காலாவதியாகும் அரசு போக்குவரத்து கழகங்கள்

ஜுனியர் விகடன்

காலாவதியாகும் அரசு போக்குவரத்து கழகங்கள்

இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை ஒப்படும்போது, அதிக அளவு அரசுப் பேருந்துகள், குறைந்த பயணக் கட்டணம், பெண்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் எனத் தமிழக அரசு போக்குவரத்துத்துறை பாராட்டுக்குரிய வகையில்தான் இயங்கிவருகிறது என்று நம்பிக்கொண்டிருந்தோம். அதில் உண்மையும் இருக்கிறது. ஆனால், போக்குவரத்துத் துறையில் சமீபகாலமாக நடக்கும் விஷயங்களும், வெளியாகும் செய்திகளும் இந்தச் சந்தோஷத்தில் மண்ணை அள்ளிப்போடுகின்றன.

காலாவதியான பேருந்துகளின் மோசமான நிலை, அதன் விளைவாக ஏற்படும் விபத்துகள், அசௌகரியமான ஆபத்தான பயணம், பணிமனையில் ஆட்கள் பற்றாக்குறை, உதிரி பாகப் பற்றாக்குறைகள், அரங்கேறும் முறைகேடுகள், நிதி நெருக்கடி, நிர்வாகத் திறமையின்மை, நஷ்டத்தில் நிர்வாகம். அடமானம் வரை போகும் கழகச் சொத்துகள் என வரிசைகட்டுகின்றன புகார்கள். ஆயிரக்கணக்கில் பேருந்துகள், லட்சக்கணக்கில் ஊழியர்கள், கோடிக்கணக்கில் பயனாளிகள் இருந்தும், போக்குவரத்துத் துறையின் லட்சணமோ ஊர் சிரிக்கும் நிலையில் இருக்கிறது.

பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், டெப்போ டெக்னீஷியன்கள், தொழிற்சங்கவாதிகள், பொதுமக்கள் எனப் பலதரப்பட்டவர்களிடமும் விசாரித்தோம்...

“வெளியில் சொன்னால் வெட்கக்கேடு!”

"பெரும்பாலும் ரிப்பேரான பஸ்களைத்தான் கிராமப் பகுதிகளுக்கு விடுறாங்க. அவற்றின் நிலை மிக மோசமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு அஞ்சு ட்ரிப்புகள் அடிக்கவேண்டிய இடத்தில், நாலு ட்ரிப்புகளோடு நிறுத்திக்கிறாங்க. அதுவும் சரியான நேரத்துக்கு வர்றது இல்லை. உட்காருற சீட்டுகளும் சரியா இல்லை. கைத்தாங்கலுக்குப் பிடிக்கிற கம்பிகளும் ஆடுது, மழை நேரங்கள்ல ஒழுகுது.மலைப்பிரதேச பஸ்களில் ஜன்னல்ல கண்ணாடி இருக்குறதில்லை, குளிரில் நடுங்குறாங்க பயணிகள்..." எனப் புகார்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகிறார்கள் மக்கள்.

நீலகிரியில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பேசுகையில், "நான் ஓட்டும் இந்த பஸ்ஸின் வலதுபக்க சஸ்பென்ஸ் பட்டை உடைந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. சரிசெய்து தரச் சொல்லிப் போராடுகிறேன். அப்படியே ஓட்டச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. எல்லா வண்டிகளிலும் பட்டன் இல்லாத மொட்டை டயர். எந்த வண்டியிலும் ஸ்டெப்னி டயர் கிடையாது. பஞ்சர் என்றால், 'டயர் இருக்கு, டியூப் இல்லை' என்கிறார்கள் பணிமனையில்" எனப் புலம்பினார்.

களத்தில் நாம் வலம்வந்தபோது, வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அத்தியூர் வரை இயக்கப்படும் 'TN-25 N 0319' என்ற பேருந்துக்குள் நடு இருக்கையே காணவில்லை. அந்த இடத்தில், டயர் ஒன்றைக் கயிற்றால் கட்டிவைத்திருக்கிறார்கள். அதேபோல, வேலூரிலிருந்து ஏரிப்புதூர் கிராமத்துக்குச் செல்லும் 'TN-23 N 2210' என்ற மகளிருக்கான கட்டணமில்லாத பேருந்திலும் இரண்டு இருக்கைகள் கழற்றி வீசப்பட்டு, அந்த இடத்தில் டயர் போட்டுவைத்திருக்கிறார்கள். இலவசப் பயணம் என்பதால், டயர்மீதே உட்காரச் சொல்வதாக நடத்துனர்கள் மீது பெண் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த மே 4- ம் தேதி காலை சுமார் 11 மணிக்கு, விழுப்புரத்திலிருந்து திருவெண்ணெய் நல்லூருக்குப் புறப்பட்ட பேருந்து (TN-32 N 3854), கிளம்பிய வேகத்தில் பிரேக்டவுனாகி நின்றது. அதில் ஏறி ஒரு விசிட் அடித்தோம். எங்கு பார்த்தாலும் வெல்டிங். அனைத்தையும் கயிற்றால் கட்டிவைத்திருக்கிறார்கள். ஸ்டீயரிங்கைத் தவிர, ஸ்பீடாமீட்டர் உள்ளிட்ட எதுவுமே இல்லை. எப்போது உடைந்துவிழுமோ என்ற நிலையில் இருக்கும் இருக்கைகளில், உறையை மட்டும் பளபளவென்று மாற்றியிருக்கிறார்கள்.

அந்தப் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர். "இந்த பஸ்ஸுக்கு எப்படி எஃப்.சி கொடுத்தாங்கன்னு தெரியலை. சின்னதா பிரேக் அடிச்சாலே மேற்கூரையிலருந்து துருப்பிடிச்ச துகள்கள் மேலே கொட்டுது. இந்தப் பேருந்தில் போகும் பயணிகள் மட்டுமல்ல, ஓட்டுநர், நடத்துனரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை" என்றார்.

தொடரும் விபத்துகள்... அச்சத்தில் பயணிகள்!

கடந்த பிப்ரவரி மாதம், சென்னையில் அரசுப் பேருந்து ஒன்று அமைந்தகரை அருகே சென்றுகொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் ஒரு இருக்கைக்குக் கீழேயுள்ள பலகை உடைந்து, இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஓட்டை வழியாக விழுந்து, தொங்கியவாறு அலறித் துடித்தார். இந்தச் சம்பவம் இணையத்தில் வெளியாகி, அனைவரையும் நடுங்கவைத்தது. கடந்த ஏப்ரல் மாதம் கும்பகோணத்திலிருந்து தஞ்சை நோக்கிப் பயணித்த பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அய்யம்பேட்டை அருகே விபத்துக்குள்ளானது. இதில் ஒரு பெண் பலியானார். 30- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதே மாதத்தில், முதுகுளத்தூரிலிருந்து பரமக்குடிக்குக் கிளம்பிய அரசுப் பேருந்தின் பின்பக்கப் படிக்கட்டு உடைந்து விழுந்தது. மரக்காணம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம். மேல்சேவூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் சிறுவன் பலியானான். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உடல்

நசுங்கிப் பலியானார். ஆம்பூரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து இன்ஜினில் புகை வந்ததால், பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு காரைக்காலுக்குச் சென்ற அரசுப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து கடலூர் அருகே விபத்துக்குள்ளானது. இப்படி சமீபகாலத்தில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகியிருக்கிறது.

குறிப்பாக 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மட்டும், அரசுப் பேருந்துகளால் 1,601 உயிர்கள் பறிபோயிருக்கின்றன. இவை அல்லாமல், அரசுப் பேருந்துகளால் பலியாகும் கால்நடைகள் குறித்த புள்ளிவிவரம் அரசிடம் இல்லை.

"இதற்கெல்லாம் முக்கியக் காரணம், காலாவதியான பேருந்துகள்தான். ஓட்டை விழுந்த மேற்கூரை, சீட் இல்லாத இருக்கைகள், துருப்பிடித்த கம்பிகள், உடலைக் கிழிக்கும் தகரப் பிசிறுகள், பிடிமானம் இல்லாமல் ஆடும் ஜன்னல் கண்ணாடிகள், கழன்று விழும் படிகள் என... இப்போது ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகளில் பாதிக்குப் பாதி காலாவதியான பேருந்துகள்தான்" என்று அதிர்ச்சி கொடுக்கிறார்கள் போக்குவரத்துத் துறை ஊழியர்களே

“ஓடுவதில் 80% காலாவதியான பேருந்துகள்தான்..." அதிர்ச்சி தரும் அதிகாரிகள்!

அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தோம், "இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில்தான் அரசுப் பேருந்துகள் நகர்ப்புறங்களிலிருந்து அனைத்து கிராமப்புறங்களையும் இணைக்கின்றன. அதன்படி, 26 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழகம் 315 பணிமனைகளைக் கொண்டிருக்கிறது. தொலை தூரங்களுக்காக 'அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்', தலைநகர் சென்னைக்காக 'மாநகர போக்குவரத்துக் கழகம்', இவையில்லாமல், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு போக்குவரத்துக் கழகங்களையும் சேர்த்து மொத்தம் எட்டு கழகங்கள் செயல்படுகின்றன. இந்தக் கழகங்களுக்குக்கீழ், தமிழ்நாட்டில் மொத்தமாக 20,260 பேருந்துகள் இயங்குகின்றன. அதன்படி, விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின்கீழ் இயங்கும் (எஸ்.இ.டி.சி) பேருந்துகள், மூன்று ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோமீட்டர் வரை ஓடிய பேருந்துகள் காலாவதியானவை என்று கருதப்படும். அதேபோல, போக்குவரத்துக் கழகத்தின்கீழ் (எஸ்.டி.யூ) இயக்கப்படும் பேருந்துகள், ஆறு ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோமீட்டர் வரை ஓடிய பேருந்துகள் காலாவதியானவை என்று கருதப்படும்.

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே... அதாவது 08.07.2021-ல், இந்த விதிகளை அதிரடியாக மாற்றினார்கள். அதாவது 'எஸ்.இ.டி.சி பேருந்துகளுக்கு ஏழு ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர்' என்றும், எஸ்.டி.யூ பேருந்துகளுக்கு 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர்' எனக் காலாவதிக்கான காலத்தை நீட்டித்தார்கள். தி.மு.க அரசு வந்ததும்

நீட்டித்த காலக் கணக்குப்படி பார்த்தால், தமிழ்நாட்டில் இயங்கும் 20,260 பேருந்துகளில், 10,582 பேருந்துகள் காலாவதியானவை. அதாவது, 52.73 சதவிகிதம். பழைய விதிகளின்படி பார்த்தால், கிட்டத்தட்ட 80 சதவிகிதப் பேருந்துகள் காலாவதியானவைதான். இந்தப் பேருந்துகளைச் சாலையில் ஓட்டுவதால்தான் விபத்துகள் அதிகரிப்பதோடு, செலவுகளும் எகிறி நஷ்டத்துக்கு வழிவகுக்கின்றன.

இந்தக் காலாவதியான பேருந்துகளை மாற்றி, அந்த இடத்துக்குப் புதிய பேருந்துகளைக் கொண்டு வந்திருக்க வேண்டிய புதிய அரசு, 'சேஸ் நன்றாக இருக்கிறது' என்று சொல்லி, காலாவதியான 839 பேருந்துகளை, புதிதாக 'பாடி' கட்டி, மஞ்சள் பெயின்ட் அடித்து சாலையில் ஓடவிட்டது. இதற்காகப் பெரும் தொகையைச் செலவு செய்திருக்கிறது தி.மு.க அரசு. அந்தத் தொகைக்கு, புதிதாகவே 300 பேருந்துகளை வாங்கியிருக்கலாம். இந்த மஞ்சள் பேருந்துகளில் பெரும்பாலானவை அடிக்கடி பழுதாகிவிடுகின்றன. இந்த 839 பேருந்துகளுக்கும் பாடி கட்டியதிலும்கூட மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் கிளம்பியிருக்கிறது. காலாவதியாவதற்கான கால விதிகளை மாற்றுவதால், கலர் கலராக பெயின்ட் அடிப்பதால் பேருந்துகள் பலவீனமாகாமல் இருந்துவிடுமா... இது மக்களின் உயிரோடு விளையாடும் விஷயம். பிரச்னையின் வீரியம் அரசுக்குப் புரியவில்லை என்றுதான் தோன்றுகிறது" என்றனர் விரக்தியுடன்.

"நாள் ஒன்றுக்கு 15 கோடி நஷ்டம்..." தலைசுற்றவைக்கும் புள்ளிவிவரங்கள்!

காலாவதிப் பேருந்துகள் ஒரு பிரச்னை என்றால் போக்குவரத்து துறையின் நஷ்டம் அடுத்த முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

 'தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் சம்மேளன (ஏ.ஐ.டி.யு.சி ஆறுமுகத்திடம் பேசினோம்.அரசு போக்குவரத்துக் கழகம், சேவையின் அடிப்படையில் இயங்கக்கூடிய ஒரு துறைதான். தமிழ்நாடு முழுக்க ஓடும் அரசுப் பேருந்துகளை ஒரு கிலோமீட்டர் இயக்க, 96.75 ரூபாய் செல்வாகிறது. ஆனால், அதன் மூலம் 37.60 ரூபாய்தான் வருவாயாகக் கிடைக்கிறது. அந்த வகையில், ஒரு கிலோமீட்டருக்கு 59.15 ரூபாய் நஷ்டம் ஆகிறது. 2024. மே மாதத்தில் இந்த நஷ்டக் கணக்கு 60 ரூபாயைத் தாண்டியிருக்கிறது. அதன்படி, ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் வீதம், மாதம் 452 கோடி ரூபாய் என ஆண்டுக்கு 4,978 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகின்றன போக்குவரத்துக் கழகங்கள். 2021-ல் தி.மு.க அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி, போக்குவரத்துத் துறை அதுவரை 42,143.69 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்தது. 2024-ல் இந்த நஷ்டத் தொகை 46,000 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கலாம். ஓராண்டுக்கு, போக்குவரத்துத்துறை மூலம் 12,000 கோடி ரூபாய் வருவாய் பெற, 16,985 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இப்படி இருந்தால், துறை எப்படி லாபத்தில் இயங்கும்?

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை சரியில்லை என விமர்சித்தது. தற்போது தி.மு.க ஆட்சியில் அந்தத் துறைக்கு இரு அமைச்சர்கள் மாறி மாறி வந்துவிட்டார்கள். ஆனாலும், எதுவும் மாறவில்லை. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் பொதுத்துறை என்பதால், இதற்கெனத் தனியாக பட்ஜெட் ஒதுக்கப்படுவதில்லை. துறையின் செலவினங்களுக்காக அரசு, மானியமாகத்தான் நிதி வழங்குகிறது. உதாரணமாக, மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணத்தால் ஏற்படும் நஷ்டத்துக்கு ஆண்டுக்கு 2,800 கோடி ரூபாயும், மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் பயணத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாயும் அரசு வழங்குகிறது. இது போக, டீசலுக்கான மானியமும் கொடுக்கிறது. இவ்வளவு நிதியை அரசு வழங்கியும், போக்குவரத்துத்துறை மேலும் மேலும் நஷ்டமடைவதற்கு நிர்வாகத் திறமையின்மைதான் காரணம். வேறு எதுவும் இல்லை என்றார் ஆதங்கத்துடன்.

 "பணியாளர்கள் இல்லை.... உதிரி பாகங்கள் இல்லை!"

போக்குவரத்துத்துறையில் தொடரும் பிரச்னைகள் குறித்து (சி.ஐ.டி.யூ) மாநிலத் தலைவர் சௌந்தரராஜனிடம் பேசினோம். "ஒவ்வொரு பேருந்தும் வழித்தடத்துக்குச் சென்று பணிமனைக்குத் திரும்பியதும், அந்தப் பேருந்துக்கு தின,வார, மாதாந்தர பராமரிப்புகள் செய்யப்படுவது வழக்கம். ஆனால், அந்த வழக்கம் தற்போது மொத்தமாகவே இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் அந்தப் பேருந்து விபத்தில் சிக்குகிறது அல்லது பிரேக்டவுனாகி நிற்கிறது. இவை எல்லாவற்றுக்கும் காரணம், பணிமனைப் பணியாளர் பற்றாக்குறைதான். அதாவது, 50 சதவிகிதப் பணியாளர்கள் இல்லை. சரி, இருக்கும் பணியாளர்களை வைத்துப் பராமரிக்கலாம் என்றால், தேவையான உதிரி பாகங்கள் கையிருப்பு இருப்பதில்லை. பழைய பேருந்துகளிலிருந்து கழற்றியும், கையில் இருப்பதைக்கொண்டும் பேருந்துகளைச் சரிசெய்யும் அவல நிலைதான் இருக்கிறது. தேவையான பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும். பழைய பேருந்துகளை நீக்கிவிட்டு, புதிய பேருந்துகளை வாங்க வேண்டும். அப்போதுதான் பிரச்னைகள் தீரும்... போக்குவரத்துத்துறையை மீட்டெடுக்க முடியும்" என்றார்.

அடமானத்துக்குப்போன கழகச் சொத்துகள்! திவாலாகும் போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம்?

இது ஒருபுறமிருக்க, அரசு போக்குவரத்துக் கழகச் சொத்துகள் அடமானத்துக்குப்போவதும் தொடர்கதையாகிவருகிறது. 2017-ம் ஆண்டில், அப்போதைய அதி.மு.க அரசு இருந்தபோது, கோவை போக்குவரத்துக் கழகம் 1,549.6 கோடி ரூபாயும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் 580 கோடி ரூபாயும், மதுரை போக்குவரத்துக் கழகம் 363 கோடி ரூபாயும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திடமிருந்து கடன் பெற்றிருந்தன. இதுபோக, அரசுப் பேருந்துகளை வைத்துத் தனியார் வங்கிகளிலும் சுமார் 443.18 கோடி ரூபாய்க்குக்

கடன் பெற்றிருந்தன போக்குவரத்துக் கழகங்கள். 'அதிமுக அரசுக்குச் சற்றும் சளைத்ததில்லை திமுக அரசு' என்று நிரூபிக்கும் விதமாக, கழகச் சொத்துகள் அடமானம்போவது இப்போதும் தொடர்கிறது.

இது தொடர்பாக, திருப்பத்தூரைச் சேர்ந்த 'பத்து ரூபாய் இயக்கத்தின்' ன்' மாவட்ட அமைப்பாளர் ருமன்சார், ஆர்.டி.ஐ மூலமாகச் சில தகவல்களைப் பெற்றிருக்கிறார். அவரிடம் பேசினோம். "தமிழ்நாடு அரசின்கீழ் வங்கி சாரா நிதி நிறுவனமாக, தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் செயல்படுகிறது. முழுக்க முழுக்கப் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படும் இந்த நிறுவனத்திலிருந்து, இஷ்டத்துக்குக் கடன் வாங்குகிறது போக்குவரத்துத்துறை. சில நாள்களுக்கு முன்பு எனக்குக் கிடைத்த தரவுகளின்படி 31 மார்ச், 2024 வரை கோவை போக்குவரத்துக் கழகம் 3,218.77 கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறது. இதற்கு உரிய வட்டி செலுத்தாததால், 1,037.01 கோடி மதிப்பிலான 44 சொத்துகளை அடமானம் வைத்திருக்கிறது. அதேபோல, மதுரை போக்குவரத்துக் கழகம் வாங்கிய 453 கோடி ரூபாய்க்குத் தனது சொத்தை அடமானம் வைத்திருக்கிறது. இதேபோல பல போக்குவரத்துக் கழகங்கள் இஷ்டத்துக்குக் கடன் வாங்கிக் குவித்திருக்கின்றன. நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கு இப்படி கடனை வாரி வழங்கினால், அது நிச்சயம் திரும்பி வர வாய்ப்பே இல்லை. இந்த நிலை நீடித்தால், போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் திவாலாகும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், அதில் நிதிப் பங்களிப்பு செய்த பொதுமக்கள் நஷ்டமடைவார்கள். அவர்களுக்கு இந்த அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?" என்றார் கொதிப்புடன்.

"அனைத்து பிரச்சினைகளும் சரி செய்யப்படும்'

அனைத்து பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் சிவசங்கரிடம் விளக்கம் கேட்டோம்."கடந்தமுறை கலைஞர் முதல்வராக இருந்த போது 15000 பேருந்துகளை வாங்கினார்.ஆனால் கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் 14000 பேருந்துகள்கூட வாங்கவில்லை அதனால்தான் தற்போது பழைய பேருந்துகள் அதிகமாக ஓடுகின்றன. இப்போது அதை நிறுத்தினால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டு கொரோனா இருந்ததால், புதிய பேருந்துகளை வாங்க முடியவில்லை. பின்னர். பேருந்து வாங்க டெண்டர் போடப்பட்டபோது, 'மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பேருந்து வாங்க வேண்டும்' என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் காலதாமதமானது. பல இடர்ப்பாடுகளைத் தாண்டி தற்போது 7,000 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டு, வேலைகள் முடியும் தறுவாயில் இருக்கிறது. அந்தப் பேருந்துகள் வந்துவிட்டால், பிரச்னை தீர்ந்துவிடும். 20,000 பேருந்துகளில் ஓரிரு பேருந்துகளில் 'படிக்கட்டு கழண்டுவிட்டது. சீட் ஆடுகிறது. என்பது பராமரிப்பு செய்யும் அதிகாரிகளின் தவறு. அதற்கு மொத்த அரசும் தவறு என்றால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இதற்கு முன்பு இருந்ததைவிட, போக்குவரத்துத் துறை சிறப்பாகச் செயல்படுகிறது. வரும் காலங்களில் அனைத்துப் பிரச்னைகளும் சரிசெய்யப்படும்" என்றார்

தமிழக அரசு, போக்குவரத்துத்துறையைக் கையாளும்விதம் மிகுந்த கவலையளிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்வதோடு, ஒரு பொதுத்துறை நிறுவனம் வீழ்ந்துவிடாமல் காக்கவேண்டியதும் அரசின் பொறுப்பு. அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வாரா முதல்வர்?

- ஜூனியர் விகடன்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு