்கொண்டு தாக்குதலை தொடுத்துள்ளது. இத்தாக்குதல் கல்வியில் வழக்கம்போல் பன்னாட்டு ஏகபோக நிதி மூலதன ஆதிக்கத்திற்க்கானது; ஆகப்பிற்போக்கான இந்துத்துவ கும்பலின் மதவெறி சேவைக்கானது; மாநில உரிமைகளின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது; சர்வதேச நிதி அமைப்பின் அழுத்தத்தினால் செயல்படுத்தப்படும் சமூகநல திட்டங்களின் மூடுவிழாவுக்கானது; நிதி மூலதன ஆதிக்கத்திற்கு தடையாக அமலிலுள்ள மானியங்கள் மற்றும் அரசுகளின் கடமைகளை துறந்து ஓடும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
மார்ச் 2021ல், தேசிய குழந்தைகள் உரிமைகளின் பாதுகாப்பு ஆணையம் “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21Aவின் உட்பிரிவு 15(5) இன் கீழ் சிறுபான்மையினர்க்கு கொடுக்கப்பட்ட சிறப்பு விலக்கும் சிறுபான்மை சமூகத்தினருடைய குழந்தைகளின் கல்வியில் ஏற்படுத்தும் தாக்கமும்” என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிட்டது. பின்பு 2024ல், “மத நம்பிக்கையின் பாதுகாவலர்களா அல்லது குழந்தைகளின் உரிமைகளை ஒடுக்குபவர்களா?: குழந்தைகளின் அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிராக மதரசாக்கள்” என்று மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. டிசம்பர் 2022ல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதியது. அதற்குப் பிறகும் தொடர்ந்து பல கடிதங்களில் தனது அதிகாரத்தின் மூலம் மதரசாக்களில் உள்ள மாணவர்களை வெளியேற்றி மற்ற பள்ளிகளில் சேர்க்கும்படி குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக இந்த வருடம் 2024ல் ஜூன் 7 மற்றும் ஜூன் 25ல் இரு கடிதங்கள் மூலம் மீண்டும் உத்திரபிரதேச அரசுக்கும் மற்றும் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கும் அதையே மீண்டும் வலியுறுத்தியிருந்தது.
அந்த கடிதத்தில், மதராசா கல்வி நிறுவனங்கள் "நிறுத்தப்பட்டு, மூடப்பட வேண்டும்" என்றும் மதராசாக்கள் மற்றும் மதராசா கல்வி நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் மாநில அரசுகளின் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும் என்றும் மதராசாக்களுக்குச் செல்லும் குழந்தைகளை "முறையான பள்ளிகளில்" சேர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த அறிவுறுத்தலுக்கு பின் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி தனியார்மய, வணிகமய நோக்கமும், இந்துத்துவ அரசியலுமே என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
NCPCRவும் அதன் அறிக்கைகளும்:
குழந்தைகள் உரிமைகளின் பாதுகாப்பு சட்டம் (CPCR) - 2005 கீழ் குழந்தைகள் தங்கள் உரிமைகளை அனுபவித்து, சுதந்திரமான மற்றும் நியாயமான சூழலில் வளர்வதை உறுதிப்படுத்துவற்கு தேசிய குழந்தைகள் உரிமைகளின் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) அமைக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றவும் குழந்தைகளின் சட்ட மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் இச்சட்டப் பிரிவு 13ல் இந்த ஆணையத்திற்கு அதற்குரிய செயல்பாடுகளை மேற்கொள்ள அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த அமைப்பு, குழந்தைகள் சம்பந்தமான நடைமுறையிலுள்ள சட்டங்களை பரிசீலித்தல், சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று கண்காணித்தல், குழந்தைகள் உரிமை சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளுதல், சட்ட உரிமைக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளிகளை சுட்டிக்காட்டி புதிய நடைமுறைகளையும் சட்டங்களையும் பரிந்துரைத்தல், குழந்தை உரிமைகளுக்கு சம்பந்தமான விழிப்புணர்வு விளம்பரங்கள் மற்றும் செய்திகள் வெளியிடுதல் போன்ற நடைமுறைகளுக்காக அதாவது குழந்தைகள் சம்பந்தமான சகல உரிமைகளை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதன் அதிகாரபூர்வ வலைதளம் பறைசாற்றுகிறது.
2002ம் ஆண்டு, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை என நமது அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. பின்னர் 2009 இல், அனைத்து குழந்தைகளுக்கும், பாகுபாடின்றி இலவச மற்றும் கட்டாயக் கல்வி என்பது அடிப்படை உரிமை என கல்வி உரிமைச் சட்டம் – 2009 (RTE) மூலம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. சமத்துவம், சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தினுடைய மதிப்புகளையும், நீதியான மற்றும் மனிதாபம் மிகுந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு “அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை” வழங்குவதன் மூலம் மட்டுமே அடைய முடியும் என்ற நம்பிக்கையில் கல்வி உரிமைச் சட்டம் – 2009 (RTE) தொகுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெவ்வேறு மத மற்றும் மொழி சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தங்களுக்குரிய தனித்துவமான கலாச்சாரம், மொழி மற்றும் எழுத்து வடிவம் ஆகியவற்றை பாதுகாப்பதற்குகான வாய்ப்புகளை அங்கீகரித்து, இந்திய அரசியலமைப்பின் 30வது பிரிவில், சிறுபான்மையினருக்கு கல்வி நிறுவனங்களை நிறுவவும் நிர்வகிக்கவும் உரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது. அதையொட்டி 2012ல், மதக் கல்வி நிறுவனங்களுக்கு, RTE சட்டத்தைப் பின்பற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் திருத்தம் செய்யப்பட்டதாகவும் பின்னர், 2014 இல், பிரிவு 15(5) இன் கீழ் விலக்கு அளிப்பதின் செல்லுபடி குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, சிறுபான்மையினர்கள் தங்களின் பள்ளிகளை நிறுவி நிர்வகிக்கும் முடிவுகளில் RTE சட்டம் பொருந்தாது என்று உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இத்தீர்ப்பு குழந்தைகளின் அடிப்படை உரிமைகளுக்கும் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளுக்கும் இடையில் முரண்பட்ட சித்திரத்தை கொடுப்பதாகவும் இந்த முரண்பாட்டால் இந்த நிறுவனங்களில் அல்லது பள்ளிகளில் சேரும் பெரும்பாலான குழந்தைகள் மற்ற குழந்தைகள் அனுபவிக்கும் உரிமைகளை அனுபவிக்க முடியவில்லை என்றும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. இந்த குழந்தைகள் உரிமைகளுக்கு தடையாக இருப்பது அந்த கல்வி நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட விலக்கு. அதாவது சிறுபான்மை நிறுவன உரிமைகளை அனுபவித்து வருவதால், RTE சட்ட நடைமுறைக்கு எதிராகவுள்ளதாக NCPCR குற்றம் சுமத்துகிறது. இதனடிப்படையில் 2015-16ல் தொடங்கி பல மட்ட விரிவான ஆலோசனைகளை பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து 2021ல் விரிவான அறிக்கையை வெளியிடப்பட்டதாக NCPCR அறிக்கையில் அதன் தலைவர் பிரியங்க் கானூங்கோ தெரிவித்துள்ளார்.
இவ்வறிக்கை முழுவதும் அரசியலமைப்புச் சட்டம் வார்த்தையளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினர்களின் உரிமைகளையும், சிறுபான்மையின குழந்தைகளின் கல்வி உரிமைகளையும்கூட விட்டுவைக்க விரும்பாமல் தொடர்ச்சியான தாக்குதல் தொடுத்து வருகிறது. சிறுபான்மையினருக்கு ஆதரவான தொடர்ச்சியான அரசியலமைப்புச் சீர்திருத்தங்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் கொடுக்கப்பட்ட பிறகும்கூட இவ்வமைப்பு மேலும் மேலும் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள்தான் சிறுபான்மை சமூக குழந்தைகளின் கல்வி உரிமைக்கு தடையாக உள்ளதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்த தொடர்ச்சியாக அதன் செயல்பாடு உள்ளது.
அதே NCPCR அறிக்கையில் U-DISE, சச்சார் கமிட்டி மற்றும் தேசிய கணக்கெடுப்பு -2011 போன்றவற்றை சுட்டிக்காட்டி குழந்தைகளின் கல்வி குறித்த தரவுகளை கொடுத்துள்ளனர்.
2021-22 U-DISE தரவின் அடிப்படையில்:
2021-22ஆம் ஆண்டில் மொத்த மாணவர்களின் சேர்க்கை (தரம் I-VIII) |
18.86 கோடி |
முஸ்லிம் குழந்தைகளின் சேர்க்கையின் சதவிகிதம் |
15.20% |
முஸ்லிம் குழந்தைகளின் சேர்க்கை (எண்ணிக்கையில்) |
2.86 கோடி |
6-13 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை |
4.11 கோடி |
பள்ளிக்கு செல்லாத முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை |
1.2 கோடி |
சச்சர் குழு அறிக்கையின் அடிப்படையில்:
மதரசாவில் செல்லும் முஸ்லிம் குழந்தைகள் - 4% |
16.44 லட்சம் |
மற்ற கல்வி நிறுவனங்களில் உள்ள அல்லது பள்ளிக்கு செல்லாத முஸ்லிம் குழந்தைகள் |
3.94 கோடி |
UDISED அடிப்படையில் சேர்க்கை |
2.86 கோடி |
சேர்க்கை செய்யப்படாத குழந்தைகள் |
1.1 கோடி |
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census 2011) அடிப்படையில்:
6-13 வயதுடைய பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை (இந்தியா) |
3.81 கோடி |
6-13 வயதுடைய குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை (இந்தியா) |
20.83 கோடி |
பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் சதவிகிதம் |
18.20% |
6-13 வயதுடைய முஸ்லிம் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை (மதிப்பீடு) |
4.11 கோடி |
பள்ளிக்கு செல்லாத முஸ்லிம் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை |
75 லட்சம் |
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் கல்வி கிடைக்காத 6-13 வயது வரையுள்ள மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை 3.81 கோடி என்றும், அதில் இசுலாமிய குழந்தை 75 இலட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் UDISED தரவுகள் அடிப்படையில் பார்த்தால் கல்வி கிடைக்காத 6-13 வயது வரையுள்ள மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 கோடி என்றும், அதில் இஸ்லாமிய குழந்தைகள் 1.1 கோடி என்றும் கணக்கிடப்படுகிறது. அப்படிபார்த்தால் கல்வி கிடைக்காத கிட்டதட்ட 6 கோடி குழந்தைகளின் கட்டாய கல்வி உரிமையைப் பற்றியோ அல்லது 1.1 கோடி இசுலாமிய குழந்தைகளைப் பற்றியோ அலட்டிக்கொள்ளாத இந்த அமைப்பு மதரசாவில் படிக்கும் 16 இலட்சம் குழந்தைகளின் உரிமைகளுக்காக தனது வாளை சுழற்றுவது அதன் உள்நோக்கத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
அதே அறிக்கையில் குழந்தைகள் உரிமைச் சட்டம் - 2009ல் பிரிவு 15(5)ன் படி சிறுபான்மை கல்வி நிறுவனமான மதரசா மட்டுமல்ல, வேத பாடசாலைகளும் மற்ற மத நிறுவனங்கள் நடத்தும் பாடசாலைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்ள்ளது. ஆனால் மற்ற மத கல்வி நிறுவனங்களின் கல்வி தகுதியைப் பற்றிய எந்த வழிகாட்டுதலும் கேள்வியும் எழுப்பாத NCPCR நிறுவனம், தொடர்ந்து மதரசா கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. இங்கு NCPCR, அனைத்து மத அமைப்புகளின் கல்வி நிறுவனங்களின் நடவடிக்கை குறித்தோ அல்லது அனைத்து மதக் கல்வி நிறுவனங்களுக்கு பொது வழிகாட்டுதல் குறித்தோ எந்த கேள்வியும் எழுப்பாமல் வெறும் இசுலாமிய மத அமைப்பு கல்வி நிறுவனங்களைப் பற்றி மட்டும் பேசுவது பாரபட்சமான தனது நடவடிக்கையை அம்பலப்படுத்துகிறது.
2006ல் சமர்பிக்கப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கையின்படி, கல்வி மற்றும் தொழிலாளர்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை பார்க்கும்போது ஒட்டுமொத்த இசுலாமியர்களின் பங்கேற்பு வெறும் 13.43% சதவீதமாக உள்ளது. இதில் 35.7% இசுலாமியர்கள் இந்தியாவின் நகர்ப்புறங்களில் வாழ்கிறார்கள். சச்சார் அறிக்கைப்படி 36.92% இசுலாமியர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். மற்ற சிறுபான்மை சமூகங்களை ஒப்பிடும்போது இசுலாமியர்கள்தான் குறைந்த எழுத்தறிவு உடையவர்களாக உள்ளனர்.
சச்சார் கமிட்டி அறிக்கையின்படி, இசுலாமியர்கள் மிகக் குறைவான அளவில்தான் பள்ளிகளில் சேருகின்றனர். அதே அறிக்கை இசுலாமிய குழந்தைகளின் இடை நிற்றலும் கூடுதலாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது. 6-14 வயதுக்குட்பட்ட இசுலாமிய குழந்தைகளில் 25% குழந்தைகள் பள்ளிக்கே செல்லாதவர்களாகவும் அல்லது படிப்பை இடை நிறுத்தியவர்களாகவும் இருப்பதாக சச்சார் கமிட்டி அறிக்கை கூறுகிறது. இளநிலை கல்லூரிகளில் 25 இளங்கலை மாணவர்களில் ஒரு மாணவர் என்ற வீதத்திலும் முதுகலை மாணவர்களில் 50ல் ஒருவர் என்ற வீதத்திலும் இசுலாமிய மாணவர்கள் இருப்பதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உயர்கல்விக்கான அகில இந்திய கணக்கெடுப்பின்படி, மொத்த மாணவர்களில் வெறும் 4.67% தான் இசுலாமிய மாணவர்கள் உள்ளதாக குறிப்பிடுகிறது.
சச்சார் கமிட்டி அறிக்கையின்படி இசுலாமியர்கள் எவ்வளவு தூரம் கல்வியிலும், தொழில்களிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்கூடு. ஒரு நாடு முன்னேற அனைத்து பிரிவு மக்களையும் ஒன்று சேர்த்து முன்னேற்ற வேண்டும் என்பதுதான் சமூக நீதி. இது மொழி மற்றும் மத சிறுபான்மை சமூகத்துக்கு கொடுக்கும் சலுகையல்ல. அப்போதுதான் சிறுபான்மை சமூகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தின் உற்பத்தி சக்திகள் இழப்பின்றி வேகமாக முன்னேற முடியும். நாட்டின் முன்னேற்றத்திற்கு சமூக நீதியும் ஜனநாயகமும் அவசியமான நடைமுறைகள். ஆனால் நிதி மூலதன ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் வணிகமய, தனியார்மய கோட்பாட்டை தூக்கிப்பிடிக்கும் இந்துத்துவ பாசிச பாஜக ஆட்சியானாலும் சரி அதற்கு முன்னர் ஆண்ட பாசிச தேசிய வெறி கொண்ட காங்கிரசு ஆட்சியானாலும் சரி, சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றி கிஞ்சித்தும் அக்கறையில்லை. இந்த இரு கும்பலும் நிதி ஆதிக்க கும்பலின் மிகப்பிற்போக்கான பகுதியை பிரதி நிதித்துவ படுத்துகின்றனர். இந்த பிற்போக்கு கும்பலின் தத்துவத்திற்கு எதிரானது ஜனநாயகமும் சமூக நீதியும். ஆகப் பிற்போக்கான இந்துத்துவ கல்வி அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி, கல்வி என்பதை வரலாறு நெடுகிலும் எதிர்த்தும் மறுத்தும் செயல்பட்டுள்ளது. மாற்று மதத்தினர் மட்டுமல்ல, இந்து மக்களின் பெரும்பான்மையினரை கல்வியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் விலக்குவதை சமூக விதியாக கடைபிடிக்கும் இந்துத்துவ கும்பலிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். நாம் பேசும் இந்த உரிமைகள் அனைத்தும் சந்தைமயமாக்கலுக்கும், தனியார்மய – தாராளமய கோட்பாட்டுக்கும் நிதி மூலதன ஆதிக்கத்திற்கும் எதிரானது. நிதி மூலதன ஆதிக்கம் சந்தையிலேயே ஜனநாயகத்தை அனுமதிக்காதபோது, சமூகத்தில் ஜனநாயக கோட்பாடுகளையும் நடைமுறையையும் அனுமதிக்குமா? பாசிச பாஜக கும்பல், இந்த நிதி மூலதன ஆதிக்கத்திற்கு சேவைச்செய்யும் ஆகப்பிற்போக்கான இந்துத்துவ மதவெறி பிரிவு என்பதை மதரசா தடையும் சிறுபான்மையினரின் கல்வி மறுப்பும் காண்பிக்கிறது
மதரசா எனும் கல்விகூடங்கள்:
மதரசா என்பது அரபு மொழியில் குறிப்பாக இஸ்லாமிய போதனைகளுக்கு தொடர்புடைய கல்வி நிறுவனத்தைக் குறிக்கிறது.
2018-19ம் ஆண்டின் கணக்குப்படி இந்தியாவில் மொத்தம் 24010 மதரசாக்கள் உள்ளன. அதில் 19132 அங்கீகரிக்கப்பட்டவை. 4878 அங்கீகரிக்கப்படாதவை.
நாடு முழுக்க முக்கியமாக இரு மதரசா வாரியங்கள் செயல்படுகின்றன. மதரசா தர்சே நிஜாமி, மதரசா தர்சே அலியா. அங்கீகரிக்கப்பட்ட மதரசாக்கள், மாநில மற்றும் ஒன்றிய அரசின் கல்வி வாரியத்துடன் இணைந்து செயல்படுகின்றன. மதரசா தர்சே அலியா என்பது உத்தரப்பிரதேச மதரசா கல்வி வாரியம் போன்ற மாநில மதரசா கல்வி வாரியங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் தங்கள் சொந்த மதரசா கல்வி வாரியங்களை நிறுவியுள்ளன, அவை அந்தந்த மாநில அரசாங்கங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
மதரசா தர்சே நிஜாமி என்பது மதத் தொண்டு நிறுவனங்களாகச் செயல்படுகின்றன, மேலும் மாநிலப் பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை. தாருல் உலூம் நத்வத்துல் உலமா (லக்னோ) மற்றும் தாருல் உலூம் தியோபந்த் போன்ற முக்கிய இசுலாமிய மதப் பிரசங்கம் செய்கின்ற அமைப்புகளால் அமைக்கப்பட்ட பாடத்திட்டங்களைப் பின்பற்றுகின்றன.
தொண்டு நிறுவன அடிப்படையில் இயங்கும் மதரசா தர்சே நிஜாமியில் அரபு, உருது மற்றும் பாரசீக போன்ற பயிற்று மொழிகளும் உள்ளன. அதே சமயம் மதரசா தர்சே அலியாவில் மாநில பாடநூல் நிறுவனங்களால் வெளியிடப்பட்ட அல்லது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் (NCERT) பரிந்துரைக்கப்படும் பாடப்புத்தகங்களையும் பாடத்திட்டங்களையும் பயன்படுத்துகிறது.
இந்த வாரியங்களின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மதரசாக்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்கள்.
உத்திரபிரதேசத்தில்தான் நாட்டிலேயே அதிக எண்ணிக்கை கொண்ட மதரசாக்கள் உள்ளன. அங்கு 11,621 அங்கீகரிக்கப்பட்ட மதரசாக்களும் 2907 அங்கீகரிக்கப்படாத மதரசாக்களும் உள்ளன. இது இந்தியா மொத்தமுள்ள மதரசாக்களில் 60% ஆகும். இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் இருக்கிறது. அங்கு 2464 அங்கிகரிக்கப்பட்டதும் 29 அங்கீகரிக்கப்படாததும் ஆகும்.
2023ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மதரசா கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் சுமார் 1.69 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இந்த எண்ணிக்கை உத்திரப்பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு சமமானது.
அங்கீகரிக்கப்பட்ட மதரசாக்களில் தனக்கான கல்வி அலகுகளை வைத்திருத்தாலும் வழக்கமான மற்ற பள்ளிகளின் மற்றும் உயர்கல்வியின் கட்டமைப்பையே பிரதிபலிக்கிறது. மதரசாக்களில் கல்வி அலகுகளின் பெயர்களாக மௌலவி (10 ஆம் வகுப்புக்கு சமமானது), ஆலிம் (12 ஆம் வகுப்புக்கு சமமானது), கமில் (இளங்கலைப் பட்டத்திற்கு சமமானது) மற்றும் ஃபாசில் (முதுகலை பட்டத்திற்கு சமமானதாகும்) உள்ளது.
இப்படி இசுலாமிய மத நிறுவனங்கள் நிர்வகிக்கும் பள்ளிகளில் பெரும்பாலான மதரசாக்கள் பொதுப்பாடத்தையே பின்பற்றுகின்றன. அதாவது ஒன்றிய கல்வி வாரிய பாடத்திட்டத்தையோ அல்லது மாநில கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தையோதான் பின்பற்றுகின்றன. இந்த மதரசாக்கள் மதபோதனையுடன் அறிவியல், கணிதம் போன்ற பாடங்களுடன்தான் பயிற்றுவிக்கப்படுகின்றனர். அதேபோல் மதரசாக்களில் மற்ற மத மாணவர்களும் பெருவாரியாக பயில்கின்றனர். இம்மத நிறுவனங்கள் நடத்தும் மதரசா பள்ளிகளில் பெரும்பாலான ஏழை மாணவர்களுக்கு கட்டணமின்றி உணவு மற்றும் தங்கும் வசதிகள் அளிக்கப்படுவதாக NCPCR அறிக்கையே சுட்டிக்காட்டுகிறது. ஆனால் மதரசா கல்வி நிறுவனங்களின் கல்வி மற்றும் குழந்தைகள் உரிமைகளின் தரத்தையும் நடைமுறையையும் NCPCR குறைக்கூறியுள்ளது. அரசு கல்வி நிறுவனங்களை நிராகரித்து இசுலாமிய மாணவர்கள் மதரசாக்களுக்கு சென்று கல்வி கற்பது ஏன் என்ற காரணத்தை மூடிமறைத்துள்ளது. அரசு பள்ளிகளின் நிலை அதைவிட கவலைக்கிடமான நிலையில் உள்ளதையே இது காண்பிக்கிறது. கட்டணமில்லா உணவு மற்றும் தங்கும் விடுதிகளுடன் பெரும்பாலான மாணவர்கள் படிக்கின்றனர் என்றால் அதை அரசு ஏன் சாத்தியப்படுத்தவில்லை. அம்மாணவர்கள் மதரசாக்களிலிருந்து பிய்த்தெடுத்து மற்ற பள்ளிகளில் சேர்க்கும்படி ஆணையிட்டுள்ள NCPCR, அவர்களின் உணவு மற்றும் தங்குமிடத்துக்கு உத்திரவாதப்படுத்த என்ன ஏற்பாடு செய்துள்ளது? ஒன்றுமில்லை. அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்ற ஒற்றை வெற்றுச் சொல்லாடல் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தப்பட்டு இரண்டு தசாப்தங்கள் கடந்தும், 6 கோடி மாணவர்கள் கல்வியறிவு கிடைக்காமல் உள்ளனர் என்று அதன் அறிக்கையே வெளிப்படுத்துகிறது. அதில் 1.2 கோடி இசுலாமிய மாணவர்கள். அரசு பள்ளிகள் கட்டமைப்பிலும், தரத்திலும் உரிமைகளிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தால், ஏன் சிறுபான்மை குழந்தைகள் மதரசாக்களை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது? கல்வியை சீர்படுத்த, குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் வென்றெடுக்க, அனைவருக்குமான கல்வியை உத்திரவாதப்படுத்த தனியார்மயத்தை ஒழித்து அரசு பள்ளிகளையும், கல்வி திட்டங்களுக்கான நிதியையும் அதிகரிக்க வேண்டும். அதைவிடுத்து தரத்தையும் உரிமையையும் காரணம் காட்டி மதரசாக்களை மூடுவது நிதிமூலதன ஆதிக்கத்திற்கான சேவைதான்.
சிறுபான்மையினரின் கல்வி உரிமைகளில் தொடர் தாக்குதல்:
சிறுபான்மையினரிலேயே அதிகபடியாக இந்திய பாசிச சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இசுலாமியர்களே. பல்வேறு வழிகளில் இந்திய பாசிச அரசும் அதன் நிர்வாகமும், பாசிச கட்சிகளின் பல்வேறு குழுக்களும் இசுலாமியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் தொடுத்து வருகின்றனர். இத்தாக்குதல் பல்வேறு தளத்தில், பல்வேறு அளவுகளில் நடத்தப்படுவதை நாம் தொடர்ந்து சமரனில் அம்பலப்படுத்தி வருகிறோம். குடியுரிமைச் சட்டத்தின் மூலம் இரண்டாம் தர குடிமக்களாக்குவது, பசுபாதுகாப்பு என்ற பெயரில் மாட்டைவிட மனிதனின் உயிரை துச்சமாக பறிப்பது, ஹிஜாப் பிரச்சனை, வக்பு வாரியச் சட்டம், வழிபாட்டு தளங்கள் மீதான தாக்குதல், இசுலாமியர்களின் குடியிருப்புகளின் மீதான புல்டோசர் பண்பாடு என்று இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவைகளைத் தொடர்ந்து இப்போது இசுலாமியர்களின் கல்வி உரிமைகளிலும் மத உரிமைகளிலும் குறி வைக்கப்படுகிறது.
இசுலாமிய மாணவர்களின் கல்வியுரிமையின் மீதான சமீபத்திய தாக்குதல்கள்:
டிசம்பர் 2021ல், கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பி.யு.சி கல்லூரியில் பயிலும் 8 மாணவிகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென ஹிஜாப் அணிவதை காரணம் காட்டி வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியேற்றியது கல்லூரி நிர்வாகம். பஜ்ரங் தளம், இந்து ஜாக்ரனா வேதிகே (HJV) மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற சங்பரிவார கும்பல்களின் வலைப்பின்னல், ஆர்.எஸ்.எஸ்.ன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) ஆகியவற்றுடன் சேர்ந்து கர்நாடக மாநிலம் முழுவதும் அனைத்து கல்வி வளாகங்களிலும் இசுலாமிய மாணவிகளுக்கு எதிரான வன்முறைகள் கட்டியமைக்கப்பட்டன; கர்நாடக இந்துத்துவ பசவராஜ் பொம்மை அரசு பிப்ரவரி 2022ல் ஹிஜாப்புக்கு தடை விதித்தது. அதை தொடர்ந்து, ஹிஜாப் தடை அரசாணையை வரவேற்று கர்நாடக உயர் நீதிமன்றம் பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதை பயன்படுத்தி உ.பி., பீகார் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் இத்தாக்குதல் தொடர்ந்தது. பல்லாயிரக்கணக்கான இசுலாமிய மாணவிகள் கல்வி நிலையங்களிலிருந்து விரட்டியடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.. இதை தொடர்ந்து இவ்வழக்கு உச்ச நீதிமன்ற இருவர் அமர்வுக்கு சென்றது. அக்டோபர் 13, 2022 அன்று இரு நீதிபதிபகளில் ஒருவர் ஹிஜாப் தடையை ஆதரித்தும், ஒருவர் எதிர்த்தும் முரண்பட்ட தீர்ப்பை கொடுத்தனர். பின்னர் இது மேல் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டு இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள படாமல் உள்ளது.
இதற்கிடையில் மகராஷ்ட்ராவில் மும்பையைச் சேர்ந்த செம்பூர் டிராம்பே கல்லூரியில் மே மாதம் 2024 மாணவிகள் ஹிஜாப் அணிய தடைவிதித்தது. இசுலாமிய மாணவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தை அனுகினர். ஆனால் மும்பை உயர் நீதிமன்றமும் ஜூன் 2024ல் கல்லூரி நிர்வாகத்தின் நடைமுறையை ஏற்று இசுலாமிய பெண்களின் உரிமையை மறுத்துள்ளது. பின்னர் இந்த பிரச்சனை ஆகஸ்ட் 2024ல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஜஸ்டிஸ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய இரு நீதிபதி அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. கல்லூரி வளாகத்திற்குள் ஹிஜாப், நிகாப், பர்தா, தொப்பிகள் போன்ற உடைகளை அணிவதற்கு தடை விதித்த கல்லூரியின் சுற்றறிக்கைக்கு உச்ச நீதிமன்றம் நவம்பர் 2024 வரை நிறுத்தி வைத்துள்ளது. விசாரனையின் போது நீதிபதிகள் கல்வி நிர்வாகத்தை பார்த்து “ஒரே சீருடையை அமுல்படுத்த இந்த அறிக்கை அனுப்பியதாக கூறிய நீங்கள், மற்ற மதத்தினரின் அடையாளங்களை பற்றி ஒன்றும் குறிப்பிடாதது ஏன் என்றும்? திலகமிடுவது, பொட்டு வைப்பது போன்றவற்றை தடை செய்யாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். மாணவிகளுக்கு தங்கள் விருப்பம்போல் உடை அணிய கட்டாயம் சுதந்திரம் வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். வழக்கம்போல் விசாரணையின்போது கேள்விகளையும் கருத்துக்களையும் வைத்து தங்களை ஜனநாயகவாதிகளாகவும் முற்போக்காளர்களாகவும் காண்பித்துகொண்டு, பின்னர் அவற்றிற்கு எவ்வித சம்பந்தமும் இல்லாமல் முரண்பட்ட தீர்ப்புகள் கொடுப்பது வழக்கமாகிவிட்டது. அப்படித்தான் இத்தீர்ப்பிலும், வகுப்பறைக்குள் பெண்கள் பர்தா அணிவதை அனுமதிக்க முடியாது என்றும், வளாகத்திற்குள் மத நிகழ்வுகளை அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதில், இசுலாமிய மத அடையாளங்களும் வழமைகளும் மட்டும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. ஆனால் இந்து மத அடையாளங்களும் நடைமுறைகளும் அரசு நிர்வாகங்களும், கல்லூரி நிர்வாகங்களும், நீதி மன்றங்களும் இதுவரை கேள்விகுள்ளாக்கி நடைமுறைபடுத்தவில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே சட்டம் என பேசிகொண்டிருக்கும் பாசிச பாஜக கும்பல் கல்வி நிறுவனங்களில் இந்துத்துவ அடையாளங்களை அதிகமாக ஊக்கப்படுத்திக் கொண்டே இசுலாமியர்களின் அடையாளங்களை அழிக்க முயல்கின்றனர். இது இசுலாமிய சமூக மாணவர்களிடையை பதற்றத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிறது. சிறுபான்மை மாணவர்களிடையே பாதுகாப்பான சூழலை மறுக்கிறது. இதனால் கல்வி நிற்றல் தொடர்ந்து அதிகரித்து வருவதை நம்மால் காணமுடிகிறது.
அசாம் அரசு மதரசாக்களை கையகப்படுத்தல்:
அசாமில் அரசு நிதியுதவியுடன் இயங்கும் மதரசாக்களை நடத்துவதற்கு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் மாநில அரசுக்கு நிதிச்செலவு ஏற்படுவதாக அசாம் பாஜக மாநில அரசு கூறுகிறது. நிதி பற்றாக்குறை காரணமாக இசுலாமிய கல்வி நிறுவனங்களுக்கு செலவு செய்ய பாஜக மாநில அரசு தயாரில்லை என்று கூறி அசாமிலுள்ள 1,281 மதரசாக்களையும் ‘இடை நிலை ஆங்கில’ பள்ளிகளாக மாற்றி அரசு கையகப்படுத்தியுள்ளது. அசாமின் பாஜக அரசு புதிய சட்டம் “அசாம் ரத்துச் சட்டம்–2020”ஐ இயற்றி இதற்குமுன் மதரசா கல்வி நிறுவனங்களை ஒழுங்கமைக்க கொண்டுவந்த “மதரசா கல்விச் சார்ந்த சட்டம் – 1995”ஐ நீக்கியது. இந்த நீக்கத்தை எதிர்த்து 13 மனுதாரர்கள் கௌஹாதி உயர் நீதிமன்றத்தை அனுகினர். அசாம் ரத்துச் சட்டம் – 2020, அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியாகும் என்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதன்ஷு துலியா மற்றும் நீதிபதி சௌமித்ரா சைகியா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், 13 ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்ததது. “இதன் விளைவாக, இந்த மதராசாக்கள் - சிறுபான்மை நிறுவனங்கள் என்ற மனுதாரர்களின் கூற்றுக்கு, சிறுபான்மையினரால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்படுவதற்கு எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லை; எனவே இதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ஏப்ரல் 2024ல் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) தலைவர் பத்ருதீன் அஜ்மல் உச்ச நீதிமன்றம் செல்வதாக குறிப்பிட்டுள்ளார். 2022ம் வருடம் 3 மதரசாக்களை புல்டோசரை கொண்டு இடித்து தள்ளியது பாசிச பாஜக மாநில அரசு. இதை எதிர்த்து போராடிய 40 ஆசிரியர்களை அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று கூறி கைது செய்தது.
இதன் மூலம் அரசின் நிதியுதவி மூலம் இயங்கும் அனைத்து மதரசா கல்வி நிறுவனங்களையும் கையகப்படுத்தி அரசு பள்ளிகளாக மாற்றியுள்ளது. அசாமில் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது அரசு மதக்கல்விக்கு நிதி கொடுக்க முடியாது என்று எக்ஸ் தளத்தில் பதிவிடுகிறார். கடந்த கர்நாடக மாநில தேர்தலின்போது, தனது நிர்வாகம் 600க்கும் மேற்பட்ட மதரசாக்களை மூடியுள்ளதாகவும் மேலும் அனைத்து மதரசாக்களையும் மூடவுள்ளதாகவும் தனது மதவெறி பிரச்சாரத்தை மற்ற மாநில பிரச்சாரங்களிலும் பேசியுள்ளார்.
“சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களை அரசு தொடக்கூடாது என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், தனியார் மதரசாக்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்படுவதாக பாஜக கும்பல் கவலை கொள்கிறது. அவை RTE சட்டத்தின் கீழ் கூட கண்காணிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது. இதனால் நிதி பற்றாக்குறை என்று கூறி குறைந்தபட்சம் 1000 தனியார் மதரசாக்களை மூடியுள்ளதாகவும், மிச்சமுள்ள மூவாயிரம் மதரசாக்களிலிருந்து இரண்டாயிரமாக குறைக்க அசாம் காவல்துறையும் கல்வித் துறையும் இணைந்து தனியார் மத்ரஸா அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜனவரி 2024ல் தெரிவித்துள்ளார். இதில் அசாம் காவல் துறைக்கு என்ன வேலை? அவர்களை அச்சுறுத்தி அடக்குமுறையை ஏவி பணியவைக்க முயற்சிப்பதை மாநில முதல்வரின் பேச்சுகளே காட்டுகின்றன.
இதற்கிடையில், மே 2024ல் அசாமின் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பவன் சௌத்ரி, அசாமின் கல்வி அமைச்சரும், மாநில முதல்வரும் இணைந்துகொண்டு பொதுக் கல்வி துறையை அழிவின் விளிம்புக்கு கொண்டு சென்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இப்படி பேசியது மதரசா கல்வி நிறுவனங்கள் குறித்து அல்ல. அங்கு ஏற்கெனவே இயங்கிவந்த அரசு பள்ளிகளை, வழக்கம்போல போதுமான கட்டுமான வசதிகள் இல்லை என்றும் குறைந்தபட்ச மாணவர்கள் இல்லை என்றும் கூறி, 8066 அரசு பள்ளிகளை மூடியுள்ளதாக கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளார். மேலும் இந்த நடவடிக்கை தனியார்மயமாக்கலை நோக்கிய நகர்வு என்று கடுமையாக சாடியுள்ளார்.
மதரசா பள்ளிகள் அரசு பள்ளிகளாக மாற்றியது எவ்வகையிலும் சாதாரண மக்களுக்கு பயன்படாது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால், அரசு பள்ளிகளை படிப்படியாக வணிகமய நோக்குடன் தேசிய கல்வி கொள்கை 2020ன் படி தனியார்மயத்தை நோக்கி செலுத்துகிறது என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. அசாம் மாநில அரசு நிதி பற்றாக்குறை என்று கூறி மானியத்தை வெட்டுகிறது, இன்னொரு புறம் 8000 அரசு பள்ளிகளை மூடுகிறது, இன்னொரு பக்கம் மதரசா பள்ளிகளை அரசு பள்ளிகளாக மாற்றுகிறது. ஏன் இத்தனை அவதாரங்கள்? ஏனென்றால் கல்வியை வணிகமயம் –கார்ப்பரேட் மயமாக்குவது என்ற கொள்கையின் அடிப்படையில் இருந்து மதரசா பள்ளிகளை கைபற்றி வருகிறது. அரசு பள்ளிகளை தனியார்மயமாக்குவதும், மதரசா பள்ளிகளை அரசு பள்ளிகளாக்குவதும் தனியார்மயமாக்கலுக்கு தகுதியில்லாத பள்ளிகளை மூடுவிழா நடத்துவதும் என்ற இந்த அவதாரங்களின் பின்னால் உள்ள சூட்சமத்தை புரிந்துகொள்ளலாம்.
உத்திரபிரதேச மதரசாக்கள் மீதான தாக்குதல்:
அக்டோபர் 23, 2019 அன்று, முகமது ஜாவித் என்பவர் மனு ஒன்றை உத்திரபிரதேச உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். ஜாவேத், 2011 ஆம் ஆண்டு, மதரசா நிசாருல் உலூம் ஷாஜத்பூர் என்ற மதரசா ஆரம்ப கல்வி பிரிவில் மாதம் ரூ.4000 சம்பளத்தில் பகுதி நேர உதவி ஆசிரியராக நியமிக்கப்படுகிறார். மாநில அரசு, மதரசா சிக்ஷா பரிஷத் மற்றும் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர் ஆகியோரால் மதரசாக்களில் ஆசிரியர்கள் நியமனம் நடத்தப்படுகிறது என்றும் தனது பணியை முறைப்படுத்த வேண்டும் என்றும் ஜாவேத் தனது மனுவில் கேட்டுக் கொண்டார். மேலும், அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பின்வரும் இரண்டு கேள்விகளை முன்வைத்தார்: “இந்தியாவில் மதசார்பற்ற அரசியலமைப்புடன் இயங்கும் அரசு, மதரசா கல்வி நோக்கங்களுக்காக ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவோ அல்லது பரிந்துரைக்கவோ முடியுமா அல்லது எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை பரிந்துரைக்க முடியுமா?". இந்த இரு கேள்விகளை முன்வைத்து அந்த நீதிபதி, இரண்டு நீதிபதி அமர்வுக்கு இந்த வழக்கை சிபாரிசு செய்கிறார்.
2004ல், ‘உபி மதரசா கல்வி வாரியச் சட்டம் - 2004' என்ற சட்டத்தை அப்போது ஆண்ட காங்கிரசு தலைமையிலான மாநில அரசு மதரசா பள்ளிகளை நிர்வகிக்கும் நடைமுறையை ஒழுங்குபடுத்த இச்சட்டத்தை கொண்டுவந்தது. தற்போது பாஜக தலைமையிலான மாநில அரசு வந்தவுடன் அன்ஷுமன் சிங் ரத்தோர் என்ற சங்கி வழக்கறிஞர், உத்திரபிரதேச மதரசா சட்டத்தின் செல்லுபடியை எதிர்த்து ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாக அமைந்த மதச்சார்பின்மை கொள்கையை மீறுகிறது. அத்துடன் சட்டப்பிரிவு 14, 15 மற்றும் 21-A போன்ற பிரிவுகளை மீறுவதாக கூறி மனுவை தாக்கல் செய்கிறார்.
பிறகு மார்ச் 22, 2024 அன்று உத்தரப் பிரதேச அலகாபாத் உயர்நீதிமன்றம், இரண்டு நீதிபதி அமர்வு “மதராசா கல்வி வாரியச் சட்டம் 2004”ஐ ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பிலும் NCPCRல் கூறப்பட்ட அதே காரணம் சுட்டிக்காட்டப்பட்டது. 2004ம் ஆண்டு சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகவும், மதச்சார்பின்மைக்கு எதிரானதாகவும் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல, சிறுபான்மை கல்வி நிறுவனங்களிலிருந்து விலக்கி வேறு கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் ஆணையிட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அஞ்சும் கடாரி, மேலாளர்கள் சங்கம் மதரிஸ் அரேபியா (உபி), அகில இந்திய ஆசிரியர் சங்கம் மதரிஸ் அரேபியா (புது டெல்லி), மேலாளர் சங்கம் அர்பி மதர்சா நை பஜார் மற்றும் ஆசிரியர் சங்கம் மதரிஸ் அரேபியா கான்பூர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீடு செய்தனர்.
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு இவ்வழக்கு வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு அறிந்தனர்.
இந்த வழக்கை விசாரிக்கும்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்தியாவை, மதங்கள், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் தொட்டில் என்றும் அந்த பன்முகத்தன்மையை காக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி வலியுறுத்தினர்.
“இறுதியில் நாம் இதை நாடு முழுவதுமாக பார்க்க வேண்டும். மத போதனைகள் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் இல்லை. இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் போன்றவர்களுக்கும் இருக்கிறது. நாடு கலாச்சாரங்கள், நாகரிகங்கள் ஆகியவற்றின் தொட்டிலாக இருக்க வேண்டும். நாம் அதை பாதுகாக்க வேண்டும். மதங்களையும் பன்முகத்தன்மையையும் அப்படியே பாதுகாப்போம். தனிமைபடுத்துதல் (ghettoization) என்பதற்கான பதில் என்பது, அந்த மக்களை மைய பாதைக்கு கொண்டுவருவதும் மற்றும் சிறுபான்மையினர்களை பெரும்பான்மையினருடன் இணக்கமாக ஒன்றுசேர்ந்து வருவதற்கு உகந்த சூழலையும் நம்பிக்கையையும் கட்டியமைப்பதாக இருக்க வேண்டும். இல்லையெனில் நாம் முக்கியமாக செய்யவேண்டியதாவது, அவர்களை செறிவாக வைத்துக்கொள்வதுதான்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தனது கருத்தை பதியவைத்தார்.
"மதக் கருத்தை போதிப்பது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது அன்று" என்று நீதிபதி பார்திவாலா குறிப்பிட்டார்.
இது போன்ற மத அறிவுரைகள் இசுலாமிய சமூகத்திற்கு மட்டும் உரியவை அல்ல; மற்ற மதங்களுக்கும் அவ்வாறே உள்ளன என்று அமர்வு குறிப்பிட்டது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதரசாவில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி விரிவானது அல்ல, எனவே இந்த நடைமுறை கல்வி உரிமைச் சட்டம் - 2009ன் விதிகளுக்கு எதிரானதாக இருக்கிறது என்ற வாதத்தை வைத்தார். இந்த அடிப்படைத் தேவைகளை வழங்கத் தவறியதன் மூலம் தரமான கல்விக்கான குழந்தைகளின் அடிப்படை உரிமையை மதரசா மீறுகிறது என்று NCPCRன் வழக்கறிஞர் குறிப்பிடுகிறார், குழந்தைகளுக்கு பொருத்தமான கல்வி மட்டுமல்ல, ஆரோக்கியமான சூழ்நிலையும், வளர்ச்சிக்கான மேம்பட்ட வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன என்ற வாதத்தையும் வைத்தார்.
‘உபி மதரசா கல்வி வாரியச் சட்டம் - 2004' என்ற உ.பி மாநில சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது; மதச்சார்பின்மை மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று வழங்கிய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதரசா மாணவர்கள் தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதில் கவலை இருந்தால், அதற்காக மதரசா சட்டத்தை ரத்து செய்வதால் சாத்தியப்படுத்த முடியாது; பதிலாக மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க தகுந்த வழிகாட்டுதல்களை வழங்குவதாக அமைய வேண்டும்" என்று குறிப்பிட்ட அத்தீர்ப்பை இரத்து செய்தார். அதுமட்டுமல்லாமல் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு அரசியல் சட்ட அமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களின் நீதிமன்றங்களும் மற்றும் NCPCR போன்ற ஒன்றிய அரசின் அமைப்புகளும் சிறுபான்மையினரின் மத உரிமை மற்றும் கல்வி கற்கும் உரிமைக்கு எதிராக செயல்பட்டிருப்பதையே இச்செய்திகள் கண்கூடாக காட்டுகிறது.
சிறுபான்மையினர் கல்வியில் வெட்டப்படும் மானியங்கள்:
சிறுபான்மையினர் கல்விக்கு கொடுக்கப்பட்டுவந்த மானியங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகிறது. பல திட்டங்களுக்கு மானிய தொகையை குறைத்தல், சில திட்டங்களை முற்றிலுமாக நிறுத்திவிடுவது என்று தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019 - 2022 க்கு இடையில் பயனடைவோரின் எண்ணிக்கையிலும் கணிசமான வீழ்ச்சி தெரிகிறது. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தபோதிலும், ஒதுக்கிய நிதியை முழுமையாக பயன்படுத்தாமல், பெயரளவில் பயன்படுத்தப்பட்டிருப்பதை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த காலகட்டத்தில், மத சிறுபான்மையினருக்கான ஆறு கல்வித் திட்டங்களுக்கான அரசாங்கச் செலவு சுமார் 12.5% குறைந்துள்ளது, அதே நேரத்தில் பயன்பெற்றோரின் எண்ணிக்கை 7% குறைந்துள்ளது. இந்த நிதியாண்டில், சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அரசு முந்தைய ஆண்டை விட 38.3% குறைத்துள்ளது, 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டின்படி 2022-23 இல் ரூ.5,020.5 கோடியிலிருந்து ரூ.3,097 கோடியாக குறைந்துள்ளது. 2022-23ல் 5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பினும் மதிப்பீடுகள் ரூ. 2,612.66 கோடியைத்தான் செலவு செய்திருப்பதாக அதாவது கிட்டத்தட்ட 48% நிதியை மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதை சமீபத்திய அறிக்கைகள் குறிப்பிடுகிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக மத்திய அரசின் சார்பாக அமல்படுத்தி வந்த சிறுபான்மையினரின் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு கொடுத்து வந்த மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளன அல்லது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.
1. பள்ளி கல்வி உதவித்தொகை திட்டத்தில் (Pre-Matric Scholarship Scheme) வகுப்பு 1 முதல் 10 வரை படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்ததை, இப்போது 1 முதல் 8ம் வகுப்பு வரை குறைக்கப்பட்டு கிட்டதட்ட 1000 கோடி ரூபாய் நிதியை வெட்டியுள்ளது. அதாவது 2022-23ல் 1425 கோடி ரூபாயிலிருந்து 2023-24ல் 433 கோடி ரூபாயாக குறைத்துள்ளது. அதாவது 65% மேல் வெட்டப்பட்டுள்ளது.
2. தகுதி அடிப்படை உதவித்தொகை திட்டத்தில் (Merit-cum-Means based Scholarship Scheme) இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு கொடுத்து வந்த மானியம் 2022-23ல் 365 கோடியிலிருந்து 2023-24ல் வெறும் 44 கோடியாக வெட்டப்பட்டுள்ளது. கிட்டதட்ட 90% குறைக்கப்பட்டுள்ளது.
3. மௌலானா ஆசாத் தேசிய கூட்டுறவு திட்டத்தில் (Maulana Azad National Fellowship) ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு கொடுத்து வந்த ஊக்கத்தொகை, அதாவது 2014-21 வரை 750 கோடி ரூபாய். ஆனால், 2022ல் இந்த திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.
4. பதோ பர்தேஷ் (Padho Pardesh) என்ற திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வெளிநாட்டிற்கு செல்லும் மாணவர்களின் கடனுக்கான வட்டியில் மானியம் கொடுத்து வந்தனர். 2006லிருந்து 2023 வரை 20365 மாணவர்கள் பயன் பெற்றிருந்தனர். இப்போது இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
5. பேகம் ஹசரத் மஹல் தேசிய ஊக்கத்தொகை (Begum Hazrat Mahal National Scholarship) திட்டத்தில் தகுதியுள்ள மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கொடுத்துவந்த ஊக்கத்தொகை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
6. நய சவேரா (Naya Savera) என்ற திட்டத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தகுதி தேர்வுக்கான சிறப்பு பயிற்சிக்காக கொடுத்து வந்த மானியத்தை நிறுத்திவிட்டது. இந்த திட்டத்தில் 2022-23ல் 80 கோடி கடைசியாக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.2 இலட்சம் மாணவர்கள் பயணடைந்து இருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றது.
7. இதே போன்று நை உதான் (Nai Udaan) திட்டத்தில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (SSC) மற்றும் ஸ்டேட் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (SPSCs) போன்ற தகுதி தேர்வுக்கான சிறப்பு பயிற்சிகளுக்காக கொடுத்து வந்த மானியமும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
8. மதரசாக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு கல்வி வழங்குவதற்கான திட்டத்தில் (SPEMM), மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் (NCERT) அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டதினை கொண்ட, மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற மதரசாக்களுக்கு கொடுத்து வந்த மானியம் 2022-23ல் 160 கோடியிலிருந்து 2023-24ல் 10 கோடிய வெட்டி சுருக்கப்பட்டுள்ளது.
9. பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் (PMJVK) சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளை கண்டறிந்து கல்வி மற்றும் திறனை மேம்படுத்த உள்கட்டமைபிற்கான மானியம் வழங்கி வந்தது. 2022-23ல் 1650 கோடியிலிருந்து 2023-24ல் 600 கோடியாக குறைத்துள்ளது.
10. தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்திற்கு கடந்த ஆண்டு ரூ.61 கோடி வழங்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை.
இதில் சில திட்டங்களில், மாணவர்களுக்கான தகுதி தேர்வு பயிற்சிக்கு கொடுத்து வந்த மானியத்தை நிறுத்தியதற்கு “தேசிய கல்வி கொள்கை – 2020” அமலுக்கு வந்துள்ளதே காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதாவது, நாம் முன்னரே கூறியதுபோல தேசிய கல்வி கொள்கை என்பது வணிகமயமாக்கல் நோக்கத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. அதனால் இக்கொள்கையின்படி யாருக்கும் அரசு மானிய அடிப்படையில் பயிற்சி கொடுக்கக் கூடாது என்பதால், அத்திட்டங்களை நிறுத்தியுள்ளதாக மத்திய அரசே தெரிவிக்கிறது. அதாவது காசு இருப்பவனுக்கே கல்வி. காசு இருந்தால் ”கல்விச் சந்தையில்” கல்வியை வாங்கிக்கொள்ளலாம். அதற்கு அரசு மானியம் கொடுப்பதை சர்வதேச நிதியத்தால் பரிந்துரைக்கப்பட்ட ”தேசிய கல்விக் கொள்கை – 2020” எதிர்க்கிறது. இந்த தேசிய கல்விக் கொள்கை, யாருடைய நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்பதற்கு அரசே கொடுக்கும் சாட்சியம். ஏகாதிபத்திய ஏகபோக நிதி மூலதன ஆதிக்கத்திற்கு இந்திய கல்வி சந்தையை திறந்து விடுவதற்கான கொள்கை வரைவு என்பதை மீண்டும் ஒரு முறை அரசே இதன் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறது. தனியார்மயம், வணிகமயம் எப்படி சமூக நீதியையும் ஜனநாயகத்தையும் ஒழித்துக்கட்டுகிறது என்பதை நடைமுறையில் காண்கிறோம்.
சமீபத்திய நடவடிக்கைகளும் இசுலாமியர்களின் கல்வியில் ஏற்படுத்திய தாக்கமும்:
2020-21 ஆம் ஆண்டில் 18-23 வயதுடைய இசுலாமிய மாணவர்கள், உயர்கல்வியில் சேருவது 8.5% க்கும் மேல் குறைந்துள்ளது என்று ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு கல்வி பிளஸ் (UDISE+) மற்றும் அனைத்திந்திய உயர் கல்விக்கான கணக்கெடுப்பு அறிக்கை (AISHE) கூறுகிறது. 2019-20ல் 21 லட்சமாக இருந்த மாணவர் சேர்க்கை 2020-21ல் 19.21 லட்சமாக குறைந்துள்ளது. 2016-17 முதல் 2020-21 வரை, இசுலாமிய மாணவர்களின் சேர்க்கை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்த சூழலில் தற்போதைய அறிக்கைபடி 2020-21ல் இசுலாமிய மாணவர்கள் எண்ணிக்கை 1.8 இலட்சம் வரை குறைந்துள்ளது. இசுலாமிய மாணவர்களின் இடைநிலைக் கல்வியில் இடைநிற்றல் 18.64%ஆக இருக்கும் அதே நேரத்தில் அனைத்து மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 12.6%மாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. அதாவது சராசரியைவிட இசுலாமிய மாணவர்கள் அதிகமாக கல்வியிலிருந்து பிய்தெடுக்கப்படுகிறார்கள். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், 6 ஆம் வகுப்பிலிருந்து இசுலாமிய மாணவர்களின் பிரதிநிதித்துவம் படிப்படியாக குறைந்து, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பிரதிநிதித்துவம் மிகக் குறைந்த அளவில் உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவிலேயே அசாமில் - 29.52%மும் மேற்கு வங்கத்தில் - 23.22%மும் அதிக இடைநிற்றல் விகிதங்களைப் பதிவு செய்துள்ளன. இந்து செய்தி நிறுவனம் வழங்கிய அறிக்கையின்படி, உத்தரபிரதேசத்தில் இசுலாமிய மாணவர்களின் சேர்க்கையில் 36% குறைந்துள்ளது என்று குறிப்பிடுகிறது. அதே நேரத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் 5.1% தான் பதிவாகியுள்ளது. பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த அளவிலேயே இசுலாமிய மாணவர்களின் சேர்க்கை விகிதம் உள்ளது. இந்த மாநிலங்களில் இசுலாமிய குழந்தைகள் பெரும்பாலானோர் இன்னும் பள்ளிகளுக்கே செல்லவில்லை என்பதையே குறிக்கிறது. உத்திரபிரதேச மக்கள் தொகையில் 20%மாக உள்ள இசுலாமியர்கள், மேல் படிப்பு மாணவர்களில் வெறும் 4.3% மட்டுமே பயில்கின்றனர். இப்படி அச்சமூகம் கல்வியில் பின் தங்கியிருக்கும் சூழலில் தொடர்ந்து மானியங்களை வெட்டுவதும் கல்விக்கான உரிமையை மறுப்பதும் கல்வி கற்கும் சூழலை பறிப்பதும் என தொடர்ந்து பாசிச பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தேசிய கல்வி கொள்கையும் இந்துத்துவமயமாக்கலும்:
”தேசிய கல்வி கொள்கை – 2020” என்பது ஒருபக்கம் கல்வியில் வணிகமயம் – தனியார்மயம் மூலம் நிதிமூலதன ஆதிக்கத்திற்கு திறந்து விடுவதும் மற்றொரு பக்கம் கல்வியில் இந்துத்துவமயமாக்கல் மூலம் பிற்போக்கு கருத்துக்களையும் நடைமுறைகளையும் செயல்படுத்துவதுமாகும். அதாவது சமுதாயத்தில் பெரும்பான்மை மக்களை கல்வியிலிருந்து விலக்கி வைத்தல், அரசுக்கான சலுகைப் பெற்ற ஒரு சிறு பிரிவு மட்டும் பயன்பெரும் வகையில் அமைத்தல்; வர்ணாசிரம அடிப்படையில் சாதியப் பிரிவினையையும் ஏற்றத்தாழ்வுகளையும் நியாயப்படுத்தி கட்டி காத்தல்; இக்காலத்திற்கு பொருந்தாத அல்லது பயனளிக்காதா புராதனகால ஆரம்ப அறிவியலையே சாத்வீகமான அல்லது நிரந்தரமான அறிவியலாக போதித்தல்; கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் தேடுவதாக மதவெறியையும், பிரிவினையையும் திணித்தல் என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
பாசிச மோடி கும்பல், கல்வியை “இந்தியமயமாக்கல்” (Indianisation) மற்றும் “மெக்காலே மயத்திலிருந்து விடுபட” (de-Macaulayisation) வேண்டும் என்று முழங்குகிறது. இந்த இரு முழக்கங்கள் அடிப்படையில் கலவியை இந்துத்துவமயமாக்குகிறது. இந்தியமயமாக்கல் என்ற திட்டத்தின் உள்நோக்கம் ”அன்னியர்களின் ஆட்சி” மற்றும் ”அன்னியர் படையெடுப்பு” என்று கூறி அதில் முகலாயர்களின், இசுலாமிய மன்னர்களின் ஆட்சியை அன்னியமாக்குதல் மூலம் இசுலாமியர்களை இம்மண்ணிற்கு அன்னியம்மாக்குவதை உள்நோக்கமாக கொண்டது. மதரசாக்கள் மதக்கல்வியை கேள்விகுள்ளாக்கும் பாசிச மோடி அரசு, ’இந்தியமயமாக்கல்’ என்று முழங்கிக்கொண்டு அனைவருக்குமான பொதுக்கல்வியை இந்துத்துவமயமாக்குகிறது. 2021ல் பள்ளி கல்வி துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், பகவத் கீதை மற்றும் வேதங்களை பள்ளி பாடத்திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். பள்ளிகளில் மட்டுமல்லாமல் தொழிற்கல்வியிலும் கொண்டுவரப் பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) — 2018ஆம் ஆண்டில் இளங்கலை பொறியியல் படிப்பில் 'இந்திய பாரம்பரிய அறிவியல் முறை' (Indian Traditional Knowledge System) என்ற பாடத்தை அறிமுகப்படுத்தியதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார், பி.ஏ. வரலாறு கௌரவ (B.A. History Honours) பட்டப்படிப்பு மாணவர்களுக்கான முதல் பாடத்தில் “இந்தியத்தின் கருத்து” (Idea of Bharat) என தலைப்பிட்டு, அதில் மாணவர்கள் புராதன இந்திய மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சார நிலைமை குறித்து அறிவைப் பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இந்தியத்துவத்தை (பாரதவர்ஷா) புரிந்துகொள்ளுதல்; பாரதம் என்பதன் பொருள் மற்றும் உருவாக்கம்; காலம் மற்றும் விண்வெளி குறித்த இந்தியத்துவ கோட்பாடு; வேதங்கள், வேதாக்கங்கள், உபனிடதங்கள், இதிகாசங்கள், ஸ்மிருதி மற்றும் புராணங்களின் மகத்துவத்தை புரிந்துகொள்ளுவது என்பது இந்தியத்தை இந்துத்துவமயமாக்குவதையே குறிக்கின்றன. அதுமட்டுமல்லாமல், மற்றொரு பாடத்தில் ”பாபரின் ஆக்கிரமிப்பிற்கு முன் இந்தியா” என்று குறிப்பிட்ட அதே புத்தகத்தில் மற்றொரு இடத்தில் கிழக்கு இந்திய கம்பெனியின் ஆட்சியை “பிராந்திய விரிவாக்கம்” (territorial expansion) என விவரிக்கப்படுகிறது. “பாபர் ஆட்சி” ஆக்கிரமிப்பு என்று தனது இசுலாமிய வெறுப்பையும் கிழக்கு இந்திய கம்பெனியின் ஆட்சி “பிராந்திய விரிவாக்கம்” என்று கூறுவதன்மூலம் தனது ஏகாதிபத்திய பாசத்தையும் பாசிச மோடி ஆட்சியின் தேசிய கல்வி கொள்கையின் ஒட்டுமொத்த உள்ளடக்கமும் இந்தியமயமாக்கல் என்ற கோட்பாட்டின் உள்ளடக்கத்தையும் விளக்கத்தையும் மேலே குறிப்பிட்ட இந்த இரு சொல்லாடல்களே உணர்த்துகின்றன.
ஒரு பக்கம் மொழிப்பாடம், சமூக அறிவியல், தத்துவவியல் போன்ற பாடங்களில் காவிமயமாக்கலை தொடர்கின்ற அதே வேளையில், அது தொழில் நுட்ப கல்வியையும் விட்டுவைக்கவில்லை. அதாவது அறிவியலையும் கணிதத்தையும் கூட காவிமயமாக்குகிறது.
இன்றைய கல்வியில் தேவைப்படும் மாற்றத்தை பற்றி தேசிய கல்வி கொள்கை பின்வருமாறு விளக்க முற்படுகிறது: இன்று உலகம் நான்காவது தொழில்நுட்ப காலகட்டத்தில் இருப்பதாகவும், அதனால் உலகம் வேகமான மாற்றத்தை எதிர்கொண்டுவருவதாகவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் திறனற்ற வேலைகள் ஒழிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ள அதே வேலையில் திறன் தொழிலாளர்களின் தேவை அதிகரிக்கிறது என்று குறிப்பிடுகிறது. குறிப்பாக கணிதம், கணினி அறிவியல், தரவியல் (Data Science), இயற்கை, சமூகம் மற்றும் மனித அறிவியல்களில், சுற்றுச்சூழல், நோய் மேலாண்மை போன்று பலதுறைகளில் பல்துறை திறன் கொண்ட தொழிலாளர்கள் (multidisciplinary skilled labour) பெருமளவில் தேவைப்படும் என்று சொல்கிறது. இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் நிலையில், மனித அறிவியல் மற்றும் கலைகளுக்கான தேவை கூடுவதால், அத்தேவைகளை பூர்த்தி செய்ய பல்துறை திறன்கொண்ட தொழிலாளர்களை உருவாக்க புதிய கல்வி கொள்கையின் அவசியத்தை பேசுகிறது.
ஆனால் பல்துறை திறன் மிக்க தொழிலாளர்களையும் அறிவையையும் பெற அது வைக்கும் தீர்வு என்ன தெரியுமா? புராதன இந்தியாவின் பாரம்பரிய அறிவு மற்றும் கல்வியிலிருந்து உத்வேகத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாம்; அதாவது வேதங்கள், புராணங்கள், இதிகாசங்களிலிருந்து பக்தி மற்றும் பல்துறை தத்துவ அறிவை பெறுவதன் மூலமாக நான்காம் தொழில்நுட்ப புரட்சிக்கு ஏற்ற பல்துறை திறன் கொண்ட தொழிலாளர்களை உருவாக்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தேசிய கல்வி கொள்கை பறைசாற்றியுள்ளது. இப்படி மாயைகளையும் புராதன ஆரம்ப அறிவியலையும், இன்றைய நான்காம் தொழில் நுட்ப புரட்சி சகாப்தத்தில் ஈடுகொடுக்க பயிற்றுவிக்கப் போவதாக கூறுவதிலிருந்தே இவர்களின் அறிவியல் வேட்கையின் தீவிரத்தை நாம் புரிந்துகொள்ளலாம். ஏற்கெனவே இருக்கும் பாடத்திட்டம் நடைமுறையில் இருக்கின்ற தொழில்நுட்ப உற்பத்திக்கே சேவை செய்ய இயலவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், அதே குற்றச்சாட்டைப் பயன்படுத்தி இன்னும் மாணவர்களின் அறிவை பின்னுக்கு இழுத்துச் செல்லும் வேலையை இந்த பாசிச மோடி ஆட்சி செய்து வருவதைத்தான் இந்தியமயமாக்கல் என்று கூறிவருகிறது.
2022 ஆம் ஆண்டில் ஹரிதுவாரில், தெற்கு ஆசிய அமைதி மற்றும் சமரசக் கழகத்தை தொடங்கியபோது, இந்திய துணை குடியரசு தலைவர் மு.வெங்கையா நாயுடு கல்வியில் காவிமயமாக்கலை ஆதரித்து பேசும்போது, நாட்டிலுள்ள மக்கள் "காலனிய மனோபாவத்தை" விட்டொழிக்குமாறு கேட்டுக்கொண்டார். "காவியில் என்ன தவறு?" என்று கேட்கிறார். “கல்வியை இந்தியமயமாக்கல் அல்லது பாரதமயமாக்கல் (Indianisation or Bhartiyakaran) என்பது தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) நோக்கமாகும்” என்று பிரகடனப்படுத்துகிறார். ஆனால் "ஆங்கிலத்தை நேசிக்கும் மக்கள்" இதை "பின் நோக்கி செல்லுதல்" என்று தவறாக விளக்குகிறார்கள் என்கிறார். வேதங்களிலும் புராணங்களிலும் பொதிந்துள்ள எங்கள் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தின் சிறப்புகளை புரிந்துகொள்ள நாங்கள் பின் நோக்கி செல்லுகிறோம் என்கிறார். ஆனால் அவர்கள் அதை தடுக்கிறார்கள்; நாம் தாழ்வுமனப்பான்மையில் தவிக்க விரும்புகிறார்கள்; அதனால்தான் நீங்கள் காவிமயக்குகிறீர்கள் என்று கூறுகிறார்கள் என்று புதிய கல்வி திட்டத்தின் இந்துதுவமயமாக்கலை நியாயப்படுத்துகிறார்.
காவிமயமாக்கலுக்கு பின்ஒளிந்துள்ள முக்கியப் பிரச்சனைகள் 1. இந்திய சமூகத்தில் சாதியத்தின் அடிப்படையில் பெரும்பான்மை மக்கள் கல்வியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். அந்த வர்ணாசிரம / சாதியப் பெருமைகளை இந்தியத்துவம் என்று கூறி இந்துத்துவமயமாக்குகிறது; 2. மதரசா கல்வி நிலையத்தில் மதக்கல்வி கொடுப்பதையும் மதப் பிரச்சாரத்தையும் மாணவர்களின் அடிப்படை கல்வி உரிமைக்கு எதிரானதாக சித்தரித்த பாசிச பாஜக ஆட்சி, அனைவருக்குமான பொதுக்கல்வியை இந்துத்துவமயமாக்குகிறது; 3. ஜனநாயகத்தையும் மதசார்பற்ற கருத்துக்களையும் மக்களின் உரிமைகளையும் இந்துத்துவத்திற்கு எதிராக நிறுத்தி, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான இந்துத்துவத்தை, பெரும்பான்மை மக்களுக்கானதாக மூளைசலவை செய்ய எத்தனிக்கிறது; 4. மாணவர்கள் காலத்திற்கேற்ற அறிவியலையும் கணிதத்தையும் பெருவதை தடுத்து, புராதன ஆரம்ப அறிவியலையும் கணிதத்தையும் போதிப்பதே இன்றைய காலத்திற்கேற்றது என்று புனைய முனைகிறது; 5. சிறுபான்மையினர் இரண்டாம் தர குடிமக்களாக்குவதை நியாயப்படுத்துகிறது;
இதனடிப்படையில்தான் இன்று மதராசாக்களை பிரச்சனையாக பார்க்கிறது இந்த காவி கும்பல். இஸ்லாமியர்கள் வந்தேரிகள், ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவதை உயிர்மூச்சாக நினைக்கும் இந்த காவி கும்பல் இசுலாமியர்களின் மதக் கல்வியில், இசுலாமியர்களின் ஆட்சி பற்றிய கருத்துக்களை ஜீரணிக்க முடியுமா? இசுலாமியர்களை இராண்டாம் தர குடிமக்களாக மாற்ற எத்தனிக்கும் இந்த பாசிச காவி கும்பல், சிறுபான்மையினருக்கு ஏட்டளவில் கொடுக்கப்பட்ட சிறு சலுகைகளையும் உரிமைகளையும் விட்டுவைக்குமா? வேத பாட சாலைகள் போன்ற பழைய கல்வி முறையை பொதுக்கல்வி முறையாக கொண்டு வருவதற்கு மதரசாக்கள் தடையாக பார்க்கிறது இம்மோடி காவி கும்பல். 16 இலட்சம் மாணவர்களுக்கு கொடுக்கும் மதக் கல்வியை, குழந்தைகளின் கல்வி உரிமை பறிப்பு என்று கூறும் இக்காவி கும்பல், 20 கோடி குழந்தைகளின் கல்வியில் மதவெறி நஞ்சை ஊற்றுவதைதான் இந்தியத்துவம் என்கிறது. பாசிசம் என்பது நிதி மூலதன ஆதிக்கத்தின் ஆகப் பிற்போக்கு கும்பலின் மிகவும் இனவெறி கொண்ட அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும். இந்த ஆகப் பிற்போக்கான கும்பலின் அப்பட்டமான மதவெறியின் வெளிப்பாடே மதரசாக்கள் மீதான தாக்குதல் ஆகும். அதன் சாரமே கல்வியில் “தேசியக் கல்விக் கொள்கை – 2020” ஆகும்.
சிறுபான்மையினரும் Vs தேசிய கல்வி கொள்கை 2020ம்:
இந்தியாவில் இசுலாமியர்கள் மிகவும் பின்தங்கிய நிலைமையில் உள்ளதை பல்வேறு அறிக்கைகளும், தரவுகளும் நமக்கு காட்டுகின்றன. ஒரு நாடு முன்னேற அந்த நாட்டிலுள்ள அனைத்து தரப்பையும் ஒன்று சேர்த்து முன்னேற்றுவதுதான் தீர்வு என்பது வரலாற்று அனுபவம். இல்லையெனில் அது சமூகத்தில் பல பிரச்சனைகளையும் உரசல்களையும் ஏற்படுத்துவதோடு வளர்ச்சியையும் ஜனநாயகத்தையும் சிதைக்கிறது. அதனால்தான் பல்வேறு வளர்ந்த மேற்குலக நாடுகளிலும் சிறுபான்மையினருக்கு பல சலுகைகளையும் உரிமைகளையும் உத்திரவாதப்படுத்தி அவர்களை மைய நீரோட்டத்திற்கு கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது.
இந்திய இசுலாமியர்கள் பல்வேறு வரலாற்று, சமூக-பொருளாதாரம் மற்றும் கலாச்சார காரணமாக கல்வியில் பின்தங்கி இருப்பதை பல்வேறு தரவுகள் உணர்த்துகிறது. அவர்கள் தொடர்ச்சியாக பல தடைகளை எதிர்கொண்டு வருகின்றனர். வறுமை, சமூக பாகுபாடு, அரசின் பொருளாதார உதவிகள் சென்றடையாமை, கலாச்சார ரீதியாக பின்தங்கிய சூழல் என்று அவர்கள் கல்வி பெறுவதை இயலாதாக்குகிறது. மேற்கூறிய அனைத்திற்கும் காரணமாக இருப்பது இந்தியாவின் பின்தங்கிய உற்பத்திமுறையும் அதை கட்டிக்காக்கும் பாசிச இந்திய அரசும்தான். கடந்த 75 ஆண்டுகளில் காங்கிரசு ஆட்சியிலும் கூட சிறுபான்மையினர்களின் வாழ்வில் பெருத்த முன்னேற்றம் ஏற்படவில்லை. தட்டு தடுமாறி ஏற்பட்ட குறைந்தபட்ச முன்னேற்றங்களையும், கடந்த பத்தாண்டு பாசிச பாஜக மோடி கும்பல் ஆட்சியில் கடும் தாக்குதலுக்குள்ளாகி சிதையுண்டு வருகிறது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி என்பது அடிப்படை உரிமை என கல்வி உரிமைச் சட்டம் – 2009 (RTE) வாய்ப்பந்தல் இடுகிறது. சமத்துவம், சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தினுடைய மதிப்புகளையும், நீதியான மற்றும் மனிதாபம் மிகுந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு “அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை” வழங்குவதன் மூலம் மட்டுமே அடைய முடியும் என்று ஏட்டளவில் எழுதிக்கொண்டே, நடைமுறையில் பாசிச பாஜக கும்பல் தொடர்ந்து அதற்கு எதிராக செயல்பட்டுகொண்டிருக்கிறது. இச்சட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி என்பதை உத்திரவாதப்படுத்த தவறினால் யாரை பொறுப்பாக்குவது என்பது குறித்து எதுவும் இல்லை. ஏனென்றால் அது ஒரு வெற்று வாய் ஜாலம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இதுவரை இந்திய அளவில் 6 கோடி குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ள இந்திய அரசையும் மாநில அரசையும் எப்படி பொருப்பாக்குவது? இலவச கல்வி, கட்டாய கல்வி தரமுடியாத அரசுகள், மதரசா கல்விகூடங்களில் கொடுக்கப்படும் கல்வியை கேள்விக்குள்ளாக்குவதற்கு என்ன நியாயம் இருக்கிறது? 16 இலட்சம் மாணவர்களின் கல்விக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் பாசிச பாஜக கும்பல், 6 கோடி குழந்தைகளின் கல்வியைபற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை. இதில் 80% மேல் இந்து குழந்தைகளே.
ஒரு பக்கம் RTE சட்டத்தில் இலவச கட்டாய கல்வி என்று பேசிக்கொண்டு இன்னொரு பக்கம் தேசிய கல்வி கொள்கைப்படி மானியம் தரக்கூடாது என்றக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது. மக்களை ஏமாற்ற அரசியலமைப்புச் சட்டத்தில் ஏட்டளவில் ஒரு சட்டம், ஆனால் நடைமுறையில் மனமார்ந்த தனியார்மய வணிகமயக் கொள்கைகள் அமல்படுத்துதல்; இந்துத்துவ வர்ணாசிரம ஏற்றத்தாழ்வை கட்டிகாத்தல். இந்திய அளவில் 16 இலட்சம் மாணவர்கள் மதரசாக்களில் படிப்பது என்பது பல மாநிலங்களின் கல்விச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதும் கல்வியில் இந்துத்துவமயமாக்கலுக்கு எதிரானதாகவும் இருப்பதால்தான் இன்று மதரசாக்கள் மீதான தாக்குதலாக மாறியுள்ளது. “தேசிய கல்வி கொள்கை – 2020”யின் படி அரசு பள்ளிகள் தனியார்மயமாக்கப்படுகின்றன. மதரசா பள்ளிகள் அரசு பள்ளிகளாக மாற்றுவதும் பின்பு அரசு பள்ளியை தனியார்மயமாக்குவதும் நடைபெறுகிறது. அசாம் மாநில அரசு நிதி பற்றாக்குறை என்று கூறி மானியத்தை வெட்டுகிறது, இன்னொரு புறம் 8000 அரசு பள்ளிகளை மூடுகிறது, மற்றொரு பக்கம் மதரசா பள்ளிகளை அரசு பள்ளிகளாக மாற்றுகிறது. தமிழகத்திலும் அரசு பள்ளிகளுக்கு போதிய அடிப்படை வசதி இல்லை என்றும் பள்ளிகளில் போதிய மாணவர்கள் இல்லை என்றும் தனியார்மயமாக்கலுக்கு தகுதியில்லாத பள்ளிகளை திமுக அரசும் மூடுவிழா நடத்துகிறது. மற்ற பள்ளிகளை படிப்படியாக விதவிதமான தனியார்மயமாக்கல் செய்துவருவதை நாம் கண்டு வருகிறோம்.
சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களுக்கும் கொடுக்கப்பட்டு வந்த பல மானியங்கள் வெட்டப்பட்டும், நிறுத்தப்பட்டும் வருகிறது. குறிப்பாக கல்விக்கு கொடுக்கப்பட்டு வரும் மானியங்கள் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. கொடுக்கப்படும் மானியங்களும் கல்விச் சந்தையில் கல்வி முதலாளிகளுக்கான இலாபமாக உத்திரவாதப்படுத்ததான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மானியம் என்பது பிச்சையோ சலுகையோ அல்ல. மக்கள் வரிப்பணத்தில், மக்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமை. அரசு செய்ய வேண்டிய கடமையை செய்ய வக்கற்று, பகுதியளவு பங்கேற்பளிப்பதே மானியம் ஆகும். கட்டாய இலவச கல்வி என்பது அடிப்படை உரிமை என்றால், மானியம் எதற்கு? கட்டணமின்றி கொடுக்க வக்கற்ற அரசு, பெயரளவில் தனது பங்களிப்பான மானியத்தின் மீதும் கைவைக்கிறது. இன்னொரு பக்கம் மானியத்தை ஏதோ பிச்சை போன்றும் சலுகை போன்றும் பிரச்சாரம் செய்கின்றன.
ஹிஜாப் அணிவதற்கு தடை போட்டதின் மூலம் சிறுபான்மை மாணவர்களின் கல்வி கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இப்போது மதரசாக்களின் கல்வி நிறுவனங்களை தடை செய்வது என்று சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் கல்வி உரிமைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது அரசு நிர்வாகங்கள் மூலமாகவும், அரசியல் அமைப்புகள் மூலமாகவும் சட்ட ரீதியாகவே பாசிசம் தொடர்வதை நிரூபிக்கிறது. பாசிசத்தின் ஊற்றுக்கண் ஏகபோக நிதி மூலதன ஆதிக்கமே. கல்வியில் நிதி மூலதன ஆதிக்கத்தை நிலைநாட்ட மதரசாக்களும் அரசு பள்ளிகளும் தடையாக உள்ளது. அதனால்தான் பாசிச மோடி ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கை – 2020ல் அரசு பள்ளி பராமரிப்பதிலும் நிர்வகிப்பதிலும் தனியார் பங்கேற்பு என்ற பெயரில் வணிகமயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு திட்டம் தீட்டி நடைமுறைப்படுத்துகிறது. கொடுக்கப்படும் பொதுக்கல்வியிலும் இந்துத்துவமயமாக்கல் மூலம் மாணவர்களிடம் நஞ்சை விதைக்கிறது. தொடர்ந்து வளர்ந்துவரும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார்போல், அதை ஈடுகொடுக்கும் அறிவியல் மற்றும் கணிதத்தை படிப்பதற்கு மாற்றாக புராதன ஆரம்ப அறிவியலை அதாவது ஆயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த அறிவியலை, நிரந்தர அறிவியலாக போதிக்க முயற்சிக்கிறது. புராணங்கள், இதிகாசங்கள், வேதங்களிலிருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் இன்னபிற பிற்போக்கு நடைமுறைகளை அதாவது பழைய சமுதாயத்தின் நடைமுறைகளை, நமது பாரம்பரியம், கலாச்சாரம் என்று திணிக்கவும் கட்டி காப்பாற்றவும் எத்தனிக்கிறது இந்த பாசிச பாஜக மோடி கும்பல். மதரசாக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து கல்வி திட்டங்களுக்கும் மானியங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு, பயனடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. பாசிச பாஜக மோடி ஆட்சியில், ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தால், அனைவருக்கும் கல்வி என்பது ஒருபோதும் சாத்தியமில்லை. பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் பள்ளி படிப்பே பிரச்சனையாக உள்ளபோது, இளங்கலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு கனவாகத்தான் இருக்கிறது. பாசிச பாஜக ஆட்சி குறைந்தபட்சம் இருக்கிற அறிவியல் மற்றும் ஜனநாயக கல்வியையும் அழித்து, இந்துத்துவமயமாக்கல் மூலம் மாணவர்களை புராதன சமுதாயத்திற்கு பின்னோக்கி அழைத்துச் சென்று அடிமை சக்திகளாக மாற்ற முயற்சிக்கிறது; நவீன உலகத்தில் நவீன அடிமைகளை உருவாக்கும் பாசிச பாஜக ஆட்சியையும் அதன் கொள்கைகளையும் வீழ்த்த வேண்டும். இசுலாமியர்களின் கல்வி உரிமைகளை பறித்து மதரசா பள்ளிகளை மூடுவதை எதிர்த்து போராட வேண்டும். அனைவருக்குமான கல்வியையும், மக்களுக்கான அறிவியலையும் பெற ஜனநாயகமான சமூகத்தை படைக்க பாசிச பாஜக மோடி ஆட்சியை வீழ்த்துவது உடனடி நிபந்தனையாக உள்ளது.
- சமரன்