தேசிய பணமாக்கல் திட்டம்

பொதுச் சொத்துகளை பிணமாக்கும் தேசிய பணமாக்கல் திட்டத்தை தகர்த்தெறிவோம்

தேசிய பணமாக்கல் திட்டம்

மோடி அரசு அறிவித்துள்ள தேசிய பணமாக்கல் திட்டம் என்பது பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு குத்தகை விடுவதன் மூலம் பெறப்படும் நிதியைக் கொண்டு உள்கட்டமைப்புத் துறைகளை பலப்படுத்துவதாகும். அதன் அடிப்படையில் சுமார் ரூ70 லட்சம் கோடி மதிப்பிலான 13 பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் கும்பல்களுக்கு 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது; அதன் மூலம் நான்கு ஆண்டுகளில் ரூ.6லட்சம் கோடி நிதியை திரட்டுவது; அந்த நிதியில் உள்கட்டமைப்புத் துறைகளை பலப்படுத்தி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லப் போவதாக மோடி அரசு கூறுகிறது. இருக்கும் பொது சொத்துகளை விற்று அந்த பணத்தில் மீண்டும் பொது திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறுவது கேலிக்கூத்தாகும். உண்மையில் இத்திட்டம் அமெரிக்காவின் மறுகட்மைப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டத்திற்கு சேவை செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது.

நாட்டின் பொதுச் சொத்துகளை விற்பது என்பது புதிதல்ல. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தனியார்மய, தாராளமய கொள்கைகள் மூலம் பொதுச் சொத்துகளை விற்பதையே கொள்கையாக கொண்டிருந்தனர். ஆனால், இதுவரை பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் அவற்றை தனியார்மயமாக்கி வந்தனர். தற்போது மோடி ஆட்சி நிதி ஆயோக்கின் வழிகாட்டுதலின் கீழ் பொதுத்துறை நிறுவனங்களை குத்தகைக்கு விடுவதின் மூலம் மொத்தமாக கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் குத்தகை முறையை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் காங்கிரசை விட புதிய காலனிய சுரண்டல் முறையை பாஜக அரசு அமல்படுத்த தொடங்கியுள்ளது.

பணமாக்கல் திட்டம் என்பது சிங்கம் தனது கோரப் பசிக்கு மான்களையும், சிலந்திகள் தனது வலைபின்னல் மூலம் ஈக்களையும் எவ்வாறு வேட்டையாடி ரத்தம் குடிக்கிறதோ, அது போல நாட்டின் பொதுச் சொத்துகளை ஏகாதிபத்திய நிதி மூலதன கார்ப்பரேட் கும்பல்களும் ஒட்டச் சுரண்டி ரத்தம் குடிக்க வழிவகை செய்துள்ளது பாசிச மோடி கும்பல்.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோடான கோடி உழைக்கும் மக்களின் உழைப்பால் இரத்தத்தால் வியர்வையால் மக்களின் வரிப் பணத்தால் உருவாக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே துறைகள், மின் உற்பத்தி மற்றும் மின் பரிமாற்றம், இயற்கை எரிவாயு பைப்லைன், பாராடெக் பைப்லைன் (paratech pipeline), டெலிகாம், விமானப் போக்குவரத்து, தானிய கிடங்குகள், துறைமுகங்கள், நகர்ப்புற நிலங்கள், விளையாட்டு மைதானங்கள், சுரங்கங்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளை சுயசார்பு, வளர்ச்சி எனும் பெயரில் பணமாக்கல் திட்டத்திற்காக அடிமாட்டு விலைக்கு குத்தகைக்கு விட்டுள்ளது மோடி கும்பல்.

தேசிய நெடுஞ்சாலைகள்

ஏற்கனவே இரும்புத்தாது, பாக்சைட், அலுமினியம், இயற்கை வளங்கள் உள்ளிட்ட மூல வளங்களை பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு சாலை வசதி அமைத்து தருவதாக முந்தைய காங்கிரஸ் ஆட்சி ஒப்புக்கொண்டது. அதை நிறைவேற்றும் விதமாக மோடி அரசு பாரத்மாலா என்ற திட்டத்தின் பெயரில் 8 வழி, 16 வழிச் சாலைகளை அமைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பணமாக்கல் திட்டத்தின் கீழ் 26,700 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளது.

ரயில்வே துறை

தினந்தோறும் 2.5 கோடி மக்கள் பயணம் செய்யும் ரயில்வே துறை உலகளவில் நான்காவது மிகப்பெரிய துறையாகும். மேலும், ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கு பரிவர்த்தனை செய்கிறது.

இத்தகையை முக்கியத்துவம் வாய்ந்த இரயில்வே துறையை ஒழிப்பதற்காக இரயில்வேக்கான தனிப்பட்ஜெட்டை தகர்த்து அதை பொதுப் பட்ஜெட்டோடு இணைத்து 2017ல் ஒரே பட்ஜெட்டாக மோடி கும்பல் தாக்கல் செய்தது.

பொதுத்துறை தனியார் பங்கேற்பு என்ற பெயரில் ரயில்வே துறை முழுவதும் தனியார் மயமாக்கப்பட உள்ளதாக 2019 பட்ஜெட்டில் கூறியது. 50 லட்சம் கோடி மதிப்புள்ள ரயில்வே கட்டுமானம், பயணிகள் மற்றும் சரக்கு ரயில், ரயில் கட்டணம், தண்டவாளம் அமைத்தல், ஊழியர் நியமனம் என ஒட்டுமொத்த ரயில்வே துறையையும் தனியார்மயமாக்க முடிவெடுத்தது மோடி அரசு.

இதை பணமாக்கல் திட்டத்தின் மூலம் பின்வருமாறு நிறைவேற்றத் தொடங்கியுள்ளது:

நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள 63,140 கி.மீ நீளமுள்ள ரயில் பாதைகளையும்,

·        28,608 கி.மீ நீளமுள்ள மின்பகிர்மான வழித்தடங்களையும்,

·        741 கி.மீ நீளமுள்ள இரும்புப் பாதைகளையும்.

·        90 பயணிகள் தொடர் வண்டி மற்றும் 400 தொடர் வண்டி நிலையங்களையும்,

·        லாபம் தரும் ரயில் வழித் தடங்கள், ரயில்வேக்கு சொந்தமான அச்சகங்கள், ரயில்வே எஞ்சின் மற்றும் சக்கரங்கள் தயாரிக்கும் 7 உற்பத்தி ஆலைகள்

உள்ளிட்ட மிகப் பெரிய பொதுச் சொத்தை ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரம் கோடிக்கு மோடி கும்பல் குத்தகைக்கு விட்டுள்ளது.

தொலைத் தொடர்பு துறை

நாட்டின் தொலைத் தொடர்பு துறையான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் எனும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தகர்த்து, அதை உருவாக்கிய ஊழியர்களை (VRS மற்றும் CRS) கட்டாய விருப்பு ஒய்வின் மூலம் மோடி ஆட்சியால் வெளியேற்ற படுகிறார்கள். ஆனால், ஜியோ (JIO), ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களை மோடி அரசு திட்டமிட்டு ஊக்கப்படுத்துகிறது. மற்றும், நாடு முழுவதும் 2.86 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுள்ள கண்ணாடி இழை கட்டமைப்புகள், 68 ஆயிரம் செல்போன் கோபுரங்கள், 14,917 உற்பத்தி வளையம், தொலைத் தொடர்பு சொத்துக்களில் 0.35 லட்சம் கோடி மதிப்பிலான கண்ணாடி இழை கோபுரங்கள் போன்ற கட்டமைப்புகள் ரிலையன்ஸ் (JIO) ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப் பட்டுள்ளது.

4ஜி தொழில் நுட்பத்தைக் கூட பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்குத் தர மோடி கும்பல் மறுக்கிறது. ஆனால் 5ஜி தொழில் நுட்பத்தை ஜியோ (JIO) நிறுவனத்திற்கு மோடி அரசு வழங்கவுள்ளது. அமெரிக்காவிலிருந்து செயல்படும் பேஸ்புக் நிறுவனத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலீடு செய்துள்ளது. அத்துடன் கோடிக்கணக்கான இந்திய மக்களின் தனிப்பட்ட தரவுகளை ஜியோ நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்துடன் பரிமாறியுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு பல்லாயிரக்கணக்கான கோடிகளை ஜியோ நிறுவனம் லாபம் ஈட்டியுள்ளது.

மின்சாரத் துறைகள்

மின்சாரத் திருத்தச் சட்டம் 2020ஜ கொண்டு வந்து மக்களின் உழைப்பால், வரிப் பணத்தால் உருவாக்கப்பட்ட மின்வாரியங்களை தனியாருக்கு தாரைவார்த்துள்ளது மோடி அரசு.

இன்றும் கூட நமது நாட்டில் பல்லாயிரக்கணக்கான கிராமங்களுக்கு மின்சாரம் இல்லாமல் மக்கள் வாழ்கின்றனர். விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், குடிசைகளுக்கு ஒரு விளக்கு, கைத்தறி மற்றும் விசைத்தறிக்கு மின்சார மானியம் போன்றவற்றை ஒழித்துக் கட்டவுள்ளது மோடி அரசு.  பெட்ரோல், டீசல் விலை நிர்ணய உரிமையை எப்படி காப்பரேட்டுகளுக்கு ஒப்படைத்ததோ அதே போல் மின்சார கட்டண விலை நிர்ணய உரிமையை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப் போகிறது.

இயற்கை சீற்ற காலங்களில் சேவை மனப்பான்மையோடு பணியாற்றும் மின் ஊழியர்கள் வெளியேற்றப்படவுள்ளார்கள். அவர்களால் கட்டியமைக்கப்பட்ட மின் கட்டமைப்புகளான 42,300 சர்க்யூட் கிலோ மீட்டர் தொலைவுக்கான மின் பாதைகள், 6 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள், சோலார் காற்றாலைகள், மின்சார பரிமாற்றிகள் உள்ளிட்டவற்றை சுமார் 85 ஆயிரம் கோடிக்கு இந்த பணமாக்கல் திட்டத்தின் மூலம் தாரைவார்க்கவுள்ளது.

உணவு தானிய கிடங்குகள் தனியார்மயம்

விவசாயிகளுக்கு மானியங்களை ஒழிப்பது, கடனுதவிகளை ஒழிப்பது, பொதுவிநியோக திட்டத்தை (ரேசன் முறையை) இழுத்து மூடுவது, விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை அரசு கொள்முதல் செய்ய மறுப்பது போன்ற  உலக வங்கியின் புதிய காலனிய கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளை செயல்படுத்தியதன் விளைவாக நாடு முழுவதும் 5லட்சத்திற்கும் அதிமான விவசாயிகள் இதுவரை மடிந்துள்ளனர்.

நான்கு பேரில் ஒருவருக்கு உணவு இல்லை என்ற அவலம் நம் நாட்டில் நீடிக்கிறது. சுமார் 79 கோடிக்கு அதிகமான குடும்ப அட்டயை (ரேசன் கார்டை) பயன்படுத்தி வாழ்கின்ற மக்களைக் கொண்ட நாட்டில் தானிய சேமிப்பு கிடங்குகள் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பொது விநியோகத்துறை அமைச்சர் சி.ஆர்.சவுத்தரி பிப்ரவரி 5, 2019 அன்று பாராளுமன்றத்தில் பேசுகையில், "ஜனவரி 1, 2019 கணக்குப்படி, வழங்கவியலாத / நாசமடைந்த நிலையில் 4,135.224 டன் தானியங்கள் இந்திய உணவுக் கழகத்தின் தானியக் கிடங்கில்" இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த 2017-ம் ஆண்டில் இத்தகைய வழங்கவியலாத தானியங்களின் அளவு ஏறக்குறைய 62,000 டன்கள் ஆகும். பின்னர் அவை கால்நடைகளுக்கு தீவனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்டது.

265 மில்லியன் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை ரூ. 28,900 கோடிக்கு பணமாக்கல் திட்டத்தின் மூலம் கார்ப்பரேட் கும்பல்களுக்கு மோடி அரசு தாரைவார்த்துள்ளது. 

ஊட்டச்சத்து இல்லாமலும், மருத்துவம் இல்லாமலும் 2018-ல் மட்டும் 0 - 5 வயது வரை உள்ள குழந்தைகள் 8.8 லட்சம் பேர் இறந்துள்ளனர். 44 சதவீத பெண்கள் கடும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா, உலக பட்டினி குறியீட்டில் 117 நாடுகளில் 102 வது இடத்தில் பின் தங்கி உள்ளது. இந்த நிலைமையில் உணவுத் தானிய கிடங்குகளை முழுவதும் தனியார்மயப்படுத்தினால் பட்டினிச்சாவுகளும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளும் அதிகரிக்கும். மீண்டும் நம் நாடு பிரிட்டன் காலனியாதிக்கத்தின் கீழ் உணவுக்காக கையேந்தி நின்றதைப் போல அவலமான நிலைமைகள் உருவாகும். 

துறைமுகங்கள் தனியார்மயமாக்கப்படுதல்

மோடி அரசு சாகர் மாலா என்ற திட்டத்தின் மூலம் துறைமுகங்களை நவீனப்படுத்துவது, துறைமுக இணைப்புகளை உருவாக்குவது, கடற்கரை தீவுகளைத் தனியார்மயப்படுத்துவது, மீன் பிடித் தொழிலை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடுவது போன்ற வாக்குறுதிகளை  2019-நிதிநிலை அறிக்கையில் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கியது. இதன் தொடர்ச்சியாக 2020ல் புதிய துறைமுகச் சட்டத்தை கொண்டு வந்து நாடு முழுவதும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களோடு, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள 187 சிறிய துறைமுகங்களை இணைத்து நவீனப்படுத்துதல் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்படைக்கவுள்ளது.

பன்னாட்டு கப்பல்கள் நமது மீன்வளத்தை கொள்ளையடிப்பதை தடை செய்யவே இந்த துறைமுகச் சட்டம் கொண்டு வருவதாக மோடி கும்பல் கூறுகிறது, மறுபக்கம் வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி, பொழுது போக்கிற்காக மீன்பிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் கணக்கெடுப்பு என்ற பெயரில் ஒரு கோடியே 90 லட்சம் மீனவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை அழிக்கவுள்ளது. கடலுக்கு அடியில் இருக்கும் தாதுப் பொருட்களையும், கடற்கரை தீவுகளையும் அம்பானி, அதானிகளுக்கு திறந்து விடும் நோக்கில் முதல் கட்டமாக 40 துறைமுகங்களை ரூபாய் 12,828 கோடிக்கு ஏலம் விட்டுள்ளது மோடி கும்பல்.

மேலும் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கான பெட்ரோலிய பாராடெக் பைப்லைன்களை ரூ.22,504 கோடிக்கும், இயற்கை எரிவாயு பைப்லைன்களை ரூ. 24,462 கோடிக்கும் குத்தகைக்கு விட்டுள்ளது. மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் விமானப் பயணசெய்யும் வசதி அளிப்பதாக கூறி 25 விமான வழித்தடங்களை ரூ.20,782 கோடிக்கு ஏலம் விட்டுள்ளது. 160 நிலக்கரி சுரங்கங்களை ரூ. 28,747 கோடிக்கும், நகர்புற நிலங்களை ரூ. 11,450 கோடிக்கும் பணமாக்கல் திட்டம் மூலம் ஏலம் விட்டுள்ளது.

நிதி பற்றாக்குறைக்கு அடிப்படை காரணங்கள் என்ன?

மத்திய, மாநில ஆட்சியாளர்கள் கடந்த 30 ஆண்டுகளாக செயல்படுத்திய தாராளமயக் கொள்கைகளும், அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பபல்களுக்கு ஊக்கத் தொகை என்றும், வரிச்சலுகை என்றும் மக்களின் வரிப்பணத்தை ஆண்டுக்கு பல லட்சம் கோடியை கொட்டி குவிப்பதும், மாபெரும் ஊழல்களுமே நாட்டின் நிதிபற்றாக்குறைக்கு அடிப்படையாகும். மேலும் தாராளமயக் கொள்கைகளோ அல்லது அரசு பொதுச் சொத்துகளை விற்று பணமாக்குவதன் மூலமோ நிதி நெருக்கடிகளை தீர்க்க முடியாது.

மோடியின் எட்டு ஆண்டுகால ஆட்சியில் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி கடன்களை கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா பொது முடக்க காலத்தில் மட்டும் ரூ. 65 ஆயிரம் கோடி வாராக் கடனை கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது. 2021-2022க்கான மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரிகளை 25% சதத்திலிருந்து 15% சதமாக குறைத்து ரூ 1.45லட்சம் கோடியை வரிச்சலுகையாக அறிவித்துள்ளது.

மேலும் டாட்டா, மிட்டல், ரிலையன்ஸ், வேதாந்தா போன்ற 13 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் ரூ. 2 லட்சத்து 85 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இது வரை மோடி ஆட்சியில் வாரா கடன்கள் ரூ. 18.28 லட்சம் கோடியாக (365%) அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் மூலம் ரூபாய் 26.52 லட்சம் கோடியை உழைக்கும் மக்களிடம் வரியாக கொள்ளையடித்துள்ளது. இவ்வாறு கொள்ளையடித்த பணத்தை கார்ப்பரேட்களுக்கே அள்ளிக் கொடுத்துள்ளது.

கொரோனா பொது முடக்க காலத்தில் உலகமே தடுமாறும் வேளையில், மோடியின் ஆசியுடன் இந்தியாவில் 142 பெரும் பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். இவ்வாறு பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 35 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவர்களின் ஒட்டு மொத்த மதிப்பு 53 லட்சம் கோடிக்கு மேலாக அதிகரித்து உள்ளது. நாட்டில் உள்ள 40 சதவீத மக்களின் 55.5 கோடி பேரின் ஒட்டுமொத்த சொத்துக்கு இணையான சொத்தை வெறும் 98 பணக்காரர்கள் குவித்துள்ளனர் என ஆக்ஸ்பாம் ஆய்வு கூறுகிறது.

பணமாக்கல் திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் நிலை

பணமாக்கல் திட்டத்திற்கு எதிராக போராடுவது போல காங்கிரஸ் கட்சி பாசாங்கு செய்கின்றது. எங்களது ஆட்சியில் நஷ்டத்தில் இயங்கும் துறைகளைத்தான் தனியார்மயப்படுத்தினோம், லாபம் தரும் நிறுவனங்களை விற்பனைச் செய்யவில்லை என்று ராகுல்காந்தி கூறுகிறார். ஆனால் சோனியா - மன்மோகன்சிங் ஆட்சி லாபத்தில் இயங்கிய, அரசுக்கு வருமானத்தை அள்ளித்தந்த நவரத்னா என அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பன்னாட்டு - உள்நாட்டு தரகு முதலாளித்துவ கும்பல்களுக்கு தாரை வார்த்தது. லாபத்தில் இயங்கிய எல்.ஐ.சி நிறுவன பங்குகளையும், பி.எச்.இ.எல், கோல் இந்தியா, ஆயில் இந்தியா, ஒ.என்.ஜி.சி, என்.எல்.சி போன்ற நிறுவனங்களின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளுக்கு விற்றது. இந்திய உணவு கிடங்குகளில் தேங்கி கிடக்கும் தானியங்களை பசியால் வாடும் மக்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலேயோ கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டியது. அதற்கு மன்மோகன்சிங் ஆட்சி அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட கூடாது என்று கூறி பசியால் வாடும் மக்களின் வயிற்றில் அடித்தது. எனவே, காங்கிரஸ் கும்பலின் பணமாக்கல் திட்ட எதிர்ப்பு என்பது கபட நாடகமே ஆகும். நாட்டின் வளங்களை கார்ப்பரேட் கும்பல்களுக்கு திறந்துவிடுவதிலும், நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதிலும், பாசிசத்தை கட்டியமைப்பதிலும் காங்கிரஸ்- பாஜக இரண்டு கட்சிகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே ஆகும்.

வாஜ்பாய் ஆட்சியில் பொதுத்துறை பங்குகளை விற்பதற்காகவே ஒரு தனித்துறையை உருவாக்கி அருண் சோரி என்பவர் அமைச்சராக்கப்பட்டார், ஏகாதிபத்திய அடிமைத்தனத்தில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக திட்டக் கமிசனை கலைத்து கார்ப்பரேட் நலனுக்கு ஏற்ப நிதி ஆயோக்கை மோடி கும்பல் உருவாக்கியுள்ளது.

எனவே கொரோனா பொது முடக்க காலத்தில் இந்துத்துவ பாசிச மோடி கும்பல் அறிவித்த ரூ 20 லட்சம் கோடி திட்டமும், 75 வது சுதந்திர தின உரையில் அறிவித்த 100 லட்சம் கோடி கதிசக்தி திட்டமும், 6 லட்சம் கோடி பணமாக்கல் திட்டமும் பொதுச் சொத்துகளை முடமாக்கி உழைக்கும் மக்களை பிணமாக்கும் திட்டங்களே ஆகும்.

குண்டாந்தடிகளும், கண்ணீர் புகைகளும், துப்பாக்கி குண்டுகளும், அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் மக்கள் போராட்டங்கள் முன் மண்டியிட்டு மடிய வேண்டும் என்பதை வேளாண் சட்டங்களை எதிர்த்த விவசாயிகள் போராட்டம் நிரூபித்துள்ளது. எனவே தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலம் மோடி அரசின் பணமாக்கல் திட்டத்தையும் முறியடிக்க முடியும்.

சமரன் – 2022 - ஏப்ரல்-மே இதழ்