அணு ஆற்றலும் சமூக முன்னேற்றமும் (பகுதி - 1)

வில்லியம் பால்

அணு ஆற்றலும் சமூக முன்னேற்றமும் (பகுதி - 1)

அணுகுண்டு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது - அதன் வெடிப்பு சக்தி TNT ஐவிட பல ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமானது என்கிற செய்தி அமெரிக்காவில் திடீரென்று வெளியிடப்பட்டபோது ஆர்வமும் அச்ச உணர்வும் கலந்த உணர்ச்சி வெள்ளம் நாடெங்கிலும் கரைபுரண்டோடியது.

அந்த அணுகுண்டை பயன்படுத்துவதற்கு முன்பாக ஜப்பானை சரணடையும்படி நேச நாடுகள் வற்புறுத்தின. ஆனால் அந்த வாய்ப்பு முரட்டுத்தனமாக மறுதலிக்கப்பட்டது. அதன்பின் ஜப்பானின் முக்கியமான ஆயுதக்கிடங்கான ஹிரோஷிமா மீது ஒரு அணுகுண்டும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமான நாகசாகியின் மீது ஒரு அணுகுண்டும் போடப்பட்டது. அதன் இராணுவரீதியான விளைவு என்பது மஞ்சூரியாவில் இருந்த ஜப்பானின் முதன்மையான இராணுவப் பிரிவுகளை செம்படையானது மிக விரைவாகவும் கிளர்ச்சியூட்டும் வகையிலும் தாக்கி அழித்ததைப் போலவே நாசகரமாக இருந்தது. இந்தக் கூட்டு இராணுவ நடவடிக்கைகள் ஜப்பானை விரைவில் சரணடையும்படி செய்தன. உலகம் முழுவதையும் அழிவுப் போரில் தள்ளிவிட்ட, அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த கோடிக்கணக்கான மக்களை கொலை செய்தும் உடல் ஊனமுறவும் செய்த, திட்டமிட்டே காட்டுமிராண்டித்தனமாக பொருளாதார அராஜகத்தைத் தூண்டிவிட்ட, ஐரோப்பிய மற்றும் கிழக்கு நாடுகளைக் கொள்ளையிட்ட பாசிஸ்ட் சக்திகளின் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கைகள் இவ்வாறு முடிவுக்கு வந்தன.

அணுகுண்டு, போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்தது என்பதையும் அதன் மூலம் பல இலட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியது என்பதையும் நியாய புத்தியுள்ள எல்லா மக்களும் அறிவார்கள். அத்துடன் பாசிச யுத்தத்தினால் ஏற்பட்ட வரலாற்று நிர்ப்பந்தங்களால்தான் மனித குலத்தின் மாபெரும் ஆக்க சக்தியான-அணு ஆற்றல் சமுதாய மேடையில் அழிவு சக்தியாக முதன் முதலில் தோன்ற நேரிட்டது என்பதையும் அறிவார்கள். பெர்லினில் உள்ள கெய்சர் வில்ஹெல்ம் ஆய்வுக்கூடத்தை அணுகுண்டு செய்வதற்கான ஆய்வுப் பணிகளுக்கு நாஜிகள் பயன்படுத்தி வந்தனர் என்பதையும், அந்த வேலைக்கு அவசியமான பொருட்களை நார்வேயில் தயாரித்து வந்தனர் என்பதையும், நேசநாடுகள் அறிந்து வைத்திருந்தனர். இந்த செய்தி நேசநாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளை வெற்றியை விரைந்து எட்டவும்; இரத்தக் களரியான துன்பங்களுக்கும் குழப்படிகளுக்கும் யுத்தத்திற்கும் முடிவுகட்டவும்; மனிதகுலம் இதுவரையில் அறிந்திராத வகையில் முழுமைபெற்ற வடிவில் சர்வதேச அளவில் திட்டமிட்டு ஒன்றுகூடி செயல்படவைத்தது. ஆனால் நாசிசமோ ஜெர்மனியின் மிகப் பெரிய விஞ்ஞானிகளை நாடு கடத்தியது, சிறையில் அடைத்தது அல்லது கொலை செய்தது. பேராசிரியர் சர்.ராபரட் வாட்சன் வாட் "நாஜிகளின் அமைப்புமுறை, இதுவரை கண்டிராத வகையில் விஞ்ஞானத்திற்கு பேரழிவை உண்டாக்கி தன்னைத்தானே அழித்துக்கொள்கிற கொள்கைகளைக் கொண்டிருக்கிறது." என்று கூறினார்.

அணு ஆற்றலை குறை கூறுபவர்கள்

அமைதியும் நம்பிக்கையும் திரும்பிய மகிழ்ச்சியில் உண்டான ஆரவாரம் அடங்குவதற்கு முன்பே, பாசிசத்துடன் நூற்றுக்கணக்கான வழிகளில் தொடர்பு கொண்டிருந்த வாடிக்கனால் (போப்) தலைமை தாங்கப்பட்ட உலகின் பிற்போக்குச் சக்திகளனைத்தும், அணு ஆற்றலின் புதிரை விடுவித்து அதைக் கொண்டு மிகக் குரூரமான, சதிகார எதிரியைத் தோற்கடித்தவர்களை நோக்கி தங்கள் சாபக்கணைகளை வீசத் தொடங்கி விட்டன. மனித இனம் உருவாக்கிய ஒவ்வொரு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் இந்த பிற்போக்கு மூடநம்பிக்கைவாதிகள் எதிர்த்தே வந்துள்ளனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் காட்டுமிராண்டித்தனமான, மூடநம்பிக்கை கொண்ட நிலப்பிரபுத்துவம், கிறித்துவ சமய கொடூர விசாரணை மன்றத்தின் அதிகாரிகளால் தூக்கிப் பிடிக்கப்பட்டது. அவர்கள் ரோமின் கட்டளைக்கு இணங்க ஜியார்டியானோ புரூனோவை உயிருடன் எரித்துக் கொன்றனர். கலிலியோவை சித்திரவதை செய்தனர். விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்தின் மறுமலர்ச்சிக்கு எதிராகவும் புதிய சமூக ஒழுங்குமுறைக்கு போராடிய தலைவர்களுக்கு எதிராகவும் பயங்கர அடக்குமுறையை ஏவி விட்டனர்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அழுகிக் கொண்டிருக்கும் ஏகபோக முதலாளித்துவத்தை அதன் மிகவும் மோசமான வடிவில் பிரதிநிதித்துவப்படுத்திய இட்லரும் கோயரிங்கும் கோயபல்சும் ஜெர்மனியின் கலாச்சாரத்தை வேரறுத்தனர். நூலகங்களை தீயிட்டுக் கொளுத்தினர். முற்போக்கு சிந்தனையுள்ள அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் கைது செய்தனர், நாடு கடத்தினர், கொலை செய்தனர். அறிவியலை இழிவுப்படுத்தி விலைபேசினர். மக்கள் கூட்டத்தை இனம், தூய ரத்தம் பேசும் போலி "விஞ்ஞானங்கள்" மூலமும் உலகை வெற்றி கொள்ளும் ஆதிக்க வெறியின் மூலமாகவும் ஒழுக்கம் கெடச் செய்தனர்.

இன்று, இந்த நாட்டில், அறிவாழமற்ற பழமைவாதியும் அமைதிவாதியுமான டாக்டர் ஜோட் விஞ்ஞானிகளை குற்றஞ்சொல்வதுடன், "மனிதகுல வரலாற்றிலேயே மிகப் பெருங்கேடு" அணு ஆற்றல்தான் என்று அடித்துக் கூறினார். ''கடுமையாக வெறுத்து ஒதுக்க வேண்டிய இந்த விஞ்ஞானிகளை தடுத்து நிறுத்த யாரும் இல்லையா? இவர்களை கோணிப்பையில் போட்டு இறுகக் கட்டுவதற்கோ அல்லது மரணக் குழியில் தள்ளிவிடவோ யாருமில்லையா?" என்று கோரிக்கை விடுத்தார். (Sunday Dispatch, 12th August, 1945.)

இந்த அணு ஆற்றல் எதிர்பாளர்கள், தங்களுடைய மாயாவாத, பிற்போக்குச் சித்தாந்தங்களை நம்பி, வளர்ந்து வருகின்ற அறிவியல் ஆற்றல்களை தன் மேலாண்மையின் கீழ் கட்டுப்படுத்த மனிதனுக்கு ஆன்மீக அறிவியல் வலிமை இல்லை என்று நம்புகின்றார்கள். மனித சமூகத்தின் அறிவியல் மற்றும் அறவியல் உயர்நிலைகள் சமூகத்தில் இருந்து தோன்றி வளர்ந்து வருபவை, மனிதன். மேன்மேலும் இயற்கை சக்திகளுடன் வினைபுரிந்து அவற்றை கட்டுப்படுத்தும் போதுதான் இந்த அறிவியல் உயர்நிலைகள் மேலும் வளர்ச்சிபெற முடியும் என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. வளர்ச்சி பெற்றுவரும் தொழில்நுட்பச் சாதனங்களை மனிதன் எவ்வாறு சமுதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறான் என்பது ஒவ்வொரு மாபெரும் வரலாற்றுக் கட்டத்திலும் மனித இன வளர்ச்சியையும் அதன் அறிவியல், ஒழுக்கவியல் வல்லமைகளையும் தீர்மானிக்கிறது.

ஆளும் வர்க்கங்கள் தொழில்நுட்ப மற்றும் இயற்றை வளங்களை மக்களுக்கு அளித்திட மறுக்கும் வரலாற்றுக் கால கட்டங்களில்தான் சமுதாய நெருக்கடிகள் வளர்ச்சியடைந்து, இருக்கின்ற ஒழுக்கவியல் கலாச்சார விழுமியங்கள் சிதைந்து போகின்றன. சமூகச் சீரழிவின் நடைமுறையில் சிதைவின் அந்தத் தருணங்களில்தான் புதிய தொழில்நுட்ப அறிவியல் முறைகளை மறுக்கின்ற, மாற்றத்தை விரும்பாத, மந்தபுத்தியுள்ள தத்துவஞானிகள் பிற்போக்கு சக்திகளுக்குத் தவறாமல் கிடைக்கின்றனர். புத்திசாலியான பிளாட்டோவைக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அதற்கு அடுத்த காலத்தில் உள்ளெரி எஞ்சினின் (internal combustion engine) கண்டுபிடிப்புக்கு எதிராக பலநூறு "ஜோட்"கள் அவதூறு செய்தார்கள். தற்போது அணு சக்திக்கு எதிராக ஊளையிடுபவர்களும் அவர்களே.

மனிதன், படைப்பாளன்

அணு ஆற்றல் விஞ்ஞானிகளை இயற்கையின் வழியில் மூக்கை நுழைக்கும்" குற்றவாளிகள் எனவும், இயற்கையையும் அதன் இரகசியங்களையும் "கெடுமதியோடு" மாற்றி அமைப்பவர்கள் எனவும், தேவையின்றி "தலையீடு" செய்பவர்கள் எனவும் மிகவும் வெளிப்படையாக பழி தூற்றுகின்றனர். அறிவில்லாத இந்த அவநம்பிக்கைவாதிகளுக்கு மனிதனது வரலாற்றைப் பற்றி ஏதாவது தெரியுமா? விஞ்ஞானத்தின் வரலாறு பற்றியோ அல்லது வரலாற்றின் விஞ்ஞானம் பற்றியோ இவர்கள் ஏதாவது அறிந்திருப்பார்களா? மனிதன் இயற்கையின் மீது தனது முயற்சிகளைச் செலுத்தி தன்னுடைய வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக அவ்வியற்கையை மாற்றி வந்ததினால்தான் மனிதன் இன்று மனிதனாக இருக்கிறான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா? இந்த தனித் தன்மைதான் மனிதனை பிற விலங்குகளிலிருந்து வேறுபடுத்தியது. விலங்குகள் இயற்கைக்கு தங்களைத் தகவமைத்துக் கொள்ளவேண்டும் அல்லது அழிய வேண்டும், அதனால்தான் அவைகள் இயற்கைக்கு மேலாக வளர்ச்சி பெற முடியவில்லை. அவைகள் இயற்கையின் மீது ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. மனிதன் இயற்கையை மாற்றியமைக்கிறான். அந்த நிகழ்ச்சிப் போக்கில் தன்னையே மாற்றிக் கொள்கிறான். அவன் உற்பத்தியின் மூலவனாகிறான்.

இதை அவன் எவ்வாறு செய்கிறான்?

மற்ற மிருகங்களைப் போல இல்லாமல் மனிதனால் கருவிகளை உருவாக்கவும் உபயோகிக்கவும் முடியும் தன்னுடைய அனுபவமற்ற வெறும் கைகளைப் பயன்படுத்தி கல்லால் ஆன சுத்தியல், சம்மட்டி. சிக்கிமுக்கி கற்களால் ஆன உபகரணங்களைச் செய்யவும் உபயோகிக்கவும் தெரிந்துகொள்ள ஆதிமனிதனின் ஆயிரக்கணக்கான தலைமுறைகள் கடின முயற்சி செய்யவேண்டியிருந்தது. இயற்கைக்கு எதிராகச் செயல்படுத்தப்பட்ட, தேர்ச்சியற்ற உழைப்பும், மனப் போராட்டங்களும் கொண்ட இந்த நீண்ட கடுமையான பயிற்சிக் காலம் மனிதனின் உடல் அமைப்பிலும் உள செயல்பாடுகளிலும் தன்னுடைய முத்திரையை பதித்தது. மிக எளிய செய்பொருட்களான இந்தக் கருவிகளின் செயல்பாடுகள் மனிதனின் ஆற்றலை ஒரு புள்ளியில் ஒருமுகப்படுத்திக் குவிக்கவும் செயல்படுத்தவும் அதன் மூலம் இயற்கையை மாற்றவும் மனிதனுக்கு வாய்ப்பளித்தது. அவ்வாறு இயற்கையை மாற்றியதாலும் அதனால் ஏற்பட்ட விளைபொருட்களைக் கொண்டு தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துகொண்டதாலும் மனிதன் தன்னை சுற்றியிருந்த இயற்கையைப் படிப்படியாக மாற்றினான். அவ்வாறே தன்னையும் மாற்றியமைத்துக் கொண்டான்.

ஆற்றலின் ஆரம்ப கால வடிவங்கள்

இயற்கையின் மீதான தன்னுடைய முதல் போராட்டத்தில் ஆரம்ப கால மனிதனுக்குக் கிடைத்திருந்த ஒரே ஆற்றல், அவனுடைய சொந்த உடலின் வலிமையும் எடையும்தான். அம்மனிதர்களின் கை தசைநார்களின் வலிமையும், பழக்கமும், கை மற்றும் விரல்களின் தொட்டுணரும் தன்மை, பொருட்களை இறுகப்பற்றும் சக்தி, கண்பார்வையின் வழிகாட்டுதல்படி கருவிகளை செலுத்தும் திறன் ஆகியவை அம்மனிதர்களின் முன்னேற்றத்தை சாத்தியமாக்கின. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பே மார்க்சும் ஏங்கெல்சும் இது குறித்து நமது கவனத்தை ஈர்த்தனர். 1893ல் பிரிட்டிஷ் அசோசியேசனில் உரையாற்றும் போது டாக்டர் முன்றோ மனித மூளையின் உயர்நிலைத் தன்மைக்கு கைகள் மற்றும் தசைநார்களின் திறனும் பழக்கமும், அதன் செயல்பாடுகளின் தாக்கமும்தான் காரணம் என்பதை எடுத்துக் காட்டினார். 1934ஆம் வருடம் ஜனவரி 19ஆம் தேதி ராயல் இன்ஸ்ட்டியூட்டில் "(மனித) மூளையின் பரிணாமவளர்ச்சி" என்கிற தலைப்பில் ஆற்றிய புகழ் பெற்ற உரையில் பேராசிரியர் ஜி.எலியட் சுமி, "மனிதனின் மூளைச் செயல்பாடுகளின் முதன்மைத் தன்மையானது. அவனது கைகள் மற்றும் கண்ணின் கூட்டுச் செயல்பாடு பரிபூரண முழுமையடைந்து பொருட்களை கையாளும் திறமையும் கைப்பழக்கமும் உயர் நிலையை எட்டியதால்தான் பெருமளவில் சாத்தியமாயிற்று. இது வெளிப்படையான உண்மை" என்று அறிவித்தார். இதைத்தான் பேராசிரியர் டிஎச். பியர் வேடிக்கையாக "தசைநார்களின் திறனுக்குக் கிடைத்த அறிவுப்பூர்வமான மரியாதை" என்று கூறினார். (வேலை மற்றும் விளையாட்டில் இருந்த திறன்) எலியட் சுமித் மேலும் கூறும்போது "பொருட்களைத் தொடர்ச்சியாக கையாளும் போது ஏற்படும் விளைவு என்னவென்றால் அப்பொருட்களின் தன்மைகளைப் பற்றிய ஒரு முழுமையான புரிதலும், அப்பொருட்களின் இயக்கத்தில் காணப்படுகின்ற இயற்கை விதிகளைப் பற்றிய அறிவும் கைவரப் பெறுவதுதான். தொடு உணர்ச்சியினாலும் பார்வையினாலும் பெறப்படுகின்ற விவரங்களை, தொடர்புபடுத்தி புரிந்து கொள்வதினால் பொருட்களின் வடிவங்கள் பற்றி மனதளவில் உய்த்துணரும் பழக்கம் ஏற்படுகின்றது. இதுவே அழகியலின் அடிப்படையான விதையாக அமைகிறது. (Evolution of Man, p. 154.) பேராசியர் வோல்ப் "மனிதன் பகுத்தறியவும் சிந்திக்கவும் வல்லமை பெறுவதற்கு அவனது கைகளின் இரண்டு முக்கியச் செயல்பாடுகளான பற்றிப் பிடித்தலும் தொடுதலும் பெருமளவிற்குக் காரணமாக அமைந்தன" என்கிறார். (The Human Hand, p. 7.)

மனிதனின் ஆரம்பகால ஆற்றலான அவனது தசைகளின் வலிமையும் செயல்பாடும் மனித இனத்தின் வளர்ச்சியின் மீது மிகப் பெருமளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நாம் உடனடியாக அறியமுடியும். மனிதன் உழைப்பாளி என்ற நிலையிலிருந்து சிந்தனையாளன் என்ற நிலைக்கு உயர்ந்தான்!

தங்கள் வாழ்க்கையின் பாதுகாப்பற்ற தன்மை காரணமாக ஆதி கால மனிதர்கள், இனக் குழு என்று அழைக்கப்படக்கூடிய எளிமையான சமூகக் கூட்டிணைவில் வாழவும் வேலை செய்யவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இவ்வாறு கூட்டாக வேலை செய்தது, மனிதனை சமூகப் பிராணியாக மாற்றியது. ஒருவனைப் புரிந்து கொள்ளவும், தொடர்பு கொள்ளவும் அவர்கள் கையாண்ட முதல் முயற்சிகள் சைகைகள் மூலமாக நடந்தன. கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் டில்னி மனித மூளையில் பேச்சு சம்பந்தமான மையங்கள், கை சைகைகள் சம்பந்தமான நரம்பு மையங்களில் ஏற்பட்ட வளர்ச்சியே என்று அறிவித்தார். ஆனால் மனிதன் உழைப்பு சம்மந்தமான நடவடிக்கைகள், கை மற்றும் கண் ஆகியவற்றின் தொடர்ச்சியான உபயோகத்தின் தேவையைச் சார்ந்திருப்பதால், மனித இனத்தில் பேச்சு மெதுவாகவே முன்னேறியது. மனிதன் அறிந்து கொண்ட சொற்களின் தொகுதி வளர்ச்சியும் விரிவும் பெற்றதைத் தொடர்ந்து மனித மூளையின் திறன் விரிவும் ஆழமும் பெற்றது.

முதல் விஞ்ஞானி

உழைப்பு நடவடிக்கைகளில் பிரிவினையை ஏற்படுத்தியதன் மூலமும், அவற்றை உபபிரிவுகளாக மாற்றியதன் மூலமும், மனிதன் தன்னுடைய சொந்த உடல் ஆற்றலை மேம்படுத்தியும் பலப்படுத்தியும் கொண்டான். அதே அளவான ஆற்றலை செலவழித்து இயற்கையிடமிருந்து மேலும் அதிகமானதை பெறும்வகையில் தன்னுடைய உழைப்புக் கருவியை மேம்படுத்திய முதல் காட்டுமிராண்டிதான் மனித இனத்தின் முதல் விஞ்ஞானி ஆவான். விஞ்ஞானத்தை பொறுத்தவரை அதில் மாயாவாதமானதோ மந்திரவாதமானதோ எதுவுமில்லை. விஞ்ஞானம் என்பது கிரௌதர் சொல்வதைப் போல மனிதன் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைமைகளின் மீது புரிதலையும் ஆளுமையையும் பெறுவதற்கான வழிமுறைகள் தான். இந்த மேம்பட்ட புரிதலும் ஆளுமையும் மனிதன் பலவகைப்பட்ட ஆற்றல் வடிவங்களைக் கட்டுப்படுத்துவதோடும், தன்னுடைய இயந்திரங்கள் மற்றும் உழைப்புக் கருவிகளை முழுமையான திறனை அடையும் வகையில் வளர்த்தெடுப்பதுடனும் நேரிடையாக தொடர்பு கொண்டுள்ளது. புராதன காலத்தின் புகழ்மிக்க கண்டுபிடிப்புகளான நெம்புகோலும், உருளையும், சக்கரமும், சாய்தளமும் இயந்திரவியல் உபகரணங்களே. இவைகளைக் கொண்டு மனிதன் பல்வேறு துன்பதுயரங்களினூடே தன்னுடைய தசை ஆற்றலைப் பலமடங்கு பெருக்கிக்கொள்ளவும் அந்த ஆற்றலைக் குறிப்பிட்ட பொருளாதார நலன்களை அடைய சிறப்பான முறையில் பயன்படுத்தவும் செய்தான். நாம் இங்கேயும் இயந்திரவியல் விஞ்ஞானத்தின் ஆரம்ப அத்தியாயங்களைக் காண்கிறோம். மனிதன் நடைமுறையின் மூலம் அறிந்து கொள்ளவும் முன்னேறவும் செய்கிறான்.

இதன்பின் புராதன மனிதன் பல ஆயிரக்கணக்கான தலைமுறைகளாக தன்னுடைய சொந்த உடல் பலத்தை அதிகப்படுத்தவும் துணை சேர்க்கவும் வேறு வடிவங்களிலான ஆற்றல்களை கண்களை மூடிக்கொண்டு துழாவுவதைப்போல் தேடித் தடவிக் கொண்டிருந்தான். இந்தத் திசை வழியில் அவனுடைய முதல் வெற்றி மிருகங்களை வீட்டுப்பிராணிகளாக மாற்றியதுதான். மிருகங்களின் சக்தியை அவன் ஆற்றுப்படுத்தியதுடன் அச்சக்தியை பல்வேறு வகைகளில் தன் தேவைகளுக்குப் பயன்படுத்தினான். ஆரம்ப சமூகத்தின் சமுதாய வாழ்வில் இது குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியது. இதன் பொருள் பல்வேறு பிரதேசங்களில் வேட்டைக்காரன் மந்தை மேய்ப்பவனாக மாறினான். அவனுடைய ஆணையின் கீழ் உணவும் உடையும் தொடர்ச்சியாகக் கிடைக்கும்படி செய்யப்பட்டது. இது மனிதனை இயற்கையுடன் ஒரு புதிய மட்டத்தில் தொடர்புபடுத்தியது. இது அவனுக்குப் புதிய இடர்ப்பாடுகளையும் அனுபவங்களையும் கொண்டுவந்தது. இவைகள் அவனது பார்வையை விரிவுபடுத்தியதுடன் உலகைப் பற்றிய அறிவை மேலும் வளர்ச்சிபெறச் செய்தது. இது அவனுடைய வேலை முறைகளிலும் வாழ்க்கை முறைகளிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அவனுடைய சமூகம், சமயம் மற்றும் ஒழுக்கவியல் உறவுகளில் மாற்றத்தைக் கொண்டு வந்தது.

 

தொடரும்...