இந்திய மருத்துவத் துறை விரைவில் வீழ்ச்சியடையும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது

இந்திய மருத்துவத் துறை விரைவில் வீழ்ச்சியடையும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது

இந்திய மருத்துவத் துறை விரைவில் வீழ்ச்சியடையும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது

1
இந்திய மருத்துவத் துறை விரைவில் வீழ்ச்சியடையும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது — ஒரு நாடாளுமன்றக் குழுவே இதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது 

.

ஜீ நியூஸில் (Zee News) வெளியான சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் சுமார் 44% போலியானவை அல்லது தேவையற்றவை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மருத்துவமனைகளில் நடக்கும் அறுவை சிகிச்சைகளில் கிட்டத்தட்ட பாதி, நோயாளிகளிடமிருந்தோ அல்லது அரசு காப்பீட்டுத் திட்டங்களிலிருந்தோ பணத்தைப் பறிப்பதற்காகவே நடத்தப்படுகின்றன.

அந்த அறிக்கை மேலும் வகைப்படுத்துகையில்: இந்தியாவில் 55% இதய அறுவை சிகிச்சைகள், 48% கருப்பை அகற்றுதல் (Hysterectomies), 47% புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், 48% முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகள், 45% சிசேரியன் பிரசவங்கள் மற்றும் பல தோள்பட்டை மற்றும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைகள் போலியானவை அல்லது தேவையற்றவை என்று கூறுகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள பல புகழ்பெற்ற மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பெரிய மருத்துவமனைகளில் பணிபுரியும் மூத்த மருத்துவர்கள் மாதம் ₹1 கோடி வரை ஊதியம் பெறுவது தெரியவந்தது.

 இதற்குக் காரணம்: நோயாளிகளைத் தேவையற்ற பரிசோதனைகள், சிகிச்சைகள் அல்லது அறுவை சிகிச்சைகளுக்குத் தூண்டும் மருத்துவர்கள் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள். (BMJ Global Health)

டைம்ஸ் ஆஃப் இந்தியா (The Times of India) வெளியிட்டுள்ள செய்திகளில், இறந்த நோயாளிகளை உயிருடன் இருப்பதாகக் காட்டி, காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காக அவர்களுக்கு "சிகிச்சை" அளித்த பல அருவருப்பான மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

ஒரு பிரபல மருத்துவமனையில், உயிரிழந்த 14 வயது சிறுவன் ஒருவன் உயிருடன் இருப்பதாகக் கூறி, ஒரு மாதம் முழுவதும் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு, பின்னரே அவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. புகார்களுக்குப் பிறகு, அந்த மருத்துவமனை குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ₹5 லட்சம் அபராதம் செலுத்தியது. ஆனால் அந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு என்ன விலை?

பல நேரங்களில், ஏற்கனவே உயிரிழந்த நோயாளிகளுக்கு போலி "அவசர அறுவை சிகிச்சைகள்" நடத்தப்படுகின்றன — குடும்பத்தினரிடம் அவசரமாகப் பணம் கட்டச் சொல்லிவிட்டு, பின்னர் அறுவை சிகிச்சையின் போது நோயாளி இறந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

இதன் மூலம் அறுவை சிகிச்சைக்கான முழுச் செலவையும் மருத்துவமனை வசூலித்துக் கொள்கிறது. (ஆதாரம்: "Dissenting Diagnosis" – டாக்டர் காத்ரே & சுக்லா)

மருத்துவக் காப்பீடு (Mediclaim) மோசடியும் அதேபோல் அதிர்ச்சியளிக்கிறது. சுமார் 68% இந்தியர்கள் மருத்துவக் காப்பீடு வைத்துள்ளனர், ஆனால் தேவைப்படும்போது, பெரும்பாலான கோரிக்கைகள் (claims) நிராகரிக்கப்படுகின்றன அல்லது மோசடிகள் மூலம் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்படுகின்றன — இதனால் குடும்பங்கள் பெரும் செலவுகளைத் தாங்களே சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றன.

தவறான கோரிக்கைகளை முன்வைத்ததற்காக 3,000-க்கும் மேற்பட்ட பிரபல மருத்துவமனைகள் காப்பீட்டு நிறுவனங்களால் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. கோவிட் காலத்தில், பல பெரிய மருத்துவமனைகள் இல்லாத கோவிட் கேஸ்களுக்கு போலி காப்பீட்டுப் பணத்தைப் பெற்றுள்ளன.

இத்துடன், ஒரு பிரம்மாண்டமான மற்றும் பயங்கரமான மனித உறுப்பு கடத்தல் வலையமைப்பும் செயல்படுகிறது. 2019-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு இதயத்தை உலுக்கும் செய்தியை வெளியிட்டது:

கான்பூரைச் சேர்ந்த சங்கீதா காஷ்யப் என்ற பெண் ஒரு வேலை நேர்காணலுக்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். வேலைக்குச் சேருவதற்கு முன் புகழ்பெற்ற ஃபோர்டிஸ் (Fortis) மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. அங்கு அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவர்கள் "கொடையாளர்கள்" (donors) பற்றி விவாதிப்பதைக் கேட்டு ஏதோ தவறு நடப்பதை உணர்ந்து தப்பியோடினார். இது குறித்து அவரை அழைத்து வந்த நண்பனிடம் கூறியபோது, அவன் அவரை மிரட்டி ₹50,000 கேட்டான். அவர் காவல்துறையிடம் சென்ற பிறகு, காவல்துறை, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பல கோடி ரூபாய் சர்வதேச உறுப்பு கடத்தல் கும்பல் அம்பலமானது.

"மருத்துவமனை பரிந்துரை மோசடி" (Hospital Referral Scam) பற்றி அனைவரும் அறிவர். மருத்துவர்கள் சிறிய நோய்களைக் கூட பெரியது எனக் கூறி, அப்பல்லோ, ஃபோர்டிஸ் போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கிறார்கள். இதற்குப் பதிலாக அந்த மருத்துவமனைகள் மருத்துவர்களுக்கு கமிஷன் வழங்குகின்றன.

உதாரணமாக, மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனை ஒருமுறை வெளிப்படையாகவே விளம்பரம் செய்தது: ஆண்டுக்கு 40 நோயாளிகளை அனுப்பினால் ₹1 லட்சம், 50 பேருக்கு ₹1.5 லட்சம், 75 பேருக்கு ₹2.5 லட்சம் வழங்கப்படும் — அவர்கள் உண்மையிலேயே நோய்வாய்ப்பட்டவர்களா இல்லையா என்பது முக்கியமல்ல.

மற்றொரு பெரிய மோசடி "பரிசோதனை மோசடி" (Diagnosis Scam).

பெங்களூருவில் உள்ள சில புகழ்பெற்ற ஆய்வகங்களில் (Pathology labs) வருமான வரித்துறை நடத்திய சோதனையில், மருத்துவர்களுக்கு கமிஷன் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ₹100 கோடி ரொக்கம் மற்றும் 3.5 கிலோ தங்கம் பிடிபட்டது. மருத்துவர்கள் தேவையற்ற பரிசோதனைகளை பரிந்துரைத்து, அதில் 40–50% கமிஷன் பெறுகிறார்கள். இந்தியாவில் உள்ள சுமார் 2 லட்சம் ஆய்வகங்களில் 1,000 மட்டுமே சான்றிதழ் பெற்றவை — இருப்பினும் இந்தத் தொழில் பெரும் லாபகரமாக நடக்கிறது.

இதேபோல், மருந்து நிறுவனங்களும் (Pharma companies) பிரம்மாண்டமான லஞ்சத் திட்டங்களை நடத்துகின்றன. சுமார் 20–25 பெரிய மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களுக்காக ஆண்டுக்கு ₹1,000 கோடி செலவிடுகின்றன. கோவிட் காலத்தில், டோலோ (Dolo) மாத்திரை தயாரிப்பாளர் மருத்துவர்களுக்கு ₹1,000 கோடி மதிப்பிலான சலுகைகளை வழங்கியது அம்பலமானது. குறிப்பிட்ட பிராண்டுகளைப் பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களுக்கு ரொக்கம், வெளிநாட்டுச் சுற்றுலா மற்றும் சொகுசு தங்குமிடங்கள் வழங்கப்படுகின்றன.

மேலும், மருந்து நிறுவனங்கள் மருந்துகளை மருத்துவமனைகளுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்கின்றன, ஆனால் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் முழு விலையை (MRP) வசூலித்து பெரும் லாபம் ஈட்டுகின்றன. 'இந்தியா டுடே' ஆய்வின்படி, எம்யூர் (Emcure) நிறுவனத்தின் புற்றுநோய் மருந்து மருத்துவமனைகளுக்கு ₹1,950-க்கு விற்கப்படுகிறது, ஆனால் நோயாளிகளுக்கு ₹18,645-க்கு பில் போடப்படுகிறது.

இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI) கூட இதில் கூட்டு சேர்ந்துள்ளது கண்டறியப்பட்டது. 

2016-ல் ஒரு அரசு குழு அறிக்கை அளிக்கையில், MCI புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதில் காட்டிய ஆர்வத்தை, மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் ஒழுங்குபடுத்துவதில் காட்டவில்லை என்று கூறியது.

மருத்துவர்கள் MCI விதிகளைத் தொடர்ந்து மீறுகிறார்கள்:

மருத்துவர்கள் பிராண்ட் பெயர்களைத் தவிர்த்து, ஜெனரிக் (Generic) பெயர்களையே எழுத வேண்டும் — இது அரிதாகவே பின்பற்றப்படுகிறது.

விதி 1.8: சிகிச்சைக்கு முன் முழு கட்டணத்தையும் மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டும் — இது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது.

பரிசோதனை அல்லது சிகிச்சைக்கு முன் நோயாளியின் முறையான ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

மருத்துவக் குறிப்புகள் குறைந்தது மூன்று ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அரசு சுகாதாரத் திட்ட மோசடிகள்: சாதாரண பிரச்சனைகளுக்கு வரும் நோயாளிகளை அரசு காப்பீட்டின் கீழ் அனுமதித்து, போலி சிகிச்சைகளுக்கு பில் போட்டு பணத்தை மருத்துவமனைகள் சுருட்டுகின்றன.

இந்தத் தகவலை அனைத்து குடிமக்களுக்கும் பகிருங்கள், இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் தங்களைத் தாங்களே இத்தகைய ஆபத்துகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

========================================

2
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் .

ஊடகங்களுக்கான செய்தி.

நாள் :06.06. 2026 .

உயர்சிறப்பு மருத்துவக் கல்விஉட்பட மருத்துவக் கல்வியில்  மாநில உரிமைகளை காத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

 நீட் தேர்வு முறைகேடுகள்,சிபிஎஸ்ஈ விடைத்தாள் மதிப்பீடு மோசடிக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதான் பதவி விலக வேண்டும்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர் ரவீந்திரநாத் , சென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடங்களுக்கான செய்தி.

இளநிலை ,முது நிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் படிப்படியாக மாநில உரிமைகளை உச்ச நீதிமன்றமும் ஒன்றிய அரசும் பறித்து வருகின்றன .

இது கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் ,நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கும்,மாநிலங்களிடையேயான நல்லுறவுக்கும்  எதிரானதாகும்.

மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காடும் ,உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காடும் ஒன்றிய அரசின் தொகுப்புக்கு ( All India Quota)  வழங்கப்படுகிறது.

மாநில அரசுகள் தங்கள் மாநிலத்திற்கென தனியாக மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்து வைத்துக் கொள்ளக்கூடாது. அனைத்து இடங்களையுமே ,அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக  ஆக்க வேண்டுமென்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே,  இந்த மாநில உரிமை பறிப்பு படிப்படியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 2016  ஆம் ஆண்டு வரை  தமிழ்நாட்டில் உள்ள 100 விழுக்காடு உயர் சிறப்பு மருத்துவ   இடங்களும் , தமிழ்நாடு அரசின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. அதில் தமிழக மருத்துவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தனர்.

  இந்நிலையில் 2016 ல் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் 100 விழுக்காடு இடங்களும்  அகில இந்தியத் தொகுப்பிற்கு ஒன்றிய அரசால் பறிக்கப்பட்டு விட்டது . தமிழக அரசிற்கான ஒதுக்கீடு என்பதே இல்லாமல் ஒழிக்கப்பட்டுவிட்டது.அதனால் தமிழக மருத்துவர்கள் பாதிக்கப்பட்டனர்.இது அதிக இடங்களைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும். குறைவான இடங்களைக் கொண்ட மாநிலங்களுக்கு சாதகமான பெரு வாய்ப்பாகும்.  

தமிழ்நாடு அரசு மருத்துவர்களும், அரசும் தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலேயே தற்பொழுது 50 விழுக்காடு இடங்கள் தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்களுக்கு  

வழங்கப்படுகிறது . அதுவும் கைக் கெட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலையிலேயே உள்ளது.

ஏனெனில் ,   இரண்டுக் கட்ட கவுன்சிலிங் முடிந்த பிறகு அரசு மருத்துவர்களுக்கான இடங்கள் காலியாக இருந்தால் , அதையும் அகில இந்திய தொகுப்பிற்கு  ஒன்றிய அரசு பறித்துக் கொள்கிறது. அதன் பிறகு நீட் கட் ஆஃப்  ரேங்கை குறைத்து, பிற மாநிலத்தவர் மற்றும் அரசுப்பணியில் இல்லாத மருத்துவர்கள் அவ்விடங்களில் சேர வழிவகுக்கிறது .உச்சநீதிமன்றமும் இதற்கு உறுதுணையாக இருக்கிறது.

இவ்வாறு மாநில இடங்கள் பறிக்கப்படுவது ,  மாநில அரசு மருத்துவர்களையும், அரசு மருத்துவமனைகளையும் பாதிக்கிறது. 

அதன் மூலம் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை மக்களுக்கு எதிராக அமைந்துவிடுகிறது.

தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளுக்கும் ,தனியார் மருத்துவமனைகளுக்கும் போதிய உயர் சிறப்பு மருத்துவப் படிப்புப் படித்த மருத்துவர்கள் இல்லாமல், அவர்களின் சேவை கிட்டாமல் போய்விடும்  ஆபத்து ஏற்பட்டுள்ளது.இவற்றை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .

அரசு மருத்துவர்களுக்கான இடங்கள் நிரம்பும் வரை கட் ஆஃப் ரேங்கை குறைக்க நடவடிக்கை எடுக்காத உச்ச நீதிமன்றமும், ஒன்றிய அரசும், அரசு மருத்துவர்களுக்கான இடங்கள் அகில இந்திய அளவில் பொதுத்தொகுப்பிற்கு சென்ற பிறகு  கட் ஆஃப் ரேங்கை குறைப்பது நியாயமற்ற செயலாகும். பாரபட்சப் போக்காகும். உள்நோக்கம் கொண்டதாகும்.கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு சாதகமானதாகும். இதுவே பிரச்சினைக்கு முதன்மைக் காரணம். 

இதை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கட் ஆஃப் ரேங்கை குறைத்தப் பிறகும்,தமிழ்நாடு  அரசு மருத்துவர்களுக்கான இடங்கள் காலியாகச் சென்றால், அதை தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்களுக்கு வழங்கிட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் உயர்சிறப்பு மருத்துவர்களின் சேவை கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கான முதுநிலை,உயர்சிறப்பு மருத்துவ இடங்களில் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள,தமிழ்நாடு அரசே ஏற்கனவே இருந்தது போல் தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். 

நீட் தேர்வுகளிலிருந்து  ஒன்றிய அரசு விலக்களிக்க வேண்டும். 

அதற்கு என்.எம்.சி சட்டம் -2019 ல் உரிய திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டுவர மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.

ஏற்கனவே 2016 க்கு முன்பு  நடைமுறையில் இருந்தது போல மாநில அரசின் 100 விழுக்காடு உயர் சிறப்பு மருத்துவ இடங்களும் , மாநில அரசுகளிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும். அதில் 50 விழுக்காடு இடங்கள் அரசு மருத்துவர்களுக்கும், 50 விழுக்காடு இடங்கள் பொது போட்டிக்கும் விடப்பட வேண்டும்.  

அதற்கேற்ப  சட்டத்தை ஒன்றிய அரச கொண்டுவர மாநில அரசு வலியுறுத்த வேண்டும். மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.

அது சாத்தியமில்லை எனில் இளநிலை மருத்துவப் படிப்பில் வழங்குவது போல் 15 விழுக்காடு  இடங்களை மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கிட வகைகாண வேண்டும்.

நீட் கட் ஆஃப்  ரேங்கை குறைத்த பிறகும், மாணவர் சேர்க்கை இறுதியில் ,தமிழ்நாட்டு இடங்கள் காலியாகச் சென்றால்,  மருத்துவ இடங்கள் காலியாகச் செல்வதை தவிர்க்கும் வகையில், அந்நிலையில் மாநில அரசே முன்வந்து பிற மாநில மாணவர்களை சேர்த்திடலாம்.

அரசு மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேர, இரண்டாண்டு அரசுப் பணியை முடித்திருக்க வேண்டும் என்பதை ஓராண்டாக குறைக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றனர். ஒப்பந்தப் பணியில் உள்ள மருத்துவர்கள் ,அரசு மருத்துவர்களுக்கான இடங்களை பெற முடியாது. எனவே, ஒப்பந்தப் பணிமுறையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.

ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும். அரசு மருத்துவமனைகளில் புதிய பணியிடங்கள் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உருவாக்கப்படவில்லை. முதுநிலை மருத்துவ மாணவர்களை கட்டாய மாவட்ட உள்ளுறை மருத்துவப் பணியில் (DRP) ஈடுபடுத்துவதின் மூலம் புதிய வேலை வாய்ப்பு ஒழித்துக் கட்டப்படுகிறது. நிரந்தர அரசு மருத்துவர் பணியிடங்கள் படிப்படியாக குறைக்கப்படுகின்றன. இதுவும், அரசு மருத்துவர்களுக்கான முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாகப் போகக் காரணமாகின்றன. 

இப்பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

அரசு மருத்துவர்களுக்கென இட ஒதுக்கீட்டை வைத்துக் கொண்டு, நிரந்தர அரசு மருத்துவர் பணியிடங்களை ஒழித்துக் கட்டுவது, அந்த இட ஒதுக்கீட்டையே பொருளற்றதாக்கி வருகிறது. பயனற்றதாக்கி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ,தமிழ்நாட்டிலும் ,பல்வேறு மாநிலங்களிலும் ,குறிப்பாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஏராளமான  உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாகச் சென்று விடுகின்றன.

இதற்கான  காரணங்களை கண்டறிந்து போக்க வேண்டும். குறைவான பயிற்சிக்கால உதவி ஊதியம் ,அதிகமான பணிச் சுமை, மனித உரிமை மீறல்கள்,  கட்டாய சேவை ஒப்பந்தம்  (Bond) , படித்து முடித்த பின்பு நியாயமான ஊதியம் வழங்காதது ,தனியார் மருத்துவக் கல்லூரிகள்,நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களில் நடைபெறும் கடுமையான கட்டணக் கொள்ளைபோன்றவை முக்கியக் காரணமாகின்றன.

அடுத்து ,மருத்துவம் வேகமாக தனியார்மயமாவதும், கார்ப்பரேட் மயமாவதும் ,வணிகமயமாவதும், சில துறைகளில் மட்டுமே அதிகமான வருவாய் ஈட்டலாம் என்ற நிலையும், சில துறைகளில் தான் தனியாக சுய தொழில் முறையில் வருவாய் ஈட்ட முடியும் என்ற நிலையும் , உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் ஒரு சில துறைகளில் கடும் போட்டியை ஏற்படுத்துகிறது. பல துறைகளில் இடங்கள் தொடர்ந்து காலியாகப் போகின்றன. இது இன்றைய சந்தை மயமாக்கப்பட்ட நமது மருத்துவத் துறை உருவாக்கியுள்ள பிரச்சினையாகும். 

இந்த அடிப்படை பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும்.

அண்மைக் காலமாக ஒன்றிய அரசு மாநில அரசுகளின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் கூட , 100 விழுக்காடு இடங்களுக்கும் தானே கலந்தாய்வு நடத்தி   மாணவர் சேர்க்கையை நடத்திட  முயற்சிகளை மேற்கொள்கிறது. அதை தடுத்து நிறுத்திட வேண்டும்.

#  நீட் தேர்வு முறைகேடுகளை ,வினாத்தாள் கசிவுகளை தடுத்திட ஒன்றிய அரசு ராதாகிருஷ்ணன் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திட வேண்டும். ஆன் லைன் தேர்வு முறையை கொண்டுவர வேண்டும். நீட் தேர்விலிருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டு இடங்களுக்கு விலக்கு வழங்கிட வேண்டும். நீட் தேர்விற்கு வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடங்களில் பொதுப் பிரிவினர் 60 விழுக்காடும், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் 50 விழுக்காடு  மதிப்பெண் பெற்றால் தான், நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என விதிகளை கொண்டுவர வேண்டும். 

ஒன்றிய அரசின் பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு, நர்ஸிங் படிப்புகளுக்கு தனியான நுழைவுத்  தேர்வை  நடத்திட வேண்டும்.

நீட் கேள்வித்தாள் கசிவு, சிபிஎஸ்ஈ விடைத்தாள் மதிப்பீடு முறைகேடு போன்றவற்றிற்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதான் பதவி விலக வேண்டும்.

 இம்முறைகேடுகளுக்குக் காரணமான தேசிய தேர்வு முகைமையை( NTA ) கலைத்திட வேண்டும்.

 யுபிஎஸ்சி போன்ற அரசின் நேரடி அமைப்பை தொடங்கிட வேண்டும். சட்டரீதியாக பதிலளிக்க கூடிய ,பொறுப்பேற்கக் கூடிய வகையில் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

# மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் ஏழை ,அடித்தட்டு சமூக மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து  முழுமையாக ஆராயவும், அதை சரிசெய்ய உரிய பரிந்துரைகளை வழங்கிடவும் ஓர் உயர் மட்டக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்திட வேண்டும்.

#  வெளிச்சந்தையில் இருந்து மருந்துகளை,தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் (TNMSC) கொள்முதல் செய்வதால், தரத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாய நிலை உள்ளது.தரமற்ற மருந்துகளால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அது மட்டுமின்றி மருந்துத் தட்டுப்பாடும் அவ்வப்பொழுது ஏற்படுகின்றது.

இதை கவனத்தில் கொண்டு, அத்தியாவசிய மருந்துகள் , இதர மருந்துப் பொருட்கள் ,மருத்துவத் தளவாடங்கள்,கருவிகள் மற்றும் சாதனங்களை   தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் வாயிலாக ,பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்ய வேண்டும்.அவற்றை அரசு மருத்துவமனைகளுக்கு  குறைந்த விலையில் வழங்கிட வேண்டும். குறைந்த விலையில்  ஜெனிரிக் மருந்துகளையும் அரசே உற்பத்தி செய்ய வேண்டும். அவற்றை அரசு  மருத்துவமனைகளுக்கு வழங்குவதோடு , அரசு மருந்தகங்கள் மூலமாக பொது இடங்களிலும் மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யலாம்.

ஒப்பந்த அடிப்படையில்,

தற்காலிக அடிப்படையில் பணிபுரியும், அனைத்து மருத்துவர்கள், பல் மருத்துவர்களுக்கும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கும் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.

தேசிய நலவாழ்வு குழுமத்திற்குட்பட்ட(NHM)திட்டத்தில் தற்காலிகமாகப் பணிபுரியும் நகர்புற நலவாழ்வு மையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு,பணிப்பாதுகாப்பும், ஊதிய உயர்வும்,முழு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பும், பணி நிரத்தரமும் வழங்கிட வேண்டும் .காலை ,

மாலை என (Split) ஸ்பிலிட் வேலை வழங்குவதை கைவிட வேண்டும்.

பணிநிரந்தரம் வழங்கிட வேண்டும். என்.எச்.எம் கீழ் தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தில் ( NTEP )   பணியாற்றி வரும் பணியாளர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களுக்கும்,

மருத்துவர்களுக்கும் 30 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.

# ஈரோடு மாவட்டம் ,நசியனூர், பேரூராட்சியில் பணிபுரியும் .G. தீபா, M. தங்கம்மாள், R.T.கிருஷ்ணமூர்த்தி போன்ற DBC கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் , சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர். சாந்தி, டாக்டர்கள் கார்த்திகேயன் மற்றும் ராஜகோபால் ஆகியோர்

 கலந்து கொண்டனர் .

இவண்,

டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் , பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்.

9940664343 - 9444181955

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு