ஜவ்வாது மலைவாழ் பழங்குடிகளும் தொல்லியல் தடங்களும் பற்றி முனைவர் ரே.கோவிந்தராஜ் எழுதிய நூல்களின் அறிமுகம்
அ.கா.ஈஸ்வரன்
1.ஜவ்வாது மலையில் பழங்குடி மருத்துவம்- ஆகஸ்டு, 2022. (விலை-ரூ.150/-)
2.பழங்குடி வாய்மொழி வழக்காறுகள்- ஜூலை, 2023 (விலை-ரூ200/-)
3.ஜவ்வாது மலையில் தொல்தமிழ்ப் பண்பாடு-செப்டம்பர், 2023 (விலை-ரூ.160/-)
4.ஜவ்வாது மலையில் தொல்லியல் தடயங்கள்-நவம்பர் 2024 (விலை-ரூ.80/-)
வெளியீடு- பரிசல் புத்தக நிலையம், 9382853646- 882576700
தமிழகத்தில் 37 பழங்குடிகள் இருக்கின்றனர், அவர்கள் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, சமவெளி ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் வாழ்ந்து வருகிற மலையாளிப் பழங்குடிகள், தமிழகப் பழங்குடிகளில் ஏறக்குறைய பாதி அளவு எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். அதனால் மலையாளிப் பழங்குடிகளைப் பற்றி அறிந்து கொள்வது தனித்த கவனம் பெறுகிறது. ஜவ்வாது மலையில் வாழ்ந்துவருகின்ற மலையாளிப் பழங்குடிகளைப் பற்றி முனைவர் ரே.கோவிந்தராஜ் நிறைய நூல்களையும் கட்டுரைகளையும் எழுதிவருகிறார்.
பழங்குடிகள் பற்றி அறிவதற்கு ஆய்வாளர்கள் களத்திற்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டும். முனைவர் ரே.கோவிந்தராஜ் ஆய்வாளர் களத்திலேயே வாழ்ந்தவர், வாழ்பவர். இவர் ஜவ்வாது மலையாளிப் பழங்குடியில் பிறந்தவர். ஜவ்வாது மலையில் வாழும் மலையாளிப் பழங்குடிகளைப் பற்றி அறிவதில் இவரது நூல்கள் முதல்நிலைப் பெறுகிறது. இங்கே இவரது நான்கு நூல்களின் அறிமுகத்தைப் பார்க்கலாம்.
1. ஜவ்வாது மலையில் தொல்லியல் தடயங்கள் என்கிற நூல் 2024-ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் நூலாசிரியர் பேட்டியில் உள்ள கருத்துக்களை முதலில் பார்ப்போம். கிழக்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடிகள் அனைவரும் மலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர். மலையை ஆள்பவர்கள் மலையாளிகள் என்பதின் அடிப்படையில் இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஜவ்வாது மலை திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாக இருக்கிறது. 2360 அடி முதல் 3855 அடிவரை கடல் மட்டத்திலிருந்து உயர்ந்து இம் மலை காணப்படுகிறது. இங்கே இரண்டு லட்சத்துக்கு மேல் மக்கள் வாழ்கின்றனர். ஜவ்வாது மலையாளிகள் வடக்கத்தியர், தெற்கத்தியர் என்கிற இரண்டு உட்பிரிகளைக் கொண்டுள்ளனர். இருவர்களுக்கும் இடையில் திருமணங்கள் செய்து கொள்வதில்லை. இம் மக்கள் ஜவ்வாது மலையில் சுமார் 250 கிராமங்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர்.
சங்க இலக்கியத் தொகுப்பின் போது சமஸ்கிருதமயமாதல் வைதீகமயமாதல் ஏற்பட்டது போலவே, தமிழகத்தில் உள்ள பழங்குடி தோற்றத்திலும் வைதீகமயமாதல் காணப்படுகிறது. இதற்கு ஜவ்வாது மலையும் விதிவிலக்கல்ல. மகாபாரதக் கதையோடும் ராமாயணக் கதையோடும் இணைத்து கூறப்பட்டுள்ளது. இந்தப் போக்கு எந்தக் காலக்கட்டத்தில் யாரால் செய்யப்பட்டது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இந்தப் பழங்குடிகளிடம் மட்டுமல்லாது அனைத்துப் பழங்குடிகளிலும் இந்தநிலை காணப்படுகிறது.
ஜவ்வாது பழங்குடியினரின் மரபுவழி பெண் கடவுளாகத் திக்கியம்மன், நாச்சியம்மன், காளியம்மன் போன்ற பெயர்களில் காணப்படுகிறது. வேடியப்பன், வேந்தியப்பன் போன்ற ஆண் கடவுள்களும் இருக்கின்றனர். தைமாதப் பொங்கல் விழா இன்றும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். வேட்டையாடுதலும் கூத்தாடுதலும் இவர்களது தொடக்கக்காலத் தொழிலாக இருப்பதை அறிய முடிகிறது. அன்றைய மக்கள் பன்றியினை உண்டதாகச் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது, ஜவ்வாது மலையாளிகள் பன்றியினைச் சமைத்து திருமண நாள் அன்று அனைவருக்கும் பரிமாறுகின்றனர். வழிபாடுகளிலும் பன்றி கறிப் பயன்படுத்தப்படுகிறது.
உறவு முறைக்குள் திருமணங்களும் காதல் திருமணங்களும் நடைபெறுகிறது. காதல் ஏற்றுக் கொள்ளாத நிலையில் உடன்போக்கு சென்று திருமணம் செய்து கொள்ளுதலும் காணப்படுகிறது. திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குப் பரியப் பொருள் கொடுக்கப்படுகிறது. மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டும் போது மணமகள் மடியில் நீளமான வாள் வைக்கப்படுகிறது. இந்த வாள் வீரத்தையும் வேட்டையாடுதலையும் குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த இடத்தில் நூலாசிரியர் ஒரு முதன்மையான குறிப்பொன்றை பதிவு செய்துள்ளார். வனச்சட்டத்திற்கு முன்பு காடுகளில் பழங்குடிகள் வாழும் போது காடுகள் பாதுகாப்பாக இருந்ததையும், வனச்சட்டத்துக்குப் பிறகு ஐவ்வாது மலையில் 90% சந்தன மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார். மேலும் பேட்டியில், மலைப்பகுதியில் உள்ள பட்டா நிலங்களைச் சமவெளி மக்களுக்கு விற்க, வாங்க நிரந்தரத்தடை கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கையினை வைத்துள்ளார். வனச்சட்டங்கள் பழங்குடிகளின் வாழ்க்கை முறைகளை மாற்றிவிட்டது, இந்நிலையில் இந்தக் கோரிக்கையாவது நிறைவேற்றப்பட வேண்டும்.
பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மலைபடுகடாம் என்கிற நூலில் நவிரமலை குறிக்கப்படுகிறது. இந்த நவிரமலை என்பது இன்றைய ஜவ்வாது மலை என்பதை, இந்த மலையில் காணப்படும் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. ஜவ்வாது மலை பழங்குடிகளின் தடங்களை மட்டுமல்லாது, தமிழர்களின் தொல்லியல் தடங்களாகவும் காணப்படுவதை இவரது நூல்களின் மூலம் அறிய முடிகிறது. பழங்குடிகள் பற்றிய ஆய்வுக்கும் தொல்லியல் ஆய்வுக்கும் களமாக நவிரமலை என்கிற ஜவ்வாது மலை இருக்கிறது.
புதிய கற்காலக் கருவிகள் இந்த ஜவ்வாது மலையில் காணப்படுகிறது. தமிழகத்தில் புதிய கற்காலம் கி.மு.3000 இருந்து கி.மு.1000 வரை என்று நிலவியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். புதிய கற்காலக் கருவிகளில் இருந்து நாயக்கர் காலம் வரையிலான தொல்லியல் தடயங்கள் இந்த ஜவ்வாது மலையில் பதிந்திருக்கிறது. இதனால் தான் இந்த மலை பழங்குடிகளின் வாழ்வியலை அறிவதோடு தொல்லியல் தடங்களும் சிறப்பிடம் பெறுகிறது. ஜவ்வாது மலைப் பகுதிகளான திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களில் புதிய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. இந்தப் புதிய கற்காலக் கருவிகள் மாரியம்மன், பிள்ளையார் என்கிற பெயர்களில் வழிபடும் கடவுள்களாக மாற்றப்பட்டுக் கோவில்களில் வைக்கப்பட்டுள்ளது. புதிய கற்காலக் கருவிகளை உருவாக்கும் தொழிற்கூடம் புங்கம்பட்டு நாடு அடுத்தக் கீழானூர் கிராமத்தில் நாச்சியம்மன் கோவிலுக்குக் கிழக்குப் திசையில் அமைந்திருக்கின்றது.
தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு கி.மு. 1000 முதல் கி.பி.200 வரையிலான காலமாக அறிஞர்கள் கருதுகின்றனர். இந்தக் காலக்கட்டத்தில் கற்களுக்குப் பதிலாக இரும்பைப் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்தக் காலத்தில் இறந்தவர்களின் நினைவாக வைத்திடும் கற்பதுக்கை, கற்கிடை, கற்குறை, பரவல் உயர் பதுக்கை, தொப்பிக்கல், குடைக்கல், நெடுநிலை நடுகல் போன்ற வகைகளாகச் செய்து வைத்தனர். இந்தப் பெருங்கற்காலச் சின்னங்கள் கீழ்செப்பிலி, ஜமுனாமரத்தூர் வட்டம் புலியூர், வால்பாறை மற்றும் அதன் அடிவாரப் பகுதியான ஜொனை மடுவு, புதூர் நாடு அடுத்தக் கோம்பை ஆகிய இடங்களில் காணப்படுகிறது. கோம்பை கிராமத்தின் மேற்குப் பகுதியில் ஐம்பதுக்கு மேற்பட்ட கற்திட்டைகள் காணப்படுகின்றன.
குத்துக்கல் இம் மலையின் நம்மியம்பட்டு கிராமத்தின் வடதிசையில் அமைந்துள்ள காளியம்மன் வழிபாட்டுத் தளத்தில் காணப்படுகிறது. இக்கற்களின் உயரம் 10 அடியாகவும் அகலம் ஐந்து அடியாகவும் இருக்கிறது.
கல்வட்டம் இம் மலைப்பகுதியான புங்கம்பட்டு நாடு கல்லாவூர் கிராமத்தில் சின்னவட்டானூர் சலையின் கிழக்குப் பகுதியில் சின்ன அனுமன் வயல் பகுதியில் காணப்படுகிறது. நம்மியம்பட்டுக் கிராமத்தில் உள்ள காளியம்மன் வழிபாட்டுத் தளத்தில் ஏராளமான கல்வட்டங்கள் காணப்படுகிறது. மேலும் இந்த இடத்தில் நாயக்கர் காலத்து நடுகற்கள் மேல்பட்டு, புளிங்குப்பம், கீழ்காணாவூர் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
பாறை ஓவியங்கள் இம் மலைப் பகுதியில் உள்ள பட்டறைக்காடு என்னும் கிராமத்தின் வடதிசையில் ஓடும் ஆற்றுக்கு அருகிலுள்ள பாறைகளில் கோட்டோவியங்களாகக் காணப்படுகிறது. இங்கு இரண்டு குகைத்தளங்களிலும் ஐந்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள் இருப்பதைத் தி இந்து (22-01-2022) நாளிதழில் செய்தியாக வெளிவந்துள்ளது. இம் மலைப் பகுதியில் நடுகற்களும் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுகளில் பத்துப்பாட்டில் ஒன்றான மலைப்படுகாடாம் நூலில் கூறப்பட்ட நவிரமலை என்கிற பெயர் இங்க கிடைத்த கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது. இந்த ஜவ்வாது மலையின் பழைய பெயர் நவிரமலை என்பது இதன் மூலம் உறுதியாவதுடன் மலைபடுகடாம் நூலில் குறிப்பிடும் நவிரமலை என்பது இந்த ஜவ்வாது மலையே என்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது.
இம்லையின் ஜமுனாமரத்தூர் அடுத்தக் கோவிலூர் என்னும் இடத்தில் நடுகல் கல்வெட்டுக் காணப்படுகிறது. கூட்டாத்தூர், மேல்பட்டு, நெல்லிவாசல், சின்னாள்சிலை ஆகிய இடங்களில் நடுகற்கள் கிடைத்துள்ளது. ஜவ்வாது மலை பழங்குடிகளின் வாழ்வியலை மட்டுமல்லாது சங்க காலம் முதலான தொல்லியல் தடங்கள் காணப்படுவது இந்த மலையின் சிறப்பு அடங்கியிருக்கிறது.
2. ஜவ்வாது மலையில் தொல்தமிழ்ப் பண்பாடு என்கிற நூல் 2023 செப்டம்பர் மாதம் வெளிவந்தது. இந்த நூலில் ஆறு அத்தியாயங்கள் காணப்படுகிறது. 1. ஜவ்வாது மலையில் தொல்லியல் தடங்கள், 2. கீமூரான் குடியின் சமூக மரபு, 3. காத்திகை விளக்கீடு, 4. தொல்வடிவ வேளாண்மை, 5. புழங்கு பொருட்கள், 6. மூலிகை மருத்துவமும் மந்திரம் போடுதலும். ஜவ்வாது மலையோடு பிரிக்க முடியாத தொல்லியல் தடங்கள் பற்றித் தகவல்கள் காணப்படுகிறது. இம் மலையின் தொல்லியல் தடங்கள் புதிய கற்காலத்தில் இருந்து தொடங்குகிறது. புதிய கற்காலத்திய கற்களை செதுக்கிய தொழிற்கூடங்கள் கீழானூர் கிராமத்தில் நாச்சியம்மன் கோவிலுக்குக் கிழக்குத் திசையில் அமைந்திருக்கிறது. இது மட்டுமல்லாது பெருங்கற்கால அமைப்புகளான கற்பதுக்கை, கற்திட்டை, தொப்பிக்கல், நெடுநிலை நடுகல் எனப் பல காணப்படுகின்றன. இவைகள் மட்டுமல்லாது பாறை ஓவியங்களும் இருக்கிறது.
எழுத்துக்களைக் கொண்ட நடுகற்களும் காணப்படுகிறது. இந்த நடுகற்கள் பல்லவர், நாயக்கர் காலம் வரை நீடித்த வரலாற்றைக் கொண்டுள்ளது. சங்க கால மக்கள் நடுகல்லை கடவுளாக வழிபட்டதைப் போலவே இந்த ஜவ்வாது மலையிலும் நடுகற்கள் வழிபடப்படுகிறது. வனச்சட்டம் மூலம் வேட்டையாடுதல் தடைசெய்வதற்கு முன்பு, இப் பழங்குடியினர் வேட்டையாடி உணவைச் சேகரித்தனர், இப்போது அதன் நினைவாக ஆடு, பன்றி ஆகிய வளர்ப்பு விலங்குகளைப் பலியிட்டு வணங்குகின்றனர். இம் மலைவாழ் மக்களிடம் பன்றி முதன்மையான பங்கு வகிக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்துச் சடங்குகளிலும் பன்றி இறைச்சி உணவாகக் கொள்கின்றனர். அதற்காகவே ஒவ்வொரு வீட்டிலும் பன்றி வளர்ப்பதற்கென்று பன்றி பட்டி இருக்கிறது. வேட்டைச்சாமியை குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
இந்நூலாசிரியர் தொல்லியல் தடங்களை மட்டும் ஆய்வு செய்யாது, தற்போது அங்கே வாழ்ந்து வருகிற மக்களுடன் பேசி பல்வேறு தகவல்களைச் சேகரித்துள்ளார். அந்தத் தகவல்களை அளித்த தகவலார்களின் பெயரோடு அவைகளைப் பதிவு செய்துள்ளார்.
சங்க கால மக்களிடம் காணப்பட்ட கார்த்திகை விளக்கீடு, ஜவ்வாது மலை பழங்குடிகளிடம் இன்றும் தொடர்ந்து காணப்படுகிறது. கார்த்திகை தீபத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே வீட்டுச் சுவர்களுக்குச் சுண்ணாம்பு அடிக்கின்றனர், வீட்டின் உட்பகுதிகளில் மாட்டுச்சாணம் தண்ணீரில் கரைத்து பூசுகின்றனர். உலகமயமாதல் அரசின் தலையீடு போன்றவற்றினால் இத்தகைய நிலைமை தற்போது மாறிவருகிறது. இந்த மாற்றங்கள் இயற்கையாகவும் செயற்கையாகவும் நிகழ்கிறது.
ஜவ்வாது மலை பழங்குடியினர் காட்டெரிப்பு என்கிற பழமையான வேளாண்மை முறையினைக் கடைப்பிடிக்கின்றனர். சாமை, கோரை, கேழ்வரகு, துவரை போன்றவற்றைப் பயிரிடுகின்றனர். போக்குவரத்து போன்ற நவீன வசதிகள் வருவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பண்ட மாற்று முறை இருந்தது. புழங்கு பொருட்கள் என்கிற ஒரு தனி அத்தியாயத்தில் அம்மக்கள் பயன்படுத்துகிற பொருட்களைப் பற்ற இந்நூலாசிரியர் எழுதியுள்ளார். மூங்கிலான, மரத்திலான, மண்ணாலான, இரும்பாலான புழங்கு பொருட்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
ஜவ்வாது மலையில் தொல்தமிழ்ப் பண்பாடு என்கிற நூலின் இறுதி அத்தியாயம் மூலிகை மருத்துவம் பற்றிப் பேசுகிறது. மலையில் வாழும் மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் உடனடியாகக் கிடைக்காத காரணத்தால், பழங்குடி மக்கள் பழைய மூலிகை மருத்துவத்தை இன்றும் மறக்காது தொடர்ந்து பின்பற்றுகின்றனர். மருத்துவத்தில் மூலிகையோடு மந்திரத்தைச் சொல்கின்றனர். இம்மக்கள் பயன்படுத்துகிற மூலிகைகளை அறுபதாக நூலாசிரியர் பட்டியலிடுகிறார். பழங்குடிகளிடம் மூலிகை மருத்துவத்தோடு மந்திரம் இணைந்தே காணப்படுகிறது. அம் மந்திரங்கள் நன்மை செய்யக் கூடியதாகவும் தீமை செய்யக் கூடியதாகவும் இருக்கிறது. பேய் ஓட்டுதல், கண்ணேறு கழித்தல், ஏவல் பில்லி சூனியம் நீக்குதல் போன்றவற்றுக்கும் மந்திரங்கள் இருக்கின்றன. தங்களைத் தீய சக்திகளில் இருந்து காப்பாற்றுவதற்குத் தாயத்துக் கட்டும் வழக்கமும் காணப்படுகிறது. பாம்பு, மலைத்தேனி, தேள், குளவி, பூரான், சிலந்தி போன்றவற்றினால் ஏற்படும் தீங்குக்கு மருந்துகளும் மந்திரங்களும் இருக்கின்றன.
3. ஜவ்வாது மலையில் பழங்குடி மருத்துவம் என்கிற நூல் மரபு மருத்துவத்தின் மூல வேர் என்கிற விளக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நூல் 2022ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூலில் ஆசிரியர் பண்பாட்டு புவியியல், உணவுப் பண்பாடு, பழங்குடி மருத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கி எழுதியுள்ளார். ஜவ்வாது மலையின் புவியியல் அமைப்பு சந்தன மரங்கள் விளைவதற்கு ஏதுவாக இருக்கிறது. ஆசிய கண்டத்தில் அதிகமான சந்தன மரங்கள் விளையும் பகுதியாக ஜவ்வாது மலை இருந்து வருவதை இந்நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இயற்கையாகவே சந்தன மரங்கள் வளர்வதற்கான தட்பவெப்பம் நிறைந்த பகுதியாக இம்மலை உள்ளது. சந்தன மரத்தில் இருந்து உருவாக்கப்படும் சந்தன திரவியத்தைக் கொண்டு ஜவ்வாது என்கிற பெயர் இம் மலைக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஜவ்வாது மலை மக்கள் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களில் இருந்து மருத்துவப் பொருட்களைப் பெறுகின்றனர். மணத்தக்காளி, முருங்கைக்கீரை முதலாகவும் சித்திரமூல வேர், மிளவாண்ட வேர் இடையாகவும் சுக்கு, தேன் இறுதியாகவும் கொண்ட அறுபது பொருட்களை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். மகப்பேறு, விஷக்கடி, விலங்குக் கடி, உடல் நோய், வெட்டுக் காயம், சொறிசிரங்கு ஆகியவற்றுக்கு மருத்துவம் பார்க்கின்றனர், மேலும் விலங்குகளின் நோய்க்கும் மருத்துவம் அறிந்துள்ளனர்.
4. பழங்குடி வாய்மொழி வழக்காறுகள் என்கிற நூல் 2023ஆம் ஆண்டில் வெளிவந்தது. பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், கதைகள், வழக்குச் சொற்கள் என இந்த நூல் ஐந்து பகுதிகளாக இருக்கிறது. மார்கழி மாதத்தில் கம்பளிப் பூச்சிகள் தோன்றி பயிர்களை தின்று அழிக்கும். இந்தக் கம்பளிப் பூச்சியினை அழிக்கும் தன்மை நிலவுக்கு இருப்பதாக இம்மக்கள் நம்புகின்றனர். அதனால் தை மாதப் பௌர்ணமி அன்று நிலவை நோக்கிப் பாடுகின்றனர். நிலவை ஆணாகப் பாவித்து நிலாசன் என்று குறிப்பிட்டு பாடுகின்றனர்.
நிலாவே நிலாவே அல்லாறும் வந்தாங்கா
எங்க நிலாசனைக் காணோமே எங்க நிலாசன் வந்தாலே
என்னென்ன சொல்லிடு பச்சால அரிசியாம்
பலவரிசி கும்மாவாம் கும்மாங் கும்மாங் கூட்டி
கும்மாஞ்சோறு ஆக்கி பூக்களால் விளக்கேற்றி
சாரா மனைப் போட்டு சாந்திடும் நிலாசா
கோரா மனைப் போட்டு கோந்திடும் நிலாசா
- என்று இப்பாடல் தொடர்கிறது.
ஜவ்வாது வாழ் பழங்குடிகள் பழமொழிகளாக நிறைய பேசுகின்றனர், அதில் சில.
1.சட்டியில அரிசி இருக்கு ஆக்க முடியல
ஆத்தை வீட்டில் பெண் இருக்கு கட்டிக்க முடியல
2. ஒரு பிள்ளை இருப்பர்க்கு உரியில சோறாம்
நாலு பிள்ளை இருப்பவர்க்கு நடுத்தெருவில் சோறாம்
3.வேட்டைக்காரன் வீட்டிலும் ஆட்டக்காரன் வீட்டிலும்
குடிக்கத் தண்ணீர் இருக்காது
4.ஆட்டக்காரன் புழுகு சபைக்குப் போனால் தெரியும்
வேட்டைக்காரன் புழுகு காட்டுக்குப் போனால் தெரியும்
5.நூலைப் பார்த்துச் சேலை எடு
தாயைப் பார்த்துப் பெண் எடு
இதுபோன்ற பல பழமொழிகளை இந்நூலாசிரியர் திரட்டித் தந்துள்ளார்.
பழமொழிகளைப் போன்று கதைகளையும் இம் மக்கள் பேசுகின்றனர். அதில் குல தெய்வமான வேந்தியப்பனைப் பற்றிக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. வேந்தியப்பன் கதை மிகவும் சிறிய கதையாக உள்ளது.
“முன்னொரு காலத்தில் செங்கத்தை ஆண்டு வந்த மன்னருக்கு இரண்டு ஆண்கள் ஒரு பெண் என மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் மூவரும் தன் தந்தையாரின் ஆட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். வளையாம்பட்டுப் பகுதியில் மன்னனின் மகள் வேந்தியம்மாள் ஆட்சியும் இன்றைய ஜவ்வாது மலையின் (நவிரமலை) கிழக்கு அடிவாரப் பகுதியில் மூத்தவனின் ஆட்சியும் இருந்தது. அவ்வாறே இளையவன் ஜவ்வாது மலையின் கீழூர்ப் பகுதியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து ஆட்சி புரிகிறான். சில காலத்திற்குப் பிறகு மூவரும் இறந்து போக, அப்பகுதி மக்கள் அவர்களைக் கடவுளாக வைத்துக் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்தத் தெய்வங்கள் யாவும் வலையாம்பட்டு, சித்தாண்டப்பட்டு வலசை மற்றும் ஜவ்வாதுமலை கீழூர் ஆகிய பகுதிகளில் நடுக் கற்களாக உள்ளன. இது குறித்த வழக்காற்றியல் ஜவ்வாது மலை கீழூர் பகுதிகளில் உள்ளன.”
இந்த நூலின் இறுதிப் பகுதி வழக்குச் சொற்கள் என்ற தலைப்பில் காணப்படுகிறது. மக்கள் பயன்படுத்துகிற சொற்களுக்கு பொருள் விளக்கம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது
முனைவர் ரே.கோவிந்தராஜ் எழுதிய இந்த நான்கு நூல்களும் ஜவ்வாது மலைவாழ் மலையாளி பழங்குடிகளைப் பற்றியும் அவர்கள் வாழிடங்களில் காணப்படும் தொல்லியல் தடங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. மொத்தத்தில் இந்த நூல்கள் வரலாற்றுத் தடங்களைப் பதித்துள்ளது.
(நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் 2026 ஜனவரி மாத இதழ்)
அ.கா.ஈஸ்வரன்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு