தண்ணீரையும் தங்கமாக்கும் நிதிஆயோக்கின் நீர்வர்த்தக திட்டம்
நீர் வளங்களை பெறுவதில் பெரும் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்டு வரும் ஒரு சமூகத்தில், நீர் விற்பனையின் மூலம் நீர் உடைமையை உருவாக்குவதென்பது ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கவே செய்யும்.
நிதிஆயோக் நீர் வர்த்தகம் குறித்து ஆராய்ந்து வருகிறது, அதனால் விளையும் பாதிப்புகளையும் நிதிஆயோக் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்
நீர் விற்பனைக்கான சர்வதேச தரநிறைகள் குறித்த ஆராய்ச்சியில் நிதிஆயோக் இறங்கியுள்ளது. நாட்டிற்கான கொள்கை திட்டங்களை வகுத்துத் தரும் அமைப்பாக இருந்து வரும் நிதிஆயோக் தற்போது அமல்படுத்தி வரும் புதிய-தாராளமயக் கொள்கைகளை மேலும் தீவிரப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது என்பதே இதன் மூலம் தெரிகிறது. நீர் வளங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதென்பது இந்தியாவில் இது ஒன்றும் முதல்முறையல்ல. நீர் வளங்களைத் தனியார்மயமாக்குவது இந்தியாவுக்கு புதிதல்ல; 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய நீர்க் கொள்கையும் (பிரிவு 13), 2012 ஆம் ஆண்டின் தேசிய நீர்க் கொள்கை (பிரிவு 11.6 மற்றும் 12.3) ஆகியவையும் நீர் மேலாண்மையில் தனியாரின் பங்கேற்பை முன்னிறுத்தி அரசு-தனியார் கூட்டணியை வலியுறுத்தியுள்ளன. இருப்பினும், இந்த முறை, இந்த திட்டம் புதியதுதான்; ஏனெனில் இப்போது நீர் மற்றும் நீர் ஆதாரங்களின் சட்டப்படியான உடைமையாளர்களாக தனியார் நிறுவனங்கள் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில் நாட்டின் சொத்தாக இருக்கும் நீரும் தங்கம், வெள்ளி போன்று விற்கப்படும். நிதிஆயோக் இந்த திட்டத்தில் பாதுகாப்பான சட்டக்கூறுகளைக் கூட கொண்டு வரலாம்; அதன் அனைத்து வசனங்களுமே எல்லோருக்குமான, பொதுவான வளர்ச்சி என்பன போன்ற வாக்குறுதிகளை தூக்கிபிடிக்கும் வகையிலே அமைந்திருக்கும். எவ்வாறாயினும், தொடர்ந்து வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வரும் இந்திய மக்களுக்கு, நீர் வர்த்தகத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட யோசனை பெருத்த சந்தேகங்களையும் சவால்களையுமே உருவாக்கியுள்ளது.
இந்த திட்டம் நேரடியாக சொத்துரிமை தொடர்பானது என்பதால், நமது அரசியலமைப்பு வரம்பிற்குள் ஏகபோக உரிமை வழங்குவதையும், நீர் மற்றும் நீர் ஆதாரங்கள் சுரண்டப்படுவதையும் சட்டப்படி நியாயப்படுத்துவது எப்படி என்பது முதன்மையான சவாலாக எழுந்துள்ளது. சந்தையில் விற்கப்படும் பொருளாக நீர் மாற்றப்பட்ட பிறகு, நீர் பெறுவதில் எல்லோருக்குமான, பொதுவான உரிமைகள் என்பது எவ்வாறு வரையறுக்கப்படும்? நீர் வணிகப் பொருளாக மாற்றப்பட்ட பிறகு, ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு 'ஏற்புடைய' விலை என்னவாக இருக்கும் என்பது கவலையளிக்கும் கேள்வியாக எழுந்துள்ளது.
இந்தியா போன்ற ஒரு நாட்டில், இந்தத் திட்டம் சம நீதி கிடைப்பதையே கேள்விக்குறியாக்கியுள்ளது. அனைவருக்கும் நீர் கிடைக்கச் செய்வதற்கு வழியென்ன என்பதை யோசிக்காமல், நல்ல விலை கொடுப்பவர்களுக்கு அதிக நீர் விற்கப்படுவதை ஊக்குவிக்கிறது. இது மேலும் உணர்த்துவது என்னவென்றால், வாங்கும் திறன் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு காணப்படும் ஒரு சமூகத்தில், நீர் உடைமையாளர்களுக்கும், நீர் உடைமையற்றவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கூர்மைப்படுத்துவதாகவே நீர் விற்பனைத் தொழில் அமையும். நீர் அடிப்படையில் உருவான இது போன்ற புதிய ஏற்றத்தாழ்வுகள் நீருக்கான மோதல்களை உருவாக்குவதோடு போருக்கும் வழிவகுக்கும். நீரை விற்பனைப் பொருளாக மாற்றுவதில் வெவ்வேறு இந்திய மாநிலங்களுக்கிடையே இருந்து வரும் பிரச்சினைகள், மிகவும் மோசமான ஒரு புதிய தாராளவாத வடிவத்தில் வெடிப்பதற்கும் வாய்ப்புள்ளது, இதில் லாபம் ஈட்டும் நோக்கத்துடன் இருக்கும் தனியார் நிறுவனங்கள் நீர் வளம் நிறைந்த நீர் உற்பத்தியாகும் மாநிலங்களின் மேல்மடை (upper riparian) பகுதியைப் பயன்படுத்தி, கீழ்மடை (lower riparian) மாநிலங்களின் நீர் உரிமையை பறித்துவிடுவதற்கும் வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட நிலைமையும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பதை, நிதிஆயோக் கணக்கில் எடுத்துக்கொண்டு, நீர் விற்பனைத் தொழில் திட்டத்தை செயல்படுத்தும்போது, நதிநீர் மேலாண்மைக்கான உத்திகளையும் முன்மொழிய வேண்டும். தற்போது இருந்து வரும் நதிநீர்ப் பிரச்சினைகளை இந்த நீர் சந்தைகள் எப்படி தீர்க்கும் என்பதையும், வருங்காலத்தில் சமநிலை எவ்வாறு உறுதிப்படுத்தப்படும் என்பதையும் சேர்த்தே திட்டமிட வேண்டும்.
நிதிஆயோக், சர்வதேச தரநிலைகளை ஆய்வு செய்யும் போதும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சிலி முதலான நாடுகளின் வெற்றி அனுபவங்களை (success stories என்று சொல்லிக்கொள்கிறார்கள்) பரிசீலிக்கும் போதும், இந்தியாவில் நீருக்கான தேவைகளும், நீரின் நிலைமைகளும் அளப்பரியது, தனிநிலையானது என்பதை உணர வேண்டும். மழைபொழிவில் நிச்சயமற்ற தன்மை, அடர்த்தியான மக்கள் தொகையும் பலதரப்பட்ட நிலையில் வளர்ச்சி பெற வேண்டிய தேவையும் இருப்பதால் இந்தியா நிச்சயமாக அந்நாடுகளோடு ஒப்பிட முடியாததாகவே இருக்கிறது. எனவே, நீர் வர்த்தகம் குறித்து முடிவெடுப்பதற்கு முன்,ஒவ்வொருவரின் நீர் பயன்பாட்டை சரிபார்ப்பதும், இந்தியாவில் உள்ள நீர் பயன்பாட்டின் பன்முகத்தன்மையை ஆராய்வதும் மிகவும் அவசியமாகிறது.
இந்திய சந்தை அமைப்புகள் இன்னும் வளரும் நிலையில் தான் உள்ளது என்பதால், சரியான புரிதல் இல்லாத நிலையில் நீர் விற்பனையில் உடைமைமுறைக்கு அனுமதி வழங்குவது முந்திரிகொட்டைத்தனமாக அமைந்துவிடும். இந்த விசயத்தில், இங்கிலாந்து நாட்டை இந்தியாவிற்கு ஓர் உதாரணமாகச் சொல்ல முடியும்; தாட்ச்சரிசக் கொள்கையின் மூலம் நீரை தனியார்மயமாக்கிய போது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்ற நிலையை எதிர்கொண்ட பிறகுதான், அந்நாடு நீர் வர்த்தகத் திட்டத்தை உதறிவிட்டு, அதற்குப் பதிலாக நீர் மேலாண்மை செயல்முறைகளை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தது. உள்ளட்சி நிர்வாகத்திற்கு அரசியலமைப்பு ரீதியிலான அங்கீகாரம் வழங்கிய பிறகு, இந்தியாவில், குறிப்பாக நீர் மேலாண்மை விசயத்தில், போதுமான கவனம் ஏன் செலுத்தப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்வது எளிதானது அல்ல. நிதிஆயோக், கிராமப்புற அளவில் நீருக்கான சந்தை வாய்ப்புகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், அதிலும் கூட அதன் இயங்கு திறன் என்ற பெயரில் மட்டுமே செய்ய முடியும்.
நம் நாட்டிலும், மீண்டும், அதே வாதம் தான்: தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கிறபோது, எப்படி தண்ணீர் வர்த்தகம் அதன் விற்பனைத்திறனை உறுதிப்படுத்தும், எப்படி அனைவருக்கும் வேண்டிய தண்ணீர் மலிவு விலையில் கிடைக்கும் என்ற கேள்வியே எழுகிறது. இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நிதிஆயோக் உறுப்பினர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இருப்பினும், இங்குள்ள கேள்வி தண்ணீரின் விலை பற்றியதாகும்; வாங்கும் திறன் ஏற்றத்தாழ்வு காரணமாக பாராபட்சமான, ஏற்றத்தாழ்வான தண்ணீரைப் பயன்படுத்துபவர்களிடம் சென்று யாரால் இதை நம்ப வைக்க முடியும்? மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் ஒரு பகுதியாக, நிதிஆயோக்கின் மக்கள் பங்கேற்பிற்கான இயக்கம் குறிப்பிடத்தக்க நீர் பயனீட்டாளர்களுக்கு மட்டுமானதாகத் தான் இருக்கும் என்கிற போது இந்த இயக்கத்தால் எந்தப் பயனும் விளையாது. தற்போதைய மக்கள் பங்கேற்பை உறுதிபடுத்துவதற்கான யுக்தியும் கூட பனபலம் படைத்தவர்களை பங்கேற்கச் செய்வதாக இருப்பதால் திட்டம் தீட்டுவது என்பது மேலிருந்து கீழாகவே உள்ளது.
நிதிஆயோக்கின் நோக்கம் நீர் சந்தைகளை நோக்கி நகர்வதாக இருப்பதால், அது காரணகாரிய அறிவுடன், பயனுள்ள அதே நேரத்தில் ஊழல் இல்லாத கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்கப்படுவது பற்றி சிந்திக்க வேண்டும். கண்காணிப்பு செயல்முறையை அரசாங்க அமைப்புகள் தொழில்நுட்பங்களை கொண்டு செய்யும் போது, புதிய நீர் உரிமையாளர்கள் இதுபோன்ற செயல்முறைகளை ஒப்புக்கொள்வார்களா என்பதுதான் இங்கு தவிர்க்க முடியாத கேள்வியாக உருவெடுத்துள்ளது. ஒரு நாட்டின் வளம் எப்படி வர்த்தகத்திற்கான பொருளாக இருக்க முடியும்; பன்னாட்டு கம்பெனிகள் நீர் வர்த்தகத்தில் முதலீடு செய்வதை அரசாங்கம் எவ்வாறு கட்டுப்படுத்தும் என்பன போன்ற சில கடினமான கேள்விகளைப் பற்றி நிதிஆயோக் ஆழமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. MNCகள் நீர் உரிமையாளர்களாக மாறுவது இந்தியாவில் உத்திரவாதமான முறையில் அனைவரும் நீர் பெறுவதற்கு வெளிப்படையான அச்சுறுத்தலாக இருக்கும். நிதிஆயோக், நீர் வர்த்தகம் குறித்த திட்டங்களை இறுதி செய்வதற்கு முன், பல பிரச்சினைகளுக்கு முடிவு கண்டாக வேண்டும். உதாரணமாக, நீர் வர்த்தகத்தின் மூலம் நீர் வளங்களை ஏகபோகமாக்கினால், விவசாயத் துறை மற்றும் சிறு தொழில்களின் நீர் தேவைகள் எவ்வாறு பூர்த்தி செய்யப்படும் என்பன போன்ற கேள்விகளுக்கு முடிவு கண்டிருக்க வேண்டும்.
தனியார் மூலதனத்தின் உபரி மதிப்பை அதிகரிப்பதே வர்த்தகத்தின் நோக்கமாக இருப்பதால், நிலத்தடி நீர் சுரண்டப்படுவதை அரசு எப்படி கட்டுப்படுத்தப் போகிறது என்பதுதான் கேள்விக்குறியாகியுள்ளது. பெரு விவசாயிகளும், பெரும் தொழிற்துறை முதலாளிகளும் தண்ணீர் வர்த்தகத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிகப்படியான தண்ணீரை உறிஞ்சிக்கொள்ள முடியும் என்ற உண்மையை நிதிஆயோக்கால் மறுக்க முடியாது. நெஸ்லே நிறுவனம் தற்போது செய்து வருவது போல, அதிக நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பிற MNCகளும் சமவெளி பகுதிகளில் நீர் ஆலைகளை நிறுவி, மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதற்கும் வாய்ப்புள்ளது.
அனைத்து இந்திய நகரங்களும் நீராதரங்களை பெறுவதில் பெரும் ஏற்றத்தாழ்வை எதிர்கொண்டு வரும் நிலையில் நிதிஆயோக் நீர் வர்த்தகத்தைத் தொடங்குவது என்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு பிராந்திய அளவில் மட்டுமல்ல, பிராந்தியக்களுக்குள்ளும் உள்ளது, அங்குள்ள சிலர் நீர் உடையாளர்களாக இருக்கிறார்கள், மேலும் பலர் நீர் உடைமையற்றவர்களாக இருக்கிறார்கள், ஒரு சொட்டு பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதற்கு கூட படாதபாடு படுகிறார்கள். தண்ணீர் பற்றாக்குறையைக் காட்டும் புள்ளிவிவரங்கள் வெறுமனே எண்கள் மட்டுமல்ல, நீர் உடைமையற்றவர்களின் போராட்டங்கள், வலிகள் மற்றும் சவால்களின் வெளிப்பாடுகளாகும். நீர் வர்த்தகம் இந்த வலியை அதிகரிக்கலாம். சந்தையின் ‘இயங்கு திறன்' சமநீதியை கிடைக்கச் செய்யும் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை என்பதை கருத்தில் கொள்வது அவசியமாக இருக்கிறது. தனியார் துறையின் நிர்வாக நடைமுறைகள் அடிப்படையில் லாபத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்காமல் உபரி மதிப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அவர்களிடமிருந்து நியாயமான விலையை எதிர்பார்ப்பது யதார்த்தமற்றதும், கற்பனையானதுமாகும்.
நிதிஆயோக்கின் முன் உள்ள சவால் மிகவும் முக்கியமானது, ஏனெனில் ஒரு சம்பிரதாய முறையில் அல்லாது ஒரு செயலுக்குமுள்ள ஜனநாயகத்தை உடைய நாடாக சொல்லப்படும் இந்தியா, இந்த உயர்மட்ட கொள்கை வகுக்கும் அமைப்பிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறது. நீர் வர்த்தகத்திற்கு இந்தியா தயாராக உள்ளது என்று இந்த அமைப்பு அறிவிக்கும் முன், இந்தக் பிரச்சினைகள் அனைத்தையும் அது தீவிரமாக பரிசீலித்தாக வேண்டும்.
தீப்தி ஆச்சார்யா, பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையில் மூத்த உதவி பேராசிரியராக உள்ளார்.
ஜாஹ்னவி சென் என்பவரால் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.
(தீப்தி ஆச்சார்யா)
- விஜயன்
(தமிழில்)
மூலக்கட்டுரை: https://m.thewire.in/article/government/as-niti-aayog-looks-into-water-trading-it-should-know-the-high-costs-it-may-bring