சதித் திட்டங்களால் வீழ்த்தப்பட்ட வீராங்கனை!

அறம் இணைய இதழ்

சதித் திட்டங்களால் வீழ்த்தப்பட்ட வீராங்கனை!

வினேஷ் போகத் வீழ்ச்சி இயல்பான நிகழ்வல்ல, நிச்சயமாக இதுவே, அவர்களின் விருப்பமாக இருந்துள்ளது. நேருக்கு நேராக வீழ்த்த முடியாத ஒரு நேர்மையான வீராங்கனையை மறைந்திருந்து சதித் திட்டங்கள் தீட்டி, கோழைத்தனமாக சாய்த்துள்ளனர். அம்பலப்பட்டது அயோக்கியத் தனங்கள்..

பாஜகவினர் வினேஷ் போகத் மீது வெறுப்பை உமிழ்வதைப் பார்க்கும் போது,  இதற்காகவே சதி திட்டங்கள் அரங்கேறியுள்ளன..என்பது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டு வருகிறது.

“மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்று விட்டது. நான் தோற்றுவிட்டேன். இனி விளையாட மாட்டேன்” – என வினேஷ் போகத் கூறியுள்ளார். உண்மையில் மல்யுத்தம்  அவருக்கு தொடர்ந்து மகுடத்தையே பரிசளித்தது. ஆனால், அதிகார மையமோ, தன் சூதாலும், நரித்தந்திரங்களாலும்  நயவஞ்சகமாக அவரை தோற்கடித்துள்ளது.

பிரபல நடிகையும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் அவர்கள் வினேஷ் போகத்தின் தகுதி இழப்புக்கு முன்னாலேயே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்ததாவது, “ஒரு கட்டத்தில் போராட்டங்களில் பங்கேற்ற வினேஷ் போகத், மோடிக்கு எதிராக “மோடி தெரி கப்ர் குதேகி (modi teri kabr khudegi)” என்ற முழக்கங்களை எழுப்பினார். ஆனாலும், அவருக்கு தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பும் மற்றும் சிறந்த பயிற்சியும், பயிற்சியாளர்கள் மற்றும் வசதிகளும் வழங்கப்பட்டன. அதனால் தான் மோடி சிறந்த தலைவர்” என்ற பதிவானது வினேஷ் போகத் என்ற வீராங்கனையை வீராங்கனையாக பார்க்காமல், பாஜக தலைவரான பிரிஜ் பூஷன் சிங்கின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக போராடியவள் என்ற விரோதக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதையே உறுதி செய்கிறது.

பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனையும் பாஜகவைச் சேர்ந்தவருமான சாய்னா நேவால் தெரிவித்துள்ள கருத்தாவது;

“இப்படிப்பட்ட ஒரு தவறு நடந்திருக்கக்கூடாது. இதுபோன்ற வீராங்கனைகள் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் இந்த தவறை செய்திருக்கக் கூடாது. இது எப்படி நடந்தது என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. மற்றவர்கள் மீது பழியைப் போடக் கூடாது. வினேஷ் போகத் மீதும் தவறு இருக்கிறது” எனத் திருவாய் மலர்ந்துள்ளார்.

பாஜக எம்பியான பிரபல நடிகை ஹேமாமாலினி தெரிவித்துள்ள கருத்து;  100 கிராம் எடை அதிகமானதில் வினேஷ் போகத்திற்கு வாய்ப்பு பறிபோனது ஆச்சரியமாகவும், வினோதமாகவும் உள்ளது. ஒருவர் தன் எடையைப் பராமரிப்பது  மிக அவசியமானது. இது அனைவருக்குமான பாடம். விக்னேஷ் போகத் இனி எடை விவகாரத்தில் கவனமாக இருப்பார் என எண்ணுகிறேன். ஆனாலும், இனி அவருக்கு வாய்ப்பு கிடைக்காது.

நூற்றாண்டுக்கும் மேற்பட்ட ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு இந்திய மல்யுத்த வீராங்கனை இறுதிப் போட்டி வரை முன்னேறியது இதுவே முதல் முறை என்பது மட்டுமல்ல, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சர்வதேச அளவில் ஒரு முறை கூட தோல்வியே சந்திக்காத ஜப்பானிய வீராங்கனை யூ சுசாகியை வீழ்த்தியவர். அரையிறுதியில் சிம்ம சொப்பனமாக பார்க்கப்பட்ட கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதி, 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதோடு, அமெரிக்க வீராங்கனையோடு மோத இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

கடந்த காலங்களில் வினேஷ் போகத் விளையாடும் எடைப் பிரிவு 53 கிலோ. ஆனால், அதற்கு வேறொரு வீராங்கனையைத் தேர்வு செய்து இவரை 50 கிலோ பிரிவுக்கு தள்ளி நிர்பந்தித்தது, சதி திட்டத்தின் தொடக்கம்.

50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க நிர்பந்திக்கப் பெற்ற வினேஷ், அதற்காக 53 கிலோ எடையில் இருந்த தனது உடல் எடையை, 3 கிலோ குறைத்து போட்டிகளில் பங்கேற்றார். தகுதிச் சுற்றில் கூட பல இன்னல்களை சந்தித்துப் போராடி தான் 50 கிலோ எடைப் பிரிவில் தகுதி பெற்றார் என்பதும் கவனத்திற்கு உரியது.

இதே பாரீஸ் ஒலிம்பிக்கில் 50கிலோ எடைப்பிரிவில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் பங்கேற்ற போது 50 கிலோவுக்கு சரியாக மிகையாகாமல் இருந்த அவரது உடல் எடை திடீரென்று இறுதி போட்டிக்கு முதல் நாள்  2 கிலோ எடை அதிகரித்ததின் பின்னணி என்ன? அதாவது தகுதிச் சுற்று,  இறுதிச் சுற்று ,கால் இறுதி , அரை இறுதி என்று ஒவ்வொரு நகர்வாக நடைபெற்ற போட்டிகளின் போதெல்லாம் சரியான எடையில் இருந்த வீராங்கனை. தங்கம் வெல்வதற்கான இறுதிப் போட்டியில் மட்டும் ஒரே நாளில் எப்படி 2 கிலோ எடை கூடினார் என்பது பெரும் புதிராக இருக்கிறதே.

நூறு கிராம் அதிகமாக இருப்பதற்கெல்லாம் தகுதி நீக்கமா? என்பதல்ல, 10 கிராம் கூடினாலும் விதிகள் அனுமதிக்காது என்பது யாவருக்கும் தெரிந்ததே. .இதுதான் விதி. இது மாற்றமுடியாத விதி என்பது எல்லா  பயிற்சியாளர்களுக்கும் தெரியும்.

அதைவிட போகத் எப்படி இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டார்  என்பதே  பெரிய கேள்வியாக என்னை அழுத்தியது.

நேருக்கு நேர் இருவர்    மோதிக் கொள்ளும் போட்டி நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு . இந்த விதிகள் கறாரானவை. இதில் சலுகை அளித்ததாக வரலாறு இல்லை.

ஆக, விதிகள் தெளிவாக இருக்கும் போது இறுதி சுற்று வரும் நிலையில்   எப்படி இந்த அடிப்படை விஷயத்தில்  பயிற்சியாளரும், நியூட்ரிஷனிஸ்டும்  அலட்சியம் காட்டினார்கள் என்பது அனைவருக்குமான நியாயமான சந்தேகமாகும். இதற்கான உண்மையான பதில் கிடைக்குமா என்று தெரியவில்லை.

பொதுவாக இது போன்ற நிலையில் இருக்கும் வீராங்கனைகள் தங்களாகவே எதையும் சாப்பிட்டுவிட முடியாது. பயிற்சியாளரால் அனுமதிக்கப்பட்ட உணவையே எடுத்துக் கொள்ள முடியும். அந்த உணவை கூட்டவோ, குறைப்பதோ கூட இவர்களின் கைவசம் இல்லை.

அதுவும் ஒலிம்பிக் போட்டி காலகட்டத்தில் ,வீரர்கள் ஒரு டம்பளர் தண்ணீர் குடிக்க கூட பயிற்சியாளர்கள் அனுமதித்தால் மட்டுமே சாத்தியம். ஒவ்வொரு நிமிஷமும் எடை குறித்த பிரக்ஜையே பயிற்சியாளர்கள் மனதில் ஓடும், அதையே வீரர்களுக்கும் அவர்கள் நிர்பந்திப்பார்கள்.

இது குறித்து பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் எழுப்பியுள்ள ஒரு கேள்வி கவனத்திற்கு உரியது. அரையிறுதி போட்டிக்கு பிறகு வினேஷ் போகத்திற்கு ஒ.ஆர்.எஸ் கரைசல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தான் அவரது உடல் எடை 2.7 கிலோ அதிகரித்தது. இதற்கு முழுக்க, முழுக்க இந்திய ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகமே காரணமாகும்…எனக் கூறியுள்ளார்.

இந்த எடை அதிகரிப்புக்கு பிறகு அதை குறைக்க இரவு முழுவதும் தூங்காமல், ஜாகிங், ஸ்கிப்பிங், சைக்கிள் ஓட்டுதல், நீராவி குளியல் மற்றும் ரத்தத்தை வெளியேற்றுதல் என வினேஷ் போகத்தை கடும் இம்சைக்கு உள்ளாக்கி உள்ளது இந்திய ஒலிம்பிக் கமிட்டி. முதல் நாள் இரவு முழுக்க தூங்காமல் இத்தனை இன்னல்களையும் அனுபவித்து, தூக்கத்தையும் இழக்க வைக்கப்பட்ட நிலையில் ஒரு வேளை அவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தாலுமே கூட வெற்றி பெறுவது சவாலாகவே இருந்திருக்கும்… என்பதையும் நாம் கவனத்தில் கொண்டால், இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒன்று அவர் இறுதி போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது, கலந்து கொள்ளும் நிலைக்கு சென்றாலும் வெற்றி பெற்று விடக் கூடாது என்ற எண்ணத்திலேயே செயல்பட்டுள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.

போகத்தின்  குடும்பவே மல்யூத்த வீரர்கள் நிறைந்த குடும்பம் தான் . வினேஷ் போகத்தை  சிறு வயது தொடங்கி உருவாக்கி வளர்த்தெடுத்த கோச்சே அவரது மாமா தான். அவர் கைப்பிடித்த கணவரும் ஒருமல்யுத்த வீரர் தான். அவரது உடன் பிறந்த சகோதரிகளில் மூவர் இந்தியாவுக்காக விளையாடிய வீராங்கனைகள் தான். இந்தக் குடும்பக் கதையே அமீர் கான் எடுத்து சூப்பர் ஹிட்டான ‘டங்கல்’ திரைப்படம் என்பதைக் கொண்டு பார்க்கும் போது, தன் மூச்சும், பேச்சும், வாழ்வும் ஒலிம்பிக் இறுதி போட்டியில் இந்தியாவிற்கு ஒரு தங்க பதக்கம் பெற்றுத் தருவது தான் என முழு மூச்சுடன் இயங்கிய வீராங்கனை வினேஷ் போகத் துரோகச் சிந்தனையாளர்களால் நுட்பமாக வீழ்த்தப்பட்டுள்ளார்.

வினேஷ் போகத் இயல்பிலேயே ஒரு போராளி. அவரை நேருக்கு நேராக வீழ்த்த முடியாது என்பதால், முதுகிற்கு பின்னால் இருந்து அம்பு எய்துள்ளனர். அவர் ஜெயித்திருந்தால் அவரது வெற்றியை இந்தியாவின் வெற்றியாக நம் மக்கள் உணர்ந்து குதூகலம் அடைந்திருக்கலாம். ஆனால், அதை மோடியின் தோல்வியாகவே பாஜகவினரால் பார்க்க முடியும். என்ன செய்வது…? நம் துரதிர்ஷ்டம்! இப்படியும் ஒரு கூட்டம்! ஒரு தலைவர்!

(சாவித்திரி கண்ணன்)

அறம் இணைய இதழ்

https://aramonline.in/18785/vinesh-phogat-political-manipulation/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு