ரஷ்யா மற்றும் போல்ஷ்விக் கட்சி பற்றி பாரதியார்

Subbaraj V

ரஷ்யா மற்றும் போல்ஷ்விக் கட்சி பற்றி பாரதியார்

ருஷ்யாவில் ஜார் சக்ரவர்த்தியின் ஆட்சி பெரும்பாலும் ஸமத்வக் கக்ஷியார்,  அதாவது போல்ஷிவிஸ்ட் கக்ஷியாரின் பலத்தாலே அழிக்கப்பட்டது. எனினும் ஜார் வீழ்ச்சியடைந்த மாத்திரத்திலே அதிகாரம், போல்ஷிவிஸ்ட்களின் கைக்கு வந்துவிடவில்லை. அப்பால் சிறிது காலம், முதலாளிக் கூட்டத்தார் கெரன்ஸ்கி என்பவரைத் தலைவராக நிறுத்தி, ஒருவிதமான குடியரசு நடத்தத் தொடங்கினார்கள்.  

ஆனால் கெரன்ஸ்கியின் ஆட்சி அங்கு நீடித்து நடக்கவில்லை. இங்கிலாந்து, ப்ரான்ஸ் முதலிய நேச ராஜ்யங்களிடமிருந்து பலவகைகளில் உதவி பெற்ற போதிலும் புதிய கிளர்ச்சிகளின் வெள்ளத்தினிடையே,கெரன்ஸ்கியால் தலைதூக்கி நிற்க முடியவில்லை.  சில மாதங்களுக்குள்ளே கெரன்ஸ்கி தன் உயிரைத் தப்புவித்துக் கொள்ளும் பொருட்டாக ருஷ்யாவினின்றும் ஓடிப்போய், நேச வல்லரசுகளின் நாடுகளில் தஞ்சமென்று குடிபுக நேரிட்டது.

போல்ஷிவிக் ஆட்சி ஏற்பட்ட காலத்திலே அதற்குப் பலவகைகளிலும் தோஷங்கள் கற்பிப்பதையே தம் கடமையாகக் கருதியவர்களிலே சிலர் அதன்மீது ராஜரீக நெறிகளிலே குற்றங்கள் சுமத்தியது போதாதென்று, போல்ஷிவிஸ்ட் கக்ஷியார் ஸ்திரீகளையும் பொதுவாகக் கொண்டு ஒருத்தியை பலர் அனுபவிக்கிறார்கள் என்று அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. ஆனால், 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு' ஒன்பதாம் நாள் உண்மைஎப்படியேனும் வெளிப்பட்டுவிடும். ஒரு பெரிய ராஜ்யத்தைக் குறித்து எத்தனை காலம் பொய் பரப்பிக் கொண்டிருக்க முடியும்?

சில தினங்களுக்கு முன்பு, இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் 'மாஞ்செஸ்டர் கார்டியன்' என்ற பத்திரிகை நவீன ருஷியாவின் விவாகவிதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களைப் பிரசுரம்செய்திருக்கிறது. அவற்றைப் பார்க்கும்போது, நவீன ஐரோப்பிய நாகரீகம் என்று புகழப்படும் வஸ்துவின் நியாயமான உயர்ந்த பக்குவ நிலையை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கிறதென்று தெளிவாக விளங்குகிறது. 

ஆண், பெண் இருபாலாரும் பரிபூரண ஸமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இருபாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டைச் சமைக்கவேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மையான நோக்கம். பெண்களுக்கு விடுதலை தாங்கள் வேறு பல ஜாதியார்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப்பதே தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றாமென்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள்.  

அந்த வகையிலே பார்த்தால், ஐரோப்பாவின் இதரப் பகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷியா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ளதென்பது பரத்யக்ஷமாகத் தெரிகிறது.

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid0m8nwfS8LaL82H9f5uCNXG4dw73rMuPPjXgNRPPfgFU8QvTMfuXXpfmkJXMuW66U4l&id=100008199160657&sfnsn=wiwspwa&mibextid=6aamW6&paipv=0&eav=AfYNBp9O8Id6roMthK7AwEObnOfAbdQ73VCi5idwcivVJorKkS5daKMPETCa5uTI9ss&_rdr