போதைப் புழக்கத்தை போஷித்து வளர்த்த திமுக ஆட்சி!
அறம் இணைய இதழ்
போதைப் பொருள் ஒழிப்பு என்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. கலைத் துறையை சேர்ந்தோர் பொறுப்புணர்வோடு படைப்புகளை தரவேண்டும். ஆசிரியர்,பெற்றோர், பிரபலங்கள் அனைவருக்கும் இதில் பொறுப்புள்ளது என்று கூறும் முதல்வர் ஸ்டாலின் இதில் ஆட்சியாளர்கள், கட்சிக்காரர்கள் பொறுப்பை தட்டிக் கழித்தால் எப்படி?
தமிழகத்தில் ஐந்தாண்டு திமுக ஆட்சியில் போதைப் பொருட்களின் புழக்கமும், பயன்பாடும் முந்தைய நிலைமையை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதுவும் இன்று ஆட்சியிலும், ஆட்சியில் உள்ள கட்சியிலும் உள்ள திமுகவினர் தான் இதைல் முன்னிலை வகிக்கின்றனர். நியாயப்படி தன் கட்சி நிர்வாகிகளிடமும், ஆட்சி அதிகாரத்தின் பல நிலைகளில் உள்ள தன் கட்சி சகாக்களிடமும் தான் முதலில் போதை பொருட்கள் தடுப்பு பிரசங்கத்தை நிகழ்த்தி இருக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள ம.சுப்பிரமணியன் ”தமிழகத்தில் எங்கும் கஞ்சா பயிரிடுவதே இல்லை. முற்றிலும் கஞ்சா பயிரிடாத மாநிலம் தமிழகம் தான்” என்றார். இது உண்மை தான். ஆனால், தமிழகத்தை கஞ்சா பயிரிடபடாத மாநிலமாக்கி – கஞ்சா பயிரிடலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியவர் – ஜெயலலிதா தான்.
ஆனால், தற்போது இதில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாத அளவுக்கு தமிழகத்தில் கஞ்சா புழக்கம் வரலாறு காணாத விதத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு ஆட்சியாளர்களின் அணுகுமுறையும் முக்கிய காரணமாகும்.
தமிழக முதல் அமைச்சரே தன் பேச்சில் தமிழகத்தின் சில வட மாவட்டங்களில் சமீபத்தில் மட்டுமே ஒரு லட்சம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதை சொல்லி உள்ளார்.
சமீபத்திய புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தமிழகத்தின் பல பகுதிகளில் உயர்ரக கஞ்சா ஒ.ஜி என்ற வகை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்களின் புழக்கம் பரவலாக உள்ளது. அதுவும் அடித்தட்டு நிலையில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் கூட போதை பழகத்திற்கும், டாஸ்மாக் மதுவிற்கும் பழக்கமாகி உள்ளனர். இளம் மாணவர்களுக்கு கிடைக்கும் அளவுக்கு போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. போதை பொருட்களின் சகவாசத்தால் இளம் வயதிலேயே கண்மூடித்தனமான குற்றச் செயல்களில் ஈடுபட்டு, சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் கத்தியால் தாக்கி உள்ளனர். சமீபத்தில் திருத்தணியில் நான்கு சிறார்கள் வட மாநில இளைஞரை வெட்டியதே சாட்சி!
2025 ஆம் ஆண்டில், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சென்னை மண்டலத்தினர் மட்டுமே 2,362.770 கிலோ போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர். இதில் 2,344.470 கிலோ கஞ்சா மற்றும் 11.725 கிலோ செயற்கை போதைப் பொருட்கள் உள்ளிடவை உள்ளன. மேலும், சுங்கத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனையில் 7.618 கிலோ கொக்கைன் பறி முதல் செய்துள்ளனர். இந்தக் கடத்தல் வழக்குகளில் மொத்தம் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிகச் சமீபத்திய சம்பவங்கள்;
மிக சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் மரியகீதாவின் மகன் ஜெர்சன் 350 கிராம் பெறுமானமுள்ள கஞ்சாவோடு பிடிபட்ட போது போலீசையே மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த பெண் திமுக கவுன்சிலரே காவல் நிலையம் வந்து மகனை கைது செய்ததற்காக கலாட்டா செய்துள்ளதும், அமைச்சர் கீதா ஜீவனும் போலீசாரை போனில் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக் கூறியதும் பத்திரிகைகளில் அம்பலப்பட்டன.
ஆவடி பகுதிகளில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 510 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, 90 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சா எரித்து அழிக்கப்பட்டுள்ளது. 2025 -ம் ஆண்டு மட்டுமே ஆவடியில் மொத்தம் 581 வழக்குகள் பதிவாயின. இவற்றில் பறிமுதல் செய்யப்பட்டதோ சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள 2,892 கிலோ கஞ்சாவாகும். இவையும் எரித்து அழிக்கப்பட்டுள்ளது.
இதே ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் 2024 -ம் ஆண்டும் சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 399 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதையொட்டி 112 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
டிசம்பர் 30 கடலூர் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேகமாக சென்ற ஒரு காரை மடக்கி பிடித்ததில் 375 கிலோ குட்கா சிக்கியுள்ளது.
டிசம்பர் 31 ஆம் தேதி திருவான்மியூர் பேருந்து நிலையத்தருகே இரு வட மாநில இளைஞர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்ததில் அவர்களிடம் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் ( 2023)பேசியவை;
கடந்த 2020 அதிமுக ஆட்சியில், கோபா சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் 40,246. ஆனால் திமுக ஆட்சியில் இது வரை பதிவான வழக்குகள் 63,656. அதிமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டவர்கள் 37,846, திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 65,480. அதிமுக ஆட்சியில் 2020ல் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் 1 லட்சத்து 22 ஆயிரம் கிலோ. ஆனால் திமுக ஆட்சியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் 3 லட்சத்து 37,295 கிலோ. 2016 அதிமுக ஆட்சியை எடுத்துக்கொண்டால், 2020 NDPS சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குகள் 5,403. ஆனால் திமுக ஆட்சியில் 2022ல் மட்டும் 10 ஆயிரத்து 391 வழக்குகள்… என்று பட்டியல் தந்துள்ளார்!
இப்படி ஸ்டாலின் வாசித்த பட்டியலில் திருச்சி மாவட்டம், துறையூர் நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை படுஜோராக தொடர்ந்து நடைபெற்று வந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டதில் காரில் 2 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த திமுக இளைஞர் அணி பிரமுகர் அருண்குமார் போன்றவர்களும் கைதானார்கள் என்பது அவருக்கு தெரிவிக்கப்படவில்லை போலும்.
மற்றவர்கள் எழுதி கொடுத்ததில் கொஞ்சம் கூட மைண்டை செலுத்தி உள்வாங்கி பேசாமல், அப்படியே வாசித்து பழக்கப்பட்ட ஸ்டாலின் அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் குற்றங்கள், அதிகரித்ததற்கும், போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்தற்கும் தன்னுடைய சட்டமன்ற புள்ளிவிபர பேச்சே அத்தாட்சியாகிறது என்பதை உணர்ந்து கொள்ளாதவராக முதலமைச்சர் பொறுப்பில் இருக்கிறார்.
சென்னையின் மைய பகுதியான எழும்பூர் சட்டமன்ற தொகுதியின் திமுக பகுதி செயலாளர் சுதாகர் என்பவர் சென்னையில் பரவலாக கஞ்சா வியாபாரிகள், விற்பனைப் புள்ளிகளிடம் மாமூல் வாங்கி தன் செல்வாக்கில் இந்த போதை பொருள் புழக்கத்திற்கு துணை போகிறார் என்னும் செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகியும் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதோ சமீபத்தில் நாகப்பட்டினத்தில் திமுக பிரமுகர் லட்சுமணன் 300 கிலோ கஞ்சா கடத்தியதில் தன் கூட்டாளிகளுடன் கைதானார். அந்த கஞ்சாவின் மதிப்பு 60 லட்சம் என்கிறது, காவல்துறை.
போதைக் கடத்தல் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் முதல்வர், துணை முதல்வர் ஆகியோருடன்!
ரூ 2000 கோடி பெறுமானமுள்ளபோதைப் பொருள் கடத்தல் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து, கைது செய்தது மறக்கக் கூடியதா?
ஆக, மொத்தத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 107 டன் கஞ்சா, 3.59 லட்சம் போதை மாத்திரைகள் மற்றும் 2,412 மெத்தப்பெட்டமைன்,கொக்கைன் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதானது தமிழகத்தில் எந்த அளவுக்கு போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது என்பதற்கு அத்தாட்சியாகும்.
இவையெல்லாம் ’’நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்’’ என காவல்துறை சொல்லிக் கொள்வதற்கான புள்ளிவிபரங்கள் தானே. பொதுவாக பறிமுதல் செய்யப்படுவது என்பது புழகத்தில் உள்ளதைக் காட்டிலும் மிகக் குறைவே என்பதை யாவரும் அறிவர்.
தமிழக அரசே போதைப் பொருளான மதுவை அரசாங்க அதிகார பலத்துடன்- பல இடங்களில் மக்கள் எதிர்ப்புகளையும் ஒடுக்கி – அதி தீவிரமாக விற்பனை செய்து கொண்டே – போதை பொருட்கள் ஒழிப்பு பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது.
ஏதோ போதை பொருட்கள் புழக்கத்தை எதிர்ப்பது போல பாசாங்கு காட்டக் கூடாது. உங்கள் முதுகைப் பாருங்கள்! அதில் வண்டி, வண்டியாக அழுக்கு படிந்து கிடக்கின்றது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/23685/dmk-govt-support-drugs/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு