பிரிக்ஸ் கூட்டமைப்பால் டாலர் ஆதிக்கத்தை வீழ்த்த முடியுமா?
சமரன்

இந்த கட்டுரை 2025 பிப்ரவரி மாதத்தில் எழுதப்பட்டது. பல்வேறு அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ற கட்டுரைகளை அந்தந்த இதழ்களில் உடனடியாக கொண்டு வரவேண்டியிருந்ததால், இக்கட்டுரை கொண்டு வருவது தாமதாகி விட்டது. இதை கணக்கில் கொண்டு இக்கட்டுரையை வாசிக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம் - ஆசிரியர்
சென்ற ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டில் பேசப்பட்ட "பிரிக்ஸ்பே" நாணயத் திட்டம் டாலரின் ஆதிக்கதை வீழ்த்துமா என்ற விவாதங்களுக்கு செல்லும் முன் சில அடிப்படைகளை மனதில் நிறுத்தி இந்தக் கட்டுரையை தொடருவோம்.
டாலர் ஆதிக்கம் என்பதே அரசியல் மேலாதிக்கத்தை உருவாக்கிவிடாது. டாலர் என்பது வெறும் நாணயம்தான்; அதுவே நிதிமூலதனம் இல்லை. டாலர் ஆதிக்கத்தை நிதிமூலதன ஆதிக்கத்துடன் பொருத்திக் கொள்வது தவறு. நிதிமூலதனம் என்பது தொழிற்துறை மூலதனம் வங்கி மூலதனத்துடன் இணைந்து உருவான ஏகபோக மூலதனமாகும். அது உற்பத்தி மற்றும் பொருளாதார ஏகபோகங்களையும் அதன் மூலமாக அரசியல் ஏகபோகங்களையும் அரசியல் மேலாதிக்கத்தையும் தோற்றுவிக்கிறது. செல்வாக்கு மண்டலங்களை உருவாக்குவது, காலனிகளை கைப்பற்றுவது, உலகை மறுபங்கீடு செய்வது என ஒவ்வொரு நிதிமூலதன ஏகாதிபத்தியமும் தனது உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில்தான் அமெரிக்காவும் தனது உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு டாலர் ஆதிக்கத்தையும் ஒரு கருவியாக பயன்படுத்துகிறது அவ்வளவே. டாலரின் மூலமாகவே அது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டி விட முடியாது. டாலரை செல்வாக்கு மிக்க பரிமாற்று நாணயமாக மாற்றுவதற்கு கூட அதற்கு ஐ.எம்.எப்., உலக வங்கி, உலக வர்த்தக கழகம் போன்ற புதிய காலனிய அரசியல் ஆதிக்க நிறுவனங்களும் அதில் வீட்டோ அதிகாரமும் உதவுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின்பான சர்வதேச சூழ்நிலை, பிற ஏகாதிபத்தியங்களின் வீழ்ச்சி, அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதார மற்றும் இராணுவ வலிமை, புதிய காலனிய முயற்சிகள் இவையே அமெரிக்காவின் உலக அரசியல் மேலாதிக்க முயற்சிகளுக்கான கதவை திறந்து விட்டது. இராணுவ முகாம்கள், கூட்டமைப்புகள், பொருளாதார சமூகங்கள் ஆகியவற்றை நிறுவுவது; ஆட்சிக் கவிழ்ப்புகள், அரசியல் படுகொலைகள் மூலம் தனக்கு சாதகமான பொம்மை அரசுகளை நிறுவுவது; பொருளாதார உதவிகள் என்ற பெயரில் நிதிமூலதனத்தை ஏற்றுமதி செய்து சந்தைகளை கைப்பற்றுவது, மூலவளங்களைக் கொள்ளையடிப்பது போன்ற புதிய காலனிய உத்திகளை திறமையாக கையாண்டே அமெரிக்கா தனது மேலாதிக்க முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனவே டாலர் முன்னணி வர்த்தக நாணயமாக நீடிப்பதால் மட்டுமே அமெரிக்கா உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டிவிட்டது என்று முன்வைக்கும் வாதங்கள் தவறானது.
மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு அமெரிக்கா தலைமையில் மட்டுமே ஒற்றைத் துருவ ஒழுங்கமைப்பு நிலைபெற்று விட்டது; ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் முடிவுக்கு வந்து அமெரிக்கா தலைமையில் ஒருங்கிணைந்த ஏகாதிபத்தியம் தோன்றிவிட்டது; டாலர் ஆதிக்கம் தொடர்வதால் டாலர் சர்வதேச நாணயமாக மாறிவிட்டது போன்ற வாதங்கள் காவுத்ஸ்கிய அதீத ஏகாதிபத்திய கோட்பாட்டிலிருந்து உருபெறுகின்றன. இந்த வாதங்கள் நிதிமூலதன ஏகாதிபத்தியத்தின் பண்பை மறுக்கும் லெனினிய விரோத கருத்துகளாகும்.
உலக அளவில் ஏகாதிபத்தியங்களின் வளர்ச்சி எப்போதும் சமச்சீராக இருந்ததில்லை. நிதிமுலதன ஏகாதிபத்திய சகாப்தத்தின் தொடக்கக் கட்டத்தில் பிரிட்டிஷ், பிரான்ஸ், டச்சு. டென்மார்க் போன்ற ஏகாதிபத்தியங்கள் கோலோச்சின. முதலாம் உலகப்போருக்குப் பின்பு அவை வீழ்ச்சியடைந்து ஜெர்மன், அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான் போன்ற ஏகாதிபத்தியங்கள் மறுபங்கீட்டுப் போட்டியில் முன்னிலைக்கு வந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு அவற்றில் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலவீனமடைந்தன. அமெரிக்கா சிறிது காலம் அதாவது 1960 வரை மட்டும் உலக மேலாதிக்கத்திற்கு முயற்சித்தது. ஜப்பான், ஜெர்மன் ஏகாதிபத்தியங்களின் மீள் வளர்ச்சி மற்றும் ரசியா சமூக ஏகாதிபத்தியமாக பரிணமித்தது போன்றவற்றால் அமெரிக்காவின் உலக மேலாதிக்க கனவு துடைத்தெறியப்பட்டது. அதன் பிறகு அமெரிக்கா மறுபங்கீட்டுப் போட்டியில் முன்னிலை வகித்தாலும் அதனால் ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டவே முடியவில்லை. ஏகாதிபத்தியம் என்றாலே ஏற்றத்தாழ்வான சமச்சீரற்ற வளர்ச்சிக் கொண்டது. அவற்றுக்கு இடையேயான மறுபங்கீட்டுப் போட்டிகளும் முரண்பாடுகளும் தவிர்க்க முடியாதது என லெனினியம் நமக்கு போதிக்கிறது.
அமெரிக்கா - நேட்டோ கூட்டமைப்பு, ஷாங்காய் கூட்டமைப்பு, பிரிக்ஸ் கூட்டமைப்பு, குவாட், ஆக்கஸ் போன்றவை அனைத்தும் தற்காலிகமானவையே; நிரந்தரமானவை அல்ல. அணிச்சேர்க்கையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஏகாதிபத்திங்கள் தங்களுக்கிடையே கூட்டுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டியதன் தேவை குறித்து ஏஎம்கே பின்வருமாறு எடுத்துரைக்கிறார்.
"ஏகாதிபத்திய அரசுகள் மற்றும் ஏகபோக முதலாளித்துவ கூட்டுகளுக்கிடையில் உலகை பங்கீடு செய்து கொள்வதற்கான போராட்டமும்; உலகை பங்கீடு செய்து கொள்வதின் அடிப்படையில் அவற்றிற்கிடையில் கூட்டுறவுகள் வளர்த்தலும் ஆகிய இரண்டு முரண்பட்ட போக்குகளுக்கு ஊடேதான் மூலதனத்திலும், உற்பத்தியிலும் ஒன்று குவிப்பு வளர்கிறது. இதுதான் முதலாளித்துவ கூட்டுகளுக்கு இடையிலான போராட்டம் உடன்பாடுகள் ஆகியவற்றின் சாரம்சமாகும்.
ஏகாதிபத்திய அரசுகள் மற்றும் ஏகபோக முதலாளித்துவ கூட்டணிகள் உலகைப் பங்கீடு செய்வதற்குப் புறநிலைக் காரணம், ஒன்று குவிப்பு ஏற்கனவே வந்தடைந்துவிட்ட வளர்ச்சி நிலையானது, லாபங்களைப் பெறுவதற்காக இந்த முறையை மேற்கொள்ளும்படி அவர்கள் நிர்ப்பந்திக்கப் படுவதே ஆகும். உலகை அவர்கள் தங்களது மூலதனத்தின் விகிதத்திலும் வலிமையின் விகிதத்திலும் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.
ஏனெனில் பரிவர்த்தனை பண்ட உற்பத்தியிலும் முதலாளித்துவத்திலும் வேறு பங்கீட்டு முறையும் இருக்க முடியாது. இதுதான் முதலாளித்துவ கூட்டணிகளுக்கு இடையிலான போராட்டத்தின் சாராம்சமாகும் என லெனினியம் கூறுகிறது.
ஏகாதிபத்திய அரசுகள் மற்றும் ஏகபோக முதலாளித்துவ கூட்டணிகளுக்கு இடையில் ஏற்படும் உடன்பாடுகளின் சாராம்சத்தை பற்றி லெனின் பின்வருமாறு கூறுகிறார்:
"உலகைப் பொருளாதார ரீதியில் பங்கீடு செய்து கொள்வதின் அடிப்படையில் முதலாளித்துவ கூட்டுகளுக்கு இடையில் சில குறிப்பிட்ட உறவுகள் வளர்கின்றன; அதேபோது இதற்கு இணைவாகவும் இதனுடன் தொடர்புடனும் உலகை பிரதேச ரீதியில் பங்கீடு செய்து கொள்வதின் அடிப்படையில் காலனியாதிக்கம் மற்றும் செல்வாக்கு மண்டலங்களுக்கான போராட்டத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில உறவுகள் வளர்கின்றன".
முதலாளித்துவ நாடுகளுக்கு இடையில் கூடுமானவரையில் ஏகாதிபத்திய யுத்தங்களை தவிர்ப்பதற்காக, விரிவடைந்துவரும் ஏகாதிபத்திய அரசுகள் மற்றும் ஏகபோக முதலாளித்துவ கூட்டுகளுக்கிடையில் ஒருங்கிணைப்புத் தேவைப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பு எல்லா ஏகாதிபத்திய அரசுகளையும் கொண்ட ஒரு பொதுவான கூட்டணி ஆகவோ அல்லது ஒரு ஏகாதிபத்திய கூட்டணி அதற்கு எதிரான இன்னொரு ஏகாதிபத்திய கூட்டணி என்று ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டணி ஆகவோ இருக்கலாம். ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் செல்வாக்கு மண்டலங்கள், நலன்கள், காலணிகள் ஆகியவற்றை பங்கீடு செய்து கொள்வதற்காகவே இக்கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன.
இவற்றை ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் பங்கீடு செய்து கொள்வதற்கு முதலாளித்துவத்தில் சாத்தியமான ஒரே ஒரு அடிப்படை கூட்டணியில் பங்கு கொள்வோரின் வலிமையை பற்றிய அவர்களது பொதுவான பொருளாதார, நிதித்துறை, இராணுவ வலிமை முதலானவற்றைப் பற்றிய கணக்கீடுதான். இந்தப் பங்கீட்டில் பங்கு கொள்வோரின் பலம் சமமான அளவில் நீடிப்பதில்லை. ஏனெனில் வெவ்வேறு நிறுவனங்கள், டிரஸ்டுகள், கார்ப்பரேஷன்கள், தொழிற் கிளைகள் அல்லது நாடுகளின் ஏற்றத்தாழ்வற்ற வளர்ச்சி முதலாளித்துவத்தில் சாத்தியம் இல்லை.
ஆகவே முதலாளித்துவ அமைப்பின் எதார்த்த நிலவரங்களில், ஏகாதிபத்திய கூட்டணிகள் எந்த வடிவத்தில் அமைந்தவையாயினும், ஒரு ஏகாதிபத்திய கூட்டணியாக இருந்தாலும் சரி, அல்லது எல்லா ஏகாதிபத்திய அரசுகளையும் கொண்ட பொதுவான கூட்டணியாக இருந்தாலும் சரி, அவை யுத்தங்களுக்கு இடையிலான காலங்களுக்கு உரிய "போர் நிறுத்த உடன்பாடுகளாகவே" தவிர்க்க முடியாதபடி இருக்குமே அன்றி வேறல்ல. மேலும், முதலாளித்துவ வளர்ச்சி ஏற்றத்தாழ்வானதாகவே இருப்பதின் காரணமாக, ஏகாதிபத்தியங்களின் வலிமையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு உலகை மறுபங்கீடு செய்கிற செயலும் தவிர்க்க முடியாததாக ஒன்றாகிவிடுகிறது. ஆகையால்தான் இந்த கூட்டணிகள் நிபந்தனைக்கு உட்பட்டதாகவும் தற்காலிகமானதாகவும் இருக்கின்றன. சமாதான கூட்டணிகள் யுத்தங்களுக்கு அடிகோலுகின்றன. அவையும் இந்த யுத்தங்களில் இருந்து உதித்தெழுகின்றன. ஒன்று மற்றொன்றை நெறிப்படுத்துகிறது. உலகப் பொருளாதாரத்திலும், உலக அரசியலிலும் நிலவும் ஏகாதிபத்திய தொடர்புகள், உறவுகள் என்ற ஒரே அடிப்படையிலிருந்து சமாதானம் மற்றும் சமாதானம் அல்லாத வழியிலான போராட்ட வடிவங்கள் மாறி மாறி தோன்றுகின்றன. ஏகாதிபத்திய சமாதானங்களுக்கும், ஏகாதிபத்திய போர்களுக்கும் இடையிலான உயிர் தொடர்புடன் ஏகபோக முதலாளித்துவ கூட்டணிகளுக்கு இடையிலான போராட்டத்தையும் ஒருங்கிணைப்பையும் (ஒற்றுமையையும்) பார்க்க வேண்டும்."
என்று "கூட்டுச் சேரா இயக்கத்தின் 10-வது மாநாடு ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளது ஆளும் வர்க்கங்களின் செயலற்றத் தன்மையை காட்டுகிறது" என்ற கட்டுரையில் லெனினியத்தை எடுத்துக் காட்டி விளக்குகிறார் ஏஎம்கே.
எனவே ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கூட்டுகள் ஏற்பட்டு விட்டதாலே அவற்றுக்கு இடையே முரண்பாடுகள் ஒழிந்து அவை ஒருங்கிணைந்த ஏகாதிபத்தியங்களாக உருவாகிவிட்டன; எனவே டாலர் ஆதிக்கத்தை அவை ஏற்றுக் கொண்டுவிட்டன என்று பொருள் கொள்ளக் கூடாது. டாலரின் ஆதிக்கத்தை வீழ்த்த ஐரோப்பியன் யூனியன், ஜப்பான், ஜெர்மனி முதல் ரஷ்யா -சீனா வரை பிற ஏகாதிபத்திய அரசுகளும் பல்வேறு முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டே வருகின்றன. டாலர் ஆதிக்கமும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளின் போது அவ்வபோது வீழ்ச்சியடைந்து மீண்டெழுந்தே வருகிறது. இந்த நிலையில் இருந்துதான் பிரிக்ஸ் கூட்டமைப்பின் இந்த முயற்சிகளையும் மதிப்பிட வேண்டும்.
டாலர் ஆதிக்கத்திற்கு எதிரான பிரிக்ஸ் கூட்டமைப்பின் முயற்சிகள்
2024ம் ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் 16வது மாநாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பு பிரிக்ஸ் பிளஸ் (அல்லது அவுட்ரீச்) கூட்டமைப்பாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அதாவது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்டு பிரிக்ஸ் பிளஸ் (அல்லது அவுட்ரீச்) (BRICS Plus / Outreach) கூட்டமைப்பாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த மாநாடு "நியாயமான உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பான பல்துருவ ஒழுங்கமைப்பை வலுப்படுத்துதல்" என்ற தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இஸ்ரேல் -பாலஸ்தீனத்திற்கு இருதேசக் கொள்கையின் அடிப்படையில் தீர்வு காண்பது, சீனா-இந்தியா எல்லைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது போன்றவை விவாதிக்கப்பட்டன. பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. அவற்றைத் தாண்டி முக்கியமான அம்சங்களாக இந்த கூட்டமைப்பில் இடம்பெற்றவை என்னவெனில்,
- பிரிக்ஸ் பே (BRICS Pay) திட்டம் என்ற புதிய கட்டண முறைமையை அறிமுகம் செய்தது. உறுப்பு நாடுகளின் மத்திய வங்கிகளுக்கிடையே பரிவர்த்தனை மற்றும் நிதி தகவல்களை பரிமாறிக் கொள்வதை எளிதாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஸ்விப்ட் (SWIFT - Society for Worldwide Interbank Financial Telecommunication) எனும் பரிவர்த்தனை மற்றும் நிதி தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வலையமைப்புக்கு மாற்றாக பிரிக்ஸ் பே திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
- ஐ.நா. மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை ஆகிய கட்டமைப்புகளின் அமெரிக்க சார்பை குறைக்கும் வகையில் சீர்திருத்தங்கள் தேவை என்பதை வலியுறுத்தியது.
- ஐ.எம்.எஃப்.ன் நாணய ரிசர்வ் முறைக்கு இணையாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் சார்பை குறைக்கும் வகையில், பிரிக்ஸ் நாடுகள் சார்பாக நாணய ரிசர்வ் கட்டமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்வது.
- அல்ஜீரியா, பெலாரஸ், பொலிவியா, கியூபா, இந்தோனேசியா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, துருக்கி, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியட்நாம் ஆகிய 13 நாடுகளையும் இந்த திட்டத்தின் கூட்டாளிகளாக இணைப்பது
என்ற முயற்சிகளும் திட்டங்களும் இந்த மாநாட்டில் தீர்மானங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவை அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கும் டாலரின் உலக மேலாதிக்கத்திற்கும் சவால் விடும் முயற்சிகளாக பார்க்கப்படுகிறது. (இவை தவிர தங்கத்தை பின்புலமாக கொண்ட பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்க வேண்டும் என ரஷ்யா முன்வைத்தது. இது பிரிக்ஸ் கூட்டமைப்பாலேயே ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).
இந்த தீர்மானங்களுக்கு பதிலளிக்கும் விதமாக 2025 ஜனவரியில் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ள டிரம்ப் பேசுகையில், "அமெரிக்க டாலருக்கு போட்டியாக தனி நாணயத்தை உருவாக்க நினைத்தால், 100% - 150% சதவிகிதம் வரிவிதிப்பை எதிர்கொள்ள நேரிடும். டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை முன்னிறுத்த முயற்சிக்க மாட்டோம் என்ற உறுதிமொழி எங்களுக்குத் தேவை. பிரிக்ஸ் நாடுகள் வேறு நாணயத்தை முன்னிறுத்தினால், அமெரிக்காவில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் இருந்து விடைபெற வேண்டும். அவர்கள் வேறு நாட்டில் விற்பனை செய்துகொள்ளலாம். சர்வதேச வர்த்தகத்தில் இருந்து அமெரிக்க டாலரை நீக்குவது என்பது பிரிக்ஸ் கூட்டமைப்பால் முடியாது. அவ்வாறான முயற்சியில் ஈடுபடும் எந்த நாடும் அமெரிக்காவிடம் இருந்தும், அனைத்து வர்த்தகத்தில் இருந்தும் விடைபெற வேண்டும். டாலருடன் விளையாட வேண்டாம். மீறி செய்தே தீருவோம் என்று சொல்லும் நிலையெடுத்தால், பிரிக்ஸ் கூட்டமைப்பினர்களே என்னிடம் வந்து கெஞ்சும் நிலை உருவாகும்" என்று மிரட்டல் விடுத்தார்.
ஆகையால் இன்று டாலரின் மேலாதிக்கத்தை வீழ்த்துவதற்கான முயற்சிகள் குறித்து மீண்டும் விவாதங்கள் துவங்கியுள்ளன.
இதற்கு முன்பாக 2022 ம் ஆண்டில் நடைபெற்ற 14வது பிரிக்ஸ் மாநாட்டிலும் டாலருக்கு போட்டியாக பிரிக்ஸ் ரிசர்வ் கரன்சியை (ஐரோப்பிய யூனியன் நாடுகளின் நாணயமாக யூரோ விளங்குவது போல) உருவாக்குவதற்கான தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. சீனாவும் - ரஷ்யாவும் கடந்த இருபதாண்டுகளாக டாலரின் ஆதிக்கத்தையும் அமெரிக்க சார்பையும் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதில் ஒரு முயற்சிதான் சென்ற பிரிக்ஸ் மாநாட்டில் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம். பிரிக்ஸ் கூட்டமைப்பின் இந்த முயற்சிகள் டாலரின் ஆதிக்கத்தை வீழ்த்துமா என்பது பற்றியும், டாலர் எவ்வாறு முன்னணி நாணயமாக உருபெற்றது, அது புதிய காலனியாதிக்கத்தின் கருவியாக எவ்வாறு பரிணமித்தது, அமெரிக்காவின் உலக மேலாதிக்க கனவும் டாலர் மேலாதிக்கமும் தொடர்ச்சியாக எவ்வாறு சரிந்து வருகிறது ஆகியவை குறித்து சுருக்கமாக பார்ப்போம்.
உலகளாவிய இருப்பு நாணயமாக (reserve currency) டாலர் உருவெடுத்தல்
சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியம் என்று சொல்லப்பட்ட பிரிட்டிஷின் ஆட்சி முதல் உலகப்போரின் உலக மறுபங்கீட்டு போட்டியில் மெல்ல மெல்ல சரியத் துவங்கியது. அதில் அமெரிக்கா பெரிய அளவில் பொருளாதார இழப்பின்றி தன்னை பத்திரப்படுத்திக் கொண்டது. விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆயுத விற்பனையை தனக்குச் சாதகமாக்கி கொண்ட அமெரிக்கா தங்கத்திற்கு ஈடாக போர் ஆயுதங்களை விற்பனை செய்தது. அதில் பழைய காலனியாதிக்க வாதியான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பெரும் இழப்புகளை சந்தித்து வந்தது. உலகம் முழுவதும் கொள்ளையடித்து சேர்த்து வைத்த தங்க இருப்பையும் இழந்து வந்தது. பிரிட்டிஷ் உள்ளிட்ட போரில் ஈடுபட்ட பல நாடுகள் தங்கத்தை இழந்து ஆயுதங்களை பெற்று போரில் ஈடுபட்டன. அமெரிக்காவின் பொருளாதாரமும் நாணயமும் உலகளாவிய நம்பிக்கையைப் பெற்றது. இதன் காரணமாக 1920களில் பிரிட்டிஷின் ஸ்டெர்லிங் பவுண்ட்டின் ஆதிக்கமும் சரியத் துவங்கியது; அந்த இடத்தை அமெரிக்க டாலர் பிடித்து உலகளாவிய இருப்பு நாணயமாக உருவெடுக்கத் துவங்கியது.
இரண்டாம் உலகப் போர் கட்டத்தில் இந்த நிலை மேலும் தீவிரமடைந்தது. இரண்டாம் உலகப்போரின் இறுதியில், உலக தங்க இருப்பில் மூன்றில் இரண்டு பகுதியை அமெரிக்கா தன்வசம் வைத்திருந்து. உலகின் மிகப்பெரிய பொருளாதார மற்றும் ஆயுத வலிமை படைத்த நாடாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மாறியது. ஐரோப்பிய மறுவாழ்வு திட்டம் எனும் மார்ஷல் திட்டம், பான் அமெரிக்கானா (Pan Americana) போன்ற திட்டங்கள் மூலம் போரில் ஈடுபட்டு பலவீனமடைந்திருந்த நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பது என்ற பெயரில் நிதிமூலதனத்தை ஏற்றுமதி செய்தது அமெரிக்கா. தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபடத் துவங்கியது. அதன் விளைவாக, சர்வதேச இருப்பு கரன்சியாக டாலர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. காலனியக் கட்டத்தில் பிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் இருந்ததைப் போல, புதிய காலனியக் கட்டத்தில் அமெரிக்க டாலர் சர்வதேச வர்த்தகத்திற்கான இயங்கு நாணயமாகவும் (Vehicle Currency) மாறியது. 1944ல் பிரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தம் (Bretton Woods Agreement) மூலம் போருக்குப் பிந்தைய சர்வதேச நாணய அமைப்பு நிறுவப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, அமெரிக்க டாலர் உலகின் முதன்மை இருப்பு நாணயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு டிராய் அவுன்சு (troy ounce) தங்கத்துக்கு 35 டாலர் என்ற விகிதத்தில் தங்கத்துடன் மாற்றீடு செய்யப்படும் ஒரே நாணயமாக டாலர் மாறியது.
புதிய காலனியாதிக்கத்திற்கான கருவிகளுள் ஒன்றாக டாலரின் பங்களிப்பு
புதிய காலனியக் கட்டத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் கருவிகளுள் ஒன்றாக டாலர் பங்காற்றி வருகிறது. இதற்காக சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எப் -IMF), உலக வங்கி, ஸ்விஃப்ட் போன்ற கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை உலக நாடுகளை ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்க சங்கிலியில் புதிய காலனிய முறையில் பிணைப்பதில் பங்காற்றி வருகின்றன. உலகின் பெரும்பாலான நாடுகள் சர்வதேச நிதி பரிமாற்றத்திற்கான இருப்பாக டாலர்களையே வைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரிட்டென் வுட்ஸ் ஒப்பந்தத்திற்கு பின்பு டாலர் தங்கத்துக்கு இணையான மதிப்பு வாய்ந்த ஒன்றாக மாறியது. அமெரிக்க டாலர் எப்படி தங்கத்துக்கு இணையான விகிதத்தில் கணக்கிடப்பட்டதோ, அது போல மற்ற நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை நேராக டாலருக்கு இணையாக நிர்ணயிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த டாலர் - தங்க பரிவர்த்தனை விகிதத்தை ஏற்ற இறக்கமில்லாமலும், நாணய மாற்றுக்கு கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் ஏதுமின்றியும் தங்கத்திற்கு டாலரையும் - டாலருக்கு தங்கத்தையும் பரிமாற்ற தயார்நிலையிலும் இருக்க வேண்டும் என்று அந்த ஒப்பந்தம் மூலம் முடிவெடுக்கப்பட்டது. இதைக் கண்காணித்து நிர்வகிப்பது ஐ.எம்.எப்-ன் பணியாக நிர்ணயிக்கப்பட்டது.
நிதிமூலதனத்தின் ஏற்றுமதியை அதிதீவிரமாய் அமெரிக்கா திறந்துவிட்டதால், டாலர் தேவையிருந்த உலகத்திற்கு டாலர் வழங்கும் நிலையிலிருந்த அமெரிக்காவின் இந்த சிறப்புரிமை, அதன் ஏகபோக நிதிமூலதனக் கும்பலுக்கு புதிய காலனியச் சூறையாடலை விரிவுபடுத்த விரிந்த வாய்ப்பை வழங்கியது. டாலர் என்பது புதிய காலனியாதிக்கத்தின் கருவிகளில் மையமான கருவியாக மாறியது. பிற ஏகாதிபத்தியங்களும் புதிய காலனிய நாடுகளும், அவர்களின் கொடுக்கல் வாங்கல் கணக்கீட்டைச் சமன் செய்வதற்காக (Balance of Payment) ஒரு உபரி ஏற்றுமதியை உருவாக்க வேண்டியிருந்தது. காலனிய நாடுகள் சரக்கு மற்றும் சேவைகளுக்கான பணப்பட்டுவாடா செய்வதற்கு மூலவளங்களையோ தங்கத்தையோ அமெரிக்காவிடம் பறிகொடுக்க வேண்டியிருந்தது. பிற ஏகாதிபத்தியங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கும் கூட டாலருக்கு பரிமாற்றம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. அமெரிக்கா டாலரை வழங்கும் நாடாக இருந்ததால், எவ்வளவு வேண்டுமானாலும் டாலரை அச்சிட்டு உலகின் மூலைமுடுக்கெங்கும் மூலதனத்தை ஏற்றுமதி செய்ய முடிந்தது; டாலர்களை வைத்துக்கொண்டு அமெரிக்க ஏகபோக முதலாளிகள் தாங்கள் விரும்பிய சரக்குகளை வாங்கவும் சந்தைகளை உருவாக்கவும் முடிந்தது.
அதீத இலாபம் கொழிக்கும் நிறுவனங்களை வளர்த்தெடுக்கவும், புதிய காலனிய நாடுகளில் எண்ணெய் உள்ளிட்ட தட்டுப்பாடான இயற்கை வளங்கள் மீது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் செய்ய முடிந்தது. மார்ஷல் திட்டத்திற்கு நிதி வழங்க தேவையான மிகப்பெருமளவு செலவினங்கள், புதிய காலனிய உதவித் திட்டங்கள் மற்றும் இராணுவ முன்னேற்றங்கள் அனைத்திற்கும் டாலராக அச்சிடப்பட்டு நிதிமூலதனம் ஏற்றுமதி செய்யப்பட்டது. உலக அரசாங்கங்கள் அவற்றின் மத்திய வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட உலகின் பிற பகுதியினர் டாலரை சர்வதேச இருப்பு நாணயமாகவும் இயங்கு நாணயமாகவும் ஏற்கும் நிலையை உருவானது. பிரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தத்தின்படி, தங்கத்தின் கையிருப்பு போதுமான அளவில் இல்லாமலேயே கூட டாலர்களை அச்சடித்து குவித்தது அமெரிக்கா.
பிற நாடுகளின் வளங்களை சுரண்டி கொழுத்தது அமெரிக்கா. காலனிய நாடுகளின் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி நிறுவனங்களை கைப்பற்றியது; நிதி மூலதனத்தை தங்குத் தடையின்றி ஏற்றுமதி செய்தது; தனது நடப்பு கணக்கு பற்றாக்குறையை டாலருக்கு ஈடு செய்து அந்த நாடுகளின் நாணயங்களை மதிப்பிழக்க செய்தது; தனக்கு கட்டுப்படாத நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதித்து அந்த நாடுகள் இருப்பு வைத்துள்ள டாலரை பயன்படுத்த விடாமல் முடக்கியது. காலனிய நாடுகளின் அரசுகளை இவ்வாறு கட்டுப்படுத்தும் கருவிகளுள் ஒன்றாக டாலர் மாறியது. இதன் காரணமாக, காலனிய நாடுகள் மட்டுமல்லாமல் பலவீனமடைந்திருந்த பிற ஏகாதிபத்திய நாடுகளும் டாலரை பாதுகாக்க வேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலை 1960 களின் பாதியில் இருந்தே மாறத் துவங்கியது.
பிற ஏகாதிபத்தியங்களின் எழுச்சியும் பிரெட்டன்வுட்ஸ் அமைப்பின் வீழ்ச்சியும்
முதல் பனிப்போர் கால கட்டத்தில், உலகத்தின் பல பகுதிகளில் பிற்போக்கான பொம்மை ஆட்சிகளை நிறுவவும், தேச விடுதலை இயக்கங்களை ஒடுக்கவும் டாலர்கள் திருப்பிவிடப்பட்டன. கொரிய யுத்தத்திற்கும், வியட்நாம் யுத்தத்திற்கும், உலகின் பல பகுதிகளில் இராணுவ தளங்கள் அமைப்பதற்கும் டாலர்கள் வாரி இறைக்கப்பட்டன. இதற்கிடையில் போட்டி ஏகாதிபத்தியங்களான ஜெர்மனி மற்றும் ஜப்பானிடமிருந்து உற்பத்தி பொருட்களை டாலருக்கு ஈடாக இறக்குமதி செய்தது, அவற்றுக்கு தேவையான டாலர்களையும் கணக்கில்லாமல் அச்சடித்து குவித்தது. இந்த நிலை தொடர்ந்து அமெரிக்காவுக்கு வெளியே (அதாவது ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி போன்ற போட்டி ஏகாதிபத்தியங்களின் கைகளில்) "யூரோடாலர்கள்" எனும் வடிவில் டாலர் குவியலுக்கு இட்டுச் சென்றது. அமெரிக்காவின் தங்க இருப்பை விட 6 மடங்கு அதிக மதிப்பிலான டாலர் வெளியில் புழங்கியது. நீர்குமிழிப் போல ஊதிப் பெருக்கப்பட்ட டாலர் பொருளாதாரம் வெடித்து சிதறியது.
டாலரை தங்கமாக மாற்ற முடியாத நிலையும் அமெரிக்காவின் பொருளாதாரம் இராணுவ பொருளாதாரமாக கட்டியமைக்கப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் சேர்ந்து 1970களில் வரலாற்றிலேயே மிக மோசமான பணவீக்கத்தை ஏற்படுத்தியது. ஜெர்மனியின் மார்க் மற்றும் ஜப்பானின் யென் நாணயங்கள் டாலரின் ஆதிக்கத்தை சரிவடைய செய்ததோடு டாலரின் சிறப்புரிமையை பலவீனமடைய செய்தன. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கிடையிலும் முரண்பாடுகள் கூர்மையடைந்தன. இதையொட்டி பிரெட்டன் வுட்ஸ் செலாவணி அமைப்பு வீழ்ச்சியடைந்தது. டாலரின் மதிப்பும் வீழ்ச்சியடைந்தது. பணவீக்கத்தை சமாளிக்க தங்கத்துக்கு ஈடாக டாலர் மாற்றப்படும் முறையை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொண்டது. பல்வேறு பாசிச சட்டங்களையும் திணித்தது. 1971ல், அமெரிக்க டாலர் தங்கத்துடனான அனைத்து இணைப்புகளையும் இழந்தது. இதிலிருந்து யூரோடாலர் சந்தையும், பெட்ரோ டாலர் சந்தையும் தோன்றின.
எண்ணெய் நெருக்கடியும் டாலரின் வீழ்ச்சி மற்றும் மீட்டமைப்பும்
1970களில் சர்வதேச அளவில் உற்பத்தியிலும் போக்குவரத்திலும் எண்ணெய் பயன்பாடுகள் அதிகரித்தன. எண்ணெய் நுகர்வும் அதிகரித்தது. உலக என்ணெய் பயன்பாட்டில் 30% சதவிகிதத்தை அமெரிக்காவே நுகர்ந்தது. இது எண்ணெய் விலை உயர்வுக்கும் பிற நாடுகள் எண்ணெய் பயன்படுத்துவதையும் நெருக்கடிக்குள்ளாக்கியது.
மறுபுறம் அதே காலகட்டத்தில், அதாவது 1973ல் பெட்ரோலியத்தை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் 77 நாடுகள் இணைந்து ஒபெக் (OPEC -Organisation of Petroleum Exporting Committee) கூட்டமைப்பை உருவாக்கின. இந்த ஒபெக் நாடுகள் மீது சோவியத் சமூக ஏகாதிபத்தியம் இராணுவ உதவிகள், தொழில்நுட்ப உதவிகள், சந்தைகளை உருவாக்கிக் கொடுத்தல் மூலம் அரசியல் மேலாதிக்கத்தை செலுத்தி வந்தது. ஆயுத தளவாடங்களை எண்ணெய்க்கு பதிலாக விற்று எண்ணெய் வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது. சோவியத் சமூக ஏகாதிபத்தியம் அந்தந்த நாடுகளின் நாணயங்கள் மூலமாகவே வர்த்தக உறவுகளை மேற்கொண்டது. காலனிய நாடுகளிடமிருந்து உற்பத்தி சரக்குகளை மலிவான விலைக்கு அதுவும் கடனாக பெற்று பிற காலனிய நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபமடித்தது.
பல்வேறு பாசிச சுரண்டல் வடிவங்கள், இராணுவ தலையீடுகள், ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் மூலமாக தனது நிதிமூலதனத்தை ஒபெக் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது அமெரிக்கா. பெரும் எண்ணெய் நிறுவனங்களின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தியது. ஒபெக் அமைப்பை சார்ந்த தரகு வர்க்க அரசுகளை எளிதாக இணங்க வைத்தது. எண்ணெய் வளங்களை டாலராக நிலைநிறுத்த பெட்ரோ டாலர் ஒப்பந்தங்களை ஒபெக் நாடுகள் உள்ளிட்ட பல்வேறு புதிய காலனிய நாடுகளுடனும் மேற்கொண்டது. அமெரிக்காவின் ஆயுத தளவாடங்களையும் விற்பனை செய்யவும் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இது ஏகபோக நிதி மூலதன கும்பல்களுக்கும் அமெரிக்க இராணுவ தொழில் கூட்டிற்கும் மிகை இலாபங்களை குவிக்க வல்லதாக மாற்றியது. இதன் காரணமாக அமெரிக்க வங்கிகளில் ஏராளமான பெட்ரோ டாலர்கள் குவிந்தன. இது டாலரின் வீழ்ச்சியை மீட்டமைக்கவும் அதனை பரிவர்த்தனை நாணயமாக சர்வதேச அளவில் முன்னிலைக்கு கொண்டு வரவும் வழிகோலியது.
அடுத்த 10 ஆண்டில் அதாவது 1983ல் ஏற்பட்ட சப் பிரைம் நெருக்கடியில் அமெரிக்காவும் சிக்கித் தவித்தது. நெருக்கடி காரணமாக அதன் நிதிமூலதன ஆதிக்கம் தனது பங்கை இழந்திருந்தது. 1960இல் மொத்த அந்நிய முதலீடு சொத்து மதிப்பில் 47% சதவீதமாக இருந்த அமெரிக்காவின் பங்கு 1989இல் 28% சதவீதமாக குறைந்துவிட்டது. அதேசமயம் ஜப்பான், ஜெர்மனி ஆகிய இரண்டின் பங்கு 1960இல் 1.6% சதவீதமாக இருந்தது. 1989 இல் அது 20.6% சதவீதமாக உயர்ந்து விட்டது. இக்காலக் கட்டத்தில் ஜப்பானுடைய நேரடி மூலதனம் அமெரிக்கா ஐரோப்பாவிலும் கூட குவிக்கப்பட்டது. அமெரிக்கா அதன் நாணயமான டாலர் ஆதிக்கத்திலும் வீழ்ச்சியை சந்தித்திருந்தது.
யூரோவின் அறிமுகமும் டாலரின் மேலாதிக்க சரிவும்
1990களில் பரவலாக்கப்பட்ட உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகளினால் ஏகாதிபத்தியங்களின் பொருளாதார நெருக்கடி காலனிய நாடுகளின் தலையில் பெருமளவில் சுமத்தப்பட்டன. அவை ஏகாதிபத்திய நாடுகள் மந்த நிலையில் இருந்து சற்றே விடுபடுவதற்கு வழிவகுத்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்பட்ட மறுபங்கீட்டுப் போட்டி முரண்பாடுகளின் காரணமாக அவை கூட்டாக சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை (European Union) உருவாக்கின. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் இது நடந்தேறியது. இந்த ஒருங்கிணைப்பு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தத்தின் (Maastricht Treaty) மூலம் சாத்தியமானது. இந்த ஒப்பந்தமே ஐரோப்பிய பொருளாதார மற்றும் நாணய ஒன்றியம் (Economic and Monetary Union -EMU) உருவாவதற்கும், அதைத் தொடர்ந்து 1999ல் யூரோ நாணயம் அறிமுகத்திற்கும் வழிவகுத்தது.
அமெரிக்காவுக்கு வெளியே உள்ள வங்கிகளில் குறிப்பாக ஐரோப்பிய வங்கிகளில் டாலரில் பராமரிக்கப்பட்ட வைப்புகள், கடன்கள் யூரோடாலர் என்று அழைக்கப்பட்டன. இதை வாங்கவும் விற்கவும் பயன்படுத்தப்பட்ட சர்வதேச நிதி சந்தை யூரோடாலர் சந்தையாக உருவெடுத்தது. வட்டி விகிதங்களில் அமெரிக்க வங்கிகளை விட அதிக நெகிழ்வுத்தன்மையை இச்சந்தை வழங்கியதால் இது எளிமையாக வளர்ந்தது. இந்த சந்தையிலிருந்தே ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ நாணயம் தோன்றியது. யூரோடாலர்கள் மறைந்து யூரோவாக மாறியது. ஐரோப்பிய நாடுகள் தங்களது சொந்த நாணயங்களை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி மிகமிக குறைவான பரிமாற்றத் தொகையுடனும் யூரோவாக மாற்றிக் கொள்ள முடிந்தது. ஐரோப்பிய நாடுகளின் நிதிச்சந்தை ஒருங்கிணைக்கப்பட்டு யூரோ சந்தையாக மாறியது. இது ஐ.எம்.எஃப்.இன் இருப்பு நாணயமாகவும் உலக நாடுகளின் ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக நாணயமாகவும் மாறத் துவங்கியது.
ஏற்கெனவே கையிருப்பாக வைக்கப்பட்ட யூரோடாலர் சந்தை யூரோ சந்தையாக மாறியதால் அது அமெரிக்காவின் டாலர் புழக்கத்திற்கு குறிப்பிட்ட அளவிலான சேதாரத்தை ஏற்படுத்தியது. யூரோவின் வருகையால் பலவீனமடைந்திருந்த டாலருக்கு சந்தை விரிவாக்கம் அத்திவாசியமாகியது. அமெரிக்க நிதிமூலதன கோரபற்களுக்கு தடையற்ற சந்தை தேவைப்பட்டது. மறுபக்கம், மின்னணு கருவிகள், கம்ப்யூட்டர் தொழில்துறை உற்பத்தி, தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றின் மூலமாக பொருளாதார ரீதியாக மீண்டெழுந்தது அமெரிக்கா. இருப்பினும் செமி கண்டக்டர் போன்ற பிற மின்னணுப் பொருட்களுக்கு ஐரோப்பா ஜப்பானை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் அதை எதிர்கொள்வதற்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்கா, உலகமய தாராளமய தனியார்மயக் கொள்கைகளின் மூலம் பல்வேறு நாடுகளின் தடைகளை உடைத்தெறிந்து நிதிமூலதன ஏற்றுமதியை பரவலாக்கியது. இது டாலரின் விரிவாக்கத்திற்கும் பயன்பாட்டிற்கும் மென்மேலும் கதவுகளை திறந்துவிட்டு அதன் எல்லையை விரிவுபடுத்தியது. இருப்பினும் ஒவ்வொரு பத்தாண்டும் ஏற்பட்ட நெருக்கடி குறிப்பாக டாட்காம் குமிழி, சப் பிரைம் குமிழி போன்ற நெருக்கடிகளினால் ஏகாதிபத்திய அமைப்புகளின் வளர்ச்சி விகிதங்கள் சீராக இல்லாமல் திண்டாடின. அவை டாலர், யூரோ, யென், மார்க் போன்ற சர்வதேச அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட அனைத்து நாணயங்களின் இருப்புத் தன்மையையும் அவ்வபோது அசைத்துப் பார்த்தன.
மறு பங்கீட்டுப் போட்டியில் முன்னுக்கு வந்த ரஷ்ய - சீன முகாமும் டாலர் மேலாதிக்க சரிவும்
ரஷ்யாவில் புதிதாக கண்டெடுக்கப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள்; மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள்; ரஷ்யாவின் போர்த்தளவாட விற்பனையில் ஏற்றம் ஆகியவற்றின் காரணமாக ஒருபுறம் ரஷ்ய ஏகாதிபத்தியமும் - சீனாவின் ஜவுளித் துறையின் வளர்ச்சி; புதிய புதிய தொழில்நுட்பங்களுக்கான உபகரணங்களின் உற்பத்தி; ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடன்கள் மற்றும் நிதிமூலதன ஏற்றுமதி மூலமாக மறுபக்கம் சீன ஏகாதிபத்தியமும் மறுபங்கீட்டு போட்டியில் முன்னணிக்கு வர ஆரம்பித்தன. 2007ல் உருவாகிய ஷாங்காய் கூட்டமைப்பு இந்த முகாமுக்கு பலத்தைச் சேர்த்தது. இடைப்பட்ட 20 ஆண்டுகளாக அமெரிக்க - மேற்கு ஐரோப்பிய -ஜப்பான் ஏகாதிபத்தியங்கள் உலகை கூறுப்போட்டு வந்த நிலையில் ரஷ்ய-சீன முகாமின் எழுச்சி அமெரிக்க மற்றும் டாலரின் உலக மேலாதிக்கத்திற்கு சவாலாக மாறியது.
2008ல் அமெரிக்காவில் தோன்றிய மிகை உற்பத்தி நெருக்கடியானது ஐரோப்பிய நாடுகளையும் பாதித்து உலகளாவிய பொது நெருக்கடியாக உருவெடுத்தது. அதை தொடர்ந்து 2011 ம் ஆண்டில் டாலர் நாணயமும் வளர்ச்சியின்றி தேக்கநிலையை அடைந்தது.
இந்த சமயத்தில் வளர்ந்து வந்த ஷாங்காய் அணி டாலருக்கு மாற்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட துவங்கியது. 2015ல் சீனா சி.ஐ.பி.எஸ் (CIPS - China's Cross Border Interbank Payment System) என்ற நாணய பரிமாற்ற அமைப்பை உருவாக்கியது. இதன் மூலமாக யுவானில் வர்த்தகம் செய்ய முன்வரும் நாடுகளை ஒருங்கிணைக்க முயற்சித்தது. ரஷ்யாவும் அதேபோல, ரூபிளில் வர்த்தகம் செய்ய முன்வரும் நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் எஸ்.பி.எஃப்.எஸ். (SPFS - System for Transfer of Financial Messages) எனும் நாணய பரிமாற்ற தகவல் அமைப்பை உருவாக்கியது. இவை டாலர் மேலாதிக்கம் செலுத்தும் ஸ்விஃப்ட்-க்கு (SWIFT) போட்டியாக உருவாக்கப்பட்டன.
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறி அந்நாட்டுடன் டாலர் அல்லாத வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக 2019- ல் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் இணைந்து இன்ஸ்டெக்ஸ் (INSTEX - Instrument in Support of Trade Exchanges) என்ற அமைப்பையும் உருவாக்கின. இந்த அமைப்புடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபடவிருப்பதாக பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளும் முன்னுக்கு வந்தன.
ரஷ்யா, டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் தனது கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய், எரிவாயுவை ஐரோப்பாவுடனான வர்த்தகத்தில் ரூபிள் பயன்பாட்டை கட்டாயமாக்கியுள்ளது. தனது ஒட்டு மொத்த சர்வதேச வர்த்தகத்தில் (சீனாவுடனான வர்த்தகத்தை சேர்க்காமலேயே) சுமார் 25 சதவிகித வர்த்தகத்தை ரூபிள் மூலம் செய்து வருகிறது ரஷ்யா. உக்ரேன் போரை காரணம் காட்டி ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அதாவது ரஷ்யாவிடமிருந்த டாலர் இருப்புத் தொகை முடக்கப்பட்டது. இதன் காரணமாக, ரஷ்யாவுடன் எண்ணெய் எரிவாயு வர்த்தகம் செய்ய முன்வந்த நாடுகளுடன் ரஷ்யா அந்தந்த நாடுகளின் சொந்த நாணயத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டது. இந்தியாவுடன் கூட அத்தைகய வர்த்தகத்தில் ஈடுபட்டது. இந்தியாவுக்கு அமெரிக்காவைவிட குறைந்த விலையில் கச்சா எண்ணெய் விநியோகித்தது. அதுவும் இந்திய ரூபாயில் விநியோகிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டது.
சீனா, பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் மூலம் 385 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களை யுவானாக மாற்றியுள்ளது. இது யுவான் (ரென்மென்பி) நாணயத்தின் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. சீனாவும், சவூதி அரேபியாவும் சுமார் 7 பில்லியன் டாலர் மதிப்பிற்கு நாணய மாற்று ஒப்பந்தம் மேற்கொண்டு பெட்ரோ டாலர் ஆதிக்கத்துக்கு அடியை கொடுத்துள்ளன.
கச்சா எண்ணெய் பொருட்கள் பெரும்பான்மையாக டாலருக்கு மட்டும் விற்கப்படுகிற ஏற்பாடுகள்; புதிய காலனிய நாடுகள் மீதான அரசியல் - இராணுவ மேலாதிக்கம் இவற்றைக் கொண்டு டாலரை உலக மேலாதிக்க கருவியாக அமெரிக்கா பாதுகாத்து வந்தது. ஆனால், தற்போது டாலரின் மேலாதிக்கம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் அச்சடிக்கப்பட்ட மொத்த டாலரில் ஏறத்தாழ 85 சதவிகித டாலர்கள் அமெரிக்காவுக்கு வெளியேதான் சுற்றிக்கொண்டுள்ளன. இதில் வெறும் 5 சதவிகித டாலரை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலே அதன் பொருளாதாரம் நிலைகுலையும் சூழல் உள்ளது.
ரஷ்யாவும் சீனாவும் இருதரப்பு வர்த்தகத்தில் டாலர்களின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்து வருகின்றன. 2015-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் 45% சதவிகிதம் வரை டாலர் பயன்படுத்தப்பட்டது. இந்நிலை அதன்பிறகு மாறியது. 2019ல் 25.5% சதவிகிதமாகவும், 2021-ல் 19.5% சதவிகிதமாகவும் 2023ல் இன்னும் குறைந்து வெறும் 17% சதவிகிதம் என்ற அளவிற்கு சுருங்கியது.
அதே காலகட்டத்தில் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் யூரோவின் பங்கு படிப்படியாக அதிகரித்து 15% சதவிகிதத்தை எட்டியுள்ளது. இவ்விரு நாடுகளும் தங்களது சொந்த நாணயங்களை பயன்படுத்தி வர்த்தகம் செய்யும் விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் விளைவாக அமெரிக்க டாலர் குறியீடு, 2023 மார்ச்சில் 9% சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. அதன் பிறகு பெரிய அளவில் டாலரின் மதிப்பு உயரவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
2024 ஜூனில் அமெரிக்காவுடனான 50 ஆண்டு கால பெட்ரோ டாலர் ஒப்பந்தத்தை சவுதி அரேபியா முடிவுக்குக் கொண்டு வந்தது. அந்தந்த நாட்டின் நாணயங்களிலேயே வர்த்தகம் செய்வதாக அறிவித்தது. 2024-ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்தே ஆசிய நாடுகள் பல தங்களுடைய சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்யும் முடிவுக்கு வந்தன. இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்துடன் ரூபாயில் வர்த்தகத்தைத் தொடங்க முயன்றது. இந்தியாவுடன் ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொள்ள வங்கதேசம், இலங்கை மற்றும் வளைகுடா நாடுகள் சில விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய அரசு செய்தி வெளியிட்டது.
உலகின் பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தையும் டாலரிலேயே செய்து கொண்டு அவற்றின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தி வந்தது அமெரிக்கா. தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. யூரோ அறிமுகத்திற்கு பிறகும் ஷாங்காய் அணியின் எழுச்சிக்குப் பிறகுமான இந்த இருபதாண்டுகளில் அமெரிக்க டாலரின் உலகளாவிய கையிருப்பு பங்கு 12% சதவிகிதம் அளவு குறைந்துள்ளது. 2000ல் 71% ஆக இருந்த டாலர் கையிருப்பு 2024ல் 59% ஆக சரிந்துள்ளது. சீனாவின் யுவான் நாணய உலகளாவிய கையிருப்பு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 3 மடங்கு உயர்ந்துள்ளது. இது டாலர் வர்த்தகம் குறையத் துவங்கி சீனாவின் ரென்மென்பி (யுவான்) படிப்படியாக வளர்ந்து வருவதை எடுத்துக் காட்டுகிறது. இதனால் டாலரின் இருப்பு மெல்ல குறையத் துவங்கியுள்ளது.
டாலர் ஆதிக்கத்துக்கு எதிரான உலகளாவிய முனகல்ளும் டிரம்ப்பின் சவடாலும்
அமெரிக்கா- நேட்டோ அணியைச் சேர்ந்த ஏகாதிபத்தியங்கள் அவ்வப்போது தங்களது பேரத்திற்கு அடிபணியாத நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இதனால், அந்த நாடுகளிடையேயும் குறிப்பாக தெற்குலக நாடகளுக்கிடையே டாலரின் ஆதிக்கத்தினை குறைக்க வேண்டும் என்ற கருத்துகள் அவ்வபோது உருவாகி வருகின்றன. இந்த முனகல்களையும் டாலரின் மீதான அவற்றின் வெறுப்பையும் ரஷ்ய-சீன முகாம் தனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கிறது. இந்நிலையில்தான், 2024 அக்டோபரில் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற 16வது பிரிக்ஸ் மாநாட்டில் டாலருக்கு மாற்றாக வேறு நாணய மாற்று முறைமையும் அதன் ஆதிக்கத்தை குறைக்க பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவும் பரிந்துரைகளும் முன் வைக்கப்பட்டன.
ஒருபுறம் டாலரின் மேலாதிக்கம் சரிய துவங்கியுள்ளதும் மறுபுறம் பிரிக்ஸ் நாடுகள் சொந்த நாணயத்தின் மூலம் வர்த்தகம் செய்வதும், புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கும் முயற்சிகளும் அந்தந்த நாணயங்களின் கையிருப்பை அதிகமாக்கி விடும் சூழல் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு விடப்பட்ட சவாலாகவே அமெரிக்கா கருதுகிறது. இதன் காரணமாகத்தான் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்பிருந்தே பிரிக்ஸ் கூட்டமைப்பை எச்சரித்து வருகிறார். வரிவதிப்பு உள்ளிட்ட சவடால் மிரட்டல்கள் குறித்து நாம் கட்டுரையின் துவக்கத்திலேயே பார்த்தோம்.
பிரிக்ஸ் கூட்டமைப்பால் டாலர் ஆதிக்கத்தை வீழ்த்த முடியுமா?
டாலர் மேலாதிக்கத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என பிரிக்ஸ் கூட்டமைப்பு கருதினாலும், அதற்கு சவால் விடும் அளவுக்கு மாற்று நாணய நிதிக் கட்டமைப்பு உருவாக்கும் ஒத்தக் கருத்தும் திட்டமும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே திடப்படவில்லை. அவை தங்களது சொந்த நாணயத்தின் மூலமாக வர்த்தகம் செய்யவே ஆர்வம் காட்டுகின்றன.
ட்ரம்ப் எச்சிரித்த பின்பு மோடி அரசு பிரிக்ஸ் கூட்டமைப்பில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களில் இருந்து பின்வாங்கியுள்ளது. தங்களுக்கு டாலருக்கு போட்டியாக பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கும் திட்டமில்லை என டிரம்பின் பாதங்களில் சரணடைந்தது. ஊசலாட்ட நிலையில் உள்ள பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளின் தரகு வர்க்க அரசுகளின் நிலை இவ்வாறே உள்ளது. ஏனெனில், அவற்றின் கடன்கள் பெரும்பாலானவை டாலரிலேயே உள்ளன. தற்போதும் உலகளவில் நடக்கும் கடன் பரிவர்த்தனைகளில் 64% சதவிகிதம் அளவுக்கு டாலர் வடிவிலேயே உள்ளன. வர்த்தகத்தில் டாலருக்கு பதிலாக வேற்று நாணயத்தை பயன்படுத்தினால், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பாதிக்கப்படும் எனறு அஞ்சுகின்றன. இதனால் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுவதோடு, அந்த நாடுகள் அமெரிக்காவுடன் போட்டுக்கொண்டுள்ள அடிமை ஒப்பந்தங்களின் அடிப்படையில் கடன் செலுத்த முடியாமல் மென்மேலும் கடன் சுமை அதிகரித்து திவாலாகும் நிலை ஏற்படும். இதன் காரணமாகவே புதிய காலனிய நாடுகள் உள்பட உலகின் பல நாடுகள் - ஏன் நெருக்கடி நிலையில் உள்ள ஏகாதிபத்திய நாடுகள் கூட டாலரை தாங்கிப் பிடிக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இவை போன்ற நிலைமைகளே டாலர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் இருப்பதற்கு காரணமாக உள்ளன.
அதேசமயம் எழுச்சி பெற்று வரும் சீன-ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியையும் அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்க கனவுக்கு தலைவலியாக மாறி வருவதையும் மறுக்க முடியாது. மறுபுறம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையிலேயே தற்போது முரண்பாடுகள் தீவிரம் பெற்று வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.
டாலர் ஆதிக்கத்தை வீழ்த்த ரஷ்ய-சீன ஏகாதிபத்திய முகாம் உருவாக்கி வரும் வாய்ப்புகள்
சீனா 2016 முதல் ஐ.எம்.எப்.ன் சிறப்பு வரைதல் உரிமை (SDR - Special Drawing Rights) பெற்ற நாணயங்களுள் ஒன்றாக தன்னுடைய நாணயத்தை மாற்றியுள்ளது. நீண்டகாலமாக இடம்பெற்று வரும் ஜப்பானிய யென், பிரிட்டனின் ஸ்டெர்லிங் பவுண்ட் நாணயங்களின் இருப்பை 10 ஆண்டுகளுக்குள்ளாகவே பின்னுக்குத் தள்ளி டாலர் மற்றும் யூரோவுக்கு அடுத்த இடத்தில் இடம் பெற்றுள்ளது. ஐ.எம்.எப்.ன் இந்த SDR கூடை இருப்பில் 12% சதவிகிதத்திற்கும் மேலான இருப்பை தக்க வைத்து ஐரோப்பிய நாடுகளின் ஒட்டுமொத்த உருவமாக விளங்கும் யூரோவுக்கு போட்டியாக வளர்ந்துள்ளது.
இந்த வளர்ச்சியை அது கீழ்க்கண்ட வழிகளில் சாத்தியப்படுத்தியது.
- உள்நாட்டு உற்பத்தியில் மிகமிக குறைந்த விலையில் மனிதவளத்தை ஈடுபடுத்தி உழைப்புச் சுரண்டலில் ஈடுபட்டது.
- உற்பத்தியின் உபரியை வங்கி மூலதனத்துடன் இணைத்து ஏகபோகத்தை உருவாக்கியது.
- ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிதிமூலதன ஏற்றுமதி. பல்வேறு கடன் பத்திரங்கள் மூலமும், சாஃப்ட் லோன் எனப்படும் கடுவட்டி மூலதன கடன்கள் மூலமாகவும் அந்த நாடுகளை தனது கடன் பொறிக்குள் சிக்க வைத்தது.
- புதிய பட்டுச் சாலைத் திட்டம் - பெல்ட் அண்ட் ரோடு போன்ற உள்கட்டைமைப்பு திட்டங்களின் மூலம் தனக்கான சந்தைகளை விரிவுபடுத்திக் கொண்டது.
- இன்றைய அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு இன்றியமையாத கனிமங்களாக விளங்கும் லித்தியம், கோபால்ட், மாங்கனீசு, தோரியம், அருமண் தனிமங்கள் உள்ளிட்ட ஏராளமான கனிம வளங்களை ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சூறையாட பல்வேறு அடிமை ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வருவது.
- கண்டெடுக்கப்பட்ட இத்தகைய அதிமுக்கிய கனிமங்களில் 65% சதவிகிதத்திற்கும் மேலானவற்றை தன்வசம் கையகப்படுத்திக் கொண்டது. அந்த நாடுகளின் மீது அரசியல் மேலாதிக்கத்தையும் செலுத்தி மறுபங்கீட்டுப் போட்டியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
- இவற்றின் மூலம், ஏஐ (Artificial Intelligence), 6ஜி, 3டி பிரிண்டிங், செமி கண்டக்டர் லித்தோகிராஃபி போன்ற உயரிய தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன உற்பத்தி துறைகளில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிப்பது.
- இவற்றை மலிவான உபகரணங்கள் மூலமே சாத்தியமாக்கும் தொழில்நுட்பங்களை மேற்கொள்வது. (உதாரணத்திற்கு சமீபத்தில் பேசுபொருளாகிய டீப்சீக் ஏஐ உருவாக்கம். ஏஐ உருவாக்கத்தை பரந்த அளவில் அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் 16nm க்கும் துல்லியமான சிப்களை கொண்டே சாத்தியப்படுத்த இயலும் என்ற நிலையை உடைத்து நொறுக்கியது. அவற்றின் பயன்பாட்டை சொற்பமாக்கி தான் உற்பத்தி செய்யும் மலிவான செமிகண்டக்டர் சிப்களை கொண்டே மேக கணிம (Cloud storage) முறையில் அதை சாத்தியமாக்கி - அதுவும் அனைவரும் எளிதாக பயன்படுத்தும் திறந்த நிலை ஏ.ஐ. ஆக உருவாக்கி- அமெரிக்காவையும் டிரம்பையும் வாய் பிளக்க செய்தது.
- எண்ணெய் எரிவாயு சார்பு நிலையை குறைக்கவும் அதன் மூலம் டாலரின் சார்பு நிலையை குறைக்கவும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் உலக அளவில் கோலோச்சுகிறது.
- செயற்கை சூரியனை உருவாக்கி ஆற்றல்துறையில் அடுத்தக் கட்ட பாய்ச்சலிலும் ஈடுபட்டு வருகிறது.
- அமெரிக்கா எட்ட முடியாத தூரத்தில் கூகுள் சூப்பர் கம்ப்யூட்டரை விட 10லட்சம் மடங்கு வேகமான செயல்பாட்டுத் திறன் கொண்ட குவாண்டம் கணிணியை உருவாக்கி மிரட்டியுள்ளது.
- இன்டெர்நெட் ஆப் திங்ஸ் (Internet of Things) எனும் நவீன சேவைத் துறையில் அமேசான் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கே சவால் விடும் அளவுக்கு சீனாவின் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் கிக் (gig) தொழிலில் ஈடுபடும் உலகளாவிய தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டி கொழுத்து வருகிறது.
- அதி நவீன ஹைபர்சானிக் ஏவுகணைகள் உள்ளிட்ட போர்த் தளவாடங்களை உற்பத்தி செய்வதோடு அவற்றை 6ஜி போன்ற தொழில்நுட்பங்களுடன் பிணைத்து அமெரிக்காவின் இராணுவ தளவாடங்களுக்கே சவால் விடும் அளவிற்கு ரஷ்யாவுடன் சேர்ந்து கூட்டாக முன்னேறியுள்ளது. அந்த தளவாடங்களை ஈரான் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பதிலிப் போரில் ஈடுபட்டு வருகிறது.
மறுபுறம் ரஷ்யா,
- எண்ணெய் எரிவாயு வளங்கள் உள்ள ஒபெக் நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
- எல்.என்.ஜி. போன்ற இயற்கை எரிவாயுக்களை கடல் கடந்து குழாய்கள் அமைத்து விநியோகித்து வருகிறது. அத்துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வெகுவாக குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா போன்ற ஊசலாட்ட நிலையில் உள்ள தரகுவர்க்க அரசுகளை பயன்படுத்தி ரூபிள் நாணய வர்த்தகத்தை வளர்த்து வருகிறது.
- உக்ரைனில் உள்ள எண்ணெய் எரிவாயு வளங்களுக்காகவும், அதிநவீன தொழில்நுட்பங்களுக்குத் தேவையான கனிம வளங்களுக்காகவும் அந்நாட்டின் மீது 3 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தி வருகிறது. (இது அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையே முரண்பாடுகள் தீவிரமடைந்து ரஷ்யாவுடன் உக்ரைனை பங்குப் போட்டுக் கொள்ளும் நிலைக்கு அமெரிக்காவை இட்டுச் சென்றுள்ளது. இந்த மறுபங்கீட்டுப் போட்டியில் இருந்து ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களை தனிமைப்படுத்த அமெரிக்காவும் ரஷ்யாவும் கை குலுக்கி வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது).
- இவ்வாறு சீன-ரஷ்ய முகாம் அமெரிக்காவுக்கும் டாலர் மேலாதிக்கத்திற்கும் சவால் விடும் அளவுக்கு உலக மறுபங்கீட்டுப் போட்டியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
ஊகவாணிபச் சந்தையின் கருப்புச் சங்கிலியாக கிரிப்டோ கரன்சி
கிரிப்டோ கரன்சி (Crypto currency) என்பது டிஜிட்டல் நாணயமாகும். இது ஏகாதிபத்திய நிதிமூலதன கும்பல் மற்றும் பெரும் கார்ப்பரேட் ஊகவாணிப சூதாடிகளால் உருவாக்கப்பட்ட நாணய மாற்று முறை. இதில் சீனாவே இதுநாள் வரை உலக அளவில் கோலோச்சி வருகிறது. அது பிட்காயின் மைனிங், டிஜிட்டல் யுவான் போன்ற கிரிப்டோ கரன்சிகளை உருவாக்கி உலாவ விட்டன. இவற்றை உருவாக்குவதற்கும் சிப்கள், மேக கணிம (Cloud Computing) தொழில்நுட்பம் ஆகியவற்றின் அசாத்திய வளர்ச்சி தேவை. அதனால்தான் இது நாள் வரை இத்துறையில் சீனா கோலோச்சி வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இதற்கு சீன ஏகாதிபத்தியம் கட்டுப்பாடுகளை விதித்து முறைப்படுத்த துவங்கியுள்ளது.
ஆனால் மறுபக்கம், அமெரிக்கா தனது டாலருக்கு பாதிப்பு வரலாம் என்ற கண்ணோட்டத்தில் இருந்து பெருமளவில் இதில் ஈடுபடவில்லை. இருப்பினும், எத்தீரியம், காயின்பேஸ், கரக்கென், பினான்ஸ் யு.எஸ் போன்ற கிரிப்டோ நாணயங்கள் அமெரிக்க நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டன. இதனை முந்தைய டிரம்ப் ஆட்சியும் சரி, பைடன் ஆட்சியும் சரி தடை செய்யவும் அவற்றை ஒழுங்குப்படுத்தி கண்காணிக்கவுமே அக்கறை காட்டின. இதனால் இந்த துறையில் அமெரிக்கா சீனாவை விட பின்னுக்கே இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த ட்ரம்ப் மார்ச் 8 அன்று நடைபெற்ற கிரிப்டோ மாநாட்டில், கிரிப்டோ நாணயங்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை இனி அமெரிக்கா மேற்கொள்ளும் என்று அறிவிப்பு விடுத்துள்ளார்.
இந்த கிரிப்டோ கரன்சி சந்தையானது உற்பத்தியில் இருந்து மூலதனத்தை முற்றிலும் துண்டித்து வைக்கும் ஏற்பாடாகும். மிகை லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட பங்குச் சந்தை சூதாடிகளின் நலன்களுக்கே சேவை செய்யும் ஒன்று. எனவே இதை நம்பி பொருளாதாரத்தையும் நாணயத்தையும் உருவாக்கும் முயற்சிகள் கேடான விளைவையே ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இது எப்போது வேண்டுமானலும் வெடித்து சிதறும் நம்பகமற்ற மாய பொருளாதாரமாகும். சீனாவுக்கு போட்டியாக இதை ஊக்குவிக்கும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை டாலரின் ஆதிக்கத்திற்கு தனக்குத் தானே சவக்குழி வெட்டிக்கொள்ளும் நடவடிக்கையாகும். கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் நாணய மாற்று விகிதங்கள் மற்றும் செலவினங்கள் குறைவாக இருப்பதன் காரணமாக பிற நாடுகள் அதை வாங்கி சேமிக்கத் துவங்கினால் டாலர் இருப்பின் தேவை குறையும். இது டாலரின் ரிசர்வ் நாணய அந்தஸ்த்தையும் கேள்விக்குள்ளாக்கும்.
டாலரின் ஆதிக்கத்தை வீழ்த்த சீனாவுக்கு இன்னும் காலம் எடுக்கும்
சர்வதேச அளவில் நாணய சந்தையில் மேலாதிக்கம் செலுத்தி வரும் டாலர் அவ்வபோது வீழ்ச்சியடைந்திருந்தாலும் மீண்டும் தன்னை மீட்டமைத்துக் கொண்டு தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இன்று பல்வேறு முனைகளில் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறது என்பதை மேலே பார்த்தோம். ரஷ்ய சீன முகாம் அரசியல்-பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பெருமளவில் செல்வாக்கு பெற்று வந்தாலும், டாலரின் ஆதிக்கத்தை அவற்றால் இன்றுவரை ஒட்டுமொத்தமாக சரிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஏற்பாட்டாலோ அல்லது சீனாவின் வேறு வகையிலான மறுபங்கீட்டுப் போட்டியாலோ அல்லது ஐரோப்பிய நாடுகளின் முரண்பாடுகளின் காரணமாகவோ உடனடியாக டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்ட வர இயலாது. அவற்றின் நாணய பரிமாற்றத்திற்கான கட்டமைப்பு டாலருக்கு அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது போல வலுவாக இன்னும் அமைக்கப்படவில்லை என்பதே ஆகும். அதற்கான முயற்சியில் ரஷ்யாவும் சீனாவும் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளன. பிரிக்ஸ் பே, எம்-பிரிட்ஜ் போன்ற கட்டமைப்புகளை உருவாக்கி வலுப்படுத்த அதன் எல்லைகளை விரிவாக்கத் துவங்கியுள்ளதை நாம் பார்க்க முடிகிறது. அதனால் வரும் காலங்களில் டாலரின் ஆதிக்கம் மெல்லச் சாகும். ஏகாதிபத்திய முரண்பாடுகள் கூர்மையடைய கூர்மையடைய இது நடந்தேறும். அதற்கு இன்னும் சில பத்தாண்டுகள் ஆகலாம். அல்லது மூன்றாம் உலகப் போர் மூண்டால் அதில் அமெரிக்கா என்ன போர்த்தந்திரத்தை கடைபிடிக்கிறது என்பதை பொறுத்து அதன் ஆதிக்க நிலையில் மாற்றம் ஏற்படும். நாம் இன்றைய நிலையில் அதை ஆருடம் சொல்ல முடியாது.
நிதி மூலதன கும்பலுக்கு சவக்குழி வெட்டுவோம்
டாலரின் ஆதிக்க வீழ்ச்சியானது, அமெரிக்காவின் ஒற்றைத் துருவ உலக ஒழுங்கமைப்பிற்கு வீழ்ச்சியை உண்டாக்கி சீனா - ரஷ்யா தலைமையில் பல்துருவ உலக ஒழுங்கமைப்பிற்கு வழிவகுக்கும்; அது உலகில் அமைதியை உண்டாக்கும், ஜனநாயகத்தை பரவலாக்கும் என்று சில "நவயுக காவுத்ஸ்கியவாதிகள்" புளகாங்கிதம் அடைகின்றனர். அவர்கள் சமத்துவம் சகோதரத்துவம் என்று பேசித் திரியும் நவீன ஜனநாயக வாதிகள்(!?) உண்மையில் இவர்கள் நவீன குருச்சேவ்கள் - டெங்கின் வாரிசுகள். சிறிது கூட வர்க்க கண்ணோட்டமின்றி சீன-ரஷ்யா முகாமிற்கு பாத பூஜை செய்யும் அடிமைகளாக மாறிவிட்டனர்.
அமெரிக்க டாலராக இருந்தாலும், ஐரோப்பிய யூரோவாக இருந்தாலும் சரி, ஜப்பானின் யென்னாக இருந்தாலும் சரி, சீனாவின் யுவானாக இருந்தாலும் சரி, ரஷ்யாவின் ரூபிளாக இருந்தாலும் சரி அல்லது கிரிப்டோ கரன்சியாக இருந்தாலும் சரி அவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட காலனிய நாட்டு உழைக்கும் மக்களின் இரத்தம் குடித்து கொழுக்கும் சாத்தான்களே ஆகும். நாம் ஏற்கனவே பல தடவை கூறியதுபோல அது வெள்ளை நிதி மூலதனமானாலும் சரி, சிவப்பு நிதி மூலதனமானாலும் சரி அது அழுகல்தன்மை கொண்டதே ஆகும். அது காலனிய நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தையோ உரிமைகளையோ வழங்காது; மாறாக பாசிச ஆட்சிக்கு வழி வகுக்கும்.
எனவே இரண்டு முகாமில் எந்த முகாமின் நாணயம் ஆதிக்கத்தில் முன்னிலைக்கு வந்தாலும் அவை உலக உழைக்கும் மக்களுக்கு கேடு விளைவிக்கவே செய்யும். இந்த நிதியாதிக்க கும்பலுக்கு சவக்குழி வெட்டுவதில்தான் உழைக்கும் மக்களின் சுதந்திரம் அடங்கியுள்ளது.
- சமரன்
(ஆகஸ்ட் - செப் 2025 இதழ்)