விதை சட்டமா? விவசாயத்தை சிதையில் வைக்கும் திட்டமா?
அறம் இணைய இதழ்
இந்திய விதை இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வண்ணம் மத்திய பாஜக அரசு விதைகள் மசோதா 2025 ஐ கொண்டு வந்துள்ளது. ‘விதைக்கு விலை வைப்பதே மடமை’ என்ற கோட்பாடுடைய நம் பாரம்பரியத்தை அழித்து, விதைகளுக்காக கார்ப்பரேட்களிடம் விவசாயிகள் கையேந்துவதை நிர்பந்திப்பதற்கு ஒரு சட்டமாம்;
கட்டாயக் கண்காணிப்பு, சான்றிதழ் மற்றும் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் ..என்றெல்லாம் பம்மாத்து காட்டி, விதைகளை தனியார்மயமாக்க, ஏகபோகமாக்க, கட்டுப்படுத்த விரும்பும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக விதைகள் சட்டம் 2025 கொண்டு வரப்பட உள்ளது. விவசாயிகள் விதைகளை சேமிக்கவோ, அடுத்தவர்களுக்கு தந்து உதவவோ அல்லது தன்னளவில் இதில் பொருளாதாரப் பலன்களை அடையவோ இந்த புதிய விதைச் சட்டம் தடை செய்கிறது. கடைக்கு சென்று புதிய விதை வாங்கி பயிர் செய் என நிர்பந்திக்கிறது.
இது போன்ற சட்டங்கள் 2004 லும், 2019 லும் கொண்டு வரப்பட்ட போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பால் பின் வாங்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கதாகும். அப்படி இருக்கும் போது இந்த வரைவு மசோதா குறித்து பொது மக்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல டிசம்பர் 11 வரை அவகாசம் தருகிறார்களாம். கசாப்பு கடைக்கு விவசாயிகள் எனும் ஆட்டை கொடுப்பது என முடிவு செய்துவிட்ட பிறகு சாகடிப்பதற்கு முன் கருணை காட்டும் சடங்காக கருத்து கேட்பு நடத்தப்படுகிறது. இதில் என்ன கருத்துக்களை சொன்னாலும் ஆடு பலியிடப்படுவதை தடுக்க வாய்ப்பில்லை.
விதைகள் என்பவை இயற்கையின் படைப்பு. விதைகள் நிலத்திற்கு நிலம் வேறுபடும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். பாயும் தண்ணீருக்கு ஏற்ப பயிர்களில் ருசி தரும்.
சாதாரணமான வகையில் விதை என்பதை விற்பனை செய்யக் கூடாதாம். ஆய்வறிக்கை இல்லாமல் விதை விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு விதைச் சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, லட்சக்கணக்கில் அபராதம் போடுவார்களாம்.
விவசாயிகள் கூட்டாக ஒன்றிணைந்து சமூக கூட்டமைப்பை உருவாக்கி விதைகளை பரிமாறிக் கொள்வதையும், பெண்கள் தங்கள் கூட்டமைப்பின் மூலம் விதை பரிமாறிக் கொள்வதையும் இந்த சட்டம் தடுக்கிறது என்றால், இவர்களின் கார்ப்பரேட் சேவகம் எந்த அளவுக்கானது என்பதை சொல்லவும் வேண்டுமா? ஏனென்றால் மாண்சாண்டோ நிறுவனம் அதை விரும்பவில்லையாம்.
50,000 கோடி ரூபாய் மதிப்புள்ளது இந்திய விதை சந்தை! இதை பல கோடி விவசாயிகள் செலவில்லாமல் ஒருவருக்கொருவர் பறிமாற்றத்தின் மூலம் தருவதை எப்படி தடுப்பது என திட்டமிட்டு பாஜக அரசானது 1966 ஆம் ஆண்டு விதை சட்டத்தை முற்றிலும் மாற்றி கார்ப்பரேட் நிறுவனங்களின் காலடியில் விவசாயிகளை கிடத்த வரைவு விதைகள் மசோதா2025 என்ற ஒன்றை கொண்டு வந்துள்ளது.
தன்னுடைய கீழ்த்தரமான எண்ணத்தை மறைத்துக் கொள்ள தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்தல், போலி விதைகளை தடுத்தல், பாதுகப்பான விதைகளை உறுதிபடுத்தல் ஆகியவற்றுக்காக இந்த சட்ட வரைவு என கதைவிடுகிறது, கார்ப்பரேட்களின் கொத்தடிமை அரசு.
இவங்க சொல்கின்ற விதிமுறைகள், அரசு அதிகாரிகள் தரும் அங்கீகாரம் ஆகியவை இல்லையென்றால் ஒரு லட்சத்தில் இருந்து 30 லட்சம் வரை அபராதம் விதிப்பாங்களாம்.
இந்த விதைச் சட்டம் இந்திய விதை சந்தையையே தலைகீழாக புரட்டிப் போடும் அபாயமுள்ளது என்பதே விவசாயிகளின் கவலையாகும். பெரிய நிறுவனங்களை வலுவாக காலூன்ற வைக்கப் போடப்பட்டுள்ள சட்டம் என்பது இதன் அமலாக்கத்தின் மூலம் அறியலாம். சிறு விவசாயிகள், பாரம்பரிய விதை காவலர்கள் ஆகியோர் சுதந்திரமாக இயங்க முடியாத நிலமைகளை இது தோற்றுவிக்க வாய்ப்புள்ளது.
தரப்படுத்தப்பட்ட சோதனை அளவுகோல்கள் மூலமாக பல்வேறு சூழல்களை எதிர்கொண்டு தாக்குபிடிக்கவல்ல பாரம்பரிய விதைகள் மெல்ல, மெல்ல காலி செய்யப்படலாம். ஏற்கனவே மரபணு மாற்றப்பட்ட விதைகளை நம் தலையில் திணிக்கும் இந்திய அரசு உண்மையில் நல்ல விதைகளை நாடு கடத்தி போலி விதைகளை திணிக்கவே இந்த விதை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. தன் நிலத்திற்கு தன்னுடைய மண்ணுக்கு தான் சாப்பிடும் உணவுக்கு என்ன விதை தேவை என்பதை டெல்லியில் இருக்கும் அதிகார மையம் தீர்மானிப்பதை எந்த விவசாயியும் விரும்பமாட்டார்.
தவறான விதைகளை பயன்படுத்தி நிலமும் பயிர் விளைச்சலும் பெரும் பாதிப்புக்கு ஆளானால் என்ன இழப்பீடு என்பதற்கு இவர்களால் எந்த உத்திரவாதமும் தர இயலவில்லை. ஆக, மொத்தத்தில் விவசாய நலன்களை கருத்தில் கொண்டு இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக பம்மாத்து காட்டி, கார்ப்பரேட் நலன்களை உறுதிபடுத்தவே கொண்டு வரப்படுகிறது என்பதே நிதர்சனமாகும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/23330/seeds-act-2025-for-corporates/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு