மாடுகளுக்கு பாதாமும் முந்திரியும்: காணொளியின் நோக்கம் என்ன?
சத்திய நாராயணன்
இந்திய மக்களில் 40 சதவிகிதம் பேர் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் உடையவர்கள். அதாவது 60 சதவீதத்தினர், அந்த பழக்கம் இல்லாதவர்கள். அதற்கு பெரிய கொள்கைகளோ, ஆய்வுப் பின்னணிகளோ கிடையாது. பரம்பரையாக பின்பற்றப்படுவது அவ்வளவுதான்.
ஆக, இந்த 60 சதவிகிதம் பேரை முஸ்லீம்களுக்கும், மற்றுமுள்ள அனைத்து மதம் சார்ந்த மக்களுக்கும் எதிராக திசை திருப்புவது எப்படி? மாட்டிறைச்சி திண்பவனை வெட்டு என்றால் அவர்களிடம் எடுபடுமா? எடுபடாது. ஏனெனில் அவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் பெரிய கருதுகோளோ, சிந்தனையோட்டமோ கிடையாது. அதல்லாமல் பெரும்பாலோனோர் வன்முறையை நாடுவதை தவிர்ப்பவர்கள். இயல்பாகவே. அதல்லாமல் அவர்களது அன்றாட வாழ்க்கை போராட்டங்கள் வேறு.
எனவே, மதவெறி ஆர் எஸ் எஸ் செய்வது இதைத்தான்.
மாடுகளை தெய்வமாக போற்றுவது.
மாடுகளுக்கு உணவளிப்பது
மாடுகளுக்கு இப்படி உயர் வகை உணவுகளை அளிப்பது
மாட்டின் சிறப்புகள்
மாட்டு மூத்திரத்தின் சிறப்புகள்
மாட்டு சாணத்தின் மருத்துவ குணங்கள்
என எண்ணிறைந்த காணொளிகளையும், யூட்யூப், முகநூல் பதிவுகளையும் கட்டவிழ்த்து விடுகின்றனர்.
இப்படி ஒரு பத்து பதிவுகளை பார்த்த பின் மாட்டிறைச்சி உண்ணாத அந்த 60 சதவீதத்தினர் மனதில் மாட்டைப் பற்றி பச்சாதாபம் மிக்க உணர்வு உண்டாகும் (பக்தி அல்ல)
அந்த உணர்வு போதுமான அளவு நிறைந்திருக்கும் சமயத்தில் முஸ்லீம்களையோ, தலித்துகளையோ மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்ற போர்வையில் அடித்துக் கொல்லும் செய்திகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் உணர்வானது படிப்படியாக மழுங்கடிக்கப்பட்டு, குறையும்.
அதாவது இந்த 60 சதவீதத்தினரின் மத்தியில்.
ஆக, ஒரு சமுதாயத்தில், கொடுங்குற்றம் செய்தவர்களை அக்குற்றங்களை செய்ய விடுவது, கண்டும் காணாமல் போகும் பெரும்பாலான மக்கள் திரள்தான்.
அத்தகைய மக்கள் திரளை உருவாக்குவதே இத்தகைய பதிவுகளின் உள் நோக்கம்.
இதையும் சிந்தித்துப் பாருங்கள்:
இதைச் செய்தவர்கள் பின்னணியையும் பார்க்க வேண்டும் அதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
1.இதை செய்பவர்கள் ஏழை விவசாயிகளாக இருக்க முடியாது.
2. பாதம் பருப்பும், முந்திரி பருப்பும், உலர் திராட்சை, கருப்பட்டி தூள் போன்றவை கெட்டுப்போனவை அல்ல என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
3. அப்படியே நல்ல உணவுதான் என்றாலும், இந்த கேள்வி எழுகிறது. உயர்ந்த உணவு, தாழ்வான உணர்வு என்பது மனிதனுக்கு மட்டுமே. கால்நடைகளுக்கு உண்ணக்கூடிய எல்லாமே ஒன்றுதான். ஆகவே நமது இலக்கணங்களை மிருகங்களுக்கு நீடிப்பது முட்டாள்தனம் அல்லவா?
4. அப்படி உண்மையிலேயே அக்கறை இருந்தால் (இவற்றை வாங்க செலவிட்ட) அவ்வளவு பணத்தை ஒரே நாள் உணவுக்கா தருவார்கள்? அந்தப் பணத்தைக் கொண்டு, அதே மாடுகளுக்கு குறைந்தது இரண்டு வருடம் வைக்கோலும், புல்லும் வாங்கிப் போடும் அளவுக்கு உள்ள பணம் அது. இப்படி செலவிடுவது அறிவு பூர்வமானதா?
6. சரி. இவை யாருடைய மாடுகள்? உணவளிப்பவர்களுடைய மாடுகளா? அப்படியானால் இதில் என்ன பெருமை இருக்கிறது? உங்களுக்கு பயன்தரும் மாட்டுக்கு அல்லது செல்லபிராணிகளுக்கு உணவளிப்பதில் தெய்வீகத் தன்மை எங்கிருந்து வருகிறது? ஏழை விவசாயி புல் வைக்கோல் தருவான். நீங்க முந்திரி பருப்பு தருகிறீர்கள், இதில் மாட்டின் பெருமை என்ன?
7. இல்லை அவை அனாதை மாடுகள் என்றால், அவைகளை அனாதையாக்கியது யார்? அவற்றிடம் பாலும் உழைப்பையும் வாங்கிக் கொண்டு, பயனற்றுப் போனதும் துரத்தி விட்டது யார்? ஏன்? அவர்களுக்கு மாடு தெய்வம் இல்லையா? அல்லது ”இந்து”க்கள் அப்படி மாட்டை துரத்தி விடுவதில்லையா? அவை சாகும் வரை உணவளித்து “தெய்வமாக போற்றுகிறார்களா? மாடுகளை விடாமல் போஷிக்கும் “இந்துக்களை” பட்டியலிட்டு காண்பிப்பீர்களா?
5. எனவே, இது உள் நோக்கம் கொண்ட வறட்டு ஜம்பம் தவிர வேறில்லை!
ஆக, இப்படிப்பட்ட பதிவுகளைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை பாட்டாளி வர்க்க விடுதலை சக்திகள் மேற்கொள்ள வேண்டும், கட்சியினதும், கொள்கை தொடர்பான கோஷங்களும் எவ்வளவு முக்கியமோ, அதை நிலைப்படுத்தி, அரசியல் வடிவு கொடுக்கக் கூடிய இத்தகைய விழிப்புணர்வு செய்திகளையும் அவ்வப்போது தீர ஆராய்ந்து மக்கள் மத்தியில் பரப்ப வேண்டிய இந்தக் கடமையும் அவ்வளவு முக்கியமானது.
இந்தக் கடமையை நாம் திட்டமிட்டு செவ்வனே நிறைவேற்ற வேண்டிய கால கட்டம் இது.
- சத்திய நாராயணன்
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு