உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1

நிதி பற்றாகுறையால் தடுமாறும் தேசிய எய்ட்ஸ் நோய் தடுப்பு திட்டம்

உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1

ஒவ்வொரு ஆண்டும் உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர்-1 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு  வருகிறது.இந்த ஆண்டின் கருப்பொருள் சமப்படுத்து (Equalize). எய்ட்ஸ் தொற்றுநோயை நிலைநிறுத்தும் ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க முடியாதவை அல்ல; நாம் அவற்றை சமாளிக்க முடியும்.எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டுவருவதில் முன்னேற்றத்தைத் தடுக்கும் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யுமாறு நாம் ஒவ்வொருவரையும் வலியுறுத்துகிறது "சமப்படுத்து"  என்கின்ற முழக்கம் .

எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?

1.     பாதுகாப்பற்ற உடலுறவில் எச்.ஐ.வி உள்ள ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவலாம்.

2.     ப‌ரிசோதிக்கப்படாத இரத்தம் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவலாம்.

3.     சுத்தம் செய்யப்படாத ஊசிகளைப் பகிர்ந்து கொள்வதால் பரவலாம்.

4.     எச்.ஐ.வி. உள்ள கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து பிறக்கப்போகும் குழந்தைக்குப் பரவலாம்.

எப்படி தடுக்கலாம்?

1.     ப‌ரிசோதிக்கப்பட்ட இரத்தத்தையே பயன்படுத்துதல்.

2.     சுத்திகரிக்கப்பட்ட அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தகூடிய ஊசிகளை பயன்படுத்துதல்

3.     பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்த்தல் பாதுகாப்பான உடலுறவிற்கு ஆணுரையை பயன்படுத்துதல்.

உலகம் முழுவதும் எச்.ஐ.வி.,எய்ட்ஸ் நோயின் தாக்கம் இருந்தாலும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் எச்.ஐ.வி. ,எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிகம் இருக்கிறது இதற்கு என்ன காரணம்?

உலக சுகாதார நிறுவனம் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் பரவுவதற்கான பல காரணங்களை கூறியுள்ளது. 1) சந்தை பொருளாதாரம், 2) கல்வியறிவின்மை, 3) ஆண், பெண் பாலின வேறுபாடு (ஆணாதிக்கம்), 4) ஊடகங்களின் தாக்கம், 5) வறுமை, 6) அடிப்படை மதவாத பிற்போக்கு தனங்கள் ஆகியவையாகும்.

       மேற்கண்ட காரணங்களை வைத்து எச்.ஐ.வி. நோய் தடுப்பு திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். ஆனால் இந்தியாவில் எச்.ஐ.வி. நோய் தடுப்பு திட்டங்கள் முறையாக மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை தற்போது இந்தியாவில் செயல்படுத்தப்படும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் ஏகாதிபத்திய உலகமய கொள்கைகளுக்கு சேவை செய்வததை நோக்கமாக கொண்டுள்ளது. எய்ட்ஸ் தடுப்பு திட்டங்களில் அரசு-தனியார் பங்கேற்பு என்ற பெயரில் தனியார்மைய கொள்கைகள் ஊக்குவிக்கப்படுகிறது. தற்பொழுது செயல்படுத்தப்படும் 5 வது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் 1000 த்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை குறைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது இது எய்ட்ஸ் நோய் பரவலுக்கே வழி வகுக்கும்.

21-3-22 அன்று பிரதமர் மோடி தலைமையில்  மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இதற்கு ரூ.15 ஆயிரத்து 471 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம், முதல்முறையாக 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, 5-வது கட்டமாக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த கட்டத்தில், 2030-ம் ஆண்டுக்குள் எய்ட்சை உருவாக்கும் எச்.ஐ.வி. வைரசுக்கு முடிவு கட்டும் ஐ.நா.வின் இலக்கை நிறைவேற்ற இந்தியா பாடுபடும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 27கோடி எச்.ஐ.வி. பரிசோதனைகள் மேற்கொள்ளவும், ஆண்டுக்கு 8 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கவும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி இந்தியாவில் சுமார் 21 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. ஆசிய பசிபிக் நாடுகளில் இந்தியாவில்தான் அதிக எய்ட்ஸ் நோயால் பாதித்தோர் உள்ளனர் என்றும் அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது. உலக சுகாதார நிறுவன கணக்கீட்டின்படி கடந்த 14 ஆண்டுகளில் 20 சதவீதம் அளவில் எய்ட்ஸ் நோய் பரவுவது குறைந்திருக்கிறது. இந்த முன்னேற்றம் இருந்தாலும், ஆசிய பசிபிக் நாடுகளிலேயே கடந்த ஆண்டு இந்தியாவில்தான் அதிக அளவவாக 3இலட்சத்து 40ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

மக்கள் நலவாழ்வுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுப்பதே தொற்று நோய்கள் பரவ காரணம்

2017ஆம் ஆண்டில்   தொடங்கி இருக்க வேண்டிய தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட் டம் 5  மத்திய அரசு நிதி ஒதுக்கப்படாததால் 4 ஆண்டுகள் தாமதமாக 2021 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் மெத்தனப்போக்கை காட்டி வருவதால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஏ.ஆர்.வி மருந்து பற்றாகுறை ஏற்ப்பட்டுள்ளது என HIV / AIDS நோயால் பாதிக்கப்பட்ட கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். தேவையான மருந்து மாத்திரைகளை வழங்க கோரி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட கூட்டமைப்பினர் டெல்லியில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டம் வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. ஆனால் மத்திய சுகாதார துறை இதன் மீது கவனம் செலுத்தவில்லை... மருந்து பற்றாகுறை பிரச்சனையும் தீரவில்லை. எனவே மத்திய அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பற்றாகுறை இல்லாமல் மருத்து கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

கடந்த 2022-23 மத்திய நிதி நிலை அறிக்கையில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு அளிக்கப்படும் நிதியை 30 சதவீத அளவில் குறைத்துள்ளது.

இதனால் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் முழுமையான அளவில் செயல்படுத்தப்படாத நிலை உருவாகியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மத்தியில் பிஜேபி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததுமுதல் சுகாதாரத் துறை பட்ஜெட்டில் கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகள் லாபம் பெறுவதற்காக மோடி அரசு பொது சுகாதாரத் துறையில் 20 விழுக்காடு வரை நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. ஏற்கனவே உலக அளவில் இந்தியாவில்தான் சுகாதாரத்திற்கு பட்ஜெட்டில் மிகக்குறைந்த அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சராசரி தேசிய உற்பத்தியில் சுகாதாரத்திற்கு 1 விழுக்காடு மட்டுமே நிதி செலவழிக்கப்படுகிறது. ஆனால் சீனாவில் 3விழுக்காடும் அமெரிக்காவில் 8.3விழுக்காடும் செலவழிக்கப்படுகிறது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி ஒதுக்கீட்டிலிருந்து (31,640 கோடி ரூபாய்) 6000 கோடி ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.. இவ்வாண்டு பட்ஜெட்டில் நிர்ணயித்த இலக்கை வரிவசூலில் எட்ட முடியாத நிலையில், பெரும் பணக்காரர்களுக்கும், இந்திய பெரு முதலாளிகளுக்கும் சொத்துவரி முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

இத்துடன் நிதி அமைச்சகம் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு 30விழுக்காடு வரை குறைத்துள்ளது. அதாவது 1300 கோடி ரூபாய் குறைத்துள்ளது. உலகிலேயே ஹெச்ஐவி, மற்றும் காச நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்பது கவனிக்கதக்கது.

மத்திய அரசின் இத்தகைய கொள்கைகள் காசநோய் போன்ற தொற்று நோய்கள் பரவுவதை அதிகரிக்கவே உதவும். சந்தை சக்திகளின் நலன்களுக்காக ஏழை எளிய மக்களை பலிகொடுக்கும்  கொள்கைகளை மத்திய அரசு தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. 

தாராளமயக் கொள்கைகளும்- மருத்துவதுறையில் பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளையும்

மத்திய அரசு செயல்படுத்திவரும் தாராளமயக் கொள்கையால் இந்தியா பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறிவருகிறது. இந்திய மருந்து சந்தையின் விற்பனை மதிப்பு ஆண்டிற்கு ரூ90,000கோடியாகும். இந்தியாவில் தங்களது மருந்துகளுக்கு காப்புரிமை பெற்றுள்ள ஜப்பானை சார்ந்த ஒட்டுஸ்கா(Otuska), அமெரிக்காவின் பிரிஸ்டல் மையர்ஸ் ஸ்கியூப்(BMS), மற்றும் ஸ்விஸ் நாட்டின் நோவார்ட்டிஸ்(Novartis) போன்ற பன்னாட்டு கம்பெனிகள் தங்களது மருந்துகளை சந்தைக்கு கொண்டுவராமல் பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்றன. இதனால் காசநோய், எச்.ஐ.வி, புற்றுநோய், மஞ்சள்காமாலை போன்றவற்றுக்கான மருந்துகளின் விலையை பன்மடங்கு உயர்த்துகின்றன. உதாரணமாக எய்ட்ஸ் நோய்க்கான மருந்தின் விலை ஒரே வருடத்தில் 2000 டாலர் அளவுக்கு உயர்த்தியுள்ளன. இவ்வாறு தாராளமய கொள்கையால் உயிர்காக்கும் மருந்துகள் ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறிவிட்டது.

எய்ட்ஸ் நோயாளிகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு மசோதா

கடந்த 2017 ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோய் ஹெச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க வழிவகை செய்யும் மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

அந்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள்:

பிற நோயாளிகளுக்கு இணையாக எய்ட்ஸ் நோய், ஹெச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை வழங்கிட வேண்டும்.

எய்ட்ஸ் நோயால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் விபரங்களை கசிய விடுவோருக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்க வழி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மசோதவில் 14(1) பிரிவில் இடம்பெற்றிருக்கும்... எய்ட்ஸ், ஹெச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மத்திய, மாநில அரசுகள் சாத்தியமிருக்கும் வரை சிகிச்சை வழங்கும்* என குறிப்பிடப்பட்டுள்ளது...

இது எதிர்காலத்தில் அரசு எய்ட்ஸ் நோயாளிகளுக்கு  சிகிச்சை அளிக்கும் கடமையிலிருந்து விலகிகொள்ளும் அபாயம் உள்ளது என  எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.. மசோதவில் இருந்து நோயாளிக்களுக்கு எதிரான விதியை நீக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள். எய்ட்ஸ் நோயாளிகள் இலவச சிகிச்சை பெறும் உரிமையை மறுக்கும் இந்த விதியை நீக்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் அவல நிலை

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் நம்பிக்கை மையம், ஏ.ஆர்.டி சிகிச்சை மையங்களில் சுமார் 25,000 ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசின் அடிப்படை சமூக பாதுகாப்பு திட்டங்கள் EPF, ESI, மற்றும் இறப்பு நிவாரண நிதி கூட வழங்கப்படுவதில்லை... அரசு ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்படவேண்டும் என்ற அடிப்படை நியதி கூட மத்திய அரசின் கீழ் செயல்படும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்களுக்கு பின்பற்றப்படவில்லை என்பது வேதனையான விசயமாகும்...

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் 5 ஊதிய மாற்றத்தில் கூட மத்திய அரசு இந்த திட்டத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 60 சதவீதம் அளவுக்கு ஊதிய உயர்வு அறிவித்து விட்டு மற்ற ஊழியர்களுக்கு வெறும் 10 சதவீத ஊதிய உயர்வு அறிவித்து ஊழியர்களின் வயிற்றிலடித்து விட்டது..

விலைவாசி உயர்வுகேற்ப தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு மத்திய அரசு குறைந்தபட்சம் 40 சதவீத ஊதிய உயர்வு வழங்கிட முன்வரவேண்டும்  .

எனவே எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரவுவது என்பது தனி நபர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல; இது சமூக பொருளாதார கலாச்சார அரசியல் பிரச்சனையாகும். எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயை பரவுவதை கட்டுப்படுத்த வேண்டுமானால் வளரும் இளம் பருவத்தினருக்கு பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். பாரதி கூறியதை போல் ‘கற்பு’ என்று வரும்போது அதை ஆண், பெண் இருவருக்கும் பொதுவில் வைக்க வேண்டும். நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க கலச்சாரத்தை ஒழிக்க வேண்டும். மேலும் சுகாதாரதுறைக்கு தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டும். மக்களின் உயிர்காக்கும் சுகாதார துறையில் தனியார்மயத்தை அனுமதிக்க கூடாது இதுவே தீர்வாகும்.

மா.சேரலாதன்

மாநில பொதுச்செயலாளர்

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம்.

பதிவு எண்: 1623/VLR

அலைபேசி எண்: 9245363755

Email: cheran34@gmail.com

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் 

– செந்தளம் செய்திப் பிரிவு