விவசாயிகள் மீதான மோடி கும்பலின் பாசிச அடக்குமுறைகளை முறியடிப்போம்!

சமரன்

விவசாயிகள் மீதான மோடி கும்பலின் பாசிச அடக்குமுறைகளை முறியடிப்போம்!

குறிப்பு : இக்கட்டுரை 2021ம் ஆண்டு பிப்ரவரி மாத சமரனில் வெளிவந்த கட்டுரை. இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக இருப்பதால் இங்கு பதிவேற்றியுள்ளோம். 

பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் கும்பல்களுக்கு இந்திய விவசாயத்தை பலி கொடுக்கும் புதிய காலனிய வேளாண்சட்டங்களை எதிர்த்து கடந்த இரண்டு மாத காலமாக அமைதியான முறையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, காவல்துறை அனுமதியுடன் நடந்த டிராக்டர் பேரணிக்குள் பாஜக - ஆர்எஸ்எஸ் குண்டர்களை ஊடுருவ விட்டு கலவரத்தை உண்டாக்கியது மோடி ஆட்சி. மதவாதபிரிவினைவாத பிரச்சாரங்களை கட்டியமைத்து விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க முயன்றது. ஆனால் ஆளும் மோடி-அமித்ஷா கும்பலின் சீர்குலைவு முயற்சிகளையும், அடக்குமுறைகளையும் முறியடித்து விவசாயிகள் தொடர்ந்து அஞ்சாமல் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைக்க பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பல் தீட்டிய சதித் திட்டம்

கடந்த இரண்டு மாத காலமாக கடும் குளிரிலும் பனி மழையிலும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகளை பலி கொடுத்தும் அமைதியான முறையிலேயே சட்டரீதியாக கட்டுக்கோப்புடன் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் டிராக்டர் பேரணியில் விவசாய சங்கங்களுக்குள் தங்களது எடுபிடிகளை ஊடுருவ விட்டு கலவரத்தைத் தூண்டி விவசாயிகளை வன்முறையாளர்களாக சித்தரிக்க முயன்று வருகிறது மோடி அரசு. மோடி அரசின் ஊதுகுழல் ஊடகங்களும் இதையே ஓயாமல் ஊளையிட்டு வருகின்றன ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சம்யுக்தா கிசான் மோர்ச்சா (ஒருங்கிணைந்த விவசாயிகள் முன்னணி) எனும் பெயரில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் விவசாயிகள். இப் போராட்டங்களுக்கு நிலப்பிரபுக்களும் பணக்கார விவசாயிகளும் தலைமை தாங்குகின்றனர். சிறு குறு நடுத்தர விவசாயிகள் அவர்களின் தலைமையின் கீழ் போராடி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களிலிருந்து பெருந்திரளான விவசாயிகள் போராட்டத்தில் பங்கு பெற்று வருகின்றனர். இதுதவிர இராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பங்குபெற்று வருகின்றனர்.

துவக்கத்திலிருந்தே இப்போராட்டங்களை பல சதி செயல்கள் மூலம் சீர்குலைக்க முயன்றது மோடி அரசு. பல சுற்று பேச்சு வார்த்தைகளிலும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிராகரித்தது. விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றவே முயன்றது. பத்தாவது சுற்று பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை 18 மாதம் நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியது. ஆனால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய ஒரு சட்டத்தை மத்திய அரசு எவ்வாறு நிறுத்தி வைக்க முடியும்? என்ற விவசாயிகளின் கேள்விக்கு மோடி அரசு எவ்வித பதிலும் தராமல் மௌனம் காத்தது. இந்நிலையிலேயே குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவது என சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்தது.

டிராக்டர் பேரணியை முடக்குவதற்கு மோடி ஆட்சி முயன்றது; உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால் உச்சநீதிமன்றம் "இது சட்ட ஒழுங்கு பிரச்சனை;  இதில் தான் தலையிட முடியாது;  டெல்லி காவல்துறை தான் முடிவு செய்ய வேண்டும்"  என்று கூறியது.  முன்னதாக உச்ச நீதிமன்றம் வேளாண் சட்ட ஆதரவாளர்களை உள்ளடக்கிய ஆய்வுக் குழுவை உருவாக்கி தீர்வு காணுமாறு மோடி அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது இங்கு நினைவு கூறத்தக்கது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இந்த சமரசவாத சீர்குலைவு முயற்சிகளை விவசாயிகள் நிராகரித்தனர்.  இக்குழு அனைத்து தரப்பையும் பிரதிநிதித்துவப் படுத்துவதாக இல்லை என்று கூறி மறுத்து விட்டனர்.

திட்டமிட்டபடி துவங்கிய டிராக்டர் பேரணி

டிராக்டர் பேரணி டெல்லி செல்வதற்கு மூன்று பாதைகளுக்கு காவல்துறை அனுமதி அளித்தது.  மேலும் குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு மதியம் முதல் மாலை 5 மணி வரை பேரணி நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறியது.  ஆனால் காவல்துறை அனுமதி அளித்த மூன்று பாதைகளிலும் தடுப்பு அரண்களை உருவாக்கி பேரணியை சீர்குலைக்க முயன்றது. இதுவே பிரச்சனையின் துவக்கப் புள்ளியாகும்.

ஜனவரி 26 அன்று திட்டமிட்டபடி மூன்று திசைகளிலிருந்தும் டிராக்டர் பேரணி புறப்பட்டது. 1)  வட திசையில் இருந்து சிங்கு எல்லை. இந்தப் பகுதியில் பெரும்பாலும் பஞ்சாப் விவசாயிகள் இருந்தனர். 2) மேற்கு திசையிலிருந்து திக்ரி எல்லை. இந்தப் பகுதியில் பெரும்பாலும் ஹரியானா விவசாயிகள் இருந்தனர். 3) தென்கிழக்கு திசையிலிருந்து காஸிப்பூர் பகுதி. இங்கு பெரும்பாலும் மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் விவசாயிகள் இருந்தனர். இம் மூன்று பகுதிகளிலும் இராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

திக்ரி எல்லையிலிருந்து பேரணி துவங்கி முண்ட்கா என்ற இடத்தை அடைந்தபோது ஏராளமான பெண்களும் குழந்தைகளும் வரிசையில் நின்று விவசாயிகளை வாழ்த்தி 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்று முழக்கமிட்டனர். தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பேரணியில் கலந்து கொள்ளத் துவங்கினர்.  விவசாயிகள் இயக்கம் மக்கள் இயக்கமாக மாறத் துவங்கியது. இது மோடி கும்பலை அச்சத்தில் ஆழ்த்தியது. மதியம் 12 மணி அளவில் நஜஃப்கார் என்ற இடத்தை பேரணி அடைந்தபோது அங்கு ஏராளமான தடுப்புகள் காவல்துறையால் போடப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்ட பாதையில் ஏன் தடுப்புகளை போட்டீர்கள்? அகற்றுங்கள் என விவசாயிகள் வேண்டிக் கொண்ட பிறகும் காவல்துறை செவி கொடுக்கவில்லை. எனவே விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் தடுப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது காவல்துறையினர் டிராக்டர் டயர்களில் காற்றை பிடுங்கி விட்டனர். தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தனர். (சுமார் 20 சுற்றுகள் (rounds) கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன). தண்ணீரைப் பீச்சி அடித்தனர். காவல்துறை விவசாயிகள் மீது வன்முறையை ஏவியது.

இதேபோன்று சிங்கு எல்லையிலிருந்து பேரணியும் பல தடுப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. இந்தப் பாதையிலும் காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காஸிப்பூர் பகுதியிலிருந்து வந்த பேரணியில் ஏராளமாக டிராக்டர்கள் மட்டுமின்றி கால்நடையாகவும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்திருந்தனர். இந்த பேரணியில் பாஜக-ஆர்எஸ்எஸ் குண்டர்கள் ஊடுருவி இருந்தனர். இந்த சங்பரிவார் குண்டர்கள் கிசான் மோர்ச்சா கமிட்டி (கேஎம்எஸ்சி- ரிவிஷிசி) விவசாய அமைப்பினருடன்  கலந்து விட்டனர். ஏற்கனவே இந்த அமைப்புகள் 25.01.21 அன்று இரவு நடந்த பேரணிக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெற்று தனது ஆதரவை தெரிவித்திருந்தது.  இந்த அமைப்பு கிசான் மோர்ச்சா கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்பு கிடையாது.

காஸிப்பூர் பகுதியில் 25.01.21 அன்று சமயுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள் பேரணி திட்டங்களை வழக்கம்போல் அங்கிருந்த மேடையில் அறிவித்தனர். விவசாயிகளும் ஏற்றுக்கொண்டனர். அன்றிரவு மேடையை ஆக்கிரமித்த கேஎம்எஸ்சி அமைப்பினர் மோர்ச்சாவின் திட்டங்களை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என அறிவித்தனர். அரசாங்கம் சொன்ன பாதைகளில் மட்டுமே பேரணி நடத்துவதற்கு தங்களுக்கு ஏற்புடையது இல்லை எனவும் தங்களின் திட்டம் டில்லி நகரத்தின் மையப் பகுதிக்கு செல்வது எனவும் அறிவித்தனர். இந்த வெற்று வாய்ச்சவடால்களின் பின்புலத்தில் தீப் சித்து மற்றும் லக்பீர்சிங் சிதானான் என்ற இரு பாஜக ஆர்எஸ்எஸ் குண்டர்கள் இருந்தனர். இதற்கு சிலர் உணர்ச்சிவசப்பட்டு ஆதரவு தெரிவித்தனர். தீப் சித்து என்பவர் பஞ்சாபில் குர்தாஸ்பூர் தொகுதியில் நடிகர் சன்னி தியோல் பாஜக சார்பாக போட்டியிட்ட போது அவருக்கு தேர்தல் முடிவு வரும் வரை பணியாற்றிய ஒரு நடிகர் ஆவார். லக்பிர் சிங் கிதானா பிரபல தாதாவாக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்தவர். இவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

காஸிப்பூர் பேரணியின் பாதையில் நாங்க்லி என்ற இடத்தில் உள்ள முச்சந்திக்கு அருகே வரும் பேரணி வலது பக்கம் திரும்பி செல்ல வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்டமாகும். நேராகச் சென்றால் புகழ்பெற்ற அச்சர்தாம் கோவிலும் இடது பக்கம் சென்றால் தில்லி வெளிச்சுற்று பாதையும் அதன் வழியாக தில்லி நகருக்குள் செல்லும் பாதையும் உள்ளது. எனவே இந்த இடத்தில் சம்யுக்தா மோர்ச்சாவின் முக்கிய தலைவர்கள் நின்றுகொண்டு பேரணியை வலது பக்கம் செல்ல அறிவுறுத்திக் கொண்டிருந்தனர். பெரும்பாலான டிராக்டர்கள் திட்டமிட்ட பாதையில் சென்றன.

செங்கோட்டைக்குள் நுழைந்த ஆர் எஸ் எஸ் குண்டர்கள்

டெல்லி செங்கோட்டைக்குள் நுழைவது என்பது சம்யுக்தா மோர்ச்சா வின் திட்டம் இல்லை. கே எம் எஸ் சி அமைப்பினர் சிலரும், அதில் ஊடுருவி இருந்த பாஜக ஆர்எஸ்எஸ் குண்டர்களும் திட்டமிட்டு மோர்ச்சா வின் வழிகாட்டுதலை மீறி தடுப்புகளை உடைத்துக்கொண்டு இடது பக்கம் அதாவது டெல்லி நகரத்துக்குள் சென்றனர். இவர்களின் இந்த அத்துமீறலை துணை ராணுவம் மற்றும் காவல்துறை இரண்டும் வேடிக்கை பார்த்தது மட்டுமின்றி தெரிந்தே அனுமதித்தது. இவர்கள் பிறகு ஐடிஒ எனும் வருமானவரி அலுவலகம் பகுதிக்கு வந்தடைந்தனர். அங்கே காவல் துறைக்கும் இவர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு உருவானது. இதில் ஒரு விவசாயி உயிரிழந்தார். பிறகு இந்த கும்பல் அங்கிருந்து செங்கோட்டையை நோக்கி சென்றது.

செங்கோட்டைக்கு சென்ற கும்பலுக்கு தீப் சித்து தலைமை தாங்கினார். மோடி அமித்ஷாவின் கைக்கூலியான தீப் சித்து தலைமையிலான அச்சிறுக் கும்பல் செங்கோட்டையின் பல பகுதிகளை சேதப்படுத்தியது. அங்கிருந்த ஒரு கொடிக்கம்பத்தில் 'நிஷாந்த் சாஹேப்' என்ற சீக்கிய மதத்தின் கொடியையும், விவசாய சங்கத்தின் கொடியையும் ஏற்றியது.

பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பலின் இந்த வன்முறைச் செயல்களை ஒட்டுமொத்த விவசாயிகளின் வன்முறைச் செயல்களாக பாஜக-ஆர்எஸ்எஸ் கயவர்களும் அவர்களின் ஏவல் ஊடகங்களும் ஓயாமல் பொய் பிரச்சாரம் செய்து வந்தன; செய்து வருகின்றன. பிற பகுதிகளில் அமைதியான முறையில் அனுமதிக்கப்பட்ட பாதைகளில் நடந்த பேரணியை காட்டாமல் இதை மட்டுமே ஊடகங்கள் காட்டிக் கொண்டிருந்தன. செங்கோட்டையின் உச்சியில் இருந்த தேசியக் கொடியை அகற்றிவிட்டு 'காலிஸ்தான்' பிரிவினைவாதக் கொடியை விவசாயிகள் ஏற்றி விட்டதாக ஊடகங்கள் பொய்க் கதைகளைப் பரப்பின. இங்கும் கூட அர்ஜுன் சம்பத் போன்ற அரைவேக்காட்டு கழிசடைகள் இதையே பேசி வருகின்றன.

தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் மட்டுமின்றி அரசே கலவரத்தை தூண்டிவிட்டு, வன்முறையை தூண்டியதாக 40க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் மீது எஃப் ஐ ஆர் தாக்கல் செய்துள்ளது. சங்கத் தலைவர்களுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. (இதன்மூலம் அவர்கள் வெளிநாடு செல்வது தடுக்கப்படும்). மேலும் காவல்துறை முன்பு ஆஜராகி விளக்கமளிக்குமாறு பல விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை, நாடாளுமன்ற வளாகப் பகுதிகளிலும், காஸிப்பூர் எல்லைப் பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நகரின் எல்லைகள் மூடப்பட்டு விட்டன. விவசாயிகள் மீதான அடக்குமுறை குறித்து செய்தி வெளியிட்ட ஆறு பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

'நடந்து முடிந்த வன்முறைச் சம்பவங்களுக்கும், செங்கோட்டை சதி திட்டங்களுக்கும் கிசான் மோர்ச்சா வருத்தம் தெரிவித்துள்ளது. தமக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று அறிவித்துள்ளது. வருத்தம் தெரிவிப்பதன் அடையாளமாக "எங்களை நாங்களே கண்டித்துக் கொள்கிறோம்" என்று கூறி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர் விவசாயிகள். பிப்ரவரி 1ஆம் தேதி திட்டமிட்டிருந்த நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை தள்ளிவைத்தனர்.

ஆனால் மோடி கும்பலின் அதிகார வெறி அடங்கவில்லை. விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாத வண்ணம் தடுப்புச்சுவர், இரும்பு வேலிகள்,  ஆணிகளால் ஆன தடுப்புகள்,  இரும்பு அரண்கள் போன்றவற்றின் மூலம் சாலையை துண்டித்து உள்ளது. விவசாயிகளை சந்திக்க தமிழக எம்பிக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த தடுப்புகள் இந்திய பாகிஸ்தான் எல்லையில் கூட இல்லை என்று எம்பிக்கள் கூறுகின்றனர். இந்திய விவசாயிகளை பகையாளிகள் போல கையாள்கிறது மோடி அரசு என்கின்றனர். இதுமட்டுமின்றி விவசாய சங்கங்களின் இணையதளம்,  முகநூல் பக்கங்களை முடக்கியுள்ளது. அவர்களுக்கு குடிநீர் கிடைக்காத வண்ணம் குடிநீர் இணைப்பையும் துண்டித்து உள்ளது. டெல்லியின் பல பகுதியில் இணையதள தொடர்பு துண்டிக்கப்பட்டது.

எடப்பாடி அரசின் மோடி விசுவாசம்

டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியை ஆதரித்து 26.1.21  அன்று திருவாரூரில் மாபெரும் பேரணியை தமிழக விவசாயிகள் காவல்துறையின் தடையையும் மீறி நடத்தினர். இதில் பல்வேறு விவசாய சங்கங்களும் இணைந்து பல தொழிற்சங்க அமைப்புகள், மாணவர் அமைப்புகள், முதலாளித்துவ கட்சிகள் மற்றும் நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர். தடையை மீறி நடந்த இந்த பேரணியை தண்டலை என்ற இடத்தில் தடுத்து நிறுத்தியது காவல்துறை. விவசாயிகளையும் முன்னணியாளர்களையும் மறுநாள் காலை கைது செய்தது எடப்பாடி அரசு. இச்சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் மீது அடக்குமுறையை ஏவி மோடி அரசின் ஏவல் ஆக செயல்படுகிறது.

போராட்டங்களை அடக்குமுறைகளால் ஒடுக்கிவிட முடியாது

மோடி அமித்ஷா கும்பலின் பாசிச மதவாத - பிரிவினைவாத முயற்சிகளை முறியடித்து அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், விவசாயிகள் தொடர்ந்து களத்தில் நிற்கின்றனர். மோடி அரசின் தடுப்புகளை தகர்த்தெறிந்து வருகின்றனர். டெல்லி கெஜ்ரிவால் அரசும் கூட துணை இராணுவத்தினருக்கு வழங்கிய அதிகப்படியான பேருந்துகளை திரும்பப் பெற்றுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். அடக்குமுறைகளால் போராட்டங்களை ஒடுக்கிவிட முடியாது. அடக்குமுறை தீவிரமடைய போராட்டங்களும் தீவிரமடையும். ஏனெனில் விவசாயிகளுக்கு இது வாழ்வா?  சாவா? பிரச்சனை. பட்டினியால் சாவதை விட போராடி விட்டு சாகிறோம் என்று முடிவெடுத்து களத்தில் நிற்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் போராட்டத் தீயில்  ஆளும்வர்க்கத்தின் கனவுகள் சாம்பல் ஆவது உறுதி.

- சமரன், பிப்ரவரி 2021