பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களுக்கான பாசிச மோடி ஆட்சியை வீழ்த்த மே நாளில் சூளுரைப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களுக்கான பாசிச மோடி ஆட்சியை வீழ்த்த மே நாளில் சூளுரைப்போம்!

கரத்தாலும் கருத்தாலும் உழைக்கும் மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோர்களே!

பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் ஏகபோக நலன்களுக்காக பாசிச காட்டாட்சியை நடத்திவரும் மோடி ஆட்சியை தூக்கியெறிய சபதமேற்க வேண்டிய நாளாக இவ்வாண்டு மே நாள் அமைந்துள்ளது.

கூர்மையடையும் ஏகாதிபத்திய முரண்களும், பொருளாதார நெருக்கடியும்:

உக்ரைனை மறுபங்கீடு செய்வதற்கான அமெரிக்க - நேட்டோ, ரசிய - சீன முகாம்களுக்கு இடையிலான பனிப்போர் துவங்கிய பிறகு, ரசியா எரிபொருள் வர்த்தகத்தை ரூபிளுக்கு மாற்றியதாலும் எரிவாயு சப்ளையை குறைத்ததாலும் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தன. பண வீக்கம் 9.5% அதிகரித்து, வளர்ச்சி விகிதம் 3.5% ஆக வீழந்தது. அரசு செலவினங்களை கட்டுப்படுத்த தொழிலாளர்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட்டன. இதனால் அந்த நாடுகளில் பெரும் போராட்டங்கள் வெடித்ததையடுத்து பிரிட்டன், பிரான்சில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டன. ஆனாலும் ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி தீரவில்லை.

இராணுவ பொருளாதாரத்தால் ஏற்பட்டுவரும் நிதி நெருக்கடியை சமாளிக்க அமெரிக்க பெடரல் ரிசர்வ் எனப்படும் நிதி ஆணையம் வட்டி விகிதத்தை 0.25% இல் இருந்து படிப்படியாக 4.75% வரை உயர்த்தியது. இதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பெரு முதலாளிகள் தங்கள் பணத்தை வங்கிகளிலிருந்து எடுக்க முயன்றன. பத்திர முதலீடுகள், பங்குச்சந்தை, கிரிப்டோ கரன்சி போன்ற ஊக வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த வங்கிகளால் பணத்தை திருப்பித் தர முடியவில்லை. இதனால் முக்கிய அமெரிக்க வங்கிகளான சிலிகான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி, சில்வர் கேட், லேமன் பிரதர்ஸ் உள்ளிட்ட 69 வங்கிகள் திவால் அடைந்துள்ளன. இது சீட்டுக்கட்டு போல தொடர்ந்து சரியும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் பெரும் போராட்டங்கள் வெடிக்கும் வாய்ப்புகள் பெருகிவருகின்றன.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்டு வரும் இந்த பொருளாதார நெருக்கடி உலக முதலாளித்துவ நெருக்கடியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்படுமாயின் அந்த நெருக்கடியின் சுமைகள் நாட்டு மக்கள் மீதும், இந்தியா போன்ற காலனிய நாட்டு மக்கள் மீதும்தான் சுமத்தப்படும். அது பாசிசப் போக்கை தீவிரப்படுத்தவே செய்யும்.

ஏகாதிபத்திய முரண்பாடுகளால் கூர்மையடையும் இந்திய ஆளும் வர்க்க முரண்பாடுகள்

உக்ரைன் போரில் மோடி ஆட்சி ரசிய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த பிறகு அமெரிக்கா ஐ.நா. வில் மோடி ஆட்சியில் மனித உரிமை மீறல் இருப்பதாக பேசியது. அதன் பிறகு தொடர்ந்து அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஐ.நா.வில் ரசியாவிற்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்தை மோடி கும்பல் புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. ரசியாவுடனான எண்ணை வர்த்தகத்தை அதிகப்படுத்தி அதானி -அம்பானியை கொழுக்க வைத்தது. ஆகவே மோடி ஆட்சிக்கும் ரசியாவிற்கும் இடையிலான உறவை துண்டிக்கவும், மோடி ஆட்சியை கட்டுப்படுத்தவும் ஹிண்டன்பர்க் அறிக்கை மற்றும் பி.பி.சி ஆவணப்படத்தை அமெரிக்காவும் பிரிட்டனும் வெளியிட்டன.

உக்ரைன் போரில் மோடி ஆட்சியின் ரசிய ஆதரவு நிலைப்பாட்டையும், சீனாவின் எல்லை ஆக்கிரமிப்பை மோடி வேடிக்கை பார்ப்பதாகவும் ராகுல் முன்னதாக விமர்சித்திருந்தார். அதை அமெரிக்காவும் பிரிட்டனும் வரவேற்றன. அதன் பிறகு பாரத்ஜோடோ யாத்திரையை தொடங்கினார். அதில் அமெரிக்க கோடீஸ்வரரான சோரஸின் ஓபன் சொசைட்டி அறக்கட்டளையின் துணைத்தலைவர் பங்கேற்றார். யாத்திரை முடிந்த பிறகு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேசிய போது மோடி ஆட்சியை ராகுல் விமர்சித்தார்.

மேலும் அதானி மோடி உறவு குறித்தும், அதானியின் ஷெல் நிறுவனங்களில் சீனாவின் = 20,000 கோடி முதலீடு குறித்தும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். மோடி கும்பலோ இதற்கு பதில் தராமல் ராகுல் இந்தியாவை அயல் நாடுகளில் அவமானப்படுத்தி விட்டதாக கூறி பாராளுமன்றத்தை முடக்கியது. பிறகு ஆர்.எஸ்.எஸ் நீதிபதி மூலம் ராகுல் மீதான பழைய குற்றவியல் அவமதிப்பு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதை தொடர்ந்து பாராளுமன்றத்திலிருந்து அவரை தகுதி நீக்கம் செய்தது. இதன்மூலம் அவரை 8 ஆண்டுகள் தேர்தலில் பங்கெடுக்க இயலாதவாறு செய்துள்ளது மோடி அரசு. ராகுல் மீதான வழக்கை கவனித்து வருவதாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளும் ஐ.நா.வும் கூறியுள்ளன.

இவ்வாறு மோடி ஆட்சி எதிர்க் கட்சி இல்லாத - காங்கிரசு இல்லாத -ஒற்றைக் கட்சி சர்வாதிகார ஆட்சிமுறைக்கு நாட்டை நகர்த்த துவங்கியுள்ளது. இன்னொரு ஆளும் வர்க்க பாசிசக் கட்சியான காங்கிரசு மீதே இத்தகைய ஒடுக்குமுறை எனில் உழைக்கும் மக்கள், ஜனநாயக அமைப்புகளின் கதி என்ன? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஆகவே இது ஒரு பாசிச காட்டாட்சிக்கான முன்னோட்டமே.

கார்ப்பரேட் கரசேவையை மூடிமறைக்க பாசிசத்தை ஏவும் மோடி ஆட்சியை தூக்கியெறிவோம்!

அமெரிக்காவின் மறு கட்டமைப்பு, ப்ளூ டாட் நெட்வொர்க் மற்றும் குவாட் உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு சேவை செய்வதற்காகவும் அம்பானி -அதானிகளுக்காகவும் கொண்டு வரப்பட்ட கதிசக்தி திட்டம், பணமாக்கல் திட்டம், உதான், பாரத்மாலா, சாகர்மாலா திட்டங்களுக்குத்தான் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது மோடி ஆட்சி. மக்கள் நலத் திட்டங்களை மொத்தமாக கைகழுவிவிட்டது. ஊதி பெருக்கப்பட்ட அதானியின் பிம்பம் சரிந்துள்ள நிலையில் அதன் சுமைகளை மக்கள் தலையில் ஏற்றி வருகிறது.

ஹிண்டன்பர்க் அறிக்கையினால் அதானியின் சொத்து மதிப்பு 19 லட்சம் கோடியில் இருந்து 9 லட்சம் கோடியாக குறைந்துவிட்டது. 10 இலட்சம் கோடி பங்குச்சந்தை மோசடி மூலம் சேர்க்கப்பட்ட சொத்து மதிப்பாகும்.

இராணுவத்திற்கு இந்த ஆண்டு கூடுதலாக 69,000 கோடியையும், கார்ப்பரேட்டுகளின் மூலதன முதலீட்டு செலவு மற்றும் கடனுதவிக்காக 10 இலட்சம் கோடியையும் இவ்வாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது மோடி ஆட்சி. ஆனால் மக்கள் நலத் திட்டங்களுக்கும், விவசாயிகள் மற்றும் எரிபொருள் மானியங்களுக்கும் நிதி வெட்டப்பட்டுள்ளது. விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் வகையில் விளைபொருளுக்கான ஆதார விலையில் சந்தை குறுக்கீடு பாதிப்பிற்கான திட்டத்திற்கு 1,500 கோடி நிதியை மொத்தமாக இரத்து செய்துவிட்டு வெறும் ஒரு இலட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது. மேலும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மூன்றில் ஒரு பங்கு நிதியை வெட்டியுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் மோடி ஆட்சியில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 102லிருந்து 166 ஆக உயர்ந்துள்ளது. அவர்களிம் சொத்து மதிப்பு 54.12 இலட்சம் கோடி அதிகரித்துள்ளது. மறுபுறம் 30 கோடி பேர் பட்டினியில் வாடுகின்றனர். 80 கோடி மக்கள் ரேசன் அரிசியை நம்பியுள்ளனர். ஆனால் அதையும் ஒழிக்க தயாராகிவிட்டது. கடந்த ஆண்டு மட்டும் வேலையின்மையால் 13,417 பேரும், வருமானமின்மையால் 42,004 பேரும் தற்கொலை செய்து மாண்டுள்ளனர்.

ஆனால் வளர்ச்சி வல்லரசு என நிதி அமைச்சரின் வாய்கிழிகிறது.6.5% வளர்ச்சியை எட்டிவிட்டதாக பொய் பேசுகிறார். ஆனால் இன்னமும் கோவிட்டால் ஏற்பட்ட வளர்ச்சி விகித வீழ்ச்சியை (16% எட்ட வேண்டும்) எட்டவேயில்லை. பணவீக்கமோ 7% அதிகரித்து அத்தியாவசியப் பொருட்கள் விலையும் சமையல் எரிவாயு பெட்ரோல் டீசல் விலையும் விண்ணை முட்டுகிறது.

தொழிலாளர்களின் மிச்சசொச்ச உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டது. நிரந்தர பணி வாய்ப்பை நிறுத்திவிட்டது. அவுட்சோர்சிங், ஒப்பந்த கூலி முறைகளை சட்டமாக்கி தொழிலாளர் நலச்சட்டங்களை சட்டவிரோதமாக்கி விட்டது. மோடி ஆட்சி மிக மோசமான தொழிலாளர் விரோத ஆட்சியாக உள்ளது.

கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி விவசாயிகளின் தற்கொலையை அதிகப்படுத்தியுள்ளது. மோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை 25% அதிகமாகியுள்ளது. இதுவரை 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். இது மிகப்பெரும் இனப்படுகொலைக்கு ஒப்பானது. திரும்ப பெறப்பட்டதாக சொல்லபட்ட வேளாண் சட்டங்களை கள்ளத்தனமாக வெவ்வேறு வழிகளில் அமல்படுத்தி வருகிறது. உலக வர்த்தக கழகத்தின் நிபந்தனைகளை ஏற்று விவசாயிகளுக்கான மானியம், கடன் உதவி, கொள்முதல், ஆதாரவிலை அனைத்தையும் நிறுத்தி வருகிறது.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதில் மோடி ஆட்சி படுதோல்வியடைந்துவிட்டது. ஆகவே மக்கள் போராட்டங்களை பிளவுபடுத்த சாதி, மத, இன வெறி பாசிசத்தையும் பாசிச் சட்டங்களையும் ஏவுகிறது. இசுலாமியர் தாழ்த்தப்பட்ட மக்கள் - பழங்குடிகள் மீது -தொடர்ந்து தாக்குதல் நடத்தி இந்துமத வெறியை - சாதிவெறியை தூண்டி வாக்கு வங்கியை தயார் செய்கிறது. சாதிய அமைப்புகளுடன் கைகோர்க்கிறது. ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என மாபெரும் பாசிச அபாயத்தில் நாட்டை தள்ளியுள்ளது.

எனவே மோடி ஆட்சியை தூக்கியெறிவதும், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களை கருவறுப்பதும் நமது பிரதான கடமையாக மாறியுள்ளது.

திமுக அரசும் எதிர்க்கட்சிகளும்

ஏகாதிபத்திய உலகமயமாக்கலை அமல்படுத்தும் எந்தவொரு கட்சியும் பாஜகவின் பாசிசத்திற்கு மாற்றாக விளங்க இயலாது. ஆகவேதான் காங்கிரசு, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பாசிச எதிர்ப்புத் திட்டத்தை முன்வைக்க வக்கில்லாமல் வெற்று வாய்ச்சவடாலில் ஈடுபடுகின்றன.

திமுக அரசோ பாஜகவின் கொள்கைகளை போட்டிப் போட்டு அமல்படுத்திவருகிறது. அதானி அம்பானிகளுடன் பல்லாயிரம் கோடிகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. அரசுத்துறைகளில் ஊடுருவியுள்ள சங்பரிவாரங்களை களையெடுக்க திராணியற்று வாய்மூடி கிடக்கிறது. திமுக அரசின் இப்போக்கு கண்டிக்கதக்கதாகும்.

தொகுத்து சொல்வதெனில்...

ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பனிப்போரை எதிர்ப்பதும், முதலாளித்துவ நெருக்கடியை எதிர்த்த மக்கள் போராட்டங்களை வளர்த்தெடுப்பதும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியக் கடமையாகும்.

கார்ப்பரேட்டுகளுக்கு கரசேவை செய்து மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி ஆட்சியை வீழ்த்துவது பாட்டாளி வர்க்கத்தின் தேசியக் கடமையாகும்.

அதன் பொருட்டு பின்வரும் முழக்கங்கள் பால் அணி திரளுமாறு மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறது.

* உலக பொது நெருக்கடிக்கு காரணமான ஏகாதிபத்தியங்களின் பனிப்போரையும், ஊக நிதிமூலதன கும்பல்களையும் எதிர்ப்போம்!

* பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் நலன்களுக்கான பாசிச மோடி ஆட்சியை தூக்கியெறிவோம்! 

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

 தமிழ்நாடு