கல்வியை விற்பனை பொருளாக மாற்றும் தமிழ்நாடு அரசு
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்
கல்வியை விற்பனை பொருளாக மாற்றும் தமிழ்நாடு அரசு - வன்மையான கண்டனங்கள்!
தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த முன்வடிவை தமிழ்நாடு அரசே உடனடியாக திரும்பப் பெறு!
தமிழ்நாட்டில் கடந்த 2019 - ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவு நேற்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்களாக எளிதில் மாற்றிக் கொள்ளலாம்; 100 ஏக்கர் நிலம் இருந்தால் மட்டுமே தனியார் பல்கலைக்கழகம் துவங்க முடியும் என்ற விதியில், மாநகரப் பகுதிகளில் 25 ஏக்கர், நகராட்சிப் பகுதிகளில் 35 ஏக்கர், மற்ற பகுதிகளில் 50 ஏக்கர் என மாற்றம்; தனியார் கல்லூரிகள்
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து புதிய பல்கலைக்கழகங்களாக செயல்படலாம் போன்ற திருத்தங்கள் தேசிய கல்விக் கொள்கையை அடியொட்டியே அமைந்துள்ளது.
தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து வருகிற உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் இத்தகைய சட்ட திருத்தம் மாணவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசு தொடர்ந்து ஏழை,எளிய மாணவர்களின் உயர் கல்வி கனவை, தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் சிதைத்து வருகிற இந்தச் சூழ்நிலையில் இந்த சட்டத் திருத்த முன்வடிவு அதற்கு ஆதரவளிக்கும் அல்லது தனியார்மயத்தை ஊக்குவிப்பதற்கு வழிவகை செய்கிறது. இவற்றை அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழங்கள் உருவாகும்போது ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அக்கறை செலுத்தாமல் பொருளாதாரத்தை மட்டுமே மையப்படுத்தி கல்வி, என்பது வணிக நோக்கத்திற்கு சென்றுவிடும். மேலும், அரசு உதவிப் பெறும் கல்லூரிகள் மூலம் ஏழை,எளிய மானவர்கள் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி கல்வி உதவித் தொகை போன்ற உரிமைகள் பெற்று வருகிறார்கள். இந்த சட்ட முன் வடிவு மூலம் இட ஒதுக்கீடு என்பது கேள்விக்குறியாக்கப்படும்.
புதிய சட்ட திருத்த முன்வடிவுபடி, கட்டுப்பாடுகள் போதிய அளவு இல்லாவிட்டால் தரமற்ற கல்வி, சமூக பாதிப்பு, வணிக நோக்கம் உள்ளிட்ட தமிழக கல்வி முறைக்கு எதிரான நிலை ஏற்படும் என்பதை தமிழக அரசுக்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் முன்கூட்டியே எச்சரிக்கிறது. மேலும், தனியார் பல்கலைக்கழங்கள் வசூலிக்கும் அதிகப்படியான வசூல் கட்டணம், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்; கல்வியிலிருந்து அவர்களை அப்புறப்படுத்திவிடும்.
எனவே, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் சட்ட திருத்த முன்வடிவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், வரும்காலங்களில் கல்வித்துறையில் தனியார்மயத்தை அனுமதிக்க மாட்டோம் என்பதை அரசின் கொள்கை முடிவாக எடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.
க.இப்ராகிம், மாநிலத் தலைவர்
பா.தினேஷ், மாநில செயலாளர், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் , தமிழ்நாடு மாநில குழு.
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு