உயர்சாதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர்க்கு (EWS) 10% இட ஒதுக்கீடு!
அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரான , சமூக நீதிக்கு குழிபறிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்போம் !
பிராமணர்கள், வெள்ளாளர்கள், ரெட்டியார்கள், முதலியார்கள் உள்ளிட்ட உயர் சாதிகளிலுள்ள பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை பாஜக அரசு 2019 இல் அமல்படுத்தியது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நேற்று உச்சநீதி மன்ற பெஞ்ச் 5க்கு 3 என்ற பெரும்பான்மையின் அடிப்படையில் பாஜக கொண்டுவந்த சட்டம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. மேலும் இதற்காக அரசியலமைப்புச் சட்டம் 103ல் 2019ம் ஆண்டில் பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட திருத்தம் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானதாகும். இட ஒதுக்கீடு என்பது வரலாற்று ரீதியாக சாதி தீண்டாமை கொடுமைகளாலும் சமூக ஒடுக்குமுறையாலும் கல்வி மற்றும் அரசுப்பணிகளில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டதாகும். அரசியல் அமைப்புச் சட்டமும் இதையேதான் வலியுறுத்துகிறது. இடஒதுக்கீட்டின் மூலம் சற்று முன்னேறிய மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் கூட சமூக ஒடுக்குமுறையில் இருந்து இன்னமும் முற்றாக விடுபடாத நிலைதான் உள்ளது. ஆனால் சமூக, சாதி ஒடுக்குமுறைக்கு உட்படாத உயர் சாதியினருக்கு பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானதாக உள்ளது.
பாஜகவின் சட்டத்தை அங்கீகரிக்க முடியாது என்று இரு நீதிபதிகள் தீர்ப்பு சொல்லியுள்ளனர். ஆனால் அவர்களும் பிற சாதிகளுக்கும் பொருளாதார பாகுபாட்டை அளவுகோலாக வைக்கவேண்டும் என்று கூறி பொருளாதார அளவுகோலை ஆமோதித்துதான் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த கருத்தும் இடஒதுக்கீட்டின் சமூக நீதி நோக்கத்தை புரிந்து கொள்ளாதைத்தான் காட்டுகிறது. ஆகவே பொருளாதார அளவுகோலை முன்வைப்பதில் 5 நீதிபதிகளுக்கும் ஒரே கருத்து உள்ளதை பார்க்கவேண்டும்.மேலும் உச்ச நீதிமன்றத்தின் 9 பேர் கொண்ட முழு அமர்வு பொருளாதார ரீதியாக வழங்கப்படும் இடஒதுக்கீடு சட்டவிரோதம் என தீர்ப்பு சொல்லியுள்ளது. அதற்கு எதிராகவே இந்த அரை அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சமூக பாகுபாட்டை - ஒடுக்குமுறையை அளவுகோலாக வைக்காமல், மாறக்கூடிய பொருளாதார பாகுபாட்டை இடஒதுக்கீட்டிற்கான அளவுகோலாக வைப்பது இடஒதுக்கீட்டின் சமூக நீதி நோக்கத்தை சிதைப்பதாக உள்ளது.
பொருளாதார ரீதியில் நலிவுற்றோர் எனும் பெயரில் ஆண்டிற்கு 8 லட்சம் வருமானம் (மாதம் 65,000 ரூபாய்), 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது உண்மையில் உயர்சாதியிலுள்ள பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கும் கூட எதிரானதே ஆகும். அச்சாதியிலுள்ள நடுத்தர - மேல் நடுத்தர வர்க்கத்திற்கான இடஒதுக்கீடாகவே அது இருக்கிறது. வட மாநிலங்களிலும் மட்டுமன்றி தென் மாநிலங்களிலும் உயர்சாதி மக்களின் வாக்கு வங்கியை குறிவைத்தே பாஜக இச்சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்துக்களின் காவலன் என சொல்லிகொண்டே பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டுவருவதன் தொடர்ச்சிதான் இது. கல்வியை மேட்டுக்குடிகளின் வியாபார பொருளாக மாற்றி, குலக்கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான பாஜக அரசின் தேசிய கலவிக்கொள்கைக்கு சேவை செய்யும் விதத்திலேயே இந்த இடஒதுக்கீடு கொள்கை இருப்பதையும் நாம் முக்கியமாக பார்க்க வேண்டும்.
சமூக நீதியை ஒழித்து 'காட்ஸ்' நீதியை நிலைநாட்டும் கியூட் (CUET) தேர்வு
கல்வி வணிகமயம், தனியார்மயம், கார்ப்பரேட்மயமாக்கப்பட்ட சூழலில், அரசுப்பணிகள் முழுதும் ஒழிக்கப்பட்டு வரும் சூழலில் இடஒதுக்கீடு என்பதே செல்லாக்காசாகி வருகிறது. ஆகவே தனியார்மய - வணிகமயம - கார்ப்பரேட்மய கொள்கைகளை அமல்படுத்திக் கொண்டே தேசபக்தி, சமூக நீதி என ஏமாற்றுவதில் பாஜக திமுக காங்கிர ஆகிய கட்சிகள் ஒன்றாகவே உள்ளன.
இந்த தீர்ப்பை “எங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. 2005ம் ஆண்டுகளிலேயே நாங்கள்தான் இதற்கு முன்முயற்சி எடுத்தோம்" என விதந்தோதி வரவேற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. சிபிஎம் உள்ளிட்ட சில திருத்தல்வாத கட்சிகள் ஏற்கனவே பாஜக அரசின் தீர்மானத்தை வரவேற்று பேசியிருந்தன. CPI கட்சி எதிர்த்து வாக்களிக்காமல் வெளி நடப்பு செய்தது. தற்போது தீர்ப்பை கண்டித்துள்ளது. விசிக துவக்கம் முதலே இதை கண்டித்து பேசி வருகிறது. ஆனால் தனியார்மயத்தின் மூலம் சமூகநீதிக்கு குழி பறிக்கும் திமுகவை பாஜகவிற்கு மாற்றாக முன்வைக்கிறது. தங்கள் கட்சிதான் 10% இடஒதுக்கீட்டிற்கான முன்னோடி என மார்தட்டும் காங்கிரசைத்தான் பாஜகவிற்கு மாற்று என்கிறார் திருமா.
இட ஒதுக்கீடு சமூக வகைப்பட்ட ஒடுக்குமுறைகளிலிருந்து பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட சாதியிலுள்ள மக்கள் சிறிதளவேனும் தங்கள் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக பயன்படும் என்ற வகையில் நாம் ஆதரித்து வருகிறோம். இன்று அதை அவர்களிடமிருந்து பறிக்கும் விதமாக உயர்சாதியினரில் உள்ள மேட்டுக்குடிகளுக்கு இடஒதுக்கீடு என்பது சமூகநீதிக்கெதிரான குழிபறிப்பாகவே உள்ளது. ஏற்கனவே உயர்கல்வி முதல், உயர் பதவிகள் வரை உயர் சாதியினைச் சார்ந்தவர்களும் செல்வ வளம் மிக்கவர்களுமே அனுபவித்து வருவதும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள ஏறக்குறைய அனைத்து மக்களும் சமூக அளவில் சிறிய முன்னேற்றம் கூடாத அடையமுடியாமலும் அவர்களிடமிருந்து கல்வி உரிமை உள்ளிட்டவை பாசிச சட்டங்கள் மூலம் பறிக்கப்பட்டு வரும் இச்சூழலில், இத்தீர்ப்பு மேலும் அவர்களுக்கு குழி பறிப்பதாகவே உள்ளது.