பாஜக ஆட்சியில் கிறிஸ்தவர்கள் சந்தித்த வன்முறைகள்!

அறம் இணைய இதழ்

பாஜக ஆட்சியில் கிறிஸ்தவர்கள் சந்தித்த வன்முறைகள்!

கல்விக்கும், மருத்துவத்திற்கும் கணிசமான பங்களித்து வரும் கிறித்துவ சமுதாயத்தை கடும் தாக்குதலுக்கு இலக்காக்கி செயல்படுகிறது பாஜக என்பதை உறுதிபடுத்த இந்த தரவுகளே போதும்! தேவாலயங்களை தீக்கிரையாக்குதல், கிறித்துவர்கள் மீது அவதூறுகள், அராஜகங்கள்..என நீளும் சம்பவங்களின் பதற வைக்கும் பட்டியல்;

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு சமயம் பரப்புவதற்காக வந்த கிறித்தவர்கள் கிறித்தவ சமயத்தை பரப்பியதோடு, இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள பற்பபல இனங்களின் மொழியையும், பண்பாட்டையும், இனக்குழு அடையாளங்களையும் பாதுகாத்து வளர்த்தனர்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அறியாமையில் வாழவைக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, மருத்துவம், ஆய்வுமுறை, அறிவு போன்றவற்றை கொடுத்து ஆளுமைமிக்கவர்களாக மாற்றினர். தனியுடைமையாக இருந்த கல்வியை பொதுவுடைமையாக மாற்றித் தந்தார்கள்! சிந்திக்க மறந்தவர்களையும், மறுத்தவர்களையும் சிந்திக்க தூண்டியவர்கள் அந்த வகையில் இந்திய ஒன்றியத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் பெரும் பங்களிப்பைச் செய்தவர்கள் கிறித்தவர்கள்.

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின்படி கிறித்தவர்கள் இந்தியாவில் 2.3 விழுக்காடு உள்ளனர். கிறித்துவம் திணிக்கப்பட்டிருந்தால் இந்த விழுக்காடு அதிகமாக இருந்திருக்கும். இந்த நாட்டை உருவாக்க பாடுபட்ட கிறித்துவர்களை, குறுகிய மனம் கொண்ட சிலர் பாஜக ஆளும் அரசின் அனுசரணையுடன் துன்புறுத்தி, கொலை செய்கின்றனர். இது இந்திய ஒன்றிய அரசமைப்புக்கு எதிரான செயலாகும்.


புள்ளி விபரங்கள்

2014 முதல் 2018 வரை 1,457 தாக்குதல்கள் கிறித்தவர்களுக்கு எதிராக நடைபெற்றன.

2014 ஆம் ஆண்டு மட்டும் 120 தாக்குதல்களும்,

2015 ஆண்டு மட்டும் 365 தாக்குதல்களும்,

2016 ஆம் ஆண்டு 247 தாக்குதல்களும்,

2017 ஆம் ஆண்டு மட்டும் 822 தாக்குதல்களும்,

2018 ஆம் ஆண்டு மட்டும் 292 தாக்குதல்களும் நடந்துள்ளன.

2019 ஆம் ஆண்டில் 219 தாக்குதல்களும்,

2020 ஆம் ஆண்டில் 129 தாக்குதல்களும்,

2021 ஆம் ஆண்டு 505 தாக்குதல்களும்,

2022 ஆம் ஆண்டில் 599 தாக்குதல்களும் நடந்துள்ளன.

2021 ஆம் ஆண்டை மிகவும் கொடூரமான வன்முறை ஆண்டாக  ஒருங்கிணைந்த கிறித்தவ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.சி. மைக்கேல் கூறுகிறார்.

ஆனால், அதைவிட 2023 ஆம் ஆண்டில் 8 திங்களில் (மாதங்களில்) மணிப்பூரில் மட்டும் 525 தாக்குதல்கள் நடந்துள்ளன.

மணிப்பூரில்  642 கிறித்தவ கோவில்கள் உடைக்கப்பட்டன என்று இம்பாலின் பேராயர் தோமினிக் தனது அறிக்கையில் பதிவு செய்கிறார்.

2023 ஆம் ஆண்டில் மணிப்பூரில் 525,

உத்திர பிரதேசத்தில். 155,

சத்தீசுகரில் 84,

ஜார்கண்ட்டில் 35,

ஹரியானாவில் 32,

மத்திய பிரதேசத்தில் 21,

பஞ்சாபில் 12,

கர்நாடகாவில் 10,

பிகாரில் 9,

ஜம்மு-காசுமீரில் 8,

குசராத்தில் 7,

உத்ராகாண்டில் 4,

தமிழ்நாட்டில் 3,

இமாச்சல பிரதேசத்தில் 3,

மகாராட்டிராவில் 3,

மேற்கு வங்காளம் 3,

ஒடிசாவில் 2,

டெல்லியில் 2,

கோவாவில் 1,

ஆந்திரபிரதேசத்தில் 1,

கேரளா 1

தாக்குதல்கள் நடந்துள்ளன. அதனால், 2023 ஆம் ஆண்டில் மட்டும் 921 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த தாக்குதல்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டவையாகும். ஆவணப்படுத்தப்படாமல் நடந்த தாக்குதல் எண்ணிலடங்காதவையாகும். சாட்சியம் இல்லாத தாக்குதல்கள் பல நூறுகள் நடந்துள்ளன. மறைமுகமான தாக்குதல்கள் ஏராளமாக நடந்துள்ளன.


தாக்குதல் நடத்தியவர்கள்

இந்துத்துவா கொள்கை கொண்ட ஆர்எஸ்எஸ் என்ற தாய் அமைப்பின் வழி நடத்துதலில் ஆட்சியில் உள்ள பாரதிய சனதா கட்சியின் பாதுகாப்பிலும் பஜ்ரங்தள், விசுவ இந்து பரிசத், ஏபிவிபி, பசு பாதுகாப்பு அமைப்பு, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த தாக்குதல்கள் காவல்துறையின் சட்டப் பாதுகாப்புடன் நடைபெறுகின்றன. சில நேரங்களில் காவல்துறையும், இராணுவமும் இந்த தாக்குதல்களை முன்னின்று நடத்துகின்றன. ஆட்சியாளர்களின் அனுமதியுடன், நீதிமன்ற ஒப்புதலுடன் இந்த தாக்குதல்கள் அரங்கேறுகின்றன. ஒட்டுமொத்த அரச அமைப்புகள் இந்த தாக்குதல்கள் நடைபெற உறுதுணையாகவும், உந்து சக்தியாகவும் இருக்கின்றன.

ஆளும் அரசின் ஆதரவாளர்களான இந்துத்துவாதிகள் செய்கின்ற குற்றங்களிலிருந்து தப்பித்து, கைது செய்யப்படாமல் மேலும் கிறித்தவர்கள் மீது தாக்கதல் நடத்தி, வருகின்றனர் என்று ஆசியாவின் மானிட உரிமைப் பாதுகாப்பகத்தின் உதவி இயக்குனர் மீனாட்சி கங்குலி கூறுகின்றார். ஆட்சியாளர்கள் தங்களது ஆதரவாளர்களைக் கொண்டு சார்பு எண்ணத்துடன் கிறித்தவர்களைத் தொடர்ந்து துன்புறுத்துகின்றனர். முன்சார்பு எண்ணம் படைத்தவர்கள் சட்டத்தின் ஆட்சியை அவமதிப்பர் என்று மீனாட்சி கங்குலி எடுத்துரைக்கின்றார். பன்மைத் தன்மையுள்ள, சார்பற்ற மக்களாட்சி உள்ள நாடாக இருந்தாலும், அரசு அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சியாலும், அரசியல் ஊழலாலும், அரசியல் தெளிவின்மையாலும் இந்துத்துவா அரசு கிறித்தவர்களைத் தாக்குகிறது.

மீனாட்சி கெங்குலி

தாக்குதல் வகைகள்

ஆசியாவின் மானிட உரிமைப் பாதுகாப்பகத்தின் உதவி இயக்குனர் மீனாட்சி கங்குலி இவர்கள் ‘வயர்’ என்ற வலையொளியில் பேட்டிக் கொடுத்த போது, கீழ்கண்டவாறு கூறுகிறார். “சில அடிப்படைவாத அமைப்புகள் ஆளும் கட்சியான பாசகவின் ஆதரவுடன், பாதுகாப்புடன் இருப்பதால் இசுலாமியர்களையும், கிறித்தவர்களையும் திட்டமிட்டு தாக்குகின்றனர்” என்றார். இந்து தேசியவாத அரசாலும், ஆட்சியாளர்களின் வெறுப்பு பேச்சாலும் அடிப்படைவாதக் குழுக்கள் வன்முறையில் ஈடுபடுகின்றன.

“இந்து தேசியம்” என்ற கருத்தியல் கிறித்தவர்களுக்கு எதிராக பரப்பப்படுகிறதென பன்னாட்டு கிறித்தவ பாதுகாப்பு அமைப்பு தெளிவுபட விளக்குகிறது. கிறித்தவர்களைப் போல பிற சிறுபான்மையினரை திட்டமிட்டு துன்பறுத்துதல், சமய சுதந்திரத்தை பறித்தல் போன்ற மானிட உரிமை மீல்கள் நடைபெறுகின்றன என்று பன்னாட்டு கிறித்தவ பாதுகாப்பு அமைப்பின் மனித உரிமை பாதுகாப்பின் இயக்குனர் திருமிகு மத்தியாசு பெர்பெத்துலா உலகுக்கு அறிவிக்கின்றார்.

கிறித்தவர்கள் மேலை நாட்டைச் சார்ந்தவர்களாகவும், இசுலாமியர்கள் பாகிஸ்தானைச் சார்ந்தவர்களாகவும் சித்தரிக்கப்பட்டு, இந்துகள் மட்டுமே இந்தியர்கள் என்ற கருத்துகளை பரப்புகின்றனர். ஏழு மாநிலங்களில் மதமாற்றுத் தடைச் சட்டத்தை நிறைவேற்றி, கிறித்தவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து,  கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். கிறித்தவர்கள் இந்துகளை கட்டாயமாக மதம் மாற்றுகின்றனர் என்று கூறி, கிறித்தவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். கிறித்தவர்களாக இருப்பவர்களை மீண்டும் தாய் மதமான இந்து மதத்திற்கு வரவேண்டுமென்று கூறி, கிறித்தவர்களைத் துன்புறுத்துகின்றனர்.

போதகர்கள், கிறித்தவ மக்களை தாக்குதல், வழிபாடு நடந்து கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்து மக்களை சிதறடித்தல், வழிபாட்டை நிறுத்துதல், வழிபாட்டு தலங்களை இடித்தல், கிறித்தவ கோவில்களை மூடுதல் (2018ல் மட்டும் 100 கோவில்கள் மூடப்பட்டுள்ளன), வழிபாட்டு தலங்களை புதிதாக அமைக்கவோ அல்லது ஏற்கனவே இருக்கும் வழிபாட்டுத் தலங்களை புதுபிக்கவோ அரசு அதிகாரிகள் அனுமதி தருவதில்லை. அவ்வாறு அனுமதி தந்தாலும், அதை செயல்படுத்த இந்துத்துவவாதிகள் விடுவதில்லை.

கர்நாடகாவில் கிறித்துவர்களுக்கு எதிரான வன்முறை

இந்துத்துவவாதிகள் கிறித்தவர்களை மிரட்டுதல், ‘லவ் ஜிகாத்தை’ பயன்படுத்தி, சமயக் கலப்பு திருமணத்தை தடை செய்கின்றனர். தமிழ்நாட்டில் 2014 முதல் 2022 வரை 227 தாக்குதல்கள் கிறித்தவர்களுக்கு எதிராக இந்து முன்னணியினராலும் ஆர்எஸ்எஸாலும் நடைபெற்றன. அதில் மேற்கு மாவட்டங்களில் தான் அதிகம் நடைபெற்றன. அதிலும், எடப்பாடி முதல்வராக இருக்கும் போது தான் அதிகமான வகுப்புவாத தாக்குதல்கள் நடைபெற்றன என்று கோவை வழக்குரைஞர் மு. ரா. முருகவேல் கூறுகிறார்.

இந்துத்துவவாதிகளின் கட்டளைக்கு கீழ்படியும் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட கிறித்தவர்கள் முறையீட்டு மனுக் கொடுத்தால் ஏற்பதில்லை. தாக்குதல் நடத்திய இந்துத்துவா அமைப்பினர்மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. காவல்துறையினர் தாக்குதல் நடத்தும் குழுவோடு நல்லுறவை வைத்து, தாக்குதல் நடத்த தூண்டுகின்றனர். காவல் துறையினரே வழிபாட்டின் போது நுழைந்து, கிறித்தவர்களைத் தாக்குகின்றனர்.

இந்துத்துவவாதிகள் கிறித்தவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, காவல் துறையினரிடம் ஒப்படைக்கின்றனர். இந்துத்துவ வெறியர்களால் பாதிக்கப்பட்ட கிறித்தவர்களை காவல் துறையினர் அமைதிபடுத்துவர். நீங்கள் இந்துதேசியவாதிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தால், அவர்கள் மேலும் வெறித்தனமாகி, உங்கள் உயிருக்கு ஆபத்து தரும் படியாக செயல்படுவர் என்று பயமுறுத்துவதால் பாதிக்கப்பட்ட கிறித்தவர்கள் வழக்கு பதியமாட்டார்கள்.

மனித உரிமை செயற்பாட்டாளர் ஏ.சி.மைக்கேல்

காவல் துறையினர் 2023ல் மட்டும் 520 கிறித்தவ போதகர்களைக் கைது செய்தனர் என்று மனித உரிமை ஆர்வலரும், டெல்லி சிறுபான்மை கவுன்சில் உறுப்பினருமான ஏ. சி. மைக்கேல் ‘வயர்’ ஊடகத்திற்கான பேட்டியில் கூறுகிறார். மதம் மாறிய கிறித்தவர்கள் தாங்கள் நிர்பந்திக்கப்பட்டதாக காவல் துறையினரிடம் முறையிடுவதில்லை. ஆனால், எவ்வித தொடர்பில்லாதவர்களின் முறையீட்டால் காவல் துறையினர் கிறித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். ஆளும் கட்சியும், அதன் இந்துத்துவா அமைப்புகளும் காவல்துறையினரை கட்டாயப்படுத்தி, கிறித்தவர்களை கைது செய்ய தூண்டுகின்றனர்.

தமிழ்நாட்டில் கிறித்தவர்களுக்கு எதிரானவை

2014 முதல் 2022 வரைக்கும் 227 இந்துத்துவவாதிகள் கிறித்தவர்களை தாக்கி உள்ளனர் என்று ஒருங்கிணைந்த திருஅவைகளின் அமைப்பு (United Churches Forum – UCF)  2022 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் தனது அறிக்கையில் தெரிவித்தது. இதில் கொங்கு மண்டலத்தில் மட்டும் 117 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

2018 ஆம் ஆண்டு மே திங்கள் 22 ஆம் நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கிறித்தவர்களை குறி வைத்து சுடுதல், தடியால் தாக்குதல், பொய் வழக்குகள் போடுதல், இரவு நேரங்களில் கிறித்தவ வீடுகளில் புகுந்து சோதனையிடுதல், மிரட்டுதல், கெட்ட வார்த்தையால் திட்டுதல் போன்ற மனித உரிமை மீறல்களை நடத்தியது அதிமுக அரசின்  ஆட்சியாகும்.

2019 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 19, 20 ஆம் நாள் தூய இலொயோலா கல்லூரி நடத்திய வீதி விருது விழாவில் இடம்பெற்ற முகிலனின் வரைபடங்கள் இந்துக்களுக்கு எதிரானவை என்று தமிழ்நாடு பாசகவின் ஹெச். இராசா கல்லூரிக்கு எதிராக கலவரம் நடத்தினார்.

2020 ஆம் ஆண்டு சூன் திங்கள் 1 ஆம் நாள் ஈரோடு மாவட்டம் கொங்கல் நகரம் என்ற ஊரில் உள்ள போதகர் நல்லமுத்து சாமுவேல் நடத்திய வழிபாட்டுத் தலத்தை 30 இந்துத்துவவாதிகள் வந்து இடித்து தள்ளினர்.

2022 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் நாள் தஞ்சாவூர் மாவட்டம் மைகேல்பட்டியில் உள்ள அருட் சகோதரிகள் நடத்தும் பள்ளியில் படித்த லாவண்யா என்ற மாணவி பூச்சி மருந்து சாப்பிட்டு, தற்கொலை செய்தாள்.  மாணவி லாவண்யாவை மதமாற அருட்சகோதரிகள் கட்டாயப்படுத்தியதால் இறந்தாள் என்று பாசக தலைவர் அண்ணாமலையின் தலைமையில் இந்துத்துவா அமைப்புகள் சேர்ந்து இந்த மாணவியையும், அவளது தாயையும் நிர்பந்தித்து வாக்கு மூலம் வாங்கினர். பொய்யை, மெய்யாக்கும் வண்ணம் பாசகவினர் பெரிய போராட்டங்களை நடத்தி, மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி கிறித்தவர்களின் கல்விப் பணியை கேவலப்படுத்தினர்.


2023 ஆம் ஆண்டு அரியலூர் நகரத்தில் உள்ள கத்தோலிக்க கோவிலில் உள்ள பங்குதந்தையிடம் மிரட்டி பணம் பறிக்க இந்துத்துவா அடிவருடிகள் பார்த்தனர்.

2023 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் உள்ள தனிநபர் நடத்தி வந்த ‘இல்லத் திருஅவையை’ அடித்து உடைத்து சீரழித்தனர்.

இது போன்று ஆவணப்படுத்தபடாத தாக்குதல்கள் ஏராளமாக உள்ளன. இந்துத்துவவாதிகள் பார்ப்பனர்களுக்கு மட்டும் பணிபுரியும் அடிமைகளாக வாழ்கின்றனர் .பார்பபன கருத்தியலுக்கு எதிரான அனைத்து சக்திகளையும் துடைத்தெறிவது இதன் நோக்கமாகும்.

வெறுப்புபேச்சுகள்

2021 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் துர்கா பூசை நேரத்தில் தனது உறுப்பினர்களிடம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்  “கிறித்தவர்களின் தலையை வெட்டுங்கள். இந்துகள் மதம் மாறுவதை நிறுத்துங்கள். வடகிழக்கு இந்திய ஒன்றியத்தில் கிறித்தவ மக்கள் தொகையை குறைக்க வேண்டும்” என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

2021 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் மத்திய பிரதேச பாசகவின் சட்டமன்ற உறுப்பினர், இராமேசுவர் சர்மா “கிறித்தவ பாதிரியார்கள் இல்லாத நாட்டை உருவாக்குவோம்  என்று கூறினார். வலதுசாரி இந்து தலைவர் பரமாத்மானந் “கோடாரிகளைக் கொண்டு கிறித்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். தலையை வெட்டவேண்டும். அவர்களது பரப்புரை “நிறுத்து, எச்சரி, கொல்லு என்று கூறுகிறார்.

உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் கோலின் கொன்சால்வுசு தவறான செய்திகளை வழக்காக பதிவு செய்துள்ளார் என்றும் கூறுகிறார். 2024 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் நாள் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என். இரவி கால்டுவெல், ஜியு. போப்பு படிக்காதவர்கள் என்று அவதூறுகளை பரப்பினார். அவர்கள் எழுதிய நூல்கள் போலியானவை என கிறித்தவ வெறுப்புணர்வை திட்டமிட்டு வெளிப்படுத்துகிறார். இவர்களது வெறுப்பு பேச்சுகள் தான் இவ்வளவு தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தன.

கிறித்தவத்திற்கு எதிரானது

டெல்லி பல்கலைக் கழகத்தில் இந்தி பேராசிரியராக பணியாற்றும் முனைவர் அபூர்வனானந்த் “கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறை அன்றாட செயலாக்கப்படுவது மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று எச்சரிக்கின்றார்.

மனித உரிமைகளுக்கான இந்துகள் என்ற அமைப்பின் இணை நிறுவனரான சுனிதா விசுவநாத் “இந்து தீவிரவாதத்தை ஏற்க முடியாது. இந்து சமயத்தின் பெயரில் நடக்கும் தாக்குதல்களை நாங்கள் ஏற்க முடியாது” என்றார்.

பன்னாட்டு திருஅவைகளின் சட்ட ஆலோசகரான திருமிகு சின் நெல்சன் “சமய சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படவேண்டும். சமய சுதந்திரத்தை பறிக்கும் அரசை விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்” என்று கூறுகிறார்.

ஒருங்கிணைந்த கிறித்தவ அமைப்பு “கிறித்தவர்கள் வாழ தகுதியற்ற 10வது நாடாக இந்திய ஒன்றியம் மாற்றப்பட்டுள்ளது” என்று தனது அறிக்கையில் கூறுகிறது.

எனவே, இப்படிப்பட்ட வகுப்புவாத அரசு மீண்டும் அதிகாரத்திற்கு வராமல் தடுக்க மக்களாட்சியில் நம்பிக்கை வைத்திருப்போர் உழைக்க வேண்டும். ஒற்றையாட்சியை வளர்க்கும் பாசகவை புறக்கணித்து விட்டு கூட்டாட்சியை பாதுகாக்கும் கட்சியை வென்றெடுப்போம். சர்வாதிகார ஆட்சி அழிவின் அடையாளம். மக்களாட்சி வளர்ச்சியின் அடையாளம்.

கட்டுரையாளர்; . குழந்தை

முனைவர், கல்வியாளர்

சென்னை பல்கலைக் கழகம்

கட்டுரைக்கான தரவுகள்;

பன்னாட்டு சமயச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஒன்றிய நாடுகளின் ஆணையம்

ADF – All Denominations federation

International Christian Concern

United Christians Forum    ,

மேலும் சில பகுத்தறிவாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள்

அறம் இணைய இதழ்

aramonline.in /17290/attack-on-christians-in-bjp-rule/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு