சிறு பொறி பெருங் காட்டுத் தீயை மூட்டும் - மாவோ
(1930, ஜனவரி 5)

இது தோழர் மாசேதுங் அவர்களால் அச்சமயத்தில் கட்சிக்குள் நிலவிய நம்பிக்கையற்ற சிந்தனையை விமர்சனம் செய்வதற்காக எழுதப்பட்ட ஒரு கடிதம்.
எமது கட்சியிலுள்ள தோழர்கள் சிலர் தற்போதைய நிலைமை பற்றிய மதிப்பீடும் அதையொட்டிய நமது நடவடிக்கையும் என்ற பிரச்சினையைப் பொறுத்தமட்டில் இன்னும் சரியான கருத்துக்கு வரவில்லை. புரட்சிப் பேரெழுச்சி தவிர்க்கப்பட முடியாதது என்று அவர்கள் நம்பியபோதிலும் அது கூடிய சீக்கிரத்தில் நிகழக் கூடியதென்பதை நம்ப மறுக்கின்றனர். அதனால், அவர்கள் கியாங்சி மாகாணத்தை வென்றெடுக்கும் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஃபூகியன். குவாங்துங், கியாங்சி ஆகிய மாகாணங்களுக்கிடையிலான எல்லைப் பிரதேசங்கள் மூன்றிலும் அலைந்து திரியும் கொரில்லா நடவடிக்கைகளை மேற்கொள்வதொன்றனை மாத்திரமே ஏற்றுக்கொள்கின்றனர்; அதே வேளையில், கொரில்லாப் பிரதேசங்களில் சிவப்பு அரசியல் அதிகாரத்தை ஸ்தாபிக்கவேண்டுமென்பதை ஆழமாகப் புரிந்து கொள்ளாமையால் இந்தச் சிவப்பு அரசியல் அதிகாரத்தை ஸ்திரப்படுத்துவதன் மூலமும் விரிவுபடுத்துவதன் மூலமும் நாடு முழுவதிலும் புரட்சிப் பேரெழுச்சியைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதையும் ஆழமாகப் புரிந்துகொள்ளவில்லை. புரட்சிப் பேரெழுச்சி இன்னும் தொலைவில் இருக்கும்போது கஷ்டப்பட்டு அரசியல் அதிகாரத்தை ஸ்தாபிக்க முயல்வது வீண் முயற்சியென அவர்கள் கருதுகிறார்கள் போலத் தெரிகிறது. அதற்குப் பதில், எமது அரசியல் செல்வாக்கை அலைந்து திரியும் கொரில்லா நடவடிக்கைகள் என்ற இலகுவான முறையின் மூலம் விரிவாக்கி, நாடு பூராவுமுள்ள வெகுஜனங்களை வென்றெடுத்த பின்னர் அல்லது கிட்டத்தட்ட வென்றெடுத்த பின்னர் நாடு முழுவதிலும் ஆயுதக்கிளர்ச்சி தொடுக்க விரும்புகின்றனர். அதில் செஞ்சேனையும் பங்குபற்றுவதோடு அது நாடுபரந்த மாபெரும் புரட்சியாகலாம் என நம்புகின்றனர். நாடு முழுவதும் எல்லாப் பிரதேசங்களிலும் முதலில் பொது மக்களை வென்றெடுத்துப் பின்னர் அரசியல் அதிகாரத்தை ஸ்தாபிக்கவேண்டுமென்ற அவர்களுடைய தத்துவம் சீனப் புரட்சியின் யதார்த்த நிலைமையுடன் ஒத்துப்போகவில்லை. இந்தத் தத்துவத்தின் ஊற்றுமூலம் பிரதானமாக, சீனா அதற்காகப் பல ஏகாதிபத்திய வல்லரசுகள் போட்டிபோடுகின்ற ஒரு அரைக்காலனித்துவ நாடு என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்ளத் தவறியதிலிருந்து ஏற்படுகிறது. இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டால், முதலாவதாக, ஆளும் வர்க்கங்களுக்கிடையேயுள்ள நீடித்த, சிக்கலான யுத்தமென்ற அசாதாரண நிகழ்ச்சி உலகம் முழுவதிலும் சீனாவில் மாத்திரம் காணப்படுவதற்கான காரணத்தையும் இந்த யுத்தம் நாளுக்குநாள் தீவிரமாகுவதற்கும் விரிவடைவதற்குமான காரணத்தையும் ஒருமைப்பாடுடைய ஆட்சி ஒன்று என்றும் நிலவாததற்கான காரணத்தையும் புரிந்து கொள்ளலாம். இரண்டாவதாக, விவசாயிப் பிரச்சினையின் பாரதூரத்தையும் அதன் மூலம் கிராமியக் கிளர்ச்சிகள் தற்போது நாடு பரந்த அளவில் வளர்ச்சியடைவதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ளலாம். மூன்றாவதாக, தொழிலாளர் - விவசாயிகள் ஜனநாயக அரசியலதிகாரம் என்ற சுலோகத்தின் சரியான தன்மையையும் புரிந்துகொள்ளலாம். நான்காவதாக, உலகம் முழுவதிலும் சீனாவில் மாத்திரமே காணப்படுகின்ற, ஆளும் வர்க்கங்களுக்கிடையேயுள்ள நீடித்த, சிக்கலான யுத்தமென்ற அசாதாரண நிகழ்ச்சியின் தொடர்ச்சியான இன்னொரு அசாதாரண நிகழ்ச்சியையும், அதாவது, செஞ்சேனையினதும் கொரில்லாப் படைகளினதும் வாழ்வையும் வளர்ச்சியையும் அவற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட, வெள்ளையாட்சியால் சூழப்பட்ட சிறிய செம்பிரதேசங்களின் வாழ்வையும் வளர்ச்சியையும் புரிந்து கொள்ளலாம் (இத்தகைய அசாதாரண நிகழ்ச்சி சீனாவிற்கு வெளியே இல்லை). ஐந்தாவதாக, செஞ்சேனை, கொரில்லாப் படைகள், செம்பிரதேசங்கள் ஆகியவற்றின் ஸ்தாபிதமும் வளர்ச்சியும் அரைக்காலனித்துவ சீனாவில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான விவசாயிப் போராட்டத்தின் மிக உயர்ந்த வடிவமாகவும் அரைக்காலனித்துவ விவசாயிப் போராட்டத்தின் வளர்ச்சியின் தவிர்க்கப்படமுடியாத விளைவாகவும் விளங்குவதோடு அவை நாடு பூராவும் புரட்சியின் பேரெழுச்சியைச் சந்தேகமின்றித் துரிதப்படுத்தும் மிக முக்கிய அம்சமாகவும் விளங்குகின்றன எனவும் புரிந்து கொள்ளலாம். ஆறாவதாக, அலைந்து திரியும் கொரில்லா நடவடிக்கைகளை மாத்திரம் விரும்பும் கொள்கையால் நாடுபரந்த புரட்சிப் பேரெழுச்சியைத் துரிதப்படுத்தும் இந்தக் கடமையை நிறைவேற்றமுடியாது என்பதையும் புரிந்துகொள்ளலாம். ஆனால், சுதே யும் மா சே துங்கும், ஃபாங் சி-மின்1னுங்கூட, கைக்கொண்ட கொள்கை, அதாவது, தளப்பிரதேசங்களை ஸ்தாபித்தல்; அரசியலதிகாரத்தைத் திட்டமிட்டு நிறுவுதல்; நிலப்புரட்சியை ஆழமாக நடத்துதல்; முதலில் வட்டாரச் செங்காவலர்படை, பின்னர் குறிச்சிச் செங்காவலர்படை, பின்னர் மாவட்டப் பொதுச் செங்காவலர்படை அதன் பின்னர் ஸ்தலச் செஞ்சேனை என கிராமமான செஞ்சேனையாக்கும் வரை கட்டியமைக்கும் தொடர்ச்சியான முறையில் மக்கள் ஆயுதப்படைகளை விரிவாக்குதல்; அலையலையாக முன்னேறுவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பரப்புதல், இவை போன்ற இன்னும் பிற பற்றிய கொள்கை ஐயமின்றி சரியானதென்பதையும் புரிந்துகொள்ளலாம். இதன் மூலந்தான், சோவியத் யூனியன் உலகம் முழுவதுமுள்ள புரட்சிகர வெகுஜனங்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது போல, நாமும் நாடு பூராவும் உள்ள புரட்சிகர வெகுஜனங்களின் நம்பிக்கையைப் பெறமுடியும். இதன் மூலந் தான் பிற்போக்கு ஆளும் வர்க்கங்களுக்குப் பிரமாண்டமான கஷ்டங்களை உண்டாக்குவதும் அவற்றின் அஸ்திவாரத்தை ஆட்டங்காணச் செய்து அவற்றின் உட்சிதைவைத் துரிதப்படுத்துவதும் சாத்தியமாகும். இதன் மூலந்தான் வருங்கால மாபெரும் புரட்சியின் பிரதான ஆயுதமாக விளங்கக்கூடியதான செஞ்சேனையொன்றை உருவாக்குவது உண்மையில் சாத்தியமாகும். சுருங்கக்கூறின், இதன் மூலந்தான் புரட்சிகரப் பேரெழுச்சியைத் துரிதப்படுத்துவது சாத்தியமாகும்.
புரட்சியில் அவசரத்தன்மை என்ற நோயால் பீடிக்கப்பட்டுள்ள தோழர்கள் தகாத முறையிற் புரட்சியின் அகநிலைச் சக்திகளைக்2 கூட்டியும் எதிர்ப்புரட்சிச் சக்திகளைக் குறைத்தும் மதிப்பிடுகிறார்கள். இப்படியானதொரு மதிப்பீடு பிரதானமாக அகநிலைவாதத்திலிருந்து தோன்றுகிறது. முடிவில், அது சந்தேகமின்றிக் கண்மூடித்தனவாதத்திற்கு வழிநடத்திச் செல்கிறது. மறுபுறம், புரட்சியின் அகநிலைச் சக்திகளைக் குறைத்தும் எதிர்ப்புரட்சிச் சக்திகளைக் கூட்டியும் மதிப்பிடுவதுங்கூட ஒரு தகாத மதிப்பீடாகும். அது இன்னொரு வகையான தீயவிளைவைத் தோற்றுவிப்பதும் நிச்சயம். ஆகவே சீனாவின் அரசியல் நிலைமையை அனுமானிக்கும்போது பின்வரும் முக்கியமான அம்சங்களைப் புரிந்து கொள்வது அவசியம்.
(1) சீனாவிலுள்ள புரட்சியின் அகநிலைச் சக்திகள் தற்போது பலவீனமானவையாக இருப்பினும் சீனாவின் பின் தங்கியதும் தகர்ந்துபோகக்கூடியதுமான சமூக பொருளாதார அமைப்பில் தங்கியிருக்கும் பிற்போக்கு ஆளும் வர்க்கங்களின் நிறுவனங்கள் அனைத்தும் (அரசியல் அதிகார உறுப்புகள், ஆயுதப்படைகள், அரசியல் கட்சிகள், இன்னபிற) கூடப் பலவீனமானவையாகவே இருக்கின்றன. இது, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புரட்சியின் அகநிலைச் சக்திகள் தற்போது ஒருவேளை சீனாவிலுள்ளவற்றைவிடப் பலம் வாய்ந்தனவாக இருக்கின்ற போதிலும் அவற்றின் பிற்போக்கு ஆளும் வர்க்க சக்திகள் சீனாவிலுள்ளவற்றைவிடப் பலமடங்கு பலம் வாய்ந்தனவாக இருப்பதனால் அங்கே இன்னும் புரட்சி உடனடியாக வெடிக்கமுடியாததாயுள்ளது என்பதை விளக்குவதற்கு உதவி செய்கிறது. சீனாவில் புரட்சியின் அகநிலைச் சக்திகள் தற்போது பலவீனமானவையாக இருக்கின்றபோதிலும் எதிர்ப்புரட்சி சக்திகளும் ஒப்பிடுமிடத்துப் பலவீனமானவையாயுள்ளதால் சீனப் புரட்சி மேற்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள புரட்சியைவிட வெகுதுரிதமாகப் பேரெழுச்சியொன்றனை நோக்கிச் செல்வது திண்ணம்.
(2) 1927இல் புரட்சி தோல்வியுற்றது முதல் புரட்சியின் அகநிலைச் சக்திகள் உண்மையில் பெரிதும் பலவீனப்படுத்தப் பட்டுவிட்டன. எஞ்சியுள்ள சக்திகள் மிகவும் சிறியனவாக உள்ளன. தோற்றங்களைக் கொண்டு மட்டும் மதிப்பிடும் தோழர்கள் இயற்கையாகவே நம்பிக்கையிழந்த இயல்புடையவராக உள்ளனர். ஆனால், நாங்கள் சாராம்சத்தைக் கொண்டு மதிப்பிடுவோமானால் அது முற்றிலும் வேறாகும். நாம் இவ்விடத்தில் "சிறு பொறி பெருங் காட்டுத் தீயை மூட்ட முடியும்" என்ற சீனப் பழமொழியை பிரயோகிக்கலாம். வேறு வார்த்தைகளில் கூறின், எமது சக்திகள் தற்போது சிறியனவாக இருப்பினும் அவை வெகுவிரைவில் வளரும். சீனாவில் நிலவும் நிலைமைகளில் அவற்றின் வளர்ச்சி சாத்தியமானது மட்டுமல்ல உண்மையில் தவிர்க்கப்பட முடியாததுங்கூட. மே 30 இயக்கமும்3 அதைத் தொடர்ந்த மாபெரும் புரட்சி இயக்கமும் இதை முற்றாக நிரூபித்துள்ளன. ஒரு விஷயத்தை நோக்கும் போது, நாம் அதன் சாராம்சத்தை ஆராயவேண்டும். அதன் தோற்றத்தை வாயிலுக்கு இட்டுச்செல்லும்படியாக மட்டுமே கருதவேண்டும். ஒருகால் அந்த வாயிலைக் கடந்து விட்டால், நாம் அவ்விஷயத்தின் சாராம்சத்தைக் கிரகித்துக்கொள்ள வேண்டும். நம்பகமான விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிமுறை என்பது இதுவே.
(3) இதுபோலவே, எதிர்ப்புரட்சி சக்திகளை மதிப்பீடு செய்யும் பொழுது நாம் ஒரு போதும் அவற்றின் தோற்றத்தை மட்டும் பார்க்கக்கூடாது; அவற்றின் சாராம்சத்தை ஆராயவேண்டும். ஹுனான்-கியாங்சி எல்லைப் பிரதேசத்திலிருந்த எமது சுதந்திர ஆட்சியின் தொடக்ககாலத்தில், தோழர்கள் சிலர் ஹுனான் மாகாணக் கமிட்டி அப்பொழுது செய்த தவறான மதிப்பீட்டை உண்மையில் நம்பி, வர்க்க எதிரி ஒரு அடிக்குக்கூட நிற்கமுடியாதவனெனக் கருதினர். இன்றும் நகைப்பிற்கிடமானவையாயிருக்கும் வர்ணனைச் சொற்றொடர்களான "கடுமையாக ஆட்டங்காண்பவன்", "மிகவும் பீதியடைந்தவன்" என்பன இரண்டும் ஹுனான் ஆட்சியாளர் லூ தி-பிங்ஙை4 மதிப்பிடுமிடத்து அப்போது (1928ஆம் ஆண்டு மே - ஜூன்) ஹுனான் மாகாணக் கமிட்டியால் உபயோகிக்கப்பட்டவை. இந்த மதிப்பீடு அரசியல் ரீதியில் தவிர்க்கப்பட முடியாதபடி கண்மூடித்தனவாதத்திற்கு இட்டுச்சென்றது. ஆனால் அந்த ஆண்டின் நவம்பர் முதல் கடந்த ஆண்டு பிப்ரவரிக்கு (சியாங் கை-ஷேக்கிற்கும் குவாங்சி யுத்தப் பிரபுக்களுக்கு இடையில் யுத்தம்5 வெடிப்பதற்கு முன்) இடைப்பட்ட ஏறக்குறைய நான்கு மாத காலத்தில், சிங்காங் மலைகளுக்கெதிரான எதிரியின் மூன்றாவது "கூட்டு அடக்குமுறைப் படையெடுப்பை6"எதிர்நோக்கிய சமயத்தில் சில தோழர்கள் "எவ்வளவு காலத்திற்கு எமது செங்கொடி பறக்கும்?" என்ற சந்தேகத்தை எழுப்பினர். உண்மையில் அப்பொழுது, சீனாவிலே பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றிற்கு இடையிலிருந்த போராட்டம் மிகவும் வெளிப்படையானதாயிற்று, அத்துடன் சியாங் கை-ஷேக், குவாங்சி யுத்தப் பிரபுக்கள், ஃபுங் யு-சியாங் ஆகியோருக்கு இடையில் சிக்கலான போர் நிலைமை உருவாகியது; எதிர்ப்புரட்சி எழுச்சி தணியவும் புரட்சிகர எழுச்சி திரும்பத்தோன்றவும் தொடங்கிய காலம் உண்மையில் இந்தக் காலந்தான், ஆனால் அப்பொழுது செஞ்சேனையிலும் ஸ்தலக் கட்சி நிறுவனங்களிலும் மாத்திரம் நம்பிக்கையற்ற கருத்துக்கள் காணப்படவில்லை, மத்திய கமிட்டி கூடத் தோற்றங்களால் தவறாக வழிகாட்டப்பட்டு, ஒரு நம்பிக்கையற்ற தொனியுடையதாயிற்று. அதன் பிப்ரவரி கடிதம்7 அப்போது கட்சியில் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கையற்ற ஆராய்விற்குச் சான்றாக விளங்குகின்றது.
(4) இன்றுள்ள புறநிலை நிலைமை தற்போதைய மேலோட்டமான தோற்றத்தை மட்டும் பார்த்துச் சாராம்சத்தைப் பார்க்காத தோழர்களை இலகுவில் தவறாக வழிநடத்தக்கூடிய ஒன்றாகவே இன்னும் உள்ளது. குறிப்பாக, செஞ்சேனையில் வேலை செய்யும் எமது தோழர்கள் போரில் தோல்வியுற்றாலோ சுற்றிவளைக்கப்பட்டாலோ அல்லது பலம் வாய்ந்த எதிரிப்படையால் துரத்தப்பட்டாலோ, தற்காலிகமானதும் விசேஷமானதும் குறுகியதுமான நிலையைத் தம்மையறியாது அடிக்கடி பொதுவானதாக்கி மிகைப்படுத்துவர். அவர்களின் கண்களுக்குச் சீனாவிலும் உலகிலும் உள்ள நிலைமை முற்றிலும் நம்பிக்கைக்கிடம் அளிக்காதது போலவும் புரட்சியின் வெற்றிக்கான வாய்ப்புகள் நிச்சயமற்றவை போலவும் இருக்கின்றன. விஷயங்களைப் பார்க்கும்போது அவற்றின் தோற்றத்தைப் பிடித்துக்கொண்டு அவற்றின் சாராம்சத்தை ஒதுக்கித் தள்ளுவதற்கான காரணம் என்னவென்றால் அவர்கள் பொதுவான நிலைமையின் சாராம்சத்தை விஞ்ஞான ரீதியாக ஆராயாமையேயாம். சீனாவில் புரட்சிப் பேரெழுச்சியொன்று விரைவில் தோன்றுமா என்று கேட்டால், புரட்சியின் பேரெழுச்சியை ஏற்படுத்தும் பலவித முரண்பாடுகள் உண்மையில் தொடர்ந்து வளர்கின்றனவா என்பதை அலசி ஆராய்வதன் மூலந்தான் அதற்குத் தீர்வுகாண முடியும். உலகில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலும் ஏகாதிபத்தியங்களுக்கும் அவற்றின் காலனிகளுக்கு இடையிலும் ஏகாதிபத்தியங்களுக்கும் அவற்றின் சொந்த நாடுகளிலேயேயுள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு இடையிலும் உள்ள முரண்பாடுகள் வளர்கின்றதனால் ஏகாதிபத்தியங்களுக்குச் சீனாவிற்காகப் போட்டியிடும் தேவை மேலும் அவசரமாகிறது. சீனாவிற்காக ஏகாதிபத்தியங்களுக்கு இடையே ஏற்படும் போட்டி மிகவும் உக்கிரமடைந்ததும் ஏகாதிபத்தியத்திற்கும் சீன தேசம் முழுவதற்கு இடையிலுள்ள முரண்பாடும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு இடையேயுள்ள முரண்பாடும் சீன மண்ணிலேயே ஒருங்குவளர்ந்து வருவதனால், சீனாவின் பல்வேறுபட்ட பிற்போக்கு ஆளும் கும்பல்களுக்கு இடையே நாளுக்கு நாள் விரிவடைந்தும் தீவிரமடைந்தும் வருகின்ற சிக்கலான யுத்த நிலைமை உண்டாகியும் அவற்றிற்க்கு இடையேயுள்ள முரண்பாடுகள் நாளுக்கு நாள் வளர்ந்தும் வருகின்றன. பல்வேறுபட்ட பிற்போக்கு ஆளும் கும்பல்களுக்கிடையேயுள்ள முரண்பாடுகளை - யுத்தப் பிரபுக்களுக்கிடையேயுள்ள சிக்கலான யுத்தத்தை - தொடர்ந்து வரி அதிகரிக்கின்றது. இதனால் வரி கொடுக்கும் பரந்துபட்ட பொது மக்களுக்கும் பிற்போக்கு ஆட்சியாளருக்கும் இடையிலுள்ள முரண்பாடு நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது. ஏகாதிபத்தியத்திற்கும் சீனாவின் தேசிய தொழிலுக்கும் இடையிலுள்ள முரண்பாட்டினைத் தொடர்ந்து ஏகாதிபத்தியம் சீனத் தேசியத் தொழிலுக்கு இடம் விட்டுக்கொடுக்கவில்லை என்ற உண்மை ஏற்படுகின்றது. இதனாலே சீன பூர்ஷுவா வர்க்கத்திற்கும் சீனத் தொழிலாளி வர்க்கத்திற்குமிடையிலுள்ள முரண்பாடு வளர்கிறது. சீன முதலாளிகள் தொழிலாளரை வெறித்தனமாகச் சுரண்டுவதன் மூலம் தமது வளர்ச்சிக்கு வழியைக் கண்டுபிடிக்க முயல, அதனைச் சீனத் தொழிலாளர் எதிர்க்கின்றனர். ஏகாதிபத்திய வர்த்தக ஆக்கிரமிப்பு, சீன வர்த்தக முதலாளிகளின் கொள்ளையடிப்பு, அரசாங்கத்தின் பளுவான வரி, இன்ன பிறவற்றினைத் தொடர்ந்து நிலப்பிரபு வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கு மிடையிலுள்ள முரண்பாடு மேலும் ஆழமாகின்றது, அதாவது குத்தகை, கடும் வட்டி ஆகியவற்றின் மூலமான சுரண்டல் மேலும் கொடூரமானதாக, விவசாயிகளுக்கு நிலப்பிரபுக்கள் மீதுள்ள வெறுப்பு மேலும் வளர்கிறது. பிற நாட்டுப் பொருட்களின் சுமையினாலும் பரந்துபட்ட தொழிலாளரும் விவசாயிகளும் பொருட்களை வாங்குவதற்குச் சக்தியற்றவராயிருப்பதனாலும் அரசாங்கத்தின் வரியதிகரிப்பினாலும் சீனப் பொருட்களில் வியாபாரம் செய்வோரும் தனிப்பட்ட உற்பத்தியாளரும் நாளுக்குநாள் பங்கலோட்டுத்தனத் தையடைகின்றனர். தானியமும் நிதியும் குறைவாயிருந்த நிலைமையிலும் பிற்போக்கு அரசாங்கம் தமது படைகளை முடிவின்றி விஸ்தரித்து, அதன் மூலம் போர்களை நாளுக்குநாள் விரிவாக்கியதால் பரந்துபட்ட போர்வீரர்கள் மாறாத வறுமைக்குள்ளாயினர். அரசாங்க வரி அதிகரித்ததனாலும் நிலப்பிரபுக்களின் குத்தகையிலும் வட்டியிலும் அதிகரிப்பு ஏற்பட்டதனாலும் யுத்த நாசங்கள் நாளாந்தம் பெருகியதாலும் நாட்டில் எங்கும் பஞ்சமும் கொள்ளையுமாயிருக்கின்றது; பரந்துபட்ட விவசாயிகளும் நகரிலுள்ள வறிய மக்களும் உயிர்வாழ முடியாமலிருக்கின்றனர். பாடசாலைகளில் பணமில்லாமையால் பல மாணவர்கள் தமது கல்விக்குக் குந்தகம் ஏற்படலாம் எனக் கவலைப்படுகின்றனர்; உற்பத்தி பின் தங்கியதாயிருப்பதால் பல பட்டதாரிகள் வேலை பெறும் நம்பிக்கையின்றியிருக்கின்றனர். நாம் இம்முரண்பாடுகளை யெல்லாம் ஒருகால் புரிந்துகொள்வோமானால், சீனா எவ்வளவு அச்சமும் ஏக்கமும் கவலையும் கொள்ளும் நிலையிலும் எவ்வளவு குழப்பமான நிலையிலும் இருக்கிறதென்பதை அறிந்து கொள்வோம். ஏகாதிபத்தியங்களுக்கும் யுத்தப் பிரபுக்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிரான புரட்சிப் பேரெழுச்சியை எப்படியும் தவிர்க்க முடியாதென்பதையும் அது வெகுவிரைவில் ஏற்படும் என்பதையும் உணர்ந்து கொள்வோம். சீனா முழுவதும் காய்ந்த விறகுகள் பரவப்பட்டிருக்கின்றன; அவை சட்டெனப் பெருசுவாலைவிட்டெரியும். "சிறு பொறி பெருங் காட்டுத் தீயை மூட்டும்" என்ற பழமொழி தற்போதைய நிலைமை வளரும் வகையைக் கூறுவதற்கான பொருத்தமான வர்ணனையேயாகும். பல இடங்களிலும் வளர்ந்துவரும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களையும் விவசாயிகளின் கிளர்ச்சிகளையும் போர்வீரர்களின் கலகங்களையும் மாணவர்களின் பாடநிறுத்தங்களையும் மாத்திரம் கொண்டே இந்தப் "பொறி" "பெருங் காட்டுத் தீயை மூட்டு" வதற்கு அதிக நேரமாகாது என்பதில் எவ்வித ஐயத்திற்குமிடமில்லை என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
மேற்கூறப்பட்டதன் பிரதான அம்சம் முன்னணிக் கமிட்டியிலிருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி மத்திய கமிட்டிக்கு வந்த கடிதத்தில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதி பின்வருமாறு:
"மத்திய கமிட்டியின் இந்தக் கடிதம் (1929, பிப்ரவரி 9 எனத் தேதியிடப்பட்டது) புறநிலை நிலைமை, எமது அகநிலை சக்திகள் ஆகியவை பற்றிச் செய்த மதிப்பீடு மிக நம்பிக்கையற்றதாக உள்ளது. சிங்காங் மலைகளுக்கெதிரான கோமிந்தாநின் மூன்றாவது 'அடக்குமுறை' நடவடிக்கை எதிர்ப்புரட்சிப் பேரெழுச்சியின் மிக உயர்ந்த மட்டத்தைக் காட்டுகின்றது. ஆனால், அவ்வுயர் மட்டம் அத்துடன் நின்றுவிட்டது. அது முதல் எதிர்ப்புரட்சிப் பேரெழுச்சி படிப்படியாகத் தணிந்துவந்துள்ளது; புரட்சிப் பேரெழுச்சி படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது. கட்சியின் போராற்றலும் ஸ்தாபனரீதியான வலிமையும் மத்திய கமிட்டியால் கூறப்பட்ட அளவிற்குப் பலவீனப்படுத்தப்பட்டிருப்பினும் எதிர்ப்புரட்சிப் பேரெழுச்சி படிப்படியாகத் தணியத் தணிய அவை விரைவாக மீட்கப்படுவதோடு, கட்சி ஊழியர்களிடையேயுள்ள ஊக்கமற்ற மனோபாவமும் விரைவாக மறைந்துவிடும். வெகுஜனங்கள் நிச்சயமாக எம் பக்கம் வருவார்கள். படுவதைவாதம்8 உண்மையில் 'மீன்களை ஆழமான நீருக்குள் ஓடச் செய்வது' போலுள்ளது. அத்துடன் சீர்திருத்தவாதத்தால் இனிமேலும் பொதுமக்களை ஈர்க்கமுடியாது. பொதுமக்கள் கோமிந்தாங் பற்றிய பிரமைகளை விரைவில் களைந்துவிடுவர் என்பதில் ஐயமில்லை. இனித் தோன்றும் நிலைமையில் பொதுமக்களை வென்றெடுப்பதில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் வேறெந்தக் கட்சியும் போட்டியிட இயலாது. கட்சியின் ஆறாவது தேசியக் காங்கிரஸ்9 முன்வைத்த அரசியல் மார்க்கமும் ஸ்தாபன மார்க்கமும் சரியானவை. அவை: தற்போதைய கட்டத்திலுள்ள புரட்சி ஜனநாயக ரீதியானதேயொழிய சோஷலிஸரீதியானதல்ல. கட்சியின் தற்போதைய கடமை ('பெரிய நகரங்களில்' என்ற வார்த்தைகள் இங்கே சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்) பொதுமக்களை வென்றெடுப்பதே அல்லாமல் உடனடியான கிளர்ச்சிகளைத் தோற்றுவிப்பதல்ல. எப்படியிருப்பினும் புரட்சி தீவிரமாக வளர்ச்சியடையும். ஆயுதக் கிளர்ச்சிகளுக்கான பிரச்சாரத்திலும் தயாரிப்புகளிலும் நாம் ஒரு ஊக்கமான மனோபாவத்தை மேற்கொள்ளவேண்டும். தற்போதைய மோசமான நிலைமையில் நாம் ஊக்கமான சுலோகங்களாலும் ஊக்கமான மனோபாவத்தினாலும் மாத்திரமே பொது மக்களை வழிநடத்தமுடியும். இப்படியானதோர் ஊக்கமான மனோ பாவத்தைக் கொள்வதனால் மாத்திரமே கட்சி தனது போராற்றலைத் திரும்பப் பெறமுடியும். ...பாட்டாளி வர்க்கத் தலைமையே புரட்சி யின் வெற்றிக்கான ஒரே திறவுகோல். கட்சிக்குப் பாட்டாளி வர்க்க அஸ்திவாரமிடுதல், கேந்திர பிரதேசங்களிலுள்ள தொழில் முயற்சிகளில் கட்சிக் கிளைகளைக் கட்டியமைத்தல் ஆகியனவே ஸ்தாபனரீதியில் கட்சியின் தற்போதைய முக்கியமான கடமைகளாகும்; ஆனால் அதே வேளையில், நகரங்களிலுள்ள போராட்டத்திற்கு உதவிசெய்வதற்கும் புரட்சிப் பேரெழுச்சியைத் துரிதப்படுத்துவதற்குமான பிரதான முன்கூட்டிய தேவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டுப்புறங்களில் போராட்டத்தின் வளர்ச்சியும் சிறிய பிரதேசங்களில் சிவப்பு அரசியலதிகார ஸ்தாபிதமும் செஞ்சேனையின் உருவாக்கமும் விரிவாக்கமுமாம். ஆகவே, நகரங்களில் போராட்டத்தைக் கைவிடுவது தவறாகும். அத்துடன் எமது அபிப்பிராயப்படி, விவசாயிகளின் பலம் வளர்ந்து, தொழிலாளர் பலத்தை விஞ்சி, புரட்சிக்கு ஊறு விளைவிக்கலாம் என எமது கட்சி அங்கத்தவர்கள் யாராவது அஞ்சுவதும் தவறாகும். ஏனெனில், விவசாயிப் போராட்டம் தொழிலாளர் தலைமையைப் பெறாததனால் அரைக்காலனித்துவ சீனாவின் புரட்சி தோல்வியுற்றிருக்கிறதேயொழிய விவசாயிகளின் போராட்டத்தின் வளர்ச்சி தொழிலாளர் சக்திகளை விஞ்சியதனால் புரட்சிக்கு என்றும் ஊறு விளைந்திருக்கின்றது என்று இல்லை.''
இந்தக் கடிதம் செஞ்சேனையின் நடவடிக்கைத் தந்திரோபாயம் பற்றிய கேள்விக்கான பின்வரும் விடையையும் கொண்டிருந்தது:
"செஞ்சேனையைப் பேணிப்பாதுகாப்பதற்கும் பொதுமக்களைத் தட்டியெழுப்புவதற்குமாகப் பிரதான இலக்குகளை மறைப்பதற்கு எமது படைகளை மிகச் சிறு யூனிட்டுகளாகப் பிரித்து நாட்டுப்புறத்தில் அவற்றைப் பரந்திருக்கச் செய்யவேண்டுமெனவும் சு தேயையும் மாசேதுங்கையும் ராணுவத்திலிருந்து வாபஸ் பெறச் செய்ய வேண்டுமெனவும் மத்திய கமிட்டி எம்மைக் கேட்கிறது. இது உண்மைக்குப் புறம்பான ஒரு கருத்து. எமது படையின் ஒவ்வொரு கம்பெனியையும் அல்லது ஒவ்வொரு பட்டாளத்தையும் தானாகவே செயற்படச் செய்து நாட்டுப்புறத்தில் பரவியிருக்கச் செய்வது மூலமும் பொதுமக்களைத் தட்டியெழுப்புவதற்குக் கொரில்லாத் தந்திரோபாயங்களைக் கையாள்வது மூலமும் எதிரிக்கு இலக்காகாமல் இருக்க 1927ஆம் ஆண்டுக் குளிர்காலம் முதல் திட்டமிட்டோம். நாம் இதைப் பல தடவை முயற்சித்துப் பார்த்தோம்; ஆனால், ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்தோம். அதற்கான காரணங்களாவன: (1) பிரதான சக்தியாகிய செஞ்சேனையின் போர்வீரர்களில் பெரும்பான்மையினர் பிற பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். ஆகவே அவர்கள் ஸ்தலச் செங்காவலர் படையினரிலிருந்தும் வேறுபட்ட பின்னணியையுடையவர்களாயுள்ளனர்; (2) சிறிய யூனிட்டாகப் பிரித்தமை பலவீனமான தலைமைக்கும் பாதகமான நிலைமைகளைச் சமாளிக்கும் திறமையின்மைக்கும் காரணமாகிறது. இது தோல்விக்குச் சுலபமாக இட்டுச் செல்கிறது: (3) யூனிட்டுகள் எதிரியால் எளிதில் ஒவ்வொன்றாக அழிக்கப்படக் கூடியனவாயிருக்கின்றன; (4நிலைமைகள் எவ்வளவிற்குப் பாதகமானவையாயிருக்கின்றனவோ அவ்வளவிற்கு எமது படைகளை ஒன்றுகுவிப்பதற்கும் எமது தலைவர்கள் போராட்டத்தில் உறுதியாக நிற்பதற்குமான தேவை அதிகரிக்கிறது. இதன் மூலந்தான் எம்மிடையே எதிரிக்கெதிராக உள் ஐக்கியம் நிலவமுடியும். சாதகமான நிலைமைகளில் மாத்திரமே கொரில்லா நடவடிக்கைகளுக்காகப் படைகளைப் பிரிப்பது புத்திசாலித்தனமானதாகும். அந்த நேரங்களில் மாத்திரம் தலைவர்கள் பாதகமான நிலைமைகளில் இருந்தது போல அணிகளுடன் எப்பொழுதும் இருக்கவேண்டியதில்லை."
இந்தப் பந்தியின் குறைபாடு என்னவென்றால் இதில் படைகளைப் பிரிக்க இயலாமைக்காகக் காட்டப்பட்ட காரணங்கள் ஊக்கமற்றவையாகவும் பெரிதும் போதாதனவாகவும் உள்ளன. எமது படையை ஒன்றுகுவிப்பதற்கான ஊக்கமான காரணமென்னவென்றால் ஒன்றுகுவிப்பது மூலம் நாம் ஒப்பீட்டளவில் பெரிய எதிரி யூனிட்டுகளைத் துடைத்தொழிக்கவும் மாநகர்களையும் பட்டினங்களையும் கைப்பற்றவும் முடியும். ஒப்பீட்டளவில் பெரிய எதிரி யூனிட்டுகளைத் துடைத்தொழித்த பின்னரும் மாநகர்களையும் பட்டினங்களையும் கைப்பற்றிய பின்னருமே எம்மால் வெகுஜனங்களைப் பரந்துபட்ட அளவில் தட்டியெழுப்பவும் அருகருகாயமைந்துள்ள பல மாவட்டங்களை ஒன்று சேர்க்கும் அரசியல் அதிகாரத்தை அமைக்கவும் முடியும். இதன் மூலம் மாத்திரமே பரவலான பாதிப்பை ஏற்படுத்தவும் (எம்மால் கூறப்பட்ட எமது அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்தல்) புரட்சிப் பேரெழுச்சியைத் துரிதப்படுத்துவதற்கு உருப்படியான, பயனுள்ள முறையில் உதவவும் முடியும். உதாரணமாக, சென்ற ஆண்டிற்கு முந்திய ஆண்டில் ஹுனான்-கியாங்சி எல்லைப் பிரதேசத்தில் அமைத்த ஆட்சியும் கடந்த ஆண்டு மேல் ஃபூகியனில் அமைத்த ஆட்சியும்10 எமது படைகளை ஒன்றுகுவிப்பது என்ற கொள்கையின் விளைவாகும். இது ஒரு பொதுக் கோட்பாடு. அப்படியானால் எமது படைகள் பிரிக்கப்படுவதற்குரிய நேரங்களில்லையா? அவையும் இருக்கின்றன. முன்னணிக் கமிட்டியிலிருந்து மத்திய கமிட்டிக்கு வந்த கடிதம் ஒரு குறுகிய சுற்றுவட்டத்திற்குட்பட்ட படைகளைப் பிரிப்பது உட்படச் செஞ்சேனைக்கான கொரில்லாத் தந்திரோபாயங்களைப் பற்றிக் கூறுகிறது:
"கடந்த மூன்றாண்டுகாலப் போராட்டத்திலிருந்து நாம் பெற்ற தந்திரோபாயங்கள் பண்டைய அல்லது தற்கால தந்திரோபாயங் களிலிருந்தும் சீனாவின் இதர தந்திரோபாயங்களிலிருந்தும் அந்நிய நாட்டுத் தந்திரோபாயங்களிலிருந்தும் உண்மையில் வேறுபட்டன. எமது தந்திரோபாயங்களால் நாளுக்குநாள் விரிவடையும் அளவில் பொதுமக்களைப் போராட்டத்திற்குத் தட்டியெழுப்பலாம். அத்துடன் எவ்வளவு வலிமையுடைய எந்த எதிரியும் எம்முடன் போராட முடியாது. நமது தந்திரோபாயங்கள் கொரில்லாத் தந்திரோ பாயங்கள். அவை பிரதானமாகப் பின்வரும் அம்சங்களை அடக்கியவை: 'மக்களைத் தட்டி எழுப்ப நமது படைகளைப் பிரிப்பது; எதிரியைச் சமாளிக்க நமது படைகளை ஒன்றுகுவிப்பது.' 'எதிரி முன்னேறும்போது, நாம் பின்வாங்குவது; எதிரி முகாமடிக்கும்போது நாம் தொல்லை கொடுப்பது; எதிரி களைத்திருக்கும்போது நாம் தாக்குவது; எதிரி பின்வாங்கும்போது நாம் துரத்துவது.' 'ஸ்திரமான தளப்பிரதேசங்களை11 விஸ்தரிக்க, அலை அலையாக முன்னேறும் கொள்கையைப் பிரயோகிப்பது; பலம்வாய்ந்த எதிரியால் துரத்தப்படும்போது வட்டமிட்டுச் செல்லும் கொள்கையைப் பிரயோகிப்பது.' 'மிகக் குறுகிய காலத்தில் சாத்தியமான மிகச் சிறந்த வழிகளில் மிகப் பெரிய அளவில் மக்களைத் தட்டி எழுப்புவது.' இந்தத் தந்திரோபாயங்கள் எல்லாம் வலைவீசுவது போன்றவை; எந்த நேரத்திலும் நாம் அதை வீசவும் இழுக்கவும் கூடியவர்களாக இருக்கவேண்டும். மக்களை வென்றெடுப்பதற்கு நாம் அதை அகல விரிக்கிறோம்; எதிரியைச் சமாளிப்பதற்கு நாம் அதைச் சுருக்கி இழுக்கின்றோம். கடந்த மூன்றாண்டுகளாக நாம் கையாண்ட தந்திரோபாயங்கள் இவையே.''
இங்கே, "வலையை அகல விரிப்பது" என்பது எமது படைகளைக் குறுகிய சுற்று வட்டத்திற்குட் பிரிப்பதைக் குறிக்கிறது. உதாரணமாக, நாம் ஹுனான்-கியாங்சி எல்லைப் பிரதேசத்திலுள்ள யுங்ஸின் மாவட்ட நகரத்தை முதல் தடவை கைப்பற்றிய போது 29ஆம் 31ஆம் ரெஜிமென்டுகளின் படைகளை யுங்ஸின் மாவட்டத்தின் எல்லைக்குட்பட்டு பிரித்தோம். மூன் றாவது முறையாக யுங்ஸினைக் கைப்பற்றியபோது 28ஆம் ரெஜிமென்டை ஹன்ஃபு மாவட்டத்தின் எல்லைக்கும் 29ஆம் ரெஜிமென்டை லியன்ஹுவாவிற்கும் 31ஆம் ரெஜிமென்டை கிஆன் மாவட்ட எல்லைக்கும் அனுப்புவதன் மூலம் எமது படைகளை இன்னொரு முறை பிரித்தோம். கடந்த ஏப்ரலிலும் மே-யிலும் தென் கியாங்சியின் மாவட்டங்களிலும் கடந்த ஜூலையில் மேல் ஃபூகியனின் மாவட்டங்களிலும் எமது படைகளைத் திரும்பப் பிரித்தோம். நிலைமைகள் ஒப்பீட்டளவில் உகந்தனவாகவும் தலைமை உறுப்புகள் கணிசமான அளவு வலிமைமிக்கதாகவும் இருக்கும் இவ்விரண்டு நிலைமைகளிலும் தான் நாம் எமது படைகளை விரிந்த சுற்று வட்டத்திற்குள் பிரிப்பது சாத்தியமாகும். ஏனென்றால், படைகளைப் பிரிப்பதற்கான எமது நோக்கம் பொதுமக்களை வென்றெடுப்பதையும் நிலப்புரட்சியை ஆழமாக நடத்தி அரசியல் அதிகாரத்தை ஸ்தாபிப்பதையும் செஞ்சேனையையும் ஸ்தல ஆயுதப் படைகளையும் விரிவாக்குவதையும் மேலும் சாத்தியமாக்குவதேயாம். ஆகையால், இந்த நோக்கம் நிறைவேற்றப்பட முடியாவிட்டால் அல்லது படைகளைப் பிரிப்பது இரண்டு வருடங்களுக்கு முன் ஆகஸ்டில் சென்சௌ மீது தாக்குதல் தொடுப்பதற்காக ஹுனான் - கியாங்சி எல்லையில் எமது படைகளைப் பிரித்தபோது நடந்தது போலத் தோல்விக்கும் செஞ்சேனை பலவீனப்படுவதற்கும் வழிநடத்திச் சென்றால் எமது படைகளைப் பிரிக்காமல் இருப்பது சிறந்தது. இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்ட இரண்டு நிலைமைகளும் ஏற்படும் போது நாம் எமது படைகளைக் கட்டாயம் பிரிக்கவேண்டும். இதில் எவ்வித சந்தேகத்திற்குமிடமில்லை. ஏனென்றால், அப்பொழுது ஒன்றுகுவிப்பதை விடப் பிரிப்பதுதான் மிகவும் சாதகமானது.
மத்திய கமிட்டியின் பிப்ரவரிக் கடிதம் சரியான உணர் வைக் கொண்டதாயில்லாததோடு நான்காவது சேனையிலிருந்த கட்சித் தோழர்கள் பலர் மீது ஒரு தீய பாதிப்பையும் ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் மத்திய கமிட்டி சியாங்-கைஷே க்குக்கும் குவாங்சி யுத்தப் பிரபுக்களுக்குமிடையே ஒரு சமயம் போர் ஏற்படாது என்று தெரிவித்து ஒரு சுற்றறிக்கையும் வெளியிட்டது. எப்படியிருப்பினும், அது முதல், பொதுவாகக் கூறின் மத்திய கமிட்டியின் மதிப்பீடுகள் உத்தரவுகள் அனைத்தும் சரியானவையாக இருந்தன. தவறான மதிப்பீட்டை உள்ளடக்கியிருந்த அச்சுற்றறிக்கையைத் திருத்தியமைத்து மத்திய கமிட்டி ஏற்கெனவே இன்னொரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. செஞ்சேனைக்கான அதன் பிப்ரவரிக் கடிதத்தில் எவ்வித திருத்தமும் செய்யப்படாத போதிலும் அதனது தொடர்ந்து வந்த உத்தரவுகள் அதே மாதிரியான நம்பிக்கையற்ற தன்மையில் அமைந்திருக்கவில்லை. அத்துடன் செஞ்சேனையின் நடவடிக்கைகள் பற்றிய அதன் கருத்துக்களும் எங்களுடைய கருத்துக்களை ஒத்தனவாயிருக்கின்றன. ஆனால், அந்தக் கடிதம் சில தோழர்கள் மீதேற்படுத்திய தீய பாதிப்பு இன்னும் இருக்கவே செய்கிறது. ஆகவே, இப்பொழுதும் இப்பிரச்சினைக்கு விளக்கங் கொடுப்பது அவசியம் என நான் கருதுகிறேன்.
கியாங்சி மாகாணத்தை ஒரு வருடத்திற்குள் வென்றெடுப்பதற்கான திட்டமும் கடந்த ஆண்டு ஏப்ரலில் முன்னணிக் கமிட்டியால் மத்திய கமிட்டிக்கு முன்வைக்கப்பட்டது. பின்னர் அப்படியான தீர்மானம் ஒன்று யூதூவில் ஏற்படுத்தபட்டது. அச்சமயத்தில் சுட்டிக்காட்டப்பட்ட காரணங்கள் மத்திய கமிட்டிக்கான கடிதத்தில் காணப்படுமாறு:
"சியாங் கை-ஷேக்கினதும் குவாங்சி யுத்தப் பிரபுக்களினதும் படைகள் கியூகியாமின் சுற்றுப்புறத்தில் ஒன்றையொன்று அணுகுகின்றதோடு ஒரு பெரும் சமரும் உடன் நிகழும். வெகுஜனப் போராட்டம் மீண்டும் பலமடைதலும் ஆளும் பிற்போக்குவாதிகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளின் வளர்ச்சியும் சேர்ந்து மிக விரைவில் புரட்சிப் பேரெழுச்சியொன்று ஏற்படுவதை சாத்தியமாக்குகின்றன. இந்த நிலைமையில் எமது வேலையின் ஏற்பாட்டைப் பொறுத்து.
தென்மாகாணங்களைக் கருத்தில் கொண்டால், குவாங்துங், ஹுனான் மாகாணங்களிலுள்ள தரகு முதலாளிகளினதும் நிலப்பிரபுக்களினகம் ஆயுதப் படைகள் மிகச் சக்தி வாய்ந்தனவாயுள்ளன என்றும் மேலும் ஹுனானில், கட்சியின் கண்மூடித்தனவாதத் தவறுகள் காரணமாகக் கட்சிக்குள்ளேயும் வெளியேயுமுள்ள பொதுமக்களைக் கிட்டத்தட்ட முற்றாக இழந்துவிட்டோம் என்றும் கருதுகிறோம். ஆனால், ஃபூகியன், கியாங்சி, செகியாங் ஆகிய மூன்று மாகாணங்களிலும் நிலைமை வேறுபட்டதாகவேயிருக்கின்றது. முதலாவதாக, இம்மூன்று மாகாணங்களிலுந்தான் எதிரியின் ராணுவ பலம் மிகப் பலவீனமானதாயுள்ளது. செகியாமில் சியாங் போ-செங்12மின் தலைமையில் ஒரு சிறு மாகாணப் படை மாத்திரமேயுண்டு. ஃபூகியனிலிருந்த எதிரித் துருப்புக்களின் ஐந்து பிரிவுகளும் மொத்தம் பதினான்கு ரெஜிமென்டுகளைக் கொண்டிருந்தபோதிலும் கோ ஃபுங்மிங்கின் பிறிகேட் ஏற்கெனவே முறியடிக்கப்பட்டுவிட்டது; சென் கோ-ஹுய், லூ சிங்-பாங்13 ஆகியவர்களின் தலைமையிலிருந்த பிரிவுகள் இரண்டும் கொள்ளைக்கூட்டப் படைகள். அவற்றின் போராற்றல் மிகத் தாழ்ந்தது. கரையிற் தங்கியிருந்த கடற்படையைச் சேர்ந்த தரைப்படை பிறிகேடுகள் இரண்டும் இதற்கு முன் போர்க்களம் காணாததால், அவற்றின் போராற்றல் உயர்ந்ததல்ல என்பதில் சந்தேகமில்லை; சாங் சென்14 மாத்திரம் ஓரளவு போரிடலாம், ஆனாலும் ஃபூகியன் மாகாணக் கமிட்டியின் ஆராய் வின் படி அவரிடமும் ஒப்பீட்டளவிற் போராற்றல் மிக்க இரண்டு ரெஜிமென்டுகள் மாத்திரமேயிருக்கின்றன. மேலும், ஃபூகியன் தற்போது முற்றாகச் சிக்கலான, குழப்பமான, ஒற்றுமையற்ற நிலை மையிலிருக்கிறது. கியாங்சியில் சு பெய்-தே,15 சியுங் ஷு-ஹுய்16 ஆகியோரது தலைமையிலுள்ள இரண்டு பிரிவுகளிலும் மொத்தம் பதினாறு ரெஜிமென்டுகள் உள்ளன; அவை ஃபூகியன், செகியாங் ஆயுதப் படைகளைவிட வலிமையுடையவை; ஆனால் ஹுனானிலுள்ளவற்றைவிட மிகவும் தாழ்ந்தவை. இரண்டாவதாக, இந்த மூன்று மாகாணங்களிலும் இழைக்கப்பட்ட கண்மூடித்தனமான தவறுகள் ஒப்பீட்டளவில் குறைவானவை. செகியாமின் நிலைமை பற்றி நமக்குத் தெளிவாகத் தெரியாதே தவிர, கியாங்சியிலும் ஃபூகியனிலும் கட்சியின் ஸ்தாபன, வெகுஜன அடிப்படைகள் ஹுனானிலிருப்பவற்றைவிட ஓரளவு சிறந்ததாயிருக்கின்றன. உதாரணத்திற்குக் கியாங்சியை எடுப்போம். வட கியாங்சியில் தேஆனிலும் சியூஷுயிலும் துங்குவிலும் நாம் கணிசமான அளவு அடிப்படைகளை பெற்றிருக்கிறோம்; மேல் கியாங்சியில் நிங்காமிலும் யுங்ஸினிலும் லியன்ஹுவாவிலும் சுய்ச்சுவானிலும் கட்சிக்கும் செங்காவலர் படைக்கும் இன்னும் ஓரளவு பலம் உண்டு; கிஆன், யுங்ஃபுங், சிங்கோ ஆகிய மாவட்டங்களில் செஞ்சேனையின் இரண்டாவது ரெஜிமென்டும் நான்காவது ரெஜிமென்டும் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவதால் தென் கியாங்சியில் எதிர்காலம் மேலும் பிரகாசமானதாயுள்ளது. இன்னும் என்ன, ஃபாங் சி-மின்னின் தலைமையிலிருந்த செஞ்சேனைகூட இன்னும் துடைத்தொழிக்கப்படவில்லை. இவையெல்லாம் நான்சாவைச் சுற்றி நெருங்கத்தக்க ஒரு நிலைமையை ஏற்படுத்துகின்றன. இதனால், கோமிந்தாங் யுத்தப்பிரபுக்களுக்கிடையிலான நீண்டகால யுத்தகாலத்திற் கியாங்சியை வென்றெடுக்க நாம் சியாங் கை-ஷேக்குடனும் குவாங்சி யுத்தப் பிரபுக்களுடனும் போட்டியிடும் அதேவேளையில் மேல் ஃபூகியனுக்காகவும் மேல் செகியாநிற்காகவுங்கூடப் போட்டியிடவேண்டுமெனவும் இந்த மூன்று மாகாணங்களிலும் நாம் செஞ்சேனையை விரிவுபடுத்தி, பொது மக்களின் சுதந்திர ஆட்சியொன்றை நிறுவ வேண்டுமெனவும் இத் திட்டம் ஒரு வருட காலத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் நாம் மத்திய கமிட்டிக்கு எடுத்துரைக்கிறோம்." மேலே கூறப்பட்ட, கியாங்சியை வென்றெடுப்பது என்ற பிரேரணையில் தவறு என்னவென்றால், ஒரு வருட கால வரையறை வகுத்ததேயாகும். கியாங்சியை வென்றெடுப்பது கியாங்சி மாகாணத்திலுள்ள நிலைமைகளைக் கொண்டு மாத்திரம் நிர்ணயிக்கப்படவில்லை, ஒரு நாடு பரந்த புரட்சிப் பேரெழுச்சி விரைவில் ஏற்படும் என்ற நிலைமையைக் கொண்டும் நிர்ணயிக்கப்பட்டது. ஏனென்றால், புரட்சிப் பேரெழுச்சியொன்று விரைவில் ஏற்படும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்திருக்காவிடில் கியாங்சியை ஒரு வருடத்திற்குள் வென்றெடுக்க முடியும் என்று முடிவு கட்டுவது ஒரு போதும் சாத்தியமானதாயிருந்திராது. இந்தப் பிரேரணையின் ஒரேயொரு குறைபாடு ஒரு வருடகாலத்திற்குள் எனக் காலவரையறை வகுத்ததே; இப்படிக் காலவரையறை வகுத்திருக்கக் கூடாது. இதனால் அது "புரட்சிப் பேரெழுச்சியொன்று விரைவில் ஏற்படும்" என்ற வாக்கியத்திலுள்ள 'விரைவில்' என்ற சொல்லிற்குத் தவிர்க்கப்பட முடியாதபடி ஒரு அவசரத் தன்மையைக் கொடுத்துவிட்டது. கியாங்சியிலுள்ள அகநிலை நிலைமைகளையும் புறநிலை நிலைமைகளையும் பொறுத்தவரை, அவை மிகவும் கவனத்திற்குரியவை. மத்திய கமிட்டிக்கெழுதிய கடிதத்தில் காட்டப்பட்ட அகநிலை நிலைமைகளுடன் புறநிலை நிலைமைகளில் மூன்றும் இப்போது தெளிவாகச் சுட்டிக் காட்டப்படலாம். முதலாவதாக, கியாங்சியின் பொருளாதாரம் பிரதானமாக நிலப்பிரபுத்துவப் பொருளாதாரம், வர்த்தக முதலாளிவர்க்கம் ஒப்பீட்டளவில் பலவீனமானது, நிலப்பிரபுக்களின் ஆயு தசக்திகள் மற்றெல்லாத் தென் மாகாணங்களில் உள்ளவற்றினையும்விடப் பலவீனமானவை. இரண்டாவதாக, கியாங்சியிடம் அதற்கெனத் தனிப்பட்ட மாகாணத் துருப்புக்கள் இருக்கவில்லை. அது எப்பொழுதும் பிற மாகாணங்களின் துருப்புக்களாலேயே பாதுகாக்கப்பட்டது. "கம்யூனிஸ்டுகளை அடக்குவதற்கோ", "கொள்ளைக்காரரை அடக்குவதற்கோ" அனுப்பப்படும் இத்துருப்புக்கள் ஸ்தல நிலைமைகளுடன் பரிச்சயமற்ற வையாயிருப்பதோடு, அவற்றின் நலன்கள் ஸ்தலத் துருப்புக்களுடையவற்றைப் போல அவ்வளவிற்கு நேரடியாகச் சம்பந்தப்படவும் இல்லை. ஆகையால் அவை வழக்கமாக உற்சாகம் குன்றியவையாயிருந்தன. மூன்றாவதாக, ஹொங்கொமிற்கு அருகாமையிலுள்ளதும் கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் பிரித்தானிய கட்டுப்பாட்டிற்குக் கீழ் உள்ளதுமான குவாங் துகைப் போலன்றிக் கியாங்சி ஒப்பீட்டளவில் ஏகாதிபத்தியப் பாதிப்பினின்றும் விடுபட்டிருக்கிறது. இந்த மூன்றம்சங்களையும் நாம் ஒருகால் புரிந்துகொண்டால் மற்றெல்லா மாகாணங்களையும்விடக் கியாங்சியிற் கிராமியக் கிளர்ச்சிகள் மிகப் பரந்தவையாக இருப்பதற்கும் செஞ்சேனையும் கொரில்லா யுனிட்டுகளும் மிகவும் அதிகமானவையாயிருப்பதற்குமான காரணத்தை நம்மால் விளக்கிக் கூற முடியும்.
அப்படியானால், "புரட்சிப் பேரெழுச்சியொன்று விரைவில் ஏற்படும்" என்ற வாக்கியத்திலுள்ள 'விரைவில்' என்ற சொல்லை நாம் எப்படி விளக்கவேண்டும்? இது பல தோழர்கள் மத்தியிலுள்ள ஒரு பொதுக் கேள்வி. மார்க்ஸிஸ்டுகள் சோதிடரல்லர். எதிர்கால வளர்ச்சிகளினதும் மாற்றங்களினதும் பொது மார்க்கத்தைத்தான் அவர்கள் தெரிவிக்கவேண்டும், அதைத்தான் உண்மையில் தெரிவிக்கவும் முடியும். நாளையும் பொழுதையும் இயந்திரரீதியில் நிர்ணயிக்கக்கூடாது, அப்படி நிர்ணயிக்கவும் முடியாது. ஆனால், சீனாவிற் புரட்சிப் பேரெழுச்சியொன்று விரைவில் ஏற்படும் என்று நான் கூறும்போது சிலர் கூறுவது போல "வரக்கூடியது" என்ற ஒன்றினைப் பற்றி அதாவது செயல்முக்கியத்துவமற்றதும் பெறமுடியாததும் கற்பனையானதுமான ஒன்றினைப் பற்றி நான் நிச்சயமாகப் பேசவில்லை. இது கரையிலிருந்து பார்க்கையிலேயே பாய்மர நுன் கண்ணுக்குப் புலப்படக் கூடியதாயுள்ள, கடலில் தூரத்தில் வரும் ஒரு கப்பலைப் போன்றது; இது உயர்ந்த மலையுச்சியில் நின்று கிழக்கை நோக்குகையில் தங்கமயமாகப் பரவிக்கொண்டிருக்கும் அதன் கதிர்கள் தெரியக் கூடியதாயுள்ள உதய சூரியன் போன்றது; இது பிறக்கும் தறுவாயில் தாயின் கர்ப்பத்தில் அமைதியின்றி அசைந்து கொண்டிருக்கும் குழந்தை போன்றது.
- மாவோ
செந்தளம் பதிப்பக வெளியீடு
நூலினை பெற தொடர்பு கொள்ளவும்
95437 384 15