ஜிடிபி வளர்ச்சிக்கும் கள யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளி: இந்தியாவின் பொருளாதார வெற்றி வெறும் காகிதத்தில்தானா?

தமிழில்: வெண்பா

ஜிடிபி வளர்ச்சிக்கும் கள யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளி: இந்தியாவின் பொருளாதார வெற்றி வெறும் காகிதத்தில்தானா?

முந்தைய ஆண்டுகளை விட அதிகமாக 7.4% ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை முன்னறிவித்து பாஜக அரசு கொண்டாடியதுடன் 2026-ஆம் ஆண்டு தொடங்கியது. உடனடியாக, அக்கட்சி செய்தித் தொடர்பாளர்கள் தொலைக்காட்சி விவாதங்களிலும் சமூக ஊடகத் தளங்களிலும் குவிந்து, நீண்டகாலமாக வாக்களிக்கப்பட்ட "அச்சே தின்" (நல்ல காலம்) இறுதியாக வந்துவிட்டதாக பேசினர். இந்தியாவின் வளர்ச்சியை உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்றும், அரசாங்கத்தை ஈடுஇணையற்ற முன்னேற்றத்தின் உந்துசக்தியாகவும் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Cell) சித்தரித்தது. இருப்பினும், இந்தக் கொண்டாட்ட ஆரவாரங்களுக்குக் கீழே, லட்சக்கணக்கான இந்தியர்கள் தினசரி அனுபவிக்கும் ஒரு முற்றிலும் மாறுபட்ட பொருளாதார யதார்த்தம் புதைந்து கிடக்கிறது. தற்போதைய ஆட்சி முன்வைக்கும் புனைவுகளுக்கும் உண்மைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை இந்த கட்டுரையில் ஆராயப் போகிறோம்.

ஜிடிபி கொண்டாட்டங்களுக்கு மத்தியில் சந்தையில் நிலவும் குழப்பம்

ஜிடிபி கணிப்புகள் தலைப்புச் செய்திகளாக மாறிய அதே வேளையில், பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. ட்ரம்ப் அறிவித்த கூடுதல் வரி விகிதங்களால் (tariffs), சென்செக்ஸ் (Sensex) கிட்டத்தட்ட 2,000 புள்ளிகள் சரிந்தது. அதே நேரத்தில், 2026 ஜனவரியின் முதல் இரண்டு நாட்களுக்குள் அந்நிய முதலீட்டாளர்கள் (FPIs) இந்திய சந்தைகளில் இருந்து சுமார் ₹7,068 கோடியைத் திரும்பப் பெற்றனர். ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி கிட்டத்தட்ட 11.9 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது இந்தியாவின் பொருளாதார பலவீனத்தை எடுத்துக் காட்டுகிறது. இந்த மாற்றங்கள், ஜிடிபி புள்ளிவிவரங்களால் சித்தரிக்கப்படும் செழிப்பான பொருளாதார பிம்பத்திற்கு முற்றிலும் மாறாக உள்ளன.

நிவாரணம் இல்லாத வளர்ச்சி: சாதாரண மக்களின் வாழ்க்கை

வலுவான வளர்ச்சி பற்றிய கதைகள் இருந்தபோதிலும், சாமானிய மக்கள் தங்கள் வாழ்க்கையில் எந்தவொரு வெளிப்படையான முன்னேற்றத்தையும் காணவில்லை. ஊதியங்கள் தேக்கமடைந்துள்ளன, வேலைவாய்ப்பு உருவாக்கம் பலவீனமாக உள்ளது, வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருகின்றன, வேலை உத்திரவாதமின்மை அச்சத்தை பெரிதாக்கியுள்ளது. நிலையற்ற சந்தையினால் பணிநீக்கங்கள் குறித்த பயம் பல ஊழியர்களிடையே நீடிக்கிறது. இத்தகைய முரண்பாடுகள் முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன: இந்தியா உண்மையிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்றால், மக்களின் அன்றாட வாழ்க்கையில் இந்த வளர்ச்சி ஏன் கண்களுக்குத் தெரிவதில்லை?

ஜிடிபி: மிகவும் சிக்கலான மற்றும் வசதியான எண்ணா?

ஜிடிபி கணக்கீடுகளில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்கள், அடிப்படை ஆண்டு மாற்றங்கள், பணவீக்க மாற்றங்கள் மற்றும் அமைப்புசாராத் துறை மதிப்பீடுகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அரசாங்கம் பெரும்பாலும் பொது விவாதங்களைத் தவிர்க்கிறது. ஜிடிபி கணக்கீடு சிக்கலானது என்றாலும், சாதாரண கணக்கீடுகள் பொருளாதார ஆரோக்கியத்தை வெளிப்படுத்த முடியும். ஜிடிபி வளர்ச்சி உண்மையானதாகவும் பரவலானதாகவும் இருந்தால், அது பின்வருவனவற்றில் தெளிவாகப் பிரதிபலிக்கும்:

அந்நிய நேரடி முதலீடு (FDI)

வேலை உருவாக்கம் மற்றும் உற்பத்தித்திறன்

உற்பத்தித் துறை மூலதனம்

ஊதிய வளர்ச்சி

உள்நாட்டு கார்ப்பரேட் முதலீடு

ஆனால், இந்தக் குறியீடுகள் கவலைக்கிடமான கதையைச் சொல்கின்றன. அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர். இந்தியா மீண்டும் மீண்டும் வேகமாக வளரும் பொருளாதாரம் என்று முத்திரை குத்தப்பட்டாலும், அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் இருந்து கிட்டத்தட்ட ₹1.66 லட்சம் கோடியைத் திரும்பப் பெற்றுள்ளனர். 2025 இன் இறுதி காலாண்டில் இந்தியாவுக்குள் வந்த பணத்தை விட வெளியேறிய பணமே அதிகமாக இருந்தது. முதலீட்டாளர்கள் லாபத்தை கோருகிறார்களே தவிர, வாய்வீச்சுகளை அல்ல.

ஜிடிபி விவாதம் ஏட்டளவிலானது மட்டுமல்ல, அது நமது பணப்பையையும் பாதிக்கிறது

இந்த விவாதம் நேரடியாக வீட்டு நிதி, வேலை பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் மருத்துவம் மற்றும் அவசரச் செலவுகளைச் சமாளிக்கும் திறனைப் பாதிக்கிறது. அரசாங்கம் தலைப்புச் செய்திகளில் வளர்ச்சியைப் போற்றினாலும், சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவின் தேசியக் கணக்கு தரவுகளுக்கு அதன் கணக்கீட்டு முறை மோசமானது என சுட்டிக்காட்டி "C" தரம் அளித்துள்ளது. இதற்கான காரணங்கள்: ஜிடிபிக்கு அடிப்படை ஆண்டு என 2011-12-ஐயே நிர்ணயித்திருப்பது, உற்பத்தியாளர் விலை குறியீட்டிற்கு (PPI) பதிலாக மொத்த விலை குறியீடு (WPI) போன்ற காலாவதியான முறைகளைப் பயன்படுத்துவது, அமைப்புசாராத் துறை பற்றிய போதுமான விவரங்கள் இன்மை.

இந்த குறைபாடுகள் ஜிடிபி எண்களை மிகைப்படுத்திக் காட்டும் அதே வேளையில் உண்மையான பாதிப்புகளை மறைக்கின்றன. 

அமைப்புசாராத் துறை: கண்ணுக்குத் தெரியாத வீழ்ச்சி

இந்தியாவின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 30% அமைப்புசாராத் துறையிலிருந்து வருகிறது. பணமதிப்பிழப்பு, கோவிட்-19 மற்றும் உலகளாவிய நெருக்கடிகளுக்குப் பிறகு இந்தத் துறை பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. சொற்ப வருமானத்திற்கு அல்லல்படும் கிக் தொழிலாளர்கள் (Gig workers), கடைகளை மூடும் சிறு வணிகர்கள், வேலையை இழக்கும் தினக்கூலித் தொழிலாளர்கள் என அனைவரும் அமைப்புசாராத் துறை கவலைக்கிடமாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

இரண்டு இந்தியாக்கள்: ஆடம்பர வளர்ச்சி மற்றும் வெகுஜனத் துயரம்

வெகுஜன மக்கள் போராடும் அதே வேளையில், இந்தியாவின் முதல் 1-2% உயர் அடுக்கு மக்கள் செழித்து வருகின்றனர். ரோல்ஸ் ராய்ஸ், ஆடம்பர கார்கள் மற்றும் பிரீமியம் அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. பொருளாதார நிபுணர் அசோகா மோடி, இந்தியாவின் நுகர்வு முறை மிகவும் குறுகியது என்று குறிப்பிடுகிறார். முரண்பாடாக, இந்தக் குழு பெரும்பாலும் வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் பயணங்களுக்காகச் செலவழிப்பதன் மூலம் இந்தியாவின் செல்வத்தை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்கிறது.

இந்தியா 1.45 பில்லியன் மக்களைக் கொண்டிருந்தாலும், பொருளாதார ரீதியாக இது 140-150 மில்லியன் நுகர்வோர் கொண்ட நாடாகவே செயல்படுகிறது. கூகுள் (Google) மற்றும் என்விடியா (Nvidia) ஆகிய இரண்டு அமெரிக்க நிறுவனங்களின் சந்தை மதிப்பு இந்தியாவின் ஜிடிபியை விடவும் அதிகமாக உள்ளது. சர்வதேச வருவாயை ஈட்டித் தரும் உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவிடம் ஏதுமில்லை.

கார்ப்பரேட் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு நெருக்கடி

2016-ல் ஜிடிபியில் 19% ஆக இருந்த கார்ப்பரேட் முதலீடு, 2024-ல் 14% ஆகக் குறைந்தது. 

வேலைவாய்ப்பு நெருக்கடி பொருளாதாரம் குறித்த புனைவுகளை அம்பலப்படுத்துகிறது. 10,000 ரயில்வே பணிகளுக்கு 1.2 கோடி விண்ணப்பங்கள் வருவது அல்லது பியூன் பணியிடங்களுக்கு பிஎச்டி (PhD) முடித்தவர்கள் விண்ணப்பிப்பது இந்தியாவின் ஆழமான வேலைவாய்ப்பு நெருக்கடியைக் காட்டுகிறது. வாரத்திற்கு ஒரு மணிநேரம் வேலை செய்தாலே அவர் "வேலைவாய்ப்பு பெற்றவர்" என்று கருதப்படும் ILO வரையறையைப் பின்பற்றுவதன் மூலம் அரசாங்கம் உண்மையை மறைக்கிறது.

ஆண்டுக்கு 40 மணிநேரம் மட்டுமே வேலை செய்யும் கிக் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றவர்களாகக் கணக்கிடப்படுகிறார்கள்; இது புள்ளிவிவர மோசடி. 

உற்பத்தித் துறை: ஒரு முறிந்த வாக்குறுதி. 

"மேக் இன் இந்தியா" (Make in India) திட்டம் உற்பத்தியை 25% ஆக உயர்த்த இலக்கு வைத்தது, ஆனால் அது 17% இல் தேக்கமடைந்துள்ளது. பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பதிலாக பிளவுபடுத்தும் அரசியலில் கவனம் திரும்பியதால் இத்திட்டம் வேகத்தை இழந்தது.

தீர்வுகளைத் தேடுவதற்கு முன்பு யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்

வீட்டுக் கடன் அதிகரிப்பு, சேமிப்பு குறைவு, வர்த்தகப் பற்றாக்குறை ஆகியவை கவலைக்குரியவை. ஜிடிபி கணக்கீட்டு முறையைச் சரிசெய்தல், அடிப்படை ஆண்டைப் புதுப்பித்தல், அமைப்புசாராத் துறையை மீட்டெடுப்பதன் மூலமே உண்மையான முன்னேற்றம் ஏற்படும். ஊதிய உயர்வு, பாதுகாப்பான வேலைகளை உருவாக்குதல் மற்றுமொரு புதிய "மேக் இன் இந்தியா 2.0" மூலம் உற்பத்தித் துறையை மீட்டெடுப்பது அவசியம். கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடு செய்வதன் மூலமும், சமத்துவமின்மையைக் குறைப்பதன் மூலமும் மட்டுமே நிலையான பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

எண்களைக் கேள்வி கேளுங்கள், உண்மையைக் கோருங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களால் இந்தியாவின் பொருளாதாரக் கதையை எழுதிவிட முடியாது. கண்ணியம் இல்லாத வேலைகள் மற்றும் ஊதியங்கள் நீடிக்கும் ஜிடிபி வளர்ச்சி அர்த்தமற்றது. மற்ற சமூக அநீதிகளைப் போலவே, மக்களும் அதிகாரத்தைக் கேள்வி கேட்க வேண்டும். தொடர்ச்சியான பொதுமக்களின் போராட்டங்கள் மட்டுமே அரசாங்கத்தை தேசத்தின் உண்மையான நல்வாழ்வுக்காகப் பணியாற்ற கட்டாயப்படுத்தும்.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://countercurrents.org/2026/01/gdp-growth-vs-ground-reality-is-indias-economic-success-only-on-paper/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு