சமூக நீதியை ஒழித்து 'காட்ஸ்' நீதியை நிலைநாட்டும் கியூட் (CUET) தேர்வு

"நீட்(NEEt), ஜெ.இ.இ(JEE) போன்ற இன்னபிற தேர்வுகள் போல கியூட்(CUET) என்பதும் நுழைவுத் தேர்வு அல்ல அது ஏழை எளிய மாணவர்களை உயர் கல்வியிலிருந்து வெளியேற்றும் தேர்வே".

சமூக நீதியை ஒழித்து 'காட்ஸ்' நீதியை நிலைநாட்டும் கியூட் (CUET) தேர்வு

நன்கு பயிலும் மாணவர்களை கூட காவு வாங்கும் மருத்துவ படிப்பிற்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வை விட மிக அபாயகரமான ஒரு தேர்வாக அமல்படுத்தப்பட்டிருக்கும் கியூட் (CUET) எனும் நுழைவுத் தேர்வு அதிகம் விவாதிக்கப்படாமலே உள்ளது. நீட், ஜெ.இ.இ தேர்வுகள் போல கியூட் தேர்வும் உலக வர்த்தக கழகத்தால் திணிக்கப்பட்டதே ஆகும்.

கியூட் (CUET) தேர்வை நடத்தும் 'புதிய காலனிய' என்டிஏ அமைப்பு

வழக்கம் போல இத்தேர்வுக்கும் முதலில் அச்சாரமிட்டது காங்கிரஸ் ஆட்சியே 2010ம் ஆண்டில் சியூசெட் (CUCET – Central Universities Common Entrance Test) எனப்படும் மத்திய பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்தது. பல்கலைக் கழகங்களுக்கான மானியக் குழு (UGC) மற்றும் மத்திய பல்கலைக் கழகங்கள் ஏற்றுக் கொள்ளாததால் இத்திட்டம் அப்போது தற்காலிகமாக கைவிடப்பட்டது.

ஆனால், தற்போது எவ்வித விவாதத்திற்கும் இடமளிக்காத பாசிச மோடி அரசு கியூட் (CUET – Central Universities Entrance Test) - மத்திய பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு எனப் பெயர் மாற்றி நடைமுறைப்படுத்த துவங்கி விட்டது. (காங்கிரஸ் அரசு - பாசிச அரசு அல்ல என்று பொருள் கொள்ள வேண்டாம். நெருக்கடியின் தீவிரம் பாசிசத்தையும் தீவிரப் படுத்துகிறது).

மருத்துவ (Medical) படிப்பிற்கு, நீட் (NEET – National Eligibility cum Entrance Test தேர்வு

பொறியியல் (Engineering) படிப்பிற்கு ஜெ.இ.இ. (JEE – Joint Entrance Examination) மற்றும் கேட்  (GATE – Graduate Aptitude Test in Engineering தேர்வு

மருந்தாளுமை (Pharmacy) படிப்பிற்கு ஜிபேட் (GPAT – Graduate Pharmacy Aptitude Test) தேர்வு

மேலாண்மை (Management) படிப்பிற்கு சிமேட் (CMAT – Common Management Admission Test) தேர்வு

ஆராய்ச்சி (Phd or JRF – Junior Research Fellowship) படிப்பிற்கு நெட் (NET – National Eligibility Test) தேர்வு

உள்ளிட்ட பல தேர்வுகள் மூலம் ஏழை எளிய மாணவர்களை தொழிற்கல்வி படிப்புகளிலிருந்து (Professional courses) இதுவரை வெளியேற்றி வந்தது. தற்போது அறிமுகப் படுத்தியிருக்கும் கியூட் தேர்வு மூலம் கலை மற்றும் அறிவியல் (Arts and Science) படிப்புகளிலிருந்தும் அவர்களை வடிகட்டி வெளியேற்றும் அபாயத்தை கொண்டு வந்துள்ளது. இத்தேர்வுகள் அனைத்தும் புதிய காலனிய நிறுவனமான என்டிஏ (NTA – National Testing Agency) தேசிய தேர்வு முகமை மூலமாகவே நடத்தப்படுகிறது. இந்த அமைப்பின் மூலமே கவுன்சிலிங் மற்றும் சேர்க்கையும் நடைபெறுகிறது.

இந்த தேர்வுகளை எழுதுபவர்கள் முந்தைய படிப்பில் தேர்ச்சி அல்லது குறைந்தபட்ச விழுக்காடு (50% - 75%, தேர்வை பொறுத்து மாறுபடுகிறது) மட்டும் பெற்றிருந்தால் போதுமானது. மேற்கண்ட படிப்புகள் அனைத்துக்குமான சேர்க்கைக்கு இந்த என்டிஏ நடத்தும் தேர்வுகளின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். அதிலும் குறிப்பாக கியூட் (CUET) தேர்வு மூலமான சேர்க்கையில், மாணவர்கள் 12 ஆண்டுகள் படித்து 12ம் வகுப்பில் பெறும் மதிப்பெண்கள் மயிரளவிற்கு கூட மதிக்கப்படுவதில்லை. இத்தேர்வுக்காகவும் படித்து அதற்காக சிறப்பு பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டியதும் கூடுதல் சுமையாகி விடுகிறது. இந்த இரட்டை சுமை பொருளாதார ரீதியாக மட்டுமில்லாமல் உளவியல் ரீதியாகவும் மாணவர்களை பெரிதும் பாதிக்கிறது.

படித்ததிலிருந்து போட்டி தேர்வு எழுதுவதில் என்ன சிரமம் இருந்துவிடப் போகிறது?

மாணவர்கள் படிக்கும்போதே கூடுதலாக நேரம் செலவழித்து அவர்கள் பயிலும் பாடத்திட்டத்தினையே சிரமப்பட்டு படித்து கூடுதல் பயிற்சி எடுத்துக் கொண்டால் இதில் வென்று விடலாம் என்று நாம் மதிப்பிட்டு விட முடியாது. ஏனெனில் இதற்கான பயிற்று முறைகளும், தேர்வு முறையும், பாடத்திட்டங்களும் முற்றிலும் வேறுபட்டவை.

இந்தியாவில் மாநில பாடத்திட்டங்கள் (State boards), மத்திய பாடத்திட்டம் (CBSE) மற்றும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் பாடத்திட்டம் (ICSE) போன்றவைகளின் அடிப்படையில் பள்ளிகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இருப்பினும் 90% மாணவர்கள் அந்தந்த மாநில பாடத்திட்டத்திலேயே இன்றும் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கியூட் தேர்வு என்.சி.இ.ஆர்.டி (NCERT – National Council of Educational Research and Training – தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு) எனும் அமைப்பு உருவாக்கியிருக்கும் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. இப்பாடத்திட்டம் மேற்கண்ட ஏனைய பாடத்திட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனவே இந்த கியூட் தேர்வு, மாணவர்கள் கற்றறிந்ததிலிருந்து அவர்களை பரிசோதிப்பதற்கு மாறாக கற்காத ஒன்றிலிருந்து பரிசோதனைக்குட்படுத்தும் மோசமான முறையேயாகும்.

கியூட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் (உண்மையில் வெளியேற்றும் தேர்வுகளே) சேர்க்கைக்குத் தேவையான மாணவர்களின் திறன், சக்தி மற்றும் தகுதிக்கு மீறிய மிக மிக கடினமான வினா-விடை முறைகளால் நடத்தப்படுகிறது. கியூட் தேர்வும் பிற நுழைவுத் தேர்வுகளைப் போல 'கணினி அடிப்படையிலான (Computer based Test – CBT) கொள்குறி கேள்வி (சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் – MCQ – Multiple choice questions – Objective type) தேர்வு முறையிலேயே நடத்தப்படுகிறது. இந்த முறையில் கேள்விகளுக்கு கொடுக்கப்படும் விடைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து குறிக்க வேண்டும். சரியான விடைகளுக்கு வாங்கிய மதிப்பெண்களை, தவறான விடைகளுக்கு குறைக்கும் மதிப்பீடுகளும் உள்ளதால் பாதிக்கும் மேற்பட்டோர் பூஜ்ஜியத்திற்கும் குறைவான மதிப்பெண்களே பெறும் கடின நிலையும் இருந்து வருகிறது. அவ்வளவு கடினமான தேர்வு முறைகள் எந்த இளநிலை படிப்பிற்கும் தேவையற்றதே. அதிலும் குறிப்பாக கலை -அறிவியல் மாணவர்களுக்கு அவர்களின் திறனை சோதிப்பதற்கு அவர்களின் எழுத்தாற்றலும் வார்த்தைகள் மற்றும் சொற்தொகுதிகளின் பயன்பாடுகளுமே சோதனை செய்து மதிப்பிட வேண்டும். இத்தேர்வு முறைகளால் எவ்வித பயனுமில்லை என கல்வியாளர்கள் கூறுகின்றனர். அப்படியே நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டாலும் இந்த தேர்வு முறையாவது குறைந்தபட்சம் மாற்றியமைக்கப்பட்டால்தான் மாணவர்களின் திறன் உண்மையிலேயே சோதித்தறிய முடியும் என்கின்றனர். எனவே இந்த தேர்வு மாணவர்களின் கற்றல் திறனை சோதித்தறிவதற்கு எவ்விதத்திலும் பயன்படாது; மாறாக அவர்களை வடிகட்டுவதே இதன் நோக்கமாகும். 

இது கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சியா?

நீட், கியூட் போன்ற தேர்வுகளால் கல்வியின் தரம் உயர்த்தப்படும் என்றும்; இன்று பலர் படித்துவிட்டு அந்த தொழிலுக்கான குறைந்தபட்ச அடிப்படை தகுதி கூட இல்லாமல் வருகின்றனர் - இதனாலேயே வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்றும்; எனவே இது போன்ற தேர்வுகள் தேவை; அது கல்வியின் தரத்தை உயர்த்தும் என விஞ்ஞானிகள் போல வாதிடுகின்றனர்.

முதலில் இந்த முதலாளியத்துவம் எப்போதும் படித்து முடித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்காது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். அது தன் நெருக்கடியை அவ்வப்போது சரி செய்து கொள்ள வேலையில்லாப் பட்டாளத்தை ரிசர்வ் ஆர்மியாக (Reserve Army) பயன்படுத்துகிறது. எனவே அதற்கு வேலையில்லாப் பட்டாளம் எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கும். அப்பட்டாளத்தை உருவாக்குவதும் முதலாளியத்துவமே. ஆகையால் அது வேலையின்மையை எப்போதும் ஒழிக்காது.

இரண்டாவதாக, கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டுமெனில் அது அடிப்படைக் கல்வியிலிருந்து மாற்றியமைக்கப்பட வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வியையும் - அறிவியலுக்கும் வாழ்க்கை வளர்ச்சிக்கும் உகந்த கல்வியை பாரபட்சமில்லாமல் ஆரம்ப வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உத்தரவாதப் படுத்த வேண்டும். அப்போதுதான் கல்வியின் தரம் உயருமே ஒழிய வெறும் வடிகட்டும் தேர்வுகளால் மட்டும் கல்வியின் தரம் உயர்ந்து விடாது. மாறாக, இத்தேர்வுகள் அனைத்தும் கல்வியை சந்தைப் பொருளாக மேலும் மேலும் மாற்றவே செய்யும்.

சந்தைமயமாகும் கல்வி

90களில் ஏற்படுத்தப்பட்ட காட்ஸ் அடிமை ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் அனைத்து துறைகளும் நிதிமூலதன ஆதிக்க கொள்ளை கும்பலுக்கு திறந்துவிடப்பட்டன. ஏற்கனவே அமலில் இருந்த சிறுசிறு தடைகளும் அகற்றப்பட்டது. கல்வி துறையிலும் மெல்ல மெல்ல  அமல்படுத்தப்பட்டு வந்த தனியார்மய - தாராளாமய - உலகமயக் கொள்கைகளால் ஆரம்பக் கல்வியிலிருந்து அனைத்தும் தனியார்மய சந்தைப் பொருளாக்கப்பட்டு விட்டது. தனியார் பள்ளிகள் புற்றீசல் போல பெருகியது. 2005ல் உயர்கல்வியில் இருந்த தடைகளும் அகற்றப்பட்டு 100% அந்நிய மூலதனத்திற்கு இந்திய கல்வித்துறை திறந்துவிடப்பட்டது. உலக வர்த்தக அமைப்புக்கும் தனியார் பகாசுர கார்ப்பரேட்களுக்கும் கல்விக்கான சந்தையாக இந்தியாவை மாற்றியமைத்தன. 2014ல் மோடி ஆட்சிக்கு வந்தபின் அனைத்து துறைகளிலும் காட்ஸ் ஒப்பந்தங்களின் கூறுகளை எட்டுக்கால் பாய்ச்சலில் அமல்படுத்த துவங்கிவிட்டது. 2015 நைரோபி மாநாட்டில் கல்வி 'வர்த்தக பொருள்' என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. கல்வி சமூகத்தின் அடிப்படை உரிமை என்பது மறுக்கப்பட்டு அது தனி நபர்களின் நுகர்வுபண்டமாக மாற்றியமைக்கப்பட்டது. கல்வி கற்கும் உரிமை உழைக்கும் மக்களிடமிருந்து அறுத்தெறியப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை பங்கெடுக்கும் உலகின் மிகப்பெரிய சந்தையாகவும், 200பில்லியன் டாலர்கள் புரளும் சந்தையாகவும் இது விளங்குவது இந்த கொள்ளையர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதுவே பாஜக அரசின் விதேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது. இந்த கல்விக் கொள்கையே கியூட் போன்ற பாசிச சட்டங்களுக்கு வழி வகுத்தது.

கியூட் உள்ளிட்ட தேர்வுகள், தனியார் பள்ளிகள் மட்டுமல்லாமல் தேர்வுகளுக்கான தனியார் கோச்சிங் சென்டர்கள் உருவாக்கத்திற்கும் பெருக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு (Oxford), ஸ்டான்ஃபோர்டு (Stanford), ஹார்வர்டு (Harvard), கேம்பிரிட்ஜ் (Cambridge), விச்சிட்டா(Wichita) போன்ற பல்கலைக் கழகங்களின் ஆசியுடன் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களே இந்த கோச்சிங் சென்டர்களையும் கல்வி மால்களையும் (Educational Malls) உருவாக்கியுள்ளன. 4500கும் மேற்பட்ட இணையவழிக் கல்வி வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியிருப்பினும் இதில் பைஜூஸ், அன்அகாடமி, அப்கிரேடு,வேதாந்து, ஒயிட்கேட் ஜூனியர், அஃபினிட்டி, நிட் (NIIT),  போன்றவையே ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை ஸீ லேர்ன், கேரியர் பாய்ண்ட், வெராண்டா லேர்ன் போன்ற பங்குச்சந்தை நிதிமூலதன சூதாடிகளுடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன. பெரிய சிண்டிகேட் மற்றும் கார்ட்டல்களாக இந்த கல்வித்துறை நிதியாதிக்க கும்பல் உருவெடுத்து விட்டன. இதை பாதுகாக்க முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியம் (IEPFA- Investor Education and Protection Fund Authority ) எனும் ஆணையம் மோடி அரசால் உருவாக்கப்பட்டு இந்த நிதிமூலதன கும்பலுக்குச் சேவை செய்கிறது. இந்த நிதியாதிக்க கும்பலே கியூட் தேர்வுக்கும் கோச்சிங் சென்டர்களையும் நடத்துகின்றன.  

இந்த கோச்சிங் நிறுவனங்களில் யார் படிக்க முடியும்? நம் வீட்டு பிள்ளைகள் படிக்க முடியுமா? அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் படிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. இந்த கோச்சிங் சென்டர்களுக்கு மட்டும் லட்சக் கணக்கில் செலவு செய்து படிக்க வேண்டும். அப்படி லட்சக் கணக்கில் கடன் பெற்று - இருக்கும் விவசாய நிலங்களை விற்று பயிற்சி பெற்று தேர்வு எழுதினாலும் நேர்மையாக வெற்றியடைந்து விட முடியும் என்பதற்கும் இங்கு உத்தரவாதமில்லை.

ஊழல் என்பது தனியார்மயத்தின் உடன்பிறப்பு. அது கியூட் போன்ற தனியார்மய தேர்விலும் தவிர்க்க முடியாதது. ஏற்கனவே நீட், ஜெ.இ.இ போன்ற தேர்வுகளிலும் அதன் முடிவுகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. சென்ற ஆண்டு நடத்தப்பட்ட பொறியியல் படிப்பிற்கான ஜெ.இ.இ. (JEE) தேர்வில் அஃபினிட்டி எஜூகேஷன் (Affinity Education) என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனம் கணினிகளை ஹேக்கர்கள் மூலம் திருட்டுத்தனமாக ஊடுருவி (Hack) செய்து கேள்வித்தாள்களிலும், தேர்வு முடிவுகளிலும் தில்லுமுல்லில் ஈடுபட்டு தேர்வு முறைகளை மாற்றியுள்ளது. ஹரியானாவில் ஒரு தேர்வு மையத்தில் மோசடி நடந்துள்ளது. இவை உதாரணமே. இதுபோன்ற மோசடிகள் ஏராளம். எனவே தனியார் கோச்சிங் நிறுவனங்கள் தேர்வு முடிவுகளின்  வெற்றி சதவிகிதத்தை மோசடியாக கூட்டி காண்பித்து அந்நிறுவனங்களின் சேர்க்கையை அதிகரிக்கின்றன. மாணவர்களை தங்கள் கொள்ளை லாப கோரப்பசிக்கு இரையாக்கும் முயற்சியில் இவ்வகையிலான ஊழல்களில் ஈடுபடுகின்றன.             

உயர்சாதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர்க்கு (EWS) 10% இட ஒதுக்கீடு! அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரான , சமூக நீதிக்கு குழிபறிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்போம் !

 

எனவே ஏழை எளிய உழைக்கும் மக்கள் இது போன்ற தனியார் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெற்று தேர்ச்சியடைவதும் சாத்தியமில்லாத விசயமாகியுள்ளது. மோடி அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வரும் இந்த பாசிச சட்டங்கள் சமூக நீதிக்கு குழிபறித்து  'காட்ஸ்' அநீதியை நிலைநாட்டி வருகின்றது.

பள்ளிகளே இத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த முடியாதா?

இப்போதிருக்கும் பள்ளிக் கல்வித்துறை கட்டமைப்பில் நிச்சயமாக பள்ளிகளே இத்தேர்வுக்கு பயிற்றுவிக்க முடியாது. அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதி ஆண்டிற்கு ஆண்டு குறைந்தே வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) யில் குறைந்தபட்சம் 6% கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டும் என 1968ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசியக் கல்வி கொள்கை கூறியது. ஆனால் தாராளமயமாக்கலுக்குப்பின் கல்வியில் தனியார் பங்கெடுப்பு ஊக்குவிக்கப்பட்டு அரசு தன் பங்களிப்பை குறைத்து வருகிறது. தற்போது சராசரியாக 1% முதல் 2% வரை மட்டுமே கல்விக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இதிலும் 60% உயர்கல்விக்கென ஒதுக்கிவிடுவதனால் பள்ளிக் கல்விக்கு ஜிடிபியில் சொற்பமான சதவிகிதமே ஒதுக்கப்படுகிறது. இந்த தொகைகளும் பெரும்பாலும் ஊழியர்கள் சம்பளம், சீருடைகள், பாடப்புத்தகங்கள், பகல் உணவு, கட்டுமானம் -பராமரிப்பு மற்றும் சில சலுகைகளுக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. இவை ஆசிரியர் பயிற்சிக்கோ, கல்வி தரத்தை உயர்த்துவதற்கான எவ்வித முயற்சிகளுக்கும் பயன்படுத்தப்படுவதில்லை.

இந்தியாவில் உள்ள பல ஆசிரியர்களுக்கு கணினி பயன்பாட்டு அடிப்படை கூட தெரியாது. 5ம் வகுப்பிற்கு மேல் படிக்கும் 60% மாணவர்களுக்கு 2ம் வகுப்பு பாடத்தினை கூட படிக்க திணறும் அவல நிலையே நீடிக்கிறது. பயிற்சியும் கல்விமுறையும் அந்த அளவிலேயே உள்ளது.

அதுவும் கொரோனா கால நிலைமைகளில் இந்த நிலை மேலும் பரிதாபத்திற்குள்ளாகியுள்ளது, இந்த சூழலில்தான் தடாலடியாக அரசு இந்த கியூட் பாசிச சட்டத்தை அரங்கேற்றியுள்ளது.  இவர்கள் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக தேர்வுகளை கடினமாக்குகிறார்கள். தனியார்-அரசு பங்கேற்பு (PPP) எனும் பெயரில் ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்களின் கூடாரமாகவே பள்ளிகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட பிற சிறு தனியார் பள்ளிகளின் கல்வித்தரம் மேம்படவில்லை என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. பிரதான காரணமாக இருப்பது இந்த அரசு பின்பற்றும் அழுகிய- புதிய காலனிய வடிவிலான தேசியக் கல்விக் கொள்கையேயாகும். இந்த கல்விக் கொள்கையை மாற்றியமைக்காமல் கல்வியின் தரத்தினை உயர்த்துவதைப் பற்றி பேசுவது கேலிக் கூத்தாகும்.

கியூட்: உயர்கல்வி மீதான மாநில உரிமையைப் பறித்து மத்தியில் குவிக்கும் 'ஒரே நாடு - ஒரே தேர்வு' திட்டம்

ஏகாதிபத்திய சகாப்தம் உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையிலும், நாட்டிற்குள்ளேயும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியினைத் தோற்றுவித்துள்ளது. இந்தியாவிலும் பொருளாதார அரசியல் வளர்ச்சி மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. அது கல்வியிலும் எதிரொலிக்காமல் இல்லை. கல்வியிலும் மாநிலங்களுக்கு மாநிலம் வளர்ச்சி விகிதத்தில்  பெருத்த வேறுபாடு நிலவுகிறது.

நிதி ஒதுக்கீட்டிலும், அதேபோல நாடு முழுவதும் ஏற்றத்தாழ்வான நிலையே நீடிக்கிறது. ஒவ்வொரு மாணவனுக்குமான நிதி ஒதுக்கீடு வெவ்வேறு மாநிலங்களிலும் ஒரேமாதிரியாக இல்லை. எனவே நாடு தழுவிய ஒரே தேர்வு என்பது எவ்வளவு பெரிய சதி திட்டம்.

கியூட்டால் அமல்படுத்தப்படும் 'ஒரே நாடு-ஒரே தேர்வு' திட்டம் உயர் கல்வியின் மீதான மாநில உரிமைகளையும் பறித்து மத்தியில் குவித்து வருகிறது. பல்கலைக் கழக மானியக் குழு (UGC) கலைக்கப்பட்டு, அவை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் புதிய காலனிய கல்வி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் மாநில பல்கலைக் கழகங்கள் வருவதற்கு வழி வகுக்கிறது. கியூட் தேர்வு என்பது மத்திய பல்கலைக் கழகங்களான 54 பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமே என்பதெல்லாம் வெற்று மோசடி வார்த்தைகள்தான். பிற தரப்படுத்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களும் கியூட் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு சேர்க்கை நடத்தலாம் என பரிந்துரை செய்துள்ளது (NTA) என்டிஏ- தேசிய தேர்வுகள் முகமை எனும் புதிய காலனிய அமைப்பு. இந்த பரிந்துரை பல்கலைக் கழகங்கள் தன்னாட்சியுடன் சேர்க்கை நடத்தும் நிலையை இழந்து இவ்வமைப்பின் வழிகாட்டுதலைப் பின்பற்றும் அவலநிலையே ஏற்பட உள்ளது. இது பல்கலைக் கழகங்கள் மீதான மாநில உரிமைகளை முற்றாக பறிக்கும் நோக்கில் அமைந்துள்ளது.  

புதிய காலனிய இந்தியாவில் - தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாத நிலையில் மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொது பட்டியல் என்ற மூன்றுமே சாரம்சத்தில் ஒரே பட்டியலே. மத்திய அரசு விரும்பினால் இதை சட்டமியற்றி எப்போது வேண்டுமானாலும் மாற்றிவிட முடியும் என்பதற்கு இந்திரா ஆட்சி காலத்தில் கல்வி மாநில பட்டியலிலிருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டதே ஒரு சிறந்த உதாரணம். எனவே, இம்மூன்று பட்டியலில் மாநில அரசிற்கு எவ்வித உரிமையும் இல்லை என்பது கண்கூடு. இருப்பினும் பள்ளி மற்றும் உயர்கல்வி நிலையங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் மாநில அரசு சிறு சிறு உரிமைகளை அனுபவித்து வந்தது. இந்த கியூட் - 'ஒரே நாடு ஒரே தேர்வு' திட்டத்தின் மூலம் அதுவும் பறிபோய் வருகிறது. இதற்கு முன்னோட்டமாகத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக் கழக துணை வேந்தர்களை மாநில அரசின் அனுமதியின்றி ஒருங்கிணைத்துப் பேசியதாக பார்க்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தேசிய இனங்களின் சுய நிர்ணய அங்கீகரிக்கப்படாவிட்டாலும் கூட்டாட்சி என்ற பொய்யான பிம்பமாவது இதுவரை கட்டிக் காக்கப் பட்டு வந்தது. இன்று இந்த கியூட் - 'ஒரேநாடு ஒரே தேர்வு' சட்டத்தால் அந்த கூட்டாட்சி பிம்பத்திற்கும் பலத்த அடி விழுந்துள்ளது.

அதேபோல், மத்திய பல்கலைக் கழகம் உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு வந்த மாநில அளவிலான இட் ஒதுக்கீடுகளும் பறிக்கப்படுவதற்கும் இத்தேர்வு முறை வழிவகை செய்துள்ளது. இதனால் பெரிதும் பயனடையப் போவது உயர் சாதியினரும், செல்வ வளத்தால் உயர்ந்தவர்கள் மட்டுமே. தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள உழைக்கும் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு சமூக அநீதி அரங்கேற்றப்படும்.

அமித்ஷா கும்பலின் சமீபத்திய அறிக்கை மேலுமொரு பீதியைக் கிளப்பியுள்ளது. மத்திய அரசின் அனைத்து தேர்வுகளும் இந்தி மொழியின் வாயிலாக நடத்தப்படும் என அவ்வறிக்கை கூறுகிறது. விருப்பமுள்ளவர்கள் 13 பிராந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என்கிறது. பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை எவ்வகையில் அளிக்கப்படும் என்பதும் கேள்விக்குறியே. இது இந்தி மொழி ஆதிக்கத்திற்கும் பிற பயிற்று மொழி கல்வி கற்போர் இத்தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலைக்குமே இட்டுச் செல்லும்.

இங்கிருக்கும் திராவிட அடிமைகளும் இந்தி எதிர்ப்பு எனும் பெயரில் ஆங்கில அடிமைத் தனத்திற்கு ஆதரவாகவே முணகி வருகிறார்களே ஒழிய, தாய்மொழி உரிமைகளுக்கு அவர்கள் என்றும் போராடியதில்லை; தற்போதும் குரல் கொடுக்கப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் "வெள்ளைக்காரன் கால் சாக்ஸ் போட்ட கால்; பார்ப்பான் காலை விட சுத்தமானது.ஆகவே அதை நக்குவதில் தவறில்லை" எனப் பெருமை பேசிய பெரியாரின் வாரிசுகள். எனவே, நாம்தான் தாய்மொழிக் கல்விக்காகவும்; தேர்வுகளில் தாய் மொழி உரிமைக்காகவும் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். அதேபோல் கியூட், நீட் தேர்வுகளுக்கு தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு கேட்டு இவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்புகின்றனர்; மத்திய பாஜக அரசுக்கு கடிதம் மேல் கடிதம் எழுதிக் குவிக்கின்றனர். இத்தீர்மானங்கள் கிடப்பில் போடப்படும் என்று தெரிந்தே நாடகமாடுகின்றனர். திமுக அரசு கடிதம் எழுதி எழுதி பாஜகவுடன் தனது கள்ளக்காதலை வளர்த்து வருகின்றதே ஒழிய பறிபோகும் மாநில உரிமைகளுக்கும் கல்வி உரிமைகளுக்கும் எதிராக ஒரு திடமான போராட்ட வடிவங்களை முன்னெடுக்கப் போவதில்லை. இவைகளின் வர்க்க நலன் அதை செய்ய அனுமதிக்காது என்பதே உண்மை.

குறைந்தபட்ச கல்வி உரிமைகள்கூட பறிபோகும் அவலம்

பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகள்தான் அதிக கட்டணம் செலுத்தியும் செலவுகள் செய்தும் படிக்க வேண்டிய நிலை நீடித்து வந்தது. ஏழை எளிய மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் படிப்புகளையே அதனால் பெரிதும் தேர்ந்தெடுத்து படித்து வந்தனர். இன்று அந்த படிப்புகளும் அவர்களுக்கு இந்த கியூட் போன்ற பாசிச நடைமுறைத் திட்டங்களால் எட்டாக் கனியாக்கப் பட்டு வருகிறது. அவர்கள் உயர்கல்வி பெறுவதிலிருந்து முற்றிலும் துடைத்தழிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை அமலில் இருந்த  கல்விமுறை கிராமப்புற மாணவர்களும், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட  சாதியைச் சார்ந்த மாணவர்களும் தங்களை சிறிதளவேனும் மேம்படுத்திக் கொள்ள உதவியது. ஏற்கனவே 2015ம் ஆண்டுகளுக்குப் பிறகு உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை சதவிகிதம் குறைந்துவரும் நிலையில், இந்த கியூட் போன்ற தேர்வுகளால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய காலனிய விதேசியக் கல்வி முறையால் குறைந்தபட்ச கல்வி உரிமையும் பறிக்கப்பட்டு அவர்கள் தூக்கிலேற்றப்படுகின்றனர். அல்லது இதன் வாயிலாகப் படிக்கும் மாணவர்கள் சமூக அக்கறையற்ற - பண்பற்ற அடிமை வாழ்வியலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

கல்வியின் வளர்ச்சி ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் எனும் அடிப்படையைக் கூட உணராமல் மத்திய பாஜக அரசு இந்த கல்வி உரிமை பறிப்பு - பாசிச சட்டங்களை உருவாக்குகின்றது. மாநில அரசுகளும் அதற்குத் துணை போகின்றன. கியூட், நீட் போன்ற தேர்வுக்களுக்கெதிராகவும், புதியகாலனிய கல்வி அமைப்புகள் - பன்னாட்டு உள்நாட்டு கல்வி கார்ப்பரேட்களுக்கெதிராகவும்,  கல்வி மீதான மாநில உரிமைகளுக்கு ஆதரவாகவும், அரசியலுக்கும் வாழ்க்கைக்கும் நெருக்கமான விஞ்ஞானப் பூர்வ புதிய ஜனநாயக கல்வி முறைக்காகப் போராடுவதற்கும், புதிய காலனிய சுரண்டல் முறையைத் தீவிரப்படுத்தும் மோடி ஆட்சியை வீழ்த்தவும் நாம் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். 

                                                                

சமரன்

(செப்டம்பர் – அக்டோபர் 2022 மாத இதழிலிருந்து)