ஜாலியன் வாலாபாக்: தீராத விடுதலை தாகம்!
செந்தளம்

அக்டோபர் புரட்சியை தேசிய எல்லைகளுக்கு உள்ளேயே நிகழ்ந்த ஒரு புரட்சியாக மாத்திரமே கருதிட முடியாது. அது நாடுகளுக்கு இடையே நிகழ்ந்த உலக அமைப்பின் பிரதானமான ஒரு புரட்சியாகும். ஏனென்றால் மனித குலத்தின் உலக சரித்திரத்தில் ஒரு (அடிப்படையான) தீவிர திருப்பத்தை பழமை அடைந்துவிட்ட முதலாளித்துவ உலகத்திலிருந்து ஒரு புதிய சோசலிச உலகத்திற்கான திருப்பத்தை குறிக்கிறது.
மனித குல வரலாற்றில் அடிப்படையான ஒரு மாற்றத்தை குறிக்கும் இப்புரட்சி உலக முதலாளித்துவத்தின் சரித்திரத்தின் தலைவிதியில் நேர்ந்திட்ட ஒரு அடிப்படையான மாற்றத்தை குறிக்கிறது. உலக தொழிலாளி வர்க்க விடுதலை இயக்கத்தில் நிகழ்ந்திட்ட ஒரு அடிப்படையான மாற்றத்தை குறிக்கிறது. உலகம் முழுதும் உள்ள சுரண்டப்பட்ட மக்களின் அமைப்பு ரீதியான போராட்ட வழிமுறைகளிலும் வடிவங்களிலும் வாழ்க்கை முறைகளிலும், மரபுகளிலும், பண்பாட்டிலும், சித்தாந்தத்திலும் நிகழ்ந்திட்ட அடிப்படையான ஒரு மாற்றத்தினை குறிக்கிறது. எல்லா நாடுகளிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் அக்டோபர் புரட்சியின்பால் கொண்டுள்ள ஆழ்ந்த அனுதாபத்தின் மூலாதாரமும் ஆகும். அவர்கள் அக்டோபர் புரட்சியை தங்களது சொந்த விடுதலையையும் உறுதிப்படுத்தும் ஒன்றாக கருதுகிறார்கள். அக்டோபர் புரட்சி உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சியின் மீது செல்வாக்கு செலுத்துகிற அடிப்படையை கொண்டதாகும் என ஸ்டாலின் விரித்துரைத்து கூறினார்.
இப்படி மனித குல வரலாற்றின் வசந்தகால வாயிற் கதவை திறந்துவிட்ட அக்டோபர் புரட்சி இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. மகத்தான அக்டோபர் புரட்சியை,
"ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி கொடுங்கோலன் அலறி விழுந்தான்"
என அக்டோபர் புரட்சியை வாழ்த்தி பாடிய பாரதி, "வையகத்தீர் புதுமை காணீர்!" என தனது கவிதையால் அழைத்தான்.
ஆம் இவ்வையகத்தில் அனைவரையும் தம் புதுமையின்பால ஈர்த்தது அக்டோபர் புரட்சி. உலகில் எங்கெங்கும் எழுந்த விடுதலை குரல்களுக்கு தாயாகிப்போனது அக்டோபர் புரட்சி. உலகை சுரண்டி கொழுத்த ஏகாதிபத்தியங்கள் அலற ஆரம்பித்தன அக்டோபர் புரட்சியால்…
அக்டோபர் புரட்சின் தாக்கம் விடுதலை கனல்களை இந்தியாவிலும் பரவ செய்தது. அதனை ஒடுக்குவதற்கு பேய் வெறியோடு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மிக கொடூரமாக பாய்ந்தது. ரஷ்ய புரட்சி இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மேல் தாங்க முடியாத அனல் காற்றை வீசியது. அடக்குமுறைகளை கடந்து இந்திய புரட்சியாளர்கள் மக்களை போராட்ட களத்தில் அணிவகுக்க செய்தனர். இந்திய மக்களின் விடுதலை போர்பறையை ஒடுக்க இனி பழைய சட்டங்கள் போதாது என முடிவுக்கு வந்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.
புரட்சியை ஒடுக்குவதற்காக 1918 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் நாள் செடிசியல் என்ற கமிட்டி ஒன்றை அமைத்தது. இக்கமிட்டிக்கு பிரிட்டிஷ் நீதிபதி ரௌலட் என்பவன் தலைமை வகித்தான். இந்த செடிசியல் கமிட்டிக்கு ரௌலட் தலைமை வகித்ததனால் இக் கமிட்டி ரௌலட் கமிட்டி என்று அழைக்கப்பட்டது. விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்த கமிட்டி ரௌலட் 1 சட்டம். ரௌலட் 2 சட்டம் என வெறித்தனமான சட்டங்களை கொண்டு வந்தது.
அச்சட்டங்களின்படி,
> புரட்சியாளர்கள் என்று சந்தேகப்படும் ஒருவரை வாரண்டின்றி கைது செய்யலாம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறை வைக்கலாம் காரணம் காட்ட தேவையில்லை
> அவர் வசிக்க வேண்டிய இடத்தை அரசே நிச்சயித்து அவரது நடமாட்டத்தை அன்றாடம் போலீசிடம் அறிவிக்க வேண்டும் என கூறலாம்
> குற்றங்களை நிரூபிக்க சாட்சிகள் இல்லாவிடிலும் கூட தண்டனை தரலாம்
> நீதிமன்றத்தில் விசாரணை ரகசியமாகவே நடைபெறும்
> இந்திய சாட்சிய சட்டம் அதற்குப் பொருந்தாது
> விசேஷ நீதிமன்ற தீர்ப்புக்கு மேல்அப்பீல் கிடையாது.
> எந்த வீட்டையும் வாரன்டின்றி போலீசார் சோதனையிடலாம்
> நீதிமன்றத்தில் தங்கள் சார்பில் வாதாட வக்கீல்களை நியமிக்க முடியாது
> குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜராகி வாதாடவும் கூடாது
இப்படி கொடூரத்தனமான சட்டங்களை கொண்டு வந்தது கமிட்டி.
இத்தகு ரௌலட் சட்டத்திற்கு எதிரான எதிர்ப்புக்குரல் நாடெங்கும் ஒலித்தது. தமிழகத்திலும் ரௌலட் சட்டத்திற்கு எதிரான குரல் ஓங்கி ஒலித்தது. ரௌலட் குழுவில் இடம் பெற்றிருந்த தமிழகத்தை சேர்ந்த சி.வி குமாரசாமி சாஸ்திரியை மக்கள் ரௌலட் சாஸ்திரி என்று அழைத்தனர். ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நாடெங்கும் வெடித்தன. ஆனால் 1919 மார்ச் 18 ல் சட்டத்தை இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சில் நிறைவேற்றியது.
இந்த கொடிய சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில் தமிழகத்தில் இருந்து இந்த கொடூர ரௌலட் சட்டத்திற்கு ஆதரவு குரல் கொடுக்கப்பட்டது. ரௌலட் சட்டத்தை சட்டசபை ஏற்றுக்கொண்ட பிறகு அதனை எதிர்த்து சத்தியாகிரகம் நடத்துவது நீதியா? நெறியா? என கேட்டு ஜி.ஏ.நடேசன், பி.எஸ் சீனிவாச சாஸ்திரியார், சர் எஸ்.சுப்பிரமணிய ஐயர் போன்றோர் ஆதரித்ததோடு, நீதி கட்சியும் ரௌலட் சட்டத்தை ஆதரித்தது.
நாடெங்கும் ரௌலட் சட்டத்தை எதிர்த்த தலைவர்களை பிரிட்டிஷ் அரசு கைது செய்தது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இடத்தை சொல்லாமல் பிரிட்டி அரசு மறைத்தது. பஞ்சாப் முழுவதும் கிளர்ச்சி பரவியது. பொதுக்கூட்டம் ஊர்வலத்துக்கு தடைகள் பிறப்பிக்கப்பட்டு ராணுவத்தினர் துப்பாக்கியுடன் வீதிகளில் வலம் வந்தனர். தடையை மீறி ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் மக்கள் குவிந்தனர். கோட்டை போன்று நாலாபுறமும் சுவரால் சூழப்பட்டு இருந்த - வரவும் போகவும் ஒரே வழி மட்டுமே இருந்த அந்த மைதானத்தில் சுமார் 30000 பேர் தலைவர்கள் நடத்தப் போகும் கண்டன உரையை கேட்க ஆவலுடன் தயாராய் காத்திருந்தனர்.
அப்போது அங்கே ஹாரி டயர் 150 சிப்பாய்களுடன் வந்து ஜாலியன் வாலாபாக் மைதான வாயிலை அடைத்து பீரங்கியை நிறுத்தி சுழல் துப்பாக்கிகளை ஏந்தினான். மக்கள், வெள்ளை ஏகாதிபத்திய வெறி நாய்களை கண்டித்து ஆவேச முழக்கங்கள் எழும்பிக் கொண்டிருந்தனர். “ஃபயர்” என்று ஹாரி டயர் கத்தவும் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. மக்கள் முட்டி மோதி தப்பி ஓடினர். மைதானத்தில் இருந்த கிணற்றில் பலர் குதித்தனர். குண்டுகள் பொழிந்து கொண்டே இருந்தது. பத்து நிமிடத்தில் 1650 ரவுண்டுகள் சுடப்பட்டது. 1000க்கும் அதிகமான மக்கள் காக்கைக் குருவியை போல் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3000-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். ஜாலியன் வாலாபாக் மைதானம் ரத்த வெள்ளத்தில் பிணக்காடாய் மாறி போனது.
சுட்டேன்.. சுட்டேன்.. சுட்டேன் இந்திய நாய்களை இந்திய மண்ணிலேயே சுட்டேன். குண்டுகள் தீரும் வரை சுட்டேன்! என்று கொக்கரித்த ஜெனரல் டயரையும் கவர்னர் டயரையும் வெள்ளை ஏகாதிபத்திய வெறிநாய் பரிசு கொடுத்து கௌரவித்து மகிழ்ந்தது. நினைத்து பார்க்க முடியாத மாபெரும் இந்த வெறிச்செயலை நாடு முழுமையும் எதிர்த்து கண்டித்தது தமிழகத்தில் இப்படுகொலைகளை நியாயப்படுத்தி நீதி கட்சி வெள்ளைக்காரனுக்கு சலாம் போட்டு வெள்ளையர்களின் சாக்ஸ் போட்ட காலை நக்கியது.
ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது அங்கே நின்று வெதும்பிய ஒரு சிறுவன் தம் மக்களின் ரத்தம் கசிந்த மண்ணை எடுத்து இந்த படுகொலைகளுக்கு ஒரு நாள் பலி வாங்கியே தீருவேன்! இது சத்தியம். என சபதம் எடுத்து தீ ஜுவாலையாய் உருவெடுக்கிறான். கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு உத்தரவிட்ட மைக்கேல் ஓ டயரை இங்கிலாந்தில் அனைவரும் கூடியிருந்த பொது இடத்தில் வைத்து சுட்டுக் கொள்கிறான்.
சுட்டேன்.. சுட்டேன்.. சுட்டேன்.. என் மக்களை சுட்டு வீழ்த்திய இங்கிலாந்துகாரனை இங்கிலாந்து மண்ணிலையே சுட்டேன்! என வீரமுழக்கமிட்டு சிங்கமாக கர்ஜித்தான். நான் மரண தண்டனை பற்றி கவலைப்படவில்லை நான் ஒரு லட்சியத்தை முடித்ததற்காக இறக்கப் போகிறேன். டயர் மீது எனக்கு புகார் இருந்ததால் நான் அதை செய்தேன். அவன்தான் உண்மையான குற்றவாளி. பழிவாங்க 21 வருடங்கள் காத்திருந்தேன் எனது பணியை முடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மரணத்திற்கு பயப்படவில்லை. என் நாட்டிற்காக நான் சாகிறேன் என்று டயரை சுட்டு வீழத்திய உத்தம் சிங் முழங்கினான்.
இத்தனை ஆண்டு காலம் எம்மண்ணை அபகரித்துக் கொண்ட இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஒரு இந்தியன் அபகரித்ததாக வரலாறு இருக்கட்டும் என கர்ஜித்த அந்த மாவீரன் மறைந்தும் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
இங்கிலாந்தின் காலனிய கோர முகத்தை இன்று அமெரிக்காவின் புதிய காலனியதாச முகங்கொண்டு மோடி கும்பல் மிரட்டி வருகிறது. ரவுலட் சட்டங்களை விட கொடிய குற்றவியல் நடைமுறை சட்டத்தை அமலுக்கு கொண்டுவந்து நாட்டு மக்களை கடுமையாக ஒடுக்கி வருகிறது பாசிச மோடி ஆட்சி. ஜாலியன் வாலாபாக்குகளுக்கும் பஞ்சமில்லை. அவைகளின் வடிவம் தான் மாறுபட்டு இருக்கிறது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து உயிர்நீத்த எண்ணற்ற வீர தியாகங்கள் நினைவாக இன்று அமெரிக்காவின் புதிய காலனிய தேர்க்காலில் மக்களை நசுக்கி பலியிட்டு வரும் பாசிச மோடி கும்பலை வீழ்த்த ஜாலியன் வாலாபாக் தியாகிகளின் நினைவு நாளில் சபதம் எடுப்போம்! உத்தம் சிங்குகளாய் உருவெடுப்போம்! ஏகாதிபத்திய புதிய காலனிய ஆதிக்கம் மாய்ப்போம்!
- செந்தளம்