காவல்துறையில் அமல்படுத்தப்படும் 'ஒரே நாடு ஒரே சீருடை' திட்டம்

காவலர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை கூட வழங்காத இந்த பாசிச மோடி - அமித்ஷா கும்பலுக்கு உள்நாட்டு பாதுகாப்பு குறித்து பேச என்ன அருகதை உள்ளது.

காவல்துறையில் அமல்படுத்தப்படும் 'ஒரே நாடு ஒரே சீருடை' திட்டம்

உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனைக் கூட்டம், ஹரியானா மாநிலம் சூரஜ்கண்ட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.  இதில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், உள்துறைச் செயலர்கள், காவல் துறை தலைவர்கள் பங்கேற்றனர். காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்:  தீவிரவாதம், ஊடுருவல், போலி செய்திகள், குறித்து வாய்ச்சவடால் அடித்தார். மாநிலங்களுக்கிடையிலான காவல்துறை சார்ந்த ஒத்துழைப்பு, மற்றும் நாடு முழுவதும் காவலர்களுக்கு ஒரே சீருடையை அறிமுகம் செய்தால் அவர்களின் அடையாளம், சிந்தனை ஒரே மாதிரியாக இருக்கும் என்று தனது கருத்தை முன்வைத்தார். 

400 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சீருடையை மாற்றுவதால் என்னென்ன மாற்றம் வரப்போகிறது என்று தெரியவில்லை. முறையற்ற தொழிலாளர்களாக காவலர்கள் நடத்தப்படுகிறார்கள். அரசின் எந்த துறையைவிடவும் மிக மோசமாக காவல்துறை நடத்தப்படுகிறது. வேலைப்பளு, அதிகாரிகள் அரசியல்வாதிகளின் தலையிடு, வேலை நேரம், விடுமுறை என எல்லா விதமான நெருக்கடியிலும் மாட்டிகொண்டு உழல்கிறர்கள். தொடர்ந்து பணிச்சுமை காரணமாக காவலர்கள் தற்கொலை அதிகரித்து கொண்டே உள்ளது. காவல் நிலையத்தில் பணியின் போது பொது இடத்தில்தான் காவலர்களின் தற்கொலை நடக்கிறது.  இதை பற்றியெல்லாம் பேச மறுக்கும் மோடிதான் இந்த கூட்டத்தில் பொய் செய்திகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வெட்கமில்லாமல் கூறுகிறார்.

மாநில உள்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், தீவிரவாத தாக்குதல், போலி செய்தி குற்றங்கள் போன்ற உப்புசப்பில்லாத காரணங்களை சுதந்திர தின உரை போல் வாய்க்கு வந்ததை எல்லாம் அடித்துவிடுகிறார்.

மேலும் மோடியை தொடர்ந்து அமித்ஷா பேசுகையில் மாநிலங்களுக்கு இடையேயான குற்றங்களை ஒழிப்பதில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். சட்டம், ஒழுங்கை நிர்வகிப்பதற்கான அதிகாரத்தை மாநிலங்களுக்கு அரசியல் சாசனம் வழங்குகிறது என்று கூறிவிட்டு அடுத்து அன்னிய நிதி ஒழுங்குமுறை சட்டத்தில், மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு திருத்தங்களை கொண்டு வந்தது. அதன்மூலம் தொண்டு நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு, வெளிநாட்டு நிதி தவறாக பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரும் காலங்களிலும் மிக தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றார்.

ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் பாசிச பாஜக உள்ளிட்ட இந்துத்துவ  அமைப்புகள்தான் அதிக நிதி வசூலித்து உள்ளன என்ற செய்தியை நாம் மறந்துவிட கூடாது. ஈஷா, பாபாரம்தேவ், புட்டபத்தி சாமியார்களும் இதில் அடங்குவர்.

- செந்தளம் செய்திப்பிரிவு