சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு சட்ட வரைவு 2020
நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தையும் ஏகாதிபத்தியங்களின் காலனிய சுரண்டலுக்கு முற்றாகத் திறந்துவிடும் "சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு சட்ட வரைவு 2020"ஐ திரும்பப் பெறு! - சமரன்
'சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020' மார்ச் மாதம் 12 ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்த புதிய வரைவின் மீது மக்கள் கருத்து கூறுவதற்காக ஆகஸ்ட் 11 வரை கெடு விதித்திருக்கிறார்கள்.
கொரோனாவால் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியிருக்கும் சமயத்தில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இணையதளத்தில் வெளியிட்டு கருத்துக் கேட்பு என்ற பெயரால் உடனடியாக இதை நிறைவேற்றத் துடிக்கிறது மத்திய அரசு. மாநில மொழிகளில் எதிலும் வெளியிடாததோடு, சாமானிய மக்களிடம் இப்படி ஒரு சட்டம் வருவதையே அறிவிக்காமல்தான் இச்சட்டம் வழக்கமான அவசரச் சட்ட வரைவாக இதையும் வைத்திருக்கிறார்கள். இச்சட்டம் வெளிப்படை தன்மையற்ற, ஜனநாயகமற்ற, சம நீதியற்ற, பொறுப்புகளை ஏற்காத பாசிச சட்டமாக இருக்கிறது என்பதே மிகப் பெரும்பான்மை மக்களின் கருத்தாக இருக்கிறது.
இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் கொரோனா காலத்தில் மே 7ஆம் தேதி விசாகப்பட்டிணத்தில் எல்.ஜி. பாலிமர் நிறுவனத்திலிருந்து ஸ்டைரின் வாயு வெளியேறி சில பேர் இறந்ததும், பல பேர் மிகப் பெரிய அளவுக்குப் பாதிக்கப்பட்டதும் நடந்தது. காரணம் இரண்டு சகாப்தங்களாக எவ்வித சுற்றுச் சூழல் அனுமதி இல்லாமல், எவ்வித பராமரிப்பும் இல்லாமல் செயல்பட்ட நிறுவனம். இது போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே சட்டவிரோதமாக இயங்கிக்கொண்டிருப்பதை சட்டப் பூர்வமாக மாற்றும் வேலையைத்தான் இச்சட்ட வரைவு செய்யப் போகிறது.
உலக முதலாளித்துவ பொது நெருக்கடியும், ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கான போட்டியுமே மூல வளங்களை கொள்ளையடிப்பதற்கான விதி
இன்று உலகம் முழுவதும் பொது நெருக்கடி கூர்மையடைந்திருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியமும், சீன ஏகாதிபத்தியமும் உலக மேலாதிக்கத்திற்காகவும், நாடுகளின் மறுபங்கீட்டிற்காகவும் தங்களுக்கிடையில் மோதிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தன் நெருக்கடியின் சுமைகளை ஒடுக்கப்பட்ட நாடுகள் மீது திணிப்பதும்; ஆதிக்கத்தை நிலை நிறுத்த இயற்கை மற்றும் மனித வளங்களை முழுவதையும் கொள்ளையிடுவதையுமே தனது கொள்கையாகவே கொண்டிருக்கிறது.
"மேலாதிக்கம் பெறுவதற்காக, அதாவது பிரதேசக் கைப்பற்றலுக்காக ஒரு சில வல்லரசுகளுக் கிடையில் நடைபெறும் போட்டியானது அவ்வளவாகத் தமக்கே நேரடியாகப் பிரதேசம் வேண்டும் என்பதற்காக அல்லாமல், தமது எதிராளியைப் பலவீனப் படுத்துவதற்காகவும் அவனது மேலாதிக்கத்துக்குக் குழிபறிப்பதற்காகவும் எழும் போட்டியாக இருப்பது ஏகாதிபத்தியத்தின் அவசிய குணாதிசயமாகும்" என்று லெனின் கூறுவது எவ்வளவு உண்மையானது என்பதை இன்றுள்ள நிலைமையில் புரிந்துகொள்ள முடியும்.
2009க்குப் பிறகு அமெரிக்காவும் அதன் தொடர்ச்சியாக மற்ற ஏகாதிபத்திய நாடுகளும் மீள முடியாத பொது நெருக்கடி ஏற்பட்டது. சீனா ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்குச் சவால் விடும் அளவுக்கு வளர்ந்து வந்து நின்றது. இது பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியதோடு ஏகாதிபத்தியத்துக்குள் இன்னும் தீவிரமான போட்டியையும் உருவாக்கியது. அது இன்று வர்த்தக ரீதியாக ஒன்றையொன்று தடை செய்துகொள்ளும் வர்த்தகப் போராகவும், போட்டி ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள நிதி மூலதனங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதும், அரசியல் ரீதியாகவே ஒருவருக்கொருவர் எதிராக ராஜதந்திர ரீதியாக அரசியல் வியூகங்களை நகர்த்துவதும், ஒடுக்கப்பட்ட நாடுகளை தனது புதிய காலனிய நாடுகளை மற்ற நாடுகளுக்குத் தூண்டி மோதவிடுவதுமான பனிப்போராக உச்சக் கட்டமாக வளர்ந்து நிற்கிறது. இந்நிலையிலிருந்தே அதன் லாப வெறி கொண்ட உற்பத்தியும், இயற்கை வளங்களைச் சூறையாடுவதும் அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீரழிவையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அமெரிக்கா 1.10 லட்சம் கோடி டாலர் அளவு நிலக்கரி மற்றும் மரக்கரி வளத்தினை பயன்பாட்டுக்காக உற்பத்தி செய்கிறது. சீனா 23 லட்சம் கோடி நிலக்கரி மற்றும் மரக்கரி வளத்தினை பயன்பாட்டுக்காக உற்பத்தி செய்கிறது.
தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு பயன்படுத்தப் படும் உலோகத்தினை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதில் சீனா இரண்டாம் மிகப் பெரிய உற்பத்தியாளனாக இருக்கிறது. இதன் சந்தை 2019ன் படி 13.2 பில்லியன் டாலர். அது 2026ல் 19.8 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்கிறார்கள். உலக ஏற்றுமதியில் சீனா ஆதிக்கம் வகிக்கிறது. ஜப்பான் 58 சதவீத உலோகத்தினை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. அமெரிக்கா சீனாவிடமிருந்து அவர்களின் ஒட்டுமொத்த தேவையில் 59 சதவீதத்தை சீனாவிடமிருந்தே இறக்குமதி செய்கிறது. பனிப்போருக்குப் பிறகு இதை எதிர்கொள்ள அமெரிக்கா தனது உலோக பயன்பாட்டையும் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்வதை குறைக்கவும் 2019ல் முடிவு செய்தது. அதை நடைமுறைப்படுத்த மூன்றாவது பெரிய உலோக வளத்தை உடைய கனடாவோடு ஒப்பந்தமும் போட்டுள்ளது. இந்த போட்டியில்தான் ஒடுக்கப்பட்டுள்ள நாடுகளில் உள்ள இயற்கை வளங்கள் மீதான ஏகாதிபத்தியங்களின் வேட்டையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மிக அதிகமாகப் பயன்படுத்தும் இயற்கை வளங்களில், நிலக்கரி, கனிமங்கள் பெற்றிருக்கும் நாடுகளில் இந்தியா நான்காம் இடத்தில் இருக்கிறது. உலக தேவையில் 12 சதவீத தோரியத்தையும், 60 சதவீதம் மைக்காவையும், அதிகளவில் மாங்கனீசையும் இன்னும் பலவற்றையும் இந்தியாவிலிருந்து உலக தேவைக்காகச் சுரண்டப்படுகிறது.
எவ்வித கேள்வியும் இன்றி இவ்வளங்களை எல்லாம் கொள்ளையிடுவதற்கான கொள்கை ஏகாதிபத்தியவாதிகளுக்கு மிகவும் அவசியமாகிறது. லெனின் கூறியது போல் "ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட மூலப் பொருள் ஆதாரங்களில் மட்டுமின்றி, இனி உருவாக்கப்படக் கூடியவற்றிலும் நிதி மூலதனம் அக்கறை கொண்டுள்ளது. ஏனெனில், இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி மிகவும் துரிதமாய் நடந்தேறுகிறது."
"பொதுவாய் நிதி மூலதனமானது வருங்காலத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடிய மூலப்பொருள் ஆதாரங்களை கணக்கிலெடுத்துக் கொண்டும், இன்னும் பங்கிடப்படாத பிரதேசங்களாய் எஞ்சியிருக்கும் கடைசிப் பகுதிகளுக்காகவோ, ஏற்கனவே பங்கிடப் பட்டுவிட்ட பிரதேசங்களின் மறுபங்கீட்டுக்காகவோ நடைபெறும் மூர்க்கமான போராட்டத்தில் பின்னிலையில் விடப்பட்டு விடுவோமோ என்று அஞ்சியும், எல்லா இடங்களிலும் உள்ள எல்லா வகையான நிலங்களையும் எவ்வளவு அதிகமாக கைப்பற்ற முடியுமோ அவ்வளவையும் எல்லா வழிகளிலும் கைப்பற்றிக் கொள்ளப் பிரயத்தனம் செய்கிறது."
இதன் தேவையிலிருந்தே இந்த உலகமயக்கால் கொள்கையும், அதைச் செயல்படுத்துவதற்கான வழியையும் ஏகாதிபத்தியங்கள் திணிக்கிறது. இங்குள்ள எல்லா இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் பிரிட்டிஷ் தனது ஆரம்பக்கால காலனியாதிக்கத்தில் லாபம், வணிகம் என்ற அடிப்படையில் அல்லாமல் எப்படி ஆதிகால சுரண்டல் வடிவில் கேள்வியில்லாமல் கொள்ளையடித்துச் சென்றதோ அதே போல் இப்போது எல்லா ஏகாதிபத்தியங்களும் அதன் புதிய காலனிய நாடுகளைக் கொள்ளையடிக்கத் தயாராகிவிட்டது.
இப்படி உலகில் இயற்கை மூல வளங்களை கபளீகரம் செய்வதன் மூலமாகவும், அதை வைத்து உற்பத்தி செய்து கழிவுகளை வெளியேற்றுவதன் மூலமாகவும் மொத்தமாக ஆண்டுக்கு சுமார் 36 பில்லியன் டன் அளவிலான கரிவாயுவை உலகின் ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள முன்னணி 90 நிறுவனங்களே வெளியிடுகின்றன. இதில் அதிக அளவு சீனாவும், அமெரிக்காவுமே உலக அளவில் 40 சதவீதத்திற்கு வெளியேற்றுகிறது.
ஏற்கெனவே 1997 கியோட்டா மாநாட்டில் புவி வெப்பமயமாதலுக்கு ஏகாதிபத்தியமே காரணம் என்பதை ஒப்புக்கொண்டு, அதைக் குறைக்கவும் ஏற்றுக்கொண்டது. பிறகு அது 2006ல் நடைமுறைக்கு வருவதற்குள் அதிலிருந்து கனடாவும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் வெளியேறியது. அன்றைய உலகமயக் கொள்கையின் தேவையிலிருந்தே காங்கிரஸ் அரசால் சுற்றுச் சூழல் கொள்கை 2006ல் இயற்றப்பட்டது.
2015ஆம் ஆண்டு பாரிஸ் சுற்றுச் சூழல் மாநாட்டில் இந்தியாவும், சீனாவும் கரிவாயுவின் செறிவை (Carbon Intensity) உற்பத்தி நிகழ்முறையில் குறைத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளது. ஆனால் மாற்று எரிசக்தியை உருவாக்குவதற்கு மாறாகவும், நமது தேவைக்கான கனிம உற்பத்தி என்பதற்கு மாறாகவும் நிலக்கரிச் சுரங்கத்தையும், கனிம சுரங்கத்தையும் தனியாருக்குத் தாரை வார்த்து எவ்வளவு வேண்டுமென்றாலும் கொள்ளையடிக்க அனுமதிக்கிறது. இந்நிலையில் தனக்குக் கொள்ளையடிக்கச் சாதகமாக இல்லை என்று 2019ஆம் ஆண்டே அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்தும் வெளியேறியுள்ளது.
ஆனால் இந்தியாவோ ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்து இங்குள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துச் செல்ல ஏதுவாக உலகமயமாக்கல் கொள்கையான காட், காட்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இருதரப்பு அடிமை ஒப்பந்தங்களை ஏற்றுச் செயல்படுவதின் அடிப்படையிலும் இச்சட்டத்தின் மூலமும் வசதி செய்து கொடுக்கிறது, அவர்கள் கொள்ளையடிப்பதால் ஏற்படும் இயற்கை பேரிடருக்கு நாமே பொறுப்பேற்க வேண்டிய ஒரு சட்டமாகவே இந்த சுற்றுச் சூழல் சட்ட வரைவு 2020 இருக்கிறது.
உலகப் பொது நெருக்கடியிலிருந்து ஏகாதிபத்தியங்கள் தீர்த்துக்கொள்ளவும், உலக மேலாதிக்க போட்டிக்கான இன்றைய தேவையிலிருந்தும் ஏகாதிபத்தியங்கள் நம் மீது திணித்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்ட வரைவு 2020ஐ மோடி தலைமையிலான இந்துத்துவ பாசிச அரசு கொண்டுவந்துள்ளது.
தனியார்மயத்தின் மூலம் ஏகாதிபத்தியங்கள் நம் வளங்களைக் கேள்வியில்லாமல் கொள்ளையடித்துச் செல்லவே அனுமதிக்கும் பாசிச மோடி அரசு
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் திட்டம் தொடங்கிய பிறகு அனுமதி வழங்க மைய அரசிற்கு அதிகாரம் கிடையாதென்று அறிவித்துள்ளது. பல்வேறு பசுமைத் தீர்ப்பாயங்களின் தீர்ப்புகளும் கார்ப்பரேட்டுகள் தாங்கள் விரும்பும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தடையாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது குறித்து பல்வேறு வழிகாட்டுதல் இந்நீதிமன்றங்கள் வழங்கியதற்கு நேர் எதிராக இச்சட்ட வரைவை கொண்டுவந்துள்ளது.
ஆனால், இந்துத்துவ பாசிச அரசு சுற்றுச் சூழல் கொள்கை 2006 தொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகக் கூறியே தூக்கியெறிந்துவிட்டு இந்த புதிய வரைவுச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது. இச்சட்ட வரைவில் ஏற்கெனவே இருந்ததை 90 சதவீதம் திருத்தியிருக்கிறது.
உண்மையில் ஏற்கெனவே இருக்கும் சட்டங்களே பலவீனமாக இருக்கும் போது அதைப் பலப்படுத்துவதற்குப் பதில் இருப்பதையும் பிடுங்கும் வேலையைத்தான் இந்த சட்ட வரைவு செய்திருக்கிறது.
இச்சட்டத்தின் உண்மையான நோக்கத்தை புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்த கொரோனா காலத்தில் மே மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்ட அறிவிப்பினை பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.
அனைத்தையும் தனியார்மயமாக்குவது என்ற முடிவின் அடிப்படையில் அனைத்து வளங்களையும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் நோக்கத்தோடுதான் அந்த திட்ட அறிவிப்பு இருந்தது. அனைத்தையும் தனியார்மயமாக்க முதல் கட்டமாக 50 நிலக்கரி சுரங்கங்கள், 500 கனிம சுரங்கங்கள், 6 விமான போக்குவரத்து, மின் விநியோக கட்டமைப்பு, அணுசக்தித் துறை ஆகியவற்றை அனைத்தையும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பது என்று முடிவு செய்தது. ரயில்வே வழித் தடங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டுள்ளது. இது போன்ற திட்டங்களை வேகமாகச் செயல்படுத்த ஏற்கெனவே உள்ள சட்டங்கள் தடையாக இருப்பதாகவே அரசு கருதுகிறது.
கிழக்கிந்திய காலனிய ஆட்சியில் எல்லா வளங்களையும் எந்தத் தடையும் இல்லாமல் எவ்வளவு வேண்டுமென்றாலும் மிக மலிவாக கொள்ளையடித்து போன அதே வழிமுறையிலேயே இனி இந்த சட்டத்தின் மூலம் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளும், உள்நாட்டு பெருமுதலாளிகளும் கொள்ளையடித்துச் செல்வதற்கே இச்சட்டத்தை இயற்றியுள்ளது.
இதுவரையில் அனுமதி வழங்கிய திட்டங்கள்
2006-ம் ஆண்டின் சூழலியல் தாக்க மதிப்பீடு, அதற்குப் பிறகான 2014 மற்றும் 2016 அறிவிப்பாணைகள் கட்டுப்பாடுகளை விதிக்காமல் விதிவிலக்கையே அதிகமாக்கியது. அதன் மூலமாகவே 84 சதவிகிதம் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. பாதுகாக்கப்பட்ட பகுதியிலேயே 400க்கும் மேற்பட்ட திட்டங்கள் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இவை காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுச் சூழல் கொள்கையைத் தூக்கியெறிந்துவிட்டு தொடங்கப்பட்ட திட்டங்களும் இதிலே இருக்கிறது.
ஊரடங்கியிருக்கும் சூழலை பயன்படுத்திக் கொண்டு டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டம், அருணாச்சலப் பிரதேசத்தில் ஈடலின் அணை கட்டும் திட்டம், வேடந்தாங்கல் பகுதியிலுள்ள மருந்து தயாரிக்கும் ஆலை விரிவாக்கத்திற்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைப்பது, அசாமிலுள்ள பட்காய் யானைகள் வழித்தடப் பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பது, கோவாவிலுள்ள பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயத்தின் வழியாக நெடுஞ்சாலை அமைப்பது, கிர் தேசியப் பூங்கா பகுதியில் சுண்ணாம்பு சுரங்கம் அமைப்பது எனச் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய 191 திட்டங்களுக்கு மோடி அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதியை வழங்கியிருக்கிறது,
அனுமதி வழங்கப்படவிருக்கும் திட்டங்கள்
19,400 கோடி (2.8 பில்லியன் டாலர்) மதிப்புள்ள, நிலுவையில் இருக்கும் 13 ரயில் திட்டங்களுக்கு, 800 ஹெக்டேர் நிலப்பரப்பில், வன அனுமதி கோருவதிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் மொத்தம் உள்ள 94 மண்டலங்களில் தமிழகத்தில் 51 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் பெட்ரோலிய மூலப்பொருட்களான கச்சா எண்ணெய், மீத்தேன், நிலக்கரி, இயற்கை எரிவாயு, ஷேல் கேஸ், இதர வகையிலான கனிம கரிம பொருட்களின் கூட்டு இயற்கை வளங்களை, 800க்கும் மேற்பட்ட டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது.,
தூத்துக்குடியில் அல்கராஃபி எனும் நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Al kharafi oil Refinery industries) நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருப்பதோடு அதனைச் செயல்படுத்திட மக்கள் கருத்துக் கேட்பு விதிகள், சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என அறிவித்தது.
சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் நடைமுறைக்கு வரும். கர்நாடகா அரசு காவிரியில் கட்டத் திட்டமிட்டிருக்கும் மேகதாது அணையும், கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாகப் புதிய அணை கட்டத் திட்டமிட்டிருப்பதும் செயல் வடிவம் பெறும்.
நிதி மூலதன ஆதிக்கம் அதீத லாபம் (Super Profit) என்பதைக் கடந்து எவ்வித முதலீடு, உற்பத்தி என்பது இல்லாமல் இயற்கை வளங்களை, மனித வளங்களை மொத்தமாகக் கொள்ளையடிக்கும் மத்திய கால சுரண்டலைப் போல அனுமதிக்கிறார்கள்.
ஏற்கெனவே பசுமைக் குடில் வாயுக்களை அதிகமாக வெளியேற்றுவதில் உலக நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஏகாதிபத்தியங்கள் இங்குக் கொள்ளை கொண்டு போவதற்கு அனுமதிப்பதன் மூலம் ஒட்டுமொத்த சுற்றுச் சூழலை இந்த பாசிச அரசு நாசம் செய்கிறது.
சட்ட வரைவே பாசிச உள்ளடக்கம் கொண்டது
ஏற்கெனவே இருக்கும் முறைப்படி புதிய திட்டத்தையோ அல்லது விரிவாக்கத்தையோ பொதுத் தளத்தில் வெளியிடும். அது குறித்து அப்பகுதியில் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களின் மூலமாக மதிப்பீட்டைப் பெறுவதும், பொதுவான நபர்களிடமிருந்து எழுத்துப் பூர்வமான கருத்தையும் பெறும்.
ஆனால் இந்த வரைவு சுற்றுச் சூழலுக்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடிய திட்டங்களையெல்லாம் நிலக்கரி, கனிமங்கள், அனல் மின் நிலையங்கள், ஆயில், கேஸ், ஷேல் கேஸ், உருக்காலைகள், சிமெண்ட், கோல் தார், பேராபின், மருந்து நிறுவனங்கள், 12 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடல்சார் திட்டங்கள், 500 ஹெக்டேருக்குள் இருக்கும் தொழிற் பூங்கா, அபினியிலிருந்து தயாரிக்கும் எரிசாராயம், சாராய ஆலைகள், பாலிமர், காகித ஆலை, வெடி பொருள் பயன்படுத்தும் ஆலை, துறைமுகம் போன்ற மிகவும் முக்கிய ஆலைகள், மாசுபடுத்தும் ஆலைகள் பி2 பிரிவின் கீழ் கொண்டுவந்திருக்கிறது. பி2வின் கீழ் வரும் திட்டங்களுக்கு மக்களின் கருத்தறிய பொதுத் தளத்தில் வைக்கத் தேவையில்லை என்று கூறுவதோடு, அவர்களின் கருத்தறியாமலே ஒரு திட்டத்தைத் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள திட்டத்தை விரிவாக்கவும் செய்யவும் இந்த வரைவு அனுமதிக்கிறது.
இரண்டாவதாக, இதன் மீது வழக்குத் தொடுக்கும் சட்ட உரிமையை முற்றிலும் மக்களிடமிருந்து பகிரங்கமாகப் பறித்துவிட்டது. அரசு அமைப்புகள் மட்டுமே நீதிமன்றத்திற்குச் செல்ல முடியும் என்று வரையறுத்துள்ளது.
பின்தேதியிட்டு திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது என்பது இதுவரை மக்கள் கூறிய கருத்துகளை யெல்லாம் கணக்கில் கொள்ளவில்லை என்பதே. இனி ஏ மற்றும் பி1 பிரிவில் இருக்கும் வகையினத்துக்கும் பொதுமக்கள் பங்கேற்புக்கு ஒதுக்கப்பட்ட கால அவகாசமும் 30 நாட்களிலிருந்து 20 நாட்களாகக் குறைக்கப்படுகிறது. இது ஒப்புக்காக நடத்துவது.
கேந்திர முக்கியத்துவமுள்ள திட்டம், தேசிய முக்கியத்துவமுள்ள திட்டம் என்று எந்த திட்டத்தையும் அறிவித்து அதை பி2 பிரிவின் கீழ் கொண்டு சென்று எவ்வித அனுமதியும் இல்லாமல் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க முடியும்.
பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் செயல்படுகிற திட்டங்களில் சுமார் 235 திட்டங்களில், சுற்றுச்சூழல் விதிமீறல்கள் நடந்துள்ளன என்பதே உண்மை நிலவரம்.
இவை எல்லாம் மக்கள் கேள்வியே கேட்க கூடாது என்றும், சட்ட ரீதியாக நீதிமன்றத்தைக் கூட நாடமுடியாத ஜனநாயக உரிமை மறுப்பு என்பது பாசிச சட்டமாகவே கருத முடியும்.
மாநில உரிமையைப் பறித்து மத்தியில் அதிகாரத்தைக் குவித்துக் கொள்ளும் சட்டம்
முந்தைய சட்டப்படி இரண்டு அனுமதிக் குழுக்கள் மாநில மற்றும் மத்தியக் குழுக்கள் உண்டு. மாநிலத்தின் அதிகாரத்தில் இருந்ததை எல்லாம் இந்த வரைவில் மூன்று பிரிவாகப் பிரித்து முக்கிய திட்டங்களெல்லாம் மத்திய அதிகாரத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது. இதில் ஏ பிரிவு (50 சதவீதத்துக்குக் குறைவான விரிவாக்கம் மற்றும் நவீனப் படுத்தல்), பி1 மற்றும் பி2 பிரிவு ஆகியவை பிரிக்கப்பட்டுள்ளது.
ஏ மற்றும் பி2 பிரிவின் கீழ் வரும் அனைத்து திட்டங்களையும் மத்திய அரசின் அதிகாரத்திற்குள் கொண்டுவந்திருக்கிறது. ஏகாதிபத்தியத்தின் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க ஏதுவாக மையப்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர முறைக்குள் கொண்டுவந்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல். மதிப்பீட்டுக் குழுவின் தலைவரையும், உறுப்பினர்களையும் மத்திய அரசே நியமிப்பது என்று இந்த வரைவு கூறுவது மாநில உரிமையைத் திட்டமிட்டுப் பறிக்கிற நடவடிக்கையே.
தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட்டு வந்த பல்வேறு ஆணையங்களையும் ஒரே மண்டல அலுவலரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கிறது.
இப்படி மத்திய அரசு எல்லா மாநில அதிகாரங்களையும் குவித்துக்கொள்கிறது. "பொருளாதார மையப்படுத்துதல் அரசியல் மையப்படுத்துதலுக்கும் அரசியல் மையப்படுத்துதல் பாசிசத்திற்கும் இட்டுச் செல்லும்" என்று ஏ.எம்.கே. கூறியது எவ்வளவு உண்மையானது.
சிறு, குறு தொழிலுக்கு எனும் பெயரால் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்திருக்கிறது
சுரங்கங்களின் குத்தகை காலத்தை 30 ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.
ரியல் எஸ்டேட்டில் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக 20,000 சதுர மீட்டர் பரப்பளவிற்குள் உள்ள கடுமானங்களுக்கு கருத்துக் கேட்பதும் முன் அனுமதியும் தேவையில்லை என்பதையும் மாற்றி அதன் அளவை 1,50,000 சதுர மீட்டராக உயர்த்தி கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக்கியுள்ளது.
நீர்ப் பாசனம் - நதி பள்ளத்தாக்கு திட்டங்களில் 2,000 - 10,000 ஹெக்டேர் பரப்பளவுள்ள திட்டங்களுக்கு அனுமதி தேவையில்லை என்பதை மாற்றி 5,000 - 50,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட திட்ட அளவாக உயர்த்தியுள்ளதும் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானதே.
இப்படி இதன் அளவினை உயர்த்துவதன் மூலம் பெரிய கார்ப்பரேட்டுகளும் சிறு, குறு தொழிலுக்குக் கொடுக்கும் விதிவிலக்குகளைப் பெற்று போட்டிப் போடும். இது சிறு தொழில்களைப் போட்டியிலிருந்து அகற்றி கார்ப்பரேட்டின் கையில் கொடுக்கும் சட்டமே.
விவசாயத்தையே ஒழிக்கும் சட்டம்
இச்சட்டத்தால் சுத்தமான காற்று, உணவு இதெல்லாம் நிச்சயம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மட்டம் குறைவு, மாசு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
மத்திய அரசு கட்டமைப்பு, தொழிற்சாலை, சுரங்கம், மின்சாரம் போன்ற திட்டங்களுக்கு 26 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு நிலம் கையகப்படுத்த போவதாக ஒரு அறிக்கை கூறுகிறது. இதில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் வன நிலங்கள்தான். அந்நிலங்களிலிருந்து விவசாயிகளையும், பழங்குடிகளையும் வெளியேற்ற போகிறது.
ஏற்கெனவே வேளாண் கொள்கைகளால் பாதிக்கப் பட்டு நிலத்தை விட்டு ஒரு நாளைக்கு 6 விவசாயிகள் என்ற கணக்கில் வெளியேற்றப் படுகிறார்கள். வேளாண் பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை ஒழித்து ஏகாதிபத்திய நாடுகள் இந்தியாவில் வேளாண் பொருட்களை கொட்டிக் குவிக்கவும்; நம் நாட்டு விவசாயிகளுக்கான மானியங்களை வெட்டியும்; விதைகள், வேளாண் ஆராய்ச்சி, உர விலை கட்டுப்பாட்டை அரசு கைவிட்டும் அமெரிக்க உட்பட ஏகாதிபத்திய நாடுகள் விவசாயத்தின் மீது ஆதிக்கத்தைத் திணித்துவருகிறது. இப்போது இருந்த தடைகளையும் நீக்கி விவசாயத்தை தனியார்மயமாக்க, கார்ப்பரேட்மயமாக்க, ஏகாதிபத்தியத்தின் கையில் விவசாயத்தை முழுவதும் ஒப்படைப்பதற்கு "ஒரே இந்தியா, ஒரே விவசாய சந்தை'' என்பதை உருவாக்குகிறது. இதற்கென 3 வேளாண் அவசரச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் விவசாயத்தை அரசு முற்றிலுமாக கைகழுவி விட்டது.
ஏற்கெனவே வெள்ளம் ஒருபுறமும், வறட்சி ஒரு புறமும் என விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்தச் சுற்றுச் சூழல் சட்டத்தால் இன்னும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்படுவது அதிகரிக்கப் போகிறது. இந்திய அரசால், புவியறிவியல் அமைச்சகத்தால், ஜூன் 2020 மாதம் வெளியிடப்பட்ட இந்தியாவில் நிகழும் பருவநிலை மாற்றத்தின் மதிப்பீடு அறிக்கை ஒன்று கீழ்க்கண்டவாறு எச்சரிக்கிறது: "இந்த விரைவான பருவநிலை மாற்றம், நம் நாட்டின் இயற்கை வளங்கள், விவசாய உற்பத்தித் திறன்கள், நன்னீர் ஆதாரங்களை மட்டுமல்லாது நமது நாட்டின் உள்கட்டமைப்பிற்கும் பெரும் நெருக்கடியைத் தரவிருக்கிறது. இதனால் இது நமது நாட்டின் நமது இயற்கை வளங்களுக்கும், உணவு, நீர், ஆற்றல் பாதுகாப்பிற்கும் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கப்போகிறது" என்கிறது.
கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் பரவுவதற்கு கதவை அகற்றி திறந்துவைத்துள்ளது இச்சட்டம்
1990களுக்குப் பிறகு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் வர்த்தக நலன்களிலிருந்து செய்யப்படும் இலாப வெறி அடிப்படையிலான அராஜக உற்பத்தியும், அதற்காக காடுகள் அழிக்கப்படுவதும், பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தால் புவி வெப்ப மயமாதலும், பருவநிலை மாற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
இது ஒரு புறம் வெள்ளம்-வறட்சி ஆகியவற்றை அதிகமாக்குவதுடன் சார்ஸ், மெர்ஸ், எபோலா, கொரோனா போன்ற வைரஸ்களின் தொற்றை தீவிரப்படுத்தும் என்று சர்வதேச கியோட்டோ மாநாட்டு முடிவுகள் எச்சரித்தன.
அதுமட்டுமல்லாமல் 1997 கியாட்டோ ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச பொது நியதியான "வரலாற்றுப் பொறுப்புடைமை"யிலிருந்து (அனைத்து இயற்கை வளங்களையும் அடுத்த சந்ததிக்குக் கொண்டு சேர்க்கும் வரலாற்று பொறுப்பு) ஏகாதிபத்திய நாடுகள் கைகழுவிவிட்ட நிலையில், அந்த நாடுகளுக்கும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் இடையிலான சுற்றுச்சூழல் சம உரிமை சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவும் இச்சட்டத்தின் மூலம் அந்த "வரலாற்று பொறுப்புடமை"யிலிருந்து வெளியேறி இருக்கிறது. இது சுற்றுச்சூழலை அழித்து அதனால் வரும் கொள்ளை நோய் போன்ற பெரும் பேரிடர்களுக்கு வழிவகுக்கப் போகிறது. அதன் தொடக்கத்தைத்தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
விதிகளை மீறிய கார்ப்பரேட் நிறுவனங்களைத் தண்டிக்க முடியாத சட்டம்
விதிகளை மீறிய நிறுவனங்களை ஒரு நாளைக்கு ரூ. 2,000 - ரூ. 10,000 அபராதம் விதித்து அதை சட்டப்பூர்வமாக்கப் போகிறார்கள். இதை மட்டுமல்ல அதற்காக கம்பெனி சட்டத்தையும் திருத்த ஏற்கெனவே திட்டமிட்டிருக்கிறார்கள்.
கம்பெனி சட்டத்தின் கீழ் நிறுவனங்கள் தொழில்நுட்ப ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் ஏதேனும் விதிமுறை மீறல் செய்து அதனால் விபத்தோ, பாதிப்போ ஏற்பட்டால் இனி அது குற்றமாகப் பார்க்கப்படாது.
சதுப்பு நிலக் காடுகளையும், வறண்ட புல்வெளிக் காடுகள் ஆகியவற்றை இந்த கார்ப்பரேட்டுகள் ஆக்கிரமிப்பதிலிருந்து இனி தடுக்க முடியாது. அதற்கான எல்லா வழிகளையும் இச்சட்டம் திறந்துவிட்டுள்ளது.
சட்டத்தின் மீதான கருத்து கூறுபவர்களை ஒடுக்கும் பாசிச மோடி அரசு
இந்த பாசிச அரசு சட்டத்தின் மீது கருத்து கூற சொல்லிவிட்டு, பிறகு இந்த சட்டத்தின் ஆபத்தைப் பற்றி சொல்கின்ற அனைவரையும் வழக்கமான பாணியில் ஒடுக்குகிறது.
இந்த சட்டத்திற்கு எதிராகக் கருத்து கூறுபவர்களை எல்லாம் தேசத் துரோகிகள், சீனாவின் கைக்கூலிகள், வளர்ச்சியை விரும்பாதவர்கள் என்று பல்வேறு வழக்கமான பட்டப் பெயர்களைக் கொடுப்பது தொடர்கிறது.
இது ஒருபுறமிருக்க, தொடர்ந்து இச்சட்டத்தின் ஆபத்தினை பற்றி கூறும் இணையதளங்களை (#fridaysforfuture.in, #letindiabreathe.in, #thereisnoearthb.com) அரசு முடக்கி உள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றம் எல்லா மாநில மொழிகளிலும் சட்ட வரைவை வழங்கச் சொல்லி ஆணையிட்டும் வழங்காதது மட்டுமல்ல, டெல்லி உயர் நீதிமன்றம் சொன்னது மற்ற மாநிலங்களில் எங்களைக் கட்டுப்படுத்தாது என்ற பதிலை கர்நாடகத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பொது வெளியில் இச்சட்டத்தை எதிர்த்து தனது கருத்துகளைப் பதிவிடுவோரை மிரட்டிப் பணிய வைக்க முயல்கின்றனர். இவ்வளவு நடந்தும் தமிழக அரசு தனது கருத்தை இன்னும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து இந்த பாசிச மோடி அரசிற்குச் சேவகம் செய்கிறது.
சுற்றுச் சூழலை அழிக்கும் அந்நிய மூலதனத்தை ஒழித்து பாதுகாப்பான சுதேசிய தொழில் உற்பத்தியை கட்டியமைக்க போராடுவோம்!
அந்நிய மூலதனம் வந்தால் இந்த நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் என்று கூறி இன்று வேலையின்மையையும், வறுமையையும், நோயையும், பட்டினிச் சாவையும் கொடுத்திருக்கிறார்கள்.
கொரோனாவை தடுக்க வக்கற்ற மருத்துவ கட்டமைப்பும், பொருளாதார கட்டமைப்பும்தான் இன்று இவர்கள் உலகமயத்தால், அந்நிய மூலதனத்தால் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் தனியார் மயத்தை, கார்ப்பரேட் மயத்தை தீவிரப்படுத்தி ஏகாதிபத்தியங்கள், உள்நாட்டு பெருமுதலாளிகள் இந்நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக இச்சட்ட வரைவை கொண்டுவந்திருக்கிறார்கள்.
லாபவெறி மற்றும் ஆதிக்க வெறி கொண்ட தனியார்மயத்தை ஒழித்து அனைத்து பெருந் தொழில்களையும் அரசுடைமையாக்குவதும், பாதுகாப்பான சுதேசியத் தொழிலைக் கட்டியமைப்பதும், மக்களையும், வளங்களையும் இயற்கையையும் காப்பாற்றுகின்ற சுற்றுச் சூழல் சட்டங்களைக் கொண்டுவருவதும்தான் தீர்வு. வெறும் கருத்தறிதல் என்பதும் கூட ஏமாற்று வேலை. அதுவும் இல்லாதது பாசிச ஒடுக்குமுறை. எந்தவொரு திட்டத்தையும் மக்கள் தீர்மானிக்கின்ற உரிமையுடன் கூடிய சுற்றுச் சூழல் சட்டம் வேண்டும் என்பதே தீர்வு.
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான முரண்பாடே பிரதான முரண்பாடு என்பது ஏகாதிபத்திய ஆதிக்கத்தை, சுரண்டலை மறைப்பதற்கான தொண்டு நிறுவன அரசியலே. இன்று சீனாவும், அமெரிக்காவும் மட்டுமே 40 சதவீதம் அளவுக்கு பசுமை குடில் வாயுவை வெளியேற்றுகிறது. ஆசியா, ஆப்பிரிக்காவிலுள்ள 95 சதவீத நகரங்கள் மோசமான பருவநிலை சார்ந்த அபாயங்களை எதிர்நோக்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட நாடுகளிலுள்ள இயற்கை வளங்களை ஏகாதிபத்திய நலனுக்காகச் சூறையாடியதே அதற்குக் காரணம். இதைத்தான் கியோட்டோ மாநாட்டில் ஏகாதிபத்தியங்கள் புவி வெப்பமயமாதலுக்கு பொறுப்பேற்று ஆண்டுதோறும் ரூ.6,70,000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் அதற்கான தொழில் நுட்பங்களை மற்ற நாடுகளுக்கு வழங்கவேண்டும் என்றும் கூறியது. ஆனால் இதை ஏகாதிபத்திய நாடுகள் ஏற்க மறுத்துவிட்டது.
பாரிஸ் மாநாட்டு ஒப்பந்தம் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாது என்பதால் அந்தந்த நாடுகளே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்றது. இதிலிருந்து இப்போது அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேறி இருக்கிறது. இப்படி புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாக இருக்கிற ஏகாதிபத்தியத்தியங்கள் இழப்புகளை எல்லாம் ஒடுக்கப்பட்ட நாடுகளின் தலையில் சுமத்திவிட்டது. பருவநிலை மாற்றத்தினால் எழும் பாதிப்புகளுக்காக ஏகாதிபத்திய நாடுகள் நிதி ஆதரவு வழங்குவதாக ஒப்புக்கொண்ட 41 பில்லியன் டாலர் நிதியை வழங்கவில்லை. இதுவரையில் 8.7 பில்லியன் டாலர் மட்டுமே ஒடுக்கப்பட்ட நாடுகளுக்குக் கொடுக்கப்பட்டதாக 2016 ஆம் ஆண்டு பருவநிலை மாற்ற நிதி ஆதரவு நிழல் அறிக்கை கூறுகிறது. ஒடுக்கப்பட்ட நாடுகள் அனைத்தும் ஏகாதிபத்தியத்துக்கு வளங்களை வாரிக் கொடுத்து அதன் இழப்புகளை தாங்களே ஏற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் ஏகாதிபத்தியங்கள் சீரழிக்கும் சுற்றுச்சூழலுக்கான விலையை மக்களின் தலையில்தான் இந்தியா சுமத்திக் கொண்டிருக்கிறது.
ஆனால் தொண்டு நிறுவனங்கள் இயற்கையைக் காப்பாற்றுவதற்கு போராடுவதாகக் கூறிக்கொண்டு, இயற்கையை சூறையாடுகின்ற ஏகாதிபத்தியத்தை மூடிமறைக்கிறது. நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் உற்பத்தியை எதிர்த்துப் போராடுவதற்கு பதில் தொழிற்சாலையே எதிரானது என்று கூறி நம் போன்ற நாடுகள் அணை உட்படப் பல கட்டுமான உற்பத்திகளைச் செய்வதைத் தடுப்பதும், ஒரு ஏகாதிபத்தியத்தை ஆதரித்து இன்னொரு ஏகாதிபத்திய ஆதரவு நிலைக்குச் செல்கிறார்கள். சுதேசிய தொழிலையோ, அணைகள் கட்டுவதையோ மக்கள் நலனிலிருந்து பாதுகாப்பாக நடத்துவது என்பதற்கு மாறாக எல்லாமே இயற்கைக்கு எதிரானது என்கிறார்கள். இது போன்ற ஏகாதிபத்திய ஆதரவு தொண்டு நிறுவனங்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும். இன்னொரு புறம் இயற்கைக்கும் மூலதனத்துக்குமான முரண்பாடு முதன்மை முரண்பாடு என்று கூறுகிறது. இது ஏகாதிபத்தியத்துக்குள் இருக்கும் முரண்பாடுகளை மறுப்பதோடு, ஏகாதிபத்திய நிதி மூலதனத்துக்கும் உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு முதன்மையானது என்பதையும் மறுக்கிறார்கள். இவர்கள் இயற்கையை எதிர்த்துப் போராடுவதை முதன்மைப்படுத்தி, ஏகாதிபத்திய நிதி மூலதனத்தால் ஒடுக்கப்படுகிற மக்களின் விடுதலையை, ஒடுக்கப்பட்ட நாடுகளின் சுதந்திரத்திற்காகப் போராடுவதை பின்னுக்குத் தள்ளுகிறார்கள்.
"முதலாளித்துவத்தின் வளர்ச்சி எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகிறதோ, மூலப் பொருள்களின் பற்றாக்குறை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகக் கடுமையாக உணரப்படுகிறதோ, உலகெங்கிலும் மூலப் பொருள்களின் ஆதாரங்களுக்கான போட்டியும் வேட்டையும் எவ்வளவுக்கு எவ்வளவு அதிக உக்கிரமாகின்றனவோ, காலனிகளைப் பெறுவதற்கான போராட்டமும் அவ்வளவுக்கு அவ்வளவு மூர்க்கமானதாகி விடுகிறது." என்ற லெனின் பார்வை மிகச் சரியானது என்பது வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இன்று இந்நிலைதான் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமான மேலாதிக்க போட்டிக்கான பனிப்போர் அடுத்த கட்டத்திற்கு வளர்ந்து கொண்டு செல்கிறது. அவர்களின் ஆதிக்கத்திற்கான போட்டியில் ஒடுக்கப்பட்ட நாடுகளை அவர்களின் லாபத்திற்கு இழுத்து விடுக்கிறது. ஏகாதிபத்தியம் பெற்றெடுத்த வடிவம் உலகமயம். ஏகாதிபத்தியத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட கீன்சியம் அவர்களின் நெருக்கடியைத் தீர்க்காததால் கொண்டுவரப்பட்ட தாராளமயத்தை வளர்த்தெடுத்து தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற அடிப்படையில் உருவாக்கினார்கள். இவையாலும் இன்று நெருக்கடியைத் தீர்க்கமுடியவில்லை.
இன்றைக்கு இருக்கும் ஏகாதிபத்திய உற்பத்தி முறையால் எந்த நெருக்கடியையும் தீர்க்க முடியாது. தனது லாபத்திற்காக உழைப்பு சக்தியையும், இயற்கை வளங்களையும் நிச்சயம் தொடர்ந்து சூறையாடும், இனி சமூகம் அடுத்த கட்டத்திற்குப் போவதைத் தவிர வேறு மாற்றமில்லை. தனது சந்தை நலனுக்காக அனைத்து இயற்கையையும் அழித்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஒழித்து ஒரு திட்டமிட்ட மக்கள் நலனுக்கான சுதேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதுதான் நமக்கான இன்றைய தீர்வாக இருக்கும். ஏகாதிபத்திய நாடுகளுக்கும், முதலாளித்துவ நாடுகளுக்கும் சோசலிசத்தை கட்டியமைப்பதுதான் தீர்வாக இருக்கும்.
மேற்கண்ட நிலைமையில் மோடி அரசு இந்த ஏகாதிபத்திய நலனுக்காக இந்தியாவின் இயற்கை வளங்களை மனித வளங்களைத் தாரைவார்க்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமைத் தளையில் இந்தியாவை பிணைக்கிறது. அதற்கு மாற்று இந்த பாசிச ஆட்சியை ஒழிப்பது மட்டுமல்ல, இந்த புதிய காலனிய ஆட்சியை, அதற்கு அரணாக இருக்கும் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை ஒழித்து மக்கள் ஜனநாயக குடியரசைக் கட்டியமைப்பதே தீர்வாக இருக்கும்.
- சமரன்
ஜூலை - ஆகஸ்ட் 2020