செய்தி தொகுப்பு: அமெரிக்கா-இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம்
தமிழில்: வெண்பா
1
அமெரிக்கா-இந்தியா பாதுகாப்பு ஒப்பந்தம்: இருதரப்பு கருத்து வேறுபாடுகளையும் மீறிய உறவு
இந்தியாவும் அமெரிக்காவும் தங்களது 10 ஆண்டுகால பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (DCA) அக்டோபர் 31 அன்று புதுப்பித்துள்ளன. இருப்பினும், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளிலும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அமெரிக்கா இதனை, சீனாவிற்கு எதிரான தீவிரமடைந்து வரும் போட்டிகளுக்கு மத்தியில் யுத்ததந்திரச் சுமையைப் பகிர்ந்துகொள்ளவும், இந்தியாவை இந்தோ-பசிபிக் பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைக்கவும் மேற்கொள்ளப்படும் பரந்த திட்டத்தின் பகுதியாகக் காண்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் கடுமையான வரிக் கொள்கைகள், வர்த்தகம், தொழில்நுட்பம் பற்றிய கருத்து வேறுபாடுகள் உள்ளிட்ட மாதக்கணக்கிலான அரசியல் முரண்பாடுகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் உறவை உறுதிப்படுத்தும் அம்சமாக கருதுகிறது. மனகசப்புகள் யாவும் இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டணியின் அடிப்படை அம்சங்களை மாற்றவில்லை. அன்றாட அரசியலின் கூச்சலுக்கு மத்தியிலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு இந்தியாவின் யுத்ததந்திர ரீதியான மதிப்பு குறையாமல் அப்படியே உள்ளது. எனவே, இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் (DCA) செயல்பாட்டுக்கான உறவை பிரதிபலிக்கிறது—இது நடைமுறைக்கு தக்க ஒத்துழைப்பில் வேரூன்றியிருந்தாலும், போட்டிகள் மற்றும் புவிசார் அரசியல் அழுத்தங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் ஆழமடைந்து வரும் உறவின் மூன்று தசாப்த காலப் பயணத்தை இந்த DCA ஒப்பந்தம் தொடர்கிறது. இது 1995 ஆம் ஆண்டு ‘பாதுகாப்பு உறவுகள் குறித்த ஒப்புதலுடன்’ (Agreed Minute on Defence Relations) ஆரம்பமானது. பின்னர், 2005 ஆம் ஆண்டின் ‘அமெரிக்கா–இந்தியா பாதுகாப்பு உறவுக்கான புதிய கட்டமைப்பின்’ மூலம் இது பரிணாம வளர்ச்சி அடைந்து, கடைசியாக 2015 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆஷ்டன் கார்ட்டர் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைப்படுத்தப்பட்டது.
புதிய திருப்பமும் தொழில்நுட்பமும்
இந்த சமீபத்திய புதுப்பித்தல் திருப்புமுனையாக அமைகிறது. இது மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்ப கூட்டு உற்பத்தி, இணையச் செயல்பாடுகள் (Cyber Operations), விண்வெளி ஆகிய துறைகளுக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துகிறது. எவ்வாறாயினும், அமெரிக்காவின் பாதுகாப்பு வட்டாரத்தை நெருங்கும்போது இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன்தான் செயல்படுகிறது.
இந்தியாவின் அணுகுமுறை, கூட்டணி அமைப்பதை விடவும் யுத்ததந்திரத் தேவையின் அடிப்படையிலானது. அமெரிக்காவின் ஒப்பந்தக் கூட்டாளிகளுக்கு மாறாக, இந்தியா தனது சுயாட்சியைத் தியாகம் செய்யாமல் மேம்படுத்தப்பட்ட திறன்களைப் பெற முற்படுகிறது.
அமெரிக்க கண்ணோட்டத்தில், DCA இரண்டு தர்க்கங்களின் அடிப்படையில் செயல்படுகிறது: யுத்ததந்திர சீரமைப்பு மற்றும் வணிக வாய்ப்பு. இது, பிராந்திய சமநிலையைத் தக்கவைக்கும் திறன்கொண்ட சக்தியாக இந்தியா விளங்கும், சுதந்திரமான திறந்த இந்தோ-பசிபிக் பற்றிய அமெரிக்காவின் தொலைநோக்கு திட்டத்திற்கு ஆதரவாக உள்ளது. உலகளாவிய ஸ்திரமின்மைக்கு மத்தியில் தொடர்ச்சியை வெளிப்படுத்தவும், மூலோபாய எதிர்பார்ப்புகளைச் சீரமைக்கவும், பொறுப்புள்ள பிராந்திய நாடாக இந்தியாவின் பங்கை வலுப்படுத்தவும் அமெரிக்கா முயல்கிறது.
அதே நேரத்தில், இந்த ஒப்பந்தம் தனித்துவமான தொழில்துறை பரிமாணத்தையும் கொண்டுள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பாதுகாப்புச் சந்தைகளில் ஒன்றாகும். எனவே, அமெரிக்க நிறுவனங்கள் விற்பனை, கூட்டு உற்பத்தி திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மைகளை விரிவுபடுத்த ஆவலுடன் உள்ளன.
இந்தியாவின் செயல் திறன் விரிவாக்கம்
2008 ஆம் ஆண்டு முதல், இந்தியா 20 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியுள்ளது. இதில் C-17 மற்றும் C-130J போக்குவரத்து விமானங்கள் முதல் P-8I கடல்சார் ரோந்து விமானங்கள், அப்பாச்சி மற்றும் சினூக் ஹெலிகாப்டர்கள், M777 ஹோவிட்சர்கள் மற்றும் சமீபத்தில் MQ-9B ஆயுதம் தாங்கிய டிரோன்கள் வரை அடங்கும்.
இவை விலையுயர்ந்த கொள்முதல்கள் மட்டுமல்ல; இவை இந்தியாவின் பாதுகாப்புக் களத்தை வடிவமைக்கும் திறனை விரிவுபடுத்துகின்றன. P-8I விமானங்கள் மற்றும் MQ-9B டிரோன்கள் இந்தியப் பெருங்கடல் முழுவதும் கடல்சார் பரப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துகின்றன. அதே சமயம் C-17கள் மற்றும் C-130Jகள் சர்ச்சைக்குரிய எல்லைகளுக்குப் படைகளை விரைவாக நகர்த்த அனுமதிக்கின்றன.
M777 ஹோவிட்சர்கள், அப்பாச்சி, சினூக் ஹெலிகாப்டர்களுடன் இணைந்து, இந்த அமைப்புகள் உயரமான இடங்களில் உள்ள நிலைகளைத் தக்கவைக்கவும் பலப்படுத்தவும் உதவி இந்தியாவின் திறனை பலப்படுத்துகின்றன. இவை அனைத்தும் கூடி, பிராந்தியத்தில் அச்சுறுத்தல் தடுப்பு, நெருக்கடிக்கு பதிலளித்தல் மற்றும் சக்தி விரிவாக்கம் (power projection) ஆகியவற்றை பலப்படுத்துகின்றன.
சுயாட்சி மற்றும் சமநிலைக்கான களம்
இந்தியாவைப் பொறுத்தவரை, DCA என்பது கூட்டணி அமைப்பதைப் பற்றியதல்ல; மாறாக, மூலோபாய சுயாட்சியின் எல்லைக்குள் திறன்களை மேம்படுத்துவது பற்றியதாகும். இது மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கான அணுகல், விரிவான கூட்டுப் பயிற்சி மற்றும் அதிக செயல்பாட்டுத் தயார்நிலை ஆகியவற்றை வழங்குகிறது. இந்த அனைத்து செயல்பாடுகளும் சுயாதீனமான முடிவெடுக்கும் தன்மையை பாதிக்காமல் நடைபெறுகின்றன.
வரிக் குறித்த சர்ச்சைகள், ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் குறித்து அமெரிக்கா இந்தியா மீது வைத்த விமர்சனம், அண்மைய இந்தியா-பாகிஸ்தான் ஆயுத மோதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் அமெரிக்கா மீண்டும் ஈடுபாடு கொண்டது போன்ற நிகழ்வுகள் என இந்தியா-அமெரிக்க உறவில் ஏற்பட்ட கடினமான காலத்திற்குப் பிறகு இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.
ஆனாலும், இந்தியா வரி அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொண்டும், அதன் எரிசக்தித் தேர்வுகளைப் பாதுகாத்துக் கொண்டும், தனது நிலைப்பாட்டை உறுதியாகப் பேணியது. சுயாட்சியைத் தியாகம் செய்யாமல், இந்தியா அமெரிக்காவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்த விரும்புகிறது. ஆகவே, ரஷ்யாவுடனான உறவுகளைப் பேணுதல், பிரிக்ஸ் (BRICS) மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) பங்கேற்றல், மற்றும் சீனாவுடன் சீரான இராஜதந்திர அணுகுமுறையைப் பின்பற்றுதல் ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்துகிறது.
திறன் மேம்பாட்டிற்கு அப்பால், இந்த DCA ஒப்பந்தம் யுத்ததந்திர வழிகாட்டியாகவும், அச்சுறுத்தல் தடுப்பு நடவடிக்கையாகவும், உறுதிப்படுத்தல் வழிமுறையாகவும் உள்ளது. இது பிராந்தியப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் நீண்ட காலப் பாதுகாப்புப் பங்காளியாக இந்தியாவின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துகிறது.
இந்த ஒப்பந்தம் பல அடுக்குகளில் செய்திகளை தருகிறது: ரஷ்யாவுக்கு அனுமதி, சீனாவுக்கு தடுப்பு, எந்தவொரு ஒற்றை சக்தியையும் மிகையாக-சார்ந்திருப்பதை குறித்து அஞ்சும் உள்நாட்டுக் குழுக்களுக்கு உறுதிப்பாடு. குவாட் (Quad) மற்றும் IPEF போன்ற அமெரிக்க தலைமையிலான முயற்சிகளில் இந்தியா இணையாகப் பங்கேற்பது—அதே நேரத்தில் SCO மற்றும் BRICS ஆகியவற்றுடன் தொடர்ந்து ஈடுபடுவது—சுயாட்சியைச் சமரசம் செய்யாமல் நலன்களைச் சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பன்முக நோக்கு கொண்ட மூலோபாயத்தை (multi-vector strategy) பிரதிபலிக்கிறது.
இந்தச் சூழலில், DCA ஒப்பந்தம் இந்தியாவின் இராஜதந்திர முதிர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: அதாவது, ஒரு பெரிய வல்லரசுடன் உறவுகளை ஆழப்படுத்திக் கொண்டே, மற்றவர்களுடன் இராஜதந்திர ரீதியாகச் செயல்படுவதற்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் திறன்.
முடிவில், இந்த 10 ஆண்டு DCA ஒப்பந்தம் தொடர்ச்சியையும் கணக்கீட்டையும் பிரதிபலிக்கிறது: இந்தோ-பசிபிக்கின் கூட்டுப் பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியாவை இணைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சியையும், மூலோபாயத் தேர்வுகளை விரிவுபடுத்தும் அதே வேளையில் சுயாட்சியைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் உறுதியையும் இது காட்டுகிறது.
போட்டியான புவிசார் அரசியலின் சகாப்தத்தில், இந்தியா தனது திறனை வளர்க்க கூட்டணிகளைப் பயன்படுத்துகிறது, அதே வேளையில் போட்டி கூட்டணிகளுடனும் திறந்த உறவுகளைப் பராமரிக்கிறது. இந்த DCA ஒப்பந்தத்தை "முக்கிய மாற்றம்" (pivot) என்று புரிந்துகொள்வதை விட, சமநிலைக்கான ஒரு களம் (platform for balance) என்று புரிந்துகொள்வதே சிறந்தது.
இது இந்தியாவின் யுத்ததந்திரத்தை எடுத்துக்காட்டுகிறது—அது நடைமுறைக்கு உகந்தது, பன்முகத்தன்மை கொண்டது மற்றும் லட்சிய நோக்கம் கொண்டது—இது தனது தேசிய அடையாளத்தின் மையமான சுயாட்சியை விட்டுக்கொடுக்காமல் பல்துருவ ஒழுங்கமைப்பை (multipolar world) வழிநடத்துகிறது.
https://asiatimes.com/2025/11/us-india-defense-deal-belies-bilateral-discord-and-doubts/
===========================================================
2
இந்தியா-அமெரிக்கா புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்: அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த 10 ஆண்டுகளுக்கான இலக்கு
இந்தியா, அமெரிக்கா இடையே 10 ஆண்டுகளுக்கான புதிய பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது; அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதே அதன் இலக்கு.
அமெரிக்காவும் இந்தியாவும் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தங்களது யுத்ததந்திர கூட்டை வலுப்படுத்துவதற்காக விரிவான புதிய பாதுகாப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவும் தீவிரமான வரி பதற்றங்களைத் தணிப்பதற்காக வர்த்தக ஒப்பந்தம் ஒன்றும் பேச்சுவார்த்தையில் உள்ள நிலையில்தான் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.
கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டின் இடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அமெரிக்கப் பிரதிநிதி பீட் ஹெக்சித்தும் கையெழுத்திட்ட 'அமெரிக்கா-இந்தியா முக்கியப் பாதுகாப்புக் கூட்டாண்மைக்கான கட்டமைப்பு' ஒப்பந்தமானது, ஜூன் 2015-இல் கையெழுத்தான ஒப்பந்தத்தை கைவிட்டு புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டிற்கான இந்த ஒப்பந்தமானது, அடுத்த 10 ஆண்டுகளில், பாதுகாப்பு-தொழில்துறை ஒத்துழைப்பு, நிலம், வான், கடல், விண்வெளி மற்றும் இணையவெளி முழுவதும் இராணுவத் தளவாட ஒருங்கிணைப்பு (interoperability), கடல்சார் கண்காணிப்பு (maritime domain awareness) உட்பட அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த, "ஒருங்கிணைந்த தொலைநோக்கு மற்றும் கொள்கை வழிகாட்டலை" வழங்குவதன் மூலம் பாதுகாப்புக் கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிராந்தியத்தில் தோன்றும் பாதுகாப்பு சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கான "புதுப்பிக்கப்பட்ட ஒருமித்த கருத்துக்கு" இணங்க, தற்காப்பு, ஸ்திரத்தன்மை, சுதந்திரமான திறந்த இந்தோ-பசிபிக் பகுதியை பாதுகாப்பதற்கான அவசியங்கள் உட்பட அனைத்திலும் இந்தக் கூட்டணியை மறுசீரமைப்பதே இதன் நோக்கம் என்று அதிகாரிகள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்தனர்.
அமெரிக்காவுடனான உறவில் பாதுகாப்பு தொடர்ந்து முக்கிய தூணாக இருக்கும்: ராஜ்நாத்
கடந்த இரு தசாப்தங்களாக பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பானது ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளின் அடித்தளமாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிரம்ப் இந்தியாவின் மீது 50% சுங்க வரிகளை விதித்ததாலும், வர்த்தக ஒப்பந்தங்களை நெம்புகோலாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தான் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் தொடர்ந்து வலியுறுத்துவதாலும் இந்த உறவுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
இருப்பினும், சிங்-ஹெக்சித் சந்திப்பில் பாதுகாப்புக் உறவுகளின் வளர்ச்சி தெளிவாகத் தெரிந்தது. சிங் கூறியதாவது: "இந்த ஒப்பந்தமானது ஏற்கெனவே வலிமையாக உள்ள நமது பாதுகாப்புக் கூட்டணியில் புதியதொரு சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும். இது நமது வளர்ந்து வரும் யுத்ததந்திர கூட்டின் வழிகாட்டியாகும், பாதுகாப்பு என்பது நமது இருதரப்பு உறவுகளின் முக்கிய தூணாகத் தொடர்ந்து நீடிக்கும்".
இதற்கு பதிலளித்த ஹெக்சித், "இந்த ஒப்பந்தமானது நமது பாதுகாப்புக் கூட்டணியை முன்னேற்றுகிறது, இது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் தற்காப்புக்கும் அடித்தளமாகும். நாம் நமது ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துகிறோம். நமது பாதுகாப்பு உறவுகள் இவ்வளவு வலிமையாக முன்னெப்போதும் இருந்ததில்லை" என்று கூறினார்.
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரில் பதற்றம் தணிந்த போதிலும், ஆக்ரோஷமான சீனாவை எதிர்கொள்வதற்கான அதன் இந்தோ-பசிபிக் யுத்ததந்திரம் இனி முதன்மை முன்னுரிமை அல்ல என்று டிரம்ப் அரசு கூறுவது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது.
ஆனாலும், சிங் மற்றும் ஹெக்சித் இருவருமே கூட்டத்தில் சுதந்திரமான, திறந்த மற்றும் விதிகளுக்கு கட்டுப்பட்ட இந்தோ-பசிபிக் மீதான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். அப்பிராந்தியம் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு இருப்பதை உறுதிசெய்வதற்கு இந்த இருதரப்பு கூட்டு "மிக முக்கியமானது" என்று சிங் கூறிய அதே வேளையில், அதை உறுதிசெய்யும் வகையில் இந்தியாவோடு நெருக்கமாகச் செயல்பட அமெரிக்கா உறுதியளிப்பதாக ஹெக்சித் கூறினார்.
சீனப் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டோங் ஜூன் உடனான சந்திப்பில், தென் சீனக் கடல், தைவான் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகள் தொடர்பான சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கவலைகளை வெளிப்படுத்திய அதே வேளையில், "இந்தோ-பசிபிக் பகுதியில் அதிகாரச் சமநிலையை நிலைநாட்டுவதன்" முக்கியத்துவத்தையும் ஹெக்சித் வலியுறுத்தினார். "அமெரிக்கா மோதலை தூண்டவில்லை. அது தொடர்ந்து தனது நலன்களை உறுதியாகப் பாதுகாக்கத் தேவையான திறன்கள் இப்பிராந்தியத்தில் இருப்பதை உறுதி செய்யும்," என்று அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டார்.
நிச்சயமாக, 2007 ஆம் ஆண்டு முதல் மட்டும் 25 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ள அமெரிக்கா, மேலும் அதிக இலாபகரமான இந்திய பாதுகாப்பு ஒப்பந்தங்களை எதிர்பார்த்து நிற்கிறது. உதாரணமாக, இந்தியா கடந்த ஆண்டு அக்டோபரில் 3.8 பில்லியன் டாலருக்கு அமெரிக்காவிடம் ஆர்டர் செய்த 31 ஆயுதம் தாங்கிய MQ-9B பிரிடேட்டர் அதிஉயர நீண்ட-தாக்குப்பிடிக்கும் ஆளில்லா விமானங்களை (drones) 2029-30 காலக்கட்டத்திற்குள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் மார்க்-1A போர் விமானங்களுக்கு ஆற்றல் அளிப்பதற்காக, அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலக்ட்ரிக்கிலிருந்து 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள மேலும் 113 GE-F404 டர்போஃபேன் ஜெட் என்ஜின்களுக்கு இந்தியா ஆர்டர் செய்ய உள்ளது. 716 மில்லியன் டாலருக்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் ஆகஸ்ட் 2021 இல் ஆர்டர் செய்யப்பட்ட 99 என்ஜின்களின் விநியோகம், இரண்டு ஆண்டு தாமதத்திற்குப் பிறகு சமீபத்தில் தொடங்கியது.
=========================================================================
3
இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்: மறுமதிப்பீட்டிற்கு மத்தியில் மீண்டும் உறுதியளிப்பா?
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் யுத்ததந்திர கூட்டுகள் (strategic convergences) இந்தியாவுக்கு நம்பிக்கையளித்துள்ளன.
மிக முக்கியமாக, அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகளில் நிலையான வளர்ச்சியினால், இந்தியா-அமெரிக்கா உறவுகள் எதிர்பார்ப்புகளுக்கும் யதார்த்தங்களுக்கும் மத்தியில் இணக்கத்தைக் கண்டுள்ளன. இருப்பினும், ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சி தொடங்கியதிலிருந்து, மோசமான அரசியல் போக்குகள், புரிதலுக்கும் முன்னேற்றத்திற்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்துள்ளது. ட்ரம்பின் பேச்சுகளால், மக்கள் மத்தியில் இருந்த அபிப்பிராயம் வீழ்ச்சியடைந்துள்ள போதும் தற்போது சில நடவடிக்கைகளால் உறவுகள் முன்னேற்றமடைந்து வருகின்றன.
அத்தகைய ஒரு முன்னேற்றமாக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெகெசெத் ஆகியோர் அக்டோபர் 31 அன்று அமெரிக்கா-இந்தியா பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது குறைந்தபட்சம் நான்கு காரணங்களுக்காக மிகவும் அவசியமானதாக உள்ளது. முதலாவதாக, ட்ரம்ப் நிர்வாகம் இந்தியா மீது எந்தவொரு நாட்டிலும் இல்லாத அதிகபட்ச வரிகளைத் திணித்துள்ள கொந்தளிப்பான நேரத்தில் இது வந்துள்ளது. இரண்டாவதாக, பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ஆகியவை மிக நெருக்கமாகப் பிணைந்திருப்பதால், பாதுகாப்பில் உள்ள வேகத்தின் வாக்குறுதியானது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் உறுதியளிப்பதில் பெரும் பங்கு வகிக்கும்.
மூன்றாவதாக, இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை விரைவாக விநியோகிக்க வழிவகுக்கும், இரு நாடுகளும் இந்தியாவில் உபகரணங்களை இணைந்து தயாரிக்கும் திட்டங்களுக்கு முன் நடவடிக்கையாக தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களை உருவாக்கும். கடைசியாக, இந்த ஒப்பந்தம் 1995 இல் 'அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் குறித்த ஒப்புதல்' (Agreed Minute on Defense Relations Between the United States and India) கையெழுத்திடப்பட்டபோது தொடங்கிய இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பத்தாண்டு கால ஒத்துழைப்பு வாக்குறுதியைப் புதுப்பிக்கிறது.
இதைத் தொடர்ந்து, அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அமெரிக்க டொனால்ட் ரம்ஸ்ஃபீல்ட் ஆகியோருக்கு இடையே 2005 இல் 'அமெரிக்கா-இந்தியா பாதுகாப்பு உறவுக்கான புதிய ஒப்பந்தம்' (New Framework for the US-India Defense Relationship) கையெழுத்திடப்பட்டது.
ஜூன் 2015 இல், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஆஷ் கார்ட்டரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரும் இந்திய -அமெரிக்க புதிய பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 2025 ஒப்பந்தம், இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகளுக்கான புதிய கொள்கையை வடிவமைப்பதில் முக்கியத் திருப்புமுனையைக் குறிக்கிறது. இது போர்க்களத் தேவைகள் (battlespace requirements), தொழில்நுட்பங்கள், போரின் தன்மை ஆகியவை அதிவேகமாகப் பரிணமித்து வரும் காலகட்டத்தில் நிகழ்கிறது. இந்த 10 ஆண்டு ஒப்பந்தம், இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு வலுவான மாதிரியை வழங்குகிறது. இது முக்கியமான துறைகளில் ஆய்வு மற்றும் மீள்சீரமைப்பிற்கு வித்திடுகிறது. குறிப்பாக, தொழில்நுட்ப சார்பு நிலைக்கு (technological interdependence) இது மிகவும் முக்கியமானது.
இந்த ஒப்பந்தம் பிராந்திய ஸ்திரத்தன்மை, தற்காப்பு, தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை முன்னேற்றுவதில் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. பாதுகாப்புத் துறையில் குறிப்பிட்ட அம்சங்களுக்கு அப்பால், இது இந்தோ-பசிபிக்கில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்த நீண்ட கால யுத்ததந்திர கண்ணோட்டத்தை ஏற்றுக்கொள்கிறது. சுதந்திரமான, திறந்த மற்றும் விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிபிக்கை உறுதி செய்யும் விதத்தில், இது ட்ரம்ப் ஆட்சியின் மீது சமீபத்தில் குறைந்து வந்த நம்பிக்கையை ஓரளவு மீட்டெடுத்துள்ளது போல் தோன்றுகிறது. இருப்பினும், இந்தோ-பசிபிக்கில் நடந்து வரும் செயல்தந்திர மாற்றங்களுக்கும் அமெரிக்காவின் பரந்த பிராந்திய பாதுகாப்புக் கண்ணோட்டத்திற்கும் இடையில் வேறுபாடு காணப்பட வேண்டும். அந்த வேறுபாட்டிற்கான காரணம், பிராந்திய விதிகள் மற்றும் கூட்டணி கொள்கையின் அடித்தளத்தை அசைத்த டிரம்பின் சில கொள்கை முடிவுகளாக இருக்கலாம்.
குறிப்பாக, இந்தோ-பசிபிக் பாதுகாப்புக்கான அமெரிக்காவின் அறிவிக்கப்பட்ட கொள்கைகளுக்கும் (இது பல உயர்மட்டப் பயணங்கள் மற்றும் அறிக்கைகளில் தெளிவாகிறது) தற்போது சீனாவுடன் பொருளாதார ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயலும் அதன் வெளிப்படையான அவசரத்திற்கும் இடையில் தெளிவான முரண்பாடு உள்ளது. ஆசியான் (Asean) உச்சிமாநாட்டில் எட்டப்பட்ட சமீபத்திய அமெரிக்கா-சீனா பொருளாதார ஒப்பந்தம், அமெரிக்க நிறுவனங்கள், உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்குப் பயனளித்திருக்கலாம். ஆனால் இது இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற முக்கிய பிராந்தியப் பங்காளிகளால் ‘குவாட்’ (Quad) கட்டமைப்பின் கீழ் கட்டியெழுப்பப்பட்ட யுத்ததந்திர கூட்டை பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு செய்வதனால் பிராந்தியத்தில் அமெரிக்காவின் யுத்ததந்திர கூட்டாளிகளின் கரங்களைக் கட்டுப்படுத்தக்கூடும். எனவே, புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள் அவற்றின் அமலாக்கத்தின் போது இவற்றை எதிர்கொள்ளும்.
2015 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தில் ஏதாவது ஒன்றை படிப்பினையாக கொள்ளவேண்டுமானால், அது இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு கூட்டின் முடிவெடுக்கும் மற்றும் ஒருங்கிணைப்பு வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே ஆகும். கூட்டுப் புத்தாக்கத்தை மேம்படுத்தவும், கூட்டு தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை இணைப்புகளை உருவாக்கவும், குறிப்பாக பாதுகாப்பு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப திட்டத்தின் (Defense Trade and Technology Initiative) கீழ் கடந்த தசாப்தத்தின் உறுதிமொழிகள் என இவற்றை உற்று நோக்கினால், நடந்துகொண்டிருக்கும் பணியாகவே (work-in-progress) இருந்துள்ளன. முதலீடுகளை அதிகரிக்க ட்ரம்ப்பின் புதிய ஆட்சியின் புதுப்பிக்கப்பட்ட அரசியல் மற்றும் இராஜதந்திர கொள்கைகளின் கீழ், இந்திய-அமெரிக்க உறவு வாங்குபவர்–விற்பவர் நிலைக்கு பின்னோக்கிச் செல்லும் அபாயமும் உள்ளது—இந்த நிலையை 2015 இல் இரு தரப்பும் தாண்டிச் செல்ல உறுதியளித்தன.
திரும்பிப் பார்க்கையில், இரு நாடுகளும் புதிய பத்தாண்டு கால வாக்குறுதியைச் சிந்தித்துப் பார்ப்பது – பகிரப்பட்ட புத்தாக்கம், நம்பிக்கை மற்றும் மூலோபாய ஆழத்தில் இந்த கூட்டணி நிலைத்திருப்பதை உறுதி செய்வது கட்டாயமாகும். தற்போதைய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் 2035 ஆம் ஆண்டுக்கான பாதை நீண்டதொரு வளைவு ஆகும், மேலும் இரு தரப்பினரும் அதில் எவ்வாறு பயணிக்கத் தேர்வு செய்கிறார்கள் என்பதே அவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகளின் அடுத்த அத்தியாயத்தை வரையறுக்கும்.
===========================================================================
4
பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதன் மூலம் உறவுகளை நிலைப்படுத்த இந்தியா, அமெரிக்கா முயற்சி
அக்டோபர் 31 அன்று, இந்தியாவும் அமெரிக்காவும் 10 ஆண்டு கால பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (DCA) புதுப்பித்தன; முதலில் 2005 இல் கையெழுத்தானது. அண்மைக் காலமாக டிரம்ப் இந்தியாமீது விதித்த கடுமையான வர்த்தக வரிகளால் (trade tariffs) சிக்கலாகியிருந்த இருதரப்பு உறவுகளுக்கு இது ஓரளவு ஸ்திரத்தன்மையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிற்கான முன்னாள் இந்திய தூதர் அருண் சிங், " முரண்பாடுகள் பாரிய அளவில்" இருந்தபோதிலும், இந்தியாவாலும் அமெரிக்காவாலும் DCA-யில் கையெழுத்திட முடிந்தது என்று 'தி டிப்ளமேட்' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இது "பிற ஒத்துழைப்புப் பகுதிகளிலும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சி" என்று சிங் கூறினார்.
அமெரிக்கா-இந்தியா முக்கிய பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு ஒப்பந்தம், கோலாலம்பூரில் நடைபெற்ற 12வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டிற்கிடையில் கையெழுத்தானது. ஆசியாவில் இந்தியாவின் முக்கிய யுத்ததந்திர போட்டியாக கருதப்படும் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை மறுவரையறை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட, உலகளாவிய புவிசார் அரசியல் கொந்தளிப்பான சூழலில் இது நடந்துள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னதாக, இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க செயலரான பீட் ஹெக்செத்துடன் நடத்திய சந்திப்பை "பயனுள்ளது" என்று விவரித்தார்.
'X'-தளத்தில், இந்த ஒப்பந்தம் "ஏற்கனவே வலுவாக உள்ள நமது பாதுகாப்புப் ஒத்துழைப்பில் புதியதொரு சகாப்தத்தை உருவாக்கும்" என்றும், "இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவு முழுமைக்கும் கொள்கை வழிகாட்டுதலை வழங்கும்" என்றும் சிங் கூறினார். DCA-ஐ "வளர்ந்து வரும் நமது மூலோபாய ஒருமைப்பாட்டிற்கான (strategic convergence) வழிக்காட்டி" என்று விவரித்த சிங், அது "கூட்டணியின் புதிய தசாப்தத்தை அறிவிக்கும்" என்றார். மேலும், "பாதுகாப்பு, நமது இருதரப்பு உறவுகளின் முக்கிய தூணாக இருக்கும். சுதந்திரமான, திறந்த மற்றும் விதிகளுக்குட்பட்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதற்கு நமது ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது" என்றும் குறிப்பிட்டார்.
ஹெக்செத்தைப் பொறுத்தவரை, புதுப்பிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும், அச்சுறுத்தலைத் தடுப்பதற்கும் அஸ்திவாரமாக இருக்கும் நமது பாதுகாப்பு கூட்டணியை மேலும் மேம்படுத்தும் என்றார். "நாம் நமது கூட்டிணைப்பு, தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகிறோம். நமது பாதுகாப்பு உறவுகள் இவ்வளவு வலுவாக முன்னெப்போதும் இருந்ததில்லை" என்றும் அவர் கூறினார். புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. "அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ஒத்துழைப்பை மேலும் வளர்ப்பதற்கான புதியதொரு அத்தியாயத்தை 2025 கட்டமைப்பு ஒப்பந்தம் குறிக்கிறது. பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த தொலைநோக்குப் பார்வையையும் கொள்கை திசையையும் வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று இந்திய அரசின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
"ராணுவப் பயிற்சிகள், நடவடிக்கைகள், தகவல் பகிர்வு, ஒத்த கொள்கை கொண்ட பிராந்திய-உலகளாவிய பங்காளிகளுடன் ஒத்துழைப்பு, பாதுகாப்பு தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு வழிமுறைகள் ஆகியவற்றின் மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் [தங்களின்] பாதுகாப்பு உறவை விரிவுபடுத்தியும் ஆழப்படுத்தியும் வருகின்றன," என்றும் அந்த அறிக்கை கூறியது. இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய (IOR) தீவு நாடுகளின் ஒத்த கொள்கை கொண்ட தேசங்களில் திறன்களை மேம்படுத்துவது போன்றவற்றில் மூன்றாம் உலக நாடுகளில் இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் ஆழப்படுத்தும். இந்தியாவால் அதன் செல்வாக்கு மண்டலமாக (sphere of influence) கருதப்படும் IOR-இல், அண்மைக் காலங்களில் சீனா அதிக அளவில் ஊடுருவி வருகின்றது.
விண்வெளி மற்றும் ஏவுகணை பாதுகாப்பு (missile defense), பேரழிவு ஆயுத பரவலைத் தடுத்தல் (proliferation of weapons of mass destruction), ஆயுத ஏற்றுமதி உரிம ஒப்புதல்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தன்னை தளவாடங்கள், பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் முழுமையான சீரமைப்பு (logistics, maintenance, repair, and overhaul hub) மையமாக வளர்த்துக் கொள்ளும் லட்சியத்திற்கு இது வலு சேர்க்கும். 2005 இல் ஒப்பந்தம் முதன்முதலில் கையெழுத்திடப்பட்டதிலிருந்து இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு விரைவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத் தரவுகளின்படி, அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் இராணுவ கொள்முதல் (military procurement) 2000 ஆம் ஆண்டில் மிகக் குறைவாக இருந்தது. அது 2024 ஆம் ஆண்டில் 24 பில்லியன் டாலராக உயர்ந்தது. மூன்று படைகளிலும் இருதரப்புப் பயிற்சிகள் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளன. 2023 இல், போதைப்பொருள் தடுப்பு, கடத்தல் தடுப்பு மற்றும் கடற்கொள்ளை தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அமெரிக்கா தலைமையிலான - பஹ்ரைனை தளமாகக் கொண்ட - கூட்டு கடல்சார் படைகளின் (Combined Maritime Forces) முழு உறுப்பினராக இந்தியா மாறியது. அமெரிக்க இராணுவக் கப்பல்கள் இப்போது இந்திய துறைமுகங்களை அணுகுகின்றன. அமெரிக்க இராணுவ விமானங்களுக்கான எரிபொருள் நிரப்பும் வசதிகளையும் இந்தியா கொடுக்கிறது.
அமெரிக்காவும் இந்தியாவும் எதிரெதிர் துருவங்களில் இருந்த பனிப்போர் (Cold War) காலங்களில் இத்தகைய ஒத்துழைப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. பாதுகாப்பு உள்ளிட்ட பிற துறைகளில் உறவுகளை விரைவாக மேம்படுத்துவது, ஆசியாவிலும் உலக அளவிலும் சீனாவுக்கு எதிர்ப்பலமாக (counterweight) இந்தியா எழுவதற்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவாக இது காணப்பட்டது. இருப்பினும், டிரம்ப் ஜனவரி 2025 இல் பதவிக்கு வந்ததிலிருந்து உறவுகள் சிக்கலாகவே உள்ளன. வரிகளைத் தவிர, ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானால் ஆதரிக்கப்பட்ட பயங்கரவாதக் குழுவே காரணம் என்று இந்திய அரசு குற்றம் சாட்டிய நிலையில், டிரம்ப் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசியதானது, இந்திய அரசை அதிருப்தி அடையச் செய்தது. மே மாதம் நடந்த இராணுவ மோதல்களின்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களைத் தணிக்க தான் தலையிட்டதாக (intervened) டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறிய அறிக்கைகள் இந்தியாவிற்கு எதிரான குழப்பத்தை அளிப்பவையாகும். பாகிஸ்தானுடனான முரண்பாடுகள் எந்த மூன்றாம் தரப்பு தலையீடும் இல்லாமல் இருதரப்பு அளவிலேயே (bilaterally) தீர்க்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்க (ASEAN) மாநாட்டுக்காக மலேசியாவுக்கு செல்ல வேண்டாம் என்று மோடி எடுத்த முடிவு இந்த பதட்டங்களின் காரணமாக இருக்கலாம் என்றும் ஊகங்கள் உள்ளன. இந்தியப் பேச்சுவார்த்தையாளர்கள், கடுமையான வரிகளில் இருந்து (punishing tariffs) சில நிவாரணத்தை கொடுக்கக்கூடியதொரு வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க மெனக்கெட்டு வருகின்றனர். இப்போதுள்ள நிலையில், டிரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரிகளை விதித்துள்ளார்—இது உலகிலேயே அதிகமானது. ரஷ்யாவின் உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதி அளிப்பதாக டிரம்ப் கூறும், தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்காக விதிக்கப்பட்ட கூடுதல் 25 சதவிகித தண்டனை வரியும் (punitive levy) இதில் அடங்கும்.
இது தவிர, அமெரிக்காவையும் சீனாவையும் விவரிக்க டிரம்ப் அண்மையில் பயன்படுத்திய “G-2” என்ற சொல், பல-துருவ உலகில் (multi-polar world) முக்கியத் தூணாக இந்தியா உருவாவதற்கான லட்சியங்களைப் புறக்கணிப்பதாக இந்திய அரசால் பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டெல்லியில் இந்தியா நடத்தவிருந்த 'குவாட்' (Quad) உச்சி மாநாடு நடைபெறாது என்பது தெளிவாகிறது. அது மீண்டும், இந்தியா-அமெரிக்கா உறவை விட சீனா-அமெரிக்கா உறவுக்கு டிரம்ப் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதற்கான அறிகுறியாக இந்திய அரசால் பார்க்கப்படுகிறது. 'குவாட்' இராணுவக் கூட்டணியாக இல்லாவிட்டாலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் விரிவாதிக்கத்திற்கு சமமான எதிர்ப்பை வழங்குவதாகக் கருதப்பட்டது.
இப்போதைக்கு இந்தியாவின் யுத்ததந்திரம், அதன் விவசாயிகளின் நலன் உட்பட முக்கிய நலன்களில் உறுதியாக நின்றுகொண்டு, விரைவாக ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதன் மூலம் கடினமான காலத்தின் ஊடாக அமெரிக்காவுடனான தனது உறவை மீட்டமைக்கப்போவதாக தெரிகிறது. அமெரிக்க விவசாயப் பொருட்களுக்காக இந்தியச் சந்தையைத் திறக்க இந்தியா தயங்குவது வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் மிகப்பெரிய தடையாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா கடந்த மாதம் இரண்டு ரஷ்ய எரிசக்தி நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை (sanctions) அறிவித்த பிறகு, இந்தியா ரஷ்ய எண்ணெயின் இறக்குமதியைக் குறைக்கலாம் என்ற ஊகத்துடன் ஒத்ததாக, அக்டோபரில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளதாகச் செய்தி அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இந்தியா சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்து வருகிறது. 2024 இல், அதன் இறக்குமதி மதிப்பு 15 பில்லியன் டாலராகும். உறவுகளை ஸ்திரப்படுத்த இந்தியா அமெரிக்காவிலிருந்து சில பாதுகாப்பு வன்பொருட்களை (defense hardware) கூட வாங்கலாம் என்று இந்த விவகாரத்தை அறிந்த ஒருவர் 'தி டிப்ளமேட்டிடம் தெரிவித்தார்.
இதை தாண்டி, அமெரிக்காவை நோக்கி முழுமையாக சாய்வதாக தோன்றக்கூடிய எந்தவொரு அசைவையும் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து தவிர்க்கும், ஏனெனில் இது உள்நாட்டில் மோடியின் பிம்பத்தை மோசமாகப் பாதிக்கக் கூடும்.
https://thediplomat.com/2025/11/india-us-seek-to-stabilize-relations-by-renewing-defense-pact/
வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு