அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா
ராணுவ தளவாட உற்பத்தித் துறையை கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கும், தொழிலாளர்களைக் கொத்தடிமையாக்கும் சட்டமே!
அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா என்பது நாட்டின் ராணுவத் தளவாட உற்பத்தித் துறைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாடுவதற்கும். அதில் பணிபுரியும் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நசுக்கி கொத்தடிமையாக்கும் அவசரச் சட்டமாகும்.
ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்களை எந்த கேள்வியும் கேட்காமல் அமெரிக்காவின் லாங்கிட், மார்ட்டின் போன்ற பகாசுர கும்பல்களுக்கும், அம்பானி, அதானி, உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பல்களின் சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் சேவை செய்ய இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பாதுகாப்பு சட்டம் ராணுவத் தளவாட உற்பத்தி துறையில் மட்டும் இல்லாமல் மின் உற்பத்தி, இரும்பு தொழிற்சாலைகள், கனிம தொழில்கள் இது போன்ற எந்த தொழிற்சாலைகளையும் அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் என விரிவுபடுத்தி நாட்டின் வளங்களை ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்திற்குத் திறந்துவிடும் சதித்தனம் அடங்கியுள்ளது.
அத்தியாவசிய பாதுகாப்பு சட்டம் ராணுவத் தளவாட உற்பத்தியோடு மட்டும் குறுக்கிப் பார்க்க முடியாது. இந்தியா அமெரிக்கா செய்து கொண்ட ராணுவ அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் நான்கு அடிப்படை பாதுகாப்பு ஒப்பந்தங்களோடும், அமெரிக்காவின் மேலாதிக்க போர் வெறிக்காக ஆசியாவின் நேட்டோவாக இந்தியாவை மாற்றும் குவாட் ஒப்பந்தங்களோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.
குறிப்பாக இந்தியா அமெரிக்கா செய்து கொண்ட ராணுவ அணுசக்தி ஒப்பந்தம் என்பது, நாட்டின் அரைகுறை இறையாண்மையையும், சுதந்திரத்தையும், சுயச் சார்பையும் அழித்துவிட்டது. அமெரிக்க சரிந்து வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவும், தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்ட உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட நாடுகளின் மூன்றாம் உலக நாடுகளின், கச்சா பொருள்களையும், இயற்கை வளங்களையும், மலிவான கூலி உழைப்பையும், சந்தைகளையும் சூறையாட இந்தியாவை ஒரு அடியாட்படையாக மாற்றியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட பாதுகாப்புத் தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களின் தொடர்ச்சியாக இந்துத்துவ பாசிச மோடி கும்பல் அமெரிக்காவோடு 2019ல் செய்து கொண்ட நான்கு அடிப்படை பாதுகாப்பு ஒப்பந்தங்கள் என்பது அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்திற்குச் சேவை செய்யும் அடிமை சாசனமாகும்.
குறிப்பாக, 1) பாதுகாப்பு தொழிற்துறை ஒப்பந்தம், 2) ராணுவத் தளவாட பரிவர்த்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம், 3) பரஸ்பர தொலைத்தொடர்பு இணக்கம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம், 4) அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்பது அமெரிக்காவில் உற்பத்தி செய்து குவிக்கப்பட்டுள்ள ராணுவத் தளவாடங்களை இந்தியாவில் கொட்டுகின்ற குப்பைத் தொட்டியாக மாற்றியுள்ளது.
அமெரிக்காவை தவிர வேறு எந்த நாட்டுடனும் ராணுவ தளவாடங்களை வாங்கக் கூடாது. அமெரிக்காவிடம் மட்டுமே வாங்க வேண்டும், பாதுகாப்புத் துறை சம்பந்தமாக இந்திய அரசு தனது ஆண்டை அமெரிக்காவிடம் கலந்தாலோசிக்காமல் சுயமாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்றும், இந்தியாவின் ராணுவ தளங்களை அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர் வெறிக்குப் பயன்படுத்திக் கொள்ளவும், கூட்டுப் பயிற்சி, கூட்டு நடவடிக்கை, எரிபொருள் நிரப்ப அனுமதிப்பது, தெற்காசிய பிராந்தியத்தில் கடல், ஆகாயம் மார்க்கமாக என்ன நடக்கிறது என்பதை உடனுக்குடன் உளவு பார்த்து அமெரிக்க ஒற்றனாகச் செயல்படுவது.
தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் சுரண்டலுக்கும், ஆதிக்கத்திற்கும், செல்வாக்கு மண்டலங்களுக்குச் சவால் விடும் சீனா ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க போட்டியை இந்தியா மூலம் முறியடிக்க இந்தியாவை ஆசியாவின் நேட்டோவாக, அடியால் படையாக மாற்றும் குவாட் ஒப்பந்தங்களுக்குச் சேவை செய்யும் வகையில் பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
குறிப்பாக அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா 2021 என்பது, அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 41 ராணுவ தளவாட உற்பத்தித் துறைகளை 7 கார்ப்பரேஷன்களாக மாற்றி தனியார்மயம், கார்ப்பரேட் மயமாக்கவும், அதில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சங்கம் சேரும் உரிமை, வேலை நிறுத்த உரிமைகளைப் பறித்து விசாரணையின்றி கைது செய்தல், வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது அழைப்பு விடுத்தாலோ இரண்டு ஆண்டு சிறை அபராதம் எனும் பாசிச ஒடுக்குமுறை சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.
தற்போது நாட்டின் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் 41 ராணுவத் தளவாட தொழிற்சாலைகள், 9 பயிற்சி நிலையங்கள், 3 பிராந்திய விற்பனை மையங்கள், 4 பிராந்திய கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படுகின்றன. இவை அரவங்காடு, திருச்சி, ஆவடி, புனே, மும்பை, கொல்கத்தா, கான்பூர், ஜபல்பூர், டோராடூன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களுக்குச் சொந்தமாக மட்டும் 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.
இந்த தளவாட உற்பத்தித் துறையில் டேங்குகள், பீரங்கிகள், கவச வாகனங்கள், சிறிய மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்கள், வெடி பொருட்கள், ராணுவ சீருடைகள், கூடாரங்கள், காலனிகள், கப்பற்படை, விமானப்படை, ராணுவப் படைகள், துணை ராணுவப் படைகளுக்குத் தேவையான அனைத்தும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
குறிப்பாக 1979 ஆம் ஆண்டில் 30 ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் இருந்தன. அவற்றில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் வேலை செய்து வந்தனர். 2019ல் 41 தொழிற்சாலைகளாக மாறியும் கூட வெறும் 82 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களும், 40 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே தற்போது வேலை செய்து வருகின்றன.
இராணுவ பட்ஜெட் |
|
பட்ஜெட் ஆண்டு |
நிதி ஒதுக்கீடு (கோடி ரூபாயில்) |
2011-12 |
1,64,415 |
2012-13 |
1,78,503 |
2013-14 |
2,03,672 |
2014-15 |
2,29,000 |
2015-16 |
2,46,727 |
2016-17 |
3,51,550 |
2017-18 |
3,79,702 |
2018-19 |
4,03,457 |
2019-20 |
4,48,820 |
2020-21 |
4,71,378 |
2021-22 |
4,78,000 |
ஆவடியில் (தமிழ்நாடு) 1979ல் 19 ஆயிரம் தொழிலாளர்கள் இருந்தனர். தற்போது 9,500 பேர் மட்டுமே இருக்கின்றனர். புதிதாக பயிற்சி முடித்தவர்களை வேலைக்கு எடுக்காமலும், இத்துறைக்கான நிதியை முறையாக ஒதுக்காமல் இத்துறையைத் தரம் குறைவாக இருப்பதாகப் பொய் காரணம் கூறி தனியார்மயப்படுத்தவே இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
ஆனால் நவம்பர்-20, 2019ல் அன்றைய ராணுவ அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசும் போது நாட்டின் பாதுகாப்பு தேவையை 41 ராணுவத் தளவாட உற்பத்தி துறையின் மூலம் 75 விழுக்காடு பூர்த்தி செய்யப்படுகிறது என்றும் மீதி 25 விழுக்காடு மட்டுமே வெளிநாடுகளிலிருந்து வாங்குவதாக மனோகர் பாரிக் கூறினார். தற்போது தரம் குறைவு என்ற வெற்று காரணத்தைக் காட்டி இந்நிறுவனங்களை ஏழு கார்ப்பரேஷன்களாக மாற்றி தனியார்மயப்படுத்தி கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடும் நோக்கங்களை புரிந்துகொண்டு தொழிலாளர்களும், தொழிற் சங்கங்களும் கடந்து ஓராண்டாகப் போராடி வருகின்றனர்.
குறிப்பாக ராணுவத் தளவாட உற்பத்தி துறையை தனியார்மயம், கார்ப்பரேட்மயமாக்குவதை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள 41 ராணுவ தளவாட உற்பத்தி துறை தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் ஒன்று இணைந்து 8/6/21 முதல் 17/6/21 வரை பொதுவாக்கெடுப்பு நடத்தி அதில் 99 விழுக்காடு பேர் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். அதை மோடிக்கும் ராணுவ அமைச்சருக்கும் கடிதமாக அனுப்பியுள்ளனர். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை 1947 தொழிற்தகராறு சட்டம் மூலம் தீர்வுக்கான மறுத்து இப்போராட்டங்களையும் வேலை நிறுத்தத்தையும் ஒழித்துக்கட்ட இந்த அத்தியாவசிய பாதுகாப்பு சேவை மசோதாவை மோடி கும்பல் கொண்டு வந்துள்ளது.
ராணுவ தளவாட உற்பத்தித்துறை தொழிலாளர்கள் பிரச்சனையை 1947 தொழிற்தகராறு சட்டம் மற்றும் சர்வதேச தொழிலாளர்களின் சட்டம் 87 மற்றும் 98 விதிகளுக்கு உட்பட்டுத் தீர்க்க மறுக்கிறது. வேலை நிறுத்த போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் வகையில் இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. எப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தன் உரிமைக்காகப் போராடிய போது எஸ்மா, டெஸ்மா போன்ற பாசிச சட்டங்கள் மூலம் அப்போராட்டங்களை ஒடுக்க முயன்றது. 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்பாக மாற்றி பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்தது. அதே போலத் தான் தற்போது ராணுவத் தளவாட உற்பத்தித் துறையை கார்ப்பரேட் கொள்ளைக்கு அகல திறந்துவிட இச்சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.
எனவே ராணுவத் தளவாட உற்பத்தித்துறையின் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், தளவாட உற்பத்தித் துறையை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கச் சேவை செய்யும் நோக்கிலும் கொண்டு வந்துள்ள அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதாவைக் கிழித்தெறியவும் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கவும் நாட்டின் அனைத்து வாழ்வுத்துறைகளின் மீது தாக்குதல் நடத்தும் புதிய காலனிய ஆதிக்கத்திற்குச் சேவை செய்யும் அவசரச் சட்டங்களை நிர்மூலமாக்கவும் தளவாட உற்பத்தித்துறை தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய அனைத்து உழைக்கும் வர்க்கங்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுப் போராடுவோம்!
சமரன், மே-செப்டம்பர் 2021 இதழ்