கடுமையாகும் ஈரான் போர்
விகடன்
1
கடுமையாகும் ஈரான் போர்: முன்பை விட வேகமாக வலுவாகும் அமெரிக்க டாலர்! - இது 'எப்படி' சாத்தியம்?
ஈரான் போருக்கு மத்தியில் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
சொல்லப் போனால், இந்தப் போருக்குப் பின் தான், அமெரிக்க டாலரின் மதிப்பு பெரியளவில் வலுவடைந்து வருகிறது.
இதற்கான '4' காரணங்கள் என்ன?
> போர் பதற்றத்தில் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்கிறார்கள்.
அப்படியான பாதுகாப்பு முதலீடுகளில் 'அமெரிக்க கருவூலப் பத்திரமும்' ஒன்று.
ஆக, முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் கருவூலப் பத்திரம் உள்ளிட்ட அமெரிக்க சார்ந்த முதலீடுகளுக்கு செல்லும்போது, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாகிறது.
> இந்தியாவைப் போன்று எரிசக்திக்கு இன்னொரு நாட்டை சார்ந்திருக்கும் நாடல்ல அமெரிக்கா.
அமெரிக்காவே எரிசக்தியின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்.
அதனால், கச்சா எண்ணெய் மீதான அழுத்தம் அமெரிக்க டாலரை எட்டவில்லை.
> எரிசக்தியின் விலை அதிகரித்து வருகிறது. இதனால், பணவீக்கம் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவி வருகிறது.
இதனால், இப்போதைக்கு அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்காது.
இந்த எதிர்பார்ப்பும் டாலரின் மதிப்பை வலுவாக்கி உள்ளது.
> இப்போது நிலவும் நிலையற்ற தன்மையால், உலக நாடுகளுக்கு அமெரிக்க டாலர் தேவை.
காரணம், அது தான் உலகளாவிய நாணயம்.
இதனாலும், நாடுகள் அமெரிக்க டாலர் பக்கம் திரும்பியுள்ளன. இதுவும் அதன் மதிப்பை உயர்த்துகிறது.
===================================================================
2
வளைகுடா நாடுகளை தாக்கியதற்கு 'மன்னிப்பு' - ஈரான் அதிபர்; ஆனால், இன்னமும் தாக்குதலை தொடர்கிறது- ஏன்?
ஈரான் போர் தொடங்கி ஒரு வாரம் தாண்டிவிட்டது.
ஆனால், இன்னமும் வளைகுடா நாடுகளில் வெடிகுண்டு சத்தங்களும், ஏவுகணை பாய்ச்சல்களும் குறைந்ததாக இல்லை.
நேற்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஈரான் வளைகுடா நாடுகளை தாக்கியதற்கு மன்னிப்பு கேட்டார்... இனி அந்த நாடுகள் எங்களை தாக்கினாலே தவிர, நாங்களாக அவர்களைத் தாக்கமாட்டோம் என்றும் உறுதியளித்தார்.
இருந்தும், இப்போது வரை வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கி கொண்டே தான் இருக்கிறது.
காரணம் என்ன?
ஈரானைப் பொறுத்தவரை, அந்த நாட்டின் நிர்வாகத்தை நடத்துவது மட்டுமே ஈரானின் அதிபர் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் பணி.
மற்றப்படி, அனைத்து அதிகாரங்களும் ஈரானின் உச்ச தலைவர் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையிடமே (IRGC) இருக்கும்.
இப்போது தங்கள் தேசத்தின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் கட்டுப்பாடு ஈரான் அதிபர் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சி தலைவருக்குமே இல்லை.
வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதலை நிறுத்துவது முழுக்க முழுக்க இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைமையின் முடிவு.
அந்தத் தலைமை நினைத்தால் தான் இந்தத் தாக்குதல் நிற்கும்.
=================================================================================
3
ஈரான் போர்: கச்சா எண்ணெய் அழுத்தத்தை சமாளிக்க என்ன செய்யப் போகிறார்? - ட்ரம்ப் பதில்
ஈரானில் போர் நடப்பதும், அந்த நாடு ஹார்மோஸ் ஜலசந்தியை மூடியதும் உலக அளவிலான கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் கடுமையாக பாதித்துள்ளது... அதன் விலையும் தாறுமாறாக ஏறி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (மார்ச் 6), இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அனுமதிக்கிறோம் என்று 'பெர்மிஷன்' கொடுத்திருந்தது அமெரிக்கா.
இந்தியாவிற்கு கொடுத்துள்ள அனுமதி குறித்தும், கச்சா எண்ணெய் அழுத்தத்தைக் குறைக்க வேறு ஏதேனும் அமெரிக்க அரசு செய்யுமா என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் நேற்று கேள்வி கேட்கப்பட்டது.
"கச்சா எண்ணெயின் தேவை அழுத்தம் அதிகரித்தால், தேவைப்பட்டால் அமெரிக்காவின் மூலோபாய பெட்ரோலிய இருப்பில் (SPR) இருந்து எண்ணெய் விநியோகிப்பேன்.
ஆனால், நம்மிடம் நிறைய எண்ணெய் இருக்கிறது. நம் நாட்டிடம் அதிகளவிலான எண்ணெய் இருக்கிறது. அதனால், இந்தப் பிரச்னை விரைவில் சரியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
================================================================================
4
'எங்களது தலைவரின் ரத்தத்திற்கு பழி வாங்காமல் விடமாட்டோம்' - ஈரான் கூறும் 'அமெரிக்கா'வின் பிளான்?
ஈரான் போர்: ட்ரம்ப் குறித்து இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) முன்னாள் தளபதி லாரிஜானி பேச்சு
ஈரானின் உச்ச தலைவர் இறந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிறது.
இன்னமும் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் தொடர்ந்து வருகிறது.
இந்தப் போர் இன்னும் நீளும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சிக்னல் தந்து வருகிறார்.
இந்த நிலையில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) முன்னாள் தளபதி லாரிஜானி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...
"நாங்கள் எங்களுடைய தலைவர் மற்றும் மக்களின் ரத்தத்திற்கு பழி வாங்குவோம்.
இதற்கான விளைவை ட்ரம்ப் சந்திக்க வேண்டும்... சந்திப்பார்".
பின், ஈரான் தேசிய தொலைகாட்சி பேட்டியில் லாரிஜானி, "ட்ரம்பை விடமாட்டோம். அவரது செயலுக்கான விளைவை அவர் சந்தித்தே ஆக வேண்டும்.
அவர் நமது தலைவர் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நமது மக்களைக் கொன்றுள்ளார்.
இது சாதாரண விஷயம் அல்ல.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானை உடைக்க பார்க்கிறது.
வெனிசுலாவில் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயந்துள்ளது போல ஈரானிலும் நடக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது" என்று பேசியுள்ளார்.
லாரிஜானியைப் பற்றி ட்ரம்பிடம் கேட்ட போது, அப்படி ஒருவரை தெரியாது. அவர் சொல்வதைக் கண்டுகொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
https://www.vikatan.com/government-and-politics/ex-irgc-chief-larijani-warns-trump-amid-iran-war
விகடன்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு