அரசு எந்திரம் - நிர்வாகத்தை சட்டபூர்வமாக பாசிசமயமாக்கும் மோடி அரசு
சமரன் சிறப்புக் கட்டுரை
மத்திய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.-ல் சேர்வதற்கும் அதன் பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் இருந்த தடையை ஜூலை -9 அன்று நீக்கியுள்ளது பாஜக அரசு. இதன் மூலம் ஒட்டுமொத்த அரசு எந்திரம் -நிர்வாகம் என அனைத்தையும் முழுவதுமாக பாசிச மயமாக்கும் திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. மத்திய அரசு ஊழியர்களை இந்துராஜ்ஜியத்தின் - பாசிசத்தின் வேட்டை நாய்களாக மாற்றத் துடிக்கிறது. ஏற்கெனவே மத்திய பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், சட்டீஸ்கர், ஹரியானா ஆகிய மாநில பாஜக அரசுகள் அதன் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.ல் பங்கேற்பதற்கு இருந்த தடையை நீக்கியுள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள் மாநில அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது என்று கூறியே இதை நீக்கி இருக்கின்றன. ஆகவே இது அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் பொருந்தக் கூடிய அபாயம் உள்ளது. அதனைத்தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது. எனவே மத்திய அரசு எந்திரம் மட்டுமல்லாமல், மாநில அரசு நிர்வாக-எந்திரங்களும் கூட காவிமயம் - பாசிசமயமாக்கப்படக் கூடிய அபாயமான அரசாணையே இது.
ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவாரங்கள் போலதொரு விஷமத்தனமான அமைப்புகளை இந்திய வரலாறு இதுவரை கண்டதில்லை. அந்த விசம் இன்று இந்தியாவின் மூலைமுடுக்கெங்கிலும் பரவி வருகிறது. பாஜக அரசுக்கு அமைப்பு நிறுவனத்தையும் சித்தாந்த வேரையும் கொடுப்பது ஆர்.எஸ்.எஸ்.சே ஆகும். அதன் துணையோடுதான் இந்து ராஜ்ஜியத்தைக் கட்டியமைப்பதில் எட்டுக்கால் பாய்ச்சலில் வெறிகொண்டு பாய்கிறது பாஜக அரசு. மூன்றாவது முறையாக மோடி அரசு பதவியேற்றபின் பாசிச நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஆட்சியிலேறிய ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே கொடிய குற்றவியல் சட்டங்கள், வரி சீர்திருத்தச் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் போன்ற பாசிச சட்டங்களை அரங்கேற்ற துவங்கிவிட்டது. பொதுசிவில் சட்டத்தை விரைவாகக் கொண்டு வரவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேவேளையில், கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் இருந்தும் அது ஒரு சில படிப்பினைகளை கற்றுக் கொண்டுள்ளது. பெரும்பான்மையான மக்கள் இந்த பாசிச ஆட்சிக்கு எதிராக இருப்பதையும் அது உணர்ந்துள்ளது. ஆனாலும் அது திருந்தவில்லை. மாறாக பாசிச ஆட்சியை முன்பைவிட தீவிரமாக கட்டியமைத்து வருகிறது. அதற்கு அரசின் அனைத்து உறுப்புகளையும் பாசிச மயமாக்குவதற்கான அத்தியாவசியம் அதற்கு எழுந்துள்ளது.
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அலுவலகம் வெளியிட்ட உத்தரவு
மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training - DoPT), ஜூலை 9 அன்று ஒரு சுற்றறிக்கையை அனைத்து மத்திய அரசின் துறைகளுக்கும் அனுப்பியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: "30.11.1966, 25.07.1970, 28.10.1980 ஆகிய தேதிகளில் அரசாங்கம் வெளியிட்ட ஆணைகளை மதிப்பாய்வு செய்து, குற்றமாக கருதப்பட்ட அமைப்புகள் பட்டியலிருந்து ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தை (RSS) நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது". ஆனால் இந்த செய்தி 2 வாரங்கள் கழித்துதான் - ஜூலை 23 அன்றுதான் வெளியுலக பார்வைக்கே வந்தது.
முந்தைய 3 சுற்றறிக்கைகளில் உள்ள அம்சங்கள் என்ன?
1) 1966ம் ஆண்டு பசுப்பாதுகாப்பு எனும் பெயரில் அரசு ஊழியர்களையும் கூட தனது சங்பரிவார குண்டர்படைகளில் இணைத்து திரட்டி, நாடுமுழுவதும் கலவரங்களை நடத்தியது ஆர்.எஸ்.எஸ். அது இந்திரா காந்தி அரசுக்கு நெருக்கடியாக அமைந்தது. அதன் காரணமாக, 1966 நவம்பர் 30 ல், இந்திரா காந்தி அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அது, "அரசு ஊழியர்கள் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புகளில் உறுப்பினராக சேர்வது அல்லது அந்த அமைப்புகளின் செயல்பாடுகளில் பங்கேற்பதானது, மத்திய சிவில் சேவைகள் (நடத்தை) விதிகள், 1964-ன் 5 (1) பிரிவின் படியான விதிகளுக்கு பொருத்தப்படும். மேற்கூறப்பட்ட அமைப்புக்கள் அல்லது அவற்றின் செயல்பாடுகளுடன் உறுப்பினராகவோ அல்லது வேறுவிதமாக தொடர்பு கொண்டால் எந்த ஒரு அரசு ஊழியரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்" என்றது.
- 1964 மத்திய சிவில் சேவைகள் (நடத்தை) விதிகளின் 5வது பிரிவு "அரசியல் மற்றும் தேர்தல்களில் பங்கேற்பது" பற்றியது. விதி 5(1) கூறுவதாவது: "எந்த ஒரு அரசு ஊழியரும் அரசியலில் பங்கேற்கும் எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது எந்த அமைப்பிலும் உறுப்பினராகவோ அல்லது தொடர்புடையவராகவோ இருக்கக்கூடாது அல்லது வேறு எந்த அரசியல் இயக்கம் அல்லது செயல்பாட்டிலும் பங்கேற்கவோ, துணையாகவோ அல்லது உதவவோ கூடாது" என்பதாகும்.
2) 1970 ஜூலை 25ல் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கை, "[30.11.1966 ன்] அறிவுறுத்தல்களை மீறுவதாக தெரிய வரும் எந்தவொரு அரசு ஊழியர் மீதும் எப்போதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றது. அதைத் தொடர்ந்து இந்திரா ஆட்சிகால எமர்ஜென்சியின் போது (1975-77), ஆர்.எஸ்.எஸ், ஜமாத்-இ-இஸ்லாமி, ஆனந்த மார்க், சி.பி.ஐ.(எம்.எல்) உள்ளிட்ட 26 அமைப்புகளின் செயல்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அவற்றின் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
3) 1980 அக்டோபர் 28ல் இந்திரா காந்தி அரசு வெளியிட்ட சுற்றறிக்கை, "இன்றைய சூழலில் அரசு ஊழியர்கள் நாட்டின் மதச்சார்பின்மையை பேணிகாக்க வேண்டும், மதவாத அமைப்புகளுக்கு எவ்வகையிலும் முன்னுரிமையோ ஆதரவோ கொடுக்கக் கூடாது. எவ்வித வகுப்புவாத - பிரிவினைவாத செயல்களிலும் ஈடுபடக்கூடாது அவ்வாறு செயல்படுவது 30.11.1966 அறிவுறுத்தல்களை புறக்கணிப்பது கடுமையான ஒழுக்கமின்மையாக கருதப்படுவதோடு தவறு செய்த ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றது.
இந்த 3 ஆணைகளிலும் வெளியிடப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். பற்றிய தடையை மட்டுமே பாஜக அரசு தற்போது நீக்கியுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருந்த - மத்திய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.ல் பங்கேற்பதற்கான - தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஏனைய அமைப்புகளில் அதாவது இசுலாமிய அமைப்புகள், மா.லெ.கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகளில் செயல்படுவதற்கு தடை இன்றும் தொடர்கிறது. ஜனநாயக அமைப்புகளுக்கு தடைவிதித்துவிட்டு, பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.க்கு மட்டும் தடையை நீக்கியுள்ளது. இந்த செயல் இந்துத்துவ பாசிச நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
மத்திய சிவில் சர்வீசஸ் (நடத்தை) விதிகள், 1964 மற்றும் 1968 களின் பிரிவுகளிலேயே இருக்கும் ஓட்டையைதான் இன்று பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளது.
1964 விதிகளின் பிரிவு 5(3) கூறுவதாவது: "ஒரு கட்சி, அரசியல் கட்சியா அல்லது குறிப்பிட்ட அமைப்பு அரசியலில் பங்கேற்கிறதா என்ற கேள்வி எழுந்தால், அதன் மீது அரசாங்கத்தின் முடிவே இறுதியானது".
மேலும், 1968 விதிகளின் பிரிவு 5(3) கூறுவதாவது: "எந்தவொரு இயக்கமும் அல்லது செயல்பாடும் இந்த விதியின் வரம்பிற்குள் வருமா என்ற கேள்வி எழுந்தால், கேள்வி அதன் முடிவுக்காக அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்படும்" என்கிறது.
இந்த விதிகளின் அடிப்படையிலேயே ஆர்.எஸ்.எஸ் ஒர் "அரசியல்" அமைப்பு அல்ல என்று வாதாடுவதோடு மத்திய அரசு ஊழியர்கள், நடத்தை விதிகளின் விதி 5(1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பயப்படாமல் இப்போது ஆர்.எஸ்.எஸ்-ல் செயல்படலாம் என வழிகாட்டியுள்ளது பாஜக அரசு.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதான தடைகளும் தடை நீக்கங்களும்
மேலே உள்ள பகுதியில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு அது எப்போதெல்லாம் புதுப்பிக்கப்பட்டது என்று பார்த்தோம். இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் எப்போதெல்லாம் தடை விதிக்கப்பட்டு அது எவ்வாறு திரும்பப்பெற்றுக் கொள்ளப்பட்டது என பார்ப்போம்.
1) ஆர்.எஸ்.எஸ். முதன்முறையாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த மாலிக் கிஷார் ஹயாத் டிவானாவின் பஞ்சாப் மாகாண அரசால் 1947, ஜனவரி 24 அன்று தடை விதிக்கப்பட்டது. இந்த தடை 4 நாட்களில் நீக்கப்பட்டது.
2) 1948ல் காந்தி ஆர்.எஸ்.எஸ். கும்பலால் படுகொலை செய்யப்பட்ட பிறகு, நேரு அரசாங்கத்தின் அன்றைய உள்துறை அமைச்சரான வல்லபாய் பட்டேலால் தடை செய்யப்பட்டது. "நாட்டின் பல பகுதிகளில் இந்த அமைப்பினர் கொலை, கொள்ளை, சட்டவிரோத செயலகள், தீவைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். இந்த அமைப்பு இந்திய நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது" அதனால் தடை செய்வதாக அந்த அமைச்சகம் தெரிவித்தது. 18 மாதங்களில் அதே வல்லபாய் பட்டேலாலேயே இந்த தடை நீக்கப்பட்டது. கோல்வால்க்கர் தலைமையிலான அன்றைய ஆர்.எஸ்.எஸ். தனது தொன்றுத்தொட்ட முறையில் அரசிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து அந்த தடையை நீக்கிக் கொண்டது. அந்த கடிதத்தில் "நாங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், இந்திய தேசிய கொடியையும் ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் எவ்வித வகுப்புவாத - அரசியல் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டோம். சமூக - கலாச்சார இயக்கமாக மட்டுமே செயல்படுவோம் என உறுதியளித்து" மன்னிப்பு கோரியது. ஆனால் அது கொடுத்த எந்த உறுதி மொழியையும் காக்கவே இல்லை. இன்று வரை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் ஏற்கவில்லை; நாக்பூரில் அதன் தலைமையகத்தில் இந்திய தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை ஏற்றவும் இல்லை; பாஜகவின் சித்தாந்த அரசியலை தீர்மானிக்கும் இந்துத்துவ மதவாத சக்தியாகவே விளங்குகிறது. ஆர்.எஸ்.எஸ்.ன் தடையை நீக்கிய இந்த செயலானது அதன் மீதான படேல் - நேரு அரசாங்கத்தின் கரிசணத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.
- ஆர்.எஸ்.எஸ்.-ன் செயல்பாடுகளுக்கு தடையை நேரு அரசாங்காம் நீக்கியிருந்த போதிலும் 1966ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்கள் அதில் பங்கேற்பதற்கு தடை விதித்தது இந்திரா காந்தி அரசு. ஏனெனில், 1966ம் ஆண்டு பசுப்பாதுகாப்பு எனும் பெயரில் அரசு ஊழியர்களையும் கூட தனது சங்பரிவார குண்டர்படைகளில் இணைத்து திரட்டி நாடுமுழுவதும் கலவரங்களை நடத்தியது ஆர்.எஸ்.எஸ். அது இந்திரா காந்தி அரசுக்கு நெருக்கடியாக அமைந்தது. அதன் காரணமாகவே மத்திய அரசு ஊழியர்களுக்கான தடையை முதன் முதலாக கொண்டு வந்தது.
3) மூன்றாவது முறையாக, 1975ல் இந்திராகாந்தி அரசால் எமெர்ஜென்சி கொண்டுவரப்பட்ட போது ஆர்.எஸ்.எஸ். உடன் சேர்த்து பல அமைப்புகள் செயல் பட தடை விதிக்கப்பட்டது. 1977ல் எமெர்ஜென்சி ஆட்சி முடிவுக்கு வந்தது; ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடனேயே ஆர்.எஸ்.எஸ்.ன் பொதுவான செயல்பாடுகளுக்கு இருந்த தடையை நீக்கியது.
- மேலும் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கான தடை பட்டியலில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஜமாத்-இ-இஸ்லாமி, சி.பி.ஐ.(எம்.எல்) அமைப்புகளின் பெயர்களை நீக்கியதோடு பொதுவாக அரசியல் அமைப்புகளில் பங்கேற்பதற்கான தடையை வலியுறுத்தியது. 1980ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி அரசு, அது ஆர்.எஸ்.எஸ்.சோ அல்லது ஜமாத்-இ-இஸ்லாமியோ வகுப்புவாத - பிரிவினைவாத செயல்களில் ஈடுபடுபடும் அமைப்புகளில் பங்கேற்பது நடவடிக்கைக்குக்கு உரியது என அறிவுறுத்தியது.
4) அடுத்ததாக, 1992ல் பாபர் மசூதி இடிப்பு மற்றும் மதக்கலவரங்களை நடத்திய ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை சங்பரிவார அமைப்புகள் நரசிம்மராவ் அரசால் தடைசெய்யப்பட்டது. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் தங்களது உரிமைகளுக்காக போராடிய பாதிக்கப்பட்ட இசுலாமிய அமைப்புகளையும் கூட தடைசெய்தது காங்கிரசு அரசு. அதன் பின்பு, பஹ்ரி தீர்ப்பாயத்தில் தடைக்கான காரணங்கள் அரசிடமிருந்து சமர்ப்பிக்கப்படாததால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளின் மீதான தடைநீக்கப்பட்டது. அப்போதும் கூட, மத்திய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.ல் பங்கேற்பதற்கான தடை தொடர்ந்து அமலிலேயே இருந்தது.
இவ்வாறிருக்கையில் ஆர்.எஸ்.எஸ்.சை அரசியல் அமைப்பு அல்ல என்று வாதிடுகிறது பாஜக. அதையே பாசிச நீதிமன்றமும் வழிமொழிந்துள்ளது.
சங்பரிவாரங்களின் கூடாரமான அநீதிமன்றங்கள்
கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ல் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரான புருஷோத்தம் குப்தா என்பவர் மூலம் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தது ஆர்.எஸ்.எஸ். அதில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.ல் பங்கேற்பதற்கான தடை நீக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. அந்த மனுவின் மீதான விவாதத்தை ஜூலை-25 அன்று முடித்துவைத்த நீதிமன்ற அமர்வு பின்வருமாறு கூறியது:
"மத்திய அரசு தனது தவறை உணர கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்கள் ஆகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற அமைப்புகளை தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைத்திருப்பது தவறு; அதை உணர்ந்து அதிலிருந்து தற்போது அகற்றுவது மிகமிக அவசியமானது. அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளில் இணைந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்திற்கு இருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை விதிப்பதற்கு, தான்தான் அனைத்துக்கும் மேலே என்ற கண்ணோட்டத்திலிருந்து மத்திய அரசு முடிவெடுக்க கூடாது. மத்திய சிவில் சேவைகள் (நடத்தை) விதிகளை முன்தீர்மானத்தின் அடிப்படையில் அணுகக் கூடாது. அவ்வாறு எடுக்கப்பட்ட ஆதாரங்கள் இல்லாத கேலிக்கூத்தான முடிவுதான் ஆர்.எஸ்.எஸ். ஐ அந்த பட்டியலில் சேர்த்தது. எனவே அப்பட்டியலில் இருந்து தற்போது ஆர்.எஸ்.எஸ். நீக்கப்பட்டதை வரவேற்க வேண்டும். ஜூலை-9 சுற்றறிக்கையை 15 நாட்களுக்குள் மத்திய அரசின் அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றது. ஆர்.எஸ்.எஸ்.-ன் நீதிபதிகள் அணி இதை எவ்வாறு வரவேற்று கொண்டாடியுள்ளது பாருங்கள்(?!). இவர்களா இனி நீதியை நிலைநாட்டப் போகிறார்கள். பாஜகவின் ஆட்சியில் அனைத்து துறைகளும் பாசிசமயம் -காவிமயம் ஆக்கப்பட்டதன் ஒரு சோறு பதமே இந்த தீர்ப்பு. அனைத்து நீதிமன்றங்களும் சங்பரிவாரங்களின் கூடாரமாக மாற்றப்பட்டுவிட்டது. இனி இந்த நிலை மேலும் மோசமடையும்.
பாஜக அரசும் நீதிமன்றமும் சொல்வது உண்மையா? ஆர்.எஸ்.எஸ். அரசியல் அமைப்பு இல்லையா? ஆர்.எஸ்.எஸ்., தன் மீது தடை கொண்டு வரும் போது தன்னை அரசியல் அமைப்பு அல்ல தன்னார்வலர்களைக் கொண்டு இயங்கும் ஒரு சேவை அல்லது தொண்டு நிறுவன அமைப்பு என மன்னிப்புக் கடிதம் தீட்டுகிறது. மறுபுறம், வரி கணக்கு வழக்குகளின் போது, அதிலிருந்து தப்பிக்க நாங்கள் தொண்டு நிறுவனமல்ல அரசியல் அமைப்பு என வரி ஏய்ப்பில் ஈடுபடுவது என இரட்டை வேடம் பூணுகிறது இந்த பச்சோந்தி கும்பல்.
ஆர்.எஸ்.எஸ். - அதன் செயல்பாடுகள் பற்றி சுருக்கமாக
ஆர்.எஸ்.எஸ். - பாஜக சங்பரிவார கும்பல் மனித குலத்திற்கே எவ்வளவு அபாயகரமான அமைப்பு என்பதை நாம் கண்கூடாகவே கடந்த காலங்களில் பார்த்து வந்துள்ளோம். இருப்பினும் அதன் தோற்றம், கொள்கைகள், இன்றைய நிலை பற்றி சுருக்கமாக பார்ப்பது இங்கு அவசியமாகிறது.
ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் போன்றவர்களால் 19ம் நூற்றாண்டின் தொடக்கதிலிருந்தே இந்து எனும் சொல் ஏற்கப்பட்டு வேதங்கள் -உபநிடதங்கள் அடிப்படையில் மதமாக கட்டியமைக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 19ம் நூற்றாண்டின் மத்தியில் அதாவது சிப்பாய் கலகத்திற்கு பிறகு, பிரிட்டிஷ் தனது காலனியாதிக்ககத்தை நிலைநிறுத்த இந்து-முஸ்லீம் என்று பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைபிடித்தது. 19 நூற்றாண்டின் இறுதியில் ராஜ் நாராயண பாசு, சந்திரநாத் பாசு போன்றவர்களால் அது இசுலாமியர்களுக்கு எதிரான இயக்கமாக மாற்றியமைக்கப்பட்டது. அதன் பின், காங்கிரசின் தீவிர வலதுசாரி பிரிவைச் சார்ந்த பாலகங்காதர திலகர் மராத்திய பார்ப்பனர்களை மையப்படுத்தி முஸ்லீம்களுக்கு எதிரானதொரு அடையாளத்தை கட்டமைக்க முயன்றார். திலகரின் வழியை இந்துக்களின் அடையாளமாக எடுத்துக் கொண்டு வி.டி.சாவர்க்கர், பி.எஸ். மூஞ்சே, கே.பி.ஹெட்கேவர் போன்றோர் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தீவிர இந்துத்துவா அரசியலில் ஈடுபட தொடங்கினர்.
1925ம் ஆண்டு விஜயதசமி தினத்தில் ஆர்.எஸ்.எஸ்., ஹெட்கேவரால் தொடங்கப்பட்டது. அதற்கு மூஞ்சே, சாவர்கர் போன்ற இந்துமகாசபை தலைவர்கள் ஆதரவளித்தனர். அது அன்றிலிருந்து இந்துத்துவத்தின் முன்னணி படையாக செயல்படத் துவங்கியது. அந்த காலகட்டத்தில் இத்தாலியில் இருந்துவெளிவந்த பாசிசம் பற்றிய கட்டுரைகளால் இந்துத்துவவாதிகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1931ல் இத்தாலி சென்று வந்த மூஞ்சே அங்குள்ள முசோலினியின் பாசிச படைகளால் ஈர்க்கப்பட்டார். அதைப் போன்றதொரு இராணுவ அமைப்பை கட்டியமைக்க வேண்டும் என்று கருதினார். இதை ஏற்றுக் கொண்ட ஆர்,எஸ்.எஸ். இராணுவம் போன்ற சீருடைகளை அறிமுகப்படுத்தி சிலம்பம், வாள் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளை தனது உறுப்பினர்களுக்கு வழங்கியது. பாசிசத் தன்மைக் கொண்ட துணை இராணுவமாக ஆர்.எஸ்.எஸ். தன்னை தீவிரமாக வளர்த்துக் கொண்டது. அது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான அரசியல் சுதந்திர போராட்டங்களில் பங்கேற்கவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் டொமினியன் அந்தஸ்து கோரும் நிலையோடு நின்று கொண்டது. இசுலாமியர்களுக்கு எதிரான வகுப்புவாத நடவடிக்கைகளை கட்டியமைப்பதற்கே முக்கியத்துவம் அளித்தது. இரண்டாம் உலகப் போர் கட்டத்தில் அது நாசிச ஜெர்மனியிடமிருந்து தனக்கான தத்துவத்தை இரவல் வாங்கிக் கொண்டது. ஆரிய இன மேன்மைவாதத்தை கட்டியமைத்தது. பார்ப்பனர்களாகிய தங்களை ஆரியர்கள் எனவும் ஆரியர்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்கள் எனவும் அறிவித்துக் கொண்டது. இசுலாமியர்கள் முகலாயர் ஆட்சி காலத்தில் வந்த வந்தேறிகள் என்று கூறி இசுலாமிய வெறுப்பை கோட்பாட்டாளவில் வளர்த்தெடுத்தது. அதற்கு எம்.எஸ். கோல்வால்கர் தலைமை பொறுப்பேற்றார். இந்து மதம் மற்றும் கலாச்சார மேன்மையின் அடிப்படையில் கலாச்சார தேசியமாக - இந்து ராஜ்ஜியமாக நாட்டை மாற்றுவதையே தங்கள் நோக்கமாக வரிந்துக் கொண்டது.
1947 அதிகார மாற்றத்திற்கு பிறகு இந்தியாவின் மூவர்ண கொடியை தேசிய கொடியாக ஏற்றுக் கொள்ளவில்லை; காவி கொடியையே தேசிய கொடியாக அறிவித்தது. இந்திய அரசியலமப்பு சாசனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை; அதற்கு பதிலாக மனுஸ்ருமிதியை சட்ட சாசனமாக வலியுறுத்தியது. பாகிஸ்தான் பிரிவினையின் போது நாட்டையே தீக்கிரையாக்கியது. இசுலாமியர்கள் மீது மென்மையானப் போக்கை கடைபிடிப்பதாக கூறி காந்தியையே சுட்டுக்கொன்றது. (புதிய காலனியாதிக்கத்தின் கீழ் அரசதிகாரத்தை கைப்பற்றுவதில் இரண்டு தரகு கும்பல்களுக்கு இடையிலான மோதலின் வெளிப்பாடுதான் அது என்பது மற்றொரு அம்சம்). பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் பல மதவாத மோதல்களை கட்டியமைத்தது. ஆனாலும் அதுபோன்ற கலவரங்கள் அரிதாகவே நிகழும் நிகழ்ச்சிகளாக இருந்தன.
1990களில் உலகமய - தாராளமயக் கொள்கைகள் அமலாக்கத்திற்குப் பிறகு சங்பரிவார அமைப்புகளும் புத்துயிர் பெற்றன. சாதிவாத சக்திகளையும் தங்கள் அணிக்குள் திரட்டிக் கொண்டது. 1992 பாபர் மசூதி இடிப்பு முதல் இன்று வரை தினம் தினம் ஏதாவது ஒரு மூலையில் மதவாத-சாதிவாத தாக்குதல்கள், கொலைகள், பாலியல் வன்புணர்வுகள், குண்டுவெடிப்புகள், கலவரங்கள், கும்பல் படுகொலைகள், கும்பல் வன்புணர்வுகள், வாழ்விடங்கள் பறிப்பு, வழிபாட்டு உரிமைகள் பறிப்பு போன்ற பல கொடுஞ்செயல்களை தலைமையேற்று செய்து வருகிறது இந்த குண்டர் படை. பம்பாய், குஜராத் முதல் மணிப்பூர், ஹரியானா வரை நீள்கிறது அந்த பட்டியல். ஆசிபா போன்ற பச்சிளம் குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை இந்த இரத்தவெறி கொண்ட ஓநாய்கள். மாலேகோன், கோவா, நான்டேட், டில்லி, மும்பை, கோவை என பல குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு சதித்தனமாக இசுலாமியர்களை குற்றவாளிகளாக்கியது. இதுவா? தேசிய தன்னார்வ படை? நிச்சயம் இல்லை. இது நாட்டையே அச்சுறுத்தும் காவி கயவர் படை.
அடுத்த ஆண்டு (2025), விஜயதசமியில் நூற்றாண்டை நிறைவு செய்யும் நிலையில் உள்ளது ஆர்.எஸ்.எஸ். தற்போது, ஆண்டுக்கு லட்சத்திற்கும் மேலான விண்ணப்பங்கள் உறுப்பினர் சேர்க்கைக்காக பெறப்படுவதாக தெரிவிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.இன் அதிகாரப்பூர்வ இணையதளம். மேலும், நாட்டை 58,981 மண்டலங்களாக பிரித்துள்ளது. அதில் 36,823 மண்டலங்களில் தினந்தோறும் சாகா வகுப்புகள் நடத்தப்படுகிறது. நகர்புறங்களை 23,649 பகுதிகளாக பிரித்து அதில் 14,645 பகுதிகளில் தினந்தோறும் சாகா வகுப்புகள் நடத்தப்படுகிறது. மீதமுள்ள பகுதிகளில் வாராந்திர சாகா வகுப்புகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கிறது. நாட்டில் மொத்தமாக 73,117 தின சாகா வகுப்புகளையும் 27,117 வாராந்திர சாகா வகுப்புகளையும் நடத்தி வருகிறது. 1,58,532 கிராமங்களில் எவ்வித சாகா வகுப்புகளும் இதுவரை தொடங்கவில்லை. இருப்பினும் அவற்றில் தொடங்குவதற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம் என்கிறது. 2024 தேர்தலிலும் கூட அறிவுஜூவிகளை ஒருங்கிணைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம் என்கிறது. இது போக ஸ்வயம்சேவக்குகளுக்கு சிறப்பு பயிற்சிகளுக்கான கேம்ப்களையும் அவ்வபோது நடத்தி வருகிறது. நாடு முழுவதும் காவி கலாச்சாரத்தை விசம் போல் செலுத்தி வருகிறது. இதற்கு பாஜகவின் இந்த 10 ஆண்டு கால ஆட்சி பேருதவியாக அமைந்துள்ளது. ஏனெனில் 2004ல் பாஜக ஆட்சியின் தோல்விக்கு பிறகு முடங்கியிருந்த சாகா வகுப்புகள் 2014 அது மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகே மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் சைனிக் (இராணுவ பள்ளிகளை) ஒப்பந்தங்கள் மூலமாக கைப்பற்றி நடத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ். பள்ளிக்கூடங்களை காவிக் கூடாரமாக மாற்றி வருகிறது. 6 வயதில் இருந்தே இந்துத்துவ கல்வியை புகுத்தி வளர்ப்பதன் மூலமே நம்பகமான சுயம்சேவக் குண்டர்களை உருவாக்க முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது. அதனடிப்படையிலேயே பள்ளி பாட புத்தகங்கள் இந்துத்துவ கல்விக்கேற்றவாறு திருத்தப் பட்டு வருகின்றன. பள்ளி கல்லூரிகளில் சாகா வகுப்புகள் நடத்தப் படுகின்றன. இவை அனைத்தும் பாஜக அரசின் துணையோடு தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தியாவில் மட்டுமல்ல பிரிட்டன், ஜெர்மனி, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கூட தனது இந்துத்துவ வலைபின்னல் அமைப்புகளின் தலைமையிடங்களை ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன் உருவாக்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.ன் சர்வதேச அமைப்பான ஹெச்.எஸ்.எஸ். (ஹிந்து சுயம்சேவக் சங்) ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியாவில் 39 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவிலுள்ள 34 முக்கிய மாகாணாங்களில் பரவியுள்ளது. அங்கு 171 நகரங்களில் 250க்கும் மேற்பட்ட சாகாக்களை 2021ம் ஆண்டிலேயே நடத்தி வந்தது. குவாட், இந்தோ-பசிபிக் போன்ற பொருளாதார - இராணுவ கூட்டமைப்பு போல, அமெரிக்க வெள்ளை - யூத - இந்துத்துவ சக்திகள் ஒன்றிணைந்து அமெரிக்கா - இஸ்ரேல் - இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளை உள்ளடக்கிய ஐ2யு2 (I2U2) எனப்படும் 'இந்தோ-ஆபிரகாமிக்' கூட்டணி என்ற மதவாத-இனவாத கூட்டை உருவாக்கியுள்ளது. இது ஏகாதிபத்திய மறுபங்கீட்டுப் போர்களுக்கு சேவை செய்யும் மிகவும் பிற்போக்கான சித்தாந்த கூட்டணியாகும்.
விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி, பஜ்ரங் தள், அரம்பை தெங்கோல், அகில இந்திய வித்யார்த்தி பரிஷத், கவு ரக்சா தள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட சங்பரிவார அமைப்புகளை நாடு முழுவதும் தலைமையேற்று நடத்துகிறது ஆர்,எஸ்,எஸ். நாட்டில் கலவரங்களை கட்டியமைக்கவும் இந்து மதவெறியை பரப்பவும் அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய ஏகாதிபத்தியங்களிடம் இருந்து ஏராளமான நிதியை பெற்று வருகின்றன. 2001-2019 ஆண்டுகளுக்கு இடைபட்ட காலத்தில் மட்டும் 1300 கோடி ரூபாய்க்கும் மேலான நிதியை திரட்டி இந்தியாவில் உள்ள சங்பரிவார அமைப்புகளுக்கு அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. 2019 கொரோனா கால முடக்கத்திற்கு பின் பிற தொண்டு நிறுவனங்கள் அந்நிய நிதியை பெறுவதற்கு தடை விதித்தது மோடி அரசு. அந்த நிதிகளையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். கைகளில் மட்டும் குவிய வழிவகை செய்து கொடுத்தது. இந்தியாவிலேயே ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவார அமைபுகள்தான் பிற என்.ஜி.ஓக்களை விட அதிக அளவில் அந்நிய நிதியைப் பெற்று இயங்கி வருகின்றன. இவர்களின் சித்தாந்தமும் அந்நிய -ஜெர்மன், இத்தாலி - பாசிச சக்திகளிடமிருந்து வரிந்துக் கொள்ளப்பட்டது. இவர்களின் இயக்கத்திற்கும் பெருமளவில் அந்நிய நிதி உதவிகளை சார்ந்தே உள்ளன. இசுலாமியர்கள் - கம்யூனிஸ்ட்கள், அந்நிய நாடுகளில் நிதிபெற்று இயங்குவதாக பிரச்சாரம் செய்கிறது; ஆனால் ஆர்.எஸ்.எஸ். தான் அந்நிய நாடுகளிலிருந்து குறிப்பாக அமெரிக்காவிலிருந்து அதிக நிதிபெற்று இயங்குகிறது; வெட்கமே இல்லாமல் தேச பக்தி நாடகமாடுகிறது.
அரசு எந்திரம் -நிர்வாகம் முழுவதும் பாசிசமயமாக்கப்படுவதால் ஏற்படும் அபாயம் என்ன?
நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் (Administrative reform commission) பரிந்துரைகளை 2018 ம் ஆண்டில் இருந்தே அமல்படுத்தத் துவங்கிவிட்டது பாஜக அரசு. அதாவது, முக்கிய அமைச்சகங்களின் செயலாளார்கள், முக்கிய துறைகளின் இயக்குநர்கள் உள்ளிட்ட உயர் நிர்வாக பதவிகளுக்கு எவ்வித முன்னனுபவமும் இல்லாத - ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளில் தேர்ச்சியும் பயிற்சியும் பெறாத நபர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்துவதற்கான பரிந்துரையை செயல்படுத்தத் துவங்கிவிட்டது. இதன் மூலம் பன்னாட்டு-உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார குண்டர்கள் ஆகியோரை உயர் அதிகாரப் பதவிகளில் நேரடியாக நியமிப்பதை துவங்கிவிட்டது. இப்படி நியமிக்கப்பட்டவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும்? இந்துத்துவ சேவையும் - கார்ப்பரேட் சேவையும்தான்.
சென்ற ஆட்சியில் (2022ம் ஆண்டு) கூட இராணுவ வீரர்களை காவி குண்டர்களாக மாற்றும் அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்தே தற்போது அனைத்து அரசு ஊழியர்களையும் காவி குண்டர்களாக மாற்றுவதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது பாஜ அரசு. ஏற்கெனவே அரசுத்துறைகளில் மறைமுகமாக ஊடுருவியிருந்த காவி காடையர்கள், தற்போது காவி டவுசர்களில் - கருப்புக் குல்லா அணிந்து தைரியமாக நடமாடுவார்கள். மதவாத-இனவாத-சாதிவாத ஒடுக்குமுறைகளை சட்டபூர்வமாகவே நிகழ்த்துவார்கள்.
மாநில அரசுகளின் அதிகாரங்கள் அனைத்தும் மத்தியில் குவிக்கப்பட்டு வரும் இச்சூழலில், மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் இந்துத்துவ -கார்ப்பரேட் சேவகர்களாக மாற்றப்படுவர். தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, கல்வித் துறை, தேர்வாணையங்கள், மருத்துவ சுகாதாரத் துறை, ரயில்வே, தபால்-தந்தி, தகவல் தொழில்நுட்பம், உளவுத்துறை, நீதித்துறை, இராணுவம், கப்பற்படை, விமானப்படை என அனைத்து மத்திய அரசுத் துறைகளும் காவிமயம் -பாசிச மயமாக்கப்படும். சுதந்திரப் போராட்ட காலத்தில் முப்படைகளும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நாட்டின் சுதந்திரத்திற்காக புரட்சிகரமான எழுச்சிகளை கட்டியமைத்தனர். ஆனால், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார தலைமையில் கட்டியமைக்கப்படும் இந்த பாசிசப் படைகள் இனி, அரசை எதிர்த்து போராடும் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிப்பார்கள். தபால், தகவல் தொழில்நுட்பம், உளவுத் துறை ஆகியவை இசுலாமியர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சாதி உழைக்கும் மக்களை உளவு பார்க்கவும், அரசுக்கெதிராக போராடும் ஜனநாயக அமைப்புகளை தீவிரமாக கண்காணிக்கவும் ஒடுக்கவும் செய்யும். நீதிமன்றங்கள் முழுவதும் பாசிச மன்றங்களாக மாற்றப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் - ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை என்ற பாஜகவின் செயல்தந்திரத்தை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் வேலை செய்யும். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை துணையோடு எதிர்கட்சிகள் மென்மேலும் உடைக்கப்படும். கல்வி நிலையங்கள் முழுவதும் சங்பரிவார பயிற்சிக் கூடங்களாக மாறும்; சாதிவாத-மதவாத இந்துத்துவ சிந்தனைகள் வளர் இளம் பருவத்திலிருந்தே விதைக்கப்படும். தேசிய தேர்வு முகமைகள் போன்ற உயர்கல்விக்கான தேர்வு நிறுவனங்கள் மூலம் கார்ப்பரேட் சேவை மனப்பான்மை கொண்ட காவிக் காடையர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களே பயிற்றுவிக்கப்பட்டு யுபிஎஸ்சி, எஸ்.எஸ்.சி போன்ற தேர்வாணையங்கள் மூலமும் தடையின்றி தேர்ந்தெடுக்கப்படுவர். இன்னும் சொல்லப்போனால், நீ ஆர்.எஸ்.எஸ்.ல் உறுப்பினராக பயிற்சி பெற்றிருந்தால் மட்டும்தான் அரசு வேலையே கிடைக்கும் என்ற அவலநிலையும் ஏற்படலாம். மருத்துவர்கள் சேவை மனப்பான்மையற்று சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் மக்களை பிரித்து அணுகுவார்கள்; அவர்களின் உயிரை எடுக்கும் எமனாகவும் மாறுவார்கள். ரயில்வே ஊழியர்களும் அத்தகைய பாகுபாடுகளை தீவிரப்படுத்துவார்கள். ஏற்கெனவே இதுபோன்ற கொடூர சம்பவங்களை ஆங்காங்கே பார்த்து வருகிறோம். இனி அவை பொதுப் போக்காக மாறும் அபாயம் உள்ளது. இவ்வாறு அரசு நிர்வாக எந்திரம் முழுவதையும் பாசிச மயமாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது பாஜகவின் இந்த பாசிச அரசாணை. இதன் மூலம் ஒரு வலுவான இந்துராஜ்ஜியத்தை கட்டியமைக்க முயற்சிக்கிறது பாஜக-ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
ஆர்.எஸ்.எஸ். - பாஜக உருவாக்க முனையும் இந்து ராஜ்ஜியம் யாருக்கானது?
இன்று உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொது நெருக்கடியின் சுமைகள் காலனிய நாடுகளின் மீது சுமத்தப்படுகிறது. அதற்கேற்ப இந்தியாவிலும் பாசிச காட்டாட்சி கட்டியமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாசிச ஆட்சிக்கு ஏற்பவே ஆர்.எஸ்.எஸ்.ன் இந்துராஜ்ஜிய கனவும் கைக்கோர்த்து நடைபோட்டு வருகிறது.
பாசிசத்தின் பொருளியல் அடித்தளம் ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கம் என்றால் இந்தியாவில் பாசிசம் கட்டியமைக்கப்படுவதற்கான சித்தாந்த வேர் காலனிய இனவியலில் பொதிந்துள்ளது. காலனிய இனவியலில் இருந்துதான் ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆரிய இன மேன்மைவாதத்தையும் - இந்து ராஜ்ஜியம் கட்டியமைப்பதையும் வரிந்துக் கொண்டது. ஆகையால் இவர்களின் இந்து ராஜ்ஜியம் என்பது அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்திற்கு சேவை செய்வதாகும். இவர்களின் இந்து ராஜ்ஜியம் என்பது அமெரிக்க மாமனுக்கான ராஜ்ஜியம். இவர்களின் இந்த ராஜ்ஜியத்தின் ராமன் அமெரிக்கா ஏகாதிபத்தியவாதிகளே ஆவர்; அம்பானி-அதானிகள் ஹனுமன்களாவர்.
ஒருவர் இந்து மத நம்பிக்கைகளின் அடிப்படையில் அம்மதத்தை பின்பற்றுவதும், இந்துத்துவாவும் ஒன்றல்ல. மதத்திற்கான பொருளியல் அடித்தளம் தகரும் வரை எவர் ஒருவரும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்ற அவர்களுக்கு உரிமையுண்டு. ஆனால், இந்துத்துவா என்பது பாசிசத்துடன் பிணைக்கப்பட்ட ஒரு வகையான கருத்தியல்; அது பாசிசத்தை கட்டியமைக்க உதவும் ஒரு சித்தாந்தம். தனது கார்ப்பரேட் சேவையை மூடிமறைத்து வறுமை, வேலையின்மை, பஞ்சம், பட்டினிக்கு காரணமாக, மதவாதத்தையும் சாதியவாதத்தையும் முன்னிறுத்துகிறது. அது இசுலாமியர்களுக்கு மட்டும் எதிரானதல்ல; அது இந்துக்களிலேயே உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் எதிரானதே; அது தாழ்த்தப்பட்ட சாதியிலுள்ள - பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானதே ஆகும்; அவர்கள் இரண்டாம்தர குடிமக்களாக்கவும் கொத்தடிமைகளாகவும் மாற்றப்படுகிறார்கள். இந்த இந்து ராஜ்ஜியம் அதானி - அம்பானி போன்ற பெரும் கார்ப்பரேட்களையும், காஞ்சி சங்கரமடாதிபதிகளுக்கும், ஆதினங்களுக்கும் இன்னபிற நிலச்சுவான்தாரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜ்ஜியமே; அது அமெரிக்க ஏகாதிபத்திய நிதிமூலதன கும்பலின் கொள்ளைக்கான களமே ஆகும்.
இந்தியாவில் ஏகாதிபத்திய நிதிமூலதன நலன்களுக்காக பாசிசம் கட்டியமைக்கப்படுவது வளரும் சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ். - இந்துத்துவா சக்திகளும் இணைந்து வளருகின்றனர். பாஜகவின் அரசு ஆர்.எஸ்.எஸ். மூலம் அமைப்பு பலத்தைக் கொண்டுள்ளது என ஏற்கெனவே பார்த்தோம். 2024 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மோடி பிம்பம் கட்டியமைக்கப்பட்டதும், மோடி தன்னைத் தானே தெய்வபிறவி என பேசியதும், ஆர்.எஸ்.எஸ். மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ்.ன் மோகன் பகவத் மோடியின் பிரச்சாரத்துக்கு எதிராக பேசினார். அதே போல், ஆர்.எஸ்.எஸ்.ன் செயல்பாடுகளுக்கு யாரும் தடைபோட முடியாது; அத்தடையையும் மீறி ஆர்.எஸ்.எஸ். அனைத்து துறைகளிலும் ஊடுருவி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது என்றார். மோடி 3வது முறை பிரதமர் ஆகியிருப்பதும் ஆர்.எஸ்.எஸ்.-ன் முடிவின் அடிப்படையில்தான். அதனால்தான் தற்போது பதவியேற்றபின் இத்தகைய கொடிய அரசாணையை வெளியிட்டுள்ளது பாஜக அரசு. இதிலிருந்து பாஜக அரசும் ஆர்.எஸ்.எஸ்.ன் சித்தாந்தம் மற்றும் செயல்பாடுகளும் எந்த அளவிற்கு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை நம்மால் உணர முடியும்.
ஆகையால், ஆர்.எஸ்.எஸ். அரசை நிர்மாணிக்கும் சக்திவாய்ந்த பாசிசத் தன்மைக் கொண்ட அரசியல் இயக்கமே ஆகும்; அது சமூக- கலாச்சார இயக்கம் அல்ல. அவ்வாறு பேசுவது நாட்டு மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
காங்கிரசு -திமுகவின் இரட்டை நிலைபாடு
காங்கிரஸ் கட்சி, 'இந்துவாக வாழ்வது' எனும் நவீன இந்துத்துவத்தை அதன் காரியக் கமிட்டி தீர்மானமாக நிறைவேற்றி ஏற்றுக் கொண்டது. ஏகாதிபத்திய சேவையில் பங்குப் போட்டுக் கொள்வதில் ஏற்பட்ட போட்டியில்தான் அது ஆர்.எஸ்.எஸ்.ஐ தடைசெய்ததே ஒழிய கொள்கை ரீதியாக நேரெதிரான நிலை அதற்கு இல்லை. ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக கலாச்சார இயக்கம் என அது கூறியதை அப்படியே ஏற்றுகொண்டு அதன் மீதான தடையை அடுத்த 18 மாதங்களிலேயே நீக்கியது நேரு அரசு. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடையின்றி வளர்வதற்கு வழிசெய்தது. எமெர்ஜென்சி காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஐ தடை செய்த இந்திராகாந்தி அம்மையார் கூட 1977 தேர்தல் பரப்புரைகளில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆர்,எஸ்.எஸ். மீதான தடையை நீக்குவதாக வாக்குறுதி அளித்தார். ராஜூவ் காந்தி பாபர் மசூதி விவகாரத்தில் இசுலாமியர்களுக்கு எதிராக பாஜக-ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார கும்பலுக்கு ஆதரவாகவே செயல்பட்டார். புதியகாலனிய - புதிய பொருளாதாரக் கொள்கைகளை காங்கிரசின் நரசிம்மராவ் அரசும் பாஜகவும் கூடிக்குலாவியே அமல்படுத்தின. அதனால் தான் 1992ல் பாபர்மசூதி இடிப்பின் போது பெயரளவிற்கு ஆர்.எஸ்.எஸ்.-ன் செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளையும் எவ்வித ஆதாரங்களையும் பஹ்ரி தீர்ப்பாயத்தில் வைக்காமல் அத்தடை நீக்கப்படுவதுற்கு துணைபோனது இந்த பச்சோந்தி கும்பல். இன்று ராகுல்காந்தி பாஜகவை தேர்தலில் வீழ்த்துவது மட்டும் எனது நோக்கமல்ல; ஆர்,எஸ்.எஸ்.ஐ ஒழிப்பதே எனது இறுதி நோக்கம் என்கிறார். அது வரவேற்கத்தக்கதே. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. குறைந்தபட்சம் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆளும் மாநிலத்தில் கூட ஆர்.எஸ்.எஸ். செயல்பாட்டுக்கு தடை விதிக்க பரிந்துரை கூட செய்யவில்லை. மாறாக காங்கிரசின் மாநில முதல்வர்கள் ஆர்.எஸ்.எஸ்.ன் உறுப்பினர்கள் போல இந்துத்துவத்திற்கு ஆதரவாக பேசியே வருகின்றனர். தங்கள் மாநிலங்களில் இந்துத்துவ திட்டங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்தியே வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். போலவே பிரிட்டிஷ் ஆட்சியின் கால்நக்கிப் பிழைத்த கட்சி தான் நீதிக்கட்சி. அதனால்தான் நீதிக்கட்சியின் நீட்சியான திமுகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்த்த இயக்கங்களை கட்டியமைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். ஒன்றும் தீவிரவாத அமைப்பு அல்ல; அது நீதிக்கட்சி போல சமூக பண்பாட்டு இயக்கம்தான் என விதந்தோதினார் காரியவாதி கருணாநிதி. ஜெயலலிதா, பாஜக அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்பப்பெற்ற போது, பாஜக அரசுக்கு ஆதரவளித்து முட்டுக்கொடுத்தார். பாஜக தொடர்ச்சியாக அரசை நடத்தவும்; வேரூன்றி வளரவும் காரணகர்த்தாவாகினார் இந்த கருணாநிதி. அதற்கு கைமாறாகத்தான் இன்று கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டுள்ளது பாஜக அரசு. பாஜகவினர்தான் முன்னின்று வெளியிட வேண்டும் என்பதும் திமுகவின் கோரிக்கையாகவே இருந்துள்ளது. இந்த நாணய வெளியீட்டு விழாவில் கூட்டணி கட்சிகளை கூட அழைக்கவில்லை திமுக. ஆனால் பாஜகவின் ராஜ்நாத்சிங்தான் பொருத்தமான நபர் என அவருக்கு புகழாரம் சூட்டுகிறார் மு.க.ஸ்டாலின். வாஜ்பாய் பற்றி "right man in the wrong party" என்பது கருணாநிதியின் நிலைபாடாக இருந்தது. "right man in the right party" என்பது ராஜ்நாத்சிங் பற்றி மு.க.ஸ்டாலின் நிலைபாடாக உள்ளது. ஏனெனில் கருணாநிதியின் கருத்துக்கு அப்போதே வாஜ்பாய் மறுப்பு தெரிவிக்கும்போது, "மரம் சரியாக இருந்தால்தான் கனி சரியாக இருக்க முடியும்" எனக் கூறி, தான் சரி என்று ஏற்றுக் கொண்டால் ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவும் சரி என ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் என்றுள்ளார். அந்த நிலையில்தான் இன்று ராஜ்நாத்சிங்கை புகழ்ந்துள்ளது மு.க.ஸ்டாலின் -துரைமுருகன் கும்பல். அன்று முதல் இன்று வரை, ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக அரசு எதையுமே செய்யவில்லை. ஆர்.எஸ்.எஸ்.ன் ஊர்வலங்களுக்கு அனுமதி அளிப்பது; நாங்களும் இந்துக்கள்தான் என பேசி ஆர்.எஸ்.எஸ். க்கு போட்டியாக முருகனுக்கு வேல்யாத்திரை - மாநாடு நடத்துவது; இந்துக் கோவில்கள் ஆர்.எஸ்.எஸ்.ன் கூடாரங்களாக மாற்றப்படுவதற்கு துணைப் போவது என திமுக அரசு ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் இந்துத்துவ செயல்பாட்டிற்கு துணை போவது அம்பலமாகியுள்ளது. இந்துத்துவ சேவையுடன் சேர்த்து அதானி அம்பானிகளுக்கான கார்ப்பரேட் சேவையையும் செவ்வனே செய்து வருகிறது. அரசு ஊழியர்கள் பற்றிய இந்த சுற்றிக்கை குறித்து கூட வாய் திறக்கவில்லை. அரசின் அனைத்து துறைகளிலும் ஊடுருவியுள்ள சங்பரிவார கும்பலை களையெடுக்க வக்கில்லாமல் உள்ளது. ஏற்கெனவே மத்திய பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், சட்டீஸ்கர், ஹரியானா போன்ற மாநில அரசுகள் முறையே 2006, 2008, 2015, 2021 ம் ஆண்டுகளில் மாநில அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். ல் பங்கேற்பதற்கு இருந்த தடையை நீக்கி விட்டன. திமுக உள்ளிட்ட தமிழக அரசுகள் தனது அரசாணைகளில் ஆர்.எஸ்.எஸ். பெயரை இதுவரை சேர்க்கவில்லை; பொதுவாக அரசியல் இயக்கங்களில் பங்கேற்க கூடாது என்றுதான் விதிகளை வரையறுத்துள்ளது. மத்திய அரசின் இந்த அரசாணை மூலமும் ஆர்.எஸ்.எஸ். ஒரு சமூக-பண்பாட்டு இயக்கம் என்ற திமுகவின் நிலைப்பாடும் தமிழக அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.ல் பங்கேற்பதற்கு எவ்வித தடையும் இல்லை என்பதையே உணர்த்துகின்றது. அதனால்தான் தமிழக காவல்துறை உள்ளிட்ட அரசு நிர்வாகம் முழுவதிலும் கூட ஆர்.எஸ்.எஸ்.-சங்பரிவாரங்கள் நிரம்பியுள்ளன. போதாக்குறைக்கு, மு.க.ஸ்டாலின் கும்பல் பாஜக-ஆர்.எஸ்.எஸ்.-ன் ஆளுநர் ரவியுடனும் எச்சை ராஜாக்களுடனும் கொஞ்சி குலாவுகிறது. அந்த கும்பல் திமுக கட்சியினரை மிரட்டுகிறது. ஆனால் வெட்கமே இல்லாமல் துடைத்துக் கொண்டு அதன் காலடியில் சேவகம் செய்கிறது. நீதிக்கட்சியின் வாரிசு என்பதை அப்படியே நிரூபித்து வருகிறது. சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ்குமாரும் ஊசலாடும்போது திமுக ஆபத்பாந்தவனாக இருக்கும் என பாஜக பலமாக நம்புகிறது. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தும்போது, அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதன் மூலமாக பாஜகவின் நடவடிக்கைகளுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் என மறைமுக ஒப்பந்தம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. எனவே, தனிப் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைத்திருக்கும் பாஜக அரசுக்கு எதிர்க்கட்சி கூட்டணியினுள்ளே இருக்கும் நம்பகமான கூட்டாளியாக மாறியுள்ளது திமுக.
ஆனால், இந்த நிலையிலும் ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் பாசிசத்திற்கு காங்கிரசு-திமுக கும்பலே மாற்று என திருத்தல்வாதிகளும் பிழைப்புவாதிகளும் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாசிசத்தின் பொருளியல் அடிப்படையை மூடி மறைத்து மதவாதமாக சித்தரிக்க முயல்கின்றனர்; திமுகவின் கார்ப்பரேட் சேவைக்கு துணை போகின்றனர்; காங்கிரசு-திமுகவுக்காக வரிந்துக் கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குகின்றனர்; அவர்கள் என்ன செய்தாலும் அதை நியாயப்படுத்தி பேசி மிகக்கேவலமாக முட்டுக் கொடுக்கின்றனர். திமுக கும்பல் அம்பலப்படுவது போலவே இந்த வலது சந்தர்ப்பவாதிகளும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த கும்பல் கூச்ச நாச்சமின்றி திமுக- காங்கிரசுக்கு பல்லக்குத் தூக்கிவருகிறது.
ஆர்.எஸ்.எஸ். - பாஜக பிற்போக்கு கும்பலை வீழ்த்துவோம்!
ஆர்.எஸ்.எஸ். -பாஜக உள்ளிட்ட சங்பரிவார கும்பல் சாம்பல் கூட இல்லாமல் அழித்தொழிக்கப் பட வேண்டியவையே. ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சியும் உலகளாவிய வலைப்பின்னலும் நமக்கு பிரம்மிப்பாக தெரியலாம். ஆனால், எழுச்சிக் கொண்ட மக்கள் படையின் முன்னே அவை வெறும் துரும்பே. மாவோ ஏகாதிபத்தியங்களை காகிதப் புலிகள் என்றார். அதன் தயவில் வாழும் இந்த பிற்போக்கு அமைப்புகளும் காகித புலிகளே ஆகும். இவற்றின் வளர்ச்சியைக் கண்டு நாம் பயந்து பின்வாங்க தேவையில்லை. ஏனெனில் இவற்றின் பாதை தற்கொலை பாதையே என்பதை வரலாறு ஏற்கெனவே ஜெர்மனியில் நிறுவியுள்ளது. ஜெர்மன் உள்ளிட்ட பாசிச படைகளுக்கு மரண அடி கொடுத்தது ஆசான் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் செம்படை. எனவே இவர்கள் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் புதைகுழிக்கு செல்வது உறுதி. எனவே சோவியத்தின் அனுபவங்களை கைக்கொண்டு தீர்க்கமாக செயல்பட வேண்டும்.
எனவே, இந்த அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தியும், திமுக அரசு இதை மாநில அரசு ஊழியர்களுக்கு பொருத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.
மக்களின் இந்த துயரமான வாழ்நிலைக்கு காரணமே இந்த ஆட்சியாளார்களும் அவர்களுக்கு பின்னால் உள்ள இது போன்ற பிற்போக்கு அமைப்புகள்தான் என்பதை அழுத்தமாக பிரச்சாரம் செய்ய வேண்டும். அந்த பிற்போக்குவாதிகளின் பாசிச செயல்தந்திரங்களை தீவிரமாக முறியடிக்க வேண்டும். அதற்கு நாம் அனைத்து தளங்களிலும் முன்முயற்சியுடன் - நமக்குள் இருக்கும் தடைகளை உடைத்தெறிந்து செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும் பகத்சிங்காக மாற வேண்டும். மா.லெ. ஒளியை உயர்த்திப் பிடிப்பதன் மூலமே இந்த ஓநாய் கூட்டத்தை இல்லாது ஒழிக்க முடியும். பகத்சிங்கின் வாரிசுகளே! சாவர்க்கரின் வாரிசுகளை துடைத்தொழிக்க அணி திரள்வோம் வாரீர்!!
- சமரன் (செப்டம்பர் இதழில்)