பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு கிடைத்து வரும் முக்கியத்துவத்தை நீர்த்து போகச் செய்ய திமுக செய்து வரும் உத்தி

சாவித்திரி கண்ணன்

பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு கிடைத்து வரும் முக்கியத்துவத்தை நீர்த்து போகச் செய்ய திமுக செய்து வரும் உத்தி

வாழ்த்துவோம்! வளர்த்தெடுப்போம்!

இங்கு மகத்தான இளம் மனிதர்கள் நிரம்பி வழிகிறார்கள்!

பொது நோக்கத்திற்காக அரசியல் அடையாளங்களை தொலைத்து அனைத்து இளைய சக்திகளும் ஒன்றுபட்டுள்ளன.

இரவு, பகல் எனப் பாராமல், அன்னம் தண்ணி குறித்து யோசிக்காமல் கர்மமே கண்ணாக இந்த இளைஞர்கள் பாலன் இல்ல வளாகத்தில் கூடி போராடும் தந்த நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

ஆனால், அங்கு திறந்த மனதோடு வரவில்லை, ஷனம் ஷெட்டி!

அவநம்பிக்கையோடு தான் மேடையேறுகிறார்!

தன்னை விசாரணை அதிகாரியாக பாவித்துக் கொண்டு கேள்விக்கணைகளை கூட்டத்தை நோக்கி எழுப்புகிறார்…!

இங்கிருப்பவர்களில் கரப்பான் பூச்சி கட்சியினர் எத்தனை பேர்? மாணவர்கள் எத்தனை பேர்? பொதுமக்கள் எத்தனை பேர் என்ற அவரது சந்தேகங்களை மேடையேறும் முன்பு அங்கு பந்தலின் கீழே இருந்த நிர்வாகிகளிடம் விசாரித்து ஒரு புரிதலை பெற்று மேடையேறி இருக்கலாம்.

மேலும், இந்த போராட்டத்தை அரசியல் ஆதாயத்துக்காக சிலர் பயன்படுத்துகின்றனர் என்று குற்றச்சாட்டை வீசினார்.

ரங்கராஜ் பாண்டே, பத்ரி சேஷாத்திரி, மாரிதாஸ் போன்றவர்களின் யூ டியூப் விஷமப் பிரச்சாரங்களை மண்டையில் ஏற்றிக் கொண்டு வந்திருப்பாரோ… என்னவோ?

மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பதற்காகத் தான் வந்தேன் என்று சொல்லிய அவரது பேச்சிலும் அணுகுமுறையிலும் நேசத் தன்மை கிஞ்சித்தும் இல்லை.  மாறாக, அவரது மனதிலும், பேச்சிலும் இருந்து வெறுப்புணர்வு கூட்டத்தில் எதிர் விளைவுகளை  ஏற்படுத்தி ஸ்பார்க்காக பற்றியது.

’’ஷனம் ஷெட்டியை முழுமையாக பேச அனுமதித்து அதற்கு பின் அவர் பேசிய கருத்துகளில் உள்ள பிழைகளை அவருக்கு சுட்டிக் காட்டி புரிய வைத்திருக்கலாமோ..’’ எனச் சிலர் தோழர்கள் அபிப்ராயப்பட்டனர்.

ஆனால், ஷனம் ஷெட்டி கலந்துரையாடலுக்கு தயாரான மன நிலையில் இல்லை. அவர் எதிரில் இருப்பவர்களை மேன்மேலும் கொந்தளிக்க வைத்துவிட்டு, உடனே புயல் வேகத்தில் போய் இருப்பாரே தவிர, தான் பேசியதற்கான எதிர் கருத்துக்களை பொறுமையுடன் செவிமடுத்து கேட்கும் இயல்பாளர் அல்ல என்பது அவரது பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி படப்பிடிப்பு தளங்கள் பலவற்றில் அவர் ஏற்படுத்திய சர்சைகள் எல்லாம் தெளிவாகச் சொல்கின்றன.

அதே சமயம் ஷனம் ஷெட்டி கூறிய ஒன்று கவனத்திற்குரியது. ஜனநாயகன் பார்ப்பவர்கள் எல்லாம் கோமாளிகள் என்று கூறாதீர்கள்  என்பது நியாயமானது.

டெல்லியில் மாணவர்கள் போராட்டம் அங்கு கல்விக்காக நடக்கும் போது இங்குள்ள விஜய் ரசிகர்கள் ஜனநாயகன் பட ரிலீசின் போது தியேட்டர்கள் முன்பு கூடி கொண்டாடிய காட்சிகளை, புகைப்படங்களைக் கொண்டு இந்த இளைஞர்கள் மீது அவதூறுகள் பரப்பப்பட்டன, திமுக ஐ.டிவிங் மற்றும் tஹிமுக ஆதரவு ஊடகங்களால்!

தவெகவை பொறுத்த வரை அந்தக் கட்சித் தலைவர் விஜய் நீட் எதிர்ப்பில் தான் இருக்கிறார் எனும் போது, அந்த கட்சி இளைஞர்கள் நீட் எதிர்ப்புக்கான போராட்டத்தில் கலந்து கொள்ள வைக்கச் செய்ய வேண்டுமே அன்றி எதிர்முகாமிற்கு அவர்களை தள்ளக் கூடாது. அவர்கள் ஒரு போதும் நீட் ஆதரவாளர்கள் அல்ல. பிறகு ஏன் அவர்களை இழிவுபடுத்த வேண்டும்…?

ஒரு மூன்று மணி நேர சினிமா கொண்டாட்டத்தில் ஈடுபடுவதால் அவன்  நீட் ஆதரவாளனாகிவிடமாட்டான். எல்லா குடும்பத்திலும் சீரியசான இளைஞர்களும் உள்ளனர்,விளையாட்டுத்தனமான இளைஞர்களும் உள்ளனர்.

மேலும் பாலன் இல்ல மாணவர் போரட்டத்தின் போது  எனதன்புத் தோழர் முத்தரசன், ”இங்கு சி.பி.எம்வரலாம்,திமுக வரலாம், தேமுதிக வரலாம், நாம் தமிழர் வரலாம்’’ என சொன்னவர் பாஜகவையும், தவெகவையும் அந்தப்பட்டியலில் இருந்து தவிர்த்தார். பாஜகவை தவிர்த்ததை புரிந்து கொள்ளலாம். தவெகவை இவர் ஏன் பாஜகவை நோக்கி நகர்த்த வேண்டும்? 

ஒரு மிகப் பெரிய நோக்கத்தைக் கொண்ட போராட்டத்திற்கு ஆதரவாளர்களைத் தான் நாம் அதிகரிக்கச் செய்ய வேண்டுமேயன்றி, ஆதரவு நிலையில் இருப்பவர்களை எதிர் நிலைக்கு தள்ளக் கூடாது.

ஒரு காலத்தில் நீட் எதிர்ப்பு பேசியே ஆட்சிக்கு வந்த திமுக இன்று இன்றைய தமிழக இளைஞர்களின் தன்னெழுச்சியான நீட் எதிர்ப்பை தவெகவுக்கு எதிராக மடைமாற்றுவதில் மட்டுமே கண்ணும், கருத்துமாக உள்ளது.

இந்திய பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி எம்.பிக்களும் தினசரி மாணவர்களுக்கு ஆதரவாக நீட் மோசடிகளுக்கு எதிராக உச்சகட்ட தீவிரத்துடன் குரல் கொடுக்க, திமுக எம்பிக்கள் மாத்திரம் மேகதாது விவகாரத்தை எடுத்துக் கொண்டு திசை திருப்பும் வேலையை செய்தது. காங்கிரஸ் எதிர்ப்பு என்ற கவசத்தை போட்டுக் கொண்டு தான் இது நாள் வரை பேசியவை அனைத்தையும் கைவிட்டு பாஜகவை நெருங்க பாதை போட்டுக் கொண்டுள்ளது.

சென்னை எழும்பூரில் நீட் எதிர்ப்பு மேடையை இயக்குனர் பா.ரஞ்சித்  அவர்கள் தவெக எதிர்ப்பு மேடையாக்கவும், தலித்துகளை தவெக எதிர்ப்பாளர்களாக்கவும் தான் ஆர்வம் காட்டினார்.

பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு கிடைத்து வரும் முக்கியத்துவத்தை நீர்த்து போகச் செய்ய திமுக செய்து வரும் உத்திகளில் இதுவும் ஒன்று.

இதோ ஐந்து நட்களாக தலைகாட்டாத திமுக GenZ இளைஞர்கள் இன்றைய தினம்  கூட்டமாக நடிகை ஜூலியைக் கூட்டிக் கொண்டு திமுக அடையாளத்துடன் அங்கு சென்று  போராட்டக் களத்தை 'ஹைஜாக்' செய்ய முயன்றுள்ளனர்.

உடனே அங்கிருந்த மாணவர்களும், தோழர்களும், ''இந்த போராட்டம் கட்சிகளைக் கடந்து பொது நோக்கத்திற்காக ஒன்று திரண்டு நடத்தப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் நடந்த போதும் கூட கம்யூனிஸ்ட் கட்சியை முதன்மைபடுத்தாமல், அந்த தலைவர்கள் தலையீடுகள் இன்றி இது நடந்து கொண்டுள்ளது. ஆகவே இதை புரிந்து கொள்ளுங்கள்'' எனச் சொல்லவும் அவர்கள் திரும்பி போய்விட்டனர்.

கட்சி அடையாளங்களை துறந்து, பொது நோக்கத்திற்கு சக மனிதர்களாக செயல்படுவதற்கும், பழகுவதற்கும், நேர்மறை எண்ணங்கள் உள்ளவர்களால் மட்டுமே  முடியும்.

சாவித்திரி கண்ணன்

https://www.facebook.com/100000227053317/posts/38221179150806176/?rdid=d1Dn9rAqGOMsoRBi

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு