தியான்ஜினில் ஷீ ஜீன்பிங்குடன் மோடி சந்திப்பு
எல்லைப் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதற்கும் இருநாட்டு பொருளாதார உறவுகள் பலப்படுத்துவதற்கும் உறுதியேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தியான்ஜினில் சந்தித்துப் பேசினார். அவர்களது ஆலோசனைகள் எல்லைப் பிரச்சனைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண்பது குறித்தும், வர்த்தக ஒத்துழைப்பு, பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இந்தியா-சீனா உறவுகளின் வளர்ச்சி ஆகிய முக்கிய அம்சங்களைச் சுற்றியே அமைந்திருந்தன.
1. 2018-க்குப் பிறகு மோடியின் முதல் வருகை
பிரதமர் மோடி, ஏழு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக சனிக்கிழமை அன்று தியான்ஜின் நகரை வந்தடைந்தார். ஞாயிற்றுக்கிழமை, அவர் SCO மாநாட்டின் இடைவெளியில் ஷி ஜின்பிங்கைச் சந்தித்து இருதரப்பு உறவுகள், எல்லைப் பிரச்சினைகள், உலக வர்த்தகம் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு குறித்து உரையாடினர். இந்தியாவும், சீனாவும் தங்களது கருத்து வேறுபாடுகளை நேர்மையாகவும், நடுநிலையாகவும் கையாள்வதுடன், மோதலைத் தவிர்த்து ஒத்துழைப்பையே நாட வேண்டும் என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
2. எல்லையில் அமைதி திரும்புவதற்கான உறுதிப்பாடு
எல்லைப் பிரச்சினையைத் தீர்க்கும் தங்கள் உறுதிப்பாட்டைப் பிரதமர் மோடியும் ஷி‘யும் மீண்டும் உறுதிப்படுத்தினர். கருத்து வேறுபாடுகள் பூசல்களாக (தகராறுகளாக) உருவெடுக்கக் கூடாது என்பதில் ஒருமித்தக் கருத்தை வெளிப்படுத்தினர். கடந்த ஆண்டு எல்லையில் துருப்புக்கள் விலக்கப்பட்டதை இரு தலைவர்களும் மனமுவந்து வரவேற்றனர். எல்லைப் பகுதிகளில் நிலவும் அமைதியும் சுமுகமான சூழலும் இருநாட்டின் ஒட்டுமொத்த உறவை வலுப்படுத்த இன்றியமையாத அடித்தளமாகும் என்று அவர்கள் வலியுறுத்திக் கூறினர்.
3. போர்த்தந்திர கூட்டணி
இந்தியாவும், சீனாவும் வளர்ச்சிக்கான கூட்டாளிகள்தானே தவிர, போட்டி நாடுகள் அல்ல என்பதை இரு நாட்டுத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். அமெரிக்காவின் சுங்க வரிக் கொள்கைகளால் உலகப் பொருளாதாரம் நிலைகுலைந்திருக்கும் இந்த வேளையில், உலக வர்த்தகத்தை ஆதரிக்க வேண்டிய தங்களின் பொறுப்பு குறித்து அவர்கள் விவாதித்தனர். இந்தியா-சீனா உறவுகளில் அந்நிய சக்திகளின் தலையீடு இருக்கக் கூடாது என்பதை மோடியும் ஷி’யும் அழுத்தமாகக் குறிப்பிட்டனர். பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம் மற்றும் பல்துருவ உலகை ஆதரிக்கும் அமைப்புகளில் ஒத்துழைப்பை விரிவாக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
4. அண்மைக் கால முன்னேற்றத்தின் மீளாய்வு
2024-ல் கசானில் நடந்த இரு தலைவர்களின் கடைசிச் சந்திப்புக்குப் பிறகு ஏற்பட்ட முன்னேற்றத்தை அவர்கள் மீளாய்வு செய்தனர். சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்களை இருவரும் வரவேற்றனர். எல்லைப் பகுதியில் அமைதி நிலைத்திருப்பதால், இருதரப்பு உறவுகள் அர்த்தப்பூர்வமான பாதையில் முன்னேறி வருவதாக மோடி தெரிவித்தார். தியான்ஜின் சந்திப்பு ஆரோக்கியமான, நிலைத்தன்மையுடன் கூடிய உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என ஷி ஜின்பிங் நம்பிக்கை தெரிவித்தார்.
5. SCO மற்றும் BRICS ஒத்துழைப்பு
சீனாவின் SCO தலைமைப் பொறுப்பிற்கு மோடி தனது ஆதரவை வழங்கினார், மேலும் 2026-ல் இந்தியா நடத்தவிருக்கும் BRICS மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஷி‘க்கு அழைப்பு விடுத்தார். ஷி அழைப்பை ஏற்றுக்கொண்டதுடன், இந்தியாவின் BRICS தலைமைக்கு சீனாவின் ஆதரவை உறுதியளித்தார். தியான்ஜினில் நடைபெற்ற SCO மாநாட்டில் ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் பல யூரேசிய நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். மோடியின் ஆலோசனைகள் முக்கியமாக பிராந்தியப் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் பல்துருவ உலகை ஆதரிக்கும் அரங்குகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன.
6. உலக வர்த்தகத்தின் மீதான கவனம்
உலக வர்த்தகத்தின் ஸ்திரத்தன்மைக்குத் தங்களது பொருளாதாரங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதை இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். இந்தியா மற்றும் சீனாவில் வாழும் 280 கோடி மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே தங்களின் கடமை என்பதை மோடி வலியுறுத்திக் கூறினார். பொருளாதார மேம்பாடே இருதரப்பு உறவுகளுக்குரிய நிரந்தர அடித்தளமாக அமைய வேண்டும் என்று ஷி குறிப்பிட்டார். நீண்ட கால ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவதற்கும், உலக வர்த்தகத்தில் ஒற்றை மேலாதிக்கத்திற்கும் எதிராக பலதரப்புக் கொள்கையை நிலைநிறுத்துவதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
7. பிற நாடுகளின் இருதரப்புச் சந்திப்புகள்
உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, ஷி ஜின்பிங் மாலத்தீவுகள், அஜர்பைஜான், கிர்கிஸ்தான் மற்றும் பெலாரஸ் நாட்டுத் தலைவர்களையும் சந்தித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஞாயிற்றுக்கிழமை உச்சி மாநாட்டில் பங்கேற்றார். 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட எல்லை மோதல்களுக்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடைபெற்ற முதல் உயர் மட்ட பங்கேற்பாக மோடி - ஷி’யுடனான உரையாடல் அமைந்தது. அவர்களின் கலந்துரையாடல்களில் வர்த்தகம், நேரடி விமானச் சேவை மட்டுமல்லாது எல்லையோர நிர்வாகம் ஆகியவை இடம்பெற்றன.
8. பிராந்தியப் பாதுகாப்புக்கான உரையாடல்
தெற்காசியாவில் பாதுகாப்பு நிலைமை, பயங்கரவாதம் மற்றும் பிராந்திய நிலைத்தன்மை குறித்து இரு தலைவர்களும் பேசினர். தங்களது சிறப்புப் பிரதிநிதிகளுக்கு இடையேயான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். நீண்ட காலப் பரஸ்பர நலன்களை மனதில் கொண்டு, அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் கருத்து வேறுபாடுகளைக் கையாள வேண்டும் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். SCO மற்றும் அதனுடன் தொடர்புடைய தளங்கள் மூலம் தங்களது ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதாக இருநாட்டுத் தலைவர்களும் ஒருமனதாக தெரிவித்தனர்.
9. பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்
நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கவும், எல்லை வர்த்தகம், புனித யாத்திரைகளை அதிகரிக்கவும் மோடியும் ஷி’யும் சம்மதம் தெரிவித்தனர். மக்கள் நடமாட்டம் மற்றும் வணிகத்தின் மீதான கட்டுப்பாடுகளைக் குறைப்பதற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். எதிர்கால உறவுகள் போட்டியையோ மோதலையோ சார்ந்திராமல், மாறாக ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று தலைவர்கள் எடுத்துக் காட்டினர்.
10. உச்சி மாநாடும் அதன் எதிர்காலப் பார்வையும்
தியான்ஜினில் நடைபெறும் SCO உச்சி மாநாடு 20க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்புடன் திங்கட்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும். மோடி - ஷி சந்திப்பு, இப்பிராந்தியத்தில் ஒத்துழைப்புக்கான முன்மாதிரியை உருவாக்கியது. ரஷ்ய அதிபர் புதினும் இரு நாட்டுத் தலைவர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தைகள் நடத்தத் திட்டமிட்டுள்ளார். உரையாடல், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் இந்தியா தீவிரமாகப் பங்காற்றியதுடன், இந்த உச்சி மாநாடு சீனாவின் பிராந்திய அளவிலான இராஜதந்திரச் செல்வாக்கை வெளிப்படுத்தியது.
விஜயன் (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு