பற்றி எரியும் மணிப்பூர்
கார்ப்பரேட்டுகளின் மூலதனப் பசிக்கு மணிப்பூர் மக்களை பலி கொடுக்கும் பாஜக அரசு!
மணிப்பூரில் உள்ள மெய்தி (Metei) மக்களுக்கும் குக்கி (Kuki) பழங்குடிகளுக்கும் இடையில் மதரீதியாக, இனரீதியாக பிளவு ஏற்படுத்தி "ஒரு குஜராத் மாடல் கலவரத்தை" திட்டமிட்டு தலைமையேற்று அரங்கேற்றி வருகிறது ஆர்எஸ்எஸ் -பாஜக கும்பல். ஆர்எஸ்எஸ் கிளை அமைப்புகளான அரம்பை தெங்கோல், மெய்தி லீபன் போன்ற அமைப்புகளும், மணிப்பூர் பாஜக அரசும், மோடி கும்பலின் ஆசியுடன் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக மணிப்பூரை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து வருகின்றன.
கடந்த மார்ச் 27 அன்று "மணிப்பூர் பழங்குடி சங்கம்" என்ற பாஜக பின்புலத்தில் செயல்படும் சங்கம் தொடுத்த வழக்கின் மீது மணிப்பூர் உயர் நீதிமன்றம் சமவெளியில் வாழும் மெய்தி சமூக மக்களின் (மெய்தி என்பது மணிப்பூரி மொழி பேசும் மக்களை குறிக்கிறது) பழங்குடி அந்தஸ்து கோரிக்கையை பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து குக்கி மற்றும் நாகா பழங்குடிகளின் போராட்டம் வெடித்தது. மெய்தி மக்களிடையே பழங்குடி அந்தஸ்து கோரிக்கையை பாஜக தூண்டிவிட்டதன் நோக்கம் எதுவெனில், அவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து தருவதன் மூலம் அவர்களின் பெயரால் குக்கி பழங்குடிகள் வாழும் மலைப் பகுதிகளில் உள்ள நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கவே ஆகும். ஆகவே பாஜகவின் நோக்கங்களை புரிந்துகொண்ட பழங்குடிகள் அதை எதிர்த்து போராட துவங்கினர். இப்போராட்டங்களை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு சங்பரிவார கும்பல் போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதுவே தற்போது நடந்து வரும் கலவரங்களின் துவக்கப்புள்ளியாகும்.
மே 3ஆம் தேதியன்று மெய்தி ஆளும் வர்க்கம் மற்றும் மேட்டுக்குடிகளின் (ஒட்டுமொத்த மெய்திகளின் கோரிக்கை அல்ல) பழங்குடி அந்தஸ்து கோரிக்கையை எதிர்த்து நடந்த அனைத்து பழங்குடி சங்கங்களின் போராட்டத்தை பாஜக அரசும் சங்பரிவார கும்பலும் மிகக் கடுமையாக ஒடுக்கின. காவல்துறை மற்றும் இராணுவத்தின் உதவியுடன் ஆயுதக் கிடங்கில் இருந்த துப்பாக்கிகளை கைப்பற்றி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது இக்கும்பல். இதை எதிர்த்து குக்கிகளும் திருப்பித் தாக்கவே கலவரமாக மாறியது. பழங்குடிகள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களாகவும், மெய்திகள் இந்துக்களாகவும் இருப்பதால் மத ரீதியான உணர்வுகளை தூண்டி வருகிறது பாஜக அரசு. இதுவரை 200க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பழங்குடியின பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 60,000க்கும் மேற்பட்ட மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட கோவில்களும், 300க்கும் மேற்பட்ட தேவாலயங்களும், குக்கி மக்களின் 3000 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் செய்ததை போல பழங்குடிகளின் வீடுகள் அடையாள குறியீடிடப்பட்டு தாக்கப்பட்டுள்ளன. ஆங்கிலோ-குக்கி போரின் நினைவுச் சின்னம் தகர்க்கப்பட்டுள்ளது. பழங்குடியினத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. வீடு கூட தாக்கப்பட்டுள்ளது. இணைய வசதியும், முக்கிய சாலை வழிகளும் முடக்கப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு பழங்குடியின பெண் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கிறாள். சங்பரிவார கும்பல் அவள் மண்டையை உடைத்து இரத்தம் குடிக்கிறது. பிள்ளை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அழுகிறது. அவள் மயங்கி விழுகிறாள். அண்மையில் பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியாகி நாடே அதிர்ச்சிக்குள்ளானது. நெஞ்சு பதை பதைக்கும் இக்காட்சிகள் குஜராத் கலவர காட்சிகளை நினைவூட்டுகிறது. இதுவரை வாய்திறக்காத மோடி, வீடியோ வெளியான பின்பு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
கடந்த 60 நாட்களாக பிரச்சினை தீவிரம் பெற்றிருந்தாலும் அதற்கு முன்பாக பல ஆண்டுகளாக இதற்கான சதித் திட்டங்களை ஆர்எஸ்எஸ் கும்பல் அரங்கேற்றி வருகிறது. நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பாகவே பாஜக அரசு ஓர் இனப்படுகொலைக்கு திட்டமிட்டு தயார் செய்து வந்துள்ளது. தற்போதைய கலவரத்திற்கு காரணம் பாஜக அரசு எனில், விதை போட்டது காங்கிரஸ் அரசுதான்.
இனப்படுகொலைக்கு வித்திட்ட காங்கிரஸ் - பாஜக அரசுகள்
பழங்குடி மக்கள் சமவெளியில் நிலம் வாங்க முடியும்; ஆனால் மெய்திக்களால் மலைகளில் நிலம் வாங்க முடியாத நிலைமையை காட்டி மெய்தி மேட்டுக்குடிகளிடம் பழங்குடி அந்தஸ்து கோரிக்கையை தூண்டிவிடுவது; அதன் மூலம் நிலம் பெறலாம் என்று கூறி அவர்களின் பெயரால் கார்ப்பரேட்டுகளுக்கு நிலங்களை தாரைவார்ப்பது; அதற்கு ஏற்றவாறு மணிப்பூர் நிலச் சீர்திருத்தச் சட்டத்தை திருத்துவது; வனப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் பெயர்களில் காடுகளை கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவது; இவற்றிற்கு தடையாக உள்ள பழங்குடிகளை காடுகளிலிருந்து வெளியேற்றுவது; அதன்பொருட்டு பழங்குடிகள் போதை தீவிரவாதத்தில் (Narcotic Terrorism) ஈடுபட்டு வருவதாகவும் (மலைகளில் கஞ்சா பயிரிடுவதாகவும்), மியான்மரிலிருந்து சட்டவிரோத குடியேற்றங்கள் பெருகிவிட்டதாகவும் வெறுப்பு பிரச்சாரங்களை கட்டியமைப்பது; இவ்விரண்டு போக்குகளால் உண்மையான பூர்வகுடிகளான மெய்திகளுக்கு வாழ்வுரிமை, நிலவுரிமை பறிக்கப்படுவதாக பொய் பரப்புரையை மேற்கொள்வது; மலைகளிலிருந்து பழங்குடிகளை வலுக்கட்டாயமாக புல்டோசர் மூலம் வீடுகளை தரைமட்டமாக்கி வெளியேற்றுவது; என்ற பாசிச செயல்திட்டங்களை மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு வந்த 2017ஆம் ஆண்டு முதலே துவங்கி விட்டது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியால் 1991ல் கொண்டுவரப்பட்ட "கிழக்கு நோக்கிய" (Looking East) கொள்கையானது 2014ம் ஆண்டு மோடி கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு "கிழக்கில் செயல்படும்" கொள்கை (Act East policy) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. "கிழக்கு நோக்கிய கொள்கை" மூலம் காங்கிரஸ் ஆட்சி உலகமய-தாராளமய-தனியார்மய கொள்கைகளை வடகிழக்கு மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தியது. பிறகு 2007ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் தெற்காசிய மேலாதிக்க நலன்களுக்காக உருவாக்கப்பட்ட "குவாட்" மற்றும் "தடையற்ற இந்தோ-பசிபிக்" திட்டங்களின் ஒரு அங்கமாக கிழக்கு நோக்கிய கொள்கை செயல்படத் துவங்கியது. பாஜக அரசு கிழக்கில் செயல்படும் கொள்கை மூலம் அதை தொடர்ந்து முன்னெடுத்தது. குவாட் கூட்டமைப்பில் உள்ள ஜப்பானுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாஜக அரசு 2017 ஆம் ஆண்டு 3.8.17 அன்று நடந்த இந்தோ-ஜப்பான் "ஆண்டு மாநாட்டில்" கையெழுத்திட்டது. ஜப்பானும், இந்தியாவும் இணைந்து வடகிழக்கு மாகாணங்களில் பல்வேறு உள்கட்டமைப்பு, வனப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கான "கிழக்கில் செயல்படுவதற்கான கூட்டமைப்பு" (Act East Forum) ஒன்றை உருவாக்கின. எனவே ஜப்பானும், அம்பானி மற்றும் அதானியும் வடகிழக்கு மாகாணங்களின் நிலவளம், காடு வளம் உள்ளிட்ட இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவே மேற்கூறிய பாசிச செயல்திட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. வடகிழக்கு மாநிலங்களின் வனங்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மணிப்பூர் நில சீர்திருத்த சட்டம் மற்றும் இந்திய வன சட்டத்தின் பிரிவுகளை திருத்துவது; 2023 வன பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது; சமவெளியில் வாழும் மக்கள் மலைகளில் நிலம் வாங்குவதற்கு தடையாக உள்ள சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வது மட்டுமின்றி அவர்களை பழங்குடிகளாக அறிவித்துவிட்டால் பழைய சட்டங்களை செல்லாக்காசாகி குறுக்கு வழியில் மலைகளில் உள்ள நிலங்களை மெய்திகளின் பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது போன்றவையே பாஜக ஆட்சியின் நோக்கமாகும். 2002 - 2017 காலகட்டத்தில் மணிப்பூரை ஆண்ட காங்கிரஸ் ஆட்சியிலேயே இந்தப் போக்குகள் துவங்கிவிட்டன. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இவை நாலுகால் பாய்ச்சல் வேகத்தில் நடந்து வருகின்றன.
90களிலிருந்தே வடகிழக்கு மாநிலங்களை புதிய பொருளாதார கொள்கைகளை அமல்படுத்தும் நோக்கில் இராணுவமயமாக்கி வந்தது காங்கிரசு அரசு. சிறப்பு அதிகார இராணுவ சட்டம் மூலம் பழங்குடிகளையும் தனிநாடு கேட்டு போராடிய ஆயுத குழுக்களையும் நரவேட்டையாடியது. சிறப்பு அதிகார இராணுவ சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இரோம் ஷர்மிளா 20 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்தார். 2004ம் ஆண்டு மணிப்பூரில் மனோரமா என்ற பழங்குடி பெண்ணை வன்புணர்ந்து படுகொலை செய்தது இந்திய இராணுவம்; அதை கண்டித்து ‘Indian Army Rape Us' என்ற பதாகையை ஏந்தி மணிப்பூர் பெண்கள் நிர்வாணப் போராட்டம் நடத்தினர்.
காஷ்மீரில் 370 இரத்தின் மூலம் காஷ்மீரிகளின் பெயரில் நிலம் வாங்கப்பட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. காஷ்மீரில் அதானியின் கூட்டாளியான ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எமீர் என்ற கார்ப்பரேட் முதலாளிக்கு 2லட்சம் சதுர அடியில் மால் ஒன்றை நிறுவுவதற்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே மெய்திக்களின் பெயரில் நிலம் வாங்கி கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்க பாஜக 371 C-யை இரத்து செய்ய முயன்று வருகிறது. அதன்பொருட்டே பழங்குடி அந்தஸ்து பிரச்சனையை தூண்டி வருகிறது.
வடகிழக்கு மாகாணங்களின் சந்தையை தெற்காசிய நாடுகளின் சந்தையுடன் இணைப்பதற்காகவும், அப்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதன் பெயரில், அமெரிக்க-ஜப்பான் மேலாதிக்கம் மற்றும் இந்திய துணை மேலாதிக்கத்தை நிறுவவும் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக - புதிய காலனிய மண்டலங்களாக அம்மாகாணங்களை மாற்றுவதற்காகவும், அதை எதிர்த்த பழங்குடிகளின் போராட்டங்களை நசுக்குவதற்காகவும் அசாம் ரைபிள்ஸ் (Assam Rifles), மத்திய பாதுகாப்பு படை மற்றும் எல்லை பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி அப்பகுதிளை காஷ்மீரைப் போல் இராணுவமயமாக்கி வருகிறது பாஜக அரசு. அங்கு இன, மத மோதல்களை உருவாக்குவதற்காக மெய்தி லீபன் (Meitei Leepan), அரம்பை தெங்கோல் (Arambai Tengol) உள்ளிட்ட சங்பரிவார குண்டர் படைகளை உருவாக்கியுள்ளது.
மணிப்பூரின் மொத்த மக்கள்தொகையில் (28.5 லட்சம்) 55% மெய்தி மக்களும், 45% பழங்குடி மக்களும் அடங்குவர். மொத்த நிலப்பரப்பில் 10-15% சமவெளி நிலப்பரப்பில் மெய்திகளும் (மணிப்பூரிகள்), மீதமுள்ள 90% மலை நிலங்களில் பழங்குடிகளும் வாழ்கின்றனர். மொத்த சட்டமன்ற தொகுதிகளில் (60) 40 தொகுதிகள் மெய்தி மக்களிடமிருந்தும், 20 தொகுதிகள் பழங்குடிகளிடமிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சட்டமன்றம், ஆளும் வர்க்கம், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள், முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை அனைத்தையும் 90% சமவெளிப் பகுதி மக்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். மெய்தி சமூகத்தினரில் இந்துக்கள், இசுலாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அடங்குவர். மெய்தி என்பது மணிப்பூரி மொழி பேசும் தேசிய இனத்தை குறிக்கிறது. குக்கி - நாகா பழங்குடிகள் குக்கி நாகா பழங்குடி மொழிகளை பேசும் பழங்குடியினத்தவர் ஆவர்; அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளனர். நிலத்தில் தனியுடைமை அற்ற சமூகமாக பழங்குடி சமூகம் உள்ளது. ஆகவே அங்கு இன்னும் தேசிய இன உருவாக்கம் நிகழவில்லை. அவ்வாறு உருவாகும் பட்சத்தில் அது தனி தேசிய இனமாகவே உருவாகும்.
பிரச்சினைக்கு விதைப் போட்ட காங்கிரசு ஆட்சி
2013 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் இப்பிரச்சனையை முதன் முதலில் துவக்கி வைத்தது. குவாட் மற்றும் தடையற்ற இந்தோ-பசிபிக் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக "கிழக்கு நோக்கிய கொள்கை"யை அமல்படுத்த தீவிரம் காட்டியது. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஜப்பான் ஒத்துழைப்பு கழகம் போன்றவற்றின் உதவியுடன் அந்நிய மூலதனத்தை வடகிழக்கு மாகாணங்களில் மேலும் குவிக்க துவங்கியது. அதற்காக, 2013 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் ஆட்சியே மெய்திகளை பழங்குடிகளாக மாற்றுவதற்கான நடவடிக்கையை முதலில் துவக்கியது. பழங்குடி நலன்களுக்கான ஒன்றிய அமைச்சரவை (Ministry of Tribal affairs) மணிப்பூர் காங்கிரஸ் அரசுக்கு மெய்திகளுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கான பரிந்துரையை அனுப்புமாறு கடிதம் எழுதியது. அதைத்தொடர்ந்து மணிப்பூர் பழங்குடி சங்கம் (மெய்தி சங்கம்) உயர்நீதிமன்றத்தில் மெய்திகளை பழங்குடிகளாக அறிவிக்க கோரியும், தாங்களே பழங்குடிகளின் பழங்குடிகள் (Tribes of Tribes) என்றும் மனுத்தாக்கல் செய்தது. அதற்கான தீர்ப்பே 2023 மார்ச் 27 அன்று வெளிவந்த தீர்ப்பாகும். மணிப்பூர் பழங்குடி சங்கம் அன்று காங்கிரசு பின்புலத்தில் செயல்பட்டது; இன்று பாஜக பின்புலத்தில் செயல்படுகிறது.
2015ஆம் ஆண்டு மெய்திகளை பழங்குடிகளாக அறிவிக்கக்கோரி மெய்தி பழங்குடி சங்கம், மெய்தி மாணவர் சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன. காங்கிரசு முன்னெடுத்த அணுகுமுறையை பாஜக பயன்படுத்த துவங்கியது. இப்போராட்டங்களை சங்பரிவார கும்பல்களும் பாஜகவும் பின்புலத்திலிருந்து ஆதரித்தன. மணிப்பூரில் ஆட்சியைப் பிடிக்க மெய்தி மக்களின் ஆதரவும், அதற்காக மெய்தி மற்றும் பழங்குடிகளை பிளவுபடுத்துவதும் இவ்விரு கட்சிகளுக்கும் அவசியமாக இருந்தது; இருந்து வருகிறது. மெய்தி மற்றும் பழங்குடிகளுக்கு சட்டமன்ற பிரதிநிதித்துவம் முறையே 40:20 என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் பாரபட்சமாக ஒதுக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாகும். காங்கிரசு அரசு பெருந்தேசிய இனவெறி கண்ணோட்டத்திலிருந்து மெய்தி பேரினவாதம் எதிர் பழங்குடியினம் என்ற இனவாத பிளவுகளை உண்டாக்கி வருகிறது. பாஜக மெய்தி இந்துக்கள் எதிர் மெய்தி இஸ்லாமியர்கள் எதிர் கிறிஸ்தவ பழங்குடிகள் என்ற மத ரீதியான பிளவுகளை உண்டாக்கி வருகிறது. அவ்வளவுதான் வேறுபாடு. மற்றபடி இரு கட்சிகளின் பொருளியல் நோக்கம் - வர்க்க நலன் ஒன்றுதான். 2015ம் ஆண்டு நடந்த போராட்டம் உள்நுழைவு அனுமதி முறை (ILPS) மற்றும் பழங்குடி அந்தஸ்து கோரிக்கைகளுடன் துவங்கி தொடர் போராட்டமாக பரிணமித்தது. இதை எதிர்நோக்கி காத்திருந்த மணிப்பூர் காங்கிரஸ் அரசு ஆகஸ்ட் 31 அன்று மூன்று மசோதாக்களை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.
- மணிப்பூர் நில வருவாய் மற்றும் நில சீர்திருத்த சட்டம் 1960 (Manipur Land revenue and Land reform act) - ஏழாவது சட்ட திருத்த மசோதா 2015
- மணிப்பூர் மக்கள் பாதுகாப்பு மசோதா 2015 (Protection of Manipur’s people bill)
- மணிப்பூர் வணிக மேம்பாடு மற்றும் வணிக நிலைய மேம்பாட்டு மசோதா 2015 (இரண்டாவது திருத்தம்) ((Manipur shops and Business establishment bill (second amendment))
அரசியல் அமைப்பு சட்டம் 371C ஆனது, மணிப்பூரின் மலைப் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 19 சட்டமன்ற பிரதிநிதிகளை உள்ளடக்கிய "மலைப்பிரதேச கமிட்டிக்கு" (HAC - Hill Areas Committee) சில சிறப்பு உரிமைகளை வழங்கியுள்ளது. 13 தலைப்புகளில் மலைப்பிரதேசங்களின் நிர்வாகம் குறித்து அரசுக்கு வழிகாட்ட அக்கமிட்டிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மலைப்பிரதேசங்களில் மெய்திகள் இந்த கமிட்டி ஒப்புதல் இல்லாமல் நிலம் வாங்க முடியாது என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.
மணிப்பூர் நிலச் சீர்திருத்த சட்டம் (MLR&LR Act, 1960) பாராளுமன்றத்தில் 1960-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதாவது மணிப்பூர் இந்தியாவோடு இணைக்கப்பட்ட ஆண்டான 1949க்கு பிறகும், மணிப்பூருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்ட 1972-ம் ஆண்டுக்கு முன்பும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் மணிப்பூரின் சமவெளிப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும். அதாவது மலைப் பிரதேசங்களுக்கு இது பொருந்தாது. நில வருவாய் மற்றும் நில நிர்வாகம் மட்டுமின்றி, இச்சட்டம் பழங்குடிகளின் உரிமை குறித்தும் பின்வருமாறு கூறுகிறது:
- பழங்குடியினர் அல்லாத ஒருவர் பழங்குடியினத்தவரிடமிருந்து நிலம் வாங்கினால் அது செல்லத்தக்கதல்ல.
- ஒரு பழங்குடியினத்தவர் (ST) மற்றொரு பழங்குடியினத்தவருக்கு நிலத்தை விற்கலாம் அல்லது வாங்கலாம்.
- பழங்குடியினத்தை சாராத ஒருவர் நிலம் வாங்க வேண்டுமெனில் மலைப்பிரதேச கமிட்டியின் துணை ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
- கூட்டுறவு சங்கத்திற்கு பழங்குடியினர் குத்தகையின் பெயரில் நிலம் வழங்கலாம்.
பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு உரிமைகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், மெய்திகளுக்கு நிலம் வாங்கும் உரிமைகளை வழங்கும் வகையிலும் 1960 சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது காங்கிரசு ஆட்சி. அதாவது,மலைப்பிரதேசங்களில் நிலங்களை வாங்குவதற்கு சமவெளியில் இருப்பவர் மலைப்பிரதேச கமிட்டியின் துணை ஆணையரிடம் முன் அனுமதி பெற தேவையில்லை என்று சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்காக "உள் நுழைவு அனுமதி" முறையை கொண்டு வருவதற்கும், மணிப்பூரின் சமவெளி பகுதியையும் சேர்த்து ஒட்டுமொத்த மணிப்பூர் மாநிலத்தையே பழங்குடி மாநிலமாக அறிவிப்பது; அதன்மூலம் மெய்திகளையும் பழங்குடிகளாக மாற்றுவது; 1951 ஐ கட்-ஆப் ஆண்டாக கொண்டு சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் வகையில் கணக்கெடுப்பு நடத்துவது போன்ற நோக்கங்களுக்காகவும் மணிப்பூர் மக்கள் பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்பட்டது. சட்டவிரோத குடியேறிகள் வர்த்தகம் செய்வதை தடுப்பது (அதாவது பழங்குடிகள் கடைகள் வைக்கவும், வர்த்தகம் செய்யவும் தடுப்பது); கார்ப்பரேட்டுகளை வர்த்தக துறையில் அனுமதிப்பது என்ற நோக்கிலிருந்து மூன்றாவது மசோதா கொண்டு வரப்பட்டது. 1951 கணக்கெடுப்பு திட்டம் என்பது 1961 NRC கணக்கெடுப்பிற்கு முன்னோடி திட்டமாகும்.
எந்த ஒரு சட்டம் கொண்டு வந்தாலும் பழங்குடி கமிட்டிகளிடம் கலந்தாலோசிக்க வேண்டுமென்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் இம்மூன்று மசோதாக்களையும் பழங்குடி கமிட்டிகளிடம் கலந்து ஆலோசிக்காமலேயே கொண்டுவந்தது காங்கிரஸ் ஆட்சி. இதை எதிர்த்து பழங்குடி சங்கங்கள் போராட்டத்தை அறிவித்தன. பழங்குடி மக்கள் இவற்றை "பழங்குடியினருக்கு துரோகமிழைக்கும் சட்டங்கள்" என்று முழங்கி போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தை கடுமையாக ஒடுக்கியது காங்கிரசு ஆட்சி. அதில் 9 பழங்குடி இளைஞர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவரின் உடலை வாங்க மறுத்து 600 நாட்களுக்கும் மேல் தொடர் போராட்டத்தை பழங்குடி மக்கள் நடத்தினர். மசோதாக்கள் திரும்பப் பெறப்படும் வரை உடலை வாங்க மாட்டோம், புதைக்க மாட்டோம் என முழங்கினர். இதையடுத்து ஜனாதிபதி அம்மசோதாக்களை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினார். அதன்பிறகே போராட்டத்தை திரும்பப் பெற்றனர் பழங்குடிகள். அப்போது பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
"குக்கி அறிவுக் குழாம்"(Kuki 20 Intellectual forum) எனும் அமைப்பின் தலைவர் Dr.T.S.ஹாவோகிப் 2015 நில சீர்திருத்த மசோதா குறித்து கூறுவதாவது:
"குக்கி கிராமங்களில் நிலங்கள் பழங்குடியின தலைவர்களு(Chiefs)க்கு சொந்தமானதாகும். எந்தவொரு தனிநபர் பெயரிலும் இங்கு நிலம் இல்லை. பாரம்பரிய வழக்கப்படி தலைவர்களே புதிய கிராமங்களை உருவாக்குவார்கள். பிரிட்டிஷ் வருகைக்கு முன்பிருந்தே இந்த வழக்கம் இங்கு நிலவுகிறது. 1993-ல் குக்கி-நாகா கலவரத்தில் வீடு இழந்த குக்கிகள் குக்கி வாழ் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்." என்கிறார்.
மேலும்,
"மணிப்பூர் நில சீர்திருத்த மசோதா 2015 ஆனது பழங்குடிகளின் உரிமைகளை நீர்த்து போகச் செய்யும் நோக்கிலேயே கொண்டு வரப்பட்டது. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 60% பேர் 10% நிலப்பரப்பில் வசிக்கின்றனர்; இது நிலத்தின் மீதான அழுத்தத்தை கூட்டுகிறது; பெருகி வரும் மக்கள் தொகையால் பெரும்பாலான சமவெளி பகுதியினர் வீட்டுமனை இல்லாமல் தவிக்கின்றனர் என்று மசோதா கூறியது. மணிப்பூர் சாராத மக்களுக்கு நிலம் விற்கப்படுவதை தடுப்பதன் மூலம் மணிப்பூர் மக்கள் அனைவருக்கும் நில உத்திரவாதம் செய்வது அவசியம் என்று மசோதா கூறியது" என்கிறார்.
குக்கி, நாகா போன்ற பழங்குடிகள் வடகிழக்கு மாகாணங்கள் முழுக்கவும், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பரவி வாழ்கின்றனர். மியான்மரில் இனப்படுகொலை நிகழ்ந்தபோது குக்கிகள் மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அகதிகளாக வந்தனர். இவர்களைத்தான் சட்டவிரோத குடியேறிகள் என்று காங்கிரசும், பாஜகவும் பிரச்சாரம் செய்து வருகின்றன. இலங்கையிலிருந்து தமிழகம் வரும் மக்களை சட்டவிரோத குடியேறிகள் என்று எவ்வாறு சொல்ல முடியாதோ, அவ்வாறே குக்கிகளையும் சட்டவிரோத குடியேறிகள் என சொல்ல முடியாது. தாயகம் திரும்பும் அகதிகள் என்றுதான் சொல்ல முடியும். இதை இனவெறுப்பு பிரச்சாரமாக காங்கிரசும், மதவெறுப்பு பிரச்சாரமாக பாஜகவும் கட்டியமைத்து வருகின்றன.
பாஜக ஆட்சிக்குப் பிறகு
காங்கிரசு ஆட்சி மீது வெறுப்புணர்வு கொண்டிருந்த பழங்குடிகளின் ஆதரவை பெற முயற்சித்தது பாஜக. மெய்தி-பழங்குடி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என பொய் வாக்குறுதிகளை தந்து லோக் ஜனசக்தி, தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2017ல் பைரன்சிங் தலைமையில் ஆட்சியை பிடித்தது. ஆனால் தொடர்ந்து பழங்குடிகளுக்கு எதிரான அணுகுமுறையையே கையாள துவங்கியது. மெய்திகளின் பாரம்பரிய மதமான 'சன்மஹி' (சன்மஹி என்பது இந்து மதத்தின் தூய வடிவம் என்று ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்கிறது) பண்பாட்டை மீட்பது; கிறித்துவ, இசுலாமிய மத சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை கக்குவது; பழங்குடிகளை மியான்மர் வந்தேறிகள் என்பது; சர்வதேச போதை தீவிரவாதத்துடன் தொடர்பு கொண்டு அவர்கள் கஞ்சா பயிரிடுவதாக பிரச்சாரம் செய்வது; போன்ற பாசிச செயல் தந்திரங்களை மெய்தி லீபன், அரம்பை தெங்கோல் போன்ற சங்பரிவார குண்டர் படையின் மூலம் செய்து வந்தது; வருகிறது.
பௌத்த மத செல்வாக்கிலிருந்து வட கிழக்கு மாகாணங்களை மீட்டு அங்கு இந்து ராஷ்டிரத்தை அரங்கேற்ற வேண்டும் என்ற சாவர்க்கரின் கொள்கைக்கு நடைமுறை வடிவம் தருகிறது பாஜக. பௌத்த மதத்திலிருந்து பெருமளவிற்கு தற்போது கிறித்தவ மதத்திற்கு பழங்குடிகள் மாறியுள்ளனர். எனவே கிறித்தவ மத எதிர்ப்பு பிரச்சாரத்தை செய்து வருகிறது. இதன் மூலம் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக அப்பகுதியை மாற்றியமைப்பது அதன் பொருளியல் அடிப்படையாகும்.
மணிப்பூர் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பழங்குடிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்திராசூட் அவர்கள் "யார் பழங்குடி, யார் பழங்குடி இல்லை என்பதை உயர்நீதி மன்றேமா, மாநில அரசோ தீர்மானிக்க முடியாது. மணிப்பூர் உயர் நீதிமன்ற தீர்ப்பு அரசியல் சட்டத்திற்கு எதிரானது" என்று தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2000ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடந்த மகாராஷ்டிர அரசு எதிர் மிலின்ட்(Milind) வழக்கில் இதற்கான வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் 342(1)ன் படி ஒவ்வொரு மாநிலத்திலும் பழங்குடிகளின் பட்டியலை அறிவிக்க ஜனாதிபதிக்கே அதிகாரம் உண்டு. அவ்வாறு அறிவித்த பின்பு 342(2)ன் படி யாரை சேர்ப்பது, யாரை நீக்குவது என்ற அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உண்டு என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, மெய்திகளின் பழங்குடி அந்தஸ்து கோரிக்கையும், அதை அங்கீகரித்த நீதிமன்ற தீர்ப்பும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்பது எளிதில் விளங்கும்.
எல்லாவற்றையும் விட முக்கியமானதாக கவனிக்க வேண்டியது எதுவெனில், பழங்குடி அந்தஸ்து கோரிக்கை இடஒதுக்கீட்டிற்கானதாக மட்டும் அல்லாமல் அது நில உரிமை பிரச்சினையுடன் (Land rights) இணைந்துள்ளதே ஆகும். அரசு பணிகளில் பழங்குடிகள் அதிகளவு ஆக்கிரமித்துள்ளதாக பாஜக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. உண்மையில் மொத்த அரசு பணிகளிம் 5.7% மட்டுமே பழங்குடிகள் உள்ளனர்.
மணிப்பூரில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பைரன்சிங் அரசு மேற்கூறியவாறு மதவெறி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி "கிழக்கில் செயல்படும் கொள்கையை" நடைமுறைப்படுத்த அதீத முனைப்புடன் செயல்பட துவங்கியது.
மலைகளில் உள்ள வனங்களை ஆக்கிரமிப்பதற்காக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று மலைப்பகுதி வனங்களை அறிவிக்கும் அரசாணை ஒன்றை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பைரன்சிங் அரசு வெளியிட்டது. இந்த ஆண்டின் துவக்கத்திலியே குக்கி மக்களின் பயோ மெட்ரிக் தகவல்களை திரட்டி சரிபார்க்கும் வேலையை மணிப்பூர் அரசு துவங்கிவிட்டது. அசாமில் தேசிய பதிவேடுகள் திட்டம் உச்சநீதி மன்றத்தால் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் எந்த சட்ட நடைமுறையையும் மணிப்பூர் அரசு பின்பற்றவில்லை. அனைத்து பழங்குடி கிராமங்களிலும் வீடு வாரியாக பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் பைரன்சிங் தெரிவித்துள்ளார். உண்மையில் ஏற்கனவே இந்த பணி துவங்கிவிட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடிகள் ஜனவரி மாதத்திலிருந்து சட்டவிரோத குடியேறிகள் என்று சூரசந்பூர், டெங்னோபால் மாவட்டங்களிலிருந்து (மியான்மர் எல்லையோர மாவட்டம்) வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மணிப்பூர்-மியான்மர் எல்லையில் 34 புதிய காவல் சாவடிகளை (posts) உருவாக்கப் போவதாக முதல்வர் அறிவித்துள்ளார். மத்திய அரசு மணிப்பூர் அரசுடன் இணைந்து மணிப்பூர்-மியான்மர் எல்லையில் இரும்பு வேலியை அமைத்து வருகிறது. அரசின் இந்த செயல்பாடுகளால் மெய்திகளிடையே அந்நிய ஊடுருவல், போதை தீவிரவாதம் போன்ற கருத்துகள் செல்வாக்கு பெற்று வருகின்றன.
'பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி' எனும் மோசடி திட்டத்தை மலைப்பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில் நில அளவை செய்யும் (Land survey) பணிகளையும் துவங்கிவிட்டது பைரன் சிங் அரசு. புல்டோசர் மூலம் குக்கி குடியேற்றங்களை தரைமட்டமாக்கி வருகிறது. எவ்வித நட்ட ஈடோ மறுவாழ்வு திட்டமோ இல்லாமல் சட்ட விரோதமாக செய்துவருகிறது. சொந்த மண்ணிலேயே தங்களது ஆணி வேர் அறுக்கப்பட்டு அகதிகளாக மாற்றப்படுவதை குக்கி மக்களால் ஏற்க முடியவில்லை. ஆகவேதான் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 100 ஆண்டு காலமாக வாழ்ந்துவரும் எங்களை வன ஆக்கிரமிப்பாளர்கள் என்று அரசு கூறுவது பொய். உண்மையில் அரசுதான் எமது காடுகளை ஆக்கிரமிக்கிறது என்று பழங்குடியின தலைவர்கள் கூறுகின்றனர்.
10.3.2023 அன்று பழங்குடி தலைவர்கள் கூட்டமைப்பு (Indigenous Tribal’s Leader Forum) மலை மாவட்டங்களான சூரசந்பூர், டெங்னோபல், கங்போக்பி, உக்ருல் மற்றும் ஜிரிபம் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைதி ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்தது. 2022 நவம்பர் மாதம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக குக்கி வாழ் மலைப் பிரதேசங்களிலுள்ள வனங்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதற்காக அரசானை ஒன்றை பைரன் சிங் அரசு வெளியிட்டது. இதன் பிறகு தொடர்ந்து மலைப்பிரதேச காடுகளை பாதுகாப்பது எனும் பெயரில் குக்கி மக்களை புல்டோசர் மூலம் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்ற துவங்கியது. பிப்ரவரி மாதம் பெருமளவில் வெளியேற்றம் நடந்தது. இது இந்திய வனச் சட்டம் 1927 மற்றும் வன உரிமைச் சட்டம் 2006-க்கு எதிரானது என்று கூறியே இந்த அமைதி ஊர்வலத்தை பழங்குடியினர் ஏற்பாடு செய்தனர்.
வனப்பாதுகாப்பு, சூற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் பெயர்களில் வனப்பூங்கா, விலங்குகள் பூங்கா உள்ளிட்ட காடழிப்பு திட்டங்களுக்கு அதானி, அம்பானி மற்றும் ஜப்பானின் ஜிகா (JICA) நிறுவனதிற்கு அனுமதி தரப்பட்டதே பாஜக அரசின் பாசிச நடவடிக்கையின் பொருளியல் அடிப்படையாகும். இதற்காகவே வனப்பாதுகாப்பு மசோதாவை மார்ச் 29 2023 அன்று பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது பாஜக அரசு. இது குறித்து பிறகு பார்ப்போம்.
மார்ச் 10 அன்று நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதில் சுமார் 20 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து பாஜக அரசு மலைப்பகுதிகளில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது. பிறகு அன்று இரவே குக்கி தேசிய இராணுவம் (KNA) மற்றும் ஜோமி புரட்சிகர இராணுவம் (ZRA) எனப்படும் குக்கி ஆயுத குழுக்களுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை (SOO – Suspensionof Operation) தன்னிச்சையாக விலக்கி கொண்டது. இதன் மூலம் பைரன்சிங் அரசு இரண்டு பிரச்சினைகளுக்கு வித்திட்டது. ஒன்று, குக்கி ஆயுத குழுக்கள், புது டில்லி மற்றும் இம்பாலுக்கு (மணிப்பூரின் தலைநகர்) இடையிலான முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தையை தன்னிச்சையாக முறித்துக்கொண்டது. இரண்டு, குக்கி மக்களுக்கு குக்கி ஆயுத குழுக்களுக்களுடன் நேரடி தொடர்பு இருப்பதாக பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டது. அதாவது குக்கி மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்கள் மீதான பாசிச ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் நோக்கிலிருந்து இதை பாஜக அரசு செய்தது. மேலும் முதல்வரான பைரன்சிங்கே நேரடியாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் "குக்கி மக்களின் போராட்டங்களுக்கு நிதி வழங்குவதற்காக மியான்மரிலிருந்து வரும் சட்டவிரோத குடியேறிகள் கஞ்சா பயிரிடுதல் (Poppy cultivation) மற்றும் போதை வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள்" என்று கூறி சமவெளி மற்றும் மலைவாழ் மக்களை பிளவுபடுத்தும் வேலையை செய்தார். மேலும் குக்கி ஆயுத குழுக்களுடன் குக்கி மக்களின் போராட்டங்களை தொடர்புபடுத்தியது மட்டுமின்றி ஜோமி புரட்சிகர இரானுவம்(ZRA) எனும் குழுவிற்கு மியான்மரின் முன்னாள் எம்.பி தலைமை தாங்குவதாகவும், குக்கி தேசிய இராணுவம்(KNA) நாகலாந்திலிருந்து குக்கி பழங்குடியின தலைவரால் இயக்கப்படுகிறது எனவும் கோயபெல்ஸ் பிரச்சாரத்தை மேற்கொண்டார். குக்கி பழங்குடிகள் மற்றும் மலைப்பிரதேச கமிட்டிகள் ஒட்டுமொத்தமாக மியான்மர் மற்றும் எல்லை நாடுகளால் வெளியிலிருந்து இயக்கப்படுகின்றன எனும் இந்தப் பிரச்சாரத்தை மெய்தி லீபன், அரம்பை தெங்கோல் போன்ற சங்பரிவார கும்பல்கள் மக்களிடையே தொடர் பிரச்சாரம் செய்து வந்தன; வருகின்றன. மெய்தி லீபனின் தலைவர் பிரமோத் சிங் "இது மியான்மரிலிருந்து வரும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதை தீவிரவாதத்திற்கு எதிரான உலகப்போர்; இந்தியா அந்நிய சக்திகளால் ஊடுருவப்படுவதை எதிர்க்கும் போர்; 1961ம் ஆண்டை கட்-ஆப் ஆண்டாக வைத்துக்கொண்டு மணிப்பூரில் தேசிய குடிமகன்கள் பதிவேடு (NRC) திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" என்று வெளிப்படையாக பேட்டி அளிக்கிறார்.
மார்ச் 10 அன்று நடந்த போராட்டத்தின் போது போராட்ட இயக்கத்தின் (ILTF) தலைவைர் டோம்பிங் வெளிப்படையாக "இப்போராட்டத்தில் அரசியல் கட்சிகள், ஆயுத குழுக்களுக்கு இடமில்லை" என்பதை அறிவித்து அவ்வாறே நடத்தியும் காட்டினார். உண்மையில் அது பழங்குடி மக்களின் அமைதி ஊர்வலமாகவே நடந்தது. குக்கி ஆயுத குழுக்களுடன் தொடர்புடைய (17 Kuki SOO groups) குக்கி தேசிய கழகத்தின் (KNC) செய்தி தொடர்பாளர் முதல்வர் பேசிய அதே ஊடகத்தில் "பூர்வகுடி பழங்குடியின தலைவர் கூட்டமைப்பு (ITLF) எமது அமைப்பை போராட்டத்திலிருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தியது" என்று பேட்டியளித்தார். குக்கி இன்பி (Kuki Inpi) எனப்படும் அனைத்து பழங்குடிகளின் தலைமை உறுப்பின் (Apex body) தலைவர் கோங்சாய் "போதை தீவிரவாதம் என்பது பொய்பிரச்சாரமாகும். குக்கி பழங்குடிகள் வாழ்வதற்காக கசகசா பயிரிடுகிறார்கள். இதைத்தான் கஞ்சா பயிரிடுகிறார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. மியான்மரிலிருந்து மணிப்பூருக்கு திரும்பி வருபவர்கள் மணிப்பூரின் பூர்வகுடிகளே ஆவர். அவர்கள் சட்டவிரோத குடியேறிகள் அல்ல" என்கிறார்.
ஒருசில இடங்களில் கஞ்சா பயிரிடுதல் மெய்தி ஆளும் வர்க்கம் மற்றும் மெய்தி மேட்டுக்குடிகளின் உத்தரவின் பெயரில் நடக்கிறதே ஒழிய சர்வதேச போதை தீவிரவாதம் என்பது பொய்யான பிரச்சாரம் என்று பழங்குடியினத் தலைவர்கள் கூறுகின்றனர்.
பாஜக முதல்வரும், சங்பரிவார கும்பலும் மியான்மரில் இராணுவ ஆட்சியால் ஒடுக்கப்படும் குக்கி-சின் (chin) பழங்குடிகள் பெருமளவில் மணிப்பூருக்கு சட்டவிரோதமாக குடியேறுவதாகவும், அது மெய்திகளை சிறுபான்மையாக்கி பூர்வகுடி அந்தஸ்தை இழக்க நேரிடும் என்றும் மெய்தி இந்து பேரினவாத வெறியையும், தேசிய வெறியையும் தூண்டி வருகிறது. ஆர்.எஸ்.எஸின் ஊது குழலான "ஆர்கனைசர்" இதழுக்கு அளித்த பேட்டியில் "மியான்மரிலிருந்து வரும் சட்டவிரோத அந்நிய குடியேறிகளால் மாநிலத்தின் பூர்வகுடிகள் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள்" என்று கூறுகிறார் பைரன்சிங். மேலும் அசாமில் தேசிய பதிவேடுகள் திட்டம் செயல்படுத்தப்படுவதைப் போல மணிப்பூரிலும் செயல்படுத்தப் போவதாக அறிவித்தார். இந்த கோரிக்கையும் உள்நுழைவு அனுமதி முறையும் மெய்திகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை இருந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்போக்பி மாவட்டத்தின் (மலை மாவட்டம்) மங்க்ஜோல் கிராமத்தில் நடந்த வன திருவிழாவில் (Forest Festival) கலந்துகொண்ட பைரன் சிங் "மணிப்பூர் நிலம் அனைத்தும் அரசுக்கே சொந்தம்" என்று பேசினார். மார்ச் 10 அன்று நடந்த குக்கிகளின் போராட்டத்தின் போதும்கூட இதை வலியுறுத்தும் விதமாக பேசிய அவர் "மணிப்பூர் முழுவதையும் குக்கிகளே ஆக்கிரமித்துள்ளார்கள்" என்று வஸ்பீர் ஹீசைன் எனும் அசாம் பத்திரிக்கையாளரிடம் தொலைபேசி நேர்காணலில் தெரிவித்தார். பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளை மலைப்பிரதேசங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டம் குறித்து அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு குக்கி மாணவர் கழகம் கோரிக்கை வைத்தும் பாஜக அரசு அதை நிராகரித்துவிட்டது. 2022ம் ஆண்டு முதலே சூரசந்த்பூர்-கௌபம் (Khoupum) காடுகளை பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவித்து அரசு ஆக்கிரமித்து வருவதை மாணவர் கழகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய வனங்கள் சட்டம்-1927 மணிப்பூர் மாநிலத்திற்கு பொருந்தாது எனவும், பாதுகாக்கப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு சட்டசபையால் ஏற்கப்பட வேண்டும் எனவும் குக்கி எம்.எல்.ஏ ஹாவோசிப் கூறுகிறார். ஆனால் மணிப்பூர் மலைப்பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓர் அரசாணை மூலம் முதல்வர் இரத்து செய்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
தேர்தலுக்கு முன்பு சமவெளி மற்றும் மலைப்பிரதேசங்களுக்கிடையிலான பிளவு சரி செய்யப்படும் எனவும், "மலைகளுக்கு செல்வோம்" (Go to hills) எனும் இயக்கத்தை முன்னெடுப்போம் எனவும் கூறிய பாஜக கும்பல், ஆட்சிக்கு வந்த பிறகு "மணிப்பூர் நிலப்பரப்பில் இனி குக்கிகளுக்கு இடமில்லை" எனும் நிலையை உருவாக்கி வருகிறது.
2021-ம் ஆண்டு குக்கி, நாகா, மற்றும் பிற பழங்குடி இனத்தைச் சேர்ந்த சட்டமன்ற பிரதிநிதிகளை உள்ளடக்கிய (18பேர்) மலைப்பிரதேச கமிட்டியானது (HAC) தன்னாட்சி அதிகாரம் வழங்க கோரும் "மாவட்ட தன்னாட்சி கவுன்சில் திருத்த மசோதா 2021" ஐ முன்மொழிந்தது. அரசியல், பொருளியல் துறைகளில் தன்னாட்சி கோரும் இம்மசோதாவை மாநில அரசு நிராகரித்துவிட்டது. இதை எதிர்த்தும் கூட 2021-ல் போராட்டம் நடந்தது. ஆனால் பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை.
பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் புதியகாலனிய பிரதேசங்களாக - வேட்டைக்காடாக மாற்றப்படும் வடகிழக்கு மாநிலங்கள்
2017-ல் இந்தியாவும், ஜப்பானும் வடகிழக்கு மாகாணங்களில் முதலீடு செய்வதற்கான "கிழக்கில் செயல்படும் கூட்டமைப்பை" (Act East Forum) உருவாக்கியது. இது குவாட் மற்றும் வெளிப்படையான தங்குதடையற்ற இந்தோ-பசிபிக் திட்டங்களின் (Free and Open Indo-Pacific) ஓர் அம்சமாகும். இந்த கூட்டமைப்பில் பின்வரும் திட்டங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
1. நீடித்த வேளாண்மை மேம்பாடு மற்றும் நீர்பாசன மேம்பாடு
2. மூங்கில் காடுகளை உருவாக்கி இணைப்பது (Bamboo Value chain); அதை பலப்படுத்துவது
3. தேயிலை தோட்டம், இயற்கை விவசாயம் மற்றும் தோட்டக்கலை துறைகளை உருவாக்குதல்
4. சுற்றுலாத்துறை மற்றம் கலாச்சார பரிவர்த்தனைகளை மேம்படுத்துதல்: (இந்தியா - ஜப்பான் இடையில்)
5. திறன்மிகு இந்தியாவை உருவாக்குதல் (Skill India)
அ) ஜப்பானிய திறன்மிகு பயிற்சி மையங்களை உருவாக்குவது JEC); (குறிப்பாக அசாமில் உள்ள IIT நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது
ஆ) ஜப்பானிய மொழி மேம்பாட்டு கல்வியை JICA (Japan International Cooperation Agency) வின் ஜப்பான் அயல்நாடு ஒத்துழைப்பு தன்னார்வலர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஜப்பான் அறக்கட்டளை (JF – Japan Foundation) திட்டங்கள் வாயிலாக மேம்படுத்துதல்.
இ) பயிற்சியாளர்கள், தொழிலாளர்களை தொழில்நுட்ப பயிற்சி திட்டத்தின் கீழும் (Technical internship Training Program), "சிறப்பு திறன்மிகு தொழிலாளர் முறை" (Specified skilled worker) திட்டத்தின் கீழும் ஜப்பானுக்கு அனுப்புதல்
ஈ) ஜப்பான் ஒத்துழைப்பு கழகத்தின் (JICA) சக-படைப்பாக்க திட்டம் (Co-creation Programme)
6. நகர மேம்பாடு:
அ) நீர் விநியோகம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம்
ஆ) சுற்றுச் சூழல் மேம்பாடு
இ) மூலதனத்தை ஈர்த்தல் மற்றும் உற்பத்தியை மேம்படுத்தலுக்காக "ஜப்பான் தொழில் நகரங்களை" உருவாக்குதல்
ஈ) நகர மேம்பாட்டிற்கான கோஹிமா ஸ்மார்ட் சிட்டி திட்டம் (Kohima smart city project)
7. சுகாதாரம்:
அ) சுகாதார துறையை பலப்படுத்துவது; மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது
ஆ) மிசோரமில் புற்றுநோய் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்குவது; நாகலாந்தில் மருத்துவக் கல்லுரி மருத்துவமனை தரத்தை உயர்த்துவது
8. காட்டு வளங்களின் ஆக்கபூர்வமான நீடித்த பயன்பாட்டை ஊக்குவித்தல்
9. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) துறையை வளர்த்தெடுத்தல் - மேகாலாயாவில் ஹைட்ரோ எலக்ட்ரிக் ஆற்றல் நிலையத்தை உருவாக்குதல்
10. அ) நகர சாலை மேம்பாடு (JICA’s Technical Co-operation project)
ஆ) மலைகளில் சாலை மேம்பாடு
இ) இயற்கை பேரழிவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான பயிற்சி
ஈ) நாகாலாந்தில் அவசர கால நிர்வாகத்திற்கான பயிற்சி நிலையம் அமைத்தல்
11. வடகிழக்கு சாலை இணைப்பு மேம்பாடு
அ) மேகலாயா - NH 40, NH 51 (National Highways)
ஆ) மிசோரம் - NH 54
இ) திரிபுரா - NH 208
ஈ) அசாம் - NH 127B
- துப்ரி-புல்பரி மேம்பாலம்
- பிரம்மபுத்திரா ஆற்றின் மேல் 20 கி.மீ நீள மேம்பாலம்
இத்திட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 6 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குவாட் திட்டம் உருவாக்கப்பட்ட போதே ஜப்பானுடன் காங்கிரசு அரசு பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ஜப்பானின் நிதிமூலதனத்தை இம்மாநிலங்களில் திறந்துவிட துவங்கிவிட்டது. 2017ம் ஆண்டு பாஜக அரசும், ஜப்பான் அரசும் இணைந்து கிழக்கில் செயல்படும் கூட்டமைப்பை உருவாக்கி இம்மாநிலங்களில் மேற்கூறிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மணிப்பூரில் மே 20-21, 2017 - அன்று இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் டெல்லியில் இயங்கி வரும் 38 ஜப்பானிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை மணிப்பூர் தலைநகரமான இம்பாலுக்கு அழைத்துச் சென்று முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
JICA நிறுவனம் மட்டுமின்றி உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் மூலதனம் இம்மாநிலங்களை ஆக்கிரமித்துள்ளது. உலக வங்கியின் மூலதனமும் 90களிலிருந்தே ஊடுருவி வந்தாலும் கிழக்கில் செயல்படும் கொள்கைகளுக்கு பிறகு பல மடங்கு பெருகியுள்ளது. அங்கு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தொடர்ந்து கடன் அளித்து வருகிறது. மிசோராமில் சாலை மேம்பாட்டு திட்டங்கள், மேகாலயாவில் 400KV உயர் மின் அழுத்த பரவல் - விநியோக திட்டம் மற்றும் சுரங்க திட்டம் போன்றவை உலக வங்கியால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 24.06.2016 ல் 6 மாநிலங்களில் 'பரவல் மற்றும் விநியோக வலைப்பின்னல் (Transmission and Distribution Network) திட்டத்திற்கு' 470 மில்லியன் டாலர் கடன் வழங்கியுள்ளது. நீர் மேலாண்மையில் அதிகளவு ஈடுபட்டு வருகிறது. நீரியல் திட்டங்களுக்கு 175 மில்லியன் டாலர் கடன் வழங்கியுள்ளது. புதிய ஹைட்ரோ மெட் (Hydro met) நிலையங்களை உருவாக்கியுள்ளது. கிராமப்புற மேம்பாட்டு திட்டங்களுக்காக உலக வங்கியும், மத்திய அரசும் முறையே 614.8 கோடியும், 68.4 கோடியும் நிதி ஒதுக்கியுள்ளன.
ஆசிய வளர்ச்சி வங்கி வடகிழக்கு மாநிலங்களில் சாலை மேம்பாடு திட்டங்களில் (இருவழி, 4 வழிச்சாலை போன்றவை) அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இது வடகிழக்கு மாநில சாலை முதலீடு திட்டங்கள் (NESRIP) எனப்படுகிறது. இதற்காக மத்திய அரசு 375.4 கோடியும் மாநில அரசு 67.4 கோடியும் ஆசிய வளர்ச்சி வங்கி 908.01 கோடியும் முதல் கட்டமாக நிதி ஒதுக்கியுள்ளன. 2012ல் இதே முறையில் 462.15 கோடியும் 2014ல் 806.64 கோடியும் ஒதுக்கப்பட்டன.
உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி பங்கீடு இத்திட்டங்களில் 60%க்கும் மேல் உள்ளது. எனவே இத்திட்டங்கள் இவற்றின் கட்டுப்பாட்டின் கீழ்தான் செயல்படுகின்றன. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் அதற்கு கைமாறாக மாநில வளங்கள் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றன.
மேகாலயா, மிசோரமில் ஹைட்ரோ பவர் நிலையத்தை நிறுவ ஜப்பான் 900 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் மிசோரம், மணிப்பூரில் வேளாண் மேம்பாட்டிற்காக JICA நிறுவனம் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி செய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் சாலை இணைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக சுமார் 4,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நாகலாந்து வன மேம்பாட்டிற்கு 400 கோடி ஒதுக்கியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் 200 அணைக்கட்டுகள் (Dams) கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் 'மணிப்பூர் பட்டுபுழு வளர்ப்பு திட்டம்' ஒன்றை செயல்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக இதற்காக ஜப்பான் (JICA) 136.6 கோடியும், மணிப்பூர் அரசு 18.3 கோடியும் முதலீடு செய்துள்ளன. மபிதெல் (Mapithel) அணையிலிருந்து இம்பால் மாவட்டத்திற்கு நீர் விநியோகம் செய்ய "நீர் விநியோக திட்டம்" ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இது தவிர இம்பால்-மோரே சாலை உள்ளிட்ட்ட பல மாநில, மாவட்ட சாலை (Road) திட்டங்களை செயல்படுத்த உள்ளது. மிசோரம் ஹைட்ரோ பவர் திட்டத்திற்காக காலி செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை உரிய இழப்பீடோ மாற்று இடமோ தரப்படவில்லை. எனவே இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இந்த திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் பட்டுப்புழு வளர்ப்பு திட்டமும் கூட இன்னும் முழுமையடையவில்லை. இதற்கு மாநில அரசுதான் காரணம் என்று ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது. இம்பால் நீர் விநியோக மேம்பாடு திட்டமானது நீரை தனியார் மயமாக்குவது மட்டுமின்றி விவசாய நிலமும், காடுகளும், வாழ்விடங்களும் அழிக்கப்பட்டுள்ளன. நீரை தனியார்மயமாக்குவதற்காக 1992-ஆம் ஆண்டு மணிப்பூர் நீர் விநியோக சட்டத்தை திருத்த சொல்லியது ஜப்பான். அதன்படி மணிப்பூர் அரசு நீருக்கான விலை நிர்ணயம் செய்வதில் முரண்பாடு ஏற்பட்டது. வனச் சட்டம் 2006 -ல் உள்ள விதிகளை தன்னிச்சையாக மீறி மேபிதல் அணைக்காக காடுகளை அழிப்பதற்கு மணிப்பூர் அரசு ஜப்பானுக்கு துணைபோயுள்ளது.
அசாமில் 'கவுகாத்தி நீர் விநியோக திட்டத்தை' ஜப்பான் செயல்படுத்திய போது, அதன் ஒப்பந்தப் புள்ளிகளை ரகசியமாக பெறுவதற்காக லூயிஸ் பர்கர் என்ற அமெரிக்க நிறுவனம் அதிகாரிகளுக்கு இலஞ்சம் தந்துள்ளது. அதற்காக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் 17.1 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது.
பிரம்மபுத்திரா -பாரக் நதியின் குறுக்கே 200 அணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எண்ணெய் நிறுவனங்களான ஜூபிலன்ட் எனர்ஜி (Jubilant energy), கனோரோ (Canoro), ஆயில் இந்தியா லிமிடெட், ஆசியன் ஆயில் ஃபீல்ட்ஸ் (fields) உள்ளிட்ட பல நிறுவனங்கள் நிலத்தடியில் உள்ள எண்ணெய் வளத்தை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் நிதி உதவிக்கு கைமாறாக வடகிழக்கு மாகாணங்களின் இயற்கை மற்றும் கனிம வளங்களை கொள்ளையடிக்க ஜப்பான் அரசுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் ஜப்பானிய நிறுவனங்களுக்கு மணிப்பூரின் நிலம், காடு, நீர் மற்றும் கனிம வளம் தாரை வார்க்கப்படுகின்றது.
இங்ஙனம் சீனாவின் தெற்காசிய மேலாதிக்கத்தை வீழ்த்தவும், வடகிழக்கு மாகாணங்களில் அதன் தலையீட்டை தடுக்கவும், அவற்றின் மூலம் அமெரிக்கா-ஜப்பானின் தெற்காசிய மேலாதிக்கத்தை நிறுவவும், இந்திய துணை மேலாதிக்க நலன்களுக்காகவும் மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்கள் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக - புதியகாலனிய செல்வாக்கு மண்டலங்களாக மாற்றப்படுகின்றன. எவ்வித தடையுமின்றி இதை நடைமுறைப்படுத்துவதற்காகவே வனப் பாதுகாப்பு மசோதா 2023 ஐ மோடி அரசு தாக்கல் செய்துள்ளது.
வனப்பாதுகாப்பு மசோதா 2023
இந்தியாவின் மொத்த காடு, கனிம மற்றும் இயற்கை வளங்களில் 50% வடகிழக்கு மாகாணங்களில் உள்ளன. ஆகவேதான் கார்ப்பரேட்டுகளின் கவனம் அங்கு குவிந்துள்ளது. காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் அரசியலுக்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைக்குடில் வாயுக்களின் கட்டுப்பாடு, வனப்பாதுகாப்பு போன்ற துறைகளில் கார்ப்பரேட்டுகளின் முதலீடுகள் அதிகரித்துள்ளன. வனப்பாதுகாப்பு என்ற பெயரில் வனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு 2023 மார்ச் 29 அன்று சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு எனும் பெயரில் கார்ப்பரேட் நலன்களுக்கான வனப்பாதுகாப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்தியாவின் காடுகள், நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கவே இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. வனப்பாதுகாப்பு சட்டம் 1980 ஐ திருத்தும் நோக்கில் வனப்பாதுகாப்பு (திருத்த) மசோதா 2023 ஐ பாராளுமன்றத்தில் பாஜக அரசு தாக்கல் செய்தது. அதை பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பாமல் பாஜக எம்பிக்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற கூட்டுக் குழுவிற்கு மோடி அரசு அனுப்பியது. இக்குழுவானது 15 நாட்களுக்குள் அது குறித்து கருத்து தெரிவிக்குமாறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து அக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் பல்லுயிர் பெருக்க மையங்களை கண்டறிந்து (Bio-diversity hotspots) அங்கு பனை எண்ணெய் பண்ணைகளையும் (Palm oil plantation) பாரம்பரிய சாகுபடி நிலங்களில் (Jhum lands) ஒற்றைச் சாகுபடி பணப் பயிர்களையும் (Mono culture cash crops) அமைக்கும் "வளர்ச்சித் திட்டங்களை" பாஜக அரசு வனப் பாதுகாப்பு சட்டத்தின் வாயிலாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இம்மசோதாவில் "வனப்பாதுகாப்புச் சட்டம் சுற்றுச்சூழல், சமூக மற்றும் சூழலியல் வளர்ச்சிக்கு சவாலாக உள்ளதால் அச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வனம் சார் நிலங்களை வனம் சாராத (Non-foresting) நிலங்களாக மாற்ற வேண்டியுள்ளதாகவும் அது கூறுகிறது. அதாவது வனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. வடகிழக்கு மாநில பழங்குடிகள் நிலம், இயற்கை வளம் மீதான தங்களது பாரம்பரிய உரிமைகளை இம்மசோதா கணக்கில் கொள்ளவில்லை என்று கூறுகிறார்கள். இம்மசோதா பழைய சட்டத்தில் உள்ள பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. உதாரணமாக சர்வதேச எல்லைகளையொட்டியும், எல்லை கட்டுப்பாட்டு கோடு (LoC) மற்றும் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடுகளை(LAC)யொட்டியும் 100 கி.மீ. க்குள் அமைந்துள்ள நிலங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் தேச பாதுகாப்பிற்கான யுத்ததந்திர திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்று திருத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் பங்களாதேஷ், மியான்மர், பூடான், திபெத் மற்றும் சீனாவுடன் எல்லைகளை பகிர்கின்றன. நாகலாந்து மற்றும் மிசோராம் மாநிலத்தின் 90% நிலப் பரப்பு சர்வதேச எல்லைகளையொட்டி 100கி.மீ. தொலைவிற்குள் அமைந்துள்ளன. மற்ற மாநிலங்களில் 100% நிலப் பரப்பும் இவ்வாறு அமைந்துள்ளன. ஆகவே அம்மாநிலங்கள் இச்சட்டத்தால் 90-100% வரை தனது நிலப்பரப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இமயமலை, வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள 15,000 கி.மீ. நீளமுள்ள சர்வதேச எல்லைகளையொட்டியுள்ள வனப்பகுதியில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கான தடைகளை பழைய சட்டத்திலிருந்து மோடி அரசு நீக்கியுள்ளது. புதிய மசோதா துணை ராணுவப் படையினருக்கு 10 ஹெக்டேர் வரை தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலங்கள் மற்றும் குடியிருப்புகளையும் காலி செய்ய அதிகாரம் தரப்பட்டுள்ளது. சூழலியல்-சுற்றுலா (Eco Tourism), உயிரியல் பூங்காக்கள், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வன உலாக்கள் (Safaris) போன்றவற்றை அமைக்க அம்பானி மற்றும் அதானியின் நிறுவனங்களுக்கு அனுமதி தரப்பட உள்ளது. அதாவது வனங்களை நுகர் பொருளாக, வர்த்தகப் பொருளாக மாற்றுகிறது பாஜக அரசு.
சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பே, மணிப்பூர் அரசும், மோடி அரசும் கைகோர்த்து மதரீதியாக பிளவுபடுத்தி பழங்குடிகளை வெளியேற்றி களத்தை தயார் செய்து வருகின்றன. ஆறாவது அட்டவணையும், அரசியலமைப்புச் சட்டம் 371 வகைகளும் (371 series) வடகிழக்கு மாநிலங்களில் நிலம், இயற்கை வளங்கள், நிர்வாகம் மற்றும் கலாச்சாரம் மீதான சமூகவுடமை (Community Ownership) பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன. தற்போது ஆறாவது அட்டவணையானது தன்னாட்சி மாவட்ட கவுன்சில் மூலம் சுய நிர்வாக அதிகாரத்தை அசாம், திரிபுரா, மேகாலயா மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு மட்டும் வழங்கியுள்ளது. மேகாலயா, மிசோரம் இரு மாநிலங்களும் மாநில அந்தஸ்து பெற்றிருந்தாலும் 'தன்னாட்சி பழங்குடி கவுன்சில்' கள் மூலம் நிலம், சுகாதாரம், விவசாயம், நிர்வாகம் சம்பந்தமான சட்டங்களை இயற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் பழங்குடிகள் மற்றும் லடாக் மக்கள் தம்மையும் ஆறாவது அட்டவணையில் சேர்க்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களிலேயே கூட அவற்றை பறிக்கும் வேலையில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. காஷ்மீரில் 370ஐ ரத்து செய்ததைப் போல 371வது சட்ட வகைகளை இப்பகுதிகளில் ரத்து செய்ய முயன்று வருகிறது. 371க்கு கீழ் வந்தாலும் அருணாச்சலப்பிரதேசமும், மணிப்பூரும் ஆபத்தான நிலைமையில் உள்ளன. அருணாச்சல பிரதேசத்தில் கவர்னர் வழியாக மாநில அரசை நிராகரிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது மத்திய அரசு. வளர்ச்சி திட்டங்களின் பெயரில் அங்கும் மக்கள் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் மணிப்பூர் 371-C-கீழ் வந்தாலும் 1973ல் பஞ்சாயத்துராஜ் முறைக்கு இணையான தன்னாட்சி மாவட்ட கவுன்சில் முறை இருந்தாலும் மணிப்பூர் அரசு நிர்வாகத்தில் மெய்திகள் ஆதிக்கம் செலுத்துவதால் (எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்) பழங்குடிகளின் அதிகாரம் ஏட்டளவில்தான் உள்ளது. நாகாலாந்து மற்றும் மிசோரம் முறையே 371-A மற்றும் 371-G அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் சிறப்பு சலுகைகள் பெற்றுள்ளன. இம்மாநிலத்தில் உள்ள பழங்குடிகளே வனப் பாதுகாப்பு மசோதா 2023 மூலம் தங்களது உரிமைகள் பறிக்கப்பட்டு விடும் என்று அஞ்சும் போது பிற மாநிலங்களின் கதி பற்றி கூறவே தேவையில்லை.
இச்சட்டம் வரும் முன்பே இம்மாநிலங்களில் பல்லுயிர் பெருக்க மையங்களில் பனை எண்ணெய் பண்ணைகளை அமைக்கும் பணிகள் குறுக்கு வழிகளில் துவங்கிவிட்டன. 2021ல் மத்திய அமைச்சரவை "தேசிய சமையல் எண்ணெய் திட்டம்" (National mission on edible oil) ஒன்றை அறிவித்தது. வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான்-நிகோபார் தீவுகளில் உள்ள பல்லுயிர் பெருக்க மையங்களில் மூன்றை தேர்ந்தெடுத்து அங்கு பனை எண்ணெய் உற்பத்திக்கு ரூ.11,140 கோடி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. வடகிழக்கு மாநில அரசுகள்
பதஞ்சலி, கோத்ரெஜ், அக்ரோவெட் போன்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் விவசாய நிலமும், வன நிலமும் பணப்பயிர் நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. வன உயிர்கள், மண் வளம், நிலத்தடி நீர் போன்றவற்றை அழித்து பெரும் உணவுப் பற்றாக்குறைக்கு இவை இட்டுச் சென்று வருகின்றன. இந்த திட்டமும் காங்கிரசு ஆட்சியிலேயே துவங்கி விட்டது. மிசோரமில் 2004-லிருந்து (காங்கிரசு ஆட்சி) பனை எண்ணெய் உற்பத்தி பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதனால் நீர் பற்றாக்குறை, மண் வளம் அழிந்து வருதல், பல்லுயிர் பெருக்கம் அழிதல் போன்றவை நிகழ்ந்து வருகின்றன. மக்கள் தமது நிலங்களை விற்க கட்டாயப்படுத்தப் படுகின்றனர். நாகாலாந்திலும் இந்த திட்டம் 2015லிருந்து நடைமுறையில் உள்ளது. சுற்றுச்சூழலியல் வாதியான பனோ ஹாராலுவிடம் என்கியோ (Nkio) கிராமத்தின் தலைவர் "இத்திட்டத்தால் நல்ல லாபம் கிடைக்கும், தாவரம் 100 அடி வரை வளரும் என்றெல்லாம் அரசு கூறியது. எனது 2 ஹெக்டேரை இதற்காக ஒதுக்கினேன். ஆனால் எந்த லாபமும் கிடைக்கவில்லை" என்று கூறுகிறார். இந்தோனேசியா, பப்புவா, நியூ கினியா போன்ற நாடுகளில் எல்லாம் இத்திட்டம் தோல்வி அடைந்து அந்நாடுகளில் நீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனாலும் மோடி அரசு நமது நாட்டில் இவற்றை அமல்படுத்தி வருகிறது.
கனிம வளங்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்டுகள்
மணிப்பூர் உள்ளிட்ட வட கிழக்கு மாகாணங்களில் மொத்த நிலப்பரப்பில் 80-90% மலைகளாக உள்ளன. அவற்றில் ஏராளமான அரிய கனிமவளங்களும் மூலப்பொருட்களும் கொட்டிக்கிடக்கின்றன. ஆகவே கனிம வளங்களை கொள்ளையடிக்க கார்ப்பரேட்டுகளுக்கு காங்கிரசு அரசும் பாஜக அரசும் அனுமதி அளித்து வருகின்றன.
சுரங்க தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆய்வுகளில் ஈடுபட்டு பல்வேறு கனிமங்களை, பிரதானமாக குரோமைட் மற்றும் சுண்ணாம்புக் கற்களை மணிப்பூரின் கிழக்குப் பகுதியில் (அதாவது மியான்மர் எல்லையொட்டியுள்ள உக்ருல், கம்ஜோங், தெங்னௌபால் மற்றும் சாண்டல் மாவட்டங்களில்) பிரித்தெடுக்கும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளன. மணிப்பூர் காங்கிரசு அரசாங்கம் சுரங்க தொழில் மேம்பாட்டுக்காக 'மணிப்பூர் தொழில்துறை மற்றும் முதலீட்டுக் கொள்கை 2013'ஐ உருவாக்கியது. 2017ல் அதை பாஜக அரசு மீண்டும் புதுப்பித்தது. அக்கொள்கையின் நோக்கங்களாவன: உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், தொழில்களுக்கு ஊக்குவிப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு, வளங்கள், முதலீட்டை ஈர்ப்பது போன்றவை. 2018 ஆம் ஆண்டு 'மணிப்பூர் நுண் கனிமக் கொள்கை 2018' ஐ பைரன் சிங் ( பாஜக) அரசு உருவாக்கியது.
மணிப்பூரின் கனிமங்கள்: மத்தியில் காங்கிரசு ஆட்சியில் இருந்த போது, இந்திய புவியியல் ஆய்வகம் (GSI), சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் அமைச்சகம், இந்திய அரசாங்கம் மூன்றும் இணைந்து மணிப்பூரின் நிலத்தடி வரைபடத்தை உருவாக்கியதோடு சுண்ணாம்பு, குரோமைட், நிக்கல், தாமிரம், மலாக்கிட், அசுரைட் , மேக்னடைட் மற்றும் பல்வேறு பிளாட்டின வகை தனிமங்கள் (PGE) உள்ளிட்ட கனிமங்களின் இருப்பைக் கண்டறிந்தது. உக்ருல் மாவட்டத்தில் உள்ள ஹுண்டுங், புங்யார் மற்றும் மைலியாங் கிராமங்களிலும், டூபோக்பி, சக்பிகரோங், பல்லேல், நுங்புரா, நுங்பால், சாஜிக் தம்பாக், ஹைகோட், தெங்னூபல் மற்றும் சாண்டல் மாவட்டங்களிலும் சுமார் 20 மில்லியன் மெட்ரிக் டன் சுண்ணாம்பு படிமங்கள் இருப்பதாக GSI மதிப்பிடுகிறது. இந்திய சுரங்கப் பணியகத்தின் 2013 அறிக்கையானது மணிப்பூரில் 6.66 மெட்ரிக் டன் குரோமைட்டை வழங்கும் ஓபியோலைட் படிம பகுதிகளைக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. குரோமைட் இருப்புக்கள் உக்ருல் மாவட்டத்தின் ஃபாங்க்ரே, லுங்கார், சிங்சா-கம்னோன் பகுதியிலும், தெங்னௌபால் மற்றும் சாண்டல் வட்டாரங்களில் குவாத்தா, குதெங்தாபி மற்றும் மினௌ-மங்காங் போன்ற இடங்களிலும் உள்ளன.
சுரங்க தொழிலுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: இந்திய சுரங்கப் பணியகம் மற்றும் இந்தியாவின் சுரங்க அமைச்சகம் 2007-2012ல் (காங்கிரசு ஆட்சியில்) மணிப்பூரின் உக்ருல் மற்றும் சந்தேல் மாவட்டங்களின் ஓபியோலைட் படிம பகுதிகளை தனியார் நிறுவனங்களுக்கு சுரங்க குத்தகையாக வழங்கியது. 2017 நவம்பர் 21 முதல் 22 வரை மணிப்பூரின் இம்பாலில் நடைபெற்ற வடகிழக்கு வணிக உச்சி மாநாட்டின் போது கையெழுத்திடப்பட்ட 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் குரோமியம் மற்றும் சுண்ணாம்புச் சுரங்கத்திற்கான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடங்கியுள்ளன. 2017 ஆம் ஆண்டில், மணிப்பூர் பாஜக அரசு சர்வேஷ் ரெஃப்ராக்டரீஸ் பிரைவேட் லிமிடெட், ரூர்கேலா மினரல்ஸ் பிரைவேட் லிமிடெட், கல்ஃப் நேச்சுரல் ரிசோர்சஸ், பலாசோர் அலாய் லிமிடெட் உள்ளிட்ட சுரங்க நிறுவனங்களுடன் குரோமைட் மற்றும் சுண்ணாம்பு சுரங்கத்திற்கான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. 34.37 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 8 சுண்ணாம்புக் கல் தொகுப்புகளும், 38.96 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 10 குரோமைட் தொகுப்புகளும் நவம்பர் 2017ல் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களுக்கென்று ஒதுக்கி பாதுக்காக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் மணிப்பூர் பாஜக அரசு சூப்பர் ஓர்ஸ், கல்ஃப் நேச்சுரல் ரிசோர்சஸ், ராமுங் எண்டர்பிரைசஸ் போன்ற நிறுவனங்களுடன் சிமெண்ட் ஆலையை நிறுவ சுண்ணாம்பு சுரங்கத்திற்கான நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. ஹண்டுங் சிமென்ட் தொழிற்சாலைக்கு சொந்தமான 47 ஏக்கர் நிலத்தை ராமுங் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு நாளொன்றுக்கு 400 டன் (TPD) சிமென்ட் உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவுவதற்காக குத்தகைக்கு வழங்குவதற்கான வரைவறிக்கையை மணிப்பூர் வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்துறை இயக்குநரகம் (DTCI) 18 நவம்பர் 2018 அன்று சமர்ப்பித்தது. மணிப்பூரில் இரண்டு சிமெண்ட் ஆலைகளை அமைக்கும் முடிவையும் 18 பிப்ரவரி 2019 அன்று மணிப்பூர் அமைச்சரவை எடுத்தது.
லுங்கர், சிகை குல்லென், நுங்பி, உக்ருல் மாவட்டங்களில் 8.75 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் குரோமைட்டின் சுரங்க உரிமம் ஃபேகோர் அலாய்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 6 ஏப்ரல் 2018 முதல் மேலும் 2 ஆண்டுகளுக்கு DTCI-யால் 8 மார்ச் 2018 அன்று புதுப்பிக்கப்பட்டது. மேலும், அந்நிறுவனம் 14 டிசம்பர் 2018 அன்று லுங்கரில் குரோமைட்டுக்கான சுரங்க குத்தகைக்கு விண்ணப்பித்தது. சர்வேஷ் ரெஃப்ராக்டரி பிரைவேட் லிமிடெட் உடன் லுங்கர் கிராம சுரங்கத்திற்காகவும், ரூர்கேலா மினரல் கம்பெனி பிரைவேட் லிமிடெட் உடன் ஷிங்சா-கம்னோனில் சுரங்கத்திற்காகவும் குரோமைட் சுரங்க நடவடிக்கைகளைத் தொடங்க குத்தகைக்கு விடும் சுரங்க மேம்பாடு மற்றும் உற்பத்தி ஒப்பந்தத்தில் 23 பிப்ரவரி 2019 அன்று DTCI கையெழுத்திட்டது.
குர்கானில் உள்ள கல்ஃப் நேச்சுரல் ரிசோர்சஸ் பிரைவேட் லிமிடெட் (GNRPL) குரோமைட் அகழ்வுக்கான ஒப்பந்தத்தில் 5 அக்டோபர் 2016 அன்று குவாத்தா கிராமத்தின் கிராம அதிகார சபையுடன் மணிப்பூர் காங்கிரசு அரசு கையெழுத்திட்டது. அதன்படி, குரோமைட்டை கொண்டுள்ள ஓபியோலைட் படிம பகுதிகளின் உரிமையை குவாத்தா எனும் கிராமம் ஒப்படைக்க நிர்பந்திக்கப்பட்டது. ரூர்கேலா மினரல்ஸ் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (ROMCO) மணிப்பூர் பாஜக அரசாங்கத்துடன் 23 பிப்ரவரி 2019 அன்று உக்ருல் மாவட்டத்தில் உள்ள ஷிங்சா-கம்னோன் கிராமத்தில் 85.0 ஹெக்டேர் பரப்பளவில் 20 ஆண்டுகளுக்கு சுரங்க குத்தகை ஒப்பந்தம் செய்துள்ளது. ROMCO நிறுவனம் சுரங்கம் மற்றும் கனிம அமைச்சகத்தின் ஒப்புதலை 2017 இல் (மோடி ஆட்சியில்) சுற்றுச்சூழல் அனுமதி (EC) இல்லாமலே பெற்றது. அதை தொடர்ந்து, DTCI சுரங்க குத்தகையை ஆகஸ்ட் 2018ல் வழங்கியது.
சர்வேஷ் ரெஃப்ராக்டரி பிரைவேட் லிமிடெட் (SRL) உக்ருல் மாவட்டத்தின் லுங்கர் மற்றும் சிரோஹி கிராமங்களில் இருந்து குரோமைட்டை அகழ்ந்தெடுக்க மணிப்பூர் பாஜக அரசால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஷிரோஹி-லுங்கர் கிராமத்தில் 132.781 ஹெக்டேர் சுரங்கக் குத்தகைப் பரப்பளவு ஆண்டுக்கு 10531 டன் குரோமியம் உற்பத்தித் திறன் கொண்டது, அதற்காக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்திடமிருந்து (MOEFCC) சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதியைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மணிப்பூர் பாஜக அரசு சுண்ணாம்புக் கல் குவாரியை சூப்பர் ஓர்ஸ் அண்ட் மைன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது. DTCI ஹண்டுங் சிமெண்ட் தொழிற்சாலைக்கு சொந்தமான 47 ஏக்கர் நிலத்தை ராமுங் எண்டர்பிரைசசுக்கு குத்தகைக்கு வழங்கியதை தொடர்ந்து அந்த நிறுவனம் 400TPD சிமென்ட் ஆலையை 18 நவம்பர் 2018 அன்று அமைத்தது. கம்ஜோங் மாவட்டத்தில் உள்ள மைலியாங் கிராமத்தில் சுண்ணாம்பு சுரங்கம் மற்றும் தொழிற்சாலை ஒன்றை நிறுவ இலக்கு வைக்கப்பட்டு அதற்கான பரிசோதனை மற்றும் நில ஆய்வுகள் மணிப்பூர் சத்யம் நிறுவனமும் மணிப்பூர் அரசும் செய்து வருகின்றன. 2012 ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சியிலேயே இந்த நில ஆய்வு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
மணிப்பூரில் சுரங்க முயற்சிகள் பழங்குடியினரின் நிலம் மற்றும் வளங்களின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கவில்லை. மணிப்பூர் அரசு, சுரங்க நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை சமூக ஆலோசனையின்றியும் அதன் பாதகங்கள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தாமலும் செய்துள்ளது. பொதுவாக மணிப்பூரில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் சுரங்கத் திட்டம் பற்றிய விவரங்கள் மணிப்பூர் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. தனியார் நிறுவனங்களுக்கு சுரங்க உரிமைகளை வழங்குவது ரகசியமாக கையாளப்படுகிறது.
சர்வேஷ் ரெஃப்ராக்டரி பிரைவேட் லிமிடெட் (SRL) எனும் சுரங்க நிறுவனம் தயாரித்த முன்-சாத்திய ஆய்வு அறிக்கையானது(PFR), லுங்கரில் உள்ள சுரங்க குத்தகைப் பகுதியானது வன நிலமோ விவசாய நிலமோ இல்லை என்றும், முழு நிலமும் வகைப்படுத்தப்படாத அரசு நிலமாக உள்ளது எனவும் கூறுகிறது. ஆனால் உண்மையில் சிரோஹி மற்றும் லுங்கார் கிராமங்கள் ஷிங்சா - கம்னோனுடன் இணைந்து காடுகள் நிறைந்த பகுதியாகும். 2570 மீ உயரம் கொண்ட ஷிருய் - கஷோங் மலைத்தொடரின் ஒரு பகுதியாக இவை இருப்பதாகவும், குத்தகைப் பகுதியிலிருந்து சுமார் 4.5 கிமீ தொலைவில் "சிரோய் லில்லி" எனப்படும் அரிய மற்றும் அழிந்துவரும் லில்லி பூ வகைகளின் விளைநிலம் இருப்பதாகவும் திட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. சுரங்க குத்தகைப் பகுதியில் இருந்து 10கி.மீ சுற்றளவில் தேசிய பூங்கா, வனவிலங்கு சரணாலயம் போன்ற சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த வாழ்விடங்கள் எதுவும் இல்லை என்றும் றிதிஸி பொய்யாக கூறியுள்ளது. அதேபோல், சிங்சா-கம்னோனில் சுரங்கம் தோண்டுவதற்காக ஸிகிவிசிளிவுக்காக ஈ.ஆர்.எம். இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) சுரங்க குத்தகைப் (ML) பகுதியில் வன நிலம் அல்லது விவசாய நிலம் எதுவும் இல்லை என்றும், முழு நிலமும் வகைப்படுத்தப்படாத அரசு நிலமாக உள்ளது என்றும் பொய்யாகக் கூறியது. EIA மற்றும் அனுமதிக்கான விண்ணப்பம், சில குக்கிராமங்கள், வீடுகளைத் தவிர அருகில் எந்த கிராமமும் இல்லை என கூறுகிறது. ஆனால், மணிப்பூரில் முழு வன நிலமும் சமூக நிலத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதாவது அங்கு தரிசு நிலம் என்பதே இல்லை. வன நிலம் அல்லது சமுதாய நிலத்தை சுரங்கத்திற்காக மாற்றுவதானது சமூகத்தின் ஒப்புதல் மற்றும் வன உரிமைச் சட்டம், 2006 இன் முழு வழிகாட்டலையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யபடவில்லை.
ஷிங்சா-கம்னோனில் ROMCO தயாரித்த EIA ஆனது, சுரங்க குத்தகைப் பகுதியில் பழங்குடியினர் மற்றும் பிற பழங்குடி சமூகங்களின் குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரம் அப்பகுதிகளைச் சார்ந்து இருப்பதைக் குறிப்பிடவில்லை. மேலும், இப்பகுதியில் தங்குல் மற்றும் குக்கி பழங்குடியினர் வசிக்கின்றனர். அவர்கள் இருவரும் பழங்குடியினராக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர், எனவே சுரங்கத்தின் பாதிப்புகள் குறித்து அரசுக்கு எந்த கவனமும் இல்லை. இதேபோல், குவாதா கிராமத்தில் உள்ள கல்ஃப் ரிசோர்சஸ் நிறுவன சுரங்கத் திட்டமானது, மெய்தி சமூகங்களின் நிலம் மற்றும் வளங்களின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கவில்லை. மணிப்பூரில் சுரங்கத் திட்டம் இந்திய அரசியலமைப்பின் 371C ன் படி மலைப்பிரதேச கமிட்டியின் (HAC) ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் எந்த ஒப்புதலும் பெறப்படவில்லை.
இவ்வாறு மணிப்பூரின் கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு பாஜக அரசு தாரை வார்க்கிறது. அதற்காகவே பழங்குடிகளை வெளியேற்றி வருகிறது.
மணிப்பூர் மற்றும் மத்திய பாஜக ஆட்சியை தூக்கியெறிவதே மணிப்பூர் பிரச்சினைக்கு தீர்வு
எனவே, கார்ப்பரேட் நலன்களுக்காகவே மணிப்பூர் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி ரத்தம் குடித்து வருகிறது மோடி - பைரன்சிங் கும்பல். இக்கும்பலை ஆட்சியிலிருந்து தூக்கியெறிய மணிப்பூர் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். மணிப்பூர் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுவிட்டால் பழங்குடிகள் மட்டுமின்றி மெய்திகளும் வாழ வழியின்றி சாக வேண்டியிருக்கும். உண்மையில் வடகிழக்கு மாநிலங்களின் ஆக்கிரமிப்பாளர்கள் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளே ஆவர். மெய்தி உழைக்கும் வர்க்கம், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் மற்றும் பழங்குடிகள் ஒன்றிணைந்து பாஜக ஆட்சியை வீழ்த்த போராடுவது மிக அவசியமாகும்.
மலைகளில் பழங்குடி வாழ்க்கையை (Tribal life) வாழ்பவர்தான் பழங்குடி அந்தஸ்து பெற தகுதியுடைவர் என்று அரசியமைப்புச் சட்டம் கூறுகிறது. எனவே சமவெளியில் வாழும் மெய்திகள் பழங்குடி அந்தஸ்து என கோருவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும் என்பதை மெய்தி மக்களுக்கு நாம் உணர்த்த வேண்டும். தமிழகத்தில் தேவேந்திர குல வேளாள சாதியினரை பட்டியில் சாதியிலிருந்து வெளியேற்றும் கோரிக்கையை முன் வைத்து பாஜக அரசியல் செய்கிறது. மணிப்பூரிலோ மெய்திக்களை பட்டியல் சாதியாக மாற்றும் கோரிக்கையை தூண்டிவிட்டு அரசியல் செய்கிறது.
கார்ப்பரேட்டுகளையும், கார்ப்பரேட்டுகளுக்கு காவல் காக்கும் இந்திய இராணுவம் மற்றும் துணை இராணுவத்தையும் வெளியேற்றக் கோரியும், வனப் பாதுகாப்பு மசோதா; நில சீர்திருத்த சட்டம் போன்றவற்றை இரத்து செய்யக் கோரியும், பழங்குடி அந்தஸ்து குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சமவெளி மக்களும் பழங்குடிகளும் தமது பொது எதிரி பாஜக, காங்கிரசு அரசுகள்தான் என உணரவேண்டும். மெய்திகளின் பழங்குடி அந்தஸ்து கோரிக்கையின் பின்னால் உள்ள கார்ப்பரேட் நலன்களை மெய்தி உழைக்கும் வர்க்கம் அறிய செய்ய வேண்டும். பழங்குடிகளின் தன்னாட்சி உரிமை கோரிக்கை மற்றும் 6-வது அட்டவணையில் சேர்ப்பது போன்ற கோரிக்கைகளை நாம் ஆதரிக்க வேண்டும். மணிப்பூரிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியது பாஜக அரசு, சங்பரிவார கும்பல் மற்றும் அவர்களின் கார்ப்பரேட் எஜமானர்களே ஒழிய பழங்குடிகள் அல்ல என்பதை மெய்திகள் உணர வேண்டும். இல்லையெனில் இன்று பழங்குடிகளுக்கு நேர்ந்து வரும் கதிதான் நாளை அவர்களுக்கும் நேரும் என்பதே நிதர்சனமான உண்மை.
மூலதனத்தின் கோரப்பசிக்கு மணிப்பூர் மக்களை சங்பரிவார - பாஜக கழிசடை கும்பல் நரபலி கொடுக்கிறது. பழங்குடிப் பெண்களின் ஆடைகளை அவிழ்த்து கார்ப்பரேட்டுகளுக்கு கால்மிதியாக வைக்கிறது. பாரத மாதாக்களை வன்புணர்ந்து காமவெறியில் பாரத் மாதா கீ ஜே என ஊளையிடும் இந்த தேசத்துரோக சங்பரிவார காவிக் காடையர்களையும், மோடி - அமித்ஷா- பைரன் சிங் கும்பலையும் கருவறுத்தால்தான் மணிப்பூரில் அமைதி ஏற்படும்.
- சமரன்
(ஜூலை -ஆகஸ்ட் 2023 மாத இதழ்)