இஸ்ரேலில் மக்கள் எழுச்சி

தீக்கதிர்

இஸ்ரேலில் மக்கள் எழுச்சி

இஸ்ரேலின் நீதித்துறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரப்போவதாக வெளியான ஜனாதிபதி நேதன்யாஹூவின் அறிவிப்பிற்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் கிளம்பிய கடும் எதிர்ப்பு தொடர்கிறது. அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி, உள்நாட்டில் உள்ள நெருக்கடிகளைத் திசைதிருப்பும் இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகளை மீறி, மக்கள் ஆவேசமாக எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்கள். ஆட்சியாளர்களின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் மக்களுக்கு எதிராக அல்லது சட்டங்களுக்கு எதிராக இருக்கையில் நீதிமன்றங்கள் வலுவாகத் தலையிடுகின்றன. இதனால், கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, நீதித்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியை ஜனாதிபதி நேதன்யாஹூ தொடங்கினார்.

இதற்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் போர்க்கொடி உயர்த்தினார்கள். ஜனவரி மாதத்தில் இருந்தே ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. சிரியா, லெபனான் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால்தான் பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறி வருகிறது.  இந்தத் தாக்குதல்களைக் காரணம் காட்டி, நீதித்துறை சீர்குலைவு குறித்து போராட்டம் நடத்தி வரும் மக்களை அரசு அச்சுறுத்துகிறது. போராட்டம் நடத்தும் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மிரட்டுகிறார்கள். இஸ்ரேலின் நீலம் மற்றும் வெள்ளைக் கொடிகளுடன் தலைநகர் டெல் அவிவின் மையப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அரசின் மிரட்டல்களைப் பற்றிக் கவலைப்படாமல், இஸ்ரேலிய ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று முழக்கமிட்டவாறு, போராடி வருகிறார்கள். போராட்டங்களை வெளிஉலகிற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கும் அல் ஜசீரா ஊடக செய்தியாளர் ரெசுல் செர்தார், “மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்திற்குத் திட்டமிட்டு வருகிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று அரசு தொடர்ந்து எச்சரித்து வந்தது. அரசின் எச்சரிக்கைகள் மற்றும் மிரட்டல்களை மக்கள் புறக்கணித்து விட்டனர்” என்றார்.

தனிமைப்படுகிறார் நேதன்யாஹூ

மேலும் தனது செய்தியில், “இத்தகைய பொய்களெல்லாம் வீதிகளில் இறங்கிப் போராடுவதில் இருந்து எங்களைத் தடுக்காது- பாதுகாப்பு என்று சொல்வதெல்லாம் எங்களைத் தடுப்பதற்காகவே என்று மக்கள் சொல்கிறார்கள். இஸ்ரேலின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான வரலாற்றுத் தருணம் இது என்று அவர்கள் கருதுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். நீதித்துறையை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முன்மொழிவுகளைத் திரும்பப் பெறாதவரையில் போராட்டங்கள் ஓயாது என்றும் அவர் உறுதியாகக் கூறுகிறார். மற்றொரு செய்தியாளரான மார்வான் பிஷாரா, “நெருக்கடி அதிகரித்து வருவதோடு, ஜனாதிபதி நேதன்யாஹூ அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டு வருகிறார்” என்கிறார். ஆட்சியாளர்களின் தவறாக சட்டங்களைக் கையாளும் போக்குக்கு தடைகளையும், வேகத்தடைகளையும் போடக்கூடிய நீதித்துறையின் அதிகாரங்களைப் பறிப்பதாகவே புதிய முன்மொழிவுகள் உள்ளன என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் வர்த்தகம், உற்பத்தி, கல்வி உள்ளிட்ட துறைகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

- தீக்கதிர்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு