அரசு பள்ளிகளை ஒழித்துக் கட்டுவதே அரசின் திட்டம்!
அறம் இணைய இதழ்
பள்ளிக்கல்வி சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் தீர்வை -4
அரசு பள்ளிகளை சிறுகச் சிறுக அழித்து தனியாரிடம் கையளிக்கும் திட்டம், தேசியப் பின்னணியை மட்டும் கொண்டதல்ல, இதில் சர்வதேச பின்னணியும் உள்ளது. ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகள் அவல நிலையில் அழிவை நோக்கி நகர்வதும், தனியார் பள்ளிகள் தழைத்தோங்கி செழிப்பதற்கும் என்ன காரணம்?
பள்ளிக் கல்வியில் இத்தனை சிக்கல்களின் ஆணிவேர் எங்கு இருக்கிறது என்று நாம் கவனிக்க வேண்டும். ஏன், இந்த சிக்கல்கள் தோன்றின ? இதற்கு தீர்வு எங்கிருக்கிறது? என்று பார்க்க வேண்டும்!
1990 களின் துவக்கத்திலேயே, குளோபலைசேஷன், லிபரலைசேஷன், பிரைவேட்டைசேசன்.. என்ற கருத்தாக்கத்தை முன் எடுத்தனர். உலகம் முழுவதும் இந்தக் கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டுவர, உலக வங்கியின் யூனிசெப் தாய்லாந்தில் உள்ள ஜோமைட்டினில் ஒரு மாநாட்டை நடத்தியது. ஏறக்குறைய 130 நாடுகள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
அந்த மாநாட்டில் விடுக்கப்பட்ட பிரகடனம், ’கல்வியானது அரசின் கைகளில் இருந்து விலகி, தனியார் கைகளுக்கு செல்வதாக இருக்க வேண்டும்’ என்றது. ’பப்ளிக் – பிரைவேட் பார்ட்னர்ஷிப்’ என்ற விஷயத்தை முன்னிலைப்படுத்தினார்கள். ஆனால், இந்தியா போன்ற மூன்றாம் நாடுகளில் தனியார் பள்ளிகள் இருந்தாலும், பப்ளிக் செக்டர்ஸ் என்பது அதாவது, அரசுடைமையான பள்ளிகள் என்று தான் இருந்தன. பெரும்பாலும், அரசு பள்ளிகளிலிருந்து இருந்து, தனியார் பள்ளிகளை நோக்கி செல்லக்கூடியதாக கல்வி அமைந்திருந்தது.
எப்படி இருந்தாலும், எல்லா பள்ளிகளையும் உடனே தனியார் பள்ளிகளாக மாற்றிவிட முடியாது என்று அங்கு வந்திருந்த யூனிசெப்புக்கும் தெரியும் மற்ற எல்லா நாட்டின் ஆட்சியாளருக்கும் தெரியும். அப்படி, ஒரு மாபெரும் அரசு பள்ளிக் கல்வி அமைப்பை ஒரேடியாக தனியார் மயமாக மாற்ற முடியாத சூழலில் , கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயத்தினை நோக்கி அழைத்துச் செல்வது குறித்து அந்த மாநாட்டில் அறிவித்தார்கள்.
அப்படி முடிவு எடுக்கும் பொழுது, இந்தியாவிற்கு சொல்லப்பட்ட பெயர், இந்தியாவில் நடைமுறைப்படுத்த வைக்கப்பட்ட பெயர் தான் மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம். அந்த திட்டத்தின் வழியே ஒரு மாவட்டத்திற்கு 40 கோடிகள் கொடுத்து கட்டுமானம், இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் எல்லா வசதிகளையும் செய்தனர். ஆனால், எந்த விஷயம் அடிப்படையானதோ… அதில் கவனம் செலுத்தவில்லை. ஆம், ஆசிரியர் நியமனத்தில் மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம் கவனம் செலுத்தவில்லை.
கொஞ்சம், கொஞ்சமாக பிரைவேட்டை ஸ்டேஷனாக முயற்சி செய்யக் கூடிய அந்த ஒரு ப்ராஜெக்ட் தான் தற்பொழுது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தியாவில் இது நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது.
இந்த கருத்தரங்கில் பேசிய ஒவ்வொருவரும் குறிப்பிட்டது, ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் பணி காலியிடங்கள் என்பன தான். இன்றைய உச்சபட்ச பிரச்சனையே ஆசிரியர் பற்றாக்குறை தான். ஆனால், அன்றைய தினமே ஆசிரியர் பற்றாக்குறை இருந்தன. ஓராசிரியர் பள்ளிகள் இருந்தன, ஈராசிரியர் பள்ளிகள் இருந்தன. அப்போதிருந்தே பிரச்சனைக்கான தீர்வுகளை நோக்கி அவர்கள் நகர வில்லை. இருக்கும் பிரச்சினைகளை சிக்கலை நோக்கி நகர்த்தினர்! 1986 இல் கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கை, ஆபரேஷன் பிளாக் போர்டு என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் நியமிப்போம் எல்லா வசதிகளும் செய்வோம் என்ற பிரகடனங்களை நாடு முழுவதும் பிரபலப்படுத்தியது.
தேசிய கல்விக் கொள்கை 1986 நடைமுறைப்படுத்தியது தான் மாவட்ட தொடக்க கல்வித் திட்டம்! அதன் மறு உருவம் தான் சர்வ சிக்ஷா அபியான் SSA என்று வேறு பெயரில் வந்தது.
பின்னாளில் இடைநிலைக் கல்வியிலும், ராஷ்டிர சிக்ஷா அபியான் RMSA என்று நடைமுறைப்படுத்தப்பட்டது . இந்தத் திட்டங்கள் எல்லாம், எதைக் காட்டுகிறது என்றால், பல்வேறு பெயர்களைத் தாங்கி, அரசாங்கம் மக்களுக்கு உண்மையாகவே கல்வியை வழங்குகிறது என்ற தொனியில் கொண்டுவரப்பட்டிருக்கும்.
ஒரு ஆங்கிலப் பழமொழி..! எந்த அரசாங்கம் மக்களுக்கு கல்வி வழங்க தயாராக இல்லையோ, அந்த அரசாங்கம் மக்களுக்கு கல்வி மிகத் தீவிரமாக வழங்குவதாக காட்டிக் கொள்ளுமாம்! அந்த வகையில் தான் இங்கு மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி, மாநில அரசாங்கமாக இருந்தாலும் சரி, இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் கல்வி குறித்து மிகப் பெரிய பிரம்மாண்ட தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதே நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம்! இது அரசு பள்ளிகளை தனியார் ஆதிக்கத்தில் படிப்படியாக கையளிப்பதற்கான சூட்சும முயற்சியாகும்.
அவர்கள் அறிவிக்கும் ஒவ்வொரு திட்டமும் பெரிய செலவினத்தின் பேரில் 100 கோடி 200 கோடி என்று தான் இருக்கிறது! அந்தத் திட்டங்களை நாம் தீவிரமாக ஆய்வு செய்தால், இங்கு பேசிய ஆசிரியர் பிரதிநிதிகள் கூறியது போல, ஒவ்வொரு திட்டத்திற்குப் பின்பும் ஒரு அஜெண்டா இருக்கிறது. இவர்களின் நோக்கமே வளர்ந்து நிற்கும் கல்வி அமைப்பை எப்படி சிதைப்பது என்பது தான்!
1990 களுக்கு பிறகு எத்தனை புதிய அரசு பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு அனேகமாக பதில் இருக்காது! ஆனால், எத்தனை அரசுப் பள்ளிகள் இடித்து அகற்றப்பட்டு உள்ளன என்பதற்கு தமிழக அரசே சமீபமாக (செப்டம்பர் 2022) மதுரை உயர் நீதிமன்றத்திற்கு தகவல் தந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 5,553 அரசு பள்ளிகள் மோசமாக சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிட்டதால், அவை இடித்து அகற்றப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்படியாக அரசு பள்ளிகளை பராமரிக்காமலும், பழுது பார்க்காமலும் சிறுகச் சிறுக அழித்து, அகற்றி வருவது ஒரு புறமென்றால், மறுபுறம் தனியார் பள்ளிகள் வானுயர்ந்த கட்டிடங்களாக எழில் மிகு தோற்றத்துடன் உருவாக்கப்பட்டு வசூல் வேட்டை நடத்துகின்றன!
கிராமப் புறங்களில் கூட மக்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத காரணத்தால் தனியார் பள்ளிகளை நோக்கி தள்ளப்பட்டு வருகின்றனர். இல்லை என்று சொன்னால் இங்கு முறை சார்ந்த கல்வித் திட்டம் இருக்கும்பொழுது, முறைசாரா கல்வி திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கியது ஏன்?. இல்லை என்று சொன்னால், தொகுப்பூதியத்தில் தன்னார்வலர்களை வெளியில் இருந்து கொண்டு வந்து, இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் ஆகியவற்றை 200 கோடி பட்ஜெட்டில் செய்வது ஏன்? இவை எல்லாம் நம்மை போன்ற கல்வி குறித்து சிந்திப்பவர்கள் அறிந்து கொள்ள முடிகிறது.
ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இது பற்றி சிந்திக்க மாட்டார்களா? இவர்களுக்கு தெரியாதா? அனைத்தும் தெரிந்தே தான் செய்கின்றனர் உள்நோக்கத்தோடு செய்கின்றனர். உள்நோக்கம் என்பது அரசு பள்ளிகள் அமைப்பை எப்படி சிதைப்பது என்பது தான்! அவ்வாறு சிந்தித்துப் பிறகு தனியார் மயத்தை நோக்கி எவ்வாறு செல்வது, தனியார் மயத்தை வளர்த்து விடுவது, தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர்களையும் மாணவர்களையும் எவ்வாறு தள்ளுவது? இது தான் அவர்களுடைய பிரதானமான நோக்கமாக உள்ளது.
இந்தப் பிரதான நோக்கத்தை மையமாக வைத்து அவர்கள் எப்படிப்பட்ட இடைஞ்சல்களை எல்லாம் ஆசிரியர்களுக்குக் கல்வி முறையில் கொடுக்க முடியுமோ அதையெல்லாம் திட்டங்களாக வெளிப்படுத்துகின்றனர். அதைத் தான் செய்து கொண்டுள்ளனர். ‘எமிஸ்’ போன்ற ஒரு திட்டத்தை உலகத்தில் எந்த ஒரு கல்வி அமைப்பாவது நடைமுறைப்படுத்தி இருக்கிறதா…? என்றால் இல்லை.
‘எண்ணும் எழுத்தும் திட்டம்’ நல்ல திட்டம் என்றால், ‘இல்லம் தேடிக் கல்வித்திட்டம்’ நல்ல திட்டம் என்றால், ‘எமிஸ்’ பதிவேற்றம் மிக நல்ல விஷயம் என்றால், ஏன், இவையெல்லாம் தனியார் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லப்படவில்லை? என்ற கேள்வி இயல்பாகவே நமக்கு எழுகிறது அல்லவா? ஏன் அரசு பள்ளிகளில் மட்டும் இத் திட்டங்களை கட்டாயமாக நடைமுறைப்படுத்துகின்றார்கள்? அரசுப் பள்ளி ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்?
இவையனைத்தும் ஒன்றே ஒன்றைத்தான் நமக்குக் காட்டுகின்றது. இந்த அரசாங்கம் கல்வி அமைப்பிற்காக மிகவும் உழைத்துக் கொண்டிருப்பதைப் போல நடித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மற்றொருபுறம் கல்வி அமைப்பே சிதைத்து கொண்டிருக்கிறது.
கல்வியை நேசிக்கும் அமைப்புகள் அல்லது கல்விக்காக குரல் கொடுக்கக்கூடிய ஆசிரியர் சங்கங்களில் இருந்து வந்திருப்பவர்கள் நாம் அனைவரும் சேர்ந்து கல்வியே கடைசி ஆயுதமாக கொண்டிருக்கக் கூடிய மக்களிடம் இந்த உண்மைகளை எல்லாம் விழிப்புணர்வுகளாக எடுத்துச் செல்ல வேண்டும். அதற்காக இங்குள்ளவர்கள் அனைவரும் இணைந்து இந்த திட்டங்கள் கல்வியை எவ்வாறு சிதைக்கின்றன என்பதனைக் கூறி அரசாங்கத்துக்கு கோரிக்கை வைப்போம். அரசாங்கம் கேட்கும் என்று நம்புவோம். அப்படி கேட்கவில்லை என்றால், அடுத்த அடுத்த கட்டங்களில் நாம் இதை ஜனநாயக முறைப்படி போராட்ட இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும்.
இதுதான் நம் முன்னால் நிற்கும் கடைசி வாய்ப்பாகும் என்று தோன்றுகிறது. கல்வியை காப்பாற்ற இதைச் செய்யும் வகையிலே நாம் தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலிருந்து கீழாக உத்தரவுகளைப் பிறப்பித்து, கல்வி அமைப்பை சீர் செய்ய முடியாது. அதற்கு பதிலாக கீழிருந்து மேலாக ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் இவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஜனநாயக முறையில் விவாதங்களை முன்னெடுக்கும் வகையில் கல்வி அமைப்பை நாம் வளர்க்க முடியும்.
அப்படியான முன்னெடுப்புகளை செய்து, கல்வி அமைப்பை சீர் செய்வதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க வேண்டும். அதற்காக இயங்க வேண்டும்.
அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி நடத்திய கருத்தரங்கில், அதன் ஒருங்கிணைப்பாளர்
முனைவர்.ஹோசிமின் திலகர் பேசியது.
தொகுப்பு; சு.உமாமகேஸ்வரி
கல்வி செயல்பாட்டாளர்
- அறம் இணைய இதழ்
https://aramonline.in/11779/collapse-goverment-schools/
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு