செங்கோட்டை குண்டுவெடிப்பு அரசாங்க உளவுத்துறை சீரழிவுகளை அம்பலப்படுத்துகிறது

ஃப்ரண்ட்லைன்

செங்கோட்டை குண்டுவெடிப்பு அரசாங்க உளவுத்துறை சீரழிவுகளை அம்பலப்படுத்துகிறது

நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு, இந்தியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பை உலுக்கியுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைக்கு மட்டுமல்லாமல், அது எதைக் குறிக்கிறது என்பதற்காகவும் முக்கியத்துவம் பெறுகிறது: எல்லையோர நடவடிக்கைகளில் இருந்து, பெரிய நகரங்களுக்குள் நிகழ்த்தப்படும் வன்முறையானது - பயங்கரவாத நடவடிகைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம். 

இதுவரை எந்தப் பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், டெல்லி காவல்துறை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக் கட்ட கண்டுபிடிப்புகள், சமீபத்தில் முறியடிக்கப்பட்ட ஃபரிதாபாத்தை தளமாகக் கொண்ட "வெள்ளைக் காலர் பயங்கரவாதக் குழுவிற்கும்" டெல்லி குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதைக் குறிக்கின்றன. இது உறுதி செய்யப்பட்டால், இந்தியாவின் பாதுகாப்புக் கட்டமைப்புக்குள் இருக்கும் ஒருங்கிணைப்பு குளறுபடிகள் எப்படி தோல்வியைப் பிரதிபலிக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது என துறை வல்லுநர்கள் கூறுகின்றனர் - வெடிபொருட்கள் ஹரியானாவில் குவிக்கப்பட்டுள்ளன, நபர்கள் காஷ்மீரில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர், தாக்குதல் நாட்டின் தலைநகர மையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் டெல்லி குண்டுவெடிப்பை, பாகிஸ்தான் ஆதரவுப் போராளிகளின் செயல்பாட்டில் முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கின்றனர். எழும்பும் கேள்விகள் கவலையளிக்கின்றன: இந்தியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து (LoC) மெல்ல பெருநகர மையங்களுக்கு நகர்ந்துவிட்டதா? மதரஸா பட்டதாரிகளிடமிருந்து மருத்துவ நிபுணர்களுக்கும், வனங்களிலிருந்து நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திற்கும் நகர்ந்துவிட்டதா? வல்லுநர்களின் கூற்றுப்படி, காஷ்மீரில் பலவீனமடைந்த ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற குழுக்கள், ஊடுருவி குழப்பம் விளைவிப்பதை நோக்கித் திரும்புவதாகவும், நகர்ப்புறத் தாக்குதல்கள் மூலம் பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் தெரிகிறது.

மருத்துவர்களின் குழுவிற்குள்

தலைநகர் பிராந்தியத்தில் (National Capital Region) ஃபரிதாபாத்தில் அமைந்துள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய பல மருத்துவர்கள் இதுவரை விசாரணையின் மூலம் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விசாரணை, நவம்பர் 6 அன்று உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் கைது செய்யப்பட்ட டாக்டர் ஆதில் அஹ்மத் ராதர் என்பவரிடம் இருந்து தொடங்கியது. அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்ற டாக்டர் ராதர், தெற்கு காஷ்மீரில் உள்ள காஸிகுண்ட் பகுதியைச் சேர்ந்தவர். அக்டோபர் 27 இரவு ஸ்ரீநகரில் அவர் ஜெய்ஷ்-இ-முகமது சுவரொட்டிகளை ஒட்டியதைக் கண்காணிப்பு கேமரா காட்சிகள் காட்டிய பின்னரே அவர் கைது செய்யப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் ஆதாரங்கள் தெரிவித்தன. ஆகஸ்ட் 2024 முதல் அவர் மூத்த மருத்துவராக (Senior Resident) பணிபுரிந்த அனந்த்நாக் ஜி.எம்.சி -ல் உள்ள அவரது லாக்கரில் இருந்து ஒரு ஏ.கே-47 துப்பாக்கி மீட்கப்பட்டது. ராதர் சமீப மாதங்களில் மட்டுமே தீவிரவாத பிரச்சாரத்திற்கு ஆளாகியுள்ளார் என்றும் அந்த ஆதாரங்கள் தெரிவித்தன.

டெல்லியில் NEET-SS (நீட் சூப்பர்-ஸ்பெஷாலிட்டி) தேர்வுக்காக, அக்டோபர் 20 முதல் அவர் அதிகாரப்பூர்வமாக விடுப்பில் இருந்தார். ஆனால் சஹாரன்பூரில் உள்ள சர்வோதயா மருத்துவமனையிலும் அவர் போலி அடையாளத்துடன் பணிபுரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, டாக்டர் ராதர் சக மருத்துவர் ஒருவரை மணந்திருக்கிறார். விசாரணையின் போது மேற்கொள்ளப்பட்ட விரிவான தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் மொபைல் டிராக்கிங் ஆகியவை புலனாய்வாளர்களை ஃபரிதாபாத்திற்கு அழைத்துச் சென்றன. ஃபரிதாபாத்தின் தௌஜ் மற்றும் ஃபதேபூர் தகா கிராமங்களில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடங்களில் இருந்து கிட்டத்தட்ட 2,900 கிலோ அம்மோனியம் நைட்ரேட், தாக்குதல் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் டைமர்கள் மீட்கப்பட்டன.

பாதுகாப்பு அதிகாரிகள் 1995 ஓக்லஹோமா நகர குண்டுவெடிப்புடன் உள்ள ஒற்றுமைகளை இவர்களின் சில தனிப்பட்ட உரையாடல்களில் கண்டறிந்துள்ளனர். அந்தக் குண்டுவெடிப்பில் 1,800 கிலோ அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது, இதன் விளைவாக 167 பேர் உயிரிழந்தனர் மற்றும் 650 பேர் காயமடைந்தனர்.

ஃபரிதாபாத் சோதனைகளைத் தொடர்ந்து, மேலும் பல பெயர்கள் வெளிவந்தன. ராதர், புல்வாமாவைச் சேர்ந்த மற்றொரு காஷ்மீர் மருத்துவரான டாக்டர் முஸம்மில் அஹ்மத் கனாய் என்பவருடன் சேர்ந்து வெடிபொருட்களைச் சேமித்து வைத்ததாகக் கூறப்படுகிறது. கனாய் நவம்பர் 9 அன்று கைது செய்யப்பட்டார். அவர் அல்-ஃபலா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். லக்னோவைச் சேர்ந்த டாக்டர் ஷாஹீன் ஷாஹித் அதே நாளில் அவரது காரில் ஒரு ஏ.கே-47 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் பிடிபட்டார். அவர், ஜெய்ஷ்-இ-முகமதுவின் மகளிர் பிரிவான ஜமாத் உல்-மொமினாத்தின் நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் தலைமை தாங்கியதாகக் கூறப்பட்டது — இது பாகிஸ்தானில் மசூத் அசாரின் சகோதரி சாடியா அசாரால் மேற்பார்வையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு குற்றஞ்சாட்டப்பட்டவரான புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் சஜாத் அஹ்மத் மல்லா, நவம்பர் 11 அன்று காவலில் வைக்கப்பட்டார்.

ஐந்தாவது சந்தேக நபரான டாக்டர் முகமது உமர், அவரும் புல்வாமாவைச் சேர்ந்தவர். வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஹூண்டாய் ஐ20 கார், நவம்பர் 10 அன்று டெல்லியின் அதிகப்படியான பாதுகாப்பு உள்ள பகுதிகளில் ஒன்றான லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் வாயில் எண் 1-க்கு வெளியே வெடித்தபோது அவர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அல்-ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக இருந்த உமர், நவம்பர் 9-10 சோதனைகளைத் தொடர்ந்து நடந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு தப்பி ஓடியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஐ20-இல் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் ஃபரிதாபாத்தில் மீட்கப்பட்டவற்றுடன் ஒத்தவை என்று தடயவியல் பகுப்பாய்வு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டு கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட பின்னர் சந்தேக நபர் அழுத்தத்திற்கு உள்ளானதால், பீதியின் காரணமாக, இந்த குண்டுவெடிப்பு முன்கூட்டியே நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.

செங்கோட்டை அருகே வாகனங்களை தூளாக்கி, சுமார் 300 மீட்டர் தூரம் வரை அதன் பாகங்களும் மனித உடல்களும் வீசியெறியப்பட்டதாக - காதைக் கிழிக்கக்கூடிய வெடிப்பை நேரில் கண்ட சாட்சிகள் விவரித்துள்ளனர். நவம்பர் 11 அன்று, புலனாய்வு அமைப்புகள் அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களையும், சில மருத்துவர்களையும் விசாரித்தன. நவம்பர் 12 அன்று, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (vice-chancellor), பூபிந்தர் கவுர் ஆனந்த், "எங்கள் மருத்துவர்கள் இருவர் புலனாய்வு அமைப்புகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். பல்கலைக்கழகத்தில் அலுவல்பூர்வமாக பணியாற்றுவதைத் தவிர, குறித்த நபர்களுடன் பல்கலைக்கழகத்திற்கு வேறு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்" என்று கூறினார். மேலும், பல்கலைக்கழக வளாகத்திற்குள் எந்த இரசாயனப் பொருட்களோ அல்லது வெடிபொருட்களோ சேமிக்கப்படவில்லை என்றும், ஆய்வகங்கள் MBBS மாணவர்களுக்கு கற்பிப்பதற்கும் பயிற்சி அளிப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்றும் ஆனந்த் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ஷோபியனைச் சேர்ந்த மௌல்வி இர்ஃபான் அஹ்மத் வாகே என்ற இமாமை கைது செய்துள்ளது. மருத்துவர்கள் மற்றும் பிற நிபுணர்களைத் பயிற்றுவித்த ஜெய்ஷ்-இ-முகமதுவின் "வெள்ளைக் காலர்" பயங்கரவாதக் குழுவை ஏற்பாடு செய்வதில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கைது, யூனியன் பிரதேசம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மீதான காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளுக்குப் பிறகு இது நடந்துள்ளது.

அரசியல் தோற்றம்

பூட்டானுக்கு சென்றிருந்த மோடி, இந்த குண்டுவெடிப்பை "கொடுஞ்செயல்" என்று கண்டித்தார், மேலும் "இதற்குப் பின்னால் உள்ளவர்கள் தப்ப முடியாது" என்று கூறினார். மேலும், "நான் கனத்த இதயத்துடன்தான் இங்கு வந்தேன். டெல்லியில் நடந்த இந்த கோரச் சம்பவம் அனைவரையும் துயரப்படுத்தியுள்ளது. நான் இரவு முழுவதும் அதிகாரிகளுடன் வந்தேன் — அவர்கள் இந்த விஷயத்தின் வேரைக் கண்டறிவார்கள்".

டெல்லி பாதுகாப்புத் திட்டம் (Delhi Defence Dialogue) பற்றி பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "உயர்மட்ட நிறுவனங்கள் ஒரு முழுமையான விசாரணையை நடத்தி வருகின்றன, மேலும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்று கூறினார். குண்டுவெடிப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சம்பந்தப்பட்ட "ஒவ்வொரு நபரையும் வேட்டையாட வேண்டும்" என்று நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார், மேலும் அவர்கள் "அரசின் முழு கோபத்தையும் எதிர்கொள்வார்கள்" என்றும் உறுதியளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டித்துள்ளனர். கர்நாடக அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பிரியங்க் கார்கே, அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று கோரினார். அவரை "சுதந்திர இந்தியாவின் மிகவும் மோசமான உள்துறை அமைச்சர்" என்று அழைத்தார். கடந்த ஒரு தசாப்தத்தில் டெல்லி கலவரங்கள், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல், மணிப்பூர் வன்முறை மற்றும் பஹல்காம் துப்பாக்கிச்சூடு போன்ற பல பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினார் கார்கே. "நாம் இதுவரை ஏதாவது பதில்களை பெற்றுள்ளோமா?" என்று அவர் கேட்டார்.

இந்த "நீண்டகால உளவுத்துறை தோல்விகளுக்கு" ஷா பொறுப்பேற்க வேண்டும் என்று கார்கே கூறினார். "தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்காக மட்டுமே அவர் [அமித் ஷா] அங்கு இருக்கிறாரா? அவர் பதவி விலகுவதற்கு முன் இன்னும் எத்தனை பேர் இறக்க வேண்டும்? இந்தியாவின் தற்போதைய உள்துறை அமைச்சர் ஏன் பொறுப்பேற்க மறுக்கிறார்? வேறு எந்த நாடாக இருந்தாலும், இந்நேரம் அவர் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பார்".

"பாதுகாப்பான எல்லைகள் மற்றும் பாதுகாப்பான நகரங்கள்" என அரசியல் வாய்ச்சவடால்கள் மூலம் கட்டமைத்த மோடி அரசாங்கத்திற்கு இதைவிட மோசமான நேரம் எதுவும் இருந்திருக்க முடியாது. 2014 ஆம் ஆண்டு முதல், தேசிய பாதுகாப்பு என்பது கொள்கை வெற்றியாகவும் அரசியல் பிராண்டாகவும் முன்வைக்கப்பட்டுள்ளது. பெரிய நகர்ப்புறத் தாக்குதல்கள் ஏதும் இல்லாதது அந்த வெற்றிக்கு ஆதாரமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நவம்பர் 10 அன்று பிரதமர் சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களிடையே உரையாற்றும் செங்கோட்டையிலிருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில் நடந்த குண்டு வெடிப்பானது அந்த வாய்ச்சவடாலை தூள்தூளாக்கியுள்ளது, எல்லையோர ஊடுருவல் குறைந்திருந்தாலும், உள்நாட்டு பலவீனங்கள் ஆழமடைந்துள்ளதை இச்சம்பவம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது நமக்கு நினைவூட்டுவது போல, பாதுகாப்பு என்பது தாக்குதல்கள் இல்லாதது அல்ல, மாறாக அவற்றைக் கணிக்கவும் தடுக்கவும் உள்ள திறன் ஆகும்.

ஆழமான ஆட்சி நிர்வாக சீரழிவு

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, இந்தியாவின் பெரிய நகரங்கள் பயங்கரவாதத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருந்துள்ளன. 2011 டெல்லி உயர் நீதிமன்றத் தாக்குதலைத் தவிர, புனேவில் நடந்த 2010 ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு கடைசியாக நடந்த பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும். 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல், அதாவது 26/11, என்ற திருப்புமுனையான தருணத்திலிருந்து நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு எவ்வளவு தூரம் முன்னேறியிருந்தது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

விசாரணையில் உள்ள தொடர்புகள் உறுதி செய்யப்பட்டால், செங்கோட்டை குண்டுவெடிப்பு 2011 உயர் நீதிமன்ற குண்டுவெடிப்பிற்கு அடுத்த டெல்லியின் பெரிய பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கும். 13 பேர் இறந்தது மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தது என ஏற்பட்ட உயிரிழப்புகள் சாதாராணமானவை அல்ல; மேலும் வருந்தத்தக்கது என்னவென்றால், பாதுகாப்பான தேசிய தலைநகரம் என்ற பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது.

2011 குண்டுவெடிப்புக்குப் பிறகு, அரசாங்கம் நகரத்தின் சிசிடிவி வலையமைப்பை விரிவுபடுத்தியது, கண்காணிப்பை பலப்படுத்தியது, பல்துறை மையத்தின் (Subsidiary Multi-Agency Centre) கீழ் பாதுகாப்பை இறுக்கமாக்கியது. ஆயினும்கூட, நவம்பர் 10 வெடிப்பு, இவற்றை எவ்வளவு எளிதாக மீற முடியும் என்பதைக் காட்டுகிறது—எல்லையோர ஊடுருவல் மூலம் அல்லாமல், வெளிப்படையாக இயங்கும் சிறிய, திறமையான, சித்தாந்தரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட நகர்ப்புறக் குழுக்களால் இது சாத்தியமாகியுள்ளது.

உலகளவில், ஐ.எஸ்.ஐ.எஸ் பொறியியலாளர்கள் முதல் பாகிஸ்தானின் நகர்ப்புற தள செயல்பாட்டாளர்கள் வரை - படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்றுவிப்பது நவீன ஜிஹாதிக் வலைப்பின்னல்களின் முக்கியமான அம்சமாக மாறியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, இது ஒரு ஆபத்தான மாற்றத்தைக் குறிக்கிறது என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்: போர்க்களம் இப்போது மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், வாட்சப் குழுக்கள் மற்றும் கல்வித்துறையின் சித்தாந்த பயிற்சிகள் வரை பரவியுள்ளது. தாக்குதல்களின் எண்ணிக்கை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையேயான நீண்டகால ஒருங்கிணைப்பு தோல்விகளைச் சுட்டிக் காட்டுகிறது. கிட்டத்தட்ட மூன்று டன் வெடிபொருட்கள் தலைநகரின் புறநகரில் கண்டுபிடிக்கப்படாமல் சேமிக்கப்பட்டிருக்க முடியும் என்பது கள உளவுத்துறை மற்றும் அதிகார வரம்புகளுக்கு இடையேயான தகவல்களைப் பகிர்வதில் உள்ள வெளிப்படையான குறைபாடுகளைப் பிரதிபலிக்கிறது.

26/11 தாக்குதல்களுக்குப் பிறகு பல நிறுவனச் சீர்திருத்தங்கள் (பல்துறை பாதுகாப்பு மையங்களை உருவாக்குவது உட்பட) செய்யப்பட்ட போதிலும், தகவல் ஓட்டம் துண்டு துண்டாகவும் தனிப்பட்ட நபரைச் சார்ந்ததாகவும் உள்ளது. ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரசின் 'ஒருங்கிணைந்த பாதுகாப்புக் கட்டமைப்பு' என்ற கூற்று நிலைக்க வேண்டுமானால், அது நிகழ்வுசார் நிர்வாகத்தைத் தாண்டி நிறுவன அடித்தளத்தை உருவாக்க வேண்டும்".

எனவே செங்கோட்டை குண்டுவெடிப்பானது, சட்டம்-ஒழுங்கு தோல்வி என்பதைவிட கட்டமைப்பு சீரழிவு என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். எல்லை தாண்டிய ஊடுருவலுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பு, உள்ளுக்குள் இருந்து செயல்படும் பரவலான, படித்த - டிஜிட்டல் முறையில் பிணைக்கப்பட்ட குழுக்களைக் கையாள்வதற்கு முற்றிலும் தயாரற்ற நிலையில் உள்ளது என்பதை இது அம்பலப்படுத்துகிறது. நிர்வாகத் திறனை விட வெளிப்படையான தோற்றத்திற்கு (optics) முக்கியத்துவம் அளிக்கும் அரசாங்கத்திற்கு, இந்தத் தாக்குதல், புதிய அச்சுறுத்தல்கள் இனி எல்லையில் இல்லை; மாறாக பெருநகரங்களுக்குள் உள்ளது என்ற உணர்வுபூர்வமான நினைவூட்டலாக அமைகிறது என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை; https://frontline.thehindu.com/politics/inside-delhi-blast-white-collar-terror-module/article70270827.ece?fbclid=IwdGRzaAOGTDhleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAwzNTA2ODU1MzE3MjgIY2FsbHNpdGUCMjUAAR5SJu_FDRxZmSFJtfqgBZKn5WcovL1GRJ4x6TSH7Xe5igG46-RwiZxvUh7xPw_aem_vKNMUAUs-BO4JzjR5UOrXA&sfnsn=wiwspwa

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு