அதானியின் நிலக்கரி ஊழலும் அமெரிக்க நிதி மூலதன ஆதிக்கமும்

செந்தளம்

அதானியின் நிலக்கரி ஊழலும் அமெரிக்க நிதி மூலதன ஆதிக்கமும்

நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு அதானி நிறுவனம் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளது என்று சத்தீஸ்கர் மாநில பழங்குடிகள் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

“நிதி மூலதன ஆதிக்கத்தையும் ஊழலையும் பிரிக்க முடியாது, எங்கும் இலஞ்சம் எதிலும் இலஞ்சம், எல்லா வகையான பித்தலாட்ட மோசடி வேலைகளும் நிதி மூலதன ஆதிக்கத்தின் நரம்பும் சதையும் போன்றது” என்று தோழர் லெனின் கூறியிருப்பார். அடுத்தடுத்து அம்பலமாகி வரும் அதானியின் ஊழல்கள் மறைக்க முடியாதளவிற்கு வெளிப்பட்டு நிற்கும் ஒட்டுண்ணி முதலாளித்துவத்தின் இலட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது எனலாம். வருகிற 2030க்குள்ளாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை 50 சதவீதமாக உயர்த்தும் நோக்கில் நகர்வதாக சொல்லி பல இலட்சம் கோடி கடன் மூலதனத்தையும், மானியங்களையும் விழுங்கியுள்ள அதானிதான் தொடர்ந்து சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கக்கூடிய நிலக்கரி உற்பத்தியையும் விரிவுபடுத்தி வருகிறார்.  இந்தியாவில் மட்டும் 20 இடங்களில் சுரங்கம் அமைக்கும் உரிமையை கைப்பற்றி வைத்திருக்கிறார். அதில் ஐந்து இடங்களில் ஏற்கனவே உற்பத்தி நடந்து வருகிறது. இவற்றோடு இந்தோனேசியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் நிலக்கரி சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார்.  கொரோனா காலத்தில்கூட, ஆஸ்திரேலியாவில் அதானிக்கு சொந்தமாக இருக்கும் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்க ஊழல் சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய விசயமாக மாறியிருந்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

பொதுவாக, ஊழ் என்றால் விதி; ஊழ் + அல் என்றால் விதியல்லாதது என்று பொருள். அதன்படி, ஊழல் என்பதற்கு சட்டவிதிகளுக்கு புறம்பான என்ற பொருளில்தான் பரவலாக பொருள் விளக்கம் தரப்படுகிறது. ஆனால், பன்னாட்டு நிதி மூலதன ஆதிக்கத்திற்கு சேவை செய்யக்கூடிய உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் மிக மிகப் பிற்போக்கான சர்வாதிகார ஆட்சி(பாசிச ஆட்சி) தப்பிப் பிழைத்து வாழ்வதற்கும், உச்சபட்ச இலாபத்தை பறித்தெடுப்பதற்கும் சட்டவிதிகளை வளைத்து ஊழல் செய்வது தவிர்க்க முடியாததாகிறது என்பதே பொது விதியாக விளங்குகிறது.

அதானியின் நிலக்கரி சுரங்கமும், பழங்குடிகள் ஆணையத்தால் அம்பலப்படுத்தப்பட்ட முறைகேடுகளும்

சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்படடு வரும் பார்சா நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள சூழலியல் அனுமதி, போலி ஆவணங்களை காட்டி வாங்கப்பட்டுள்ளது என்று சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடிகள் ஆணையம் கடந்த நவம்பர் 6, அன்று விசாரணை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. குறிப்பாக, வனத்துறை, வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை சுரங்கம் அமைப்பதற்கு பயன்படுத்தலாம் என்று  கிராம சபைகள் தடையில்லா தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக கூறி மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வாங்கியுள்ளார்கள். மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக சென்ற மாதம்தான், உள்ளுர் பழங்குடி மக்கள் போராட்டம் நடத்தியபோது அரச வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

2016–ம் ஆண்டின் நிலவரப்படி மொத்தம் 1,450 கோடி ரூபாய் செலவில் ஹஸ்தியோ காடுகளில் உள்ள பார்சா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு சத்தீஸ்கர் மாநில மின் உற்பத்தி கழகம் திட்டம் வகுத்திருந்தது. 184.26 மில்லியன் டன் அளவிலான நிலக்கரி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 5 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உற்பத்தி செய்யும் வகையில் இந்த சுரங்கம் அமைக்கும் ஏலத்தை அதானிக்கு வாரித் தந்துள்ளார்கள். மொத்தமாக 1,464 மக்கள் இதனால் பாதிப்பிற்குள்ளாகிறார்கள் என்று அரசுத் தரப்பு ஆவணங்கள் கூறுகின்றன.  பெரும்பான்மையான பகுதிகளில் இன்றுவரை எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்ற தகவல்களைக்கூட வெளியிடமால் மூடிமறைத்து வருகின்றனர். இருந்தபோதிலும், இப்போதைக்கு கணக்கிடப்பட்ட சில இடங்களில், குறைந்தபட்சம் 45,000க்கும் மேற்பட்ட மக்கள் அமெரிக்க நிதி மூலதன ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் அதானியால் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது பொதுவாக ஏற்கபட்ட தகவல்களாக இருக்கிறது. 

நவம்பர் 6ம் தேதி பழங்குடிகள் ஆணையம் வெளியிட்ட விசாரணை அறிக்கையில் பின்வரும் மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன:

1. கிராம சபை ஒப்புதலளித்ததாக சொல்லப்படும் பல ஆவணங்களில் 2016ம் ஆண்டே இறந்தபோன நபரின் கையொப்பம் கள்ளத்தனமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

2. 2017 ஏப்ரல் 22ல், நடந்த கட்பார்ரா கிராம சபை கூட்டத்தில் தடையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படவே இல்லை என்றும், கூட்டத்தில் 132 பேர் மட்டுமே பங்கேற்றிருந்த நிலையில் 482 பேர் பங்கேற்றிருப்பதாக போலி ஆவணம் தயாரித்திருக்கிறார்கள்.

3. இதேபோல, 2017 ஆகஸ்ட் 26ல், பதேபூர் கிராம சபை கூட்டத்தில் 170 பேர் மட்டுமே பங்கேற்றிருந்தார்கள். ஆனால், பின்னாளில், வருகைப் பதிவேடுகளில் முன்னுக்குபின் முரணான தகவல்கள் பதிவாகியிருப்பதும், அந்தக் குறிப்பிட்ட கூட்டத்திற்கு தலைமையேற்றிருந்த நபர் முறைதவறி நடந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

4. 2018, ஜனவரி 24ல், 95 நபர்கள் பங்கேற்றிருந்த ஹரிஹர்பூர் கிராம சபை கூட்டதிலும் 195 நபர்கள் பங்கேற்றிருந்ததாக முறைகேடு செய்துள்ளனர்.

5. 2018 ஜனவரி 27ல், சார்ஹி கிராம சபை கூட்டம் நடந்து முடிந்த பிறகு, நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு எவ்வித தடையுமில்லை என்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்ததாக நிகழ்ச்சிக் குறிப்புகளில் முறைகேடாக சேர்த்துள்ளனர். 150 பேர் பங்கேற்றிருந்த நிலையில் 450 பேர் பங்கேற்றதாக போலி ஆவணம் தயாரித்திருக்கிறார்கள்.

தரகு-முதலாளி அதானியின் குடுமி யார் பிடியில்?

கடந்த மூன்றாண்டுகளில்(2021,2022,2023) மட்டும், பங்கு பத்திரங்கள்(shares) மூலமாக 9.658 பில்லியன் டாலர்களும், கடன் பத்திரங்கள்(bonds) மூலமாக 841 மில்லியன் டாலர்களும் அமெரிக்காவை சேர்ந்த 78 நிதி மூலதன கும்பல்கள் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். அதாவது, அமெரிக்காவின் முதலீடுகள் 90 சதவீதம் பங்குகளை கைப்பற்றுவதன்(Shareholding) மூலம் பெறப்படுவது கவனிக்கத்தக்கது. மொத்தமாக, அமெரிக்காவை சேர்ந்த 78 நிதி மூலதன கும்பல்களிடமிருந்து 10.508 பில்லியன் டாலர்கள் அதானியின் நிலக்கரி திட்டத்திலும், இன்னப்பிற எரிசக்தி துறையிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. 

அதுவே, இந்தியாவிலிருந்து கடந்த மூன்றாண்டுகளில் 37 முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து அதானிக்கு 15.470 பில்லியன் டாலர்கள் கிடைத்துள்ளது. Massachusetts Mutual Life Insurance Company என்ற அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான, இந்தியாவில் தலைமையகத்தை கொண்டுள்ள Flourishing Trade And Investment கம்பனி மட்டும் 6.183 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. மறைமுகமாக, இதுவும் அமெரிக்க நிதி மூலதன கும்பல்களின் முதலீடுதான். இதற்கு அடுத்தபடியாக, இந்திய நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கையை பெற்ற எல்.ஐ.சி. மூலமாகத்தான் 5.784 பில்லியன் டாலர்களை கொண்டு போய் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது மோடி அரசு. இரண்டு வாரங்களுக்கு முன்புதான், அதானி நிறுவனத்தில் போட்டிருந்த எல்.ஐ.சி.யின் முதலீடுகள் 12,000 கோடி அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளதாக பல நாளிதழ்கள் துண்டுச் செய்தி வெளியிட்டிருந்தன. 

ஒட்டுமொத்தமாக, 253 முதலீட்டாளர்களிடமிருந்து 36.190 பில்லியன் டாலர்கள் முதலீடாக வந்துள்ளன. 

அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட நிதி மூலதன கும்பல்கள் மூலமாகத்தான் அதானி நிறுவனத்திற்கு நேரடியாக ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு முதலீடு வந்துள்ளது. இதோடு, இந்தியாவை தலைமையகமாக கொண்ட அமெரிக்க நிதி நிறுவனங்களின் முதலீடுகளையும் சேர்த்தால் 60 சதத்திற்கு மேல் முதலீடு வந்து குவிந்திருப்பதை பார்க்க முடியும். இதேபோல, அமெரிக்க நிதி மூலதன கும்பல்களின் 90 சதவீத முதலீடுகள் பங்கு பத்திரங்கள்(shares) மூலமாக வந்திருப்பதை பார்க்கலாம். கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் வெறுமனே 7 மில்லியன் டாலர்களுக்கு குறைவான அளவில்தான் சீனாவின் முதலீடுகள் வந்துள்ளன. பங்குகளை கைப்பற்றுவதில் சீன முதலீடு நேரடியாக ஏதும் வரவில்லை என்றே சொல்லலாம். ரஷ்ய முதலீடு குறித்தான தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை.

இதுமட்டுமல்லாது, பங்குகள் அல்லது கடன் பத்திரங்களை முதலீட்டாளர்களுக்கு விற்பதன் அதாவது சூதாடுவதன் மூலம் 4.364 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான முதலீடுகளை விரல்விட்டு எண்ணக்கூடிய 22 வங்கிகள் அதானி நிறுவனத்தின் பேரில் பெற்றுத் தந்துள்ளன. இதிலும், Jefferies Financial Group, JPMorgan Chase, Citigroup, Bank of America என்ற நான்கு அமெரிக்க வங்கிகள்தான் 2.315 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 53 சதவீத பங்கு அல்லது கடன் பத்திரங்களை விற்று சூதாடியுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, இந்தியா, சிங்கப்பூர், அரபு அமீரகம் ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த வங்கிகள் மட்டுமே கடந்த மூன்றாண்டுகளில் அதானியின் பங்குகள் அல்லது கடன் பத்திரங்களை விற்கும் வேலையில் ஈடுப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

இவையனைத்துமே, அதானியின் நிலக்கரி தொழிலில் வந்த முதலீடுகள் பற்றி மட்டுமே விவரிக்கிறது. இதுபோல, அதானியின் ஏகபோக ஆதிக்கம் எந்தெந்த துறைகளிலெல்லாம் வியாபித்துள்ளதோ, அவை எல்லாவற்றிலும் முதலீடு செய்துள்ள நிதி மூலதன கும்பல்களுக்கு உச்சபட்ச இலாபத்தை உத்திரவாதப்படுத்தி, உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளின் நெருக்கடியை தீர்த்துவிட முடியாதா என்ற நோக்கத்தில்தான் தமிழகம் உட்பட அனைத்து மாநிலத்திலும் ஊழல் அரங்கேற்றப்படுகிறது, இலஞ்ச லாவண்யங்கள் கொடிகட்டிப் பறக்கிறதே தவிர பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சொல்வது போல தனியொரு கட்சியின்/ஆட்சியின் சுயநலத்தால் அல்ல என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஊழல் என்பது முதலாளித்துவத்தின் உடன்பிறப்பு என்பதை அறியாதவரும் அல்ல அவர். இங்ஙனம், தரகு முதலாளித்துவத்தின் பிழைப்பென்பது நிதி மூலதன ஆதிக்கத்தின் சேவையில்தான் வேர் கொண்டுள்ளது.

1 லட்சம் ரூபாய் கடன் கொடுத்த சாமானியனுக்கே வட்டியும், முதலுமாக கணக்குத் தீர்க்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிற போது உலக முழுவதும் பல டிரில்லியன் கணக்கிலான கடன்களை, பங்குகளை வைத்து மட்டுமே இலாபம் பார்த்து வரும் நிதி மூலதன கும்பல்களுக்கு எவ்வளவு நெருக்கடி இருக்கும் என்பதை சற்றே எண்ணிப் பார்த்தோமானால் ஏகபாதிபத்தியங்களின் இலாப வேட்டையை புரிந்துகொள்ள முடியும். இது மட்டுமல்லாது, அதானி மீதான அமெரிக்காவின் ஊழல் குற்றச்சாட்டுகள், பிடி ஆணைகள் எல்லாம் புதியதொன்றுமல்ல; மோடி அமெரிக்கா வருவதற்கு கூடத்தான் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதானி மீது மட்டுமல்ல, ரஷ்யாவுடன் கள்ளத்தனமாக வர்த்தகம் செய்து வந்த பல இந்திய கம்பனிகள் மீது சமீபத்தில் அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தது. காலிஸ்தான் தலைவர்களை இந்திய உளவுத்துறை அதிகாரிகள் படுகொலை செய்தார்கள் என்று நேரடியாகவே குற்றம்சாட்டியது. பொருளாதார அடிப்படையில், சரியாக சொல்வதானால், நிதி மூலதன ஆதிக்கத்தின் அடிப்படையில் அதானி உட்பட பல கார்ப்பரேட்டுகளும், உலக வங்கி, ஐ.எம்.எப். போன்ற புதிய காலனியாதிக்க நிறுவனங்களின் நுகத்தடியின் கீழ் இந்திய அரசும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கட்டுண்ட கிடக்கிற நிலையில் இந்த பிடி ஆணை மூலமும் வெளிப்படையாக மிரட்டுவதற்கு ஒரே அரசியல் காரணம்தான் இருக்க முடியும். இஸ்ரேலுள்ள ஜியோனிச பாசிஸ்ட்களை போல் ஒரு வேட்டை நாயாக இந்துத்துவ பாசிஸ்ட்கள் மாற வேண்டும் என்பதோடு, அமெரிக்காவின் உலக மறுபங்கீட்டிற்கான போர்க்களத்தில்(அரசியல்-இராணுவ-பொருளாதார) சமரசமின்றி இளைய பங்காளியாக துணை நிற்க வேண்டும் என்பதற்காகவே இத்தனை தந்திரங்களை அமெரிக்கா கையாண்டு வருகிறது.

இவ்வாறு, அதானியின் ஒவ்வொரு அசைவிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிதி மூலதன ஆதிக்கமே கோலாச்சுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. பிற ஏகாதிபத்திய நாடுகளின் முதலீடுகள் பரந்து விரிந்திருந்த போதிலும், தரகு முதலாளி அதானியின் குடுமி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கிடுக்குப் பிடியில்தான் உள்ளது.

சட்டத்தின் ஆட்சியா? நிதி மூலதனத்தின் ஆட்சியா?

2013ம் ஆண்டில் பார்சா கிழக்கு பகுதியிலும், முட்புதர் காடுகள் நிறைந்த பகுதியிலும்(PEKB Blocks) சுரங்கம் அமைத்து, நிலக்கரி வெட்டி எடுப்பதற்கான உரிமையை அன்றைய பாஜக ஆட்சிதான் அதானிக்கு வழங்கியுள்ளது. தற்போது அதற்கு அருகாமையிலுள்ள பார்சா பகுதியிலும் சுரங்கம் அமைத்து, நிலக்கரி உற்பத்தி செய்யும் உரிமையையும் அதானிதான் அனுபவித்து வருகிறார். பத்தாண்டு காலமாக ஹஸ்தியோ காடுகளை பாதுகாப்பதற்கான போராட்டம் நடந்து வருகிறது.

வன நிலங்களில் எந்தவொரு திட்டங்களையும் செயல்படுத்த வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட கிராம சபையிடமிருந்து முன்கூட்டியே, சுதந்திரமான முறையில், அனைத்து விவரங்களும் முழுமையாக அறிந்தநிலையில் ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும் என்று 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட வனச் சட்டம் கூறுகிறது. ஆனால், சுரங்கம் அமைப்பது பற்றியோ அல்லது மரங்களை வெட்டுவது பற்றியோ தங்களது கருத்தை கேட்டறியவே இல்லை என்று மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்களும் வாக்குமூலம் அளித்ததாக மாநில பழங்குடி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிராம சபைகள் வழங்கிய ஒப்புதலில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து 2021, ஆகஸ்ட் 3ம் தேதியே சத்தீஸ்கர் மாநில பழங்குடி ஆணையத்தில் ஹஸ்தியோ காடுகள் பாதுகாப்பு குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும், மத்திய அரசு 2022, ஏப்ரல் 6ம் தேதி நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கும், மரங்களை வெட்டுவதற்கும் அனுமதி அளித்துள்ளார்கள்.

2018ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியும் எவ்வித தீர்வையும் முன்வைக்காமல் அதானியின் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு சமரசமில்லாத ஆதரவை வழங்கி வந்துள்ளது. 2023ல் அதிக பெரும்பான்மையுடன் பாஜகவின் விசூ தியோ சாய் என்பவர் முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்பு வரையும்கூட நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதும், உள்ளூர் பழங்குடி மக்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என பலரையும் காவல்துறை சிறையில் அடைக்கும் வேலையும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்துள்ளன. 

சத்தீஸ்கர்–ராய்பூரில் ஜிஎம்ஆர் குரூப் என்ற உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனம் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு 2011ல் மன்மோகன் சிங் ஆட்சியில்தான் அனுமதி வழங்கப்பட்டது. 2019ல், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும், கடன் நெருக்கடியை காரணமாக வைத்து இந்த அனல் மின் நிலையத்தை அதானி குழுமம் விழுங்குவதற்கு மோடி அரசு உதவி செய்துள்ளது. கடந்த நவம்பர் 1ம் தேதியன்று கூட, இந்த அனல் மின் நிலையத்தின் உற்பத்தியை இரண்டுமடங்காக விரிவுபடுத்துவதற்கு மோடி அரசும், சத்தீஸ்கர் பாஜக அரசும் அனுமதி வழங்கியுள்ளது. கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை துவங்கியது காங்கரஸ்தான். ஆனால், அதை பல்வேறு அடக்குமுறைகள் மூலம் செயல்படுத்திக் காட்டியது சிபிஎம் கட்சியாக இருக்கிறது. இவ்வாறு காங்கிரசோ, பாஜகாவோ, போலி கம்யூனிஸ்ட்களோ, எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் பன்னாட்டு நிதி மூலதனத்தை குறிப்பாக அமெரிக்காவின் நிதி மூலதனத்தை சார்ந்து வாழும் இந்திய தரகு முதலாளித்துவத்திற்கு சேவை செய்கிறார்களே தவிர அம்பேத்கர் எழுதிய சட்டத்தின் ஆட்சி என்பதெல்லாம் செல்லாக்காசுதான் என்பது தெளிவாகிறது.

கடந்த மே மாதம்கூட, பார்சா நிலக்கரி சுரங்கம் தொடர்பான அனைத்து பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கச் சொல்லி மண்டல ஆணையருக்கு மாநில பழங்குடிகள் ஆணையம் சார்பில் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டங்களில் நடந்தேறியுள்ள ஊழல்கள் குறித்தும் மண்டல ஆணையரிடம்  ஜீலை மாதம் பழங்குடி மக்கள் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம், பழங்குடிகள் ஆணையம் பொது விசாரணை நடத்தியபோது சுரங்கத்தின் உரிமையாளராக சொல்லப்படும் இராஜஸ்தான் மாநில மின் உற்பத்தி கழகம், விசாரனைக்கு பதிலளிப்பதற்காக 10 நாள்கள் அவகாசம் கேட்டிருந்தது. ஆனால், சொன்ன காலத்தில் ஆஜராகவும்வில்லை, எவ்வித பதில்மனுவும் தாக்கல் செய்யவில்லை என்று பழங்குடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மே மாதமே சுரங்கம் அமைப்பதற்கான பணிகளை  தற்காலிகமாக நிறுத்தி வைக்கச் சொல்லி ஆணையம் சார்பில் வழிகாட்டியிருந்த போதும்,  மரங்கள் வெட்டப்படுவது அக்டோபர் மாதம் வரை தொடரவே செய்தது.

இதன் இறுதியாகத்தான், நவம்பர் 6ம் தேதி, பார்சா நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யச் சொல்லியும், புதிதாக கிராம சபைக் கூட்டங்களை நடத்தச் சொல்லியும் மாநில பழங்குடிகள் ஆணையம் பரிந்துரைகளை வழங்கியிருந்தது. இத்தனைக்கும் இந்த ஆணையம் சிவில் நீதிமன்றத்தின் அதிகாரம் பெற்ற அரசியல் சாசன அங்கீகாரம்பெற்ற நிரந்தர அமைப்பு என்றெல்லாம்கூட சட்டவாதிகளால் மெய்சிலிர்க்க புகழாரம் சூட்டப்படுவதை பார்த்திருப்போம். உச்ச நீதிமன்றமோ ஊராட்சி மன்றமோ எதிலும், பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு சட்ட விதிகள் வளைத்து நெறிக்கப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

சத்தீஸ்கரில் மட்டுமல்ல, மக்கள் விரோத திட்டங்களை அமல்படுத்தும் எல்லா மாநிலத்திலும் இதே கதைதான். போராட்டக்காரர்களை கைது செய்து குற்றவியல் வழக்கு தொடுப்பார்கள். திட்டத்திற்கு எதிராக சட்ட வழியில் போராட்டம் நடந்து வந்தாலும் திட்டப் பணிகளை ஒருபோதும் தற்காலிகமாகக்கூட நிறுத்தி வைக்க மாட்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல், திட்டத்தை கைவிட முடியாது என்ற நிலை வந்த பிறகு, பெயரளவிற்கு நஷ்ட ஈடு வழங்குவதாக ஒப்புக் கொள்வார்கள். அதானி கைப்பற்றி நடத்தி வரும் அனல் மின்நிலையம் 15 ஆண்டுகளுக்கு முன்பு பொது விசாரணையின் போது ஒப்புக் கொள்ளப்பட்ட நஷ்ட ஈடுகளைக்கூட இன்றுவரை தராமல் ஏமாற்றி வந்திருக்கிறது. 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையிலுள்ளன. எந்த நிலையிலும் அனல் மின் நிலையத்தில் எரிக்கப்படும் நிலக்கரியின் சாம்பல் அளவு 34 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்பது மிகக் குறைந்தபட்சம் ஏற்கப்பட்ட பொதுவிதியாக இருக்கிறது. இந்நிலையில், தரம் குறைந்த, மட்டமான நிலக்கரியை உற்பத்தி செய்து உச்சபட்ச இலாபத்தை பறித்தெடுத்து அமெரிக்க நிதி மூலதனத்தை வாழ்விப்பதற்காக 40 சதம் வரை சாம்பல் நிறைந்த நிலக்கரியை உற்பத்தி செய்வதால் அதானி கைப்பற்றி நடத்தி வரும் அனல் மின் நிலையம் இந்திய மக்களுக்கு கொல்லிக்கட்டையாக மாறியிருக்கிறது. இது குறித்தும் கேள்விகள் எழும்பிய நிலையில், நிலக்கரி தரத்தை மாற்றுவதற்கு சூழலியல் விதிகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை, சம்பந்தப்பட்ட நிலக்கரி மின் உற்பத்தி ஆலைக்கே அதற்கான அதிகாரம் உள்ளது என்று ஒரேயடியாக அதானிக்கு சாதகமாக, அதாவது, அமெரிக்க நிதி மூலதனத்திற்கு ஆதரவாக சூழலியல் விதிகளையே மாற்றித் தந்துள்ளது இந்த மோடி அரசு.

முன்பிருந்த காங்கிரஸ் ஆட்சியில் எழுந்த கடுமையான போராட்டங்கள் காரணமாக மரங்களை வெட்டக்கூடாது என்று பெயரளவிற்கு இருந்த உத்தரவைகூட அடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக முதல்வர் இரத்து செய்துவிட்டார். அரசியல்-பொருளாதார கொள்கையில் எவ்வித மாற்றமும் தென்படாததோடு, இந்துத்துவ பாசிச அவதாரத்தையும் கையிலெடுத்த காரணத்தால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. ஆனால், சமீபத்தில் போராடுபவர்கள் மீது நடத்தப்பட்ட குண்டாந்தடி தாக்குதலில் மண்டை பிளக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக மட்டும் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வருகை தந்துள்ளனர். “பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைக்கு எதிராக” தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்று விமர்சன வேறு செய்கிறார் ராகுல் காந்தி.

மாநில பழங்குடிகள் ஆணையம் முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ‘ஆய்வு’ செய்யப்படும் என்று சத்தீஸ்கர் மாநிலத்தின் துணை முதல்வராக இருக்கும் அருண் சாவ் அறிவிப்பு செய்ததோடு சரி எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.  ஜனநாயகத்தின் வேர்கள் என்று சொல்லப்படும் உள்ளாட்சி நிர்வாகம் வரையிலும் கூட அமெரிக்க நிதி மூலதன வேட்டைக்கு சேவை செய்யும் அதானி, அம்பானி, டாடா போன்ற உள்நாட்டு தரகு-முதலாளிகளின் மிக மிகப் பிற்போக்கான சர்வாதிகார ஆட்சிதான் (பாசிச ஆட்சிதான்) நடக்கிறது என்பதையே மேற்கண்ட ஊழல் குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்துகின்றன.

- செந்தளம்