புதிய காலனியத்தின் கருவியாக இன்னொரு கருப்புச் சட்டமே 'குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டம், 2022'

மோடி அரசுக்கும், திமுக அரசுக்கும் இஸ்லாமியர்கள் என்றாலே குற்றப் பரம்பரையினராக தெரிகிறது. இனி இந்தச் சட்டப்படி இஸ்லாமியர்களை, பழங்குடிகளை குற்றப்பரம்பரை போல் ஒடுக்க இந்த ஆளறிச் சட்டம் இனி அவர்களுக்கு உதவப் போகிறது

புதிய காலனியத்தின் கருவியாக இன்னொரு கருப்புச் சட்டமே 'குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டம், 2022'

பாசிச மோடி ஆட்சி ஆளறி அடையாளச் சட்டமான 'குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டம், 2022'ஐ தற்போது கொண்டுவந்துள்ளது. இச்சட்டத்தின் மூலம். கைரேகை, கால் ரேகை, டி.என்.ஏ., கருவிழி, ரத்தம், போன்ற உயிரில் மாதிரிகள், மூளை மேப்பிங், அன்றாட செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் என எல்லாவற்றையும் எவரிடமிருந்தும் வலுக்கட்டாயமாக பெற்று சேகரித்து வைத்துக்கொள்ளமுடியும். இதன் மூலம் யாரை வேண்டுமென்றாலும் குற்றவாளிகளாக மாற்ற முடியும். முந்தைய பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் 1920ஆம் ஆண்டு கொண்டுவந்த 'சிறைவாசிகள் அடையாளப்படுத்துதல் சட்டம்'தான் இதுவரையில் நடைமுறையில் இருந்தது. அதில் கைது செய்யப்படுபவர்களின் அங்க அடையாளங்களான கைரேகை, கால் ரேகை மற்றும் முகவரி போன்ற தகவல்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டு வந்தது. ஆகவே இப்புதிய சட்டம் பிரிட்டிஷ் ஆட்சியின் சிறைவாசிகள் அடையாளப்படுத்துதல் சட்டத்தை விட மிக மோசமான சட்டமாகும். இஸ்லாமியார் உள்ளிட்ட மத சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட சாதி மக்கள், பழங்குடிகள், ஆட்சிக்கு எதிராகப் போராடுபவர்கள், ஜனநாயக சக்திகள், ஏன் எதிர் கட்சிகளை கூட நிரந்தர குற்றவாளிகளாக மாற்றி ஒடுக்கும் ஒரு நவீன குற்றப்பரம்பரை சட்டமாக இச்சட்டத்தை பாசிச மோடி கும்பல் அமல்படுத்தியுள்ளது.

பாசிச மோடி அரசு இதற்கான சட்டவரைவை மார்ச் 28 அன்று தாக்கல் செய்தது. ஏப்ரல் 4 ஆம் தேதி மக்களவையிலும் ஏப்ரல் 6 ஆம் தேதி மாநிலங்களவையிலும் எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஏப்ரல் 18ல் ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின் வார்ப்பான முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் ஒப்புதல் தரப்பட்டு அதிவிரைவாக நடைமுறைக்கும் வந்துவிட்டது. பாசிச மோடி அரசு முழு பெரும்பான்மை பலத்தை வைத்துள்ளதால், அறைகுறை ஜனநாயக வழிமுறைகளையும் ஒழித்து கட்டி, மக்களை ஒடுக்குவதற்கு அவசர அவசரமாக இன்னொரு கருப்புச் சட்டத்தை கொண்டுவந்துவிட்டது.

இந்த புதிய ஆளறிச் சட்டமானது அரசியல் சட்டத்திற்கு எதிராக தனி மனித அந்தரங்க உரிமைகளை பறித்து நாட்டை போலீஸ் ராஜ்ஜியமாக (surveillance state) மாற்றப் போகிறது. அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் குற்றப்பரம்பரை என்று அறிவித்தது போல் இன்று அனைவரையும் குற்றவாளிகளாக மாற்றி 24 மணி நேரமும் அரசின் நேரடி கண்காணிப்பில் கொண்டுவரப் போகிறது. முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் அகதிகளின் உரிமையைப் போல் இந்நாட்டு மக்களின் உரிமைகளையும் பறிக்கப் போகிறது.

இந்த பாசிச சட்டத்தை கொண்டுவருவதற்கு காங்கிரஸ் ஆட்சி ஏற்கெனவே 2005ல் பாதை போட்டுத் தந்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 சட்டப் பிரிவு 53, 54ன் கீழ் கைதிகளிடமிருந்து டி.என்.ஏ., விந்து, தலைமுடி, சளி, எச்சில், ஸ்வாப்கள், கருவிழி ஆகிய மாதிரிகளை சேகரிப்பதற்கான சட்டத் திருத்தத்தை 2005ல் காங்கிரஸ் ஆட்சிதான் கொண்டு வந்தது. அதை பாஜக ஆட்சி எந்த ஒரு குடிமகனையும் இச்சட்டத்தின் கீழ் கொண்டுவந்து கட்டாயமாக மாதிரிகளை சேகரித்து குற்றவாளிகளாக மாற்றும் வகையில் இச்சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

இன்றைய நவீன தாராளவாத கொள்கைகளை அமல்படுத்துவதை எதிர்த்தும், ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை எதிர்த்தும், பாசிச ஆட்சியை எதிர்த்தும், பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளை எதிர்த்தும் அனைத்து தரப்பு மக்களும் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஒடுக்க ஊபா, தீவிரவாத தடுப்புச் சட்டம், குடியுரிமைச் சட்டம், பதிவேடுகள் சட்டம், என்.ஐ.ஏ உட்பட பல்வேறு பாசிச கருப்புச் சட்டங்களை ஏற்கெனவே பாசிச பாஜக அரசு பயன்படுத்துகிறது. இப்பாசிச சட்டங்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து நிரந்தரமாக சிறையிலடைக்க இனி இந்த ஆளறி சட்டத்தைப் பாஜக அரசு பயன்படுத்தப் போகிறது.

இது குடிமக்களின் அனைத்து அந்தரங்க உரிமைகளையும் ஒழிக்கப்போகிறது. அரைகுறையாக அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டிருந்த குற்றவாளிகளுக்கான உரிமைகள், சுதந்திரமாக வாழும் உரிமைகள் என எல்லா அடிப்படை உரிமைகளையும் செல்லாக்காசாக்கியுள்ளது இச்சட்டம்.

ஆளறிச் சட்டம் என்ன சொல்கிறது

  • ·       கைரேகை, கால் ரேகை, முகவரி என்ற தகவலை மட்டுமே திரட்டும் நடைமுறையோடு கூடுதலாக உயிரியல் மாதிரிகள் (ரத்தம், தலைமுடி, கருவிழிப்படலம்) மற்றும் அதன் ஆய்வுகள் கட்டாயமாக சேகரிக்கப்படும்.
  • ·       குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, பிரிவு 53, 53A இல் சொல்லப்பட்டுள்ள அடையாளங்கள் (டி.என்.ஏ. சோதனைக்காக ரத்தம், விந்து, தலைமுடி, சளி, எச்சில், ஸ்வாப்கள் ஆகிய மாதிரிகள்) கட்டாயப்படுத்தி பெற்று பதிவு செய்யலாம்.  
  • ·       சோதனைக்கான "அளவீடு" என்பதற்கான எவ்வித வரையறையும் இல்லாத தெளிவற்றதாக உள்ள இச்சட்டத்தால், இனி மூளை மேப்பிங் மற்றும் போதைப் பகுப்பாய்வு உட்பட அனைத்து சோதனைக்கும் ஒருவரை உட்படுத்த முடியும்.
  • ·       இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள "நடத்தை பண்புகளின் விவரங்கள்" சேகரிப்பது என்ற சொல்லுக்கு, ஒரு நபரின் அன்றாட செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் என்பதே பொருளாகும். இச்சட்டத்தின் படி எதையும் மறைத்து வைக்க உரிமை இல்லை. மறைத்தால் தண்டனைக்குரிய குற்றமாக இச்சட்டம் சொல்கிறது.
  • ·       'எந்தவொரு குற்றத்திலும் ஈடுபட்டவர்' என்ற வார்த்தை விசாரணைக் கைதி, கைதி, சந்தேக நபர் ஆகியவற்றுக்கு இடையே உள்ள அனைத்து வேறுபாட்டையும் ஒழித்துவிட்டது. இதன்படி அனைவரையும் குற்றவாளிகள் என அறிவித்து தகவல் பெறலாம்.
  • ·       முந்தைய சட்டத்தில் (1920 சட்டம்) விருப்பத்தின் பேரில், சில அரசுக்கு எதிரான கொடூர குற்ற வழக்குகளில் மட்டுமே வலுக்கட்டாயமாக தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இனி அனைத்து தகவல்களையும் அனைவரிடமிருந்தும் வலுக்கட்டாயமாக பெற்று பதிவு செய்யலாம் என்பதுதான் புதிய சட்டத்தின் இன்னொரு கொடூரமாகும்.
  • ·       காவல்துறை, சி.பி.ஐ., என்.ஐ.ஏ. என எந்த அமைப்பால் கைது செய்யப்பட்டாலும் குறைந்தது சார் ஆய்வாளர் (Sub Inspector) குற்றவாளிகளின் அனைத்து அடையாளங்களையும் சேகரிக்கலாம் என்ற பழைய சட்டத்திற்கு மாறாக இப்புதிய சட்டம் கீழ்நிலை தலைமைக் காவலருக்கே (Head Constable) அதிகாரம் அளிக்கிறது.
  • ·       முந்தைய சட்டம் முதல்நிலை மேஜிஸ்டிரேட் அல்லது மாவட்ட அளவிலான அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்) விசாரணைக்காக மாதிரிகளை சேகரிக்கலாம். ஆனால் புதிய சட்டத்தில் நிர்வாக நடுவர் (Executive Magistrate) அதாவது வட்டாட்சியருக்கே அந்த அதிகாரத்தை வழங்குகிறது.
  • ·       ஊராட்சி அல்லது நகராட்சி அதிகாரி, சுகாதார ஆய்வாளர், போக்குவரத்துப் பிரிவு காவலர், வரி வசூலிப்பவர் - இன்னும் சட்டத்தைப் பராமரிப்பவர் அல்லது அதுபோன்ற கடமைகளைச் செய்கிறவர்கள் - அனைவருமே இந்த அடையாளம் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்ளமுடியும்.
  • ·       இந்திய மக்களின் சராசரி ஆயுள் 70 வயது. ஆனால் இந்த புதியச் சட்டம் 75 ஆண்டகளுக்கு டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்க வழிவகை செய்கிறது. டிஎன்ஏ சேகரிப்பு சட்டமாகவுள்ளதால் ஆயுள் முழுவதும் பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவரை குற்றவாளி ஆக்கமுடியும்.
  • ·       புதிய சட்டத்தில் குற்றத்திலிருந்து விடுதலை செய்தால் விடுதலைப் பெற்றவர் அதை அழிக்க கோரலாம் என சொல்லப்பட்டிருந்தாலும் காவல்துறைக்கு தேவைப்பட்டால் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அழிக்காமல் நிரந்தரமாக சேமித்து வைக்கமுடியும் என்கிறது.

புதிய காலனிய நவீன குற்ற பரம்பரைச் சட்டம்

புதிய வகை குற்றப் பரம்பரைகளை உருவாக்கி முழு கண்காணிப்பின் கீழ் அனைவரையும் கொண்டுவரப் போகிறது இந்த ஆளறிச் சட்டம். இதன் மூலம் கார்ப்பரேட்டுகளுக்கான நவீன கொத்தடிமைகளை உருவாக்கி அரசின் முழு கண்காணிப்பின் கீழ் மக்களை கொண்டுவருவதற்கு ஏதுவாக இந்தச் சட்டம் உதவப் போகிறது. இது பழைய சட்டத்தின் புதிய வடிவம்.

முன்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 1871ஆம் ஆண்டு தன்னை எதிர்த்துப் போராடிய பழங்குடிகளை, குழுக்களை பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் குற்றப் பரம்பரை என்று அறிவித்தார்கள். அவர்களை எந்நேரமும் அகதிகள் முகாம் போல் கண்காணிப்பிலேயே வைத்திருந்தார்கள். அம்மக்களை ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும், ஆபத்தான சுரங்கத் தொழில்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும் கொத்தடிமைகளாக பயன்படுத்தினார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சி 1911ல் தென்மாநில பகுதிகளிலும், 1914ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலும் இந்த காலனிய அடிமை முறையை அமல்படுத்தியது. குற்றப் பழங்குடிகள் சட்டம் 1924ன் படி குற்றப் பழங்குடிகள் என்று யாரை அறிவித்தாலும் அவர்கள் தாங்களாக முன்வந்து கைரேகையையும், தேவையான தகவல்களையும் கட்டாயம் அளிக்க வேண்டும். அதற்கு முன்பே குற்றப் பழங்குடிகள் சட்டம் 1911ல் பிரிவு 9ன் படி குற்றப் பழங்குடி மக்களைக் காவல்துறை அதிகாரிகள் அழைத்தால், வராமல் இருந்தாலோ, வர மறுத்தாலோ, கொடுத்த தகவல் தவறானது என தெரிந்தாலோ 6 மாதம் வரை கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என கொண்டுவந்திருந்தது. இதே முறையில் இன்றைய புதிய காலனிய இந்தியாவில் இப்புதிய சட்டத்தின் படி அடையாளத்தை தருவதற்கு மறுத்தாலோ, தவறாக தகவல் தந்தாலோ 3 மாதம் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்கிறது. இதன்மூலம் இன்றும் நம்மை காலனிய அடிமைகள்தான் என்கிறது இப்புதிய சட்டம்

1947ஆம் ஆண்டு அதிகார மாற்றத்திற்குப் பிறகு "குற்றப் பழங்குடிகள் சட்டம் 1924"ஐ மாற்றி "குற்றவாளிகள் தடுப்புச் சட்டம்" என கொண்டுவந்தது. அச்சட்டத்தின் மூலம் யாரை வேண்டுமென்றாலும் குற்ற நபர்களாக மாற்ற வழிவகை செய்தது. அச்சட்டம் நீக்கப்பட்ட பிறகும் கூட, அச்சட்டத்தில் இருந்த அம்சங்களை தற்போது நடைமுறையில் இருக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 107 முதல் 110 வரை உள்ள சரத்துகளாக சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி எவரையும் குற்றவாளி என சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்து வரப்பட்டு பிணை கேட்பது இன்றும் தொடர்கிறது. இப்போது கொண்டுவந்திருக்கிற 2022ஆம் சட்டத்தால் குற்றவாளிகள், குடிமக்கள் என்ற எல்லா பாகுபாடுகளையும் முற்றிலுமாக ஒழித்திருக்கிறது. நம் மீது நவீன காலனியத்தின் பிடியை, பாசிச ஒடுக்குமுறையை அதிகப்படுத்தியிருக்கிறது. 

தற்போது இந்த பாசிச மோடி ஆட்சி சிறுபான்மை மக்களை அகதிகள் போல், இரண்டாம்தர குடிமக்களைப் போல் நடத்திக் கொண்டிருக்கிறது. 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது இஸ்லாமியர்களின் வீடுகளை பட்டியலிட்டு அடையாளம் கண்டு குறிவைத்து கொன்றதும் அனைவரும் அறிந்ததே. பீமா கோரேகான் வழக்கில், எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டோர் அனைவரும் சிறைகளில் விசாரணைக் கைதிகளாக பிணை கூட மறுக்கப்பட்டு பல வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். பாசிச பாஜகவின் அரசு பயங்கரவாத ஆட்சியாக உள்ள உ.பி.யில் யோகியை எதிர்த்து கருத்து கூறுபவர்களை கைது செய்வதும், ஆர்ப்பாட்டம் நடத்தினால் இஸ்லாமியர்களை அடையாளம் கண்டு அவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்குவதும் தொடர்கிறது. பல பகுதிகளில் இன்றும் பழங்குடிகளை குற்றவாளிகளாகவே ஆட்சியாளர்கள் நடத்துகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இன்று இந்தியாவின் மிகக் கொடிய பாசிச சட்டமான குடியுரிமைச் சட்டம், பதிவேடுகள் சட்டம் போன்ற சட்டங்கள் நாட்டின் குடிமக்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களின் குடியிருப்புகளையே வதை முகாம்களாக பாசிச மோடி ஆட்சி மாற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கு மிகப்பெரிய சான்றாக அஸ்ஸாம் வதைமுகாம்களைக் குறிப்பிடலாம். டெல்லியிலும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்த இஸ்லாமியர்களின் குடிசை பகுதிகள் அடையாளம் காணப்பட்டு முழுவதும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. நாளை பதிவேடுகள் சட்டத்தில் குறிக்கப்படும் தகவல்களை பயன்படுத்தி எல்லா மக்களையும் பிரிட்டிஷார் குற்றப் பழங்குடிகள் என முத்திரையிட்டு ஒடுக்கப்பட்டது போல் இப் புதிய சட்டத்தின் கீழ் அனைவரையும் கொண்டுவரும். அவர்கள் மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் இப்படி படிப்படியாக மாற்றப்படுவர். குடியுரிமைச் சட்டம், பதிவேடுகள் சட்டத்தின் கவசமாக ஆளறி அடையாளச் சட்டம் மாறிவிட்டது.

சீனாவின் உய்கூர் வதை முகாம், அமெரிக்காவின் குவாண்டமாலோ வதை முகாம் போன்று இந்தியாவில் குடியுரிமை மற்றும் பதிவேடுகள் சட்டத்தின் மூலம் வதை முகாம்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வதை முகாம்களில் உள்ளவர்களை ஆளறிச் சட்டத்தின் மூலம் குற்றவாளிகளாக மாற்றி கார்ப்பரேட்டுகளுக்கு கூலி அடிமைகளாக விற்கப் போகிறது.

தமிழக அரசு 1998 கோவை மத கலவரத்திற்குப் பிறகு இஸ்லாமிய பகுதி முழுவதையும் செக்போஸ்ட் அமைத்து அகதிகள் முகாம்போல் நடத்தியதை மறந்துவிட முடியாது. அன்றைய அதிமுக அரசு உட்பட இப்போதைய திமுக அரசு வரை நல்லெண்ணத்தின் அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்யும் போது இஸ்லாமிய சிறைவாசிகளை தவிர்த்துவிட்டே விடுதலை செய்தார்கள். மோடி அரசுக்கும், திமுக அரசுக்கும் இஸ்லாமியர்கள் என்றாலே குற்றப் பரம்பரையினராக தெரிகிறது. இனி இந்தச் சட்டப்படி இஸ்லாமியர்களை, பழங்குடிகளை குற்றப்பரம்பரை போல் ஒடுக்க இந்த ஆளறிச் சட்டம் இனி அவர்களுக்கு உதவப் போகிறது.

பாசிசத்தின் சித்தாந்தமான இனதூய்மையை நிறுவத் துடிக்கும் சட்டம்

தற்போது கூட மோடி அரசு இந்திய மக்கள் தொகை குழுக்களின் மரபணுவில் (டி.என்.ஏ) உள்ள மரபணு ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை ஆய்வு செய்து இனத் தூய்மையை அடையாளம் காணவும், குணங்களை மதிப்பிடவும் அதன் மூலம் சனாதன தர்மத்தை நியாயப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவும் முடிவு செய்திருக்கிறது. இது முழுக்க முழுக்க மத கூறுகளையும் சாதிய கூறுகளையும் மரபணுவோடு பொருத்தி பரம்பரை குற்றவாளிகளாகவும், தூய்மையற்றவர்கள், நல்ல பண்பில்லாதவர்கள் என பிறப்பின் அடிப்படையில் ஒடுக்குவதற்கும் திட்டம் போடுகிறது பாஜக சங் பரிவார கும்பல்கள்.

உயிரியல் மாதிரிகளில் டி.என்.ஏ போன்ற தகவல்களை சேகரிக்கலாம் என்கிறது ஆளறிச் சட்டம். அதற்குத் துணையாக இன்னொரு சட்ட வரைவான டி.என்.ஏ. தொழில்நுட்ப வரன்முறைச் சட்டத்தைச் சொல்லலாம். இச்சட்டம் டி.என்.ஏ தொழில்நுட்பத்தையும், தகவல் பாதுகாப்பையும் ஒழுங்குபடுத்துவதற்கு மாறாக ஆளறி அடையாளச் சட்டம் போல் தாழ்த்தப்பட்ட சாதி மக்களையும், சிறுபான்மை மதத்தினரையும், பழங்குடிகளையும் பிறப்பின் அடிப்படையில் குற்றவாளிகளாக மாற்றவதை நோக்கமாகக் கொண்டது. இப்போது எல்லாருடைய தகவல்களையும் சேகரிக்க இந்த அடையாளச் சட்டம் ஒப்புதல் வழங்கிவிட்டதால் இனி யாரை வேண்டுமென்றாலும் சாதி, மதத்தின் அடிப்படையில் தகவல்களை கட்டாயப்படுத்தி பெற்று, தனக்கு எதிராக உள்ளவர்களை எல்லாம் குற்ற ஜீன்களின் தொடர்ச்சி, குற்ற வம்சாவளி என கூறி குற்றவாளிகளாக மாற்ற முடியும். தந்தை குற்றவாளியாக இருந்தால் மகனும் குற்றவாளியாகத்தான் இருக்க முடியும் என்று பிறப்பின் அடிப்படையில் இச்சட்டங்கள் குற்றங்களை வரையறுக்கின்றன. இந்தியா போன்ற பரந்த மக்கள் தொகை கொண்ட நாட்டில் இதை முக அடையாளம் (facial identification) அறிதலோடு இணைக்கப்படும் போது யாரை வேண்டுமென்றாலும் எளிதாக குற்றவாளிகள் ஆக்கலாம். தொழில்நுட்பத்தில் பரவலாக வளராத நிலையில் மிக உறுதியற்ற பண்பு அறிதல் முறையை பயன்படுத்தி மக்கள் மீது திட்டமிட்டு தவறாக ஏவ முடியும். இதுவரையில் இந்த டி.என்.ஏ. சான்று என்பது போதுமான துல்லியத்தோடு இல்லை என்பது சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுவரையில் நீதிமன்றங்கள் அவற்றை முடிவான சாட்சியங்களாக (Conclusive proof) ஏற்பதில்லை. ஏனென்றால், அவை தவறாக அரசே பயன்படுத்தும் நிலையில்தான் இருக்கிறது. அப்படி தவறாக பயன்படுத்திய கொடூர வழக்குகளை நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

டிஎன்ஏ தொழில்நுட்ப வரன்முறை மசோதா

காவல்துறையால் சந்தேகிக்கப்படக் கூடிய எந்த ஒரு நபரின் டி.என்.ஏ. மாதிரியை பெற்று அந்தத் தகவலை பாதுகாத்து வைக்கவும், இந்த மரபணுவை வைத்து ஒருவர் குற்றம் செய்தாரா இல்லையா என்று முடிவு செய்யவும் இவ்வரைவு வழிவகை செய்கிறது. இந்த மசோதா நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. வாஜ்பாய் காலத்தில் இம்மசோதா கொண்டுவர 2003ல் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.  காங்கிரசாலும் முயற்சிக்கப்பட்டது. அதற்கு 2012ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியால் ஒரு குழு அமைக்கப்பட்டு சட்ட முன்மொழிவில் சில திருத்தங்கள் செய்தது. அதன் பிறகு பாசிச மோடி ஆட்சி 2018ல் மசோதாகவாக கொண்டுவந்து சட்டமாகாமல் காலாவதியானது. பிறகு மீண்டும் 2019ல் கொண்டுவரப்பட்டு நிலைக்குழுவில் சட்டமாக்க வைத்திருக்கிறது. இதற்கு தேவையான தகவல் வங்கியை உருவாக்கி வருகிறது. இக்கட்டமைப்பை உருவாக்கியவுடன் இச்சட்டத்தை அமலுக்கு கொண்டுவந்துவிடும். ஆனால் இச்சட்டம் ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 9 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு கொடுத்த தீர்ப்புக்கு எதிரானதாகும்.

பயோ மெட்ரிக் முறைகளை ஏற்காத நாடுகள் கூட அந்த நாட்டு மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இந்த டி.என்.ஏ சேகரிப்பு முறைகளை செய்கிறது. இதை முழுக்க முழுக்க தண்டனை வழங்கும் நோக்கத்தோடே செயல்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் 1.4 கோடி பேர், சீனாவில் 80 லட்சம், பிரிட்டனில் 60 லட்சம் பேரின் டிஎன்ஏ உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன, இது போல் 70 நாடுகள் டிஎன்ஏ விவரங்களை சேகரிக்கின்றன. இதனைத் தவிர, மேலும், ஐரோப்பிய யூனியன், தென் அமெரிக்கா, வளைகுடா நாடுகள் உட்பட 30 நாடுகளில் இதற்கான சட்டங்கள் இயற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. பல நாடுகளில் டி.என்.ஏ. சேகரிப்பதை எதிர்த்து மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் டி.என்.ஏ பரிசோதனைகள் மூலம் குற்றங்களை கண்டுபிடிக்கும் முறை தோல்வி அடைந்து வருவதாக அமெரிக்க சட்ட வல்லுநர்களே கூறுகிறார்கள். ஆனால் புதிய காலனிய, சார்பு நாடுகளில் இதைக் கொண்டுவர ஏகாதிபத்தியங்கள் முயல்கின்றன.

டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹனி பாபுவை எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்தார்கள். அவரின் கம்பியூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் (Hard Disk) மாவோயிஸ்ட் சதி சம்பந்தப்பட்ட கணினி கோப்பு (file) இருப்பதாக குற்றச்சாட்டினார்கள். ஆனால் இவை திட்டமிட்டு அரசே ஹார்ட் டிஸ்கில் உள்ளே நுழைத்திருக்கிறது என்று சோதனையில் கண்டறியப்பட்டது. ஆனால் இந்தப் பதிவு அவருக்கு எதிராக இன்றுவரையில் இவ்வழக்கில் ஏற்கப்பட்டுள்ளது. ஃபைலை ஹார்ட்டிஸ்கில் நுழைக்க பெகாசஸ்சை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டும் வைக்கப்பட்டிருக்கிறது. அரசே எந்த அறிவியல் முறையையும் தனக்கு உகந்த வகையில் பயன்படுத்திக்கொள்ளும் என்பதற்கு இவ்வழக்கு ஓர் எடுத்துக்காட்டு.

எங்கோ குற்றம் நடக்கும் இடத்திற்கு நீங்கள் சென்றிருந்தாலும் கூட, அல்லது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களைக் கூட குற்றவாளிகளாக மாற்ற முடியும். கனியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி கொலையான வழக்கில் தாயின் டி.என்.ஏ. சோதனையை கோரினார்கள். அதே போல் அங்கு அப்பள்ளி தரப்பின் ஆட்களால் நடத்தப்பட்ட கனியாமூர் கலவரத்தில் பல அப்பாவி பொதுமக்களை கைது செய்தார்கள். எப்படி என்றால் அவர்களின் முக அடையாளத்தை பொருத்திப் பார்க்கும் முறைகொண்டு (face imposing) அங்கு இருந்தார்கள் என்ற ஒரே காரணத்தை வைத்து கைது செய்தார்கள். அதையே ஆதாரமாக கொண்டு குண்டர் தடுப்புச் சட்டத்திலும் அடைத்திருக்கிறார்கள். இச்சட்டத்தின்படி எல்லா உயிரியல் மாதிரிகளைக் கொண்டும் அவர்களையே அவர்களுக்கு எதிரான சாட்சியமாக இனி மாற்றிவிட முடியும்.

ஒரு பக்கம் புகார்தாரர்களையே குற்றவாளியாக மாற்றுகின்ற வாய்ப்பும், இன்னொரு பக்கம் குற்றம் சாட்டப்பட்டவர்களையே தனக்கு எதிரான சாட்சிகளாக மாற்றி அவர்களை சிறையில் நிரந்தரமாக வைக்கவும், அவர்களுக்கு கொடூர தண்டனைகளை வழங்கவும் கொண்டுவந்துள்ள இந்த புதிய காலனிய ஆளறி அடையாளச் சட்டம் பிரிட்டிஷ் காலனியச் சட்டத்தைவிட மிகவும் கொடூரமானது.

தனி நபரின் அந்தரங்க உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டிருக்கிறது

இதுவரையில் தனி நபர்களின் உரிமைகளை அரசியலமைப்பு சட்டம் அரைகுறையாக பாதுகாத்து வந்தது. அந்த அரைகுறை உரிமையும் இப்போது முற்றிலும் தகர்க்கப்பட்டிருக்கிறது. 2017ல் ஆதார் சம்பந்தமான கே.எஸ்.புட்டசாமி மற்றும் ஒருவர் -எதிர்- இந்திய ஒன்றியம் என்ற வழக்கில் ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 9 பேர் கொண்ட அமர்வு, தனிநபர் உரிமை என்பது அடிப்படை உரிமையில்லை என்று வழங்கியிருந்த முந்தைய தீர்ப்புகளை எல்லாம் ரத்து செய்து தனி மனித "'அந்தரங்கத்துக்கான உரிமை' என்பது அரசியலமைப்பு குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் ஒரு அங்கமே" என்று உறுதிப்படுத்தியது.

ஆனால் அரசியலமைப்பு வழங்கிய உரிமைக்கு எதிராக ஒரு நபரின் நடத்தையை அறிய நடத்தப்படும் சோதனையை ஆளறிச் சட்டம் அங்கீகரிக்கிறது. இது அரசியலமைப்பு வழங்கியுள்ள பிரிவு 20 மற்றும் பிரிவு 21க்கு எதிரானது. ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியான காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரமே இதை கடுமையாக எதிர்த்துள்ளார்: "2010 முதல், இந்த நாட்டில் உள்ள சட்டம் போதைப்பொருள் பகுப்பாய்வு, பாலிகிராஃப் சோதனைகள் மற்றும் BEAP [மூளை மின்சாரம் செயல்படுத்தும் சுயவிவரம்] சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது. அவர்கள் சுதந்திரத்தையும் தனியுரிமையையும் மீறுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

இக்கருத்தை அவர் 2010 மே 5இல் 'செல்வி -எதிர்- கர்நாடக அரசு' என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பை குறிப்பிட்டே கூறியுள்ளார்.

அந்த தீர்ப்பில்

1. சுய விருப்பத்தின்படி அல்லாமல், பேசுவது உண்மையா இல்லையா என்பதை அறிய நடத்தும் சோதனைகள் அனைத்தும் கட்டாயப்படுத்திப் பெறப்படும் ஆதாரங்களாகவே கருதப்பட வேண்டும். எனவே, அந்தரங்க உரிமையைக் காக்க அரசமைப்புச் சட்டம் பிரிவு 20(3) அளிக்கும் பாதுகாப்பு இங்கே ஒப்பிட்டு பார்க்க வேண்டியதாகிறது.

2. சுய விருப்பமில்லாமல் ஒருவரிடம் கட்டாயப்படுத்தி இந்த வகைகளில் பெறப்படும் சாட்சியங்கள் அல்லது ஆதாரங்கள், அந்தரங்க உரிமையைக் காக்க அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமையை மீறும் செயல் என்றே நாங்கள் கருதுகிறோம்.

3. குற்ற வழக்குகளில் உண்மையைக் கண்டறியவோ, ஆதாரங்களை திரட்டவோ எந்த ஒரு தனிநபரும் மேலே கூறப்பட்ட எந்தவொரு நடைமுறைகளுக்கும் உள்ளாக்கப்படக் கூடாது என்றே நாங்கள் கருதுகிறோம்.

என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

அந்தரங்க உரிமையை காக்க அரசமைப்பு சட்டம் அளிக்கும் பிரிவு 20(3)ன் படி ஏற்கெனவே குடிமக்களுக்கு இருந்த அரசியல் உரிமைகளான…

  •        தகவல் உரிமை சட்டத்தின்கீழ், ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் நபருக்கு வழங்க முடியாது.
  •        ஒருவரின் தொலைபேசி உரையாடலை பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்கு விசாரணைக் குழுக்கள் உயர்நிலை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.
  •        சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளின் டி.என்.ஏ சோதனை அல்லது மூளை மேப்பிங் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டுமானால், அதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும்.
  •        பொதுமக்களின் வீடுகளிலும், அலுவலகத்திலும் சோதனை நடத்த வேண்டுமெனில், அதற்கு போலீசார் தங்கள் உயர் அதிகாரிகள் அல்லது நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும்.
  •        இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதும், அதை ஆராய்வதும் சட்டப்படி குற்றம்.

போன்ற மேற்கண்ட அனைத்து உரிமைகளையும் தூக்கி எறிந்துவிட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் உரிமைகளுக்கு எதிராக இந்த ஆளறி அடையாளச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரமே கூறுகிறார். எதிர்கட்சிகளே கூட இதை கண்டு அஞ்சும் அளவிற்கு சட்டவிரோதமான பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த ஆளறி அடையாளச் சட்டம் இருக்கிறது. இதுவரை உறுதி செய்யப்பட்ட தனியுரிமைக்கான அனைத்து உரிமைகளையும் அரசியலமைப்புக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள ஆளறி அடையாளச் சட்டம் தகர்த்தெறிந்திருக்கிறது.

2019ல் தாக்கல் செய்யப்பட்ட தகவல் பாதுகாப்பு மசோதா

இந்த மசோதா தற்போது செல்லா நிலைக்கு மாறிவிட்டது. தனிமனிதர்களிடமிருந்து சேகரிக்கப்படும் தகவல்களை எல்லாம் பாதுகாப்பதற்கு உத்தரவாதம் அளிக்க கொண்டுவரவேண்டிய  இச்சட்டம் முடக்கப்பட்டுவிட்டது. ஒரு தனிநபருக்கு அரசு பாதுகாக்க வேண்டிய தனியுரிமைக்கான உரிமை உள்ளது என்பது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களில் பொதிந்துள்ள அடிப்படை புரிதலாகும். இதனால்தான் பயோமெட்ரிக் தேசிய அடையாள அட்டைத் திட்டத்தை 2010-ம் ஆண்டு பிரிட்டன் கைவிட்டது. இஸ்ரேலில் கைரேகை அல்லாத குடிமக்களின் தகவல்கள் எங்கும் சேகரிக்கப்படாத ஒரு அடையாள அட்டைத் திட்டமே உள்ளது. சீனாவில் மட்டுமே பயோமெட்ரிக் முறை உள்ளது. வேறு எந்த ஏகாதிபத்திய நாடுகளிலும் இல்லாத பயோ மெட்ரிக் முறை இந்தியா போன்ற புதிய காலனியத்தின் கீழ் உள்ள நாடுகளில் மட்டும் அமலில் உள்ளது.

புட்டசாமி வழக்கில் தரவு பாதுகாப்பிற்காக ஒரு வலுவான சட்டத்தை ஆய்வு செய்து வைக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2017ல் தரவு பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்க ஸ்ரீகிருஷ்ணா குழுவினை மத்திய அரசு அமைத்தது. ஜூலை 2018 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்த அக்குழு, தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை முன்மொழிந்தது. இதன் தீமைகளையும் விளக்கியது. ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பில் 22 முதல் 34 சதவீதம் வரை பிழைகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மாநில அல்லது அரசு சாரா நிறுவனங்களால் தரவு தவறாகப் பயன்படுத்தப்படுவதைச் சரிபார்க்க தற்போது எந்தச் சட்டமும் இல்லை என்பதை சுட்டிக் காட்டியது.

2019 டிசம்பரில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதாவை. கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜேபிசி) அதை மதிப்பாய்வு செய்ய நிலைக் குழுவுக்கு அனுப்பியது. 2021 டிசம்பரில் ஜேபிசி சமர்ப்பித்த அறிக்கையில் வெறும் தரவுப் பாதுகாப்பு மசோதாவை முன்மொழிந்தது. தலைப்பிலிருந்து 'தனிநபர் தரவுகள்' என்ற வார்த்தை கைவிட்டு 'தரவுகள்' என்ற வார்த்தையை மட்டும் முன்மொழிந்தது.

இந்த நாட்டில் தகவல் பாதுகாப்பிற்கான எந்த சட்ட பாதுகாப்பும் இல்லை. ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட தகவல் பாதுகாப்பு மசோதாவின் பல்வேறு குறைபாடுகளை நீக்கி சரியான திருத்தங்கள் செய்து மீண்டும் கொண்டுவருவதற்கு எவ்வித முயற்சியையும் அரசு எடுக்கவில்லை. இந்நிலையில்தான் இந்த ஆளறிச் சட்டத்தின் மூலமாக பெறப்படும் தகவல் எவ்வளவு ஆபத்தானது. அவை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க முடியாது என்பதையும் அறியலாம்.

தகவல் பாதுகாப்பு உத்தரவாதம் இன்றி பலவந்தமாக களவாடப்படும் தனி மனித தகவல்கள்

2019ஆம் ஆண்டு தகவல் பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால் அவை விவாதித்து முழுமையான சட்டமாக வருவதற்கு முன்பே காலாவதியாகிவிட்டது. தகவல்களை பாதுகாக்க எந்தச் சட்டமும் இல்லாமல் தனிமனிதனின் தகவலை பெறுவது என்பது மிகவும் ஆபத்தானது. அதே போல டி.என்.ஏ. தொழில்நுட்ப வரன்முறை மசோதா சட்டமாக்கப்படாமலேயே இந்த ஆளறிச் சட்டத்தின் மூலம் டி.என்.ஏ தகவல்களை சேகரிப்பது ஆபத்தானதும் அரசியல் சட்ட விரோதமானதுமாகும்.

அனைத்திலும் அதி நவீன அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ள ஏகாதிபத்திய நாடுகளிலேயே இல்லாத பயோ மெட்ரிக் முறை வளர்ச்சி பெறாத, தகவலை பாதுகாக்க சட்டமில்லாத இந்தியா போன்ற நாடுகளில் புகுத்தப்படுகிறது. காரணம், ஏகாதிபத்திய கண்காணிப்பின் கீழ் நாம் மாற்றப்பட வேண்டும் என்பதே.

75 கோடி ஸ்மார்ட்போன்கள், 133 கோடி ஆதார் அட்டைகள், 80 கோடிக்கும் அதிகமான இணைய பயனர்கள், 4ஜி, 5ஜி வசதி கொண்டிருக்கும் இந்த நாட்டில் செல்போன் நிறுவனங்கள், பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள், தனியார் வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் ஆதார் தகவல் உட்பட எல்லா தகவல்களையும் திரட்டி வைத்துள்ளது. இந்த தகவல்களை யாருக்கு வேண்டுமென்றாலும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்கும் அதிகாரத்தை பெற்றிருக்கிறது. நம் தகவல்களை எந்த நாட்டிற்கும் ஏற்றுமதி (Data Export) செய்யப்படலாம். அண்மையில் ஜியோ நிறுவனத்தின் 9.99 விழுக்காடு பங்குகளை 43 ஆயிரத்து 574 கோடிக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியபோது நம் தகவல்களையும் சேர்த்தே வாங்கியுள்ளது. இந்நிறுவனங்களின் தகவல்களை "விதிவிலக்காகவோ அறிதாகவோ"தான் பரிமாறிக்கொள்வோம் என்று பேஸ்புக் கூறியது. மிகப் பெரிய தகவல் திரட்டல் வணிகத்தின் மூலம் நம் தகவலை விற்றுவிட்டு அதை பாதுகாப்போம் என்று பேஸ்புக் நிறுவனம் கூறுவது மோசடியானது. நமது அடையாளங்கள் எல்லாம் ஒவ்வொரு நாளும் களவு போகிறது. இதை தேசத் துரோகமாக கூடப் பார்க்காத அளவிற்கு நமது மனநிலையைக் மாற்றியமைத்திருக்கிறார்கள்.

அரசே நடத்தும் தகவல் வணிகம் அதைவிட மிகவும் ஆபத்தானது. பெகாசஸ் என்ற இஸ்ரேலின் உளவு மென்பொருளைப் பெற்று எல்லோரின் அந்தரங்கங்களை பாசிச பாஜக அரசு வேவு பார்க்கிறது. இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் குரலெழுப்பினார்கள். இனி ஆளறி அடையாளச் சட்டத்தின் கீழ் இதை சட்டப்படியே செய்யமுடியும்.

இயற்கை நியதிகளை எல்லாம் ஒழித்துக் கட்டி, போராடுபவர்களை எல்லாம் குற்றவாளிகளாக மாற்றி சிறையிலடைக்கவே இச்சட்டம்

ஏகாதிபத்திய புதிய காலனியத்தின் பிடி இந்தியாவை மேலும் மேலும் இறுக்கிக் கொண்டிருக்கிறது. நாட்டின் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் முன்னிலும் தீவிரமாகி கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து அனைத்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும் போராடுகிறது. அவ்வாறு போராடும் மக்களை ஒடுக்க பாசிச ஒடுக்குமுறையைத் தவிர வேறுவழி ஆட்சியாளர்களுக்கு இல்லை. இது போன்ற சட்டங்கள் இருந்தால்தான் மக்களை ஒடுக்கி நிரந்தரமாக சிறையில் அடைக்க முடியும்.

குற்றத்தை ஒழிப்பதற்கு மாறாக குற்றவாளிகளையே ஒழிப்பதுதான் இச்சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. நோயை ஒழிப்பதற்கு நோயாளியை ஒழிக்கும் வழிமுறையை கையிலெடுத்திருக்கிறது. இச்சட்டத்தின் அடிப்படையில் விசாரணை கைதிகளின் எல்லா அந்தரங்க தகவல்களை அவர்களிடமிருந்தே பெற்று, அவர்களையே தனக்கு எதிரான சாட்சியமாக பலவந்தமாக மாற்ற முடியும். அதை வைத்து விரைவாக விசாரணையை முடித்து, எளிதாக தண்டனையை வழங்குவதே இதன் நோக்கம். இந்தியா போன்ற நாடுகளில் காவல்துறை புலனாய்வு முறையாக மூன்றாம் தர விசாரணை முறையே (Third Degree Method) பெரும்பான்மையாக மேற்கொள்ளப்படுகிறது. காவல்துறையில் கொடுக்கப்படும் எந்த வாக்குமூலமும் செல்லாது என்ற நியதிகள் எல்லாம் ஒழிக்கப்பட்டு பிரெயின் மேப்பிங், வீடியோ பதிவு என எந்தெந்த அம்சங்களில் பலவந்தமாக பெறமுடியுமோ அத்தனையும் பெற்று தான் நினைத்தவர்களையெல்லாம் நிரந்தர குற்றவாளியாக அரசால் மாற்ற முடியும்.

இதை பாசிச பாஜக அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவே நாடாளுமன்றத்தில் கூறுகிறார். அவர் "உள்நாட்டு பாதுகாப்புக்கும், சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பயோமெட்ரிக் தகவல்களை (Biometric Details) சேகரிப்பது அவசியமாகிறது. இது, குற்றவாளிகள் யார் என்பதை அடையாளம் காண்பதற்கும், அவர்களின் குற்றச்செயல்களை ஆதாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபிக்கவும் பேருதவியாக இருக்கும். மேலும், காவல்துறை அதிகாரிகள், குற்றவாளிகளின் குற்றங்களை நீதிமன்றங்களில் உறுதிசெய்வதில் பல்வேறு சிக்கல்கள், பின்னடைவுகளை சந்திக்கின்றனர். அடுத்த தலைமுறையினரின் குற்றங்களை, பழைய தொழில்நுட்பங்கள் உதவியுடன் கண்டுபிடிக்க முடியாது என்பதால் காலத்துக்கேற்ப புதிய மாற்றங்களுடன் இந்த சட்டமசோதா உருவாக்கப் பட்டிருக்கிறது." என்றார்.

முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரமோ "நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், அரசியல் தொண்டர், தொழிற்சங்கச் செயல்பாட்டாளர், மாணவர் தலைவர்கள், சமூக சேவகர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் இதுவரை கைது செய்யப்படாவிட்டாலும் எதிர்காலத்திலும் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று உத்தரவாதமாகக் கூறிவிட முடியுமா? இவ்வாறு கைதானவர்களிடம் எடுக்கப்படும் அடையாளங்கள் 75 ஆண்டுகள் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும், சட்டத்தை அமல்படுத்தும் அரசு முகமைகள் அனைத்துடனும் பகிர்ந்துகொள்ளப்படும். இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள், குற்றத்தை விசாரிக்கும் அமைப்புடன் பகிர்ந்துகொள்ளப்படும் என்றில்லை! ஊராட்சி அல்லது நகராட்சி அதிகாரி, சுகாதார ஆய்வாளர், போக்குவரத்துப் பிரிவு காவலர், வரி வசூலிப்பவர் - இன்னும் சட்டத்தைப் பராமரிப்பவர் அல்லது அதுபோன்ற கடமைகளைச் செய்கிறவர்கள் - அனைவருமே இந்த அடையாளங்களைத் தருமாறு கோரவும் பெறவும் உரிமை படைத்தவர்களாகிறார்கள்!" என்று இச்சட்டத்தினால் வரும் ஆபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாசிச மோடி அரசு குற்றவாளிகள் என்று யாரை எல்லாம் சிறையில் அடைக்கிறார்கள்? சிறுபான்மை மத மக்கள், பழங்குடிகள், தாழ்த்தப்பட்ட சாதி மக்கள், தொழிலாளிகள், விவசாயிகள் ஆகியோரை குறிவைத்தே பாசிச மோடி அரசு ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. கோவை கலவர குண்டுவெடிப்பில், பீமா கோரேகான் வழக்கில், எல்கர் பரிஷத் வழக்கில், கார்ப்பரேட்டை எதிர்த்துப் போராடி கைது செய்யப்பட்ட தொழிலாளிகள் என பல வழக்குகளில் போராடியவர்களையே சிறைகளில் விசாரணைக் கைதிகளாகவே அடைத்து வைத்திருக்கிறது. ஊபா சட்டத்தில் (UAPA) இன்று கவிஞர் வரவர ராவ், ஆன்ந்த் டெல்டும்டே, சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லாகா போன்ற பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஜனநாயகத்துக்காக போராடியவர் என எல்லோரையும் சிறையிலடைத்திருக்கிறது. கொரோனா காலத்தில் கங்கை ஆற்றில் பிணங்கள் மிதப்பதையும், கொத்து கொத்தாக எரியூட்டியதையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பத்திரிக்கையாளர்கள் மீது ஊபா சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. உ.பி.யில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்த செய்தியை சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளரை சிறையில் அடைத்தது. இப்படி 154 பத்திரிகையாளர்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு சிறையில் தள்ளியிருக்கிறது. காஷ்மீர் சிறப்பதிகார சட்டப்பிரிவு 370 விலக்கப்பட்ட நேரத்தில் காஷ்மீரில் அரசியல் கட்சிகளில் செயல்பட்டுக்கொண்டிருந்த 177 பேர்; குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய 22 பேர் மீது தேசத் துரோக சட்டம் பாய்ச்சப்பட்டது. அவர்கள் உட்பட சிறைப்படுத்தப்பட்டவர்கள் 1,100 பேரும், உ.பி.யில் இச்சட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட 5,558 பேர்களும் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

அரசை எதிர்த்து போராடுகின்ற பல்வேறு ஜனநாயக சக்திகளை சிறையில் நீண்ட காலம் வைக்க முடியவில்லை. பிணையில் வெளிவந்து மீண்டும் ஆட்சிக்கு எதிராக போராடுகின்ற நிலையில் அவர்களை நிரந்தரமாக சிறையிலடைத்து ஒடுக்க வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளில் அவர்களுக்கு தண்டனைகளை உறுதி செய்ய வேண்டும். அதற்கு அவர்களுக்கு எதிரான ஆதாரமாக இந்தச் சட்டத்தின்படி அவர்களிடமே அடையாளங்கள் திரட்டப்பட்டு சிறைகளில் நிரந்தரமாக அடைக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்.

சிறைச் சட்டம், போலீஸ் சட்டம், ஜாமீன், மேல் நீதிமன்றங்களை அணுகுவது, நீதிமன்ற முறைமைகள் உட்பட எல்லாம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் திருத்தப்பட வேண்டும் என்று ஜனநாயகவாதிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு நேர் மாறாக ஏற்கெனவே இருக்கின்ற அரைகுறை ஜனநாயகத்தையும் ஒழித்துக் கட்டி பாசிச சட்டங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு. நீதிமன்றங்களும் கருப்புச் சட்டங்களை அனுமதித்து பாசிச ஒடுக்குமுறைக்குத் துணை போகிறது.

இந்தியாவின் காவல்நிலைய மற்றும் சிறைச்சாலை கொட்டடி சித்தரவதைகள்

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் 348 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தினமும் 5 பேர்  லாக்கப்பிலேயே மரணம் அடைவதாக அதிர்ச்சிகர ஆய்வறிக்கை 2019ல் வெளியிடப்பட்டுள்ளது. இறப்பவர்களில் 60 சதவீதமானவர்கள் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட, பழங்குடி இனத்தவர்கள்தான் என்று சித்ரவதைகளுக்கு எதிரான தேசிய பிரச்சார இயக்கம் கூறுகிறது.

சிறைச்சாலை புள்ளிவிவரங்கள் இந்தியா 2020ன்படி, சிறைகளின் மொத்த திறன் 4,14,033 ஆகவும், தற்போதைய சிறைவாசிகள் 4,88,511 ஆகவும் உள்ளது. இதில் 3,71,848 பேர் விசாரணைக் கைதிகள். தண்டனை பெற்றவர்கள் 1,12,589 பேர் மட்டுமே. அதாவது நான்கு கைதிகளில் மூன்று பேர் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். அவர்களில் பல பேர் வழக்கு நடத்தி முடிக்கப்பட்டு தண்டனையே வழங்கியிருந்தாலும் கூட அந்த தண்டனை காலத்தை முடித்துவிட்டு விடுதலையாகியிருப்பார்கள். அந்தளவுக்கு சட்டவிரோத காவலில் தொடர்ந்து விசாரணைக் கைதியாகவே அரசே வைத்திருக்கிறது, ஊபா சட்டம் குற்றவாளிகளே தன்னை நிரபராதி என நிரூபித்துக்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது. இந்த ஊபா சட்டத்தின் கீழ் 2016-2019 காலகட்டத்தில் 7,050 பேர் மீது வழக்கு போடப்பட்டது. அதில் 2.2% நபர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளார்கள். தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்வது 2014-2020க்கு இடையிலான காலத்தில் மட்டும் 28 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

மக்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களை முடக்குகிறது. ஒடுக்கும் கருப்புச் சட்டங்களை அவசரச் சட்டமாக கொண்டுவருகிறது பாசிச மோடி ஆட்சி

2010ல் சித்தரவதை தடுப்பு சட்டத்திற்கான வரைவு அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படாமல்  கைவிடப்பட்டது. ஐ.நா.வின் சித்தரவதைக்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டு கையெழுத்திட்ட இந்தியா, அதன் பிறகு 2017ல் மீண்டும் சித்தரவதை தடுப்பு சட்டவரைவை கொண்டுவர நிர்ப்பந்திக்கப் பட்டது. ஆனால் இதுவரை சட்டமாக மாற்றப்படவில்லை.

இது போல் ஆளறி சட்டத்திற்கு தொடர்பான சித்திரவதை தடுப்புச் சட்டம், தகவல் பாதுகாப்புச் சட்டம் ஆகிய சட்டங்களை எல்லாம் பெயரளவுக்கு வரைவை தாக்கல் செய்துவிட்டு முடக்கி கிடப்பில் போட்டுள்ளது மோடி ஆட்சி. மாறாக குடியுரிமைச் சட்டம், பதிவேடுகள் சட்டம், டி.என்.ஏ. தொழில்நுட்ப வரன்முறைச் சட்டம், ஆளறி அடையாளச் சட்டம் ஆகியவை இரவோடு இரவாக சட்டங்களாக எவ்வித ஜனநாயக வழிமுறைகளுமின்றி நிறைவேற்றப் படுகின்றன.

இன்னும் ஒரு படி மேலே நீதிமன்றங்கள் ஆட்சிக்கு சாதகமான வழக்குகளில் வேகமாக தீர்ப்புக் கூறுகின்றன. ஆனால், மக்கள் பிரச்சினைகளில் மோடி ஆட்சி அரசியலமைப்புக்கு எதிராக செயல்பட்டாலும், எதிரான சட்டங்கள் கொண்டுவந்தாலும் அதை தடை செய்யாமல் மவுனமாக அனுமதிக்கிறது. மக்கள் போராட்டங்கள் இந்தியா முழுவதும் வெகுண்டெழும் போதுதான் அவற்றை விசாரிக்கக் கூட செய்கிறது, அதுவும் போராடுபவர்களுக்கு நிபந்தனைகளை விதித்துவிட்டு தீர்ப்பெழுதுகிறது. விவசாய சட்டத்திற்கு எதிரான போராட்டம் அதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டம், 2022ஐ அரசியலமைப்புக்கு எதிரானது என நீதிமன்றம் இதுவரையில் விசாரிக்கக்கூட இல்லை. தற்போதெல்லாம் நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தீர்ப்புகள் வழங்குவதில்லை. ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சி ("Collective conscience of the society"), பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை என்ற அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்குகிறது. அதனால் மக்கள் மாபெரும் போராட்டங்கள் நடத்தினால்தான் நீதிமன்றத்தின் கூட்டு மனசாட்சியை நிரூபிக்கவும், பெரும்பான்மை மக்களின் விருப்பம் இதுவென்று நிரூபிக்கவும் அரசியல் சட்டத்திற்கும் மேலான தீர்ப்புகளைக் கூட பெற முடியும் என்பதே இன்றைய நீதிமன்றங்களின் நிலைமை.

பாசிச மோடி ஆட்சியைத் தூக்கி எறிய புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அணிதிரள்வோம்

ஏகாதிபத்திய அரசியல், பொருளாதார கொள்கைகளை நடைமுறைப் படுத்தும் பாசிச மோடி அரசும், அதன் அடிவருடியாக இருக்கிற மாநில ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், நீதிமன்றங்களும் இந்த கருப்புச் சட்டங்களை வைத்துதான் ஆட்சி செய்ய வேண்டியிருக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம், குற்றவியல் நடைமுறை (அடையாளச் சட்டம்), டி.என்.ஏ. தொழில்நுட்ப வரன்முறை சட்டம், இந்திய தொலைத் தொடர்பு சட்டம் என எல்லாம் வலைப்பின்னலாக ஆளும் வர்க்கத்தை காக்க பின்னப்பட்டிருக்கிறது. இதனால் தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், சிறுகுறு தொழில்துறை முதலாளிகள், ஜனநாயக சக்திகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கருப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து சட்ட ரீதியாகவே பாராளுமன்றத் திரையைப் பயன்படுத்தி பாசிச ஆட்சியை மோடி கும்பல் கட்டியமைக்கிறது. நம் நாட்டை அடிமைப்படுத்துகிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் அடிவருடி தரகு முதலாளித்துவ கும்பலையும், பாசிச மோடி அரசையும் வீழ்த்தவேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து இந்த புதிய ஆளறி அடையாளச் சட்டம் உட்பட அனைத்து கருப்புச் சட்டங்களை திரும்பப் பெற போராடுவதும், மக்களுக்கான அடிப்படை அரசியல் உரிமைகளை உத்தரவாதப் படுத்துகிற சட்டங்களை உடனடியாக நிறைவேற்றப் போராடுவதுமே நமது உடனடிக் கடமையாகும்.

சமரன் – நவம்பர் (ஏ.எம்.கே. நினைவுநாள் சிறப்பிதழ்) 2022