நூல் அறிமுகம்: பண்டைய சமுதாயம்
அ.கா.ஈஸ்வரன்
(MELS பயிரலங்கில் பேசியது)
மார்கன் எழுதிய “பண்டைய சமுதாயம்” என்கிற நூல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு அண்மையில் வெளிவந்துள்ளது. வெளிவந்த போது என்னைப் போன்ற கம்யூனிஸ்டுகள் ஒரு கொண்டாட்ட மனநிலையில் திளைத்தோம். ஒரு மொழியாக்க நூல் வெளிவந்ததற்கு ஏன் இத்தகைய கொண்டாட்டம். ஏன் என்றால் மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இந்த நூல் முதல் நூலாக இருந்தது. இந்த மார்கனின் நூலைப் படித்து மார்க்ஸ் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார், மார்கனின் நூலின் அடிப்படையில் ஒரு நூலை எழுதத் திட்டமிட்டிருந்தார். அந்த நூலை மார்க்ஸ் தமது காலத்தில் எழுதவில்லை, ஆனால் எங்கெல்ஸ், மார்க்ஸ் மறைந்த பிறகு “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற தலைப்பில் ஒரு நூலை எழுதினார். அந்த நூலில் மார்க்சின் குறிப்புகளைப் பயன்படுத்திக் கொண்டார்.
தமிழ் இலக்கணத்தில் முதல் நூல், வழி நூல், சார்பு நூல் என்று மூன்றைக் குறிப்பிடுவார்கள். முதல் நூல் என்றால் ஆசிரியர் தானே எழுதியது, அதாவது ஆசிரியர் நேரடியாக எழுதியது. இதனை மூல நூல் என்றும் கூறலாம். வழி நூல் என்றால் முதல் நூலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட விளக்க நூல் அல்லது விமர்சன நூலாகவும் இருக்கலாம். மூன்றாவது சார்பு நூல், முதல் நூல், வழி நூல் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதுவது. அதாவது அந்த நூலைச் சுருக்கி அல்லது தொகுத்து வெளியிடுவது சார்பு நூலாகும்.
மார்கன் எழுதிய “பண்டைய சமுதாயம்” என்கிற நூல் முதல் நூல் ஆகும், எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற நூல் முதல் நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வழி நூல் ஆகும். ஆக மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் முதல் நூலாக இருந்த மார்கன் எழுதிய “பண்டைய சமுதாயம்” என்கிற நூல், தமிழில் வெளிவந்துள்ளதைக் காணும் போது, என்னைப் போன்ற கம்யூனிஸ்டுகளுக்குக் கொண்டாட்டமாகத்தானே இருக்கும்.
இந்தக் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கியது என்றால் அது இந்த நூலை மொழியாக்கம் செய்த முனைவர் டி.ஆர்.சுதா, செம்மொழியாக்கம் செய்த தோழர் மயிலைபாலு, இந்த நூலை வெளியிட்ட சிந்தன் புக்ஸ் மாதவ் கட்டா ஆகியோரைச் சேரும். சிறப்பான மொழியாக்கத்தையும் சிறப்பான வடிவமைப்பிலும் நூலைக் கொடுத்திருக்கிறார்கள். இது நமது கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கியது.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இந்த நூலின் மொழியாக்கத்தைப் பற்றிய அறிவிப்பு வந்தது. வெளிவந்தது முதலே நான் ஆவலாக இந்த நூலை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். நூல் வருவதாக, முன்வெளியீட்டுத் திட்டம் அறிவித்தவுடன் எனது நூலுக்கான பதிவு செய்துவிட்டேன். நூல் வந்தவுடன் உடனே வாங்கி, விரைவாக முழுவதையும் படித்துவிட்டேன்.
படித்துக் கொண்டிருக்கும் போது, இந்த நூலைப் பற்றியும் இதன் மொழியாக்கத்தைப் பற்றியும் எனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வந்தேன். அதில் குறிப்பிட்டதைத் தொகுத்துச் செந்தளம் என்கிற இணையத் தளத்தில் தொகுப்பாக வெளியிட்டேன். “எங்கெல்ஸ் எழுதிய நூலில் மார்கன்”, “மார்கன் நூலில் இரும்பு கண்டுபிடிப்பு பற்றி”, “மார்கன் நூலில் தமிழர் உறவு முறைகள் பற்றி”, “மார்கன் நூலில் சொத்துடைமை பற்றி” என்கிற தலைப்புகளில் வெளிவந்தது.
“எங்கெல்ஸ் எழுதிய நூலில் மார்கன்” என்கிற தொகுப்பில், எங்கெல்ஸ் தாம் எழுதிய “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற நூலில் மார்கனைக் குறித்துக் கூறியதைத் தொகுத்துத்தந்தேன். அடுத்து மார்கன் நூலில் காணப்படும் இரும்பு கண்டு பிடிப்புகளைப் பற்றியும், தமிழர்களின் உறவுமுறைகளைப் பற்றியும், சொத்துடைமைப் பற்றியும் குறிப்பிடுவதைத் தொகுத்துத் தந்தேன். இன்றைய இளைஞர்கள் மார்கன் எழுதிய “பண்டைய சமுதாயம்” நூலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நூலை இன்று படிக்க வேண்டுமா?, இன்று இந்த நூல் படிப்பது பயனுள்ளதாக இருக்குமா? என்கிற கேள்வி கண்டிப்பாக இன்றைய இளைஞர்களிடம் எழும் என்பதில் சந்தேகம் இல்லை. அத்தகைய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முகமாகவே இத்தகைய பணிகளைச் செய்தேன். அதுமட்டும் இல்லாது இணையத்தில் மார்கனைப் பற்றிய எதிர்மறை விமர்சனம் நிறைய இருக்கிறது. அதனைப் படித்துவிட்டு, மார்கனின் “பண்டைய சமுதாயம்” இன்று தேவைப்படாது என்கிற தவறான முடிவுக்கு வந்திடக்கூடாது என்பதில் நான் அதிகக் கவனம் செலுத்தினேன்.
மார்கன் பற்றிய எதிர்மறை விமர்சனம் என்னவென்றால், மனிதச் சமூகத்தை மார்கன் விலங்காண்டி நிலை, காட்டுமிராண்டி நிலை, நாகரிக நிலை என்று மனிதயின வளர்ச்சியை ஒரே நேர்கோடாகக் கூறுகிறார், அதுமட்டுமல்லாது நவீன மனிதனை நாகரிகமாகவும் அதற்கு முந்திய மனிதனை நாகரிகமில்லாதவர் என்று கூறுவது ஐரோப்பிய மையவாதம் என்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது. சமூக வளர்ச்சிக்குத் தொழில்நுட்பமே அடிப்படைக் காரணம் என்கிறார் மார்கன், அதாவது தீப் பயன்பாடு, வில்–அம்பு, மண் பானை, இரும்பு கண்டு பிடிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சமூக வளர்ச்சியினை மார்கன் விளக்குகிறார். குடும்ப உறவு முறைகளை அதிக முக்கியத்துவம் கொடுத்து விளக்குகிறார். மேலும் குடும்பம் படிநிலையில் வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சொத்து உருவாக்கத்தின் அடிப்படையில் சமூக மாற்றத்தை மார்கன் குறிப்பிடுகிறார். இவைகளே மார்கன் மீது வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு. அதாவது விமர்சனம்.
விலங்காண்டி நிலை, காட்டுமிராண்டி நிலை, நாகரிக நிலை என்று மார்கன் பிரிப்பது, நாகரிகத்தின் படிநிலை வளர்ச்சியினை விளக்குவதற்கே தவிர, யாரையும் குறைபாடாகவோ, வேறுபடுத்தியோ காட்டுவதற்கு அல்ல. மார்கன், தமது நூலை ஐரோப்பிய மையவாதத்தில் எழுதவில்லை என்பது, “பண்டைய சமுதாயம்” என்கிற நூலை முழுமையாகப் படிக்கும் போது தெரிந்துவிடுகிறது. மற்ற விமர்சனங்கள் அனைத்தும் உண்மையில் மார்கனை எதிர்மறையில் பாராட்டுவதாக எனக்குப் படுகிறது. ஏனென்றால் அவை அனைத்தும் இயக்கவியல் பொருள்முதல்வாதப் பார்வையில் எழுதப்பட்டதைக் குறிப்பிடுகிறது. மார்க்சும் எங்கெல்சும் மார்கனை எதற்காகப் பாராட்டினார்களோ அத்தகையதையே இந்த விமர்சனம் எதிர்க்கிறது. அதனால் என்னைப் போன்ற கம்யூனிஸ்டுகளுக்கு இது விமர்சனம் அல்ல எதிர்நிலையில் கூறப்பட்ட பாராட்டுதான்.
மார்க்சியத் தத்துவத்துக் கண்ணோட்டத்துக்கு, மார்கனின் அணுகுமுறை நெருக்கமானது என்பது "குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" நூலின் முதற் பதிப்புக்கான முன்னுரையில் எங்கெல்ஸ் கூறியிருப்பதைப் படித்தால் தெளிவாகிறது.
"ஒரு பொருளில், பின்வரும் அத்தியாயங்கள் மார்க்ஸ் விட்டுச் சென்ற ஒரு பணியைச் செய்து முடிக்கும் வகையில் அமைந்தவையே. வரலாற்றைப் பற்றித் தன்னுடைய -எம்முடைய என்று சில வரம்புகளுக்குட்பட்டு நான் சொல்லக் கூடும்- பொருள்முதல்வாத ஆராய்ச்சியின் மூலம் தான் கண்ட முடிவுகளின் தொடர்பில் மார்கனது ஆராய்ச்சி விளைவுகளை மக்களுக்கு முன்பாக வைத்து அதன் மூலம் அவற்றின் முக்கியத்துவம் முழுவதையும் தெளிவாக்க வேண்டும் என்று மார்க்ஸ் திட்டமிட்டிருந்தார். ஏனென்றால் நாற்பது ஆண்டுகளுக்கு முன் மார்க்ஸ் கண்டுபிடித்திருந்த வரலாற்று பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தைத்தான் மார்கன் தன்னுடைய வழியில் அமெரிக்காவில் மறுபடியும் கண்டுபிடித்தார்.
மார்கன் அநாகரிகத்தையும் நாகரிகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பொழுது மார்க்ஸ் எந்த முடிவுகளைச் செய்தாரோ-பிரதான விஷயங்களில் அதே முடிவுகளுக்கு வருமாறு இந்தக் கருத்தோட்டம் செய்தது. மேலும் ஜெர்மனியில் அதிகார வர்க்கச் சார்புள்ள பொருளியலாளர்கள் எப்படிப் பல ஆண்டுகளாக மூலதனம் என்ற நூலிலிருந்து ஆர்வத்துடன் திருடியபோதிலும் அந்த நூலைப் பற்றி விடாப்பிடியாக மௌனம் சாதித்து அமுக்கியும் வந்தார்களோ, அதே மாதிரியாக இங்கிலாந்தில் "வரலாற்றுக்கு முந்திய" விஞ்ஞானத்தின் சார்பாகப் பேசியவர்கள் மார்கன் எழுதிய பண்டைக்காலச் சமூகம் என்ற நூல் விஷயமாக நடந்து கொண்டார்கள். காலஞ்சென்ற என்னுடைய நண்பர் செய்ய முடியாமல் போன பணிக்குப் பதிலாக நான் செய்திருக்கின்ற பணி அற்பமாகத்தான் இருக்க முடியும். மார்க்ஸ் மார்கனுடைய நூலிலிருந்து விரிவான பகுதிகளை எடுத்து அவற்றுக்கு விமர்சனக் குறிப்புகள் எழுதியுள்ளார். அவை எனக்கு முன்னால் இருக்கின்றன. இந்நூலில் சாத்தியமான இடங்களில் அவற்றை அப்படியே வெளியிட்டிருக்கிறேன்." (பக்கம் 7-8)
மார்கன் அவர்வழியில் வரலாற்றியல் பொருள்முதல்வாத அணுகுமுறையில் தமது நூலை எழுதியுள்ளார். அவரது முடிவுகள் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களே எதிர்நிலையில் விமர்சனங்களை வைக்கிறார்கள். இந்த விமர்சனங்கள் மார்கன் மீதல்ல, வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் மீதே வைத்துள்ளனர் என்பது நன்றாகத் தெரிகிறது.
அதனால்தான், “எங்கெல்ஸ் எழுதிய நூலில் மார்கன்” என்கிற தலைப்பில், மார்கனின் முடிவுகளை எங்கெல்ஸ் எப்படி எல்லாம் ஏற்றுள்ளார் என்பதை வெளி கொணர்வதற்கே நான் தொகுத்து வெளியிட்டேன்.
எங்கெல்ஸ் தமது "குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்கிற நூலில், "தென்னிந்தியாவிலுள்ள தமிழர்கள் மத்தியிலும் நியூயார்க் மாநிலத்திலுள்ள செனீகா இராகோஸ்கள் மத்தியிலும் இரத்த உறவு முறையைக் குறிக்கும் சொற்கள் இருநூற்றுக்கு மேற்பட்ட உறவுகள் விஷயத்தில் இன்றும் கூட ஒன்றாகவே இருக்கின்றன." (பக்கம் 47) என்று எழுதியுள்ளார். எங்கெல்ஸ் இதனை, மார்கனின் “பண்டைய சமுதாயம்” என்கிற நூலில் உள்ள ஆதாரத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளார். தமிழ் மொழியாக்கம் பக்கம் 612-ல் உள்ளதை அப்படியே பார்ப்போம்.
“தென்னிந்தியாவில் தமிழர்களின் இரத்தச் சம்பந்தப்பட்ட உறவுமுறைகளும், நியூயார்க்கின் செனிக்கா – இராக்குவாய் மக்களின் இரத்த உறவுமுறைகளும் இன்னமும் ஏறக்குறைய இருநூறு உறவுமுறைகள் ஒரே மாதிரியாக உள்ளன.” இந்த மார்கனின் கருத்தின் அடிப்படையிலேயே, எங்கெல்ஸ் தமது நூலில் எழுதியுள்ளார்.
இதனால் தான் மார்கனின் நூலை முதல் நூல் என்றும் எங்கெல்சின் நூலை, அதன் வழி நூல் என்றும் கூறப்படுகிறது.
எங்கெல்சின் “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” நூல் சுமார் 300 பக்கங்களைக் கொண்ட சிறிய நூல், மார்கனின் “பண்டைய சமுதாயம்” நூல் சுமார் 800 பக்கங்களைக் கொண்ட பெரிய நூல். மார்கனின் நூல் எங்கெல்சின் நூலைவிட அதிகப் பக்கங்களைக் கொண்ட பெரிய நூலாகும். எங்கெல்ஸ் நூலுக்கான தரவுகளும் ஆதாரங்களும் மார்கனின் நூலில் நிறைந்து காணப்படுகிறது. எங்கெல்ஸ் நூலை நன்றாகப் படித்துப் புரிந்து கொள்வதற்கு, மார்கன் நூலைப் படிப்பது அவசியமானதாகியிரது.
இந்த அவசியத்தைப் புரிந்து கொண்டுதான், மார்கனின் “பண்டைய சமுதாயம்” என்கிற தமிழ் மொழியாக்கத்துக்குக் காத்துக் கொண்டிருந்தேன் என்று கூறினேன். மார்கனின் நூலைப் படித்துவிட்டு எங்கெல்ஸ் நூலைப் படிப்பது நமக்கு ஆழ்ந்த புரிதலைத் தரும்.
மார்கன், எங்கெல்ஸ், மார்க்ஸ் ஆகியோர்களின் முடிவுகளுக்கு ஆதாரமாகத் தான் இன்றைய புதிய தரவுகள், ஆதாரங்கள் கிடைக்கின்றன. இன்றைய தரவுகளையும் ஆதாரங்களையும் கொண்டு முடிவெடுப்பதற்கு மார்கனும் எங்கெல்சும் மார்க்சும் இன்றும் நமக்குத் தேவைப்படுகிறார்கள்.
தாய்வழிச் சமூகத்தைக் கடந்துதான் தந்தைவழிச் சமூகம் தோன்றியது என்பதை மார்கனும் எங்கெல்சும் கூறியதற்கு மாறாக இதுவரை எவராலும் நிரூபிக்க முடியவில்லை என்பதே உண்மை ஆகும். இந்த உண்மையே, நம்மை மார்கன் எழுதிய “பண்டைய சமுதாயம்” என்கிற நூலைப் படிக்கத் தூண்டுகிறது.
மனிதச் சமூக வளர்ச்சியின் படிநிலையாக விலங்காண்டி நிலை, காட்டுமிராண்டி நிலை, நாகரிக நிலை என்று மார்கன் கூறியதை எந்த மாற்றமும் இல்லாமல் எங்கெல்ஸ் அப்படியே ஏற்றுத் தமது நூலில் எழுதியுள்ளார்.
மானுடவியல் பற்றி இன்று எவ்வளவு நூல்கள் வேண்டுமானாலும் நமக்குக் கிடைக்கலாம், ஆனால் இன்றும் மார்க்சிய மானுடவியலை அறிவதற்கு மார்கன் நூலும் எங்கெல்ஸ் நூலும் அடிப்படையாக இருக்கிறது. பொதுவாக மானுடவியல் பண்பாட்டை முதல்நிலைப்படுத்துகிறது, மார்கனும் எங்கெல்சும் அந்தப் பண்பாட்டின் தோற்றத்துக்கும் மாற்றத்துக்கும் காரணமானதை ஆதாரமாக வைத்துப் பண்பாட்டை விளக்குகின்றனர். சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையே பண்பாட்டைப் படைக்கிறது. பண்பாடு என்பது வெறும் சிந்தனையில் இருந்து வருவதல்ல, சமூகச் சூழ்நிலையே சிந்தனையினைத் தூண்டுகிறது என்கின்றனர். இதனடிப்படையில் தோன்றியதுதான் மார்க்சிய மானுடவியல்.
இன்றும் நமக்குத் தேவைப்படுகிற மார்கனை சுருக்கமாக அறிந்து கொள்வோம். மார்கனின் முழுப் பெயர் லூயி ஹென்றி மார்கன். இவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் 1818 ஆண்டு பிறந்தார், 1881 ஆண்டு மறைந்தார். மார்க்ஸ், எங்கெல்ஸ் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்கிறார். “பண்டைய சமுதாயம்” என்கிற நூலை 1887ஆம் ஆண்டு வெளியிட்டார்.
மார்கன் ஒரு வழக்குரைஞராகத் தமது பணியினைத் தொடங்கினார். ஆனால் அவரது ஆர்வம் அமெரிக்கச் செவ்விந்தியர்களை ஆராய்வதில் திரும்பியது. அதற்குக் காரணம் இருக்கிறது. அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் 19ஆம் நூற்றாண்டில் நிலங்களை ஐரோப்பியர்களிடம் ஒப்படைத்துவிட்டுக் கனடாவுக்குக் குடிபெயரச் செவ்விந்தியப் பழங்குடிகளைக் கட்டாயப்படுத்தினர். இதுபோன்ற சூழலில்தான் அமெரிக்கச் செவ்விந்தியர்களைப் பற்றி, மார்கன் அறிந்து கொள்ள விரும்பினார்.
இராகுவாய்ப் பழங்குடி மக்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களைப் போலவே வாழ்ந்து, செவ்விந்தியர்களின் சமூகத்தை ஆய்வு செய்தார். இராகுவாய்க் கூட்டமைப்பில் உள்ள செனிகா பழங்குடிகளால் முறையாகத் தத்தெடுக்கப்பட்டு அவர்களைப் போலவே வாழ்ந்து, அவர்களின் வாழ்க்கை முறைகளை ஆராய்ந்தார். அப்படி வாழ்ந்த அனுபவத்தின் விளைவே “பண்டைய சமுதாயம்” என்கிற நூல்.
இந்த நூலில் மார்கன், இன்று காணப்படும் நாகரிகம் என்பது, மனிதயினம் தோன்றியது முதல் தொடர்ந்து காணப்படுபவை அல்ல, அது பல ஆயிரம், பல லட்சம் ஆண்டுகளின் படிநிலை வளர்ச்சி என்பதை ஆதாரத்துடன் நிறுவியுள்ளார். மனிதயினத்தின் நாகரிகம் மூன்று கட்டங்களில் வளர்ச்சி பெற்றது. முதலாவது விலங்காண்டி நிலை (Savagery), இரண்டாவது காட்டுமிராண்டி நிலை (Barbarism), மூன்றாவது நாகரிக நிலை (Civilization).
ஒவ்வொரு கட்டமும் மூன்று நிலைகளில் வளர்ச்சி பெற்றதாகக் கூறுகிறார். கீழ்நிலை, இடைநிலை, மேல்நிலை என்று வளர்ச்சியினை விளக்கினார். கீழ்நிலை என்பது தொடக்கமாகவும், இடைநிலை என்பது வளர்ச்சி பெற்றதாகவும், மேல்நிலை என்பது வளர்ச்சியின் விளைவாக அடுத்த கட்டத்துக்கு நுழைவதாகவும் மார்கன் விளக்குவது இயக்கவியல் அடிப்படையாக இருக்கிறது. அளவு மாறுபாடு, பண்பு மாறுபாடு, நிலைமறுப்பு என்கிற இயக்கவியல் அடிப்படையில் மார்கன் இதனை ஆராய்ந்து முடிவெடுத்துள்ளார்.
விலங்காண்டி நிலை, காட்டுமிராண்டி நிலை, நாகரிக நிலை என்பதில் அன்றைய செவ்விந்தியர்களில் சிலர் விலங்காண்டி நிலையின் மேல் நிலையிலும், சிலர் காட்டுமிராண்டி கட்டங்களிலும் வாழ்ந்தனர் என்பதை, அவர்களது வாழ்நிலையின் அடிப்படையில் மார்கன் விளக்குகிறார். பெரும்பான்மையினர் காட்டுமிராண்டி நிலையில்தான் இருந்தனர் மிகச்சிலரே விலங்காண்டி நிலையில் இருந்துள்ளனர்.
தம்மைத் தத்தெடுக்கப்பட்ட பழங்குடிகளை மட்டும் மார்கன் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை, அமெரிக்கக் கண்டத்தில் உள்ள அனைத்துச் செவ்விந்திய பழங்குடிகளையும் பற்றி பேசுகிறார். அனைவரையும் ஒப்பிட்டு விவரிக்கிறார். அதுமட்டுமில்லாது கிரேக்க, ரோமானிய நாகரிகத்தையும் இணைந்து மனிதயினத்தின் நாகரிக வளர்ச்சியினைக் கண்டறிந்தார். இந்த அறிவியல் வழிப்பட்ட ஆய்வை, மனிதயினத்தின் நேர்கோட்டு விளக்கம் என்று எத்தகைய விமர்சனங்கள் தொடர்ந்து வந்தாலும், மார்கனின் மனிதயின வளர்ச்சியின் அறிவியல் வழியினை முறியடித்திட முடியவில்லை.
மார்கன் இன்றும் சிறந்த மானுடவியல், சமூகவியல், இனவியல் ஆய்வாளராகவே திகழ்கிறார். மார்கனின் அடிப்படையில் ஆய்வு செய்பவர்கள் இன்றும் இருக்கின்றனர். எதிர்ப்புகளைக் கடந்து மார்க்சிய ஆய்வாளர்களிடம் இந்த முறை இன்றும் பின்பற்றப்படுகிறது.
மார்கன் தமது நூலுக்கு இடையில் தமிழர்களின் உறவுமுறைகளை ஒப்பிட்டு எழுதியதும், இரும்பு கண்டு பிடிப்புகளைப் பற்றிப் பேசியதும் தமிழர்களாகிய நமக்கு அதிக ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஏனென்றால் சென்ற ஆண்டு தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட “இரும்பின் தொன்மை” என்கிற நூலுக்கு முன்பாக உலகில் இரும்பு, கி.மு. 11ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்பட்டது. தமிழகத்தில் கிமு 3000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பயன்படுத்தியதை, புதிய ஆய்வின் முடிவுகள் காட்டுகிறது. அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் இருப்பைப் பயன்படுத்தியதை அறிய முடிகிறது. இந்நிலையில் இருப்பைப் பற்றி மார்கன் கூறுவது நமக்கு அதிக முக்கியமானதாக இருக்கிறது.
இந்த நூலில் மார்கன் இரும்பைப் பற்றி பல இடங்களில் கூறியுள்ளார், அதில் காணப்படுவைகளை தொகுத்துப் பார்ப்போம்.
நாகரிகக் காலத்தில் துப்பாக்கி எப்படியோ அதேபோலக் காட்டுமிராண்டி நிலையில் உள்ள பழங்குடிகளுக்கு இரும்பால் செய்யப்பட்ட வாட்களை மனிதயினத்தின் உயர்நிலைக்கு அடையாளமாகக் கொள்ளலாம் என்கிறார் மார்கன். (பக்-82) இரும்பு உற்பத்தி செய்யத் தொடங்கிய காட்டுமிராண்டி நிலையில் இருந்த மக்களிடம், மண்வெட்டி, கோடரி, இரும்பு பொருத்தப்பட்ட ஏர் முனை ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்தது. இத்தகைய பயன்பாட்டின் அதிகரிப்பால் தோட்டமாகப் பயிரிடப்பட்டது விவசாயமாக வளர்ச்சி பெற்றது. இதுமுதல் மனிதயினம் பழைய இயற்கைத் தடைகளில் இருந்து விடுபட்டு வேளாண்மை பெருகியது. (89) மனிதயினத்தின் நாகரிகம் இரும்பை உருக்கிப் பயன்படுத்துவதின் அடிப்படையில் தொடங்கியது, ஒருவேளை இரும்பு இதுவரை கிடைக்காது போயிருந்தால் இன்றுவரை மனிதயினம் காட்டுமிராண்டி நிலையிலேயே தொடர்ந்து இருக்கும் என்கிறார் மார்கன். (பக்கம் 108-109)
இரும்பு கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை மார்கனின் கருத்தால் அறிந்து கொள்ள முடிகிறது.
நாகரிகத்தின் அடிப்படையான இரும்பைத் தமிழர்கள்தான் முதன்முதலில் பயன்படுத்தினர், அவர்களிடம் இருந்தே உலகில் பல இடங்களுக்கு இரும்பு சென்றிருக்க வேண்டும் என்பதை அறியும் போது தமிழர்களின் இரும்பைப் பயன்படுத்தும் தொழில்நுட்ப அறிவை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. இதுவரையிலான ஆய்வு இதையே உறுதி செய்கிறது.
சொத்துடைமையின் தோற்றமும் அதன் விளைவுகளைப் பற்றி மார்கன் தமது நூலில் விரிவாக எழுதியுள்ளார். இதனைப் படிக்கும் போது மார்க்சியமல்லாத ஒர் அறிஞர் சொத்துடைமையின் தாக்கத்தை இவ்வளவு சிறப்பாக எழுத முடியுமா? என்கிற ஆச்சரியம் ஏற்படவே செய்கிறது.
சமூகத்தில் சொத்துடைமை தோன்றியதில் இருந்து ஏற்பட்ட மாற்றங்களை மார்கன் சரியாகவே புரிந்துள்ளார். சொத்துடையே அரசின் தன்மைகளை நிர்ணயிப்பதாகக் கூறுகிறார். அதுமட்டுமல்லாது ஒரு துணை குடும்ப முறையினை, அதாவது ஒரு தாரக் குடும்ப முறையினை இந்தச் சொத்துடைமை உறுதிப்படுத்தும் காரணமாக இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். சொத்துடைமை பெருக்கத்தின் காரணமாகவே அடிமை சமூகம் தோன்றியது.
இதனை மார்கன் சொற்களிலேயே பார்ப்போம்.
"மனித மனதில் சொத்து என்ற சிந்தனை மிக மெல்லியதாகத்தான் வளர்ச்சிபெறத் தொடங்கியது. இறுதியில், அது மனிதகுலத்தின் தலையாய விருப்பமாகிவிட்டது. சொத்துகளை உருவாக்குவது, பாதுகாப்பது, அனுபவிப்பது என்பதை முதன்மையாகக் கொண்டே அரசுகள் அமைக்கப்படுகின்றன. சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சொத்துகள் உருவாகும்போது மனித அடிமைத்தனம் உருவானது." (பக்கம் 790-791)
சொத்துடைமையின் விளைவுகளை மார்கன் இயந்திரத்தனமாகக் கூறிடவில்லை, அதன் தோற்றத்தையும் வளர்ச்சினையும் நுட்பமாக ஆராய்ந்து எழுதியுள்ளார். அடிமைச் சமூகம் சொத்துடைமையின் விளைவு என்பதை மார்கன் தெளிவாகக் கூறுகிறார்.
அடுத்து மார்கனைப் பார்க்கும் போது ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், தமிழ் மக்களிடையே காணப்படும் உறவுமுறையைப் பற்றி அவர் அறிந்திருந்தது.
இராகுவாய்க் கூட்டமைப்பில் உள்ள செனிகா பழங்குடிகளிடம் காணப்பட்ட குடும்ப உறவு முறைகள், தமிழ் மக்களிடையே காணப்படும் குடும்ப உறவு முறைகளோடு பொருந்துவதை மார்கன் சுட்டிக்காட்டுகிறார். உறவுமுறை என்றால் உறவுமுறை பெயர்கள் அல்ல, அதாவது மாமா, அத்தை, தாத்தா, பாட்டி, பெயரன், பெயர்த்தி என்று கூறப்படுகிற சொற்கள் அல்ல, அந்த உறவு முறைகளை மார்கன் குறிப்பிடுகிறார். ஒரு குடும்பத்தில் மூன்று ஆண்கள் இருக்கின்றார்கள் என்றால் மூன்று பேர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைகள் சகோதரர்களாவர், பெண் குழந்தைகள் அனைவரும் சகோதரிகளாவர். குழந்தைகள் அனைவருக்கும் அந்த மூன்று பேர்களும் அப்பா முறையாவார். பெரியப்பா, சித்தப்பா என்று அழைக்கப்படுகிறார்கள். மகன், மகள், மருமகன், மருமகள், பெயரன், பெயர்த்தி, பூட்டன், பூட்டி போன்ற உறவு முறைகள் செவ்விந்தியர்களின் செனிகா பழங்குடிக்கும் தென்னிந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும் இடையே உள்ள உறவுமுறைகள் இருநூற்றுக்கு மேல் ஒத்து போகின்றன என்கிறார் மார்கன்.
தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கு மார்கனின் இதுபோன்ற அறிதல்களைவிட, மார்கனின் அணுமுறை கோட்பாடே மிகுந்த ஈர்ப்பைத் தருகிறது. மார்கன் தன்வழியில் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை அடைந்துள்ளார், அதனையே தனது ஆய்வுக்கான கோட்பாடாகப் பயன்படுத்தினார். மனிதயினத்தின் அனுபவங்கள் கிட்டத்தட்ட ஒரே சீரான ஓட்டத்திலேயே இருந்தது. ஒரே மாதிரியான சூழ்நிலைகளில் மனிதனின் தேவைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே வெளிப்படுகின்றன என்று மார்கன் கூறியது, மார்க்சின் வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்பதற்கு ஒப்பானதாக இருக்கிறது.
மார்கன் தன் அணுகுமுறையில் தெளிவாகவே இருந்துள்ளார் என்பது அவரது எழுத்துகளைப் படிக்கும் போது தெரிகிறது. இதனை அவரது சொற்களிலேயே பார்ப்போம்.
"மனித முன்னேற்றத்தின் அனைத்துக் கட்டங்களிலும், அதன் இயக்கம் ஒரே சீராகவே இருந்துள்ளது. மிகவும் திருப்திகரமானதாக உள்ள, மனிதகுலத் தோற்றத்தின் ஒற்றுமை குறித்து விவாதமே இருக்கமுடியாது. விலங்குத்தன காலகட்டத்திலும், காட்டுமிராண்டித்தனக் காலகட்டத்திலும், நாகரிகமான காலகட்டத்திலும், மனிதன் ஒரு பொதுவான அறிவுக் கோட்பாட்டுடனேயே நம்மைச் சந்திக்கிறான். இதனால்தான், ஒரே மாதிரி நிலையிலிருந்த மக்களால், ஒரே மாதிரி கருவிகளையும், பாத்திரங்களையும் உற்பத்தி செய்ய முடிந்தது. ஒரே மாதிரி பலவற்றைக் கண்டுபிடிக்க முடிந்தது. ஒரே மாதிரியான எண்ண வித்துகளிலிருந்து ஒரே மாதிரியான அமைப்புகளை உருவாக்க முடிந்தது." (பக்கம் - 860)
மனிதயின வளர்ச்சியின் பொதுவான ஒற்றுமையினை மார்கன் கூறியதை ஏற்றுக் கொள்ளமுடியாத விமர்சகர்கள், மார்க்சியக் கோட்பாட்டின் எதிரிகள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
மார்க்சிய விரோதிகள் மார்கனின் முடிவுகளையும் அணுகுமுறைகளையும் எதிர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், கம்யூனிஸ்டுகளான மார்க்சியர்கள் மார்கனை பின்பற்றி மார்க்சிய மானுடவியலை வளர்த்தெடுக்க வேண்டும்.
மார்கன் பழங்குடிகளை மட்டும் சிந்தித்து வாழ்க்கையினை முடித்துக் கொண்டதாகப் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மார்கனுக்கு மார்க்சியப் புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் சமூகம் எதிர் காலத்தில் மாறியே தீரும் என்கிற நம்பிக்கை உறுதியாக இருந்திருந்தை அவரது நூலில் பார்க்க முடிகிறது.
நாகரிக நிலை உருவானதைத் தொடர்ந்து, சொத்துடைமை விரிவாக வளர்ச்சி பெற்றது. சொத்துடைமையின் வர்க்கத்தைக் காப்பதற்காக அரசு தோன்றியது. நாகரிக வளர்ச்சியால் ஏற்பட்ட சமூகத்தில் காணும் தனிநபரின் விருப்பங்கள் சொத்துடைமையின் அடிப்படையில் தோன்றியது, கண்டிப்பாகத் தனிநபரின் நலனைவிடச் சமூக நலன் முக்கியத்துவம் பெறுகிற வகையில் சமூகம் கண்டிப்பாக மாறும் என்கிற நம்பிக்கையோடு இந்த நூலை முடித்திருக்கிறார்.
குறிப்பிடுகிற ஆதி கம்யூனிசச் சமூகம் வளர்ச்சி அடைந்த வகையில் தோன்றும் என்று மார்க்ஸ் அறிவியல் முறையில் விளக்கியதை மார்கன் நம்பிக்கை அடிப்படையில் கூறியுள்ளார். இந்த நம்பிக்கை, இதுவரையிலான சமூக மாற்றத்தைக் கண்டறிந்ததால்தான் என்பதே உண்மை ஆகும். இந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வழிமுறை மார்கனிடம் இல்லாது போனாலும், கம்யூனிஸ்டுகளிடம் அதற்கான சமூக அறிவியல் இருக்கிறது.
மார்கன் கூறியதை, அவரது சொற்களிலேயே பார்ப்போம்.
"…… சொத்துகளைச் சேர்ப்பதற்கான வாழ்க்கை முறை, மனிதகுலத்தின் இறுதிக் கட்டமல்ல. நாகரிகம் தொடங்கிய பிறகு இப்போது வரையிலான காலகட்டம் மனித வாழ்வின் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில், ஒரு சிறு பகுதியேயாகும். இன்னும் வரவிருக்கும் பல காலங்களின் ஒரு சிறு பகுதி. சொத்துகள் என்பது மட்டுமே இறுதியாகவும், குறிக்கோளாகவும் உள்ள வாழ்க்கை முறை முடிவுறும். ஏனென்றால், இதுபோன்ற வாழ்க்கை முறையில், சுய அழிவிற்கான தன்மைகள் உள்ளன. அரசில் ஜனநாயகம், சமுதாயத்தில் சகோதரத்துவம், உரிமைகளிலும், சலுகைகளிலும் சமநிலை, உலகமயமான கல்வி போன்றவற்றை நோக்கி, அதற்கான அனுபவத்தையும், அறிவையும், புத்திக்கூர்மையையும் சமுதாயம் நாடிக் கொண்டே இருக்கிறது. சமுதாயத்தின் அடுத்த தளம் அதுவாக இருக்கலாம். பண்டைக்கால ஜென்டிஸ்களிடையே நிலவிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை, அதை விட உயரிய அளவில் புதுப்பிப்பதாக இது அமையும்." (பக்கம் -859-860)
பழங்குடிகளின் ஆதி பொதுவுடைமைச் சமூகத்தில் காணப்பட்ட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மீண்டும் உயரிய நிலையில் தோன்றும் என்று மார்கன் கூறுகிறார். இப்படிப்பட்ட மார்கனை கம்யூனிஸ்டுகள் கொண்டாடாமல் எப்படி இருக்க முடியுமா?
மார்கனின் தமிழ் மொழியாக்கத்தைப் படித்த பிறகு, சமூக ஊடகங்களில் மார்கனையும், மொழிபெயர்ப்பாளர் முனைவர் டி.ஆர்.சுதா அவர்களையும் நான் அதிகமாகப் புகழ்வதாகச் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். நான் எதையும் மிகைப்படுத்திக் கூறவில்லை. நான் அனுபவித்ததின் வெளிப்பாடாகவே அதனை நான் பார்க்கிறேன். அனுபவத்தின் மகிழ்வு அப்படி வெளிப்பட்டுள்ளது.
தமிழ் மொழியாக்கத்தில் உள்ள கலைச்சொற்களைப் பற்றி நான் புகழவில்லை, வாக்கிய அமைப்பையும், அந்த வாக்கியங்களின் பொருளை எளிதாகப் புரிந்து கொள்ளும்படியாக அந்தத் தமிழ் மொழியாக்கம் இருப்பதனால்தான், நான் அதனைக் குறிப்பிட்டுப் பேசினேன். அதனைப் புகழ்ச்சி என்று சுருக்கிட முடியாது.
முனைவர் டி.ஆர்.சுதா அவர்களின் தமிழ் மொழியாக்கத்தைத் தோழர் மயிலைபாலு அவர்கள் செம்மையாக்கம் செய்துள்ளார். மொழியாக்கத்தின் சிறப்புக்கு இத்தகைய செம்மையாக்கமும் முக்கிய காரணமாகும்.
ஆங்கிலத்தில் இருக்கும் கூட்டு வாக்கியங்களை, சிறுசிறு வாக்கியங்களாகத் தமிழில் எளிய நடையில் படிக்கும்படியாக மாற்றித் தந்திருப்பது மிகச் சிறப்பு. ஆங்கிலமும் தெரியும் தமிழும் தெரியும் மொழிபெயர்த்துவிடலாம் என்கிறதாக இல்லாமல், அந்த நூலில் காணப்படும் துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடி நூலைச் சிறப்பாகத் தந்துள்ளார் முனைவர் டி.ஆர்.சுதா.
இந்த மார்கனின் நூலைச் சிந்தன் புக்ஸ் வெளியிட்டுள்ளது, நூல் சிறப்பான கட்டமைப்பில் காணப்படுகிறது. நூலின் விலை ரூ.1,000/-. முன்வெளியீட்டுத் திட்டத்தில் அறிவித்த விலையான 700/- ரூபாய்க்குத் தற்போதும் கிடைக்கிறது. இந்தச் சலுகை எவ்வளவு நாள் தொடரும் என்று தெரியவில்லை, அதனால் தேவைப்படுவோர் உடனே சலுகையினைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
மார்கன் “பண்டைய சமுதாயம்” என்கிற நூலை நான்கு பகுதியாகப் பிரித்து எழுதியுள்ளார். அதாவது நான்கு அத்தியாயங்களாக பிரித்துள்ளார்.
1.கண்டுபிடிப்புகள் கண்டெடுப்புகள் மூலமாக அறிவின் வளர்ச்சி
(Growth of Intelligence through Inventions and Discoveries
2.அரசாங்கம் என்ற சிந்தனையின் வளர்ச்சி
(Growth of the Idea of Government)
3.குடும்பம் என்ற சிந்தனையின் வளர்ச்சி
(Growth of the Idea of the Family)
4.சொத்து என்ற சிந்தனையின் வளர்ச்சி
(Growth of the Idea of Property)
சிந்தனையின் வளர்ச்சி என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளதால், சிந்தனையே அனைத்தையும் தீர்மானிக்கிறது என்று இந்த நூல் கூறவில்லை. சிந்தனைக்கான காரணத்தையே முன்வைக்கிறது.
மூன்றாவது அத்தியாயமான, குடும்பம் என்ற சிந்தனையின் வளர்ச்சி என்கிற தலைப்பில், குடும்ப வளர்ச்சியின் படிநிலைகளைச் சுட்டிக்காட்டுகிறது. இரத்த உறவு குடும்பம், இணை குடும்பம், தந்தை வழியிலான குடும்பம், ஒரு துணை குடும்பம் அதாவது ஒரு தாரக் குடும்பம் என்று குடும்ப வளர்ச்சியின் படிநிலையினை ஆதாரத்துடன் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.
நான்காவது அத்தியாயத்தில் சொத்துகளின் படிநிலை வளர்ச்சியைப் பற்றி மார்கன் எழுதியுள்ளார். இந்த நூலில் பழங்குடிகளிடம் காணப்படும் சொத்து, அதனை வாரிசுகளிடம் எப்படிப் பிரிக்கப்பட்டது என்கிற பகுதியினைப் பற்றிப் படிக்கும் போது சிலருக்கு, பழங்குடி சமூகத்தில் எப்படிச் சொத்துடைமை இருக்கும் என்று தோன்றக்கூடும். உண்மைதான் அந்தச் சமூகத்தில் நாம் நினைக்கிறபடியான சொத்துடைமை அங்கே கிடையாது, அவர்களிடம் இருந்த பொருட்களையே சொத்து என்று கூறப்படுகிறது.
இதனை மார்கன் நமக்குப் புரியும்படி தெளிவாகவே எழுதியுள்ளார். முரட்டுத்தனமான கருவிகள், பாத்திரங்கள், துணிமணிகள், அணிகலன்கள் இவையே அன்றைய சொத்தாகக் கூறப்படுகிறது. இத்தகை சொத்து இருப்பதைக் கொண்டு அவர்களிடம் சொத்துடைமை சிந்தனை இருந்ததாகக் கருதிடக்கூடாது. இதனை மார்கன் தமது நூலில் சிறப்பாக விளக்கி உள்ளார்.
"விலங்குத்தன காலகட்டத்தில் வாழ்ந்த மக்களிடம் இருந்த சொத்துகள் கணிசமானவை அல்ல. அவற்றின் மதிப்பு, சொத்தின் மேல் அவர்களுக்கிருந்த ஆசை, அவர்கள் வைத்திருந்த சொத்துகளுக்கான வாரிசுரிமை ஆகியவற்றையெல்லாம் குறித்த அவர்களது எண்ணங்கள் வலுவானதாக இருக்கவில்லை. முரட்டுத்தனமான கருவிகள், பாத்திரங்கள், துணிமணிகள், சிக்கிமுக்கிக் கற்களால், எலும்புகளால் ஆன கருவிகள், இதர தனி மனித அணிகலன்கள் போன்றவையே அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் முக்கியச் சொத்துகளாக இருந்தன. அவற்றைத் தங்களின் உடைமைகளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை, அவர்களின் மனங்களில் தோன்ற ஆரம்பித்திருக்கவில்லை. ஏனென்றால், அப்படி ஒரு எண்ணமே இருக்கவில்லை. நாகரிகக் காலத்தில் முழு வீச்சுடன் வலுப்பெற்ற சொத்துகளுக்கான பேராசை (studium lucri) என்பது, இப்போது மனித மனத்தில் கோலோச்சும் சக்தியாக உள்ளது. நிலம் என்பது உடைமையின் கீழ் வராத காலத்தில், பழங்குடியினர் அனைவருமே நிலத்தைப் பொதுவாகப் பயன்படுத்தி வந்தனர்." (பக்கம் - 828)
இப்படி மார்கனின் நேரடியான எழுத்துகளை நான் இங்கே படித்துக் காட்டுவது ஏனென்றால், மார்கன் எவ்வளவு எளிமையாகத் தமது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை அறிவதற்கும், தமிழ் மொழியாக்கம் எவ்வளவு எளிமையாக இருக்கிறது என்பதை அறிவதற்கும் தான்.
எனக்குத் தெரிந்து பல தோழர்கள் மார்கனின் “பண்டைய சமுதாயம்” நூலை வாங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் கண்டிப்பாக நூலைப் படிக்க வேண்டும், எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற நூலைப் படித்த அனைத்துத் தோழர்களும், மார்கன் நூலைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
மார்கனின் இந்த நூல் சமூகவியல், மானுடவியல், தமிழ் இலக்கியம், தொல்லியல், வரலாற்றியல், அரசியல் அறிவியல், மார்க்சியவியல் போன்ற துறைசார்ந்த மாணவர்களும், ஆய்வாளர்களும் கண்டிப்பாக மார்கனின் நூலைப் படிக்க வேண்டும்.
மார்கனின் நூலை எதிர்ப்பவர்கள், மார்கன் நூலை அதிகமாகப் படிக்கின்றனர், இனிமேல் மார்க்சியத்தை ஆதரிப்பவர்கள் அதிகமாக மார்கனின் நூலைப் படிக்க வேண்டும். படித்தால் நமக்குப் பெரும் பயன்தரும் என்பதில் சந்தேகமில்லை.
மீண்டும், மார்கனின் “பண்டைய சமுதாயம்” என்கிற நூலை வெளியிட்ட சிந்தன் புக்ஸ் வெளியீட்டகத்துக்கும், தமிழாக்கம் செய்த முனைவர் டி.ஆர்.சுதா அவர்களுக்கும், இந்த நூலைச் செம்மையாக்கம் செய்த தோழர் மயிலைபாலு அவர்களுக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக ஒன்றைக் கூறுகிறேன், இன்னும் சிலநாட்களுக்கு எனது கொண்டாட்ட மனநிலை தொடரும் என்பதில் சந்தேகமில்லை. அதில் இருந்து விடுபட்ட பிறகே நான் பிற நூல்களை, முழுமையாகப் படிக்க முடியும். அதுவரை கொண்டாட்டத்தில் திளைப்பேன் என்று கூறி விடைபெறுகிறேன்.
அ.கா.ஈஸ்வரன்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு