வயநாடு பேரழிவு: சரமாரியாக பெய்த மழை நிலச்சரிவை தூண்டியிருக்கலாம், ஆனால் காலநிலை மாற்றம் மட்டுமே காரணம் அல்ல!

தமிழில் : விஜயன்

வயநாடு பேரழிவு: சரமாரியாக பெய்த மழை நிலச்சரிவை தூண்டியிருக்கலாம், ஆனால் காலநிலை மாற்றம் மட்டுமே காரணம் அல்ல!

காலநிலை மாற்றத்தை எவ்வாறு குற்றம் சாட்டுகிறோமோ அதே அளவிற்கு சுற்றுலா விரிவாக்கத்தினால் பெருகியிருக்கும் ரியல் எஸ்டேட் சந்தையையும், அதிகளவிலான கட்டுமானங்களாலும் அதனால் இயற்கை நிலப் பயன்பாட்டில் குறிப்பாக எளிதில் பாதிப்பிற்குள்ளாகும் சுற்றுச்சூழல் பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாற்றங்களுக்கான காரணிகளையும் குற்றம் சொல்ல வேண்டுமென வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

அடையாளம் தெரியாத சடலங்கள். ஆர்பரித்து செல்லும் ஆற்றில் அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு அடித்துச் செல்லப்படும் உடற்பாகங்கள். காணாமல் போன உறவினர்களையும், அன்பிற்குரியவர்களையும் கண்டுவிடமாட்டோமா என்ற மரண வலியின் பிடியில் தேடி அலையும் குடும்பத்தினர்கள். சடலங்களோடு, மனித உடலின் எஞ்சிய பாகங்களைக்கூட எடுத்துச் செல்லும் அவசர ஊர்திகள். இயற்கையெழில் கொஞ்சும் கிராமங்கள் காட்சியளித்த வயநாடு, இன்று சேறும் சகுதியும் அப்பிய இடிபாடுகளாக, வேரோடு சாய்க்கப்பட்ட மரங்களாக, நிலத்தால் விழுங்கப்பட்ட வீடுகளாக, மண்மூடிப் போன மனிதர்களின் வாழ்வாக, எஞ்சியவர்களும் நடைப் பிணங்ளாக நிற்பதையே நமக்கு காட்சிப்படுத்துகிறது.

கெட்ட கனவில்கூட நினைத்துப்பார்க்க முடியாத பெருந்துயரை வயநாடு சந்தித்துள்ளது. ஜீலை-30 செவ்வாய்க்கிழமை விடிவதற்கு(வைகறை) முன்பே சரமாரியாக பெய்த தொடர் மழை காரணமாக அடுத்தடுத்த பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாட்டின் தென்-கிழக்கு பகுதியிலுள்ள வைத்திரி தாலுகாவில் அமைந்துள்ள மேப்பாடி சுற்றுவட்டாரம் முழுவதையும் மண் சரிவு விழுங்கிச் சென்றுள்ளது.  மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு படை, இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை உட்பட பலதரப்பட்ட மீட்பு குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர்.

ஆகஸ்ட் 3-ம் தேதி நிலவரப்படி பலி எண்ணிக்கை 308 என்று கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியுள்ளார்.(எனினும், கேரள முதல்வர் ஆகஸ்ட் 3 வரையிலான பலி எண்ணிக்கை 215 என்று அறிவித்துள்ளார்). இதுவரை 206 பேர் காணாமல் போயுள்ளனர். தப்பிப் பிழைத்த 10,000க்கும் மேற்பட்டவர்கள் வயநாடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 93 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு அழுவதற்குகூட தெம்பில்லை; அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

படிக்கவும்: வயநாடு நிலச்சரிவு: பாஜக, கேரள அரசுகளின் கார்ப்பரேட் வனக்கொள்கை மற்றும் ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்புகளால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பேரிடர்

நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு வயநாடு பகுதியில் சரமாரியாக மழை பெய்துள்ளது; கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்குள்ளாகவே 572 மி.மீ அளவிற்கான மழை பெய்துள்ளது. மழைக்காலம் என்றாலே வயநாடு மாவட்டத்தில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்றாலும், நிலச்சரிவு ஏற்படும் அளவிற்கு மிக கனமழை மிகக் குறுகிய நேரத்தில் பெய்வதற்கு காலநிலை மாற்றமும் முக்கிய பங்காற்றியுள்ளது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். பேரிடர் ஏற்பட்ட பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் காலநிலை மாற்றம் பற்றித்தான் பேசியுள்ளார். காலநிலை மாற்றம் ஒரு காரணியாக இருந்தபோதிலும், எளிதில் பாதிப்பிற்குள்ளாகும் சுற்றுச்சூழல் பகுதியில் நிலங்களைக் கூறுபோட்டு பிளாட்டுகளாக மாற்றியது, சுற்றுலாவை மையப்படுத்தி மட்டுமே பெருகிய ரியல் எஸ்டேட் சந்தையையும், அதனால் பெருமளவில் அதிகரிப்பட்ட கட்டிடங்களும் என நிலத்தின் பயன்பாட்டில் மாற்றம் ஏற்படுத்திய பலதரப்பட்ட காரணிகளையும் சேர்த்துத்தான் குற்றம்சாட்ட வேண்டுமென தி வயர் இணைய இதழுக்கு பேட்டியளித்த பல்வேறு வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சரமாரியான பெருமழையும், நிலச்சரிவும்

வயநாடு மாவட்டத்தின் தென்-கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நூல்புழா, அட்டமலா, சூரல்மலா, முண்டக்கை ஆகிய கிராமங்களில் ஜீலை-30 நள்ளிரவு 2 மணி முதல் 6 மணி வரை அடுத்தடுத்து பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது.

முண்டக்கை, சூரல்மலை கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவானது பெருநாசத்தை ஏற்படுத்தியிருந்தது; ஒட்டுமொத்த குடியிருப்புகளையும் மண்ணோடு மண்ணாகவும் புதைத்து அடித்துச் சென்றுள்ளது. இதுபற்றி அவ்வூர்க்காரர் ஒருவர் டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த போது, தங்களது வீடுகள் அல்லது தங்கள் நண்பர்களின் வீடுகள் எங்கிருந்தது என்று அடையாளம் காட்டுவதற்கு கூட முடியவில்லை, அந்தளவிற்கு நிர்மூலமாகியுள்ளது என்றார்.

மீட்பு பணிகளும் உடனடியாக முடக்கிவிடப்பட்டன. மாநில, மாவட்ட பேரிடர் மீட்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய இராணுவம், கப்பற்படை, விமானப்படை என பல துறைகளும், குழுக்களாக மீட்பு பணியில் இறங்கினர். கேரளா முழுவதுமிருந்து, அரசியல் வேறுபாடு கருதாமல் பலர் தன்னார்வலர்களாக வந்து மீட்பு பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மீட்பு பணி துவங்கி, நான்கு நாள்கள் கடந்த நிலையில், அதாவது ஆக.2 வெள்ளிக்கிழமையன்று, நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட வீட்டிலிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியிருந்தனர். அவர்களை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளனர். ஆக.3 அன்று அட்டமலைப் பகுதியில் சிக்கிக் கொண்ட ஒரு பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கேரள வனத்துறையைச் சேர்ந்த வனக்காவலர்கள் மீட்டுள்ளனர்.

நல்ல விசயங்கள் என்று சொல்வதற்கு இவ்வளவுதான் இருக்கின்றன. மேப்பாடியிலும், அதைச்சுற்றியுள்ள பகுதியிலும், நிலைமை பெரும்பாலும் கொலைநடுங்கச் செய்வதாகவே உள்ளது. மேப்பாடியிலிருந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிக பிணவறையாக மாற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது; பிரேதப் பரிசோதனையும் ஆஸ்பத்திரியில்தான் நடக்கிறது. குடும்பம் குடும்பமாக வீடுகளோடு சேர்ந்து மனிதர்களும் உயிரோடு புதைக்கப்பட்டுள்ளனர். உயிர்தப்பியர்வகளும் தங்களது அன்பிற்குரியவர்களின் உடற்பாகங்கள் ஏதும் கிடைக்கிறதா என்று மண்ணை தோண்டிப் பார்க்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பல குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.  அடையாளம் காண முடியாத உடற்பாகங்கள் மட்டுமே எஞ்சின. அவற்றை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்தான இரண்டு புகைப்படங்களை ஆகஸ்ட் 1 அன்று, இஸ்ரோவின் தேசிய தொலை உணர் ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது. 86,000 சதுர மீட்டர் அளவிற்கான நிலம் மொத்தமாக சரிந்து விழுந்துள்ளதென்று அப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. “கனமழை காரணமாக நிலமும், பாறையும் சேற்றோடு சேறாக அடித்து வரப்பட்டதால்”, அருகில் ஓடக்கூடிய இருவஞ்சிபுழா ஆற்றின் பாய்வுப் பகுதியையும் விரிவடையச் செய்துள்ளது. 

அதே நாளன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர், பினராயி விஜயன், காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கனமழையே இந்தப் பேரழிவிற்கு காரணம் என்று குற்றம்சாட்டினார்; அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு, 48 மணிநேரத்தில் 572 மி.மீ. அளவிற்கான பெருமழை கொட்டித் தீர்த்துள்ளது என்றார் பினராயி விஜயன். மேலும், காலநிலை மாற்றத்தால் குறுகிய காலத்தில் பெய்த கனமழை, திடீர் மேகவெடிப்பு பற்றியும் ஆக.3 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

 

 

காலநிலை மாற்றம், அதிதீவிர வானிலை போக்குகள், விளைவுகள் குறித்து ஆய்வு செய்துவரும் மரியம் ஜஜாரியா என்பவர் இலண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில் இணை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். “காலநிலை மாற்றத்தினால் வயநாடு பகுதியில் மழைப்பொழிவு போக்குகள், விளைவுகள் தாறுமாறாக மாற்றமடைந்து வருகின்றன” என்று கிளைமேட் டிரெண்ட்ஸ் என்ற தனியார் ஆய்வு நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மரியம் கூறியுள்ளார். “ஒரு காலத்தில் இதமான, ஈரப்பதமான வானிலையுடன், ஆண்டு முழுவதும் துளிமழை பெய்வதும், பருவம் பொய்க்காமல் மழைபொழிவதுமாக இருந்த இயற்கைச் சூழல் இப்போது வறண்ட, வெப்பமான கோடையுடன், பருவகாலத்தில் திடீர் பெருமழை பெய்யும் பகுதியாக மாறியுள்ளது. இந்த மாற்றத்தினால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. ஒருபுறம், வறண்ட பூமியாக மாறிவருவதால் நீரை உட்கவரும் சக்தியும் குறைந்து வருகிறது; இவற்றோடு திடீர் கனமழையும் பெய்யும்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவு எற்படுகிறது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளும் அப்படிப்பட்டதுதான்” என்கிறார் மரியம். 

அறிவியல், தொழில்நுட்பத்திற்கான கொச்சின் பல்கலைக்கழகத்தில் வளிமண்டல ரேடார் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும், வானிலை விஞ்ஞானியாகவும் எஸ். அபிலாஷ் பணியாற்றி வருகிறார். அரபிக் கடல் வெப்பமடைவதால் மிகப் பெரியளவிலான மேகக் கூட்டங்கள் அதிக அடர்த்தியாக உருவாவதற்கு வழிவகுக்கிறது. இதன்விளைவாக, கேரளாவில் மிகக் குறைந்த நேரத்திலேயே அதிதீவிரமான கனமழை பெய்வதற்கு வழிவகுக்கிறது. அதனால் நிலச்சரிவு ஏற்படுவதற்கான அபாயமும் பன்மடங்கு அதிகமாகிறது என்று அபிலாஷ் இந்திய செய்தி நிறுவன சங்கத்திடம்(PTI) ஜீலை-30 அன்று கூறியுள்ளார். 

முன்னெச்சரிக்கைள்: கண்டுகாணாமல் விடப்பட்டதா அல்லது எதுவுமே கொடுக்கப்படவில்லையா?

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு 7 தினங்களுக்கு முன்பாகவே, அதாவது, ஜீலை 23 அன்றே கனமழைக்கான முன் எச்சரிக்கை மத்திய அரசு சார்பாக கேரள அரசிற்கு தகவல் கொடுக்கப்பட்டது என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆக-1 அன்று பேசியிருந்தார். கேரளாவில் மீட்பு பணியைத் துவக்குவதற்காக 9 தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்பி வைத்துள்ளதாகவும் அன்று மாநிலங்களவையில் பேசியிருந்தார். குறைந்தபட்சம், சரியான நேரத்தில் ரெட் அலர்ட்கூட கொடுக்கப்படவில்லை என்று சொல்லிய கேரள முதல்வர் பினராயி விஜயன் அமித் ஷா கூறியதை மறுத்து பேசியுள்ளார்.

ஜீலை-23 முதல் ஜீலை-30 வரை இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பாக கொடுக்கப்பட்ட முன் எச்சரிக்கைகளுக்கான செய்திக் குறிப்புகளை தி வயர் நாளிதழ் தனியாக ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. ஜீலை 23 அன்று  இந்திய வானிலை மையம் சார்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் “ஜீலை-25 அன்று கேரள மற்றும் மாகே(Mahe)யில் குறிப்பிட்ட இடங்களில் ‘மிக கனமழை’ பெய்வதற்கு மிக அதிக வாய்ப்புள்ளது,” என்றும், ஜீலை-23 முதல் ஜீலை-27 வரை கேரளா மற்றும் மாகேயில் குறிப்பிட்ட/சில இடங்களில் ‘கனமழை’ பெய்வதற்கு மிக அதிக வாய்ப்புள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்திய வானிலை மையம் ஜீலை-24 அன்று வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், ஜீலை-24 முதல்-27 வரை கேரளா மற்றும் மாகேயில் “குறிப்பிட்ட இடங்களில் ‘கனமழை’ பெய்வதற்கு மிக அதிக வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது. அதேபோல், ஜீலை-25 அன்று வெளியிடப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பில், ஜீலை-25 காலை முதல் அடுத்த 24 மணிநேரத்திற்கு கேரளாவில் “குறிப்பிட்ட பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது” என்றும் ஜீலை-25 முதல் 29 வரை கேரளாவில் “குறிப்பிட்ட இடங்களில் ‘கனமழை’ பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்கான வானிலை நிலவரங்கள் குறித்தான கணிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் ஜீலை-25 அன்று வெளியிட்டிருந்தது. ஜீலை 18, 19 அன்று “கேரளா, மாகேயில் மிக கனமழை பதிவாகியிருக்கிறது” என்றும், “இந்த வாரத்தில் கேரளா, மாகேயில் குறிப்பிட்ட இடங்களில் ‘கனமழை’ பெய்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது” என்றும் IMD கூறியுள்ளது. ஜீலை-26 காலை 8:30 மணி வரையில் “கேரளா, மாகேயில் குறிப்பிட்ட இடங்களில் ‘கனமழை’ பதிவாகியிருக்கிறது” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஜீலை-26 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளது. ஜீலை-26 முதல் 30 வரை கேரளாவில் “குறிப்பிட்ட இடங்களில் ‘கனமழை’ பெய்வதற்கு மிக அதிக வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.  ஜீலை-26, காலை நிலவரப்படி, வயநாட்டிலுள்ள வைத்திரி தாலுகாவில் மட்டும் 24 மணி நேரத்தில் 9 செ.மீ. அளவிற்கான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என்று IMD பட்டியிலிட்டுள்ளது.

ஜீலை-27 காலை நிலவரப்படி, கேரளாவில் குறிப்பிட்ட இடங்களில் “கனமழை” பதிவாகியுள்ளதென்றும், ஜீலை-28 அன்று கேரளாவில் குறிப்பிட்ட இடங்களில் ‘மிக கனமழை’ பெய்வதற்கு மிக அதிக வாய்ப்புள்ளது என்றும் ஜீலை 27, 29, 30 அன்று கேரளாவில் “கனமழை பெய்வதற்கு ‘மிக அதிக’ வாய்ப்புள்ளது என்றும் IMD வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

ஜீலை-27 காலை நிலவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில் வயநாடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பதிவாகியுள்ளதாக கூறியிருந்தது: வைத்திரி (10 செ.மீ), காராப்புழா, மானந்தவாடி, அம்பலவயல் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. அளவிற்கான மழை பெய்துள்ளது.  ஜீலை-28 அன்று கேரளாவில் “குறிப்பிட்ட இடங்களில் ‘மிக கனமழை’ பெய்வதற்கு மிக அதிக வாய்ப்பிருப்பதால், ‘என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும், ‘என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்பதையும்” பட்டியலிட்டுள்ளனர்.

ஜீலை-28 அன்று, கேரளாவில் “குறிப்பிட்ட இடங்களில் ‘மிக கனமழை’ பெய்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது” என்றும், ஜீலை-29 முதல் 31 வரையில் கேரளாவில் “குறிப்பிட்ட இடங்களில் ‘கனமழை’க்கான வாய்ப்பிருக்கிறது” என்றும் IMD வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்திருந்தது. ஜீலை 28-ம் தேதியன்று, கேரளாவில் “குறிப்பிட்ட இடங்களில் ‘மிக கனமழை’க்கான வாய்ப்பிருப்பதால்” பாதிப்புகளை முன்கூட்டியே கணக்கில் கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியிருந்தது.

ஜீலை 29-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையிலும்கூட, கேரளாவில் “குறிப்பிட்ட இடங்களில் ‘மிக கனமழைக்கான’ வாய்ப்புகள் இருப்பதாக” மட்டுமே எச்சரிக்கை செய்திருந்தது. அதன்படி, ஜீலை 29 முதல் ஆக.1 வரை கேரளாவில் “குறிப்பிட்ட இடங்களில் ‘கனமழைக்கான’ வாய்ப்பிருப்பதாக” எச்சரிக்கை செய்திருந்தது.

முதன்முறையாக, ஜீலை 30 அன்று பிற்பகல் 1.10 மணிக்கு வெளியான இந்திய வானிலை ஆய்வு மையத்தின் செய்திக் குறிப்பில்தான் “தீவிர கனமழை” பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தது.

24 மணிநேரத்தில் 64.5 முதல் 115.5 மி.மீ. அளவிற்கான மழை பெய்தால் “கனமழை” என்றும், 115.6 முதல் 204.4 மி.மீ அளவிற்கான மழை பெய்தால் “மிக கனமழை” என்றும், 204.4 மி.மீ. மேல் மழை பெய்தால் “தீவீர கனமழை” என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்தியிருப்பதே இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயமாகும். அவ்வகையில், ஜீலை-30 வரை, “தீவிர கனமழைக்கான” எச்சரிக்கை கேரளாவிற்கு வழங்கப்படவில்லை என்பதோடு, நிலச்சரிவுக்கான முன்னெச்சரிக்கை வழங்கப்படுவதற்கு முன்பே தீவிர கனமழை பெய்துள்ளது என்பதே தெரிய வருகிறது.

வயநாடு பகுதியில் முதல் 24 மணிநேரத்தில் 200 மி.மீ. அளவிற்கான மழை பெய்துள்ளது என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் 372 மி.மீ. அளவிற்கான மழை பதிவாகியுள்ளது என்றும் மொத்தமாக 48 மணி நேரத்திற்குள்ளாக 572 மி.மீ. அளவிற்கான மழை பதிவாகியுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். ஜீலை-30 நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு காலை 6:00 மணி அளவில்தான் கேரளாவிற்கு ரெட் அலர்ட் தரப்பட்டது என்று ஆக.1-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். “மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டது என பொய்யான தகவலை கூறி” மாநிலங்களவையை “தவறாக வழிநடத்திய” காரணத்திற்காக, தி இந்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் அமித்ஷாவிற்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மேம்பட்ட தொழில்நுட்பமும், கண்காணிப்பு சாதனங்களும் தேவை

மத்திய அரசு ரெட் அலர்ட் வழங்கப்படவில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும்,  வயநாட்டில் உள்ள கல்பட்டா தாலுகாவில் அமைந்துள்ள ஹியூம் சூழலியல் மற்றும் வன உயிரியியல் ஆய்வு மையம் மாவட்ட நிர்வாகத்திடமும், மாநில அதிகாரிகளிடமும் முண்டக்கை பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று ஜீலை 29 அன்று காலையிலேயே – அதாவது பேரிடர் ஏற்படுவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பே - எச்சரிக்கை விடுத்துள்ளது. 

“எங்கள் எச்சரிக்கையை ஏற்றுக்கொண்ட 20 நபர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறியதால் உயிர் பிழைத்துள்ளனர்” என்று தி வயர் நாளிதழுக்கு ஹியூம் ஆய்வு மையத்தின் இயக்குநர் சி.கே. விஷ்ணுதாஸ் கூறியுள்ளார்.

“வட்டாரம், உள்ளூர் அளவில் மட்டுமல்லாது சிறு சிறு குக்கிராமம் அளவிலான வானிலைத் தகவல்களைக் கூட விரிவாக சேகரிக்க ஆரம்பித்தோம். வயநாடு மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் பெய்யும் மழை அளவைக் கணக்கிடுவதற்கான கருவிகளை பொருத்தியுள்ளோம். சிறு அளவில் மழை பெய்தாலும்கூட இந்த மழைமானிகள் தகவல் சேகரிக்கத் துவங்கிவிடும். 2018ல் துவங்கி, வயநாட்டில் எங்கெல்லாம் நிலச்சரிவு ஏற்படுகிறதோ, அந்த இடத்தையெல்லாம் வகுத்து, தொகுத்து வரைபடமாக மாற்றினோம். எங்களது பணி மூலமாக நிலச்சரிவுகள் தொடர்பான பலதரப்பட்ட புள்ளிவிவரத் தகவல்களை உருவாக்க முடிந்தது. புவிசார் தகவல் சாதனங்களைக்(GIS) கொண்டு வயநாடு மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளிலெல்லாம் நிலச்சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பதை காட்டும் வரைபடத்துடன்கூடிய புள்ளிவிவரத் தரவை உருவாக்கினோம்” என்று விஷ்ணுதாஸ் விளக்கியுள்ளார்.

“நிலச் சரிவு ஏற்படுவதற்கு பிரதான தூண்டுதலாக இருப்பது மழைதான் என்பதை கண்டறிந்துள்ளோம்” என்கிறார் விஷ்ணுதாஸ்.

நிலச்சரிவு ஏற்படுவதற்கு மண்ணின் தன்மைகள் எந்தெந்த வகையிலெல்லாம் பங்காற்றுகிறது என்பது உட்பட பலதரப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே எங்கள் குழு இந்த வரைபட புள்ளிவிவரத் தரவை உருவாக்கியுள்ளது. உதாரணத்திற்கு, வயநாடு மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலையுச்சியாக அமைந்திருக்கும் செம்பரா பகுதியில் பாறைகள் அதிகமாக காணப்படுவதால் அங்கு நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஒப்பீட்டளவில் குறைவு என்பதையும் எடுத்துக் காட்டும் வகையில் எங்கள் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, நிலங்கள் துண்டாடப்பட்டு பிளாட்டுகளாக மாற்றப்படுவது நிலச்சரிவுக்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. அதேபோல, சாலைகள், குழாய் பாதைகள், ரயில்வே பாதைகள் போன்று நேர்க்கோட்டு பாதையில் அமைக்கப்படும் உள்கட்டமைப்புகளும்கூட நிலச்சரிவை கட்டவிழ்த்துவிடும் காரணிகளில் ஒன்றாக இருக்கிறது என்று விஷ்ணுதாஸ் கூறுகிறார்.

மேலும் அவர், திடீர் பெருமழைக்கு காலநிலை மாற்றமே முக்கிய காரணம் என்றும், நமது பருவகாலங்களும் இதனால் தாறுமாறாக மாறிவிட்டது என்றும் கூறியுள்ளார். “கொச்சியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பயன்படுத்தும் டோப்லார் ரேடார் போன்று மலபார் மண்டலத்திலும் ஒரு டோப்லார் ரேடார் அமைக்கும்போது நம்மால் மணிக்கொரு முறை வானிலைத் தகவல்களைப் பெற முடியும்” என்கிறார் விஷ்ணுதாஸ்.

நிலச்சரிவு அதிகமாக ஏற்படும் பகுதிகளில் மழைப்பொழிவை கண்காணித்து முன்கூட்டியே சொல்லும் முன்னெச்சரிக்கை கருவிகளை அமைக்க வேண்டும் என்று பூனாவில் உள்ள வெப்ப மண்டல வானியல் ஆய்வுக்கான இந்திய நிறுவனத்தை சேர்ந்த வானிலை ஆய்வாளர் ரோக்ஸ் மேத்யு கோல் கூறியுள்ளார். “தற்போதுள்ள தொழில்நுட்பம், நவீன அறிவியலை கொண்டு நம்மால் இதுபோன்ற கருவிகளை உருவாக்க முடிவதோடு, உயிரிழப்புகளையும், வாழ்வாதார இழப்புகளையும் தவிர்க்க முடியும்” என்கிறார் மேத்யு.

செம்பாதி கேரள மாநிலம் 20 டிகிரி சாய் கோணத்துடன் மலைப்பகுதியாகத்தான் உள்ளது. எப்போதெல்லாம் கனமழை பொழிகிறதோ, அப்போதெல்லாம் இந்தப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கிறது என்றார் ரோக்ஸ் மேத்யு.  “நிலச்சரிவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் முன்பே அடையாளம் காணப்பட்டு வரைபடமாக கேரள அரசிடம் உள்ளது. ஒவ்வொரு கிராம ஊராட்சி பகுதிகளுக்கும் இதுபோன்று நிலச்சரிவு அபாய அளவு பற்றி அறிவிக்கும் வரைபடம் தயாரிக்கப்படுவதோடு, தகுந்த முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்” என்று மேத்யு கூறுகிறார்.

மறுக்கப்பட்ட ஆய்வு அறிக்கைகள்: எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டனவா?

நிலச்சரிவு அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் நடக்கும் கட்டுமான பணிகள், நிலப் பயன்பாட்டில் கொண்டு வரப்படும் மாற்றங்களை ஆய்வுக்குட்படுத்துவதும் கூட அவசியமாகியிருக்கிறது என்று கோல் மேத்யூ கூறுகிறார். “காலநிலை மாற்றங்களோடு, எங்கெல்லாம் மனிதர்களின் தலையீடுகளால் இயற்கையான நிலப்பரப்பு வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துவது அதிகமாகியுள்ளதோ அங்கெல்லாம்தான் அடிக்கடி நிலச்சரிவுகளும், வெள்ளப்பெருக்குகளும் ஏற்படுகின்றன. அதே நேரத்தில், இயற்கை நிலப்பரப்பில் மனிதர்களின் தலையீடு குறைவாக இருக்கின்ற பகுதிகளிலும் கூட பல கடுமையான நிலச்சரிவுகள் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.”

இயற்கை நிலத்தின் பயன்பாட்டில் புகுத்தப்படும் மாற்றம் குறித்தும், இயற்கை சமநிலையை தக்கவைப்பது குறித்தும் ஆய்வு செய்வதற்காக 2012-ம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைக்கான சூழலியல் நிபுனர் குழு(WGEEP) அமைக்கப்பட்டது. சூழலியல் முக்கியத்துவம், மலைப் பகுதியின் கூருணர்வு தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த மேற்குத் தொடர்ச்சி மலையையும் முப்பெரும் கூருணர்வு மண்டலங்களாக வகைப்படுத்தியதோடு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஏற்ப கட்டுப்பாடுகளையும், ஒழுங்குமுறைகளையும் பரிந்துரைத்திருந்தது.

சூழலியல் வல்லுநர் மாதவ் கட்கில் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த WGEEP குழு மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்-மத்திய பகுதியில் அமைந்திருக்கும் வயநாடு மாவட்டத்திலிருக்கும் அனைத்து தாலுகாக்களையும் (வைத்திரி, சுல்தான் பதேரி, மனந்தவாடி) முதலாம் சூழலியல் கூருணர்வு மிக்க மண்டலமாக வகைப்படுத்தியிருக்கிறது. மிக அதிகமான கட்டுப்பாடுகளுக்கு (எதிர்வருங்காலங்களில் எந்தவொரு கட்டுமானங்களையும் அனுமதிக்கக்கூடாது, சுரங்கம் தோண்டுவதற்கு தற்காலிகத் தடை விதிப்பது போன்று பல கட்டுப்பாடுகளுக்கு) உட்படுத்த வேண்டிய பகுதியாக முதலாம் சூழலியல் கூருணர்வு மண்டலம் WGEEP குழுவினரால் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

வயநாடு, பனசுரா-குட்டியாடி, நீலாம்பூர்-மேப்பாடி பகுதிகளும் “சூழலியல் கூருணர்வு மிக்க பகுதிகளாக” மாதவ் காட்கில் அறிக்கையில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், “ஒரு திட்டவட்டமான நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி” அதன் மூலம் இப்பகுதியை சட்ட வரம்பிற்குள் கொண்டு வர இயலாமை உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுமட்டுமல்லாது, இப்பகுதியில் வளர்ச்சி தடைபடும் என்றும், அதன் விளைவாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடும் என்றும் அஞ்சியதால் WGEEP அறிக்கை வழங்கிய பரிந்துரைகளை கேரளா உட்பட பல்வேறு மாநிலங்கள் நிராகரித்தன. மத்திய அரசாங்கம் புதிதாக கே. கஸ்தூரிரங்கன் தலைமையில் மற்றொரு குழுவை அமைத்தது; இடர்மிகு சூழலியல் கூருணர்வு மிக்க பகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டிருந்த போதிலும், இக்குழுவின் அறிக்கையைக்கூட பல மாநிலங்கள் ஏற்க மறுத்துவிட்டன.

வயநாடு பேரிடர் மனிதர்களால் உருவானதே என்று ஜீலை-30 அன்று மாலை தி இந்து நாளிதழுக்கு மாதவ் காட்கில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். வல்லுநர் குழு வழங்கிய மிக முக்கியமான சூற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பரிந்துரைகளைக்கூட செயல்படுத்தத் தவறிய கேரள அரசாங்கமே வயநாடு நிலச்சரிவிற்கு காரணம் என்று கூறினார்.

‘சூழலியல் கூருணர்வு மிக்க பகுதிகள்’ என்று மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிதாக சிலவற்றை வகைப்படுத்தி வரைவறிக்கையாக மத்திய அரசாங்கம் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட நான்கு நாள்களுக்கு பிறகு வெளியிட்டிருந்தது. இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிற பட்சத்தில் அப்பகுதிகளில் உள்ள வளர்ச்சிப் பணிகள் சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜீலை-30 அன்று வயநாடு நிலச்சரிவில் பெரும்பாதிப்புக்கு உள்ளான கிராமங்களில் ஒன்றாக இருக்கும் நூல்புழாவையும் 13 சூழலியல் கூருணர்வு மிக்க கிராமங்களில் ஒன்றாக மத்திய அரசாங்கம் இப்போது வகைப்படுத்தியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இதோடு சேர்த்து ஆறு முறை வரைவறிவிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன; நிலச்சரிவுக்கு பிறகு வெளியிடப்பட்டிருந்தாலும் இது தற்செயலான ஒன்றுதான் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

பெருமளவில் கட்டடங்கள் எழுப்பப் பட்டதற்கு சுற்றுலா மயமாக்கலே காரணம்

மேப்பாடியிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதயிலும் சமீப காலங்களில் புற்றீசல் போல எண்ணிலடங்கா உல்லாச விடுதிகளும், சுற்றுலாத் தலங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதியில் தற்போது சாகச சுற்றுலாத் தலங்களும் அதிகரித்து வருவதாக பிலிப் வர்கீஸ் கூறுகிறார். ஐ.நா. பல்கலைக்கழகம்(UNU) மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான ஜப்பானிய கூட்டமைப்பின்(JSPS) கீழ் வழங்கப்படும் ஆய்வுதவித் தொகையில்(fellowship) ஜப்பானிலுள்ள அகிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் ஆய்வறிஞராக வர்கீஸ் பணிபுரிந்து வருகிறார். 2014-ம் ஆண்டு முதல் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் இயற்கையை சிதைக்காத, தக்கவைக்கும் சுற்றுலாத் துறை வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ததற்காக முனைவர் மற்றும் முதுமுனைவர் பட்டம் பெற்றுள்ளார். சென்ற ஆண்டுகூட ஆய்விற்காக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு வந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சமூக பாதிப்பிற்கும், இயற்கைச் சூழல் பாதிக்கப்பிற்கும் சுற்றுலாத் துறை வளர்ச்சிதான் நேரடியான காரணம் என பலரும் குற்றம் சாட்ட துணியவில்லை, சூழலியல் கூருணர்வு மிக்க பகுதியாக அறியப்படும் வயநாடு மாவட்டத்தை பொறுத்தமட்டில் நாம் சுற்றுலாத் துறையின் நேரடித் தாக்கத்தை மறுத்துவிட முடியாது என்று தொலைபேசி வழியாக தி வயர் நாளிதழுக்கு பேட்டியளித்த வர்கீஸ் கூறியிருந்தார்.

“வளமிக்க மண் என்பதாலோ, அதிக விளைச்சல் கிடைக்கும் என்றோ அல்லது இவ்வளவு எண்ணிக்கையிலான பணப்பயிர் சாகுபடி செய்ய முடியும் என்ற மதிப்பலிருந்துதான் முன்பெல்லாம் நிலங்கள் விற்கப்பட்டு வந்தன; மலையுச்சியில் ஆளரவம் இல்லாத இடமாக இருக்கிறதா அல்லது நடு காடாக இருக்கிறதா என்பதை குறிவைத்தே உல்லாச விடுதிகள் கட்டப்படுவதால், ரியல் எஸ்டேட் சந்தையும் இதனை அடிப்படையாகக் கொண்டே தற்போது இயங்கி வருகிறது,” என்று வர்கீஸ் கூறுகிறார்.

சுற்றுலாத் துறையைப் பொறுத்தமட்டில் ஆளரவம் இல்லாத தனித் தீவு போன்ற பகுதிகளென்றால் அந்த நிலத்தின் மதிப்பே தனித்தன்மையுடையதாகிவிடுகிறது; இதன் காரணமாக, பெரும்பாலும் எளிதாக சிதைவிற்கு உள்ளாகும் இயற்கை சூழலைக் குறிவைத்து எக்கச்சக்கமான உல்லாச விடுதிகள் படுவேகமாக அதிகரிக்க ஆரம்பித்தன; இவற்றில் பல சட்டத்திற்கு புறம்பாகவே கட்டப்படுகிறது என்றாலும் கட்டுப்படுத்துவதற்கு வக்கற்ற நிலையில்தான் மாவட்ட நிர்வாகங்களை வைத்திருக்கிறார்கள் என்று வர்கீஸ் கூறினார். மாவட்ட அளவிலான அதிகாரிகள் எவரேனும் இந்த சட்ட விரோதிகளை கட்டுப்படுத்த வேண்டுமென நினைத்துவிட்டால்கூட, உடனே அவர்களை மக்கள் விரோதி, வளர்ச்சியின் எதிரி என்றவாறெல்லாம் முத்திரை குத்திவிடுகிறார்கள் என்கிறார் வர்கீஸ்.

“வயநாடு மாவட்டத்தில் பெருகியிருக்கும் ரியல் எஸ்டேட் சந்தைக்கு பின்னால் இருப்பது முழுக்க முழுக்க சுற்லுலா மயமாக்கல்தான்.” என்கிறார் வர்கீஸ். “இயற்கைச் சூழலை சிதைக்காத வகையில் கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுலா வளர்ச்சி என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை” என்றார் அவர்.

ரியல் எஸ்டேட் துறையிலும், கட்டுமானத் துறையிலும் வரும் முதலீடுகளெல்லாம் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களாக, பெரும்பாலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை வர்கீஸ் அழுத்தமாக பதிவு செய்தார்.

“காலங்காலமாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார்கள், அவர்களால் எப்போதுமே இயற்கைக்கு பாதிப்பு ஏற்பட்டதில்லை, இயற்கையால் அவர்களில் எதிர்கால சந்ததியினருக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததில்லை; அவர்களுக்கு இயற்கைச் சமநிலை பற்றியெல்லாம் யாரும் பாடமெடுக்க வேண்டியதில்லை,” என்கிறார் வர்கீஸ்.

“ஆனால், நிலங்கள், உல்லாச விடுதிகள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் முதலீடுகளை கொட்டிக் குவிக்கும் அந்நியர்களுக்கு, பெருநகரத்திற்கு சுற்றுலா செல்லும் ஒரு உல்லாசப் பயணிக்கு என்னென்ன வசதிகளெல்லாம் கிடைக்குமோ அவை அத்தனையும் எப்படித் தருவது என்பதே முக்கியமாக பார்க்கப்படுகிறது; இதன்மூலம் உல்லாச விடுதியில் 50, 100 அல்லது 150 அறைகள் இருந்தாலும் அவை அனைத்துமே நிரம்பி வழியவேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது… குறைவே நிறைவு, சிறியதே அழகு என்ற வியாக்கியானமெல்லாம் இங்கு மதிக்கப்படுதில்லை; கெடுவாய்ப்பாக சுற்றுலாத் துறையில், பெருநிறைவே நிறைவு என்ற கருத்தியலையே வித்தாக கொண்டுள்ளார்கள்,” என்கிறார்  வர்கீஸ்.

இயற்கையோடு இயைந்தது, சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காதது என்ற பெயரில்தான் பல உல்லாச விடுதிகள் சந்தைப்படுத்தப்பட்டு விற்கப்படுகிறது என்றாலும், இயற்கை சூழலை பாதிக்காத வகையில் தொடர்வதென்பது முதலீட்டு அடிப்படையில் பார்க்கும் போது நடைமுறை சாத்தியமற்றது என்று முதலீட்டாளர்களே தன்னிடம் கூறியுள்ளதாக வர்கீஸ் குறிப்பிடுகிறார். இந்த சுற்றுலாத்துறை வளர்வதால் காலங்காலமாக அப்பகுதியில் வாழும் மக்களுக்குகூட வருமானம் அதிகரிப்பதில்லை, வேலைவாய்ப்புகளும்கூட வெளியாட்களுக்கே வழங்கப்படுகிறது, குறிப்பாக நட்சத்திர ஓட்டல்களில் இந்த நிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது என்று வர்கீஸ் தெரிவித்தார்.

வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகளில் சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து உள்ளூர் மக்களின் நேரடியான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்தாண்டில் வெளியிடப்பட்ட இவரது ஆய்வுக்கட்டுரையில் படுவேகமாக தொடர்ந்து பெருகிவரும் சுற்றுலா மயமாக்கல் வயநாடு மாவட்டத்தில் “சமூகத்திலும், இயற்கைச்சூழலிலும் ஏற்றத்தாழ்வை” உண்டாக்கியுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்:

“எவ்வளவுதான், சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவான வாதங்கள் பரவலாகவும், சாமர்த்தியமாகவும் முன்வைக்கப்பட்டாலும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சி என்பது பலதரப்பட்ட துறையிலும் பல்வேறு வகைப்பட்ட தாக்கங்களை ஆழாமாகவும், அதிகமாகவும் உண்டாக்கியுள்ளது என்பதால் இயற்கையோடு, மனிதர்களையும் பெருமளவில் எதிர்மறையாக பாதிக்கிறது என்பதையே ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. பல்லுயிர் பெருக்கத்தோடு இரண்டறக் கலந்த பழங்குடி மக்களின் வேளாண்மை சிதைந்து போனதால் அவர்களின் வாழ்க்கை முறையும் சிதைவிற்கு உள்ளானது, மண்ணின் மைந்தர்கள் நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்படுகிறார்கள், அடர் வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதால் மனிதர்களுக்கும்-விலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகமாகிறது, வாழ்வாதாரத்தை இழந்து வரும் விளிம்பிநிலை மக்களுக்கு எந்தவொரு உத்தரவாதமான சமூக பாதுகாப்பு திட்டங்களும் கொண்டு வரப்படுவதில்லை, பாரம்பரிய தொழில்களும் நலிவடைந்து வருகிறது, சுற்றுலாத்துறையையும், தனியார் முதலாளிகளையும் மட்டுமே அளவிற்கதிகமாக சார்ந்திருக்கும் நிலை உருவாகியுள்ளது என்பன உள்ளிட்ட எண்ணிலடங்கா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே எளிதில் பாதிப்பிற்குள்ளாகும் நிலையிலுள்ள பகுதிகளை இதுபோன்று கண்கூடாக தெரியும் பாதிப்புகளும் சேர்ந்து தாக்குவதால் இயற்கைக்கும்-சமூகத்திற்கும் இடையிலான சமநிலை மேன்மேலும் அதிகமாக தவறும் நிலைக்குத் தள்ளியுள்ளது.”

முன்பு எப்பேர்ப்பட்ட மழைபொழிவையும் ஏற்றுக்கொண்டு தாங்கி நின்ற வயநாடு மாவட்டம், தொடர்ச்சியாகவும், படுவேகமாகவும் புகுத்தப்பட்ட கட்டுமானங்களாலும், நிலப் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களாலும் தற்போது தனது தாங்குத்திறனை முற்றிலுமாக இழந்துவிட்டது, என்று வர்கீஸ் குறிப்பிடுகிறார்.

பிற ஆய்வறிக்கைளும்கூட வர்கீஸ் அவர்களின் ஆய்வு முடிவுகளையே சரியென உறுதிசெய்கிறது. கே. அனூப் தங்கச்சன் என்ற ஆய்வு மாணவர் 2020-ம் ஆண்டு கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்காக “வயநாட்டில் நிலைமாறி வரும் வேளாண்மையும், சுற்றுச்சூழலும்(1882-2013)” என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை சமர்பித்திருக்கிறார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது:

“வெளியிலிருந்து வரும் முதலீடுகளால் வயநாடு மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை பெருகியுள்ளது. சுற்றுலாத்துறை வளர்ச்சியின் காணரமாக நிலத்தின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, புதிதுபுதிதாக கட்டிடங்கள் அதிகமாக எழுப்பப்பட்டு வருகின்றன. அதே வேகத்தில், வயநாட்டின் பல பகுதிகளிலும், குவாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. எந்தெந்த பகுதிகளெல்லாம் எளிதில் பாதிக்கப்படும் பகுதிகள் என்று அடையாளங் காணப்பட்டதோ, அந்தப் பகுதிகளை குறியாக வைத்துத்தான் மேற்கண்ட அத்தனை செயல்பாடுகளும் நடந்தேறி வருகின்றன.” 

அழிந்துவிட்ட இயற்கை காப்பரண்

காலநிலை மாற்றமும், சரமாரியாக பெய்த திடீர் மழையும் தூண்டுகோலாக இருந்திருக்கலாம், ஆனால் இயற்கை நிலங்களின் பயன்பாடு மாறிப்போனதே முதன்மையான பிரச்சனையாகவும், முண்டக்கை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் இருக்கிறது என்று வயநாடு பிராக்ரிதி சம்ரக்ஷனா (வயநாடு இயற்கை பாதுகாப்பு மன்றம்) சமிதியின் தலைவர் என். பாதுஷா கருத்துரைத்துள்ளார். 

 

சூழலியல் பிரச்சனைகள் குறித்து வயநாடு மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக களப்பணியாற்றியவர் பாதுஷா. சமீப காலங்களில் வயநாட்டிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் புற்றீசல் போல உல்லாச விடுதிகள் அதிகரித்து வருகின்றன என்று பாதுஷா கூறியுள்ளார். இது ஆய்வறிஞர் வர்கீஸ் அவர்களின் ஆய்வு முடிவை உறுதி செய்வதாகவே உள்ளது.

“வைத்திரி, மூப்பைநாடு, மேப்பாடி ஆகிய ஊரகப் பகுதிகளை ஒட்டியபடிதான் அதிகமான உல்லாச விடுதிகள் வயநாட்டில் அமைந்திருக்கின்றன,” என்று தி வயர் இணைய இதழுக்கு பேட்டியளித்த போது பாதுஷா கூறினார். கொடூரமான நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஒன்றான முண்டக்கை பகுதி மேப்பாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிதான்.

குவாரிகள் அமைப்பதும்கூட வயநாட்டில் பெரும் பிரச்சனையாக இருந்திருக்கிறது: அம்பலவயல் (முண்டக்கையிலிருந்து நேர் வடக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது) போன்ற பகுதிகளில் குறைந்தது நூறு குவாரிகளாவது ஒரே நேரத்தில் செயல்பட்டு வருவதை பார்க்க முடியும் என்ற தகவலை பாதுஷா பகிர்ந்து கொண்டார். எனினும், 2014-ம் ஆண்டு வயநாடு மாவட்ட ஆட்சியர் ஒருவர் இப்பகுதிகளில் குவாரிகளின் செயல்பாடுகளுக்கு தடை விதித்ததோடு, இரண்டடுக்கு வரையிலான கட்டிடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி பிற கட்டுமான பணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதித்தார்.

கேரளாவில் 2018ல் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பிற்குப் பிறகு இப்பகுதியில் எஞ்சியிருந்த குவாரிகளும் இழுத்து மூடப்பட்டது என்கிறார். முண்டக்கை பகுதியில் எந்தக் குவாரியும் தற்சமயம் செயல்படவில்லை என்பது உண்மை என்றாலும், சில கி.மீ. தொலைவில் சில குவாரிகள் இன்னமும் செய்லபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என்கிறார் பாதுஷா. வயநாடு பகுதியில் காலனியாட்சி காலத்திலிருந்தே காடழிப்பு என்பது நடந்துள்ளது, பல பத்தாண்டுகளாக 1970களுக்கு பிறகும்கூட இவை தொடரவே செய்துள்ளன என்கிறார். இன்று, சுற்றுலாத் துறை வளர்ச்சியை முதன்மைக் காரணமாகக் கொண்டு கட்டுமான பணிகள் தங்குதடையின்றி நடைபெறுவதோடு, அடிக்கடி சட்டவிதிமுறைகளை மீறியும் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. வயநாடு மாவட்டத்தில் கட்டுமானங்களும், கட்டடங்களும் அதிகரித்திருக்கின்றன என்று வரைபட விளக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன; வைத்திரி தாலுகாவில் 2015 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் முன்பிருந்த கட்டடங்களின் எண்ணிக்கையைவிட 19 சதவீதம் கூடுதலான புதிய நிலங்களில் (115 சதுர கி.மீ.) கட்டடங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன என்பது இயற்கை நிலங்களின் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையே எடுத்துக் காட்டுகின்றன.

“எளிதில் சிதைவிற்குள்ளாகும் இயற்கை சூழலில் கட்டுமானப் பணிகளை அனுமதிப்பதென்பது வயநாட்டின் சாபக்கேடு,” என்கிறார் பாதுஷா. “மலையுச்சியில் 18 அடுக்குமாடி கட்டடங்கள் உட்பட, 2000க்கும் அதிகமான உல்லாச விடுதிகள் இயங்கி வருகின்றன. சுற்றுலா பயணிகளாக வரும் எல்லோருக்கும் யாரும் பார்க்காத இயற்கை அழகை காட்சிப்படுத்தப் போகிறோம் என்ற பெயரில் வசதியாக மலையுச்சியில்தான் அத்தனை உல்லாச விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கை தன்னுடைய இயல்பான காப்பரணை இழந்துவிட்ட நிலையில் எளிதில் சிதைவிற்குள்ளாகும் இடமான மலையுச்சியைத்தான் எல்லா ரிசார்ட்களும் குறிவைக்கின்றன.”

மலையுச்சியிலுள்ள உல்லாச விடுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் சாலைகள் அமைக்க வேண்டும்; மலையுச்சியை அடைவதற்கு வாய்ப்பே இல்லை என்ற செங்குத்தான பகுதிகள் வழியாகக்கூட சாலைகள் அமைக்கிறார்கள்; மலையை உடைத்து, துளைப்பதன் மூலமே சமதளமான சாலைகள் அமைக்கப்படுகின்றன. வளங்காப்புக் காடுகளில் பாய்ந்தோடும் சிற்றோடைகளும் உல்லாச விடுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் புல்வெளி மைதானங்கள், நீச்சல் குளங்கள் போன்றவற்றின் நீர்த் தேவைக்காக மடைமாற்றப்படுவதும் நடக்கிறது.

“இதுமாதிரியெல்லாம் செய்தால் நிலச்சரிவு ஏற்படாமல் என்ன செய்யும்? எழுதி வைத்துக்கொள்ளுங்கள்,” என்ற பாதுஷா இவ்வாறு கூறுகிறார்: “எதிர்வருங் காலங்களில் வயநாடு நிறைய நிலச்சரிவுகளை எதிர்கொள்ளவுள்ளது. இயற்கை நிலப் பயன்பாட்டில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும், அளவுக்கு அதிகமாக பெய்த திடீர் மழையும் சேர்ந்து வயநாட்டில் தற்போது என்னவிதமான பேரழிவை உண்டுபண்ணியுள்ளது என்பதை நாம் கண்கூடாக பார்த்தோம், அடுத்தது குறிச்சியர்மலை, பஞ்சரகொல்லிதான்”.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னகக் கிளை ஜீலை-30, நிலச்சரிவு ஏற்பட்ட செவ்வாய்க்கிழமையன்று “ஆழ்ந்த வருத்தத்தை” வெளிப்படுத்தியதோடு, தானாக முன்வந்து வழக்கு விசாரனையையும் தொடங்கியுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தூண்டுகோலாக அமைந்த சாலைகள், கட்டடங்கள், இயங்கிவரும் குவாரிகள் பற்றிய தரவுகளைச் சேகரிக்குமாறு கேரள நிலைக்குழுவிற்கு தென்னகப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

காட்கில் குழு அல்லது கஸ்தூரிரங்கன் குழுவின் அறிக்கைகளில் சொல்லப்பட்டிருந்த பரிந்துரைகளை அமல்படுத்தியிருந்தால் இதுபோன்ற பெருநாசகர நிலச்சரிவை தடுத்திருக்க முடியுமா? என்று கேட்டபோது பாதுஷா தடுத்திருக்க முடியாது என்றே பதிலளித்தார்; எனினும், இந்தளவிற்கான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்படாமல் குறைத்திருக்கலாம் என்றார்.

“இதுபோன்ற சர்வகுலநாசத்தை உண்டுபண்ணும் அளவிற்கான நிலச்சரிவு இதற்கு முன்பு நாம் எதிர்கொண்டதேயில்லை” என்பதை குறிப்பிட்டு சொல்லுகிறார் பாதுஷா.

தடுத்திருக்க முடியாது என்று சொல்வதானாலேயே ஆய்வறிக்கைள் வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை என்பதாக புரிந்துகொள்ளக்கூடாது, இப்பொழுதுங்கூட எல்லாம் முடிந்துவிடவில்லை என்பதால் பரிந்துரைகளை அமல்படுத்துவது அவசியமானதுதான் என்கிறார் பாதுஷா. உள்ளபடி பார்த்தால், எங்கெல்லாம் ஜீலை-30 அன்று நிலச்சரிவு ஏற்பட்டதோ அந்தப் பகுதிகளெல்லாம் காட்கில் குழு வழங்கிய அறிக்கையின்படி கட்டுமானப் பணிகளுக்கும், குவாரிகள், சுரங்கங்கள் அமைக்கும் பணிகளுக்கும் முழுமையாக தடைவிதிக்க வேண்டுமென்று சொல்லக்கூடிய முதலாம் வகைமைக்குள் வரக்கூடிய பகுதிளாகவே இருக்கின்றன. எனவே, பரிந்துரைகளை அமல்படுத்தினால் படிப்படியாக நிலச்சரிவு ஏற்படும் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது என்கிறார் பாதுஷா.

“25 டிகிரி சாய் கோணத்திற்கும் அதிகமான செங்குத்துப் பகுதிகள் உட்பட, எளிதாக பாதிப்பிற்கு உள்ளாகும் இயற்கைச் சூழலை ஆக்கிரமித்து இயங்கி வரும் உல்லாச விடுதிகளை அகற்றுவதே இதில் மிக முக்கியமான விசயமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக எழுப்பப் பட்டிருக்கும் கட்டடங்களை தரைமட்டமாக்குவதற்கு அதிகாரிகள் அதிரடியாக செயல்பட வேண்டும்,” என்கிறார் பாதுஷா. “இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கும் வேறொரு பாதுகாப்பான இடத்தில் மறுவாழ்வளிக்க வேண்டும்.”

“வரலாறு காணாத பெருமழை, திடீர்மழை என்று பேசுவது சரியல்ல,” என்கிறார் பாதுஷா. “இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் காலநிலை மாற்றம்தான் காரணம், பெருமழைதான் காரணம் என்று அதிகாரிகள் சாக்கு போக்கு சொல்வது அதிமாகி வருவதை பார்க்க முடிகிறது… காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்புதான் இந்த பேரழிவிற்கு காரணம், இதை எங்களால் எப்படி தடுக்க முடியும்.” என்று சொல்வதை பாதுஷா எதிர்க்கிறார்.

சுற்றுலாத் துறையை சட்ட வரம்பிற்குள் கொண்டு வருவது, உண்மையான தக்கவைக்கும் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு உகந்த நடடிவக்கைகளை மேற்கொள்வதெல்லாம் அதிகாரிகளின் கைகளில்தான் உள்ளது.

கட்டுமானப் பணிகளைப் பொறுத்தமட்டில்:

சுற்றுலாப் பயணிகளின் அளவிற்கதிமான வருகையால் தாமரைசேரி கணவாய் வழியாக கோழிக்கோட்டிலிருந்து வயநாட்டிற்கு செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதை காரணம் காட்டி மேப்பாடியிலிருந்து கோழிக்கோட்டில் உள்ள அனக்கம்போயில் வரை 8.7 கி.மீ. நீளத்திற்கு சுரங்கச் சாலை அமைப்பதற்கு தற்போதைய கேரள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த இருவழிச் சுரங்கச் சாலை திட்டம் அமைக்கப்பட்டால் ஒரு மணி நேரம் பயணக் காலம் மிச்சப்படும் என்று சொல்லப்பட்டாலும், ஏற்கனவே சிதைந்து வரும் பகுதிகளில் அமைக்கப்படுவதால் - பாதுஷா உட்பட விஞ்ஞானிகள், சூழலியல் அறிஞர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்றாடி வருகின்றனர்.

இந்தியா “ஒட்டுண்ணி முதலாளித்துவத்தின் பிடியில் சிக்கியுள்ளது” என்று ஆக.3 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் காட்கில் எழுதியிருந்தார். “ஒட்டுண்ணி முதுலாளித்துவ ஆதிக்கத்தின் கீழ், தொழில் போட்டிகளே இல்லாத சூழலை உருவாக்குவதன் மூலமோ, நேரடியாக அரசின் மானியங்களை, சலுகைகளை பெருமளவில் பெறுவதன் மூலமோ அல்லது இலஞ்ச இலாவண்யங்கள் மூலமோ அரசின் அதிகார கட்டமைப்புடன் பின்னிப்பிணைந்து கொள்ளும் கம்பெனிகள் இலாபம் கொழிக்கின்றன,” அரசிடமிருந்து பெறப்படும் அனுமதிகளாக இருக்கட்டும், வரிக் குறைப்பு/சலுகைகளாக இருக்கட்டும் அல்லது மக்களுக்காக அறிவிக்கப்படும் அரசின் திட்டங்களில் தங்களது நிறுவனங்கள் இலாபம் கொழிப்பதற்கு உண்டான வழிவகைகளை உண்டாக்குவது போன்றான எந்தவொரு வடிவத்தில் வேண்டுமானாலும் அளவிற்கதிகமான ஆதிக்கம் செலுத்தப்படும், என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எழுதியிருந்தார்.

WGEEP வல்லுநர் குழு வழங்கிய பரிந்துரைளை அமல்படுத்தாமல் இருந்த “13-ஆண்டு கால தாமதம்” மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் பாதிப்பை மோசமாக்கியுள்ளது; “பாதிப்புகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், நிலச்சரிவு ஏற்படுவதும் அதிகமாகியுள்ளது” என்று எழுதியுள்ளார். “இயற்கையை பாதுகாப்பதற்கு வேண்டிய கடுமையான நடவடிக்கைகளை இப்போதிருந்தே, உடனடியாக துவங்க வேண்டும்; கிராம சபைகள் முதல் உள்ளூர்வாசிகள் சபை என்று படிப்படியாக அதிகாரம் அரசிடமிருந்து மக்களுக்கு செல்லும் வகையிலான உள்ளாட்சி மன்றங்களை உருவாக்கி அவற்றிற்குரிய அதிகாரங்கள் வழங்குவதன் மூலம் மட்டுமே நம்மால் வீழச்சியிலிருந்து மேலெழும்ப முடியும்.”

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://m.thewire.in/article/environment/nightmare-in-wayanad-torrential-rains-triggered-landslides-but-climate-change-may-not-be-the-sole-culprit

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு