அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தப்பட வேண்டிய நபர்கள் எல்லாம் அறிவாலயத்தை நோக்கி வந்து கொண்டுள்ளனர்!
சாவித்திரி கண்ணன்
பிரேமலதா, ஒபிஎஸ் போன்றவர்கள் இந்த தேர்தலுக்கு பிறகு அரசியலில் இருந்தே முற்றிலும் இல்லாமல் போவது தமிழக நலன்களுக்கு நல்லது என உறுதிபட நம்புகிறவன் நான்!
நேற்றுத் தான் தேமுதிக வந்தது. இது 2021 சட்டமன்றத் தேர்தலில் 0.43 % வாங்கிய கட்சி! அதாவது அரை சதவிகிதத்திற்கும் கீழ் உள்ள கட்சி! அதுவும் கேப்டன் உயிரோடு இருக்கும் போதே, இளைத்து துரும்பாகிப் போன கட்சி.
தகுதிக்கு மீறிப் பேராசைப்படும் பிரேமலதாவை அதிமுக – பாஜக கூட்டணியே அலட்சியமாக விட்டுவிட்ட நிலையில், திமுக அரவணைத்து, ஆயுசு முடியக் கூடிய நேரத்தில் ஆக்சிஜன் தருவது போல கூட்டணி கண்டது.
மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கே தகுதியற்ற அந்தக் கட்சிக்கு ஆறேழு இடங்கள் என்று சில ஊடகங்களும், இல்லையில்லை 10 +1 என மற்ற சில ஊடகங்களும் எழுதின…!
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட்டு தருவது என்பது அது பாஜகவை பலப்படுத்தவே பயன்படும்.
எந்த பதவியிலும் இல்லாத போதே பாஜகவின் சி.ஏ.ஏ தொடங்கி ஜி.எஸ்டி வரை அனைத்தையும் ஆதரித்ததோடு, சனாதன சர்சையில் கூட இந்துத்துவ பிற்போக்கு சக்திகளுக்கு துணை போனவர் தான் பிரேமலதா!
இன்னைக்கு என்னடாவென்றால், பிரேமலதாவைக் காட்டிலும் பெரிய அரசியல் அனாதையான ஒ.பி.எஸ் வந்துள்ளார். …!
தன் மகனைத் தவிர, தன்னுடன் யாருமில்லாத அனாதையான ஒ.பி.எஸ் வந்து தான் திமுக கூட்டணி பலம் பெற வேண்டுமா…? திமுக கூட்டணிக்குள் வந்தாலுமே கூட ஒ.பி.எஸ் என்றென்றும் பாஜகவின் பாதம் தாங்கியாகவும், மோடி பக்தராகவும் தான் இருப்பார்…என்பது திமுக தலைமைக்கு தெரியாதா என்ன?
ஏற்கனவே லெட்டர்பேடு கட்சி நடத்தினாலும், ஓரளவு தனிப்பட்ட செல்வாக்குள்ள கமலஹாசன் திமுக கூட்டணிக்குள் வந்துவிட்டார்.
இன்னும் அடையாளம் அழிந்து போனவர்கள் யார், யாரெல்லாம் வரப் போகிறார்களோ…?
அரசியல் அனாதைகளின் கடைசி புகலிடமா திமுக!
இப்படியே துண்டு, துக்கடா கட்சிகளையெல்லாம் கூட்டணிக்குள் ’அக்காமடேசன்’ செய்து கொண்டே போவது திமுகவின் பலவீனமாகப் பார்க்கப்படும் என்பது ஒருபுறமிருக்க, திமுகவில் உள்ளவர்களுக்கான நியாயமான வாய்ப்புகளை வழங்கமுடியாத சூழல் உருவாகி கட்சியையே பலவீனப்படுத்திவிடும்.
சாவித்திரி கண்ணன்
https://www.facebook.com/100000227053317/posts/34908193875438070/?rdid=gdFFggsHIAnksdnd
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு