அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகமும் தனியார்மயமாக்கமும்!

தெய்வசுந்தரம் நயினார்

அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகமும்  தனியார்மயமாக்கமும்!

சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை  . . .  தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள்  தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க . . .  பொதுக்குழு , சிறப்புக்குழு ஆகியவற்றைக் கூட்டுவார்கள். அனுபவம்மிக்க 'அரசியல் தலைவர்கள்'  தொண்டர்களின் 'உணர்வுகளைக் ' கணக்கில்கொண்டு, 'தேர்தல் வியூகம்'  பற்றித் திட்டமிடுவார்கள். 'கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடிப்பட்டுச் செத்தான்' போன்ற முழக்கங்கள் முன்வைக்கப்படும்! இனி இதையெல்லாம் 'தேர்தல் வியூக தனியார் நிறுவனங்கள்' கவனித்துக்கொள்ளும்! 

தற்போதைய தேர்தல்களில் 'தேர்தல் வியூகப் பணி' கிஷோர் போன்றவர்கள் உருவாக்கியுள்ள 'தனியார் நிறுவனங்கள்' செய்கின்றன. அரசியல் கட்சிகளிடம் பல கோடி ரூபாய் பணத்தைக் ' கூலியாகப்' பெறுகிறார்கள். இந்தியாவில் இதுபோன்ற நிறுவனங்களாக ஆறு பெரிய நிறுவனங்கள் உள்ளன

https://leadtech.in/political-consulting-companies-in-india

அதாவது . . .  தற்போது அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் திட்டங்களையோ அவற்றிற்கான முழக்கங்களையோ அல்லது அரசியல் போராட்டங்களையோ நம்புவதில்லை. 'தொண்டர்களை' நம்புவதில்லை! 'தேர்தலுக்கான பணிகளையே' தனியார்மயமாக்கிவிட்டார்கள்! 

இந்த நிலையில் 'துப்புரவுப் பணிகளையும்' விட்டுவைக்காமல் , தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதில் 'வியப்பு' தேவை இல்லை!

அரசாங்கங்களின் பல துறைகள் - மருத்துவத்துறை, கல்வித்துறை உட்பட - தங்களுடைய 'பணிகளைத்' தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவருகிறார்கள்! இதனால் அந்த நிறுவனங்களின் 'பணியாளர்கள்' அரசாங்கத்திற்கு எதிராக இனி எந்தவொரு போராட்டத்தையும் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை! மேலும் 'மேல்மட்ட அதிகாரிகளுக்கு' வேலைப்பளுவும் குறையும் அல்லவா? 

இன்று . . .  'துப்புரவுப் பணிகள்' தனியார்களிடம் விடப்படுகின்றன! நாளைக்கு . . .  காவல்துறைப் பணிகள்கூட  அவ்வாறு விடப்படலாம்! அரசு நிர்வாகப் பணிகள்கூட அவ்வாறு விடப்படலாம்! ஏற்கனவே 'கல்வித்துறை' பெரும்பாலும் 'தனியார் நிறுவனங்களிடம் ' ஒப்படைத்தாகிவிட்டது! இனி ஒவ்வொரு துறையாக இதுபோன்று தனியார்களிடம் ஒப்படைக்கப்படலாம்! 

எனவே, தேர்தல் அரசியலிலும் அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளையோ, தொண்டர்களையோ, வட்டங்கள், மாவட்டங்களையோ 'நம்பாமல்' அல்லது 'சார்ந்து இருக்காமல்'  'தேர்தல் வியூக ஜாம்பவான்களிடம்' ஒப்படைப்பதில் வியப்பு இல்லை!

'துப்புரவுப் பணிகள்' முதல் 'தேர்தல் வியூகப்பணிகள்' வரை  . . . இனி 'தனியார்மயமாக்கப்படுவது ' உறுதி! '

- தெய்வசுந்தரம் நயினார்

https://www.facebook.com/share/p/19KhMUaDyo/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு