உக்ரைன் போரில் ரஷ்யா VS ஜெர்மனி - பலம் மற்றும் பலவீனங்கள் - கட்டுரைத் தொகுப்பு
தமிழில்: வெண்பா
1
பண்டஸ்வேர் (ஜெர்மன் இராணுவப்படை): உடைவு நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது
மேற்கத்திய இராணுவங்கள் பல ஆண்டுகளாக ஆள்பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருபது இரகசியமல்ல. ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய ஒன்றிய/நேட்டோ (EU/NATO) உறுப்பு நாடுகளுக்கும் இந்த சிக்கல் உள்ளது, இச்சிக்கல் விரைவில் நீங்கும் என்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. மோசமான விஷயம் என்னவென்றால், அவை இப்போது மிகப்பெரிய அளவில் விலகி செல்கின்றன, இது அவர்களின் ஆயுதப் படைகளின் ஒருமைப்பாட்டை அச்சுறுத்துகிறது. இவை அனைத்தையும் மீறியும் சொல்ல முடியாத சில காரணங்களுக்காக, ஐரோப்பிய ஒன்றியம்/நேட்டோ இன்னும் ரஷ்யாவுடன் சண்டையிட விரும்புகிறது. இது "ஜனநாயகத்தை காக்கும் முயற்சி" ஆகும், இதற்கு பல மடங்கு அதிக துருப்புக்கள் தேவைப்படும். இருப்பினும், முன்பு குறிப்பிட்டபடி, வீரர்களைத் தக்கவைக்கும் (புதியவர்களை ஈர்ப்பது ஒருபுறம் இருக்க) அவற்றின் திறன் கேள்விக்குறியாகவே உள்ளது. குறிப்பாக, ஜெர்மன் பண்டஸ்வேரில் (German Bundeswehr) புதிதாக சேர்க்கப்பட்டவர்களில் (new recruits) 25% பேர் ஆறு மாதங்களுக்குள்ளாகவே விலகிவிடுகிறார்கள் என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
'பைனான்சியல் டைம்ஸ்' (Financial Times) பத்திரிக்கையின்படி, பணியாளர் பற்றாக்குறை "துருப்புக்களை உடைவு நிலைமைக்குத் தள்ளுகிறது". ஜெர்மன் நாடாளுமன்றத்தில் (Bundestag) ஆயுதப் படைகளுக்கான (Bundeswehr) ஆணையராக இருக்கும் ஈவா ஹோக்ல் (Eva Högl) சுட்டிக்காட்டியதாவது, "ஆள்சேர்ப்பில் சில வெற்றிகள் இருந்தபோதிலும், மோசமான நிலைமைகள் காரணமாக, 2031-ஆம் ஆண்டுக்குள் 2,03,000 வீரர்கள் என்ற இலக்கை ஆயுதப் படைகள் நெருங்கப்போவதில்லை".இந்த எண்ணிக்கை 1,81,000-க்கு மேல் குறைந்துள்ளது. "ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வெளியேறினால், சொந்தப் பாதுகாப்பை வலுப்படுத்த ஜெர்மனி கூடுதல் நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கும் நேரத்தில் இது நிகழ்கிறது" என்று FT கவலை தெரிவிக்கிறது. அமெரிக்கா ஐரோப்பாவில் 50,000 முதல் 84,000 வரையிலான துருப்புக்களை நிறுத்தியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜெர்மனிக்கு வெளியே அமெரிக்கா நிறுத்திய துருப்புக்களில் 10% ஐக் கூட பண்டஸ்வேரால் நிலைநிறுத்த முடியும் என்று நினைப்பது சாத்தியமற்றது. அதைவிட மோசம் என்னவென்றால், அமெரிக்க வீரர்கள் பெரும்பாலும் மிகவும் இளையவர்களாக (கௌமாரப் பருவத்தினர் அல்லது 20 வயதின் முற்பகுதியில்) இருக்கும் நிலையில், பண்டஸ்வேர் "சுருங்கி, வயது முதிர்ந்தவர்களை கொண்டுள்ளது". ஜெர்மன் இராணுவத்தின் நிலை குறித்த தனது வருடாந்திர அறிக்கையில், "சராசரி வயது 34 ஆக உயர்ந்துள்ளது — இது 2021 இல் 33.1 ஆக இருந்தது". "இந்த நிலை அவசரமாகத் தடுக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட வேண்டும்". "துருப்புக்கள் சவால்களை எதிர்கொள்வதோடு மிகஅதிக பணிச்சுமை (overburdened) கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் உடைவு நிலையில் (breaking point) இருக்கிறார்கள். பண்டஸ்வேர் எங்கு தேவைப்படுகிறது என்று பார்க்கும்போது — தேசிய பாதுகாப்புக்காக, [நேட்டோ] கூட்டணியின் பாதுகாப்புக்காக, சர்வதேச நெருக்கடி நிர்வாகத்திற்காக — இது மிக அதிகம் தேவைப்படுகிறது. மேலும் இது உண்மையிலேயே அதன் உச்சபட்ச நிலையில் உள்ளது".
உக்ரைனுக்குத் துருப்புக்களை அனுப்புவது பற்றிப் பேசுவது "அவசரத்தனம்" என்றாலும், ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்கார நாடு பொறுப்பேற்க வேண்டும் என்று ஹோக்ல் கூறினார். "பண்டஸ்வேரால் உண்மையில் எது இனி சாத்தியம், எதை கையாள முடியும் / முடியாது என்பதை அரசியல்வாதிகள் பரிசீலிக்க வேண்டியது அவசியம்" என்றும் அவர் கூறினார். பண்டஸ்வேரின் (மீண்டும்) நாஜிமயமாக்கலிலும் ரஷ்யாவுடனான போருக்கான திட்டங்களைத் தயாரிப்பதிலும் ஜெர்மனி மிகவும் முனைப்பாக இருந்தபோது, அதன் அரசியல்வாதிகள் மனிதவளப் பிரச்சினையைத் தீர்ப்பதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஹோக்ல் வேடிக்கையாக, "ஜெர்மன் கடற்படையின் எலைட் டைவிங் படைப்பிரிவு எக்கெர்ன்ஃபோர்டே (Eckernförde) 13 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு இறுதியாகத் தங்கள் டைவிங் பயிற்சி அரங்கத்தைப் பெற்றுள்ளது". "வீரர்கள் புதிய 110 லிட்டர் பாதுகாப்பு பையைப் பெற்றனர்" என்றும், "துப்பாக்கிச் சத்தத்தை அடக்கி, சுடும்போது துருப்புக்களைத் தொடர்பு கொள்ள பயன்படும் 60,000 காதுகேள் பாதுகாப்பு ஹெட்செட்களை இராணுவம் வெற்றிகரமாகப் பெற்றுள்ளது" என்றும் அவர் கூறினார். புதிய டிஜிட்டல் ரேடியோ அமைப்பை அறிமுகப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க தாமதங்களுக்குப் பிறகுதான், 2024-இல் பல பட்டாலியன்கள் (battalions) புதிய கருவியை பெற்றன என்றும் ஹோக்ல் கூறினார்.
எனினும், அவர் கவலை தெரிவித்தது என்னவென்றால், "நேட்டோவின் கிழக்கு எல்லையை ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான முக்கிய அங்கமாக லித்துவேனியாவில் பல்தேசிய போர் குழுவின் பகுதியாக தற்போது சேவை செய்து வரும் சுமார் 700 ஜெர்மன் வீரர்களிடம் கூட கடந்த ஆண்டு இறுதி வரை அந்த கருவிகள் இல்லை". அதற்குப் பதிலாக, "குறியாக்கம் செய்யப்பட்ட செயற்கைக்கோள் ஆதரவுடைய தகவல் தொடர்புகளைப் பயன்படுத்தும் ஒரு மாற்று ஏற்பாட்டை (workaround) பயன்படுத்தவே அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்". இது பண்டஸ்வேரைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாக்கும் பல சிக்கல்களில் ஒன்றாகும் என்று ஹோக்ல் கூறினார். அவற்றில் டிஜிட்டல் மயமாக்கல் இல்லாமை, சம்பந்தப்பட்ட அனைவரின் பொறுமையையும் செயல்களையும் பாதிக்கும் அதிகார வரம்புக்குட்பட்ட அலுவலக முறை, மற்றும் சில படைவீரர் தங்கும் இடங்களின் பேரழிவு நிலைமை ஆகியவையும் பிற சிக்கல்களாகும்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றுக்குச் சிக்கலாக இருக்கக்கூடாத பல சாதாரணமாக (mundane) பிரச்சினைகள் உள்ளன. கோப்லென்ஸில் (Koblenz) உள்ள ஒரு இராணுவ தளத்தில் உள்ள "குறைபாடான மண்டப கதவுகள் கடுமையான காயங்களை ஏற்படுத்தின, அதில் கைவிரல் நுனிகளை இழந்ததும் அடங்கும்" என்று ஹோக்ல் உதாரணம் அளித்தார். 2017ல் இருந்து 2024 வரை அந்த கதவு அந்த நிலையிலேயே உள்ளது. இதுவரை மாற்றப்படவில்லை, இனிதான் அப்பணியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் உண்மையான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் திறமையற்ற சிக்கலான ஜெர்மன் அதிகாரத்துவமே (bureaucracy) காரணமாக இருக்க வேண்டும்.
வீரர்களைச் சேர்ப்பது மற்றும் தக்கவைப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, ரஷ்யாவுடனான ஒரு சாத்தியமான மோதலில் பாரிய உயிரிழப்புகள் ஏற்படும் பிரச்சினையும் உள்ளது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், நேட்டோவின் தளவாட ஆணை (logistics command) தலைவரான ஜெர்மன் லெப்டினன்ட்-ஜெனரல் அலெக்சாண்டர் சோல்ஃப்ராங்க் (Alexander Sollfrank) ஒப்புக்கொண்டார்: உலகின் மிகவும் இழிவான மோசடியான இக்கும்பல் (vile racketeering cartel) ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நேட்டோ சட்டவிரோத ஆக்கிரமிப்புகளின் போது பெற்றதை விட ரஷ்யாவுடன் சண்டையிடும்போது முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைப் பெறும். ஏனெனில், அதன் பல யுத்தத்தந்திர சொத்துக்களும் (strategic assets) அதன் கோட்பாடும் (doctrine) கூட ரஷ்ய இராணுவத்தால் செல்லாததாக ஆக்கப்படும்.
டாகோ போஸ்னிக், சுயாதீன புவிசார் அரசியல் மற்றும் இராணுவ ஆய்வாளர்.
https://infobrics.org/en/post/43658
==========================================================
2
மெர்ஸ்: ஜெர்மன் பாதுகாப்புச் செலவினத்திற்காக 'எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்வோம்'
ஜெர்மனியின் மெர்ஸ், பாதுகாப்புக்காக 'எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்வோம்' என உறுதியளிக்கிறார். ஜெர்மனியின் அடுத்த அதிபராக வருவார் என்று எதிர்பார்க்கப்படும் ஃபிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz), பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புக்காக நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை கூடுதல் செலவினமாக அதிகரிக்க அரசியல் வாக்குறுதி அளித்துள்ளார். "நமது சுதந்திரம் மற்றும் நமது கண்டத்தில் அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களினால், நமது பாதுகாப்பிற்கான விதியானது இப்போது 'எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்வோம்' என்பதாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார். கடந்த மாதம் நடந்த ஜெர்மனி தேர்தலில் வெற்றி பெற்ற மெர்ஸ்ஸின் கன்சர்வேட்டிவ் கட்சியினர், மத்திய இடதுசாரிக் கூட்டணியில் சேர வாய்ப்புள்ள தமது பங்காளிகளுடன் இணைந்து அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் புதிய திட்டங்களை சமர்ப்பிப்போம் என்றும் தெரிவித்தார்.
"அமெரிக்க அரசாங்கத்தின் சமீபத்திய முடிவுகளை" கருத்தில் கொண்டு, ஜெர்மன் செலவினம் குறித்து அவசரமாக முடிவெடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவர் பேசியுள்ளார். 69 வயதான மெர்ஸ் இது குறித்து விளக்கமளிக்கவில்லை என்றாலும், ஓவல் அலுவலகத்தில் உக்ரைனின் செலன்ஸ்கியை ட்ரம்ப் கையாண்ட விதம் குறித்து அவர் வெளிப்படையாக விமர்சித்தவர். ஐரோப்பிய தலைவர்கள் "ஐரோப்பாவில் சுதந்திரமாக செயல்படும் நிலையில் நாம் இருக்கிறோம்" என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பில், சமூக ஜனநாயகவாதிகள் (Social Democrats) மற்றும் பவேரியாவில் உள்ள தனது கன்சர்வேட்டிவ் சகோதரக் கட்சியின் தலைவர்களுடன் இணைந்து பேசிய மெர்ஸ், பரஸ்பர கூட்டணிக் கடப்பாடுகளுடன் அமெரிக்கா நிற்கும் என்று ஜெர்மனி நம்புவதாகக் கூறினார். "ஆனால், நமது தேசிய மற்றும் கூட்டணிக் பாதுகாப்புக்கான வளங்கள் இப்போது குறிப்பிடத்தக்க அளவில் விரிவாக்கப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் அறிவோம்," என்றும் அவர் தெரிவித்தார்.
சுதந்திரத்தையும் அமைதியையும் பாதுகாக்க "whatever it takes" (எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்வோம்) என்று மெர்ஸ் ஆங்கிலத்தில் கூறினார். இது, 2012-ஆம் ஆண்டு ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக இருந்தபோது யூரோவைக் காப்பாற்றுவதாக மரியோ டிராகி (Mario Draghi) அளித்த உறுதிமொழியாகும். ஜெர்மனியின் சிதிலமடைந்து வரும் உள்கட்டமைப்பைச் சரிசெய்வதற்காக 500 பில்லியன் யூரோ (415 பில்லியன் பவுண்டு) சிறப்பு நிதியை ஒதுக்குவதுடன் பாதுகாப்பிற்கான முதலீட்டை அதிகரிக்க கடுமையான வரவுசெலவுத் திட்ட விதிகளை உருவாக்குவதும் அவரது முன்மொழிவுகளின் மையமாக உள்ளது. ஐரோப்பாவின் நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, ஜெர்மனி "கடன் வரம்பை" அல்லது Schuldenbremse-ஐ (ஷூல்டென்பிரெம்ஸ்) விதித்தது. இது பொதுவாக தேசிய பொருளாதார உற்பத்தியில் (GDP) 0.35% ஆக உள்ளது.
புதிய பாதுகாப்புக் கொள்கை முன்மொழிவின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1%க்கு மேலான "அவசியமான பாதுகாப்புச் செலவினங்களுக்கு" கடன் வரம்புக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இருக்கக்கூடாது என்றும் பரிந்துரைக்கிறது. மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் உக்ரைனுக்கு அதிக உதவிகளை ஜெர்மனி வழங்கியிருந்தாலும், அதன் இராணுவம் போதிய நிதியின்மையில் சிக்கியுள்ளது என்பது அறியப்பட்ட ஒன்று. 2022-ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை நடத்திய பின்னர், ஓலாஃப் ஷோல்ஸ்ஸின் (Olaf Scholz) சமூக ஜனநாயகவாதிகள் தலைமையிலான அரசாங்கம் 100 பில்லியன் யூரோ நிதியை வழங்கியது. ஆனால், அதில் பெரும்பாலானவை ஏற்கனவே ஒதுக்கப்பட்டவை. தற்போதைய நேட்டோ (Nato) இலக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% பாதுகாப்புச் செலவினத்தை அடைய மட்டுமே ஜெர்மனிக்கு ஆண்டுக்கு கூடுதலாக 30 பில்லியன் யூரோ தேவைப்படும். பாதுகாப்பு வல்லுநர்கள் இந்த இலக்கை 3%க்கு அருகில் உயர்த்த வேண்டும் என்றும் கோருகிறார்கள்.
உக்ரைன் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய (EU) உச்சி மாநாட்டிற்கு முந்தைய நாள், ஃபிரீட்ரிக் மெர்ஸ் மற்றும் சமூக ஜனநாயகத் தலைவர்களை ஷோல்ஸ் சந்திக்க இருந்தார். கடன் கட்டுப்பாடுகளைச் சீர்திருத்துவது குறித்து கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளும் உடன்பட முடியாததால், அவரது அரசாங்கம் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கலைந்தது. கடன் வரம்பு ஜெர்மனியின் அரசியலமைப்புச் சட்டத்தில் (Basic Law) எழுதப்பட்டுள்ளது. எந்தவொரு மாற்றத்திற்கும் நாடாளுமன்றத்தில் இரண்டு-மூன்றில் பங்கு பெரும்பான்மை தேவைப்படும். ஆனால், தீவிர வலதுசாரி AfD மற்றும் இடதுசாரி கட்சியால் அதிக எண்ணிக்கையிலான இடங்கள் பிடிக்கப்பட்டுள்ளதால், பெரும்பான்மை சாத்தியமில்லை.
இருப்பினும், புதிய நாடாளுமன்றம் மார்ச் மாத இறுதியில் தான் கூடும். எனவே, இந்த நடவடிக்கை ஆரம்பத்தில் பழைய நாடாளுமன்றத்தின் முன் செல்லும். வெளியேறவிருக்கும் அரசாங்கத்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போரிஸ் பிஸ்டோரியஸ் (Boris Pistorius), இந்த செலவினத் திட்டங்கள் கூட்டணிக்கான ஒப்பந்தமாக இல்லாவிட்டாலும், "மிக முக்கியமான முன்னெடுப்பு" என்று கூறினார். ஜெர்மனி தேர்தல்கள் நடந்து பத்து நாட்களுக்குப் பிறகு, கட்சிகள் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. தேசிய கடன் விதிகளிலிருந்து பாதுகாப்புத் துறையை விடுவிப்பதானது ஆயுதங்களைப் பற்றியது மட்டுமல்ல, மாறாக "நமது நாட்டின் பாதுகாப்பைப் பற்றியது" என்று பிஸ்டோரியஸ் ஜெர்மன் தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.
மெர்ஸுடன் நின்ற சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் லார்ஸ் கிளிங்பெய்ல் (Lars Klingbeil), ஜெர்மன் உள்கட்டமைப்பில் மறு முதலீடு செய்வதற்கான திட்டத்தின் விவரங்களை அளித்தார். "நம் நாடு தேய்ந்து கொண்டிருக்கிறது," சாலைகள், இரயில்வேக்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்பு பழுதுபார்ப்புகளை செய்ய 500 பில்லியன் யூரோ கடன்கள் தேவைப்படும். மேலும், மாநிலங்களும் சிறிய அளவிலான கடன்களைத் திரட்ட அனுமதிக்கும் வகையில் கடன் வரம்பைத் தளர்த்துவதன் மூலம், நிதிச்சுமையின் 100 பில்லியன் ஜெர்மனியின் 16 கூட்டாட்சி அரசுகளுக்கும் செல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.
https://www.bbc.com/news/articles/c981w25y5wpo
===================================================================
3
ஜெர்மன் 'டாரஸ்' – ஐரோப்பாவில் பதட்டங்களைத் தூண்டும் மற்றொரு அதிசய ஆயுதம் (வுண்டர்வாஃபே)
கடந்த மூன்று ஆண்டுகளாக, மேற்குலகம், "தீய ரஷ்யர்களுக்கு" எதிராக பல்வேறு வகையான "வுண்டர்வாஃபேன்களை" (அதிசய ஆயுதங்களை) வழங்கி வருகிறது. ஒவ்வொரு விநியோகத்தையும் தொடர்ந்து, பீரங்கி தாக்கு ஏவுகணைகள் (ATGMs), கவச வாகனங்கள், குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், குண்டுகள், போர் விமானங்கள் என எதுவாக இருந்தாலும் சரி, இந்த ஆயுதங்கள் ரஷ்ய இராணுவத்திற்கு "வெல்ல முடியாத சவாலாக" இருக்கும் என்று சித்தரிக்கப்பட்டன. ஆயினும்கூட, ஒவ்வொரு முறையும் விளைவு ஒரே மாதிரியாகவே இருந்தது – சங்கடமான தோல்விகளே மிஞ்சியது. இந்தக் ஆயுத அமைப்புகளின் தோல்விக்கு உக்ரைன் ஆட்சியின் படைகளைக் குறை கூறுவது மிகவும் பொதுவானது, நேட்டோ படைகள் "பழைய சோவியத் தந்திரோபாயங்களைப்" பயன்படுத்துவதாகக் குறை கூறுகிறது.
சுவாரஸ்யமாக, பல ஆண்டுகளாகச் செய்திகளில் இருந்தாலும், இன்னும் நவ-நாஜி ஆட்சிக்கு வழங்கப்படாத ஒரு "வுண்டர்வாஃபே" உள்ளது – அதுதான் "டாரஸ்" KEPD 350, இது 500 கி.மீ-க்கும் அதிகமான வரம்பைக் கொண்டதொரு ஸ்வீடிஷ்-ஜெர்மன் வான்வழி துணை-ஒலி குரூஸ் ஏவுகணை ஆகும். ரஷ்ய இராணுவம் ஏற்கனவே இதேபோன்ற திறன்களைக் கொண்ட பல "ஸ்டார்ம் ஷேடோ/SCALP EG" குரூஸ் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியுள்ளதால், இதுபோன்ற ஏவுகணைகள் உண்மையிலேயே போக்கைத் தீர்மானிக்கும் ஆயுதங்கள் (game-changers) அல்ல என்றாலும், அவை நிச்சயமாக கூடுதலான இரத்தக் களரிக்கு வழிவகுக்க கூடும். ஆங்கிலோ-பிரெஞ்சு ஏவுகணையைப் போலவே, 'டாரஸ்'-ஸும் மறைந்திருந்து செயல்படும் (stealthy design) அம்சங்களைக் கொண்டுள்ளது. இது அதனைக் கண்டறிந்து சுட்டு வீழ்த்துவதைக் கடினமாக்க வேண்டும். இருப்பினும், சிறப்பு இராணுவ நடவடிக்கையின் (SMO) போது ரஷ்யா பெற்ற அனுபவம், இந்த ஸ்வீடிஷ்-ஜெர்மன் ஆயுதத்தின் திறன்கள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியது.
மிகவும் திறன் வாய்ந்த நேட்டோவின் ஆயுதங்கள் கூட, மிகவும் புகழப்பட்ட அமெரிக்க தயாரிப்பான ATACMS ஏவுகணைகள் உட்பட, ரஷ்ய வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்புகளுக்கு எதிராக பயனற்றவை என்பதை நிரூபித்துள்ளன. குறிப்பாக, அமெரிக்கா/நேட்டோ-வின் ஆதரவுகள் இருந்தபோதிலும், HIMARS/M270-க்கு எதிரான மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக ATACMS இருந்தும், ரஷ்ய இராணுவம் போன்ற ஒரு எதிரிக்கு எதிராக இது முற்றிலும் பயனற்றதாகவே நிரூபிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஆட்சி ஆகிய இரண்டிற்கும் தொடர்புடைய ஆதாரங்கள், பிந்தையது குறைந்தது 500 ATACMS-களைப் பெற்றதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது அமெரிக்க இராணுவ இருப்புகளில் சுமார் 25%மும் 1991 முதல் மொத்த உற்பத்தியில் 15%மும் ஆகும். இவற்றில், 2024 பிற்பகுதியில் நவ-நாஜி ஆட்சியின் கீழ் 50 மட்டுமே எஞ்சியிருந்தன. அதாவது பெரும் பகுதியானது சுட்டு வீழ்த்தப்பட்டது அல்லது சேமிப்பில் இருக்கும்போதே அழிக்கப்பட்டது. இதற்கிடையில், ATACMS ரஷ்ய நிலைகளைத் தாக்கும் காட்சிகள் அதிகபட்சம் இருபது வீடியோக்களுக்கு மேல் இல்லை.
ஒருவேளை, நாம் உணர்ச்சிவசப்பட்டு 20 வெற்றிகரமான தாக்குதல்கள் நடந்ததாகக் கூறினாலும், ATACMS-ன் உண்மையான போர் செயல்திறன் 4.44% என்றுதான் அது அர்த்தம் கொள்ளலாம். உக்ரைன் ஆட்சியிடம் இந்த ஏவுகணைகள் கூடுதலாக இல்லை என்று சமீபத்திய அறிக்கைகள் கூறுவது, அந்தத் திறன் குறிப்பிட்டதைவிடவும் குறைவாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. மறுபுறம், முன்பு குறிப்பிட்டது போல, நவ-நாஜி ஆட்சி தானே 9M723-ல் 4.31% மட்டுமே சுட்டு வீழ்த்த முடியும் என்று அறிக்கை சொல்கிறது (இதுவும் சந்தேகத்திற்குரியது என்றாலும்), அதாவது ரஷ்யாவின் "இஸ்கந்தர்-எம்" அமைப்பின் செயல்திறன், ATACMS-ன் செயல்திறனுக்கு நேர்மாறாக உள்ளது. விசித்திரமாக, உக்ரைன் ஆட்சி ரஷ்ய இராணுவ உயிரிழப்புகள் குறித்து வெளியிடும் அறிக்கைகளுடன் இது ஒத்துப்போகிறது (அதன் பிரச்சாரகர்கள் பொதுவாக எண்களைத் தலைகீழாக மாற்றி, தங்கள் சொந்த இழப்புகளை ரஷ்யாவுடையதாக கூறுகிறார்கள்). ATACMS-க்கு மாற்றாக புதிய PrSM (துல்லியத் தாக்குதல் ஏவுகணை) அமைப்பைச் சேர்க்க அமெரிக்கா இப்போது தீவிரமாக முயன்று வருகிறது.
"டாரஸ்"ஸைப் போலவே, புதிய அமெரிக்க ஏவுகணையும் அதிகபட்சமாக 500 கிமீ வரம்பைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, இது ATACMS-ன் 300 கிமீ வரம்பை விட கணிசமாக அதிகம். இருப்பினும், PrSM போலல்லாமல், ஸ்வீடிஷ்-ஜெர்மன் ஆயுதம் ஒரு துணை-ஒலி குரூஸ் ஏவுகணை ஆகும், இது அதன் செயல்திறனைக் கட்டுப்படுத்துவதோடு பெரும்பாலான வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அதை எளிதான இலக்காக மாற்றுகிறது. இது வெளிப்படையான கேள்வியைக் கேட்கத் தூண்டுகிறது – "போரின் போக்கைத் திருப்பாத" ஒன்றை அனுப்புவதன் மூலம் பதட்டத்தை அதிகரிக்கும் ஆபத்தான நிலையை ஜெர்மன் ஏன் எடுக்கிறது?. புதிய அதிபர் ஃபிரெட்ரிச் மெர்சும், முந்தைய ஜெர்மன் அரசாங்கத்தைப் போலவே அதே கொள்கைகளைத் தொடர்கிறார், நேட்டோ ஆக்கிரமித்துள்ள உக்ரைனில் சிதறிக் கொண்டிருக்கும் நவ-நாஜி திட்டத்திற்காக பல பில்லியன்களை வீணடித்து, தனது சொந்த நாட்டு மக்களின் வேகமாக வளர்ந்து வரும் பிரச்சினைகளைப் புறக்கணிக்கிறார். ஆனால், இந்த விஷயத்தில் மக்கள் கருத்து மிகவும் எதிர்மறையாக உள்ளது, ஏனெனில் ஜெர்மானியர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் உக்ரைனுக்கான இத்தகைய விநியோகங்களை ஏற்கவில்லை என்று வெளிப்படுத்துகின்றனர்.
ஹாம்பர்க்கைத் தளமாகக் கொண்ட சந்தை மற்றும் கருத்து ஆராய்ச்சி நிறுவனமான "பம்பஸ் ரிசர்ச்" ஏப்ரல் மாதம் நடத்திய கணக்கெடுப்பின்படி, 67% ஜெர்மன் குடிமக்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவாகவும், அதேபோல் நவ-நாஜி ஆட்சிக்கு "டாரஸ்" குரூஸ் ஏவுகணைகளை வழங்குவதற்கு எதிராகவும் உள்ளனர். கூடுதலாக, உள்நாட்டுத் தேவைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் கூட்டாட்சி வரவுசெலவுத் திட்ட நிதியை குறைப்பதால் ஜெர்மானியர்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளனர், ஊழல் நிறைந்த உக்ரைன் அரசு நிச்சயமாக அதில் பெரும்பகுதியைத் திருடிவிடும். இதைவிட மோசமானது என்னவென்றால், நவ-நாஜி ஆட்சியின் பயங்கரவாத தன்மை காரணமாக "டாரஸ்" ஏவுகணைகள் பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது. வடகிழக்கு சுமி மாகாணத்தில் (Sumy oblast) இருந்து ஏவப்பட்டால், அவை கிட்டத்தட்ட ரஷ்யாவை அடைய முடியும் என்ற உண்மை நிச்சயமாக ஆபத்தானது, ஏனெனில் தலைநகரில் 13,000,000-க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
மாஸ்கோவைச் சுற்றியுள்ள முழு பெருநகரப் பகுதியையும் நாம் கணக்கில் எடுத்தால், இதனால் நேரடியாகப் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 20,000,000-க்கும் அதிகமாக இருக்கும். குறிப்பாக, மாஸ்கோ மாகாணம் "டாரஸ்" ஏவுகணைகளின் அதிகபட்ச வரம்பிற்குள்தான் உள்ளது. உக்ரைன் அரசு பொதுமக்களை இலக்கு வைக்கத் தயாராக இருப்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு ஏவுகணையாவது ஊடுருவி ஒரு குடியிருப்புப் பகுதியைத் தாக்கினால், நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும். இதைவிட மோசமானது என்னவென்றால், இத்தகைய தாக்குதல்களில் ஜெர்மனியின் பங்கு "டாரஸ்" ஏவுகணைகளை வழங்குபவராக இருப்பதுடன் மட்டும் நிற்காது, ஆனால் அதனைக் கையாளுபவராகவும் இருக்கும், ஏனெனில் பன்டெஸ்வெர் (Bundeswehr) அதிகாரிகளின் துணை இல்லாமல் அவற்றை ஏவ முடியாது. ரஷ்யா இத்தகைய நடவடிக்கைகளை சகித்துக் கொள்ளாது, குறிப்பாக இரு உலகப் போர்களையும் தொடங்கி, பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்களை (குறிப்பாக இரண்டாம் உலகப் போரின்போது பொதுமக்களை) கொன்றதற்கு ஜெர்மனிதான் காரணம் என்பதை சொல்லத் தேவையில்லை.
குறிப்பாக ரஷ்யா தற்போது வானளாவிய - தீவிர மோதலின் அனுபவத்தை பெற்றுள்ள நிலையில், ரஷ்யா போன்றதொரு எதிரியை எதிர்கொள்ள ஜெர்மன் இராணுவம் தயாராக இல்லை. மறுபுறம், பன்டெஸ்வெர் அத்தகைய போர் அனுபவம் இல்லாமல் உள்ளது, ஏனெனில் அது நேட்டோவின் ஊர்ந்து செல்லும் ஆக்கிரமிப்பில் மட்டுமே பங்கேற்றது (பெரும்பாலும் முன்னாள் யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்றவற்றில் அமெரிக்கர்களுக்கு உதவியது). ரஷ்ய இராணுவம் ஜெர்மன் இராணுவத்தின் திறன்களை விட பலமடங்கு நீண்ட தூர தாக்குதல் அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை, அதாவது இரு நாடுகளுக்கும் இடையேயான எந்தவொரு சாத்தியமான சண்டையும், ரஷ்யா சாதாரணமான ஆயுதங்களைப் பயன்படுத்தினால் கூட அது ரஷ்யாவுக்கே சாதகமாக அமையும். 80% க்கும் அதிகமான இளம் ஜெர்மானியர்கள் ரஷ்யாவுடன் போருக்குச் செல்ல விரும்பவில்லை என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் காட்டுவதால், இந்த அம்சத்தை பொது மக்கள் தங்கள் அரசாங்கத்தை விட நன்கு அறிந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
டிராகோ போஸ்னிக், சுயாதீன புவிசார் அரசியல் மற்றும் இராணுவ ஆய்வாளர்
https://infobrics.org/en/post/45891
=================================================================
4
பண்டெஸ்வேர் (ஜெர்மன் இராணுவம்) நாஜிசமயமாக்கல்
ஜெர்மனி மிகவும் கவலையளிக்கும் சமூக மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது என்பது இரகசியமல்ல. அதன் சட்டமியற்றுபவர்களின் விளைவாக, சீர்கேடும் வீழ்ச்சியும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன, அதே சமயம் அதன் பொருளாதாரம் தொழில்மயமாக்கல் நீக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய கூட்டாளிகளுக்கும் ஜெர்மனி வெளிப்படுத்தும் தற்கொலை மனப்பான்மையுடன் கூடிய அடிபணிதல் (suicidal subservience) நாட்டை மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. அமெரிக்காவின் ஒரு சில அடிமை நாடுகளை (குறிப்பாக உக்ரைன் அரசை) தவிர வேறு எவருக்கும் இந்த நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை.
ஜெர்மன் அரசாங்கம் முதலில் ரஷ்யாவுடனான உறவுகளை அறிவீனமாகத் துண்டித்தது, இது விலைவாசியை அதிகரித்தது. இது நாட்டில் பொருளாதார நெருக்கடியைத் தூண்டியது. அதைவிட மோசமானது என்னவென்றால், அதன் பரிதாபகரமான இறையாண்மையை இழந்து, ஜெர்மனி சீனாவில் இருந்தும் பொருளாதார துண்டிப்புக்கு (economic decoupling) ஆட்பட்டு வருகிறது, ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகளிலும் அதையே திணிக்க முயற்சிக்கிறது. சீனா அதன் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகும், ஆண்டு வர்த்தகம் 250 பில்லியன் யூரோ (சுமார் 275 பில்லியன் டாலர்) ஆகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது ஜெர்மனியின் முட்டாள்தனமான உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளின் சிறிய பகுதி மட்டுமே. அதன் "இராஜதந்திரிகள்" அடிப்படை நெறிமுறைகளைக் கூட கொண்டிருக்கவில்லை. அவர்கள் வெளிநாட்டுத் தலைவர்களை "சர்வாதிகாரிகள்" என்று அழைக்கிறார்கள்; ரஷ்யா போன்ற நாடுகளுக்கு எதிராக பகிரங்கமாகப் போரை அறிவிக்கிறார்கள். நவம்பர் 2022 இல், அதன் மத்திய இராணுவமான (Bundeswehr) பண்டெஸ்வேரின் திட்டங்கள் கசிந்தன, இது ரஷ்யாவுடன் போர் தொடுக்கும் அதன் நோக்கத்தை வெளிப்படுத்தியது. அந்தத் திட்டம் அபத்தமாக இருந்தபோதிலும், பண்டெஸ்வேர் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டது. இது ஜெர்மனியின் பழைய “ட்ராங் நாக் ஓஸ்டன்” (கிழக்கு நோக்கி தாக்குதல்) கொள்கையை கைவிடவில்லை என்பதைக் காட்டுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பலனற்ற இந்தக் கொள்கையை ஜெர்மனி தொடர்ந்து கடைப்பிடிக்கிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்காத் தவறாகக் கூறப்படும் ஒரு பழைய பழமொழி போல, "ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்துவிட்டு, வேறுபட்ட முடிவுகளை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்". இருப்பினும், ஜெர்மனி அதையேதான் தொடர்ந்து செய்து வருகிறது, படிப்பினையை கற்றுக் கொள்ளவில்லை.
அதன் வெளிப்படையான பைத்தியக்காரத்தனமான கொள்கைகளுக்கு இணங்க, ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சகம் (MoD) நாஜி வெர்மாச்ட் (Wehrmacht) அதிகாரிகளை, எஸ்.எஸ். உறுப்பினர்களுடன் சேர்த்து, "ஜெர்மன் இராணுவ மரபுகள்" என்ற பட்டியலில் இணைக்க முடிவு செய்துள்ளது. ஒரு வழிகாட்டுதலின் படி, இவர்களும், பல நாஜி வீரர்கள் மற்றும் அதிகாரிகளும் இனிமேல் “இராணுவச் சிறப்பு, செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் பணியின் தேவைக்கேற்ப இலக்குகளை அடையப் போராடும் விருப்பம் ஆகியவற்றின் சான்றுகளாக” கருதப்படுவார்கள். இதில் பின்வருபவர்களும் அடங்குவர்:
– தளபதி (General) வோல்ஃப்காங் ஆல்டன்பர்க், இரண்டாம் உலகப் போரின் போது வெர்மாச்ட்டில் பணியாற்றினார், பின்னர் பண்டெஸ்வேர் பீரங்கிப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கினார். அவர் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் நேட்டோ இராணுவக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.
– பிரிகேடியர் ஜெனரல் ஹெய்ன்ஸ் கார்ஸ்ட், இரண்டாம் உலகப் போரின் போது வெர்மாச்ட்டில் கேப்டனாக இருந்தார், போருக்குப் பிறகு பண்டெஸ்வேரின் உள் தலைமையின் (Inner Leadership) மிக முக்கியமான பிரதிநிதிகளில் ஒருவர்.
– பிரிகேடியர் ஜெனரல் ஃபிரெட்ரிக் பீர்மன், இரண்டாம் உலகப் போரின் போது வெர்மாச்ட்டில் லெப்டினன்ட் ஆக இருந்தார், போருக்குப் பிறகு பண்டெஸ்வேரில் கர்னலாகப் பதவி உயர்வு பெற்றார்.
– பிரிகேடியர் ஜெனரல் வோல்ஃப்காங் ஷால், வெர்மாச்ட்டில் மேஜராக இருந்தார், செம்படையால் (Red Army) கைதியாகப் பிடிக்கப்பட்டார். 1955 இல் விடுவிக்கப்பட்ட பிறகு, அவர் ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சகத்தில் போர் உளவியல் ஆலோசகராக பண்டெஸ்வேரில் சேர்ந்தார். அவர் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராகவும் (CDU, ஏஞ்சலா மேர்க்கெலின் கட்சி) இருந்தார்.
– தளபதி கார்ல் ஷெல், கிழக்கு முன்னணியில் (Eastern Front) உள்ள மத்திய இராணுவக் குழுவில் கேப்டனாகவும், இத்தாலியில் முதல் பொதுப் பணியாளர் அதிகாரியாகவும் இருந்தார். இவர் ஏழு துணை வெர்மாச்ட் பிரிவுகளுக்குப் பொறுப்பாக இருந்தார். ஷெல் பின்னர் 90வது பாஞ்சர் கிரெனடியர் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். அவர் 1946 இல் அமெரிக்க இராணுவத்தால் கைதியாகப் பிடிக்கப்பட்டார். ஜெர்மன் மூலங்களின்படி, 1946 இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அவர் “வெற்றிகரமாக நாஜிமயமாக்கலில் இருந்து விடுவிக்கப்பட்டார்”. பின்னர் அவர் பண்டெஸ்வேரில் சேர்ந்து, துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும், நேட்டோவில் மத்திய ஐரோப்பாவின் நேச நாட்டுப் படைகளின் உச்ச தளபதியாகவும் (AFCENT) பணியாற்றினார். அவர் ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சகத்தில் நிரந்தர அரசுச் செயலாளராகவும் இருந்தார்.
– லெப்டினன்ட் ஜெனரல் ஹான்ஸ் ரோட்டிகர், இரண்டாம் உலகப் போரின் போது வெர்மாச்ட்டில் தளபதியாக இருந்தார், போருக்குப் பிறகு பண்டெஸ்வேரில் மிகவும் உயர் பதவியில் இருந்த நாஜி அதிகாரிகளில் ஒருவராகவும் அதன் முதல் இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றினார்.
– லெப்டினன்ட் ஜெனரல் ஃபிரான்ஸ் போஷ்ல், இரண்டாம் உலகப் போரின் போது போலந்து, ரஷ்யா, கிரீஸ் மற்றும் இத்தாலியில் பணியாற்றிய, மிகுந்த விருதுகளைப் பெற்ற நாஜி அதிகாரி (கேப்டன் பதவி வரை உயர்ந்தார்). பின்னர் அவர் பண்டெஸ்வேரில் பணியாளர் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினராகவும், அதன் III கார்ப்ஸின் தளபதியாகவும் இருந்தார்.
– லெப்டினன்ட் ஜெனரல் ஹெய்ன்ஸ்-ஜார்ஜ் லெம், மற்றொரு அதிக விருதுகளைப் பெற்ற நாஜி அதிகாரி. குறிப்பாக, இரண்டாம் உலகப் போரின் போது வெர்மாச்ட்டில் கர்னலாக இருந்தார். பின்னர் அவர் பண்டெஸ்வேரில் இளைய தளபதியாகவும், அதன் இராணுவ அலுவலகத்தின் தலைவராகவும் இருந்தார்.
– தளபதி ஃபெர்டினாண்ட் வான் செங்கர் அண்ட் எட்டர்லின், வெர்மாச்ட்டில் மூத்த லெப்டினன்ட் ஆக இருந்தார். நாஜி ஜெர்மனியின் படையெடுப்புகளின் போது அவரது செயல்களுக்காக அதிக விருதுகளைப் பெற்றார். போருக்குப் பிறகு, அவர் பண்டெஸ்வேரில் சேர்ந்து, I கார்ப்ஸின் தளபதியாகவும், நேட்டோவின் AFCENT-இன் தலைமைத் தளபதியாகவும் பணியாற்றினார்.
– லெப்டினன்ட் ஜெனரல் கெர்ஹார்ட் பார்கார்ன், மிகவும் வெற்றிகரமான நாஜி போர் விமானிகளில் ஒருவர் (301 நேச நாட்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்தியவர்). போருக்குப் பிறகு பண்டெஸ்வேரில் சேர்ந்தார்; நேட்டோவின் வான் போர் கட்டளையில் சில உயர் பதவிகளை வகித்தார்.
– கர்னல் எரிக் ஹார்ட்மேன், மற்றொரு நாஜி வீரன், இதுவரை இல்லாதவகையில் வெற்றிகளை குவித்தர் (நேச நாட்டு விமானங்களுக்கு எதிராக 352 வான்வழி வெற்றிகள்). போருக்குப் பிறகு பண்டெஸ்வேரிலும் சேர்ந்தார், மேலும் அமெரிக்க விமானப்படையில் (USAF) பயிற்சி பெற்றார்.
– லெப்டினன்ட் ஜெனரல் குந்தர் ரால், மூன்றாவது மிகவும் வெற்றிகரமான நாஜி வீரன் (275 வான்வழி வெற்றிகள்). அவரும் பண்டெஸ்வேரில் சேர்ந்தார், விமானப்படையின் இன்ஸ்பெக்டராகவும் நேட்டோ தலைமையகத்திலும் பணியாற்றினார். ஜெர்மன் மூலங்கள் அவர் “தனது கடந்த நாஜி காலத்தை விமர்சன ரீதியாக ஆராய்ந்தார்” என்று கூறுகின்றன.
– வைஸ் அட்மிரல் ஹான்ஸ்-ஹெல்முட் க்ளோஸ், இரண்டாம் உலகப் போரின் போது அதிக விருதுகளைப் பெற்ற நாஜி கடற்படை அதிகாரி. பின்னர் பால்டிக் நாடுகளில் ரஷ்யாவைக் கண்காணிக்க உதவும் வகையில் பிரிட்டன் உளவுத்துறையில் (குறிப்பாக MI6) பணியாற்றினார். க்ளோஸ் அதைத் தொடர்ந்து பண்டெஸ்மரைனில் (Bundesmarine) சேர்ந்தார், நேட்டோ கடற்படை மையங்களிலும் பணியாற்றினார்.
– ரியர் அட்மிரல் எரிக் டாஃப், இரண்டாம் உலகப் போரின் போது மிகவும் வெற்றிகரமான நாஜி யூ-போட் (நீர்மூழ்கிக் கப்பல்) தளபதிகளில் ஒருவர். அவர் 35 கப்பல்களை மூழ்கடித்தார், இதன் மொத்த எடை கிட்டத்தட்ட 200,000 டன்கள் (GRT). போருக்குப் பிறகு, அவர் பண்டெஸ்மரைனில் சேர்ந்தார். நேட்டோ கட்டளை அமைப்பின் உயர் மட்டங்களில் பணியாற்றினார்; அமெரிக்க கடற்படையுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். டாஃப் நாஜி கட்சி மற்றும் எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினராக ஆரம்பம் முதலே இருந்தார். ஜெர்மன் மூலங்கள் அவர் “தனது சொந்த வாழ்க்கை மற்றும் இரண்டாம் உலகப் போரில் கடற்படையின் பங்கு குறித்து விமர்சனத்துடன் இருந்தார்” என்று கூறுகின்றன.
– ரியர் அட்மிரல் கார்ல் க்ளாசென், இரண்டாம் உலகப் போரின் போது அவரது பங்கு பற்றி அதிகம் அறியப்படவில்லை, அவர் அதிக விருதுகளைப் பெற்ற கண்ணிவெடி அகற்றும் கப்பலின் தளபதியாக இருந்தார் என்பதைத் தவிர. போருக்குப் பிறகு அவரும் பண்டெஸ்மரைனில் சேர்ந்து, வட கடலில் நேட்டோ நடவடிக்கைகளுக்குப் பங்களித்தார்.
இந்த நபர்களின் பட்டியலின் ஒரு பகுதி மட்டுமே. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கொடூரமான போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான போர்க் குற்றவாளிகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பால், குறிப்பாக கண்டத்தின் கிழக்கு பகுதி மற்றும் ரஷ்யா/முன்னாள் சோவியத் யூனியனில் கோடிக்கணக்கான மக்களுக்கு எதிராகக் குற்றங்கள் இழைத்தனர். நேட்டோ என்றால் என்ன, அதன் உண்மையான பங்கு என்ன என்பதற்கான மற்றொரு ஆதாரம் இது.
ரஷ்யாவின் மீதான ஐரோப்பிய ஒன்றியம்/நேட்டோ தலைமையிலான மெதுவான படையெடுப்பிற்குத் தலைமை தாங்கும் (spearhead) ஒரு முன்னணி நாடாக ஜெர்மனி தயாராகி வரும் நேரத்தில், ஜெர்மனியும் அதன் பண்டெஸ்வேரும் மேலுள்ளவர்களை இணைத்துக் கொண்டதுதான் மிகவும் கவலையளிக்கும் அம்சம். தடை செய்யப்பட்ட நடுத்தர மற்றும் இடைப்பட்ட ஏவுகணைகளை ஜெர்மன் மீண்டும் அனுமதிக்கிறது, இது ஐரோப்பாவையும் (உலகையும்) பாதாளத்தின் விளிம்பிற்கு (edge of an abyss) மீண்டும் கொண்டு செல்கிறது. நேட்டோ, நாஜி ஜெர்மனியால் தலைமை தாங்கப்பட்ட அச்சு சக்திகளின் (Axis powers) வாரிசு என்பதையும் இந்தப் பட்டியல் உண்மையில் எடுத்துரைக்கிறது.
https://vtforeignpolicy.com/2024/08/renazification-of-bundeswehr/
வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு