பெகாசஸ்: ஏகாதிபத்தியங்களின் உளவுத்துறை பாசிசம் - பகுதி 2 & 3

சமரன்

பெகாசஸ்: ஏகாதிபத்தியங்களின் உளவுத்துறை பாசிசம் - பகுதி 2 & 3

ஜனவரி 2023 இதழில் எப்படி இந்தியாவில் பெகாசஸ் பயன்படுத்தப்படுகிறது, எப்படி இந்த ஆளும் பாசிச பாஜக அரசு அதிகாரத்தை ஒன்றுகுவிக்கவும், இந்த அதிகார ஒன்றுகுவிப்பிற்கு எதிராகப் போராடும் ஜனநாயக சக்திகளையும், மற்றொரு ஆளும் பிரிவையும் கூட உளவு பார்த்து ஒடுக்குகிறது என்பதை பார்த்தோம்.

பெகாசஸ்: ஏகாதிபத்தியங்களின் உளவுத்துறை பாசிசம் - பகுதி 1

இந்த இதழில் பெகாசஸ் எப்படி செயல்படுகிறது என்பதையும், உலகம் முழுக்க இந்த செயலிகள் எப்படி பயன்படுத்தப் படுகிறது என்பதையும் பார்ப்போம். அதுமட்டுமல்லாமல் ஏகாதிபத்திய அமெரிக்காவின் ஆதிக்கம் இச்செயலிகளிலும் எப்படி வெளிப்படுகிறது என்பதையும் பார்ப்போம்.

பெகாசஸ்?

பெகாசஸ் எனப்படுவது இரகசிய உளவு செயலி (மென்பொருள்) ஆகும். இந்த உளவு செயலியை இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ (NSO) எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இதன் நிறுவனர்கள் நீவ் கார்மி (Niv Karmi), ஷாலேவ் ஹூலியோ (Shalev hulio, ௐரி லாவி (Omri lavie) என்று நிறுவனர்களின் முதல் எழுத்தை கொண்டுள்ளது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக பல நாடுகளிலுள்ள சட்ட அமலாக்கத் துறைகளுக்கும், உளவுத் துறைகளுக்கும் தனது பெகாசஸ் உளவு செயலியை விற்றிருக்கிறது. இந்த நிறுவனம் இதை விற்கும்போது, உலகத்தின் வேறு எந்த தனியார் உளவு நிறுவனங்களோ அல்லது அரசு உளவு துறைகளோ செய்ய முடியாத வேலைகளையும், இந்த செயலி மூலம் செய்ய முடியும் என்ற உத்தரவாதத்துடன் விற்கின்றனர்.

அமெரிக்கா, மெக்ஸிகோ, போலந்து, ஹங்கேரி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கியுள்ளதாக அறியப்படுகிறது. இந்திய அரசு, கடந்த 2017ம் ஆண்டில் இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியதாக உறுதி செய்யப்படுகிறது.

பெகாசஸ் உளவு செயலியை குறித்து என்எஸ்ஒ

குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பெகாசஸ் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், இந்த மென்பொருளை என்எஸ்ஓ மற்ற நாட்டு அரசுகளுக்கு விற்பதாக அந்த  நிறுவனம் கூறிக்கொள்கிறது.

"எங்கள் தொழில்நுட்பம் பாலியல் மற்றும் போதை மருந்து கடத்தல் குற்றங்களைத் தடுப்பதற்கும், காணாமல் போன அல்லது கடத்தப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், ஆபத்தான டிரோன்களிடம் இருந்து வான்வெளியைப் பாதுகாப்பதற்கு, பயங்கரவாத குற்றங்களைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எங்கள் நிறுவனம் இதுப்போன்ற உயிர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபடுத்திகொள்கிறது." என என்எஸ்ஒ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

NSO கார்ப்பரேட் குழுமத்தின் முழக்கமானது "உலகத்தை பாதுகாப்பான இடமாக மாற்றுவது" என்பதாம்.

பெகாசஸ் எப்படி உளவு பார்க்கிறது?

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் எந்த ஒருவரின் ஐபோனையும் அல்லது ஆண்டிராய்ட் போனையும் தொலைவிலிருந்தே ஹேக் செய்யலாம். இதன் மூலம் ஹேக்கர்கள், அந்த போனில் இருந்து மெசேஜ், புகைப்படங்கள், மின்னஞ்சல், பயனாளர் செல்லும் இடம், போன்ற அனைத்து தகவல்களையும் திருட முடியும். தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்க முடியும். அத்துடன் மறையாக்கம் செய்யப்பட்ட (encrypted) செய்திகளைக் கூட பெகாசஸ் மூலம் படிக்கலாம் என கெஸ்பர்ஸ்கி சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு நபரின் ஃபோனில் பெகாசஸ் நுழைந்து வேவு பார்ப்பதற்குத் தேவையான கோப்புகளை நிறுவுகிறது. பின்னர்  அந்த கைப்பேசிகளின் முழு கட்டுப்பாட்டையும் தங்கள் வசம் கொண்டுவந்து விடும். இதன் மூலம் அந்த கைப்பேசியின் மைக், கேமரா போன்ற வசதிகளையும் இந்த செயலியால் கட்டுப்படுத்த முடியும். இதுவரை இருந்த உளவு செயலிகள், ஏதாவது ஒரு லிங்கை குறுஞ்செய்திகள் மூலம் அனுப்பி அதை வாடிக்கையாளர் ஏமாற்றி சொடுக்க வைக்க முயற்சிப்பார்கள். இப்படி ஏமாந்த வாடிக்கையாளர், அதை சொடுக்கும் பட்சத்தில்தான் அந்த கைப்பேசியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால் இந்த செயலியோ, கைப்பேசியின் சொந்தக்காரருக்கு எவ்வித சந்தேகமும், அவரின் எவ்வித நடவடிக்கையுமின்றி நினைத்த மாத்திரத்தில் இந்த செயலி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விடும். இதற்கு பெயர்தான் "பூஜிய சொடுக்கு" (Zero Click / No Click) தாக்குதல். அதாவது திறன்பேசியின் பயனாளர் இந்த தாக்குதலுக்கு எந்தவகையிலும் ஏமாற்ற தேவையில்லை. இதற்கு முன்னர், பயனாளரின் திறன்பேசியை கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏதோ ஒரு செய்தியை புலனத்திலோ அல்லது முகநூலிலோ அல்லது

குறுஞ்செய்தியாகவோ அனுப்பி, அவரை ஏமாற்றி அதை சொடுக்க வைக்க வேண்டும். ஆனால் இந்த செயலிக்கு அப்படி ஏதும் தேவையில்லை. இந்த செயலியில் உளவு பார்க்க விரும்பும் எண்ணை உள்ளீடு செய்தவுடன், தானாகவே ஒரு கோப்பை நிறுவி விடுகிறது. பின்னர் நினைத்த மாதிரி, நினைத்த அனைத்து வேலையையும் இந்த செயலி அதன் உரிமையாளருக்கே தெரியாமல் செய்யும். உரிமையாளர்களே இதை எவ்விதத்திலும் கண்டறிய முடியாது. எப்படிப்பட்ட பாதுகாப்பு செயலிகள் அந்த கைப்பேசிகளில் இருந்தாலும் அந்த பாதுகாப்பு வளையங்களை தகர்த்து, வேண்டியதை களவாட கூடியது என்பதுமட்டுமல்ல, வேண்டிய செய்திகளையோ, தரவுகளையோ உள்ளீடும் செய்யக்கூடியது என்பதுதான் இந்த செயலியின் ஆபத்தான அம்சம். இருப்பதை அறிவது மட்டுமல்ல, இல்லாததையும் தேவைக்கேற்ப உள்ளேயும் புகுத்தும்.

பெகாசசின் செயல்பாடுகள்:

NSO பெகாசஸை உலகளாவிய சந்தையில் 2011ல் அறிமுகப்படுத்தியது. மெக்சிகோவில் போதைமருந்து கடத்தலின் அரசனாக திகழ்ந்து வந்த எல்.சாப்போ எனப்படும் ஜோவாகுவின் குஸ்மான் லோராவைப் பிடிக்க மெக்சிக்கோ அதிகாரிகளுக்கு இந்த செயலி பெரிதும் உதவியதாக கூறப்படுகிறது.  பயங்கரவாத சதித்திட்டங்களை முறியடிக்கவும், திட்டமிடப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடவும் மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில், உலகளாவிய சிறுவர்கள் கடத்தல் வளையத்தை குறிவைத்து 40க்கும் மேற்பட்ட நாடுகளில் டஜன் கணக்கான சந்தேக நபர்களை அடையாளம் காணவும் ஐரோப்பிய புலனாய்வாளர்களுக்கு பெகாசஸ் சந்தடியில்லாமல் உதவியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுபோன்ற செயல்களை கேட்கும்போது இந்த NSO கார்ப்பரேட் குழுமத்தின் முழக்கமான "உலகத்தை பாதுகாப்பான இடமாக மாற்றுவது" என்பது உண்மைதான் என்று நினைக்கத் தோன்றும்.

எந்த ஒரு செய்தி நிறுவனத்துக்கும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத NSO நிறுவனத்தின் விற்பனையை நன்கு அறிந்த பத்து பேர் சில செய்திகளை பகிர்ந்துள்ளனர். அதில் NSO குழுமம் இந்த உளவு செயலியை யாருக்கு விற்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க கடுமையான நெறிமுறைகளைக் கொண்டுள்ளது என்று கூறியிருக்கின்றனர். இதற்காக ஒரு தனி குழுவை அந்த நிறுவனம் அமைத்துள்ளதாகவும் கூறுகின்றனர். அதில் இந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளும், உலக வங்கி மற்றும் பிற உலகளாவிய அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை அமைப்புகள்/செயல்பாட்டாளர்கள் மற்றும் விசேச ஆலோசகர்கள் / ஆலோசனை நிறுவனங்கள் கொண்ட ஒரு நெறிமுறைக் குழுவாக இருக்கிறது என்று அந்த குழுவிலுள்ள அடையாளப்படுத்தி கொள்ள விரும்பாத ஒருவர் நியுயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

NSO குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் சமிர் தாபாஷ் (Zamir Dahbash, தங்கள் நிறுவனத்தின் உளவுச் செயலி அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என்றும் அது குற்றவியல் மற்றும் பயங்கரவாத விசாரணைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறினார்.

ஒரு மென்பொருள் நிறுவனத்தைப் போலவே, NSO நிறுவனமும், அதன் கண்காணிப்பு நடவடிக்கைக்கு இலக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு தனது சேவை கட்டணத்தை நிர்ணயிக்கிறது. 2016ம் ஆண்டு தகவலின்படி எந்த வாடிக்கையாளரும் முதலில் இதை நிறுவுவதற்கு நிறுவு கட்டணமாக 500,000 அமெரிக்க டாலர்கள் கட்டணத்துடன் தொடங்குகிறது. அதன் பிறகு 10 ஐபோன் பயனர்களை உளவு பார்க்க, NSO நிறுவனம் விற்பனை செய்த அரசுகளிடம் $650,000 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கிறது; 10 ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு $650,000 அமெரிக்க டாலர்கள்; ஐந்து பிளாக்பெர்ரி பயனர்களுக்கு $500,000 அமெரிக்க டாலர்கள்; அல்லது ஐந்து சிம்பியான் பயனர்களுக்கு $300,000 அமெரிக்க டாலர்கள் என தனது உளவு கட்டணமாக வசூலிக்கிறது. இந்த உளவு கட்டணம் அதன் முதல் நிறுவு (Setup) கட்டணத்திற்கு மேல் வைக்கப்படும் விலையாகும். இவை மட்டுமல்லாமல் அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மொத்த விலையில் 17 சதவிகிதம் வருடாந்திர பராமரிப்பு கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

உலகளவில் பெகாசசின் நிரூபணமான உளவுகள்:

நாட்டின் பாதுகாப்புக்காகவே பெகாசஸை வாங்குவதாகப் பல நாட்டின் அரசுகள் கூறினாலும், ஒவ்வொரு அரசுகளும் பெரும்பாலும் ஜனநாயக, சமூக, எதிர்கட்சி  செயற்பாட்டாளர்களை வேவு பார்க்கதான் இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதாகக் பல்வேறு தளங்களில் இன்று அம்பலமாகியுள்ளது.

இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு செயலி மூலம் உலகம் முழுவதும் மனித உரிமை ஆர்வலர்கள், செய்தியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட 50,000 மேற்பட்டவர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக கடந்த ஆண்டு ஜூலையில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஜூன் 2021ல், 16 சர்வதேச செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த 80 பத்திரிகையாளர்களும், பிரான்சின் ஊடகமான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் (Forbidden Stories) என்ற செய்தி நிறுவனமும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) என்ற அரசு சாரா நிறுவனமும் இணைந்து இந்த உளவு செயலியின் செயல்பாட்டையும் இரகசியத்தையும் உடைத்தனர்.  இந்த கூட்டு செயல்பாடு அமெரிக்கா, மெக்சிக்கோவில் தொடங்கி பிரான்சு, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஹங்கேரி வரை மேற்குலகில் இணைந்து, பிறகு லெபனான், இஸ்ரேல், இந்தியா என்று கிழக்கு வரை பத்திரிக்கை நிறுவனங்களும், பத்திரிக்கையாளர்களும் இணைந்து ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.

பெகாசஸ் மூலம் மக்கள் உளவுபார்க்கப்படுவதை 2016-ம் ஆண்டு ஐக்கிய அரசு அமீரகத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான அகமது மன்சூருக்கு நிகழ்ந்த கொடுமைகள்தான் இந்த உளவு செய்தியின் அபாயத்தை பொது வெளியிக்கு கொண்டுவந்தது. பெகாசஸ் உளவு செயலியை வாங்கிய ஐக்கிய அரபு அமீரகம், அந்த அரசை தைரியமாக விமர்சனம் செய்துவந்த அகமது மன்சூருக்கு எதிராக பிரயோகித்து அவரது வாழ்க்கையையே சூறையாடியது. அது வெறும் தனிநபர் தாக்குதல் அல்ல. ஜனநாயகத்தின் மீதான அரசு ஒடுக்குமுறை. உளவு செயலியை கொண்டு அந்த அரசாங்கம் எப்படி எல்லாம் அந்த மனிதனை வதைத்தது என்பதுதான், இதுபோன்ற செயலிகளால் ஏற்படும் விளைவைப் பற்றி உலகிற்கு கொடுக்கும் பாடம். உளவு செயலியை கொண்டு அவரது கார் களவாடப்பட்டது; அவரது மின்னஞ்சலில் ஊடுருவி அவரின் அத்தனை விடயங்களும் தன்வசப் படுத்தினர்; அவரது நகர்வுகள் ஒவ்வொன்றும் கண்காணிக்கப்பட்டது; அவர் தப்பிச் சென்றுவிடாமல் அவரது கடவுச்சீட்டை (Passport) களவாடினர்; அவரது வங்கி கணக்கில் இருந்து 1,40,000 அமெரிக்க டாலர்கள் களவாடப்பட்டது; தனது வேலையில் இருந்து நீக்கப்பட்டார்; அவரை ரவுடிகள் வேண்டுமென்றே இழுத்துப் போட்டு அடித்தனர்; அவர் முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கங்களை ஊடுருவி, இந்த உளவு செயலிகள் மூலம் அவரே பதிவு போடப்பட்டதுபோல் போடப்பட்டது. பின்னர் அந்த பதிவுகளுக்காக, பதிவுகளுக்கு காரணமான அரசே 10 ஆண்டுகால சிறை தண்டனையும் கொடுத்தது. இப்படி ஒரு மனிதனை அலக்கழித்து, துண்புறுத்தி வஞ்சிப்பதற்கு முழுமையாக அந்த அரசுக்கு கைக்கொடுத்தது இந்த பெகாசஸ் செயலியும் ஒன்று. மன்சூர் தனது திறன்பேசியை சந்தேகத்தின் காரணமாக டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் ஆய்வகத்தில் உள்ள சைபர் செக்யூரிட்டி நிபுணர்களிடம் ஆராயுமாறு கொடுத்துள்ளார். அவரது திறன்பேசி பெகாசஸ் மால்வேரால் (Malware) பாதிக்கப்பட்டிருந்தது. மன்சூரின் போனை ஆராய்ந்த சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள்,  "இந்த திறன்பேசி மீதான உளவு தாக்குல் கண்டுபிடிப்பானது, மிகவும் காலந்தாழ்ந்த ஒன்று. அந்த அரசு நினைத்ததை அனைத்தையும் செய்து முடித்துவிட்டது" என்று கூறியுள்ளனர். இப்படி உலகம் முழுவதும் அரசுகள் தங்கள் அரசுக்கெதிரான அதாவது ஜனநாயகத்திற்கும் சமூகத்திற்கும் போராடும் பல்வேறு சக்திகள் மீதுதான் தாக்குதல் தொடுக்க அத்துனை முறைகளையும் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் எதார்த்தம்.

அதன் பின்னர் 2017-ம் ஆண்டு பெகாசஸ் மூலம் மக்களை வேவு பார்ப்பதாக மெக்சிகோ அரசு மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மெக்சிகோவில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்களுக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டு வருவதாக 'தி நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டது. தங்களது ஃபோன்களை ஒட்டுக் கேட்பதாகப் பிரபல பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மெக்சிகோ அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

சவுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜி, கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணை தூதரகத்துக்குச் சென்றபோது கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவரது கைபேசியையும், கொலை செய்யப்பட்டதற்குப் பின்பு அவரது குடும்பத்தினர்களின் கைபேசிகளையும் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை சவுதி அரேபியா பயன்பாட்டிற்காக வாங்கியுள்ளது. நாட்டிலிலுள்ள முடியாட்சிக்கு எதிரான, மாறுபட்ட கருத்து கொண்டவர்களை நசுக்குவதற்கும், வெளிநாடுகளில் உள்ளவர்களைக் கண்காணிப்பதற்கும் இந்த மென்பொருளை சவுதி பயன்படுத்தியது என தி நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. புலனம் (Whatsapp) மூலம் வேவு மென்பொருளை பரப்பி, தங்களது வாடிக்கையளர்களின் கைபேசிகளில் சைபர் தாக்குதல் நடத்தியதாகக் கடந்த 2019ம் ஆண்டு என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக முகநூல் (Facebook) நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் சிறையில் தள்ளப்பட்ட சிவில் உரிமை ஆர்வலர் ஒருவரின் தொலைபேசியை ஹேக் செய்ய இந்த செயலியை பயன்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 2020-ல் டஜன் கணக்கான அல் ஜசீரா செய்தியாளர்கள் செல்ஃபோன்கள் வேவு பார்க்கப்படுவதாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குற்றம் சாட்டினர். டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் ஆய்வகம் வெளியிட்ட அறிக்கையில், அல் ஜசீராவின் தொலைக்காட்சியின் தொகுப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என 36 பேரின் செல்போன் பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய பாராளுமன்றம் பெகாசஸ் குறித்தான சர்ச்சை கருத்துக்குகளுக்கு பிறகு ஒரு பாராளுமன்ற குழுவை நியமித்தது. அந்த பாராளுமன்ற குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி ஒரு அறிக்கையை சமர்பித்தது. அந்த அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 12 நாடுகள் என்.எஸ்.ஒ நிறுவனத்திடம் இந்த செயலியை வாங்கி உள்ளதாகவும், 22 அரசு துறைகளுடன் ஒப்பந்தம் தற்போது அமலில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். அந்த குழுவில் ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலான் பகுதியை சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரின் திறன்பேசியும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. 

அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனமும் தங்களின் வாடிக்கையாளர்களின் திறன்பேசியை தங்களது மென்பொருளையே பயன்படுத்தி உளவு பார்த்ததாக என்.எஸ்.ஓ நிர்வாகத்தின் மீது அமெரிக்காவில் வழக்கு தொடுத்துள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த தீர்ப்பின் மூலம் கிடைக்கும் நஷ்ட ஈட்டை ஃபோர்ட் அறக்கட்டளையின் தலைமையின் கீழ் இயங்கும் "கண்ணியம் மற்றும் நீதிக்கான நிதி (Dignity and Justice Fund)" என்ற அமைப்பிற்கு இணைய உளவு தாக்குதல்களை கண்காணிப்பது, பாதுகாப்பது போன்ற ஆராயும் பணிக்கு ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் பெகாசஸ்:

அமெரிக்காவில் 2013ல் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் ஒப்பந்தகாரராக இயங்கிய எட்வார்ட் ஸ்நோடன், சொந்த நாட்டின் மக்கள் மீது அமெரிக்க அரசு செய்த உளவுத் தகவல்களை அம்பலப்படுத்தினார். அம்பலத்திற்கு வந்த பிறகு, அமெரிக்கர்களிடையே இது மிகப் பெரிய விவாதப் பொருளாக மாறியது. தனி நபர் உரிமைக்கும் நாட்டின் பாதுகாப்பிற்குமான விவாதங்கள் உலகம் முழுவதும் கவனத்திற்கு வந்தது. இந்த விவாதம் குறிப்பாக அமெரிக்காவின் இதுபோன்ற உளவு நடவடிக்கைகள் அமெரிக்க மக்களிடம் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. இதனால் அமெரிக்க அரசாங்கம் இதுப்போன்ற உளவு செயலிகளை பயன்படுத்துவது குறித்து பொது வெளியில் வெளிப்படுத்திக் கொள்ளாமல் இரகசியமாக பயன்படுத்தி வருகிறது. 

அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக இருந்து வரும் இஸ்ரேல் இந்த உளவு செயலியை கொண்டு மற்ற நாடுகள் அமெரிக்கர்களுக்கு எதிராக பயன்படுத்த முடியாதவாறு திட்டமிட்டு வடிவமைத்தனர். ஏனென்றால் அப்படி செய்யும்பட்சத்தில் அது அமெரிக்காவை பகைத்துகொள்ள நேரிடும் என்பதை பிரதானமாக கருதியது. ஆனால் இப்படி வடிவமைக்கப் போய், வேறு சில சிக்கல்களையும் அந்த நிறுவனம் எதிர்க்கொள்ள நேரிட்டது. இந்த நிறுவனத்தை அமெரிக்க உளவு நிறுவனங்கள் சொந்த நாட்டு மக்களை உளவு பார்க்க ஒப்பந்தம் ஏற்படுத்த முயன்றபோது, இந்த பெகாசஸ் உளவு செயலி மூலம் உளவு பார்க்க முடியாது என்பதை தெரியப்படுத்தினர்.

அதனால் சில ஆண்டுகளில் NSO நிறுவனம் அமெரிக்க உளவு அமைப்பான எஃப்.பி.ஐ (Federal Bureau of Investigation - FBI)க்கு ஒரு முன்மொழிவை கொடுத்தனர். அதன்படி பெகாசஸ்சின் ஒரு புதிய அமெரிக்க மாதிரியை 'தி ஃபாண்ட்டம்' (The Phantom) என்ற உளவு செயலியை அமெரிக்க உளவு நிறுவனத்திற்காக பிரத்தியேகமாக உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த உளவு செயலியை அமெரிக்க உளவு நிறுவனத்தை தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாதவாறு பார்த்துக்கொள்வது; மட்டுமல்லாமல் இதை NSO நிறுவனத்தின் அமெரிக்க துணை நிறுவனமான வெஸ்ட்பிரிட்ஜ் (West Bridge) என்ற நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உருவாக்குவது என்று முன்மொழியப்பட்டது. ஃபாண்ட்டம் என்ற உளவு செயலி மூலம் அமெரிக்க சட்ட அமலாக்கத்துறைகள் நினைத்த திறன்பேசியை உளவு பார்ப்பது என்ற சுயேட்சையாக இயங்கக்கூடிய ஒரு தீர்வை கட்டமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி இந்த செயலியை பயன்படுத்தவோ, உளவு பார்க்கவோ திறன்பேசிகளுக்கு சேவையளிக்கும் எந்த நிறுவனத்தின் அதாவது முகநூல், கூகுள், ஏடி&டி, வெரிசான் மற்றும் புலனம் போன்று யாருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் இது சுயேட்சையாக இயங்குமளவுக்கு வடிவமைக்க திட்டமிடப்பட்டது.

இப்படி ஒரு செயலியின் செயல்பாடுகளை அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கும் மற்ற சட்ட அமலாக்கத் துறைக்கும் செயல் மாதிரி ஒன்று காட்டப்பட்டது. இதன் பிறகு F.B.I 2018ல் Pegasus செயலியை வாங்கியது; அடுத்த இரண்டு ஆண்டுகள் நியூ ஜெர்சியில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் ஸ்பைவேரை சோதித்தது என்று ஜனவரி 2022ல் நியூயார்க் டைம்ஸ் ஆதாரத்தை வெளியிட்டது. இதன் பிறகு இதை பயன்படுத்துவதிலுள்ள சட்டச்சிக்கல்கள் குறித்து நீதித்துறையின் சட்ட வள்ளுனர்களும் எஃப்.பி.ஐ துறையும் இரண்டு வருடங்களாக விவாதித்தனர். டிரம்ப் ஆட்சியில் ஆரம்பித்து பைடன் ஆட்சி காலம்வரை இது நீடித்தது. இந்த காலகட்டங்கள் முழுவதும் எஃப்.பி.ஐயும் என்.எஸ்.ஒ நிறுவனமும் நெருக்கமாக இயங்கி வந்துள்ளனர். இக்காலம் முழுவதும் என்.எஸ்.ஒவின் செயலியின் செயல்பாட்டை முழுமையாக அறிந்துகொள்ளவும், அதன் அமலாக்கம் மற்றும் சாத்தியத்தை பற்றியும் அறிந்துகொள்ள முயன்றனர். இறுதியாக இதை பயன்படுத்துவது அமெரிக்காவின் இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று உணர்ந்தப் பிறகு நவம்பர் 2021ல் இதை கைவிடுவது என்று முடிவுக்கு வந்தனர். பெகாசசின் செயல்பாட்டையும், அதை வாங்கியது குறித்தும் அமெரிக்க அரசு வெளிப்படையாக தெரிவிக்க வில்லை. இந்நிறுவனத்தின் ஆபத்தை உணர்ந்த அமெரிக்க அரசு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அல்லது வெளியுறவுக் கொள்கை நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக, நவம்பர் 2021ல் இந்த இஸ்ரேலிய நிறுவனத்தை அமெரிக்காவின் "தடைப் பட்டியலில்" சேர்த்தது. இந்த தடையின் மூலம் இந்த நிறுவனத்துடன் எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும் தொடர்போ, வர்த்தகமோ வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு தீவிர தன்மை கொண்டது. இதனால் அமெரிக்க நிறுவனங்களின் சேவையை என்.எஸ்.ஒ வும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டள்ளது. இதனால் இந்த நிறுவனம் இயங்குவதற்கு மிக அத்தியாவசியமாக தேவைப்படும் அமெரிக்காவின் கணிணிகளையும், அமேசானின் கிளவுட் மென்பொருள்கள், இராணுவ தொழில் நுட்ப உபகரணங்கள் போன்றவற்றை பெற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்தும் என்.எஸ்.ஒ நிறுவனம் இயங்குவதற்கான வாழ்வாதார பிரச்சனையாகும்.

பெகாசஸை கட்டுப்படுத்தும் அமெரிக்க மேலாதிக்கம்:

பொதுவாக இஸ்ரேல் அமெரிக்க அரசின் புதிய காலனிய அரசாகும். அமெரிக்காவின் அனுசரனையிலும் அரவனைப்பிலும் இருந்து வரும் நாடு. அமெரிக்க உலக ஒழுங்கமைவுக்கு சேவை செய்து வருகிறது. அமெரிக்கா, அரபுலக நாடுகளை கட்டுப்படுத்த தொடர்ந்து இஸ்ரேலை பயன்படுத்தி வருகிறது.

2010ல் இஸ்ரேலின் என்.எஸ்.ஒ நிறுவனத்தை இரண்டு நண்பர்கள் ஒன்று சேர்ந்து தொடக்க நிறுவனமாக (Start up) ஆரம்பித்தனர். சில ஆண்டுகளில் இதில் இன்னொரு நபரையும் இணைக்கிறார்கள். அவர், நீவ் கார்மி, முன்னால் மொசாட் உளவாளி மற்றும் பாதுகாப்பு நிபுனர் ஆவார். இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு சில வருடங்களிலேயே எதிர்பார்த்ததைபோல் நிறைய நாடுகளுடன் ஒப்பந்தங்களை போடுகின்றது. இந்த ஒப்பந்தங்கள் இஸ்ரேல் அரசின் பரிந்துரையின் அடிப்படையில் போடப்படுகிறது. 

2014ல் சான் பிரான்சிஸ்கோவை தலைமையாக கொண்டு இயங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம் 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்டு என்.எஸ்.ஒவின்  60% பங்குகளை வாங்கி பெரும்பான்மை பங்குதாரராக திகழ்கிறது. அது மட்டுமல்லாமல் இஸ்ரேலைச் சேர்ந்த மற்றொரு இணைய தாக்குதல் தொழில்நுட்ப நிறுவனமான சர்கிள் (Circle) என்ற 130 மில்லயன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனத்தை என்.எஸ்.ஒ உடன் இணைக்கிறார்கள்.

உலகளவில் அமெரிக்க நாட்டின் திறன் பேசிகள் மட்டும் உளவு பார்க்க முடியாதவாறு அந்த இஸ்ரேல் நிறுவனம் கட்டியமைக்கிறது. அதாவது எக்காரணத்தைக் கொண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டுவிடக் கூடாது என்று திடமாக இருந்ததற்கான காரணத்தை இது காட்டுகிறது. அமெரிக்க ஏகாதிபத்திய ஆசியுடன் பல்வேறு நாடுகளுக்கு உளவு சேவையை அளிப்பதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதில் சில ஒப்பந்தங்கள் இஸ்ரேல் அரசின் இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தவும், இஸ்ரேலின் செல்வாக்கை விரிவுபடுத்துவதாக இருந்த போதிலும், அதில் பெரும் இலாபம் அடைந்தது அமெரிக்க ஏகாதிபத்தியமே. 

பெகாசஸ் உதவியுடன் சவுதி முடி அரசரின் சதி வேலையாக கஷோகி கொல்லப்பட்ட அதே ஆண்டில்தான் (2018) அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவு (CIA) டிஜிபோட்டி அரசுக்காக தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவது என்ற பெயரில் அமெரிக்காவின் கூட்டாளியாக அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சேவை செய்ய நிதி உதவி செய்து பெகாசஸ் செயலியை வாங்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.  ஆனால் டிஜிபோட்டி அரசோ பத்திரிக்கையாளர்களை ஒடுக்கியும், ஜனநாயகத்திற்கு குரல் கொடுப்பவர்களை அடக்கியும், நீண்ட காலமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன. பல நேரங்களில் இந்த மனித உரிமைகள் மீறல்கள்கூட பெரும்பாலும் அமெரிக்க மேலாதிக்கத்தை காப்பதற்காகவே உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் டி.இ.ஏ என்கிற அமெரிக்க இரகசிய புலனாய்வு அமைப்பும், அமெரிக்காவின் ஆப்பிரிக்க உயர் பொறுப்பு அமைப்பும் என்.எஸ்.ஒ நிறுவனத்துடன் உளவு ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாக நியூயார்க் டைம்ஸ் தகவல்களை வெளியிட்டுள்ளது. பிறகு எஃப்.பி.ஐ அமைப்பும் இரகசியமாக இரண்டு வருடங்கள் இதை வாங்கி பயன்படுத்தி, சோதித்து பார்த்துள்ளனர். ஆனால் இதை எதையும் அமெரிக்க அரசாங்கம் பொது வெளியில் ஒப்புக்கொள்ளவில்லை. 

அமெரிக்க தலைமையில் இஸ்ரேல் - அரபு ஒப்பந்தமான ஆபிரகாம் ஒப்பந்தமானது இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் நாடுகள் இணைந்து போடப்பட்டன. ஆனால் இந்த நாடுகளுக்கு அமெரிக்காவின் இசைவுடன் 2013 மற்றும் 2017லேயே பெகாசஸ் உளவுச் செயலி விற்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை ஏற்பதற்கும் காப்பதற்கும் பல்வேறு நாடுகளுக்கு இந்த உளவு செயலியை காலனிய அரசுகளுக்கு அமெரிக்காவின் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆபிரகாம் ஒப்பந்தத்திற்குப் பின்னால் அமெரிக்காவின் அரபு உலக ஆயுதச் சந்தையின் முக்கியத்துவமும் பிரதானமாக உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பிறகான சில நாட்களிலேயே ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்காவின் எஃப்-35 தாக்குதல் போர் விமானங்களின் விற்பனைக்கு இசைவு தெரிவித்தது. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பெகாசஸ் உளவு செயலி மூலம் பாதிக்கப்படும் உண்மைச் சம்பவங்கள் நீக்கமற உலவி வருகிறது. சில சம்பவங்கள் அமெரிக்க மேலாதிக்கத்திற்கோ அல்லது நலனுக்கோ எதிரான சம்பவங்கள் அரங்கேறும்போது இந்த செயலியின் சேவையும் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சவுதி கஷோகி கொலைக்குப் பிறகு (2018) உடனடியாக திரும்பபெறப் பட்டுள்ளது.  மீண்டும் 2020ல் சேவைத் தொடரப்பட்டுள்ளது. இதேப்போல் ஐக்கிய அரபு அமீரகத்தின் சேவையும் 2019ல் திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவைகள் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தின் கீழ் இந்த செயலி விற்கப்பட்டுள்ளது என்பதற்கான சில சான்றுகளாகும்.

இப்படி அமெரிக்காவின் ஒத்திசைவில் உலகம் முழுவதும் உளவு செயலியின் சேவையை கொடுத்து வந்த என்.எஸ்.ஒ நிறுவனத்தை நவம்பர் 2021ல் அமெரிக்கா "தடை பட்டியலில்" சேர்த்து விட்டது. இதற்கு அமெரிக்க தரப்பில் சொன்ன கருத்து, என்.எஸ்.ஒ நிறுவனம் அமெரிக்க இறையாண்மைக்கும் நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அதன் செயலிகள் பல்வேறு மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஜனநாயக வாதிகள் மீது தாக்குதல் தொடுத்தது போன்ற காரணங்களை கூறியுள்ளது. இது அமெரிக்க வல்லூறுகள் கூறும் வழக்கமான போலி காரணங்களாகும். அப்படி என்றால் உண்மை காரணம் என்ன? இதற்கு பின்னால் உள்ள உண்மை காரணத்தை, முன்னணி இஸ்ரேலிய தொழில்துறையாளர்கள் இந்த நிறுவனத்தை அமெரிக்கா கபளிகரம் செய்யவே இப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறிகின்றனர். தடை செய்யப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே எல்3-ஹாரிஸ் தொழில்நுட்ப நிறுவனம் (L3 Harris Technologies) என்ற அமெரிக்க இராணுவ ஒப்பந்த நிறுவனம் என்.எஸ்.ஒவிடம் அமெரிக்க அரசின் சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தையில் இரண்டு நிபந்தனைகளை விதித்தது. ஒன்று, என்.எஸ்.ஒ நிறுவனம் பெகாசசின் மென்பொருளின் மூலக் குறியீடுகளை (Source Code) அமெரிக்காவின் மற்ற உளவுத்துறை நிறுவனங்களுக்கு பகிர வேண்டும். இரண்டு, NSO ஆல் கண்டறியப்பட்ட பூஜ்ஜிய-நாள் பாதிப்புகளின் சேவை ஆகியவை ஐந்து கண்கள் (Five Eyes) என்ற அமெரிக்க தலைமையிலான உளவு பகிர்வு கூட்டணி நாடுகளுக்கு சேவையளிக்க வேண்டும். இந்த பேச்சுவார்த்தையில் இரண்டாவது நிபந்தனையை ஏற்க என்.எஸ்.ஒ மற்றும் இஸ்ரேல் அரசு தயாராக இருந்தது. ஆனால் முதல் நிபந்தனைதான் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மிக முக்கிய பிரச்சனையாக மாறியது. இந்த பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்காவின் உண்மையான உள்நோக்கம் வெளிப்பட்டது. பெகாசஸ் உளவு செயலி 45 நாடுகளுக்கு விற்கப்பட்டு உலகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதால், அந்த நிறுவனத்தை தனது முழு கட்டுப்பாட்டில் இயங்குவது மட்டும் போதாது; தங்களது நிறுவனங்களாலேயே இயக்கப்பட வேண்டும். அது அமெரிக்காவின் சொத்தாகவும், தொழில் நுட்பமாகவும் தான் இருக்க வேண்டும் என்ற உள் நோக்கத்தையே கொண்டிருந்தது. இந்த பேச்சு வார்த்தை ஒத்துவராத காரணத்தினாலேயே இந்த நிறுவனத்தின் மீது தடை விதித்துள்ளது அமெரிக்க அரசு. என்.எஸ்.ஒ வை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குத்தான் அமெரிக்க ஊடகங்களும், அமெரிக்க நிறுவனங்களும் தொடர்ந்து என்.எஸ்.ஒவின் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றன. அமெரிக்க நிறுவனங்களின் தூண்டுதலிலும் ஆதரவிலும் அமெரிக்க ஊடகங்கள் பெகாசசின் அத்துமீறல்களை அம்பலப்படுத்தி உலக முழுவதும் அதன் மீதான எதிர்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அதேபோல் அமெரிக்க நிறுவனங்களான முகநூல் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் வழக்குகளுக்குப் பின்னும் இதுபோன்ற சாத்தியக் கூறுகள் இருப்பதாகவே தெரிகிறது. இந்த நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது உலக நாடுகளின் இரகசியங்களை தங்கள் கையில் கொண்டுவரும் ஒரு நடவடிக்கையாகும். ஏனென்றால் இந்த செயலி எந்த நிறுவனத்தின் நெட்வொர்க்கையும் அவர்கள் அனுமதியில்லாமல் தடையமில்லாமல் உள் நுழைந்து அவர்கள் வாயிலாகவே திறன்பேசிகளை தாக்கும் வல்லமை பெற்றது. இதன் மூலம் அனைத்து நாடுகளின் இரகசியங்களை உள்ளங் கையில் கொண்டிருக்க முடியும் என்பதுதான் நிதர்சனம். அமெரிக்கா தொடர்ந்து மனித உரிமை மீறல்களை வெறும் தங்களின் உலக மேலாதிக்க ஒழுங்கமைவுக்கான பேரம் பேசும் பொருளாகவே பயன்படுத்தி வருவதுதான் நிதர்சனமான உண்மை. என்.எஸ்.ஒவின் பெகாசஸ் பிரச்சனையிலும் அதையே முதன்மை படுத்தி அந்த நிறுவனத்தை தனது மேலாதிக்கத்திற்கான கருவியாக செயல்படுத்த துடிக்கிறது. அந்த நிறுவனத்தை தனது ஆதிக்கத்தில் கொண்டுவருவது மூலம் உலக நாடுகளிலும் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதில் ஏகபோக வழியாக பார்க்கிறது.

உளவு செயலிகளின் பாதிப்புகள்:

பெகாசஸ் போன்ற உளவு செயலிகளைக் கொண்டு இந்திய உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் சமூக விரோதிகளை கண்காணிப்பதைவிட சமூக செயற்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும், அரசுடன் முரண்படும் பல்வேறு பிரிவுகளையே இலக்காக்கியுள்ளனர்.

இந்த இலக்கின் நோக்கம் கண்காணிப்பையும் தாண்டி, போலி தரவுகளையும் தடயங்களையும் உருவாக்கி, அரசியல் எதிரிகளை வேட்டையாடுவதில் சென்று முடிகிறது.

இதுப்போன்ற செயலிகளை பெறுவதற்கு நாடுகளின் சொந்த அரசியல் கொள்கைகள் சமரசம் செய்யப்படுகின்றது. இச்சேவை கொடுக்கும் நாடுகளின் அரசியலிற்கும் கோரிக்கைகளுக்கும் சேவை பெறும் அரசுகள் கட்டுபட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறது.

இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் சொந்த தொழில் நுட்ப கட்டமைப்பு இல்லாத நாடுகளே. அதனால் இச்செயலிகள் மூலம் பெறப்படும் தரவுகளின் முழுக் கட்டுப்பாடும் உரிமையும் வெளி நாட்டு தனியார் நிறுவனங்களும் நாடுகளுமே பெற்றுள்ளது. இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பும் இறையாண்மையும் சமரசம் செய்யப்படுகின்றது.

தொழில்நுட்ப ஏகபோகம் கொண்டுள்ள ஏகாதிபத்திய நாடுகள், இக்கட்டமைப்பை பெறும் நாடுகளின் சம்மதமும் அறிதலும் இல்லாமல் வேண்டிய தகவலையும், செயலையும் செய்துமுடிக்கும் ஆற்றல் பெறுகின்றன. இதன் மூலம் ஏகாதிபத்திய ஏகபோக அரசியல் பொருளாதார கொள்கைகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் இலக்காக்கப்படுகின்றன.

பெகாசஸ் - அரசியல்:

இந்த செயலி இதுவரை 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விற்றுள்ளதில், அந்த நாடுகளின் ஆட்சிகளைப் பொறுத்து இதன் செயற்பாடுகள் முக்கியத்துவம் பெருகின்றன. உலகம் முழுவதும் தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட அனைத்தும் யார் கைகளில் கிடைக்கிறதோ அதைப் பொறுத்து அதன் நோக்கங்களும் தாக்கங்களும் அமைகின்றது. இந்த செயலிகள் பல்வேறு முடியாட்சி, புதிய காலனிய அரசுகளுக்கும், ஏகாதிபத்திய அரசுகளுக்கும் விற்கப்பட்டுள்ளது. இந்த அரசுகள் அனைத்தும் தனக்கு எதிரான பல்வேறு பிரிவினர்களை உளவு பார்க்க பயன்படுத்துகின்றனர். அந்த நிறுவனம் கோருவதைப்போல கடத்தல்காரர்கள், கிரிமினல்களைக்கூட முற்றிலும் ஒழிப்பதற்காக எந்த அரசு நிறுவனங்களும் நினைப்பதுமில்லை தயாராகவுமில்லை.  அதைதான் நாம் சான்றுகளுடன் மேலே பார்த்துள்ளோம். சொற்ப கடத்தல்காரர்களையும் தீவிரவாதிகளையுமே கண்காணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் உண்மையிலேயே அரசியல் எதிரிகளையும், சமூக செயற்பாட்டாளர்களையும் ஜனநாயக வாதிகளையுமே கண்காணித்துள்ளனர். இன்றைய அரசுகளுக்கு பிரதான எதிரிகளாக கடத்தல்காரர்களும் கொள்ளைகாரர்களும் கொலைகாரர்களும் இல்லை. இவைகளை எதிர்த்து போராடும் அரசியல்வாதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும், ஜனநாயகவாதிகளுமே இருக்கின்றனர் என்பதை வைத்தே இவ்வரசுகளின் வர்க்க சார்பை நாம் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் கடத்தல்காரர்களும் கொள்ளைகாரர்களும் கொலைகாரர்களும் தனியார்மயத்தின் விளைபொருள்தான். அதாவது கடத்தல்காரர்களும் கிரிமினல்களும் கார்ப்பரேட்களின் மற்றொரு சேவைப் பிரிவாகும். இன்று உலகம் முழுவதும் கிரிமினல் நடவடிக்கைகளும், கடத்தல்களும், கூலிப்படைகளும் கார்ப்பரேட் நிறுவனங்களாக ஒழுங்கமைக்கப்பட்டு வளர்ந்து நிற்கின்றது. இந்த பிரிவுகளும் அனைத்தும் பிரதானமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்யவே வளர்ந்து நிற்கின்றன. மற்ற தொழில்களைப் போல கார்ப்பரேட் நிறுவனங்கள் சில அணிகளாக இருப்பதைப் போல இதுப்போன்ற குற்ற துறையிலும் இவைகள் கார்ப்பரேட்களாகவும், கார்ட்டல்களாகவும் அணிகளாக இருப்பதால் போட்டிகளும் பூசல்களும் தவிர்க்க முடியாதது. அப்படி போட்டிகளும், பூசல்களும் வரும்பட்சத்தில் அதை ஒடுக்கி முறைப்படுத்த அரசுகள் முனைகிறதே ஒழிய, அதை ஒழிப்பதற்கு ஒரு காலும் நினைப்பதுமில்லை செயல்படுவதுமில்லை. போதை மருந்து உற்பத்தியும், விற்பனையும் பெரிய அளவில் கார்டல்கள் முறையில் நடந்து வருவதாக பல்வேறு ஊடகச் செய்திகள் நமக்கு தெரிவிக்கின்றன. இதை அனைத்து நாடுகளிலும் அரசுகளும், அரசு அதிகார நிறுவனங்களும் கார்ட்டல்களும் ஒன்று சேர்ந்து இணைந்துதான் நடத்தி வருகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் ஒரு இணை அரசு முறை இதற்காக ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இப்படித்தான் இந்த உளவு செயலியைக் கொண்டு பல சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்துவதாக இந்த நிறுவனமும், சில அரசுகளும் பரைசாற்றிக் கொள்கின்றன. அதுமட்டுமல்லாமல் என்.எஸ்.ஒ நிறுவனம் கூறுவதுபோல இந்த செயலிகளை விற்ற நாடுகளின் அரசுகள் கடத்தல்காரர்களையும், கிரிமினல்களையும் போன்ற சமூக விரோதிகளை மட்டும் உளவு பார்த்ததோடு நிறுத்திகொண்டார்களா? இல்லை. அதை தாண்டி பல்வேறு மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் என்று ஜனநாயக குரல்களாக செயல்படும் அனைத்து சக்திகள் மீதும் இந்த உளவு செயலி பிரதானமாக ஏவப்பட்டுள்ளது. உண்மையில் சமூக விரோதிகளை கண்காணிப்பதைவிட பல மடங்கு அதாவது இந்த உளவு செயலியை பயன்படுத்துவதற்கு முக்கிய காரணமே ஒவ்வொரு நாட்டின் அரசு அதிகாரத்திற்கு சவால் விடும் எதிர் கட்சிகள், அரசுகளின் ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து போராடும் பல்வேறு ஜனநாயக சக்திகளையும் உளவு பார்ப்பதுதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கணி. உளவு பார்ப்பதே அரசுகளினால் தொடுக்கப்படு தனி நபர் உரிமை மீறல் மீதான பிரச்சனை. ஆனால் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் அதையும் தாண்டி பாசிச போக்குக்கு பல்வேறு அதிகார நிறுவனங்களையும், ஒரு சிறு பிரிவு ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்ய மற்ற எல்லா ஆளும் வர்க்க பிரிவையும்கூட ஒடுக்குவதற்கும், தங்களுக்கு சேவை செய்வதற்கும் பயன்படுத்தபடுகிறது. ஆளும் வர்க்க பிரிவுக்கே இந்த கதி என்றால், உழைக்கும் மக்களுக்கும், உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஜனநாயக சக்திகளின் நிலை எப்படி இருக்கும் என்பதை நாம் முன்னரே பார்த்தோம். மக்களையும், மக்களுக்காக போராடும் ஜனநாயக சக்திகளையும் அடக்குவதில் ஒரு படி மேலே சென்று, அதாவது உளவு பார்ப்பது மட்டுமல்லாமல் அவர்களை நசுக்கி அழிப்பதற்கு பொய்யான தடயங்களையும் ஆதாரங்களையும் இந்த தொழில் நுட்ப உளவு செயலிகள் மூலம் உருவாக்குகின்றனர். இப்படி செயல்படுத்த வெறும் பெகாசஸ் உளவு செயலி மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. இதற்காக பல்வேறு தொழில் நுட்ப செயலிகள் பயன்படுத்தப் படுகிறது.  இப்படி ஜனநாயகத்தின் மீதும் சுதந்திரத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கின்றனர். இந்த செயலி நாடுகளுக்கிடையில், அதாவது அமெரிக்காவின் உலக  மேலாதிக்கத்திற்கு சேவை செய்வது மட்டுமல்லாமல் மூன்றாம் உலக நாடுகளின் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இதுப்போன்ற உளவு செயலிகள் வெறும் தனி நபர்கள் திறன் பேசிகள் மட்டுமல்லாமல் இந்த நாடுகளின் இணைய கட்டமைப்பு மீதான தாக்குதலையும் தொடுத்து வருகிறது. உதாரணத்திற்கு ஒரு திறன்பேசியை இலக்கு வைக்கும்போது, அந்த திறன்பேசியில் நுழைய அதன் சேவை அளிக்கும் நிறுவன கட்டமைப்புகளிலும், சர்வர் மற்றும் நெட்வொர்க்குகளிலும் (Server & Network) தடயமில்லாமல் செல்ல பெகசஸ்சால் முடியும் என்பதால்தான் அமெரிக்கா உண்மையில் தடை விதித்துள்ளது. இப்படி புலனத்திலும் ஐபோனிலும் நுழைந்து உளவு பார்த்ததாக அந்நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்க போன்ற நாடுகளே தங்களின் இறையாண்மைக்கு இது அச்சுறுத்தல் என்று கூறும்போது, எவ்வித சொந்த உள்நாட்டு தொழில்நுட்ப கட்டமைப்பும் அற்ற இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் இதை பயன்படுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்து. இத்தனைக்கும் அமெரிக்காவின் கட்டமைப்பை பயன்படுத்திதான் என்.எஸ்.ஒ நிறுவனத்தின் கட்டமைப்பு கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த உளவு செயலியை கட்டுப்படுத்த அவர்களால் இயலவில்லை என்றால் இந்தியாவின் நிலைமையை நாமே புரிந்து கொள்ளலாம். எலிகளின் தடமறியும் பாம்பு போல சமூக செயற்பாட்டாளர்களின்  தடமறிய இந்திய பாசிச பாஜக எனும் விசப் பாம்புக்கு இச்செயலி தேவைப்படுகிறதென்றால், அமெரிக்கா போன்ற உலக மேலாதிக்க வல்லூறுகளுக்கு இப்பாசிச பாம்புகளின் தடமறியவும், வேட்டையாடவும் அதே செயலி பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். தனியார்மயம் மற்றும் உலகமயத்தின் விளைவு தங்களின் இறையாண்மையை மற்ற நாடுகளிடமும், மற்ற நாடுகளின் தனியார் நிறுவனத்திடமும் தாரை வார்க்கப்பட்டு நமது பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க பெரும்பாலான நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள தங்கள் அரசியல் எதிரிகளையும் அனைத்து பிரிவு மக்களையும் அச்சுறுத்தி அடிப்பணிய வைக்க இது போன்ற உளவு செயலிகள் தேவைப்படுகிறது. இன்றைய எதார்த்தத்தில் இந்த செயலிகள் உண்மையில் எதேச்சதிகாரத்தையும், நிதிமூலதன ஆதிக்கத்தையும், பாசிசத்தையுமே கட்டியமைக்க அடித்தளமிடுகிறது.

மோடி அரசு, இந்த உளவு செயலியை நிர்மாணிப்பதற்கு என்.எஸ்.ஒ கொடுத்த தொழில் நுட்ப அடிக்கட்டுமானத்தை நிர்மானித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் இரகசியமும், இறையாண்மையும் ஒரு அந்நிய தனியார் நிறுவனத்திடம் தாரை வார்த்துள்ளது. நாட்டின் எந்த திறன் பேசிகளையும் கட்டுப்படுத்துவதில் இந்திய அரசின் உளவு நிறுவனங்களுக்கு இருக்கும் உரிமையைவிட அந்நிய நிறுவனமான என்.எஸ்.ஒ நிறுவனம்தான் அதன் முழு உரிமையாளர்களாக உள்ளனர். உளவு பார்க்க கோரும் தரவுகள் அனைத்தும் இந்திய அரசின் உளவு நிறுவனங்களே இஸ்ரேல் நிறுவனத்தின் கையை எதிர்ப்பார்த்துதான் இருக்க வேண்டும். உண்மையில் திறன் பேசிகளை மட்டும் இது கட்டுப்படுத்துகிறது என்பது உண்மையில்லை. இது இணையத்தின் பல்வேறு கட்டுமானங்களுக்கு உள்ளும் செல்லக் கூடிய ஆற்றல் உள்ளதாகவே தெரிகிறது. இப்படி நாட்டின் இறையாண்மையை அந்நியர்களின் ஆதிக்கத்துக்கு திறந்து விட்டு நமக்கு தேசப் பக்தியை பாடம் எடுத்து வருகிறது இந்த விதேசிய மோடி கும்பல். இந்துத்துவாவிற்கும், இந்துத்துவ பாசிசத்திற்கும் எதிரான பல்வேறு ஜனநாயக சக்திகள் மீதும், பத்திரிக்கையாளர்கள் மீதும், செயற்பாட்டாளர்கள் என்று அனைத்து பிரிவுகளை ஒடுக்குவதற்கும், அழிப்பதற்கு இந்த செயலியை மோடி அரசு பயன்படுத்தி வருகிறது. இது உண்மையில் நாட்டில் அமைதியின்மையை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு அடக்குமுறைகளும் எதிர்கால அமைதியின்மைக்கே வழிவகுக்கிறது. பாசிச மோடி அரசின் பெகாசஸ் உளவு என்பது ஜனநாயகத்தின் மீதான பயங்கரவாத தாக்குதல் ஆகும். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் காணப்படும் தீவிரவாதம் என்பது அரசு பயங்கரவாதத்தின் விளைபொருளே. பாசிச மோடி அரசு பதவி ஏற்றதிலிருந்தே பல்வேறு தரப்புகள் மீது அரசு நிறுவனத்தைக் கொண்டும், பல்வேறு இந்துத்துவ அமைப்புகளைக் கொண்டும் பயங்கரவாத தாக்குதலை தொடுத்து வருகிறது. உளவு பார்ப்பது அல்லது கண்காணிப்பது என்பது இந்திய சட்ட வழிகாட்டுதல்படி செய்வது பிரச்சனையல்ல. ஆனால் இங்கே எவ்வித சட்ட நடைமுறையும் கைக்கொள்வது இல்லை என்பதை இதற்கு இலக்காகியுள்ள தனி நபர்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம். தனி நபர்களை உளவு பார்ப்பதே அடிப்படை ஜனநாயகத்திற்கும் தனிமனித உரிமைக்கும் எதிரானது; சட்ட விரோதமானது; இதை நியாயப் படுத்த முடியாமல்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, மத்திய அரசு இதற்கு எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இப்படி தனிமனித கண்காணிப்பே சட்ட விரோதமானது என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே பாசிச மோடி கும்பல் அடுத்த கட்டத்திற்கு இட்டுச்சென்று விட்டார்கள். பாசிச மோடி கும்பல் இதை வெறும் கண்காணிப்புக்கு மட்டும் பயன்படுத்தவில்லை; மக்களுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் போராடும் செயற்பாட்டாளர்களை சதித்தனமாக அவர்களின் மிண்ணனு சாதனங்களில் உள்நுழைந்து போலித் தரவுகளையும் தடயங்களையும் அவர்களே உள்ளீடு செய்வதுதான் மிகமிக ஆபத்தான அம்சம். இதற்காக அவர்கள் பெகாசஸ் போன்ற உளவு செயலியை மட்டும் பயன்படுத்தவில்லை. இதுபோன்ற பல்வேறு செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல் அவர்கள் திறன்பேசிகளை மட்டும் பயன்படுத்தவில்லை மடிக்கணிணி போன்ற பல்வேறு மிண்ணனு சாதனங்களை பயன்படுத்துகின்றனர். இச்செயலிகள் மூலம் இலக்கு வைக்கப்பட்ட தனி நபர்களை பார்த்தாலே நமக்கு புரிவது என்னவென்றால் மோடி அரசின் எதிரிகள் யார் என்பதும் மோடி அரசு எந்தப் பிரிவின் பிரதிநிதிகள் என்பதும் புரிந்துகொள்ளலாம். பெகாசஸ் போன்ற உளவு செயலிகள் மூலம் அரசு உளவு நிறுவனங்கள் ஜனநாயகத்திற்கும் சுதந்திரத்திற்கும் எதிராக தொடுக்கும் பயங்கரவாத தாக்குதலுக்கு சிறந்த ஆயுதமாக மாறியுள்ளதை நாம் மேலே கண்டோம். நாட்டின் இறையாண்மையை காக்கவும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் அரசு கைக்கொள்ளும் ஆயுதங்களை (பெகாசஸ் போன்ற உளவு செயலிகளை) எதிர்த்தப் போராட்டம் மட்டும்போதாது; அதை கைக்கொள்ளும் அரசுகளையும் தூக்கி எறிய வேண்டும். ஏவப்பட்ட அம்பைவிட, ஏவிய வேட்டைகாரனே பிரதான ஆபத்து. அதனால் பாசிச தாக்குதலை ஏவிய பாசிச மோடியாட்சியை தூக்கியெறிவது மட்டுமின்றி மோடி ஆட்சி கடைப்பிடிக்கும் அரசியல் பொருளாதார கொள்கைகள்தான் நமது பிரதான இலக்குகளாகும். ஏனென்றால் இந்த அரசியல் பொருளாதார கொள்கைகள்தான் பாசிசத்தை உருவாக்கும் கூறுகள். அதனால் பெகாசஸ் போன்ற அரசு பயங்கரவாத ஆயுதங்களை மட்டும் களைவதோடு நின்றுவிடாமல் இதை கைக்கொள்ளும் இந்துத்துவ பாசிச மோடி ஆட்சியையும், இந்த ஆட்சி சேவகம் செய்யும் தரகு முதலாளிய வர்க்கத்தையும், அந்த வர்க்கத்தை உருவாக்கிய ஏகாதிபத்தியத்தையும் அதன் ஏகபோக நிறுவனங்களையும், இதற்கெல்லாம் வழிவகுக்கும் அரசியல் பொருளாதார கொள்கைகளையும் ஒன்று சேர எதிர்த்து போராடுவதே நமது இலக்காகவும் தீர்வாகவும் அமைய வேண்டும்.

(முற்றும்)

- சமரன்

(பிப்ரவரி & மே இதழ்களிலிருந்து)