நாடாளுமன்றத்தில் பங்கேற்பு - புறக்கணிப்பு பற்றிய லெனினது புரட்சிகர அணுகுமுறை

அ.கா. ஈஸ்வரன் (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் ஏற்பாடு செய்த இணைய வழி கூட்டத்தில் லெனின் பிறந்த நாள் உரை 22-04-2026)

நாடாளுமன்றத்தில் பங்கேற்பு - புறக்கணிப்பு பற்றிய  லெனினது புரட்சிகர அணுகுமுறை

மார்க்சிய மூலவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் போன்ற நிகழ்வுகளில், மார்க்சியத்தின் இன்றைய பொருத்தத்தைப் பற்றி நாம் ஒவ்வொரு ஆண்டும் பேசிவருகிறோம். இன்று லெனினின் பிறந்த நாள் என்பதால், நாடாளுமன்றத்தில் பங்கேற்பதும், புறக்கணிப்பதும் குறித்து லெனினது புரட்சிகர அணுகுமுறையைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

இது விவாதத்துக்குரிய தலைப்பு என்பதை நான் அறிந்திருக்கிறேன். அதனால், இங்கே என் சொந்தக் கருத்துகளைப் பேச முயற்சிக்காமல், லெனின் கூறிய கருத்துகளைத் தொகுத்து வழங்க விரும்புகிறேன்.

ஏன் இப்படிச் செய்கிறேன் என்றால், நம் நாட்டில் ஒரு பழக்கம் உள்ளது, மார்க்சிய நூல்களில் இருந்து, தங்கள் கட்சியின் கருத்துக்கு ஏற்ற பகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அதற்கு முரணான கருத்துகளை மறைப்பது. இது தவறான அணுகுமுறையாகும்.

பொதுக்கோட்பாடு நமக்கு ஒரு வழிகாட்டியாகத்தான் இருக்க முடியும். அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை, ஒவ்வொரு நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும். அதற்காகத்தான் கட்சி காங்கிரஸ் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது.

முந்தைய காங்கிரசில் எடுக்கப்பட்ட முடிவுகளை, நடைமுறைப்படுத்தும்போது கிடைத்த அனுபவங்களைக் கொண்டு, புதிய காங்கிரசில் திருத்தங்களும் புதிய முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சியை நடத்துவது மனிதர்களே என்பதால் தவறுகள் நிகழ்வது இயல்பானது. ஆனால் அவற்றை உடனே உணர்ந்து திருத்தி கொள்வதே ஒரு நல்ல கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளம் ஆகும். தவறைத் திருத்தாமல், அதையே கோட்பாடாக நியாயப்படுத்துவது கட்சியின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும். சரியான பாதையில் தொடர்ந்து செல்வதும், தவறுகளைச் சீர்செய்வதும்தான் கட்சியை வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும்.

நாடாளுமன்றத்தை அணுகுவதில் கம்யூனிஸ்டுகளிடையே இரண்டு பெரிய தவறுகள் உள்ளன: 1.நாடாளுமன்றவாதம் – நாடாளுமன்றத்தையே அனைத்துமாகக் கருதி, அதன்மூலமே எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்று நம்புவது. அதுமட்டுமல்லாது நாடாளுமன்றத்தில் வெற்றி பெறுவதன் மூலம் சோஷலிசத்தை அடையமுடியும் எனக் கருதுவது.

2.முழுப் புறக்கணிப்பு – நாடாளுமன்றத்தை முழுமையாக நிராகரித்து, அதை நிரந்தரமாகப் பின்பற்றுவது. 

இந்த இரண்டு அணுகுமுறைகளையும் லெனின் கடுமையாக எதிர்த்தார். நாடாளுமன்றத்தில் மட்டுமே நம்பிக்கை வைப்பவர்களில் சிலர், லெனின் கூறியதில் ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக்கொண்டு, மற்றவற்றைப் புறக்கணிக்கிறார்கள். அதேபோல், முழுப் புறக்கணிப்பை ஆதரிப்பவர்களில் சிலர், லெனினின் புறக்கணிப்பு குறித்த கருத்தை மட்டும் பிடித்துக் கொண்டு, பிற கருத்துகளை மறைக்கிறார்கள்.

ஆனால் நாம் இந்த இரு அணுகுமுறைகளையும் இணைத்து, ஒருங்கிணைந்த பார்வையினைப் பெற வேண்டும். எந்தச் சூழ்நிலையில் எந்த முடிவு எடுக்கப்பட்டது? ஏன் அது எடுக்கப்பட்டது? என்பவற்றை ஆழமாகச் சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

செயல்தந்திரத்தை (tactics) பிற நாடுகளிலிருந்து அப்படியே நகலெடுக்க முடியாது; அவர்களின் அனுபவங்களைப் புரிந்து கொண்டு, தங்கள் நாட்டிற்கு ஏற்பத் திட்டத்தை உருவாக்க வேண்டும். பொதுக் கோட்பாட்டை ஒவ்வொரு நாட்டின் சூழ்நிலைக்கேற்பப் பயன்படுத்துவது பற்றிய முடிவை, அந்தந்த நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சியே தீர்மானிக்க வேண்டும். பிற நாட்டுக் கட்சிகள் உதவி செய்யலாம், ஆனால் தீர்மானிக்க முடியாது.

நாடாளுமன்றப் புறக்கணிப்பை எதிர்த்து லெனின் அதிகமாக எழுதியதற்குக் காரணம் இருக்கிறது. அன்றைய ஐரோப்பியக் கம்யூனிஸ்டுகளின் தவறான புறக்கணிப்பு போக்கை விமர்சிக்க வேண்டியிருந்தது. அதே நேரத்தில், நாடாளுமன்றத்தை மட்டுமே நம்பும் அணுகுமுறையையும் “நாடாளுமன்ற மூடத்தனம் என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த இரு பக்கங்களையும் பலர் முழுமையாகக் கவனிப்பதில்லை.

லெனினின் கருத்துகளை முழுமையாகப் புரிந்து கொண்டு, தங்கள் நாட்டின் நிலைக்கு ஏற்பச் செயல்திட்டம் அமைக்க வேண்டும். 

இப்படிக் கூறுவதால் பிற நாடுகளின் அனுபவங்கள் பயனற்றவை என்று பொருள் கொள்ளக்கூடாது. பாரிஸ் கம்யூன், ருஷ்யப் புரட்சி ஆகியவற்றின் அனுபவங்கள் இன்றும் நமக்கு வழிகாட்டியாகக் உள்ளன. நகலெடுப்பது, வழிகாட்டியாக கொள்வது ஆகிய இரண்டும் வெவ்வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சட்டவழிப் போராட்டத்தில் மட்டும் மூழ்கிக் கிடப்பவர்கள், “நாடாளுமன்ற மூடத்தனம்” எனப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதன் பொருள், நாடாளுமன்ற நடவடிக்கையைத்தவிர மற்ற எல்லாப் போராட்ட முறைகளையும் புறக்கணித்து, அதிலேயே சிக்கிக் கிடக்கும் சந்தர்ப்பவாதப் போக்காகும். அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பதற்காகக் கொள்கைகளை விட்டுக்கொடுக்கும் அரசியல் தான் இந்தச் சந்தர்ப்பவாத நாடாளுமன்ற மூடத்தனம்.

அதனால், இந்த ஆபத்தை மனதில் கொண்டே நாடாளுமன்றத்தில் பங்கேற்பது குறித்து லெனின் கூறிய கருத்துகளைப் புரிந்துகொள்ள வேண்டும். லெனின் கருத்துகளை மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது. அனைத்தையும் படித்து அதன் சாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பாரிஸ் கம்யூனும் ருஷ்யப் புரட்சியும் கம்யூனிஸ்டுகளுக்கு முக்கியமான அனுபவப் பாடங்களை வழங்குகின்றன. அந்த அனுபவங்களைப் புறக்கணித்து, நம்நாட்டு புரட்சியை முன்னெடுக்க முடியாது. இங்கு, குறிப்பாக ருஷ்யப் புரட்சியின் சர்வதேச முக்கியத்தும் குறித்து லெனின் கூறியதைப் பார்க்கலாம்.

இன்றைய உரைக்கு நாடாளுமன்றத்தைப் பற்றிய லெனின் கருத்துகளுக்காக, அவர் எழுதிய சில முக்கிய நூல்கள் மற்றும் கட்டுரைகளைப் பயன்படுத்துகிறேன். 

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், 1.“இடதுசாரி” கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு, 2.அராஜகவாதமும் அராஜகவாத-சிண்டிகலிசமும், 3.போர்த்தந்திரம் பற்றிய கடிதங்கள், 4.கட்சிப் பாதை.

““இடதுசாரி” கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு” என்ற நூலை அடிப்படையாக எடுத்துக் கொண்டு, மற்றவற்றையும் இணைத்து லெனின் கருத்தைத் தொகுப்பாகப் பார்ப்போம்.

ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி “போல்ஷ்விக்” கட்சி என்று அழைக்கப்படுவது நாம் அறிந்ததே. “போல்ஷ்யிசம் 1903- ஆம் ஆண்டில் மார்க்சியக் கோட்பாட்டின் உறுதியான அடித்தளத்தின் மீது உருவானது” (190) என்று லெனின் தெளிவுபடுத்துகிறார். மேலும், “1903-ஆம் ஆண்டில் போல்ஷ்விசம் உதித்தெழுந்தெழுந்ததும், அது குட்டி முதலாளித்துவ, அரை அராஜகவாத (அல்லது அராஜகவாதத்துடன் குலாவும்) புரட்சிகரவாதத்தையும் எதிர்த்துச் செஞ்சமர் புரியும் மரபைத் தனதாக்கிக் கொண்டது” (203) என்கிறார் லெனின். மார்க்சியக் கோட்பாட்டை உறுதியாகப் பின்பற்றாத கட்சிகள் தடுமாறும் என்பதை மறந்திடக்கூடாது. எனவே லெனின் கூறியது போல மார்க்சியக் கோட்பாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருக்க வேண்டும்.

1917ஆம் ஆண்டில் நடைபெற்ற, ருஷ்யப் புரட்சியை வெற்றியடையச் செய்ததற்கு முக்கிய காரணம் என்னவென்பதை, அனைத்து நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கு லெனின் கூறுகிறார். 

சட்டவழியிலானதும் சட்டவிரோதமானதும், 

அமைதியானதும் போராட்டமிகுந்ததும்

மறைமுகமானதும் வெளிப்படையானதும், 

சிறிய குழு இயக்கங்களும் மக்கள்மயமான இயக்கங்களும், 

நாடாளுமன்ற முறைகளும் பிற தீவிரமான போராட்ட வடிவங்களும், இவ்வாறு பல்வேறு வடிவங்களில் போராடியதால்தான் ரஷ்யாவில் புரட்சி சாத்தியமானது. (பக்-191)

இதிலிருந்து ஒரு முக்கியமான முடிவுக்குத் தெளிவாகிறது, நாடாளுமன்றப் போராட்டம் மட்டும் புரட்சிக்குப் போதுமானதல்ல.

ருஷ்யாவின் நாடாளுமன்ற வடிவமே டூமா”. அந்த நேர அரசியல் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயல்தந்திரமான (tactics) நடவடிக்கையாக முதல் டூமாவை லெனின் புறக்கணித்தார்.

முதல் டூமா உருவாக்கப்பட்டதன் உண்மையான நோக்கம், எழுச்சி கொண்ட மக்களின் புரட்சிகரப் போராட்டத்தைத் தணிக்கவும், அதைச் சமரசப் பாதைக்குத் திருப்பவும் என்பதாக இருந்தது. அதாவது, உண்மையான அதிகாரத்தை மக்களுக்கு வழங்காமல், போராட்டத்தைத் திசைதிருப்ப ஒரு கருவியாக முதல் டூமா உருவாக்கப்பட்டது.

இதனால், அந்தச் சூழ்நிலையில் டூமாவில் பங்கேற்பது எழுச்சியுற்ற மக்களின் புரட்சிகரப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் என்று லெனின் புரிந்துகொண்டார். அதனால் தான் புறக்கணிப்பைத் தேர்ந்தெடுத்தார்.

முதல் டூமா அந்தக் காலத்தில் புரட்சியைத் திசைதிருப்பும் கருவியாக இருந்ததால், அதைப் புறக்கணித்தது சரியான செயல்தந்திரமாக இருந்தது என்று லெனின் எவ்வாறு கூறுகிறார் என்று பார்ப்போம்.

“1905ஆம் ஆண்டில் போல்ஷ்விக்குகள் “நாடாளுமன்றத்தை” புறக்கணித்ததானது, புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கு மிகவும் மதிப்புமிக்க அனுபவத்தைச் செழுமைப்படுத்தியது. சட்டவழியிலான மற்றும் சட்டவிரோதமான, நாடாளுமன்ற மற்றும் நாடாளுமன்றம் சாராத போராட்ட வடிவங்கள் இணைக்கப்படும்போது,​​ நாடாளுமன்ற வடிவங்களைப் புறக்கணிப்பது சில நேரங்களில் பயனுள்ளதாகவும் அவசியமானதாகவும் கூட இருக்கும் என்பதைக் காட்டியது. இருப்பினும், இந்த அனுபவத்தைக் கண்மூடித்தனமாகவும், பின்பற்றும் விதமாகவும், விமர்சனமின்றியும் மற்ற நிலைமைகளுக்கும் மற்ற சூழ்நிலைகளுக்கும் பயன்படுத்துவது மிகவும் தவறானதாகும்.” (பக்-207)

முன்பு கூறியபடி, செயல்தந்திரத்தை அப்படியே நகலெடுக்க முடியாது. சர்வதேச அனுபவங்களைப் புரிந்து கொண்டு, அவரவர் நாடுகளின் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்க வேண்டும்.

நம் நாட்டில் நாடாளுமன்றப் பங்கேற்பும் புறக்கணிப்பும் பல்வேறு வரலாற்று மற்றும் அரசியல் நுணுக்கங்களைக் கொண்ட முக்கியமான செயல்தந்திரங்களாக இருந்தாலும், அவை பெரும்பாலும் அவற்றின் ஆழமான அரசியல் அடிப்படையில் மற்றும் சூழ்நிலைப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் எளிமைப்படுத்தப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட முடிவாகத். தெரிகிறது.

 

““இடதுசாரி” கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு” என்ற நூலில் லெனின் நாடாளுமன்றத்தில் பங்கேற்கச் சொல்கிறார் என்று மேலோட்டமாகப் புரிந்துகொள்ளக் கூடாது. ஏனெனில் அதே நூலில், நாடாளுமன்றத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்துச் செயல்படும் போக்கையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாட்டாளி வர்க்கக் கம்யூனிஸ்ட் கட்சி, முதலாளித்துவ அமைப்பை எதிர்த்துப் போராடுகிறது. அதனால், முதலாளித்துவக் கட்சிகளும் அரசும் எப்போது வேண்டுமானலும் அந்த இயக்கத்தைத் தடுக்க முயற்சி செய்யும். நெருக்கடியான சூழலில், கம்யூனிஸ்ட் கட்சியைத் தடைசெய்யவும் தயங்காது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யும் போது, சட்டவழிப் போராட்டத்தில் மட்டுமே பழகிக் கொண்டவர்கள் திகைத்துச் செயலற்றுப் போவார்கள் என்பதை லெனின் சுட்டிக்காட்டுகிறார்.

"ஒருபுறம், கட்சியின் சட்டவழியிலான நிலையிலிருந்து சட்டவிரோதமான நிலைக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம், தலைவர்கள், கட்சிகள் மற்றும் வர்க்கங்களுக்கு இடையேயான வழக்கமான, இயல்பான மற்றும் எளிமையான உறவுகளைச் சீர்குலைத்தது. அப்போது ​​இந்த மக்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தங்களைக் கண்டதும், இவர்கள் குழம்பிவிட்டதாகத் தெரிகிறது. ஜெர்மனியில், மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே, மக்கள் சட்டவழியிலான நிலைக்கும், வழக்கமான கட்சி மாநாடுகளில் "தலைவர்களை" சுதந்திரமாகவும் முறையாகவும் தேர்ந்தெடுப்பதற்கும், நாடாளுமன்றத் தேர்தல்கள், மக்கள் கூட்டங்கள், பத்திரிகைகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிற சங்கங்களின் கருத்துகள் போன்றவற்றின் மூலம் கட்சிகளின் வர்க்க அமைப்பைச் சோதிக்கும் வசதியான முறைக்கும் மட்டுமீறிப் பழகிவிட்டிருந்தனர்

இந்த வழக்கமான நடைமுறைக்குப் பதிலாக, புரட்சியின் கொந்தளிப்பான வளர்ச்சி மற்றும் உள்நாட்டு போரின் காரணமாக, சட்டவழியிலான நிலையிலிருந்து சட்டவிரோதமான நிலைக்கு வேகமாக மாறுவதும், இரண்டையும் இணைப்பதும், "தலைவர்களின் குழுக்களை" தேர்ந்தெடுப்பதற்கோ, உருவாக்குவதற்கோ அல்லது பாதுகாப்பதற்கோ "சிரமமான" மற்றும் "ஜனநாயகமற்ற" முறைகளைக் கடைப்பிடிப்பதும் அவசியமானபோது— இவர்கள் நிலை தடுமாறி, கலப்பற்ற அபத்தக் கற்பனையில் இறங்கத் தலைப்பட்டு விட்டனர். மிகுந்த சலுகைக்கும் மிகவும் நிலையான சட்டவழித் தன்மையின் மரபுகளையும் நிலைமைகளையும் கொண்ட ஒரு சிறிய நாட்டில் பிறக்கும் கெடுவாய்ப்பைப் பெற்றவர்களாகவும், சட்டவழியில் இருந்து சட்டவிரோதப் போக்குக்கு மாறவேண்டிய சூழ்நிலையினை, ஒருபோதும் கண்டிராதவர்களாகவும் இருந்த, ஹாலந்து கம்யூனிஸ்ட் கட்சியின் சில உறுப்பினர்கள், அநேகமாகக் குழப்பமடைந்து, சுயநினைவை இழந்து, இந்த அபத்தமான கண்டுபிடிப்புகளை உருவாக்க உதவியதாகத் தெரிகிறது." (பக்-217-218)

இதன் மூலம் லெனின் வலியுறுத்துவது என்னவென்றால், கம்யூனிசக் கட்சி, ஒரே ஒரு போராட்ட முறையில் மட்டும் சார்ந்து இருக்க முடியாது, பல்வேறு போராட்ட வடிவங்களையும் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.

நாடாளுமன்றப் பங்கேற்பு, புறக்கணிப்பு என்பதை மேலோட்டமாகப் பார்க்காமல் லெனினது கருத்தை ஆழ்ந்து பார்க்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பங்கெடுத்துக் கொள்ளலாமா? என்கிற கேள்விக்கு, “இடதுசாரிதீவிரத் தன்மை கொண்ட கம்யூனிஸ்டுகள் எதிர்மறையில் பதிலளிப்பதாக லெனின் குறைபட்டுக் கொள்கிறார். தீவிரத் தன்மை கொண்ட இடதுசாரிகம்யூனிஸ்டுகளின் பதில் என்னவாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

வரலாற்று வழியிலும் அரசியல் வழியிலும் வழக்கொழிந்து போன நாடாளுமன்றப் போராட்ட வடிவங்களுக்குத் திரும்புவது முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும் என்கின்றனர்.

நாடாளுமன்ற முறை வரலாற்று வழியில் வழக்கொழிந்துவிட்டது”. பிரச்சார வழியில் பார்த்தால் இது உண்மைதான். இருப்பினும், நடைமுறையில் அதை வெற்றி கொள்ளும் நிலைக்கு, வெகுதொலைவில் நாம் இருக்கிறோம். வரலாற்று வழியில் வழக்கொழிந்த நாடாளுமன்றம் அரசியல் வழியில் இன்னமும் வழக்கொழியவில்லை என்கிறார் லெனின்.

நாடாளுமன்றத்தை வழக்கொழிக்க வேண்டுமெனில் “சோவியத் அமைப்பை உருவாக்க வேண்டும்” என்ற கோட்பாட்டைச் சிலர் எளிமைப்படுத்தப்பட்ட முறையில் முன்வைக்கின்றனர். அவர்களது பார்வையில், சோவியத் அமைப்பை நிறுவுவதுதான் கம்யூனிஸ்டுகளின் முதன்மை பணியாகும்; இதற்குப் புறம்பாக, நாடாளுமன்ற அரசியலில் பங்கேற்பது கம்யூனிஸ்டுகளின் செயற்பாட்டு எல்லைக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படுகிறது.

ஆனால், இத்தகைய நிலைப்பாடு, வரலாற்று இயக்கத்தின் தனித்துவங்களையும், வர்க்க உறவுகளின் சிக்கலான அமைப்பையும், அரசியல் சூழ்நிலைகளின் பலதரப்பட்ட பரிமாணங்களையும் புறக்கணிக்கும் எளிமைப்படுத்தப்பட்ட ஒற்றைக் கோணத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

சோவியத்தைச் செயற்கை முறையில் உருவாக்க முடியாது என்பதை லெனின் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். மூன்றாவது அகிலத்தின், இரண்டாவது காங்கிரசில் (02-08-1920) லெனின் கூறுகிறார்,  “சோவியத்துகளைச் செயற்கை முறையில் படைப்பித்துவிட முடியாதென்பதைப் பொர்டீகாவே ஒத்துக் கொள்கிறார். புரட்சியின் போதோ, புரட்சியின் தறுவாயிலோதான் சோவியத்களை நிறுவமுடியுமென்று ருஷ்யாவின் உதாரணம் காட்டுகிறது. . நாடாளுமன்றம் வரலாற்று வழியில் தோன்றுவதாகும், முதலாளித்து நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குப் போதுமான அளவுக்கு வலுப்பெறும் வரை நாம் அதை அகற்றிவிட முடியாது.” (பக்-52)

அதுமட்டுமில்லாது தொழிலாளர் வர்க்கத்திற்குள் கூட, பிற்பட்ட பகுதி மக்களிருப்பார்கள். அவர்கள் நாடாளுமன்றமே மக்களின் உண்மையான பிரதிநிதி என்று நம்புகிறார்கள். நாடாளுமன்றத்தில் நடக்கும் ஏமாற்றங்களையும் சூழ்ச்சிகளையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்றுகொண்டே அதைப் பற்றிய உண்மைகளை மக்களுக்கு எப்படித் தெரியப்படுத்துவது? நாடாளுமன்றத்தில் உள்ளே சென்று, அங்கு நடக்கும் அரசியல் செயல்பாடுகளையும் முதலாளித்துவக் கட்சிகளின் உண்மையான முகத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டினால்தான் நாடாளுமன்றத்தை அம்பலப்படுத்த முடியும். அதாவது, நாடாளுமன்றத்தை ஒழிக்க வேண்டுமெனில், அதற்குள் நுழைந்து அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்பதே லெனினது கருத்தாக இருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாமல், அதனை முழுவதுமாகப் புறக்கணித்துவிட்டால், உள்ளிருந்து நடத்த வேண்டிய இந்த அரசியல் போராட்டத்தை நடத்த முடியாது. மேலும், தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு அலுவலர்கள் போன்ற பொதுமக்களுக்கு நாடாளுமன்றத்தின் வார்க்கச் சார்புத் தன்மையினை, வாதங்களால் புரிய வைத்திட முடியாது. தங்கள் சொந்த அனுபவத்தின் மூலமே உண்மையைப் புரிந்துகொள்வார்கள். நாடாளுமன்றத்தின் உண்மையான வர்க்கத் தன்மையை அவர்கள் அனுபவத்தின் வழியே அறிய வேண்டும். அதற்குக் கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்றத்தில் உள்ளிருந்து அதை அம்பலப்படுத்த வேண்டும்.

ருஷ்யப் புரட்சியின் அனுபவம் இதைத் தெளிவாகக் காட்டுகிறது,
கோட்பாடு மட்டும் போதாது; மக்களுக்கு நடைமுறை அனுபவம் அவசியம். இத்தகைய கருத்துகளையே லெனின், மூன்றாம் அகிலத்தின் இரண்டாம் காங்கிரசில் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துவது அதனை முழுமையாக அங்கீகரிப்பதாகும், அல்லது முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பயன்படுத்துவது அதில் உண்மையான ஜனநாயகம் இருக்கிறது என்று ஒப்புக்கொள்வதாகும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். இந்தத் தவறான புரிதலின் அடிப்படையில்தான் அவர்கள் நாடாளுமன்றப் பங்கேற்பை எதிர்க்கிறார்கள்.

ஆனால் கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவ ஜனநாயகத்தை முழுமையான ஜனநாயகமாகக் கருதவில்லை. அது ஒரு குறுகிய ஜனநாயகம் மட்டுமே. அதனால், நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துவது என்பது அதனை ஏற்றுக்கொள்வது என்று பொருளாகாது; அதில் உள்ள வரம்புகளையும் மோசடிகளையும் வெளிச்சமிட்டுக் காட்ட ஒரு போராட்ட மேடையாக அதைப் பயன்படுத்துவது என்பதே அதன் நோக்கம். இங்கே லெனின் வலியுறுத்துவது: முதலாளித்துவ ஜனநாயகம் முழுமையானதல்ல; ஆனால் அதில் உள்ள குறைந்த அளவிலான ஜனநாயக வாய்ப்புகளைக் கம்யூனிஸ்டுகள் தங்களின் அரசியல் போராட்டத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதாகும்.

 “அரசும் புரட்சியும்” என்ற நூலில் லெனின் கூறிய முக்கியக் கருத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மார்க்சியவாதிகள் தற்போதுள்ள அரசைப் பயன்படுத்திப் புரட்சிக்காகப் பாட்டாளி வர்க்கத்துக்குப் பயிற்சி தர வேண்டுமென்று கோருகிறார்கள், அராஜகவாதிகள் இதனை நிராகரிக்கிறார்கள்- என்று “அரசும் புரட்சியும்” (பக்.-175) என்கிற நூலில் லெனின் கூறியுள்ளார்.

“அரசும் புரட்சியும்” என்கிற நூலில் அவர் முன்வைத்த கருத்துகளை, ‘அரசு என்ற சொற்பொழிவில் தெளிவாக விளக்குகிறார். ஆகவே, இந்தக் கருத்தை முறையாகப் புரிந்துகொள்ளாது நாடாளுமன்றப் பங்கேற்பையோ, அரசியல் செயல்பாட்டையோ முழுமையாக நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

“பண்ணையடிமை முறையுடன் ஒப்பிடும் போது, ஜனநாயகக் குடியரசும் அனைத்து மக்களுக்குரிய வாக்குரிமையும் பிரம்மாண்டமான முன்னேற்றமாகத் திகழ்ந்தன. பாட்டாளி வர்க்கம் இன்று பெற்றுள்ள ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அடைவதற்கும், மூலதனத்தை எதிர்த்து முறையாகப் போராடுகின்ற, உறுதியும் கட்டுப்பாடும் பெற்ற அணிகளை வகுப்பதற்கும் அவை வாய்ப்பு அளித்துள்ளன.

பண்ணையடிமை குடியானவர்களிடம் கிட்டத்தட்ட இது போன்றதுகூட எதுவும் இருந்ததில்லை என்றால், அடிமைகளைப் பற்றிக் கூறத் தேவையேயில்லை. அடிமைகள் கிளர்ந்து எழுந்தனர், கலகம் புரிந்தனர், உள்நாட்டு போர்களைத் தொடங்கினர் என்பதை நாம் அறிவோம். ஆயினும் வர்க்க உணர்வுள்ள பெரும்பாலானோரையோ, போராட்டத்தை நடத்துவதற்கு வேண்டிய கட்சிகளையோ அவர்கள் ஒருபோதும் தோற்றுவிக்க முடியவில்லை.

தாங்கள் எந்தக் குறிக்கோளுக்காகப் போராடுகிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள அவர்களுக்கு முடியவில்லை. வரலாற்றின் மிகப் பெரும் புரட்சிகரமான காலக் கட்டங்களில்கூட ஆளும் வர்க்கங்களின் கைப்பாவைகளாகவே அவர்கள் எப்போதும் இருந்தனர்.

சமூகத்தின் உலக வளர்ச்சி நிலையிலிருந்து பார்க்கும் போது முதலாளித்துவக் குடியரசு, நாடாளுமன்றம், அனைத்து மக்களுக்குரிய வாக்குரிமை ஆகிய அனைத்தும் மாபெரும் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன.

மனிதயினம் முதலாளித்துவத்தை நோக்கிச் சென்றது. முதலாளித்துவம் ஒன்றுதான், நகர்ப்புறப் பண்பாட்டின் மூலம், ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் தன்னைத்தானே உணரும்படியாகச் செய்யவும், உலகத் தொழிலாளி இயக்கத்தை உண்டாக்கவும் வாய்ப்பு அளித்தது; உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களைக் கட்சிகளாக, திரளான மக்களின் போராட்டத்தை உணர்வுவழியாக நடத்திச் செல்லும் சோஷலிசக் கட்சிகளாக அமையும்படி செய்தது.

நாடாளுமன்ற முறை இல்லையேல், தேர்தல் அமைப்பு இல்லையேல், தொழிலாளி வர்க்கத்தின் இவ்வளர்ச்சியை அதிகரிக்க முடியாத செயலாகவே இருந்திருக்கும். அதனால் தான், பெருந்திரளான மக்களின் பார்வையில், இவையெல்லாம் அத்தனை பெரும் முக்கியத்துவமுடையன ஆகியிருக்கின்றன.”

(அரசு, பக்-36-37)

தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதற்கு, முதலாளித்துவ ஜனநாயகத்தில் காணப்படும் வரம்புள்ள வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதைப் பயன்படுத்தத் தவறினால், கட்சி வலுவாக உருவாக முடியாமல், சிறு குழுக்களாகச் சிதறிப் போகும் அபாயம் ஏற்படுகிறது.

கோட்பாட்டளவில் புரட்சிகரமான நடவடிக்கையைக் கீழேயிருந்து நிர்ப்பந்திப்பதோடு குறுக்கிக் கொள்வதும் மேலேயிருந்து தாக்கத்தை ஏற்படுத்துவதைக் கைவிடுவதும் அராஜகவாதிகளின் போக்கு என்கிறார் லெனின். மேலும் கூறுகிறார், ஒவ்வொரு ஜனநாயகப் புரட்சியிலும் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளைப் பற்றி எவ்விதமான கருத்தும் அராஜகவாதிகளிடம் இல்லை. (அராஜகவாதமும் அராஜகவாத- சிண்டிகலிசமும், பக்-278-279) ஆமாம், அராஜகவாதிகள் சமூக மாற்றத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள், அதற்குத் தேவைப்படுகிற, ஜனநாயகப் புரட்சிக்கான செயல்பாட்டை மறுப்பார்கள்.

1905ஆம் ஆண்டில் தொடங்கிய, ருஷ்யாவின் முதல் புரட்சி தோல்வி கண்டது. தோல்வியின் காரணமாகக் கம்யூனிஸ்ட் இயக்கம் பலவீனமடைந்தது. அந்தத் தோல்வியின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாமல், சிலர் வலதுசாரியாக மாறி “கலைப்புவாதம்” நோக்கிச் சென்றனர். இதனால் கட்சிக்குள் சித்தாந்த நெருக்கடியும், அமைப்பு நெருக்கடியும் ஏற்பட்டது என்கிறார் லெனின்.

இந்தச் சூழ்நிலையில், 1909-ம் ஆண்டில் “கட்சி பாதை” என்கிற கட்டுரையை எழுதுகிறார், அதில் கட்சியை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை லெனின் வலியுறுத்துகிறார். புரட்சித் தோல்வி அடைந்த பிறகு ஏற்பட்ட பின்னடைவுக் கட்டத்தைக் கடக்க, புதிய செயல்தந்திரம் தேவைப்பட்டதை அதில் அவர் குறிப்பிடுகிறார்.

ருஷ்ய நாடாளுமன்ற வடிவமான டூமாவில் பங்கேற்பது பற்றி லெனின் அதில் பேசுகிறார். இது, நாடாளுமன்றப் பங்கேற்பு ஒரு நிரந்தரமான கொள்கை என்பதற்கு மாறாக, கட்சியை மீட்டெடுத்து வலுப்படுத்த வேண்டிய குறிப்பிட்ட அரசியல் சூழ்நிலையில் எடுத்ததாகும்.

“நாம் இந்தக் கட்டத்தைக் கடந்து செல்ல வேண்டும். தற்போதைய புதிய சூழல்களுக்குப் புதிய போராட்ட வடிவங்கள் தேவைப்படுகின்றன. டூமாவைப் பயன்படுத்துவது ஒரு முழுமையான அவசியமாகும். பாட்டாளி வர்க்க மக்களுக்குக் கல்வி புகட்டுவதற்கும் அவர்களை ஒழுங்கமைப்பதற்குமான ஒரு நீடித்த முயற்சி குறிப்பாக முக்கியத்துவம் பெறுகிறது. சட்டவிரோத மற்றும் சட்டவழியிலான அமைப்புகளின் கலவையானது கட்சிக்கு முன்பாகச் சிறப்புப் பிரச்சினையாக எழுத்துள்ளது.

... ...

நாம் கூறியது போல், டூமா மேடையைப் பயன்படுத்துவது இந்தக் கல்வி மற்றும் பயிற்சிப் பணியின் ஒர் இன்றியமையாத அங்கமாகும். டூமா குழு மீதான மாநாட்டு தீர்மானம், வரலாற்றில் உதாரணங்களைத் தேடுவோமானால், சோசலிச எதிர்ப்புச் சட்டம் போடப்பட்ட காலத்தில் ஜெர்மன் கம்யூனிசக் கட்சியின் (ஜெர்மானியச் சமூக-ஜனநாயகத்தின்) அனுபவத்திற்கு மிக நெருக்கமான பாதையை நமது கட்சிக்குச் சுட்டிக்காட்டுகிறது. சட்டவிரோதக் கட்சியானது, சட்டவழியிலான டூமா குழுவை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்திருக்க வேண்டும்; அது அக்குழுவை அதன் பணிகளுக்கு ஈடான ஒரு கட்சி அமைப்பாகப் பயிற்றுவிக்க வேண்டும்.” (பக், 235+236-237)

இந்தச் சூழலில், கட்சிக்குள் இரண்டு தவறான போக்குகள் இருந்தன என்று லெனின் சுட்டிக்காட்டுகிறார். ஒன்று, சட்டவிரோதக் கட்சி அமைப்புகளுக்கே முழு முக்கியத்துவம் அளிக்கும் போக்கு, மற்றொன்று, சட்டவழியிலான மற்றும் அரை-சட்டவழியிலான அமைப்புகளிலேயே முழுமையாக நம்பிக்கை வைக்கும் போக்கு. இந்த இரண்டு அணுகுமுறைகளுக்கு எதிராகவே, லெனின் டூமாவில் பங்கேற்பை வலியுறுத்தினார். இதனை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். சட்டவிரோதக் கட்சி, அதாவது தலைமறை அமைப்பு மட்டுமே போதுமானது என்று கருதுகிற ஒரு போக்கு, மற்றது சட்டவழியிலான அமைப்புகளை மட்டும் நம்பும் போக்கு இதனை எதிர்த்தே டூமாவில் பங்கேற்பு பற்றி லெனின் பேசுகிறார்.

நாடாளுமன்றப் புறக்கணிப்பைப் பற்றிப் பேசுபவர்களில் சிலர், “நாடாளுமன்றம் பன்றித் தொழுவம்” என்று லெனின் கூறியதைச் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் லெனின் கூறிய முழு வாக்கியத்தையும் கூறாமல் மறைத்துவிடுகின்றனர்.

லெனின் கூறியதை அவரது எழுத்துகளிலேயே பார்ப்போம்.

".. மார்க்சுக்குப் புரட்சிகர இயக்கவியலானது, பிளஹானவும் காவுத்ஸ்கியும் ஏனையோரும் ஆக்கிக் கொண்டுவிட்ட வெற்று ஜம்பமாகவோ விளையாட்டுக் கிலுகிலுப்பையாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. முதலாளித்துவ நாடாளுமன்ற முறை "பன்றித் தொழுவமே" ஆயினுங்கூட அதனைப் பயன்படுத்திக் கொள்ள, முக்கியமாய் நிலைமை புரட்சிகரமானதாய் இல்லை என்பது தெளிவாய்த் தெரியும் நேரத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் திராணியற்றதாய் இருந்ததென்பதற்காக அராஜகவாதத்திடமிருந்து தயவுதாட்சண்யமின்றி முறித்துக் கொள்ள மார்க்சுக்குத் தெரிந்திருந்தது. அதேபோது நாடாளுமன்ற முறையை மெய்யாகவே புரட்சிகரமான பாட்டாளி வர்க்க நிலையிலிருந்து விமர்சிக்கவும் அவருக்குத் தெரிந்திருந்தது."

                                                                                              (அரசும் புரட்சியும் (பக். 72-73))

பன்றித் தொழுவமே ஆனாலும் நாடாளுமன்றத்தில் செயல்பட வேண்டியிருக்கிறது, அதே நேரத்தில் நாடாளுமன்றத்தை மார்க்சிய வழியில் விமர்சிக்கவும் வேண்டியிருக்கிறது. இரண்டையும் கம்யூனிஸ்ட் கட்சி செய்ய வேண்டியதாகும்.

இதே கருத்தை லெனின் “சமரசங்கள் குறித்து என்கிற கட்டுரையிலும் வலியுறுத்துகிறார்.

"எடுத்துக்காட்டாக, மூன்றாவது நான்காவது டூமாவில் பங்கெடுக்க ஒத்துக்கொண்டது ஒரு சமரசமேயாகும், தற்காலிகமாகப் புரட்சிகரமான கோரிக்கைகளைக் கைவிடுவதேயாகும். ஆனால் இந்தச் சமரசம் முற்றிலும் நம் மீது நிர்ப்பந்தமாகச் சுமத்தப்பட்டதேயாகும், ஏனெனில், சக்திகளின் பரஸ்பர நிலையானது நாம் வெகுஜனப் புரட்சிப் போராட்டத்தை நடத்துவதைத் தற்காலிகமாக அசாத்தியமாக்கிவிட்டிருந்தது, மேலும் இந்தப் போராட்டத்துக்கு ஒரு நீண்ட காலப்பகுதியில் தயாரிப்பு செய்யும் பொருட்டு நாம் இப்படிப்பட்ட ஒரு "பன்றி தொழுவத்தின்" உள்ளேகூட, இருந்து வேலை செய்யத் திறமை பெற்றிருக்க வேண்டியிருந்தது. ஒரு கட்சி என்கிற முறையில் போல்ஷ்விக்குகள் இப்பிரச்சினையை இவ்விதம் அணுகியதானது முற்றிலும் சரியே என்பதை வரலாறு நிரூபித்துள்ளது "

(சமரசங்கள் குறித்து, தொகு-5,பக்.-300)

நாம் முன்பே கூறியபடி, நாடாளுமன்றத்தை நிரந்தரமாகப் பயன்படுத்துவதோ அல்லது முழுமையாகப் புறக்கணிப்பதோ— இரண்டும் தவறான ஒரு சார்பான அணுகுமுறைகள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒருங்கிணைந்து  புரிந்து கொண்டு சூழ்நிலைக்கு ஏற்பத் தக்க முடிவு எடுக்க வேண்டும்.

இந்தியாவில் நாடாளுமன்றம் இருக்கிறது. உலகின் “பெரிய ஜனநாயக நாடு” என்று இந்தியா கூறப்படுகிறது. ஆனால் இந்தப் பெயரிடல், இங்கு ஜனநாயகம் விரிவான அளவில் செயல்படுகிறது என்பதற்கான அடையாளமாகக் கூறப்படவில்லை. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டிருப்பதும், மக்கள் தொகை மிக அதிகமாக இருப்பதும் தான் இந்தியாவை இவ்வாறு அழைக்கக் காரணமாக இருக்கிறது. எனவே, ஜனநாயகத்தின் அளவு (scale) பெரியதாகக் காட்டினாலும், அதாவது வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை பெரியதாக இருந்தாலும், அதன் தரம் (quality) குறித்துக் கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததாகும். அதாவது இந்தியாவின் ஜனநாயகத்தை மக்கள் தொகையின் எண்ணிக்கை வைத்துக் கூறப்படுகிறது. ஆனால் ஜனநாயகம் விரிவான வகையில் செயல்படவில்லை என்பதே உண்மையாகும்.

இந்த முரண்பாட்டை விளக்குவதற்கு ஒரு எளிய எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.

ஒரு மாணவர் விடுதியில், தினமும் காலையில் இட்லி மட்டுமே வழங்கப்பட்டது, இதனை எதிர்த்து மாணவர்கள் மாற்று உணவிற்கான கோரிக்கை வைத்தார்கள். நிர்வாகம், அனைத்து மாணவர்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்வதாக அறிவித்தது. ஒரு  கணகுக்காக 100 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். 100 மாணவர்கள் வாக்களித்ததன் முடிவு என்வென்பதைப் பார்ப்போம்.

30 பேர் – இட்லி கேட்டு வாக்களித்தனர்

27 பேர் – பொங்கல் கேட்டு வாக்களித்தனர்

23 பேர் – தோசை கேட்டு வாக்களித்தனர்

20 பேர் – குழிப்பணியாரம் கேட்டு வாக்களித்தனர்

இந்த முடிவின் அடிப்படையில், இட்லி அதிக வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டு, இட்லியே தொடர்ந்து வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. இங்கு ஒர் அடிப்படை ஜனநாயக முரண்பாடு காணப்படுகிறது. 70% மாணவர்கள் இட்லிக்கு எதிராக வாக்களித்திருந்தாலும், 30% மாணவர்களின் விருப்பமே நடைமுறைக்கு வருகிறது.

இதுபோன்ற நிலைமையில் “அதிக வாக்கு பெற்றவர் வெற்றி” என்ற கோட்பாடு, “பெரும்பான்மை விருப்பம்” என்ற ஜனநாயகத்தின் அடிப்படை கருத்துடன் முரண்படுகிறது. ஆகவே, இதனை ஜனநாயகத்தின் வெற்றியாகக் கருதமுடியாது, உண்மையில் ஜனநாயகத்தின் வீழ்ச்சியாகக் கொள்ள வேண்டும்.

இதற்கு மாற்றாக, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையை முன்வைக்க வேண்டும். அதன்படி, மாணவர்களின் விருப்ப விகிதத்தைக் கருத்தில் கொண்டு, வாராந்திர உணவு பட்டியல் அமைக்கலாம்: 3 நாள் இட்லி, 2 நாள் பொங்கல், 1 நாள் தோசை, 1 நாள் குழிப்பணியாரம். இவ்வாறு செயல்படும் போது, அனைத்து மாணவர்களின் விருப்பமும் பிரதிபலிக்கப்படுகிறது. இதுவே ஜனநாயகத்தின் உள்ளடக்கத்தை ஓரளவுக்காவது பாதுகாக்கும் அணுகுமுறையாகும்.

இந்த எடுத்துக்காட்டை அரசியல் நிலைக்கு மாற்றிப் பார்க்கும்போது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வரம்புகள் தெளிவாகின்றன. இத்தகைய வரம்புகளைக் கருத்தில் கொண்டு, லெனின் நாடாளுமன்றப் பங்கேற்பை ஒரு செயல்தந்திரமாகக் கருதினார். நாடாளுமன்றம் முழுமையான ஜனநாயக அமைப்பு அல்ல என்றாலும், அதை முழுமையாகப் புறக்கணிக்கக் கூடாது என்றார். தேவைப்படும் சூழலில் அதை ஒர் அரசியல் போராட்ட மேடையாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் ஒரு லெனின் கருத்தைப் பார்ப்போம்.

"... சந்தேகத்திற்கு இடமின்றி ஜெர்மனியில் நாடாளுமன்றம் அரசியல் வழியில் இன்னமும் காலாவதியாகிவிடவில்லை என்பதையும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் நாடாளுமன்ற மேடைப் போராட்டத்திலும் பங்கேற்பது புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கட்சிக்குக் கட்டாயமானதாகும் என்பதையும் குறிக்கிறது. குறிப்பாக, அது தனது சொந்த வர்க்கத்தின் பின்தங்கிய பிரிவினருக்குக் கல்வி புகட்டுவதற்காகவும், வளர்ச்சியடையாத, ஒடுக்கப்பட்ட மற்றும் அறியாமையில் வாடும் கிராமப்புற மக்களை விழித்தெழச் செய்து அறிவூட்டுவதற்காகவும் ஆகும்.

 

முதலாளித்துவ நாடாளுமன்றங்களையும் மற்ற எல்லா வகையான பிற்போக்கு நிறுவனங்களையும் ஒழிக்கும் வலிமை உங்களிடம் இல்லாதவரை, நீங்கள் அவற்றுக்குள்ளேயே செயல்பட வேண்டும். ஏனெனில், அங்கேதான் மதகுருமார்களால் ஏமாற்றப்பட்ட மற்றும் கிராமப்புற வாழ்க்கைச் சூழல்களால் மழுங்கடிக்கப்பட்ட தொழிலாளர்களை நீங்கள் இன்னமும் காண்பீர்கள்; நாடாளுமன்றத்தின் உள்ளிருந்து வேலை செய்யாவிடில், நீங்கள் வெறும் வெற்று பேச்சாளர்களாக மாறும் அபாயத்தை எதிர்கொள்வீர்கள்." (பக்,-247)

எனவே, “நாடாளுமன்றத்தில் பங்கேற்பது” என்பது அதன் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல்; அதன் வரம்புகளை அம்பலப்படுத்தும் அரசியல் நடவடிக்கையாக இருக்க வேண்டும். அதே நேரம், அந்த மேடையைப் பயன்படுத்தி மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஜனநாயகத்தை விரிவுபடுத்தும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

மொத்தத்தில் பார்க்கும்போது, நாடாளுமன்றத்தில் பங்கேற்பதா? அல்லது புறக்கணிப்பதா? என்ற கேள்விக்கு லெனின் ஒரே மாதிரியான நிரந்தரப் பதிலை வழங்கவில்லை என்பது தெளிவாகிறது. அது ஒவ்வொரு நாட்டின் குறிப்பிட்ட வரலாற்று, அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒரு செயல்தந்திரப் பிரச்சினை ஆகும். நாடாளுமன்றத்தை முழுமையாக நம்பும் “நாடாளுமன்ற மூடத்தனம்” மற்றும் அதை நிரந்தரமாக நிராகரிக்கும் “முழுப் புறக்கணிப்பு” ஆகிய இரண்டும் மார்க்சிய அணுகுமுறைக்கு முரண்பட்டதாகும். முரணானது மட்டுமல்ல, எதிரானதும்கூட.

லெனினது முக்கியமான வலியுறுத்தல் என்னவென்றால், கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரே ஒரு போராட்ட வடிவத்தில் சிக்கிக் கொள்ளாமல், பல்வேறு போராட்ட முறைகளையும் இணைத்துப் பயன்படுத்த வேண்டும் என்பதே ஆகும். நாடாளுமன்றம் முழுமையான ஜனநாயக அமைப்பு அல்ல என்றாலும், அதில் உள்ள வரம்புகளைச் சுட்டிக்காட்டவும், மக்களிடம் அரசியல் வழியில் விழிப்புணர்வு உருவாக்கவும், அதை ஒரு போராட்ட மேடையாகப் பயன்படுத்த வேண்டும். அதே நேரம், அந்த மேடையில் மட்டுமே நம்பிக்கை வைத்துச் செயல்படுவது புரட்சிகர இயக்கத்தைப் பலவீனப்படுத்தும் அபாயத்தையும் உருவாக்கும்.

எனவே, நாடாளுமன்றப் பங்கேற்பு என்பது ஒரு இலக்கு அல்ல; அது ஒரு கருவி மட்டுமே. அந்தக் கருவியை எப்போது பயன்படுத்த வேண்டும், எப்போது தவிர்க்க வேண்டும் என்பது அரசியல் நிலைமைகளின் நுணுக்கமான ஆய்வின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். இந்த அணுகுமுறையே லெனினின் புரட்சிகர அரசியல் சிந்தனையின் மையக் கருத்தாகும்.

லெனினியத்தை புரிந்த செயல்பட லெனின் எழுத்துகளைப் படிக்க வேண்டும். லெனின் எழுத்துகளைக் கொண்ட தேர்வு நூல்கள் பன்னிரண்டும் தற்போது அச்சுவடிவத்தில் கிடைக்கிறது. செந்தளம், என்சிபிஎச், பாரதி புத்தகாலயம் ஆகிய மூன்று பதிப்பகங்கள் அண்மையில், லெனினது 12 தொகுதிகளை வெளியிட்டுள்ளது. லெனின் நூல்களைப் புதியதாகப் படிப்பவர்களையும், படிப்பதில் சிரமப்படுபவர்களையும் மனதில் கொண்டு நான் எடுத்த வகுப்புகள், “லெனின் தேர்வு நூல்கள் ஓர் அறிமுகம்” என்கிற பெயரில் வெளிவந்துள்ளது. இன்றைய எனது உரையில் பேசியது, இந்த நூலில் விரிவாக இடம் பெற்றுள்ளது. தேவைப்படுவோர் படித்துப் பாருங்கள்.

லெனினியம் என்கிற பொதுக்கோட்பாட்டில் உள்ள, நாடாளுமன்றப் புறக்கணிப்பு எப்போது  செய்ய வேண்டும், பங்கேற்பு எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று கூறியது, இன்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது என்பதைப் பார்த்தோம். கோட்பாட்டை அப்படியே காப்பியடிக்காமல், அதன் சாரத்தைப் புரிந்து கொண்டு, தற்கால அரசியல் எதார்த்தங்களுக்கேற்பப் போராட்ட முறைகளை அமைத்துக் கொள்வதுதான், ஒர் உண்மையான மார்க்சிய அரசியல் நடைமுறையாகும்.

மார்க்சிய-லெனினிய வழியில் செல்வோம், வெற்றி பெறுவோம் என்று கூறி விடை பெறுகிறேன்.

அ.கா. ஈஸ்வரன்