அமெரிக்காவின் வரி பயங்கரவாதம் மற்றும் காம்பாக்ட் திட்டத்திற்கு நாட்டை பலியிடும் மோடி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

அப்பு - பாலன் நினைவு நீடூழி வாழ்க!
செப்டம்பர் -12 தியாகிகள் நினைவு நாள் - பாசிச எதிர்ப்பு நாள்
ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போரை முன்னெடுப்போம்!
ஏகாதிபத்திய காலனியாதிக்கம், தரகுமுதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் - இந்திய மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த மூன்று தளைகளையும் எதிர்த்து மக்கள் யுத்தக் கட்சியின் - நமது ஆசான் ஏஎம்கே வழிகாட்டுதலில் குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் களமாடியவர் தோழர் பாலன். அப்பகுதியின் சாதி தீண்டாமை உள்ளிட்ட நிலப்பிரபுத்துவக் கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைத்து அரசு அதிகாரத்தை நடுநடுங்க செய்தார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த பாசிஸ்ட் எம்.ஜி.ஆர் அரசு தோழர் பாலனை படுகொலை செய்தது. அத்தகைய தியாகத் தோழரின் நினைவாகவும் மா-லெ அமைப்பை கட்டியமைப்பதில் முன்னோடியாக செயல்பட்ட சாரு மஜூம்தார், அப்பு, ஏஎம்கே உள்ளிட்ட அனைத்து தோழர்களின் நினைவாகவும் - ஆண்டுதோறும் செப்-12ல் தியாகிகள் நினைவு நாளை அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும் அவர்களின் வழிதனில் நடப்பதற்கான உறுதியேற்பு நாளாகவும் நாம் கடைபிடித்து வருகிறோம். இந்தாண்டு தியாகிகள் தினத்தை பாசிச எதிர்ப்பு நாளாக அறிவித்து ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போரை முன்னெடுப்போம் என முழங்குகிறோம்.
ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையே தீவிரமடையும் பனிப்போர்
2007 க்கு பிறகு புதிதாக எழுச்சி பெற்ற சீன ஏகாதிபத்தியம் ஷாங்காய் கூட்டமைப்பை உருவாக்கி ரஷ்ய ஏகாதிபத்தியம், ஈரான், வட கொரியா உள்ளிட்ட நாடுகளை இணைத்துக் கொண்டு உலக மறுபங்கீட்டுப் போட்டியில் தீவிரமாக இறங்கியது. பல ஆண்டுகளாக உலக மேலாதிக்கத்திற்கு முயன்று வரும் அமெரிக்காவின் கனவை தற்போது தவிடுபொடியாக்கிவிட்டது. புற நிலையில் சீனாவின் இந்த போட்டியும் அக நிலையில் அமெரிக்காவின் உள்நாட்டு நெருக்கடியும் அமெரிக்கா முதன்மை எனும் பாசிச கொள்கைக்கு அடிப்படையானது. டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் கும்பலின் இந்த டெக்னோ பாசிசக் கூட்டானது ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நேட்டோ நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்கனவே நிலவி வந்த முரண்பாடுகளை கூர்மைபடுத்தி ஐரோப்பிய யூனியன் தனியொரு முகாமாக மாறும் நிலையை இவ்வாண்டு துவக்கத்தில் உருவாக்கியது. அமெரிக்கா-பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், ஷாங்காய் என மூன்று முகாம்களாக இவ்வுலகை சுரண்டுவதற்கு மறுபங்கீட்டுப் போட்டியில் மூர்க்கமாக அலைகின்றன. அமெரிக்க - சீன ஏகாதிபத்தியங்களுக்கிடையே பனிப்போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஐரோப்பிய யூனியனும் துருக்கி, உக்ரைன் போன்ற நாடுகளை இணைத்துக் கொண்டு தனியொரு முகாமாக தற்போது பனிப்போர் தயாரிப்புகளில் இறங்கியுள்ளது. தனக்கென இராணுவ கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது; பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு அரசியல் பொருளாதார ஒப்பந்தங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு யுத்தம் 4 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, உக்ரைனுக்கு ஆயுத வழங்கலை கைவிட்டதோடு ஐரோப்பிய யூனியனையும் கழட்டி விட்டது. உக்ரைனின் கனிம வளங்களை ரஷ்யாவுடன் மட்டும் பங்கிட்டுக் கொள்ள பேச்சு வார்த்தைகளில் 6 மாத காலமாக ஈடுபட்டு வருகிறது. ரஷ்யா ஆக்கிரமித்த 5 மாகாணங்களை மறந்துவிட உக்ரைனை மிரட்டி வருகிறது. மறுபுறம், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளையும் மீறி அந்நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் இந்தியா போன்ற தனது முகாமைச் சார்ந்த நாடுகளையும் மிரட்டி ரஷ்ய பொருளாதாரத்தை முடக்க முயற்சிப்பதோடு, தனது பேரத்திற்கு ரஷ்யாவை இணங்க வைக்கவுமான நரித்தந்திர முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது அமெரிக்கா. நேட்டோவுக்கான இராணுவப் பங்களிப்பை அமெரிக்கா குறைத்துக் கொண்டதால் ஐரோப்பியன் யூனியன் உக்ரைன் போரில் தடுமாறி வருகிறது. ரஷ்யா உக்ரைனை விடுவதாக இல்லை. மேலும் மேலும் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி தனது ஆக்கிரமிப்பு எல்லைகளை விரிவுபடுத்தி வருகிறது.
லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களை நேரடியான போரில் கொன்று குவித்த அமெரிக்க - இஸ்ரேல் யுத்தவெறிக் கூட்டணி தற்போது காசாவை மையப்படுத்தி இன அழிப்பு யுத்தத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. மீதமுள்ள மக்களை உணவின்றி பட்டினியில் தவிக்க விட்டு கொல்கிறது. குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் நா வறண்டு மடிகிறார்கள். குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் எலும்பும் தோலுமாய் உயிரை கையில் பிடித்து வாடுகின்றனர். இத்தகைய கொடூரமானதொரு இன அழிப்பை இந்த ஜியோனிச பாசிச கும்பல் அமெரிக்க தலைமையில் நடத்தி வருகிறது. இந்த நரவேட்டை கும்பல் காசாவை ஏறக்குறைய முழுமையாக கைப்பற்றி விட்டது. ஆனாலும் பாலஸ்தீன விடுதலைப் போரின் தாகம் அந்த மண்ணின் மக்களின் மீதமிருக்கும் ஒவ்வொரு உயிரணுவிலும் கொழுந்துவிட்டு எரிகிறது. அவர்களின் உதிரம் படிந்த ஒவ்வொரு மண்துகளிலும் பாலஸ்தீன விடுதலை கனன்று கொண்டே இருக்கும். அது இரத்தவெறி பிடித்த இந்த ஏகாதிபத்திய ஓநாய்களை சாம்பலாக்கும்.
உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தியின் மையமாக மாறியிருக்கும் தைவானின் மீது தங்களது மேலாதிக்கத்தை நிறுவ அமெரிக்க - ஜப்பான் முகாமும் சீன-ரஷ்ய முகாமும் தீவிரமான போட்டியில் ஈடுபட்டு வருகின்றது. தைவான் அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாக மாறி அதி நவீன டெக்னோ துறைகளில் அமெரிக்காவுக்கு உறுதுணையாக நிற்கிறது. அருமண் தனிமம், அருமண் காந்தம், தகவல் தொடர்பு என அனைத்துவிதமான நவீன தொழில்நுட்பங்களில் முன்னணியில் இருக்கும் சீனாவுக்கு போட்டியாக அமெரிக்காவை நிறுத்துவதில் தைவானின் சிப் உற்பத்தியானது குறிப்பிட்ட அளவிலான பங்களிப்பை வழங்கி வருகிறது. ஏற்கெனவே சீனாவுக்காகவும் சிப் உற்பத்தியில் ஈடுபட்ட தைவான், தற்போது தனது உற்பத்தியை அமெரிக்காவுக்கானதாக முழுமையாக மாற்றிவிட்டது. அமெரிக்க நலன்களிலிருந்து இந்தியாவிலும் கூட சிப் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. இதை முறியடிக்க சீனா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தைவான் மீது நேரடியான யுத்தத்தை நடத்துவதற்கு தயாராகி வருகிறது. அதற்காக ரஷ்யாவுடன் இணைந்து தைவானுக்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதிகளில் கூட்டு யுத்த பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. போட்டிக்கு டிரம்ப் - மஸ்க் கும்பலும் தைவானை தாக்கினால் நாங்களும் போர்த் தொடுப்போம் என மிரட்டி வருகின்றன.
தெற்காசிய பிராந்தியத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என களமிறங்கியுள்ள ஐரோப்பிய யூனியன் இந்திய இராணுவத்துடன் இணைந்து ஆப்பரேசன் அட்லாண்டா எனும் பெயரில் கூட்டு இராணுவ நடவடிக்கைகளில் மே மாதம் ஈடுபட்டது. ஐ.எம்.இ.சி (IMEC) திட்டத்தின் வழித்தடத்தில் கடல் மார்க்கத்தில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அதனை ஐரோப்பிய யூனியன் தனக்கு சாதமாக பயன்படுத்தி வருகிறது. (இந்தியா இந்த நடவடிக்கையை நக்சல் பயங்கரவாதத்திற்கு எதிரான கடல் மார்க்க நடவடிக்கை எனக் கூறி அதில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது). இந்த கூட்டு நடவடிக்கை கூட மோடி அரசின் மீதான டிரம்ப் அரசின் ஆத்திரத்தை அதிகப்படுத்தி இருக்கக் கூடும்.
இந்தியா மீதான டிரம்ப் கும்பலின் வரி பயங்கரவாதமும் மோடி அரசின் குதிரை பேரமும்
இந்தாண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்ற மோடியிடம் காம்பாக்ட் திட்டத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு விரட்டியடித்தது ட்ரம்ப் கும்பல். அத்திட்டத்தின் அடிப்படையிலான பல்வேறு இரு தரப்பு ஒப்பந்தங்களை இறுதி செய்ய ஐந்தாறு தடவைகளுக்கு மேலாக பேச்சு வார்த்தை பேரங்களில் இரு அரசுகளும் ஈடுபட்டன. அவற்றை மோடி அரசு தனது உள்ளூர் எஜமானர்களான அதானி, அம்பானி நலன்களுக்கான பேரம் படியாததால் இழுத்தடித்துக் கொண்டுள்ளது. டிரம்ப் கும்பலும் எலான் மஸ்க் உள்ளிட்ட டெக்னோ மற்றும் ஆயுத கார்ப்பரேட் நலன்களிலுருந்து இந்தியா மீதான புதிய காலனிய பிடியை இறுக்கி வருகிறது. அமெரிக்காவுக்கு மொத்தமாக இந்தியாவை திறந்துவிடும் நடவடிக்கைகளை வலியுறுத்தி வருகிறது; அனைத்து துறைகளிலும் தங்குதடையின்றி நுழைவதற்கு இருக்கும் சிறிய தடைகளையும் அகற்றிட வலியுறுத்தி வருகிறது. ஆனால் மோடி அரசு அமெரிக்கா மட்டுமல்லாது ஐரோப்பிய யூனியன், ரஷ்யா-சீனா முகாம்களுடனும் பொருளாதார உறவுகளை தொடர்வது தன் உள்ளூர் எஜமானர்களுக்கு சாதகமானதாக கருதுகிறது. அதனால்தான் இருதரப்பு ஒப்பந்தங்களில் ஈடுபட இழுத்தடித்துக் கொண்டுள்ளது. இந்த பேரம் முடிவுக்கு வருவதில் கால தாமதம் ஆவதால் டிரம்ப் அரசு இந்தியா மீது வரி பயங்கரவாதத்தை ஏவி வருகிறது.
இந்த மாத துவக்கத்தில் 25% சதவிகித கூடுதல் வரி விதிப்பை மருந்துப் பொருட்கள், சிப், ஈவி பேட்டரி உள்ளிட்ட அமெரிக்காவிற்காக இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை தவிர ஏனைய அனைத்து ஏற்றுமதி பொருட்களுக்கும் விதித்தது. அதாவது மொத்த ஏற்றுமதியில் 60% மதிப்பிற்கும் மேலான பொருட்களுக்கு கூடுதல் வரியை விதித்துள்ளது. சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளன. குறிப்பாக டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், வேளாண் பொருட்கள் தேக்கமடைந்து அந்த உற்பத்தியில் ஈடுபடும் சிறுகுறு உற்பத்தியாளர்களும் கூலித் தொழிலாளிகளும் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்; தற்கொலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். ஐ.டி. துறை உள்ளிட்ட சேவை துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துறையில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் இந்த ஒரு மாதத்திற்குள்ளாக வேலை இழந்து நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். அந்நிய முதலீடுகள் பறந்தோடி இந்திய பங்குச்சந்தை கடும்சரிவை கண்டது. அந்நிய செலாவனி கையிருப்பு குறைந்து ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. அனைத்து துறைகளிலும் வேலையின்மையும் விலைவாசி உயர்வும் அதிகரித்து வருகிறது. இந்த வரி விதிப்பினால் நடுத்தர மற்றும் தொழிலாள வர்க்கமின்றி இந்திய ஆளும் தரகுமுதலாளித்துவ கும்பலும் கூட பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இந்த ஆளும் வர்க்க கும்பலை பாதுகாக்க மோடி அரசு ரூ.20000 கோடியை அவசர கால வரி இழப்பீடு நிதியாக ஒதுக்கியுள்ளது. இந்த சுமைகளும் தற்போது உழைக்கும் மக்கள் மீது சுமத்தப் பட்டுக் கொண்டே உள்ளது. (உதாரணமாக மொபைல் பயன்பாட்டு கட்டணங்கள் 150% சதவிகிதத்திற்கு மேலாக உயர்த்துப் பட்டுவிட்டது). இந்த போக்குகள் நெருக்கடியை தீர்ப்பதற்கு மாறாக நெருக்கடியை ஆழப்படுத்திக் கொண்டுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து நாங்கள் மட்டுமா கச்சா எண்ணெய் வாங்குகிறோம் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கூட எல்.என்.ஜி எரிவாயுக்கள் வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றன - என அம்பானி நலன்களிலிருந்து அதை நியாயப்படுத்தி பேசி வருகிறது மோடி அரசு. ஆயுத தளவாடங்கள் உள்ளிட்ட வர்த்தகங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. மேலும் சீனா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளிடம் சென்று தேங்கி நிற்கும் பொருட்களை விற்பதற்கு பேரம் பேசி வருகிறது. அதற்காக அந்த நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த சில இறக்குமதி தடைகளையும் நீக்கி கதவை திறந்து வருகிறது. மோடி அரசின் இந்தப் போக்குகளைக் கண்டு டிரம்ப் கும்பல் ஆத்திரமடைந்து வருகிறது. இதனால் மேற்கொண்டு 25% சதவிகித வரியை அனைத்து பொருட்கள் மீதும் இம்மாத இறுதிக்குள் விதிக்கப் போவதாகவும், இரண்டாம் நிலை வரி விதிப்பு (அதாவது இந்தியாவிடம் இருந்து பொருட்களை வாங்கும் பிற நாடுகளுக்கும் வரிவிதிப்பது) செய்யப் போவதாகவும் அச்சுறுத்தி வருகிறது. அப்படியும் கட்டுப்படவில்லையென்றால் வரியை 100% சதவிகிதம் வரை கூட அதிகரிப்பேன் என மிரட்டி வருகிறது டிரம்ப் கும்பல். இதற்கு அடிபணிந்த மோடி கும்பல் இரு தரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாகவே அமெரிக்காவிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை வெகுவாக குறைத்து வருகிறது. அத்தகைய இறக்குமதி பொருட்களை இந்திய சந்தையில் கொட்டிக் குவிப்பதற்குதான் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் திருத்தம் செய்து வருகிறது. அமெரிக்க பொருட்களை இந்திய சந்தையில் கொட்டிக் குவித்து கொஞ்சம் நஞ்சம் மீதமிருக்கும் தற்சார்பு உற்பத்தியையும் ஒழித்துக் கட்டும் நடவடிக்கைதான் மோடி ஆகஸ்ட்-15 அன்று அறிவித்த தீபாவளி போனஸ்(!!). இந்த தீபாவளி போனஸ் என்பது இங்கு இருக்கும் பெரும் கார்ப்பரேட் கும்பலுக்குத்தானே ஒழிய சிறுகுறு உற்பத்தியாளர்களுக்கோ நடுத்தர - உழைக்கும் மக்களுக்கோ அல்ல. மறுபக்கம் நான் விவசாயிகளின் தோழன் பால் பொருட்களையும், வேளாண் பொருட்களையும் இறக்குமதி செய்ய அனுமதிக்க மாட்டேன்; தற்சார்பு இந்தியா என வீராவேசம் பேசி நாட்டு மக்களை ஏய்த்து பிழைக்கிறது. இத்துறைகளை 1992ல் டங்கல் திட்டம் கொண்டு வந்த பின்பு மாற்றி மாற்றி ஆட்சியிலேறிய காங்கிரஸ்-பாஜக இரு அரசுகளுமே காவு வாங்கி விட்டன. மிச்ச மீதமிருக்கும் ஜீவனையும் பாலூற்றி முடித்து வைக்கவே இந்த குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது மோடி கும்பல். இவை அமெரிக்கா பலவீனமடைந்திருப்பதையும் இந்திய தரகுமுதலாளித்துவக் கும்பலின் பேரம்பேசும் ஆற்றல் வலுப்பட்டிருப்பதையுமே நமக்கு காட்டுகிறது. ஆனால் புதிய காலனிய ஒப்பந்தங்களை மீறியும் இவற்றால் செயல்பட முடியவில்லை என்பதும் கண்கூடாக தெரிகிறது. ஏற்கனெவே இந்தியாவை அமெரிக்காவுக்கு பல்வேறு அடிமை ஒப்பந்தங்கள் மூலமாக அடிமைப்படுத்தி விட்ட புல்லுருவிகளுக்கு தற்சார்பு பற்றி பேச துளியும் அருகதை இல்லை. இவர்கள் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்து நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் அவல நிலையே நீடிக்கிறது. நாட்டில் பாசிச நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது மோடி அரசு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு இயந்திரம் மற்றும் ஓட்டு திருட்டு மோசடிகளில் ஈடுபட்டதை எதிர்த்து பேசுவோர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது. ஆப்பரேசன் சிந்தூர் தோல்வியை பற்றி பேசும் ஜனநாயக குரல்களை நசுக்கி வருகிறது. அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிந்து கைது செய்து வருகிறது. மாநில அரசுகளை அடிபணிய வைக்க முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் பதவிகளை பறிக்க சட்டம் கொண்டு வர முயற்சிக்கிறது. பல்வேறு கருப்புச் சட்டங்களை இந்த ஒரு மாதத்திற்குள் நடைமுறைக்கு கொண்டு வந்து பாசிச காட்டாட்சியை கட்டியமைத்து வருகிறது; பாசிசசத்தை தீவிரப் படுத்துகிறது.
ஆனால் இவை அனைத்தையும் மூடி மறைத்து சங்கிகள் (அமெரிக்காவை நடுங்க வைத்த மாவீரன் என) மோடியை புகழ்ந்து வெடி வெடித்து கொண்டிருக்கிறார்கள். நிதிமூலதனம் அது வெள்ளையோ அல்லது சிவப்போ அனைத்தும் அழுகல்தன்மை கொண்டது; அது நாட்டை அடிமைப்படுத்தும் என்பதை மூடிமறைத்து - ஒற்றை துருவ மேலாதிக்கத்தை விட பல்துருவ மேலாதிக்கம் ஜனநாயகமானது என்று பேசி வருகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசி வருவதையே மறுபதிப்பு செய்கின்றனர். நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு விருந்தாக்குவதில் சங்கிகளுடன் சங்கமிக்கின்றனர் இந்த வாய் சிவந்த மாமாக்கள். இவர்களால் பாசிசத்தின் தடுப்பரண் என போற்றப்படும் ராகுல் காந்தியோ, மோடி அரசானது சீன ரஷ்யாவுடன் வர்த்தக உறவு கொண்டு அமெரிக்காவுக்கு ராஜ துரோகம் செய்கிறது. நான் அமெரிக்காவின் உண்மை விசுவாசியாக செயல்படுவேன் என தொடர்ச்சியாக பேசி வருகிறார். இந்த அங்கிள்ஸ் ஒருபுறம் அமெரிக்க எதிர்ப்பு என பேசிக் கொண்டு - மறுபுறம் அதன் விசுவாசியான ராகுல்காந்தியை தூக்கிப்பிடிப்பதுதான் விந்தை(!!). இவர்கள் அனைவரும் நிதிமூலதன ஆதிக்கத்தின் விசுவாசிகளாக மாறியுள்ளனர் என்பதுதான் உண்மை.
எனவே, அமெரிக்க ஏகாதிபத்திற்கு எதிரானதொரு விடுதலைப் போரை மீண்டும் முன்னெடுக்க வேண்டிய கடமை நம் முன் வந்துள்ளது. ஏகாதிபத்திங்களின் வேட்டைக்காடாக நம் தாய் நாட்டை மாற்ற முயலும் பாசிசத்தை தீவிரமாக கட்டியமைக்கும் மோடி ஆட்சிக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை தொடர வேண்டியது பாட்டாளி வர்க்கமாகிய நமது இன்றைய முதன்மையான பணியாக உள்ளது. அதற்காக விவசாயிகளயும், (மிச்ச மீதமிருக்கும்) தேசிய முதலாளி வர்க்கத்தையும், ஏனைய ஜனநாய சக்திகளையும் ஓரணியில் திரட்டும் பணிகளை துரிதப்படுத்துவோம்.
இந்துத்துவ பாசிசத்திற்கு சற்றும் குறைவில்லாத திராவிட மாடல் பாசிசம்
பாசிசத்தை ஒழிக்க வந்த தமிழகத்தின் "ஜோசப் ஸ்டாலின்" என வாய்ச்சவடால் அடித்து வரும் முத்துவேல் கருணாதி ஸ்டாலின் தான் "திராவிட ஹிட்லர்" என்பதை ஒவ்வொரு பாசிச நடவடிக்கைகளிலும் வெளிப்படுத்தி வருகிறார். மோடி அகில இந்திய ஹிட்லர் என்றால் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் ஹிட்லர் - அவ்வளவுதான் இருவருக்கும் வித்தியாசம்.
பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களுக்கான கொள்ளைக் கூடாராமாக தமிழகத்தை மாற்றி வரும் ஸ்டாலின் அரசானது முந்தைய எடப்பாடி அரசு விட்ட இடத்தில் இருந்து அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கி வருகிறது. நகராட்சி, மாநகராட்சிகளை ராம்கி என்ற கார்ப்பரேட்டுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டது. இதை எதிர்த்து போராடிய தூய்மைப் பணியாளர்களை குப்பைகளை போல அப்புறப்படுத்தியது. அவர்களுக்கு ஆதரவாக நின்ற தோழர்களை காவலில் எடுத்து சித்திரவதை செய்து வருகிறது. திமுக அரசின் இத்தகைய பாசிச போக்குகளை நீதிமன்றங்கள் மூலமாகவே நியாயப்படுத்துகிறது. கூட்டணியில் இருக்கும் திருமாக்களும் இதை சமூகநீதி நடவடிக்கை என்று உச்சி முகர்கின்றனர். இந்த தனியார்மயமாக்கல்தான் நிலப்பிரபுத்துவ பண்ணயடிமை முறை ஒழிக்கப்படாமலும் சாதிய அவலங்கள் இன்றும் நீடிப்பதற்கு அடிப்படை என்பதை இந்த தலித்திய புரட்சியாளர்கள்(!!) திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர்.
இந்த ஆளும் வர்க்க கும்பல் பின்பற்றும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாகத் தான் சோம்பிகளாக அலையும் சாதிவெறி பிசாசுகள் கவின்களை இன்றும் இரத்தம் குடிக்கின்றன. இந்த "சமூக நீதி" பேசும் திமுக ஆட்சியில்தான் சாதி ரீதியான வன்கொடுமைகள் 40% சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்பதை யாராவது மறுக்க முடியுமா? இவற்றை போக்க ஆணவப் படுகொலைக்கு எதிரான குறைந்தபட்ச நடவடிக்கைகளையாவது மு.க.ஸ்டாலின் அரசு எடுத்துள்ளதா என்றால், நிச்சயம் இல்லை. மாறாக தமிழகத்தை ஆணவப் படுகொலைகளின் தலைநகரமாக மாற்றியுள்ளது.
மோடி அரசின் இந்துத்துவக் கொள்கைகளை எதிர்ப்பதாக பேசிக் கொண்டே கார்ப்பரேட் சேவைக் கொள்கைகளை பெயர் மாற்றி செயல்படுத்தி வருகிறது. தேசியக் கல்விக் கொள்கையை வார்த்தைகளை / வாசகங்களை மாற்றி மாநில கல்விக் கொள்கை எனும் பெயரில் மறுபதிப்பு செய்து நடைமுறைப்படுத்த துவங்கி விட்டது. இதை செயல்படுத்த தடையாக இருந்த பல்வேறு கல்வியாளர்களை பலிவாங்கியது என நாம் ஏற்கனேவே பார்த்து வந்துள்ளோம். தற்போது அமெரிக்க டெக்னோ கார்ப்பரேட்களுக்கு இந்திய கல்வித் துறையையும் திறந்துவிடும் மோடி அரசுடன் மாநிலக் கல்விக் கொள்கை மூலமாக கைக் கோர்த்துள்ளது திமுக அரசு. மோடி அரசின் இந்து மதவாத நடவடிக்கைகளையும் ஈடு செய்ய கந்தசஷ்டி கவசம் பாடி காவடி தூக்கி வருகிறது திராவிட இந்துத்துவ அரசு. சாக பயிற்சிகளை கல்வி நிலையங்களில் அனுமதிப்பது; திருப்பரங்குன்றம் வழிபாட்டு பிரச்சினையை தூண்டி விடுவது; முருகன் மாநாடு நடத்துவது என ஆர்.எஸ்.எஸ். - பாஜகவுடன் போட்டிப் போட்டுக் கொண்டு மதவாத சேவை செய்கிறது திமுக.
ஆதலால்தான் நாம் திரும்ப திரும்ப வலியுறுத்தி கூறுகிறோம் திமுக அரசும் "இந்தியா" கூட்டணியும் மோடி அரசின் பாசிசத்திற்கு மாற்று அல்ல என்று - பாட்டாளி வர்க்கத் தலைமையிலான ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஊன்றி நிற்கும் ஓர் ஐக்கிய முன்னணியே மோடி அரசின் பாசிசத்தை வீழ்த்தவல்லது.
அத்தகையதொரு பாசிச எதிர்ப்பு முன்னணியை கட்டியமைப்பதற்கு உறுதியேற்கும் நாளாகவே நாம் தியாகிகள் தினத்தை அனுசரித்து வருகிறோம்.
இந்தியா மீதான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நேரடி காலனி ஆதிக்கத்திற்கு எதிராக பகத்சிங், உத்தம்சிங், கட்டபொம்மன், வ.உ.சி., பாரதி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகள் விடுதலை நெருப்பை பற்ற வைத்து அந்நியனை விரட்டியடித்தார்கள். விடுதலைப் போரில் தங்களது இன்னுயிரை ஈந்தார்கள். ஆனால் அவர்கள் சிந்திய இரத்தம் முழு விடுதலையை நமக்கு பெற்று தரவில்லை - இன்று நாடு அமெரிக்காவின் புதிய காலனியாக நீடிக்கிறது. அவர்கள் விட்டுச் சென்ற பணியினை தொடருவோம் - மீண்டுமொரு விடுதலைப் போரை முன்னெடுப்போம்.
இந்த நீதிப் போரில் தங்களது இன்னுயிரை ஈந்த அப்பு-பாலன் உள்ளிட்ட தோழர்களின் நினைவை நெஞ்சிலேந்தி கீழ்க்கண்ட முழக்கங்களின்பால் அணிதிரள்வோம் வாருங்கள் தோழர்களே!
அப்பு - பாலன் நினைவு நீடூழி வாழ்க!
செப்டம்பர் -12 தியாகிகள் நினைவு நாள் - பாசிச எதிர்ப்பு நாள்
ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போரை முன்னெடுப்போம்!
- அமெரிக்கா - பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், ஷாங்காய் முகாம்களின் பனிப்போர் தயாரிப்புகளை எதிர்ப்போம்!
- ஏகாதிபத்திய ஓநாய்களே! உக்ரைன், பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேறுங்கள்!
- பாலஸ்தீன விடுதலைப் போரை ஆதரிப்போம்!
- இந்தியப் பெருங்கடலில் ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியாவின் ஆப்ரேசன் அட்லாண்டா எனும் கூட்டு இராணுவ நடவடிக்கையை எதிர்ப்போம்!
- தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் ரசியா மற்றும் சீனாவின் கூட்டு யுத்த நடவடிக்கைகளை எதிர்ப்போம்!
- இந்தியா மீதான அமெரிக்காவின் வரி பயங்கரவாதத்தை ஆதரித்து நாட்டை நெருக்கடியில் தள்ளும் பாசிச மோடி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!
- இந்தியாவை அமெரிக்காவின் காலடியில் கிடத்தும் காம்பாக்ட் திட்டத்தை எதிர்ப்போம்! மீண்டுமொரு சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுப்போம்!
- மோடி - அமித்ஷா கும்பலின் வாக்கு திருட்டு மற்றும் இ.வி.எம் மோசடிகளை எதிர்ப்போம்!
- முதலமைச்சர், அமைச்சர்களை எதேச்சதிகாரமாக பதவி நீக்கம் செய்யும் மோடி கும்பலின் பாசிச சட்டத்தை எதிர்ப்போம்!
- மோடி அரசே! காம்பாக்ட், குவாட் திட்டங்களில் இருந்து வெளியேறு! அமெரிக்காவின் யுத்த தயாரிப்புகளுக்கு நாட்டை பலியிடாதே!
- திமுக அரசே! ராம்கி நிறுவனத்தின் ஏவல் நாயாய் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை ஒடுக்காதே! அவர்களை பணி நிரந்தரம் செய்!
- தமிழக கல்விக்கொள்கை எனும் பெயரில் பாஜகவின் இந்துத்துவ - கார்ப்பரேட் தேசிய கல்விக் கொள்கையை கள்ளத்தனமாக அமல்படுத்தும் திமுக ஆட்சி ஒழிக!
- சாதி - ஆணவப் படுகொலைகளின் தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்றிவரும் திமுக ஆட்சியின் திராவிட சனாதனம் ஒழிக!
நன்றி: மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
சமரன்
(2025 ஆகஸ்ட் - செப்டம்பர் இதழில்)