நூல் அறிமுகம்: பாட்டாளி வர்க்கப் புரட்சியும் துரோகி காவுத்ஸ்கியும்
அ.கா.ஈஸ்வரன்

(அண்மையில் வெளிவந்துள்ள லெனின் தேர்வு நூல்களின் 12 தொகுதிகள் பற்றிய அறிமுகம், MELS இணைய வழிப் பயிலரங்கில் தொடர் வகுப்பாக எடுக்கப்படுகிறது. அதில் பதினோராம் வகுப்பு இது.)
இந்த வகுப்பில் லெனின் 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எழுதிய “பாட்டாளி வர்க்கப் புரட்சியும் துரோகி காவுத்ஸ்கியும்” என்கிற நூலைப் பார்க்கப் போகிறோம். இந்நூல் சுமார் 150 பக்கங்களைக் கொண்டுள்ளது. ஒரு மார்க்சிய துரோகி பற்றி இவ்வளவு பெரிய நூலை லெனினை எழுத வைத்திருக்கிறது என்றால், அந்த துரோகம் எந்தளவுக்கு மோசமானது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
அன்றைய சோவியத் நாட்டில் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட லெனின் தேர்வு நூல்களின் தமிழ் மொழியாக்கத்தில், “The Proletarian Revolution and the Renegade Kautsky”என்கிற ஆங்கிலத் தலைப்புக்கு “பாட்டாளி வர்க்கப் புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும்” என்று காணப்படுகிறது. அண்மையில் வெளிவந்த புதிய மறுபதிப்புகள் மூன்றிலும் அவ்வாறே வெளியிடப்பட்டுள்ளது.
ஓடுகாலி என்பது தமிழ் நாட்டில் பயன்படுத்துகிற பெண்களை இழிவுபடுத்தும் நிலப்பிரபுத்துவக் காலச் சொல். அச்சொல்லை இன்று நாம் பயன்படுத்துவதில்லை. அப்படியிருக்க ஓடுகாலி காவுத்ஸ்கி என்று பயன்படுத்துவது சரியாக இருக்காது என்று கருதுகிறேன். Renegade என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு அகரமுதலி என்ன பொருள் கொடுக்கிறது என்று பார்ப்போம். துரோகி, விசுவாசமற்றவர், சித்தாந்தத்தைத் துறந்தவர், கொள்கையை மாற்றிக் கொண்டவர், கோட்பாட்டைக் காட்டிக் கொடுப்பவர், கோட்பாட்டை கைவிட்டவர் இது போன்ற சொற்கள் காணப்படுகிறது.
லெனின் எழுத்துக்களை முழுதும் படித்தப் பிறகு அவர் என்ன நினைத்து இந்தச் சொல்லைப் பயன்படுத்தி இருப்பார் என்று பார்த்தால், பின்பற்றிய சித்தாந்தத்தை கைவிட்டு ஓடியதுடன் அதனை காட்டிக் கொடுத்த துரோகி. மொத்தமாகப் பார்க்கும் போது துரோகத்தனத்தையே வெளிப்படுத்துகிறது. நாம் எந்த சொல்லை இங்கே பயன்படுத்தினாலும், பின்பற்றிய சித்தாந்தத்தை கைவிட்டு ஓடியதுடன் அதனை காட்டிக் கொடுத்த துரோகி என்கிற பொருளை உள்ளடக்கியே புரிந்து கொள்ள வேண்டும். Renegade என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு துரோகி என்கிற சொல்லை பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். துரோகி என்கிற சொல் மென்மையாக இருந்தாலும், நாம் இந்த சொல்லோடு, பின்பற்றிய சித்தாந்தத்தை கைவிட்டு ஓடியதுடன் அதனை காட்டிக் கொடுத்த துரோகி என்பதாகப் புரிந்து பயன்படுத்தும் போது மென்மையாக இருக்காது.
“பாட்டாளி வர்க்கப் புரட்சியும் துரோகி காவுத்ஸ்கியும்” என்கிற நூலை லெனின் எட்டுத் அத்தியாயங்களைக் கொண்டதாக எழுதியிருக்கிறார்.
முதல் அத்தியாயம் மிகவும் முக்கியமானதாகும், அதன் தலைப்பு, மார்க்சை ஒரு பொதுவான தாராளவாதியாக காவுத்ஸ்கி எவ்வாறு மாற்றினார் என்பதாகும்.
இந்த முதல் அத்தியாயத்தை முழுமையாகப் புரிந்து கொண்டால், நூலின் அனைத்து பகுதிகளையும் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும். இந்த எட்டு அத்தியாயத்துடன், முன்னுரையும் இரண்டு பிற்சேர்க்கையும் லெனின் இதில் எழுதியுள்ளார்.
முதலில், முன்னுரையில் காணப்படும் கருத்துகளைப் பார்ப்போம்.
1918ஆம் ஆண்டு காவுத்ஸ்கி “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” என்கிற தலைப்பில் ஒரு சிறுபிரசுரத்தை வெளியிட்டார். இரண்டாம் அகிலத்தின் படுமோசமான, அவமானகரமான திவால் நிலைமைக்கு சிறந்த உதாரணமாக இந்நூல் உள்ளதாக லெனின் கூறுகிறார்.
மேலும் லெனின் கூறுகிறார், பாட்டாளி வர்க்கப் புரட்சி, பல நாடுகளில் ஒரு நடைமுறைப் பிரச்சினையாக மாறிவருகிறது. இந்த நிலையில் காவுத்ஸ்கியின் துரோகமான செயலை, அதாவது மார்க்சியத்தை முழுமையாக கைவிட்டதை ஆராய்வது அவசியம் ஆகும். இந்த நூலில் இந்தப் பணியைத்தான் லெனின் செய்துள்ளார்.
முதல் உலகப் போர் தொடங்கிய போதே, காவுத்ஸ்கி மார்க்சியத்தை துறந்து ஓடியதை லெனின் சுட்டிக்காட்டியுள்ளார். காவுத்ஸ்கி பற்றி இந்த நூலுக்கு முன்பாக, எழுதிய நூலிகளில் கூறியதை முன்னுரையில் லெனின் ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டியுள்ளார்.
முதலாவதாக “சோஷலிசமும் போரும்” என்கிற நூலில் கூறியதை சுட்டிக்காட்டுகிறார்.
இரண்டாவது அகிலத்தின் முன்னணிப் பொறுப்பாளரான காவுத்ஸ்கி, மார்க்சியத்தை சொல்லளவில் ஏற்றுக் கொண்டு நடைமுறையில் மாறாகச் செயல்பட்டார். அதாவது பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமல்லாத வர்க்கப் போராட்டத்தை ஏற்கும் ஒரு தாராளவாத முதலாளித்துவ கோட்பாட்டின்படி செயல்பட்டார்.
இதே போல பிளெகானவும் மார்க்சியத்தின் புரட்சிகரமான உயிர்த்துடிப்புள்ள உணர்வுகளை அகற்றினார். அதை எப்படி செய்தார் என்பதை லெனின் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். அதனை அவரது சொற்களிலேயே பார்ப்போம்.
“புரட்சிகரப் போராட்ட முறைகள், இந்த முறைகளுக்கான பரப்புரை, தயாரிப்பு, இந்தத் திசையில் மக்கள்திரளுக்கு போதனை செய்தல் ஆகியவற்றை நீக்கிவிட்டு மார்க்சியத்தில் உள்ள மற்ற அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.”
மார்க்சியத்தில் உள்ள புரட்சிகரப் போராட்டத்தை நீக்கிவிட்டு மற்றதை ஏற்பது என்பது மார்க்சியத்தை நீர்த்துப் போகச் செய்வதாகும். அதாவது மார்க்சியத்தை சொல்லளவில் ஏற்றுக் கொண்டு அதனை செயல்படுத்தாமல் இருப்பதாகும்.
அனைத்து திருத்தல்வாதிகளும் இதே வழியில்தான் செயல்படுகின்றனர். அதாவது மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டது போல நடித்து, அதன் புரட்சிகரத் தன்மையினை நீர்த்திப் போகும் அளவுக்கு திருத்தங்களைக் கொடுக்கின்றனர். மார்க்சிய எதிரிகளைவிட இப்படிப்பட்டவர்களே மார்க்சியத்துக்கு பெரும் ஆபத்தானவர்.
புரட்சிகரப் போராட்ட முறைகளைக் கையாளாமலும், இந்த புரட்சிகர போராட்ட முறைகளுக்கான பரப்புரையினை செய்யாமலும், அதற்கான தயாரிப்பில் ஈடுபடாமலும், புரட்சிகரப் போராட்ட வழியில் மக்கள்திரளுக்கு போதனை கொடுக்காமலும் உள்ள கட்சியினை, கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறிட முடியாது. கம்யூனிஸ்ட் கட்சி என்பது மற்ற முதலாளித்துவ கட்சி போன்ற ஒரு கட்சி கிடையாது, அது தொழிலார்களுக்கு என்று வளர்த்தெடுக்கப்பட்ட தனித்த கட்சி ஆகும். தொழிலாளர்களின் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் கம்யூனிச வழியில் வகுப்பவர்களே கம்யூனிஸ்ட் தலைவர்கள். அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களைக் கொண்டதே கம்யுனிஸ்ட் கட்சி.
“கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்”, இரண்டாம் அத்தியாயமான “பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்” என்கிற பகுதியில், மார்க்சும் எங்கெல்சும் எழுதியதை நாம் படித்தால் இது புரியும்.
"கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் நடைமுறைவழியில், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளில், மிகவும் முன்னேறிய, மிகவும் உறுதி வாய்ந்த பிரிவாக, மற்றவர்கள் அனைவரையும் முன்னோக்கி உந்தித் தள்ளுகின்ற பிரிவாக உள்ளனர். மறுபுறம் கோட்பாட்டு அளவில், கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத ஓர் அனுகூலத்தை, அதாவது, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும், இறுதியில் ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தைப் பெற்றுள்ளனர்.
கம்யூனிஸ்டுகளுடைய உடனடிநோக்கம், மற்றெல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் உடனடி நோக்கம் எதுவோ அதுவேதான். பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகக் கட்டியமைத்தல், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல் ஆகியவைதாம்."
பாட்டாளிகளை ஒருவர்க்கமாகக் கட்டியமைத்தல், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல் அகிய பணியினை புரிந்து செயல்படுகிற கட்சியே கம்யூனிஸ்ட் கட்சி என்பதை அறிக்கையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
இதன் மூலம் நமக்கு நன்றாகத் தெரிகிறது, கம்யூனிஸ்ட் கட்சி என்பது முதலாளித்துவ கட்சிகளில் ஒன்றாக செயல்பட முடியாது, தொழிலாளர்களுக்கு என்று உருவாக்கப்பட்ட தனித்துமான கட்சிதான் கம்யூனிஸ்ட் கட்சி.
இத்தகையப் புரிதலோடு லெனின் நூலுக்குச் செல்வோம்.
முதல் உலகப் போர் ஏற்பட்டப் போது, காவுத்ஸ்கி தாய் நாட்டின் தற்காப்பை ஏற்றுக் கொள்ளுதல் என்கிற தேசிய வெறியின் அடிப்படைக் கருத்தோடு தன்னை இணைந்து கொள்கிறார். போர் தொடங்குவதற்கு முன்பு காவுத்ஸ்கி, 1912ஆம் ஆண்டு சர்வதேச சோஷலிஸ்டு காங்கிரசில், போரின் கொள்ளைக்கார நோக்கங்களை அம்பலப்படுத்த வேண்டும், இந்த நெருக்கடியை சோஷலிஸ்டுகள், தங்கள் நாட்டில் சோஷலிசப் புரட்சியாக மாற்ற வேண்டும் என்று போடப்பட்ட அறிக்கையில் கையொப்பமிட்டார். ஆனால் போர் தொடங்கியவுடன் கையொப்பமிட்ட அறிக்கைக்கு மாறாக தேசியவெறியை நியாயப்படுத்துவதிலும் அதை அலங்கரித்துக் காட்டுவதிலும் தம்மைத் தாமே விஞ்சிவிட்டார் என்கிறார் லெனின்.
காவுத்ஸ்கியின் பின்னோக்கிச் செல்லும் இந்தப் போக்கைப் பற்றி லெனின் கூறிய சொற்களிலேயே பார்ப்போம்.
"இந்தப் பின்வாங்கல், முதுகெலும்பற்ற தன்மை, சந்தர்ப்பவாதத்திற்கு அடிபணிதல் மற்றும் மார்க்சியக் கோட்பாடுகளின் ஒப்பற்றத் தன்மையை கொச்சைப்படுத்தல் ஆகியவற்றிற்கு எதிராக இரக்கமற்ற போராட்டத்தை நடத்தாவிட்டால் தொழிலாளி வர்க்கம் அதன் உலகப் புரட்சிகரப் பங்கை வகிக்க முடியாது. காவுட்ஸ்கியிசம் தற்செயலானது அல்ல; இது இரண்டாம் அகிலத்திற்குள் உள்ள முரண்பாடுகளின் சமூக விளைபொருளாகும், இது சொல்லளவில் மார்க்சியத்திற்கு அடிபணிதலாகும் செயலில் சந்தர்ப்பவாதத்திற்கு அடிபணிந்ததாகவும் கலந்த கலவையாகும்."
(சோஷலிசமும் போரும்)
அடுத்து லெனின் “ஏகாதிபத்தியம் - முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்” என்கிற தாம் எழுதிய நூலில் காவுத்ஸ்கி பற்றி கூறியதை அடுத்து சுட்டிக்காட்டுகிறார். அந்த நூலில் ஏகாதிபத்தியம் குறித்தகாவுத்ஸ்கியின் வரையறையை அவரது சொற்களிலேயே லெனின் மேற்கோள் காட்டுகிறார்.
முதலில் காவுத்ஸ்கி கூறுகிற வரையறுப்பைப் பார்ப்போம், அடுத்து லெனின் வரையறைப் பார்ப்போம்.
"ஏகாதிபத்தியம் என்பது மிகவும் வளர்ந்த தொழில்துறை முதலாளித்துவத்தின் விளைவாகும். அங்கு எந்த மக்கள் வாழ்ந்தாலும், அந்த நிலப் பிரதேசங்களையும் அதிக அளவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது அல்லது வென்று சேர்த்துக் கொள்வது என்பதற்கான ஒவ்வொரு தொழிற்துறை முதலாளித்துவ தேசத்தின் வேட்கை இதில் அடங்கியுள்ளது."
அடுத்து லெனின் தமது ஏகாதிபத்திய வரையறுப்பை கூறுகிறார்.
“ஏகாதிபத்தியம் என்பது ஏகபோகங்கள் மற்றும் நிதி மூலதனத்தின் ஆதிக்கம் நிறுவப்பட்ட வளர்ச்சிக் கட்டத்தின் முதலாளித்துவம் ஆகும். இந்தக் கட்டத்தில் மூலதனம் ஏற்றுமதி முனைப்புடைய முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சர்வதேச டிரஸ்டுகளிடையே உலகம் பங்கிடப்படுவது தொடங்கியிருக்கிறது, உலகின் அனைத்து நிலப்பரப்புகளும் மிகப்பெரிய முதலாளித்துவ வல்லரசுகளுக்கு இடையே பங்கிடப்படுவது நிறைவடைந்துள்ளது.”
காவுத்ஸ்கியின் வரையறை எவ்வளவு முற்றிலும் தவறானது என்பதையும், ஏகாதிபத்தியத்தின் மிக ஆழமான முரண்பாடுகளை மறைப்பதற்கும், பின்னர் சந்தர்ப்பவாதத்துடன் சமரசம் செய்வதற்கும் ஏற்றால் போல் காவுத்ஸ்கியின் ஏகாதிபத்தியம் பற்றிய வரையறை புரட்சிகர பாங்கில் இருந்து விலகி, தாராளவாதமாக மாற்றியமைக்கப்பட்டது என்பதையும் லெனின் சுட்டிக்காட்டுகிறார். மேலும் ஏகாதிபத்தியம் குறித்த காவுத்ஸ்கியின் விமர்சனம் முதலாளித்துவ அற்பவாதிகளின் விமர்சனத்தைவிடவும் தாழ்ந்த நிலையில் காணப்படுவதையும் லெனின் குறிப்பிட்டு சொல்கிறார்.
காவுத்ஸ்கியின் எழுத்தை நேரடியாகப் படிக்கும்போது, அவர் தவறாக ஒன்றையும் கூறியதாகத் தென்படாது, ஆனால் கூற வேண்டியதை மறைத்துவிடுவார். இப்படிப்பட்ட எழுத்துக்களைப் படித்து புரிந்து அதன் திரிப்புத் தன்மையை அறிந்து கொள்வது கடினமானது. லெனின் அதனை தெளிவாக அம்பலப்படுத்தி உள்ளார்.
அடுத்து லெனின் 1918ஆம் ஆண்டு வெளியிட்ட “அரசும் புரட்சியும்” என்கிற தமது நூலில் காவுத்ஸ்கியைப் பற்றி கூறியதை பதிவு செய்கிறார்.
“அரசும் புரட்சியும்”என்கிற நூலின் ஆறாம் அத்தியாயத்தியாயமான “சந்தர்ப்பவாதிகளால் மார்க்சியத்தை கொச்சைப்படுத்தல்” என்ற தலைப்பில் கூறியப் பகுதியைப் பார்ப்போம். “காவுட்ஸ்கிக்கு நான் சிறப்பு கவனம் செலுத்தினேன், அவர் மார்க்சின் கருத்துக்களை முற்றிலுமாக சிதைத்து, சந்தர்ப்பவாதத்திற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளார்”, மேலும் அவர் “புரட்சியைச் சொல்லளவில் ஏற்றுக் கொண்டு செயலில் நிராகரித்தார்” என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
சாராம்சத்தில், “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” குறித்த தனது துண்டுப்பிரசுரத்தில் காவுட்ஸ்கி செய்யும் முக்கிய கோட்பாட்டுத் தவறு என்னவென்றால், அரசு குறித்த மார்க்சின் கருத்துக்களை சந்தர்ப்பவாதப் போக்கில் திரித்துப் புரட்டியிருப்பதே ஆகும் என்பதை “அரசும் புரட்சியும்” என்கிற நூலில் லெனின் அம்பலப்படுத்தி உள்ளார்.
போல்ஷிவிக்குகள் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே காவுத்ஸ்கியை ஒரு துரோகி என்று லெனின் வெளிப்படையாக குற்றம் சாட்டினார். “பாட்டாளி வர்க்கப் புரட்சியும் துரோகி காவுத்ஸ்கியும்” என்கிற நூலை லெனின் எழுதுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, காவுத்ஸ்கி துரோகியாக மாறுகிற தொடக்கக் காலத்திலேயே லெனின் இனம் கண்டிருக்கிறார் என்பதை நாம் அறிய முடிகிறது.
பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரத் தன்மை இழக்காமல் நாம் இருக்க வேண்டுமானால் மார்க்சிய துரோகிகளை தொடக்கநிலையிலேயே இனம்கண்டு அவர்களை அம்பலப்படுத்த வேண்டும். அத்துடன் அப்படிப்பட்டவர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். மார்க்சியத்தின் புரட்சிகரத் தன்மையினை ஏற்றுக் கொள்ளாதவர்களை, மார்க்சியத்தை சித்தாந்தமாகக் கொண்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சியில் எப்படி வைத்திருக்க முடியும். மார்க்சியத்தின் அடிப்படைகளைச் சந்தேகிப்பவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்களே ஆவர். அவர்கள் ஏற்று பின்பற்றுகிற தங்களது கோட்பாட்டுக்கு ஏற்ற வகையில் கட்சியின் பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது அப்படிப்பட்ட கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும்
1. மார்க்சை ஒரு பொதுவான தாராளவாதியாக காவுத்ஸ்கி எவ்வாறு மாற்றினார்
காவுத்ஸ்கி எழுதிய “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” என்கிற நூலின் விவாதம், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முக்கிய சாராம்சமான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றியது. வர்க்கப் போராட்டத்தின் முழுவதில் முக்கியமான பிரச்சினை இது. அதனால் இதன் மீது தனித்த கவனம் செலுத்த வேண்டியது அனைத்து நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்டுகளின் அவசியமான ஒன்றாகும்.
“பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” என்கிறப் பிரச்சினை ஏதோ, வன்முறை, ஜனநாயகம் ஆகியவற்றுக்கு இடையேயானப் பிரச்சினை என்று கருதிடக்கூடாது. அது வர்க்கப் போராட்டத்தின் முழுவதின் முக்கியமானப் பிரச்சினை ஆகும். அதனால் இதை அசட்டையாக ஒதுக்கிவிட முடியாது என்கிறார் லெனின்.
“பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” என்கிற மார்க்சின் கருத்தைப் புரிந்து கொள்ளாது போனால் அது அனைத்துப் பிரச்சினையிலும் வெளிப்படவே செய்யும்.
“பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” என்கிறப் பிரச்சினையை காவுத்ஸ்கி எவ்வாறு அணுகுகிறார் என்று பார்ப்போம்.
ருஷ்யாவில் உள்ள போல்ஷிவிக்குகள் மற்றும் மென்ஷிவிக்குகள் ஆகியோருக்கு இடையே உள்ள வேறுபாடாக, ஜனநாயகத்தையும் சர்வாதிகாரத்தையும் காவுத்ஸ்கி பார்க்கிறார். இந்தப் பிரச்சினையை ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடு என்று காவுத்ஸ்கி கூறுவதை லெனின் கடுமையாக விமர்சிக்கிறார். லெனின் என்ன சொற்களில் விமர்சித்துள்ளார் என்பதைப் பார்ப்போம்.
“இதுவே காவுத்ஸ்கியின் சிறு பிரசுரத்தின் அறுதிகூறு, இதுவே காவுத்ஸ்கியின் பிரசுரத்தின் உள்ளடக்க சாரம். இது இத்தகைய மிக மோசமான கோட்பாட்டு வழிபட்ட குழப்பமாய், மார்க்சியத்தை இத்தகைய முறையில் முற்றும் கைவிடுவதாய் இருக்கும் நிலையில் காவுத்ஸ்கி பெர்ன்ஷ்டைனையே கூட மிகவும் விஞ்சிவிட்டார் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்”
இங்கே அந்த பிரசுரத்தின் உள்ளடக்க சாரம் எது என்று எதையும் வெளிப்படையாக நம்முன் லெனின் வைக்கவில்லை, காவுத்ஸ்கியின் கருத்து அன்று பரவலாய் பரவியிருந்ததே அதற்குக் காரணமாக இருக்கும்.
“பாட்டாளி வர்க்கப் புரட்சியும் துரோகி காவுத்ஸ்கியும்” என்கிற லெனினது நூலைப் படிக்கும் போது காவுத்ஸ்கியின் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” என்பதையும் சேர்த்துப் படித்துப் பார்த்தேன். அப்போது ஏன் இவ்வளவு சினம் கொண்டு சீற்றத்துடன் லெனின் தனது நூலை எழுதியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
காவுத்ஸ்கி, மார்க்சியத்தை இத்தகைய முறையில் முற்றும் கைவிடுகிறார் என்று லெனின், அவரின் எந்தக் கருத்தைக் கண்டு கூறியிருப்பார் என்று அவரது நூலில் தேடிப்பார்த்தால், அது இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
நிச்சயமாக, முழுமையான விவாதத்தைக் கேட்பதன் மூலம், ஏற்கனவே ஜனநாயகத்தின் அடிப்படையில் நாம் நம்மை நிலைநிறுத்திக் கொள்கிறோம். சர்வாதிகாரம் என்பது எதிர் கருத்துக்களை மறுப்பதைக் கோருவதில்லை, மாறாக அவற்றின் கூற்றை வலுக்கட்டாயமாக அடக்குவதைக் கோருகிறது. இவ்வாறு, ஜனநாயகம், சர்வாதிகாரம் ஆகிய இரண்டு முறைகளும் விவாதம் தொடங்குவதற்கு முன்பே சமரசம் செய்ய முடியாத வகையில் எதிர்க்கப்படுகின்றன. ஒன்று கோருகிறது, மற்றொன்று அதைத் தடை செய்கிறது.
இது காவுத்ஸ்கியின் நூலில் முதல் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது. ஆக காவுத்ஸ்கி ஜனநாயகம், சர்வாதிகாரம் ஆகியவற்றை மார்க்சிய வழியில் பார்க்காது, தூய ஜனநாயகம் என்கிற கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் அணுகியிருக்கிறார் என்பது தெரிகிறது.
லெனின் கூறுவதைப் பார்ப்போம்.
“பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய கேள்வி, பாட்டாளி வர்க்க அரசுக்கும் முதலாளித்துவ அரசுக்கும் உள்ள உறவைப் பற்றிய கேள்வியாகும், பாட்டாளி வர்க்க ஜனநாயகத்திற்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் உள்ள உறவைப் பற்றிய கேள்வியாகும். இது மிகவும் தெட்டத் தெளிவானது என்றே எவரும் கருதுவர். ஆனால் வரலாறு குறித்த அதே பழைய பாடநூல்களில் இருந்து மேற்கோள் தரும் பள்ளி ஆசிரியர் போல அறவே கவர்ச்சி இல்லாதவராகி விட்டார் காவுத்ஸ்கி.”
பாட்டாளி வர்க்க அரசுக்கும் முதலாளித்துவ அரசுக்கும் உள்ள உறவைப் பற்றிய கேள்வியாக, “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” என்பதைப் பார்க்காமல், ஜனநாயகம் தமக்கு எதிரானக் கருத்தை கோருகிறது, ஆனால் சர்வாதிகாரம் எதிர் கருத்துக்களை மறுக்கிறது, அடக்குகிறது என்று காவுத்ஸ்கி கூறுவது, ஜனநாயகம் பற்றிய பள்ளிப்பாடத்தோடு நின்றுவிடுகிறது. அதில் உள்ள வர்க்க சார்பை கணக்கில் கொள்ளவில்லை என்பது தெரிகிறது.
காவுத்ஸ்கி, முதலாளித்துவ ஜனநாயகம் பற்றிப் பேசாமல் பொதுவான ஜனநாயகம் எனறு தாரளவாதிகளைப் போலப் பேசுகிறார். ஜனநாயகம் என்பதின் மீது துல்லியமான வர்க்க வரையறுப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார். இத்தகையப் போக்கு முதலாளித்துவ வர்க்கத்துக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. ஏனென்றால் இது முதலாளித்துவ ஜனநாயகத்தை அலங்காரப்படுத்தி, பாட்டாளி வர்க்கப் புரட்சி பற்றியதை மழுங்கடிக்கிறது.
மார்க்சியம் தெரியாமல் மார்க்சியத்தைத் திருத்துபவர்கள் இருக்கிறார்கள், மார்க்சிய அடிப்படைகளை தெரிந்து கொண்டு அதனை திருத்துபவர்கள் இருக்கிறார்கள். காவுத்ஸ்கி இரண்டாம் வகையினைச் சேர்ந்தவர். காவுத்ஸ்கிக்கு மார்க்சியம் நன்றாகத் தெரியும். மார்க்ஸ் எழுதிய அனைத்தையும் காவுத்ஸ்கி திரட்டி வைத்திருந்தார் என்று லெனின் சுட்டிக்காட்டுகிறார். மார்க்சியம் தெரியாதவர்களின் மார்க்சியத் திருத்தல்களைவிட, மார்க்சியம் தெரிந்தவர்களின் திருத்தல்வேலை மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்பதற்கு காவுத்ஸ்கி சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
கோத்தா வேலைதிட்டத்துக்கான விமர்சனத்தில் மார்க்ஸ், முதலாளித்துவ சமூகத்துக்கும் கம்யூனிச சமூகத்துக்கும் மாறுதல் காலப்பகுதி இருக்கிறது என்று கூறியுள்ளார். அந்த மாறுதல் காலப்பகுதிக்கான அரசு என்பது பாட்டாளி வர்க்க புரட்சிகர சர்வாதிகாரமாக அல்லாது வேறு எதுவாக இருக்க முடியும் என்கிறார். இதில் மார்க்ஸ் கூறியிருக்கிற பாட்டாளி வர்க்க புரட்சிகர சர்வாதிகாரம் என்பதை காவுத்ஸ்கி “தனி ஒரு சொல்” என்றும் “சிறு சொல்” என்றும் கூறுவது மார்க்சியத்தை அவமதிப்பதாகவும் மேலும் மார்க்சியக் கருத்தை முற்றாக கைவிட்டுவிடுவதுமாகும் என்கிறார் லெனின்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மார்க்ஸ் ஒரு சொல்லாக சுட்டிக்காட்டியிருக்கிறாரே தவிர அதை விளக்கவில்லை என்று காவுத்ஸ்கி குறைபட்டுக் கொள்கிறார். ஆனால் இது உண்மைக்கு மாறானதாகும். பாரிஸ் கம்யூனுக்கு முன்பும் பின்புமாக, மார்க்சும் எங்கெல்சும் 1848 முதல் 1891 வரை சுமார் நாற்பது ஆண்டுகளாக இது பற்றி எழுதியதை காவுத்ஸ்கி அறிந்தே இருக்கிறார் என்பதை லெனின் சுட்டிக்காட்டுகிறார்.
““பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” எனும் சூத்திரம் முதலாளித்துவ அரசு இயந்திரத்தைத் “தகர்க்கும்'' பாட்டாளி வர்க்கத்தின் பணியினது மேலும் வரலாற்று வழியில் தூலமான, விஞ்ஞான வழியில் துல்லியமான வரையறுப்பு என்பதையும், இதைப் பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் 1848 புரட்சிகளின், இன்னும் அதிகமாக 1871 இன் அனுபவத்தைத் தொகுத்தளித்து 1852 முதல் 1891 வரையில் நாற்பதாண்டுகளாக பேசிவந்திருக்கிறார்கள் என்பதையும் காவுத்ஸ்கி அறிந்திருக்க வேண்டும்.”
சர்வாதிகாரம் என்பதை மார்க்ஸ் எவ்வாறு ஒரு கருத்தாக உருவாக்கினார் என்பதை விவரமாக எடுத்துக்காட்ட மார்க்ஸ் தவறிவிட்டார் என்பது காவுத்ஸ்கியின் கருத்து. இந்தக் கருத்தைக் கண்டு கொதித்தெழுந்து இது ஒரு துரோகியின் முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என்கிறார் லெனின். ஏனென்றால் மார்க்சும் எங்கெல்சும் உண்மையிலேயே நமக்கு அதாவது கம்யூனிஸ்டுகளுக்கு பல விவரங்களை அளித்துள்ளனர். மார்க்சிய போலி பண்டிதரான காவுத்ஸ்கி வேண்டும் என்றே இதனைப் புறக்கணித்துள்ளார் என்று லெனின் கடுந்துரைக்கிறார்.
சர்வாதிகாரம் என்கிற சொல்லின் நேர்பொருள் ஜனநாயகத்தை ஒழிப்பது என்பதே ஆகும் என்கிறார் காவுத்ஸ்கி. மேலும் அவர், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை மார்க்ஸ் அரசாங்கத்தின் ஒரு வடிவம் என்று குறிப்பிடவில்லை, இதற்கு மாறாக ஒரு குறிப்பிட்ட நிலைமையை பற்றி மட்டுமே குறிப்பிடுகிறார் என்று காவுத்ஸ்கி திரித்துக் கூறுகிறார்.
இந்த காவுத்ஸ்கியின் கூற்று ஒரு தாராளவாதியின் கூற்றாக இருக்கிறது. ஜனநாயகம் என்றால் அது எந்த வர்க்கத்துக்கானது?என்று ஒரு மார்க்சியவாதி கேள்வி எழுப்புவான்.
அரசு என்பது எந்த உற்பத்தி முறையாக இருந்தாலும் அந்த உற்பத்தி முறையின் சுரண்டலாளர்களின் அரசாக, சுரண்டும் வர்க்கத்தின் சர்வாதிகாரமாக இருப்பதை அனைத்து மார்க்சியவாதிகளும் அறிவார்கள். வரலாற்றாசிரியர் காவுத்ஸ்கியும் இதனை அறிவார். இதுவரையிலான சர்வாதிகார அரசானது, எத்தகைய முயற்சியைக் கையாண்டும், உடைமையாளர் உடைமையற்றவர்கள் மத்தியில் ஜனநாயகத்தை ஒழிக்க முடியவில்லை என்பவது அவருக்கும் தெரியும். இருவர்களுக்கு இடையேயான முரண்பாடு வலுபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது எனபது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.அப்படியிருக்க, வர்க்கப் போராட்டத்தை மறந்துவிட்டதால் காவுத்ஸ்கி இந்த விபரீதமான அபத்தமான பொய்யான அறிவிப்பைச் செய்கிறார்.
இதனை மறுத்து லெனின் சர்வாதிகாரம் பற்றி கூறுவதை அடுத்துப் பார்ப்போம்.
சர்வாதிகாரம் என்பது நேரடியாக பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்டதும், எந்த சட்டங்களாலும் கட்டுப்படுத்தப்படாத ஆட்சியாகும். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் என்பது முதலாளித்துவத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தால் வன்முறையைப் பயன்படுத்துவதன் மூலம் வென்றெடுக்கப்பட்டு, காத்துவரும் ஆட்சியாகும், எந்த சட்டங்களாலும் கட்டுப்படுத்தப்படாத ஆட்சியாகும்.
இந்த எளிய உண்மை, வர்க்க உணர்வுள்ள ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெட்டத் தெளிவாகத் தெரியும். தமது விடுதலைக்காக போராடிவரும் ஒவ்வொருக்கும் தெரியும். ஒவ்வொரு மார்க்சியவாதிக்கும் சந்தேகமில்லாது தெரிந்த ஒன்றை, காவுத்ஸ்கி மீறுவதை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதைப் பற்றி அடுத்து லெனின் கூறுகிறார்.
முதலாளித்துவ வர்க்கத்திடம் சேவை புரிந்து, வெறுக்கத்தக்க வகையில் அண்டிப் பிழைப்போராக ஆகிவிட்ட இரண்டாம் அகிலத்தின் தலைவர்களிடம் ஊறிக்கிடக்கும் கொத்தடிமை உணர்வாக, இதனை எளிதில் விளக்கலாம் என்கிறார்.
முதல் அத்தியாயத்தின் இறுதியில் லெனின் தொகுத்தளித்ததைப் பார்க்கும் போதே காவுத்ஸ்கி மார்க்சியக் கோட்பாட்டை துறந்தோடியதை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது.
“காவுட்ஸ்கி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்தை மிகவும் ஒப்பற்ற முறையில் சிதைத்து, மார்க்ஸை ஒரு பொதுவான தாராளவாதியாக மாற்றியுள்ளார்; அதாவது, "தூய ஜனநாயகம்" பற்றிய சாதாரணமான சொற்றொடர்களை உச்சரிக்கும் ஒரு தாராளவாதியின் நிலைக்கு அவர் தாழ்ந்துவிட்டார், முதலாளித்துவ ஜனநாயகத்தின் வர்க்க உள்ளடக்கத்தை அலங்கரித்து, மறைத்து, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தால் புரட்சிகர வன்முறையைப் பயன்படுத்துவதில் இருந்து பின்வாங்குகிறார்.
ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் புரட்சிகர வன்முறையை அதன் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக அழிக்கும் வகையில் "பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம்" என்ற கருத்தை இந்தளவு "விளக்குவதன்" மூலம், காவுட்ஸ்கி மார்க்சியம் குறித்த தாராளவாத திரிபுவாதத்தில் உலக சாதனையைப் புரிந்துள்ளார். துரோகி காவுட்ஸ்கியுடன் ஒப்பிடும்போது துரோகி பெர்ன்ஸ்டீன் மிகவும் குட்டி நாயாக காட்சியளிக்கிறார்.”
“பாட்டாளி வர்க்கப் புரட்சியும் துரோகி காவுத்ஸ்கியும்” என்கிற நூலில் லெனின் எட்டு அத்தியாயங்களை சுமார் 150 பக்கங்களுக்குள் எழுதியிருக்கிறார். ஆனால் இதனை சுருக்கி சாரமாக ஒரே வகுப்பில் தருவது பெரும் சவாலாக இருக்கிறது. ஏனென்றால் லெனின் கூறியது அனைத்தும் முக்கியமானதாக இருக்கிறது.
முதல் அத்தியாயத்தை சற்று விரிவாகப் பார்த்துவிட்டோம், அதனால் மீதமுள்ள ஏழு அத்தியாயங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.
2. முதலாளித்துவ ஜனநாயகமும் பாட்டாளி வர்க்க ஜனநாயகமும்
மார்க்சியக் கருத்தில், தாராளவாதிகளுக்கும் முதலாளிகளுக்கும் ஏற்புடையதாக உள்ளதை காவுத்ஸ்கி எடுத்துக் கொள்கிறார், மார்க்சியக் கருத்தில் முதலாளிகளுக்கு ஏற்புடையதல்லாதவற்றை நிராகரிக்கிறார். அவரது நிராகரிப்பு எப்படி இருக்கிறது என்றால், அவை குறித்து மௌனமாகிறார் அல்லது அதை பூசிமெழுகிறார். காவுத்ஸ்கி மௌனத்தின் மூலமாகவும் பூசிமெழுகி எழுதுவதன் மூலமாகவும் தமது கருத்தை முன்வைக்கிறார்.
காவுத்ஸ்கியின் அகநிலை துணிபுகள் எதுவாக இருந்தாலும் புறநிலை காரணமாக தவிர்க்க முடியாத வகையில் முதலாளித்துவ வர்க்கத்தின் அடிவருடியாகிறார் என்று லெனின் தெளிவாக அவரை அம்பலப்படுத்துகிறார்.
வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ள சமூகத்தில் “தூய ஜனநாயகம்” பற்றி பேச முடியாது, வர்க்க சார்பான ஜனநாயகம் பற்றி மட்டுமே பேச முடியும் என்கிறார் லெனின்.தூய ஜனநாயகம் என்பது தொழிலாளர்களை ஏய்க்க விரும்பும் ஒரு தாராளவாதியின் பொய்யுரையாகும்.
வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில், ஜனநாயகம் படிப்படியாக மாற்றம் அடையும் நிலையில், ஒரு பழக்கமாக மாற்றம் பெற்று இறுதியில் உலர்ந்து உதிரும். இதுவே ஜனநாயகத்தின் முழுமையான வரலாறு. தூய ஜனநாயகம் என்பது என்றைக்கும் இருக்கவே முடியாது, அது வர்க்க சர்பான ஜனநாயகமாகவே இருக்கும். இதனடிப்படையில் லெனின் இதனை விளக்குகிறார்.
முதலாளித்துவ ஜனநாயகத்தையும்விட, பாட்டாளி வர்க்க ஜனநாயகம் மில்லியன் மடங்கு அதிகமானது. சோவியத் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஜனநாயகமானது முதலாளித்துவ குடியரசை விடவும் மில்லியன் மடங்கு அதிகமானது. ஜனநாயகத்தின் இத்தகைய வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாது தூய ஜனநாயகம் என்று பேசுவது தொழிலாளர்களை ஏய்ப்பதற்கே ஆகும்.
3. சுரண்டப்படுவோருக்கும் சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் இருக்க முடியுமா?
மூன்றாவது அத்தியாயம் “சுரண்டப்படுவோருக்கும் சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் இருக்க முடியுமா?” என்கிற கேள்வியாக இருக்கிறது.
இதற்கு பதிலாக லெனின், சுரண்டப்படுவோர்களும் சுரண்டுவோர்களும் சமமாக சமத்துவம் இருக்க முடியாது என்று கூறுகிறார். இந்த உண்மை காவுத்ஸ்க்கி விருப்பமாக இல்லாது போனாலும் இதுவே சோஷலிசத்தின் சாரமாகும். மற்றொரு உண்மையும் இருக்கிறது, ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை சுரண்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தையும் முற்றாக அழித்திடாமல், சமத்துவம் ஏற்பட முடியாது.
சமூகத்தில் புறநிலையாக சமத்துவமின்மை இருக்கும் போது மனிதர்களுடைய அகநிலையில் சமத்துவத்தை எப்படி எதிர் பார்க்க முடியும். புறநிலைமைகளே அகநிலைகளாகப் பிரதிபலிக்கிறது என்பதே மார்க்சியக் கோட்பாடு, அப்படியிருக்க புறநிலையில் சமத்துவம் இல்லாத நிலையில் மனிதர்களிடையே சவமத்துவம் எப்படி எதிர்பார்க்க முடியும்.
சமூகத்தில் சமத்துவமின்மை இருக்கும் போது, சுரண்டப்படுவோருக்கும் சுரண்டுவோருக்கும் இடையே உள்ள உறவு என்பதில் இருந்துதான் ஒருவர், மார்க்சிய சோஷலிஸ்டு வழியில் வாதத்தை தொடங்குவர். ஆனால் காவுத்ஸ்கி சுரண்டலாளர்கள் எப்போதுமே மக்கள் தொகையில் சிறுபான்மையினராகவே இருக்கின்றனர் என்று எண்ணிக்கையின் அடிப்படையில் தொடங்குகிறார்.இது ஒரு தாராளவாதிகளின் கண்ணோட்டம், தாராளவாத வழியில் வாதிட்டால், எப்படிப்பட்ட வாதமாக இருக்கும் என்பதை லெனின் சொற்களிலேயே பார்ப்போம்.
தாராளவாரிகளின் கண்ணோட்டமாக லெனின் கூறுகிறார்:-
“பெரும்பான்மை தீர்மானிக்கிறது, சிறுபான்மையினர் அடிபணிகிறார்கள். அடிபணியாதவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அவ்வளவுதான். பொதுவாக அரசின் வர்க்கத் தன்மை பற்றியோ அல்லது குறிப்பாக "தூய ஜனநாயகம்" பற்றியோ எதுவும் சொல்ல வேண்டியதில்லை, ஏனெனில் அது பொருத்தமற்றது; ஏனெனில் பெரும்பான்மை என்பது பெரும்பான்மை, சிறுபான்மை என்பது சிறுபான்மை. ஒரு பவுண்டு சதை என்பது ஒரு பவுண்டு சதை, இதைப் பொருத்தவரை எல்லாம் இவ்வளவே.”
மார்க்சிய வழியில் வாதம் செய்வோமானால், அது எப்படி இருக்கும் என்று லெனின் கூறுகிறார், அவரது சொற்களிலேயே பார்ப்போம்.
மார்க்சிய வழிப்பட்டக் கண்ணோட்டமாக லெனின் கூறுகிறார்:-
“சுரண்டலாளர்கள் அரசை (நாம் ஜனநாயகம் பற்றியே பேசுகிறோம், அதாவது அரசின் வடிவங்களில் ஒன்று) தவிர்க்க முடியாதபடி சுரண்டப்படுவோர் மீதான சுரண்டலாளர்களாகிய தமது வர்க்க ஆதிக்கத்தின் கருவியாக மாற்றுவர். இதனால் பெரும்பான்மையான சுரண்டப்படுவோர் மீது ஆதிக்கம் புரியும் சுரண்டலாளர்கள் இருக்கும் வரை, ஜனநாயக அரசு தவிர்க்க முடியாத வகையில் கட்டாயமாயும் சுரண்டலாளர்களுக்கான ஜனநாயகமாகவே இருக்கும். சுரண்டப்படுவோர் அரசு நிச்சயமாயும் அத்தகைய அரசில் இருந்து அடிப்படையிலேயே வேறுபட்டதாக இருக்க வேண்டும், அது சுரண்டப்படுவோருக்கான ஜனநாயகமாகவும் சுரண்டலாளர்களை ஒடுக்குவதற்கான ஒரு சாதனமாயும் இருக்க வேண்டும். மேலும் ஒரு வர்க்கம் ஒடுக்கப்படுகிறது என்றால் அந்த வர்க்கம் சமத்துவம் இன்றி உள்ளது, அது “ஜனநாயகத்திடம்" இருந்து விலக்கப்பட்டுள்ளது என்றே பொருள்.”
லெனினது இந்தக் கூற்று, வர்க்கப் பார்வை உள்ள அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அப்படி இருக்க காவுத்ஸ்கியால் புரிந்து கொள்ள முடியாமலா!!!! இருக்கும்.
காவுத்ஸ்கியின் அடுத்தக் கேள்வி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
“நமக்குப் பெரும்பான்மை இருக்கும் போது நமக்கு சர்வாதிகாரம் எதற்கு வேண்டும்?”மார்க்சியத்தைவிட்டு ஓடிபோய், தாராளவாத முதலாளிகளிடம் சரணடைந்தால் இப்படிதான் கேள்வி கேட்கத் தோன்றும்.
“நமக்குப் பெரும்பான்மை இருக்கும் போது நமக்கு சர்வாதிகாரம் எதற்கு வேண்டும்?” என்கிற கேள்விக்கு மார்க்சும் எங்கெல்சும் ஏற்கெனவே அளித்த விளக்கத்தை லெனின் தொகுத்துத் தருகிறார்.
-முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்ப்பை உடைப்பதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வேண்டும்.
-பிற்போக்காளர்களுக்கு அச்சத்தை தூண்டுவதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வேண்டும்.
-முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக ஆயுதமேந்திய மக்களின் அதிகாரத்தைக் கட்டிக்காப்பதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வேண்டும்.
-பாட்டாளி வர்க்கம் தமது எதிரியை பலப்பிரயோகம் மூலம் அடக்குவதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வேண்டும்.
லெனின் சுட்டிக்காட்டுகிற இந்த, மார்க்ஸ் எங்கெல்ஸ் கருத்துக்களை காவுத்ஸ்கி அறியாதவர் அல்ல. மார்க்சியத்தைவிட்டு விலகிய பிறகு இதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவர் இல்லை, இதை மறைப்பதற்கு, மார்க்ஸ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை “தனி ஒரு சொல்,” “சிறு சொல்” என்கிற வகையில்தான் கூறியுள்ளார், விளக்கமாக கூறவில்லை என்று பொய்யுரைக்கிறார். காவுத்ஸ்கியின் இந்தக் கூற்றுக்கு மாறாக, மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்க சார்வாதிகாரம் பற்றி போதுமான அளவுக்கு தமது நூல்களில் விளக்கி உள்ளனர் என்பதே உண்மை ஆகும்.
4.சோவியத்துகள் அரசு அமைப்புகள் ஆக முடியாது
சோவியத்துகள் என்பது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ருஷ்ய வடிவம் அகும். ஒரு மார்க்சிய கோட்பாட்டாளர், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் குறித்து ஒரு நூலை எழுதுவதற்காக இந்தக் கருப்பொருளை உண்மையாகவே படித்து ஆராய்ந்தாரானால், அவர் முதலில் சர்வாதிகாரத்திற்கு ஒரு பொதுவான வரையறையை வழங்கியிருப்பார், பின்னர் அதன் தனித்துவமான, தேசிய வடிவமான சோவியத்துகளை ஆராய்ந்திருப்பார்; பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வடிவங்களில் ஒன்றாக அவற்றை அவர் விமர்சித்திருப்பார்.
ஆனால், சர்வாதிகாரம் குறித்த மார்க்சின் போதனையின் தாராளவாத முறையிலான "விளக்கத்திற்கு" பிறகு காவுட்ஸ்கியிடமிருந்து தீவிரமாக எதையும் எதிர்பார்க்க முடியாது என்பது சொல்லாமலே விளங்கும் என்கிறார் லெனின்.
காவுத்ஸ்கி “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” என்கிற தனது நூலில் இறுதிய அத்தியாயமான புதிய கோட்பாடு என்பதில்,
கோட்பாட்டின்நிலைப்பாட்டிலிருந்துஅல்லதுசிறப்பானருஷ்யநிலைமைகளின்நிலைப்பாட்டிலிருந்து, சர்வாதிகாரமுறைபாட்டாளிவர்க்கத்திற்குநல்லபலன்களைஉறுதியளிக்கவில்லை.
என்பது போன்ற அபத்தமான கருத்துக்களைக் கூறியுள்ளார். இதனை லெனின் எவ்வளவு பொறுமையாகவும் சலிப்படையாமலும் படித்து விமர்சித்துள்ளார் என்பதை காவுத்ஸ்கியின் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” என்கிற நூலைப் படிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. சலிப்படையவில்லை என்பது உண்மைதான், ஆனால் லெனின் மிகவும் கோபமாய் எழுதியுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.
மார்க்சியர்களில் பொறுமை மிக்கவர்களால்தான் காவுத்ஸ்கியின் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” என்கிற நூலைப் படிக்க முடியும். ஏன் என்றால் அந்த நூல் அவ்வளவு அபத்தமாக இருக்கிறது. இங்கே லெனினது பொறுமையினை நம்மால் வியக்காமல் இருக்க முடியாது.
5. அரசியல் நிர்ணய சபையும் சோவியத் குடியரசும்
ஒரு புறத்தில் சோவியத்துகள், மறுபுறம் அரசியல் நிர்ணய சபை இவற்றின் ஒரு வர்க்க ஆய்வு பற்றிய பிரச்சினையைக்கூட காவுத்ஸ்கி எழுப்பவில்லை. எனவே அவருடன் வாதிடுவது, விவாதிப்பது சாத்தியமற்றது என்கிறார் லெனின். மேலும் காவுத்ஸ்கியை “பின்பற்றிய சித்தாந்தத்தை கைவிட்டு ஓடியதுடன் அதனை காட்டிக் கொடுத்த துரோகி” என்கிற வகையில், துரோகி என்பதல்லாது வேறு எந்தப் பெயராலும் அவரைஅழைக்க முடியாது என்பதை வாசகருக்கு நிரூபித்து காட்டுவதே தாம் செய்யக் கூடியது என்கிறார் லெனின்.
காவுத்ஸ்கியின் நிலைபாடு உண்மையாக எப்படி இருக்கிறது என்பதை லெனின் தெளிவுபடுத்துகிறார்.
“உள்ளபடியே காவுத்ஸ்கி பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையே சமரசம், இணக்கம், ஒத்துழைப்புக்கான கருத்து நிலையைக் கைக்கொள்கிறார். இதை காவுத்ஸ்கி எவ்வளவுதான் மறுத்துரைத்தாலும் இது அவரது சிறு பிரசுரம் முழுவதிலும் வெளிப்படுகிறது.”
ஆக, மார்க்சியத்தின் புரட்சிகரத் தன்மையில் இருந்து விலகியவர்கள் உழைக்கும் வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான சமரச நிலைக்கே வந்தடைவர். அதனால்தான் ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சியிலும் காவுத்ஸ்கி போன்ற மார்க்சிய துரோகிகளை இனம் கண்டு நீக்க வேண்டும் என்கிற அவசிய, அவசரமான செயலை செய்தே ஆக வேண்டும். இதில் தொய்வு இருந்தால், அது கம்யூனிஸ்ட் கட்சியினை பாதித்துவிடும். நமது நாட்டு இடதுசாரி கட்சிகளின் பலவீனத்துக்கு பல காரணங்கள் இருக்கின்றன, அதில் முக்கியமான காரணம் மார்க்சிய சித்தாந்தத்தில் உறுதியின்மையே ஆகும். மார்க்சிய சித்தாந்தத்தில் உறுதியும் அதற்கு எதிரான சித்தாந்ததை எதிப்பும் காட்டாமல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பாக செயல்பட முடியாது.
6.சோவியத் அரசியல் அமைப்பு
லெனின் கூறிய ஒரு கருத்தோடு இந்த அத்தியாயத்தை முடித்துக் கொள்வோம். இதை ஒரு நீண்ட மேற்கோளிலேயே பார்ப்போம், அப்போதுதான் லெனின் தமது கருத்தை எத்தகைய கோபத்தோடு கூறியுள்ளார் என்பது அறிந்து கொள்ள முடியும்.
“புரட்சிகர மார்க்சிஸ்டுகளான "நாங்கள்", அனைத்து நாடுகளின் காவுட்ஸ்கியர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் முன் அடிபணிந்து, முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்புக்கு ஏற்ப, தங்களை மாற்றிக் கொண்டு, நவீன ஜனநாயகத்தின் முதலாளித்துவ தன்மை குறித்து மௌனம் காத்து, அதன் நீட்டிப்பை மட்டுமே கோரி, அதை அதன் தர்க்கவழியிலான முடிவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரினர்.
"நாங்கள்" முதலாளித்து வவர்க்கத்திடம் கூறினோம்: ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியலில் பங்கெடுக்கும் வேளையில் , அவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் தடைகளை ஏற்படுத்தும் ஏமாற்றுக்காரர்களும், சுரண்டலுகாரர்களுமான நீங்கள் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறீர்கள். அந்த மக்களின் நலன்களுக்காக, அவர்களை புரட்சிக்குத் தயார்படுத்துவத்தி, ஏமாற்றுப் பேர்வழிகளான உங்களைத் தூக்கியெறிவதற்காக உங்களுடைய வார்த்தைகளின் படியே உங்களுடைய முதலாளித்துவ ஜனநாயகத்தை விரிவுபடுத்துவோம்.
எங்களது வர்க்கப் புரட்சிக்கு சுரண்டலாளர்களான நீங்கள் எதிர்ப்புக்காட்ட முயல்வீர்களானால் நாங்கள் உங்களை இரக்கமின்றி அடக்குவோம், உங்களது உரிமைகள் அனைத்தையும் பறித்திடுவோம், அதற்கும்மேலாகஉண்பதற்குஉணவுகூடதரமாட்டோம், ஏனெனில் எமது பாட்டாளி வர்க்கக் குடியரசில் சுரண்டலாளர்களுக்கு உரிமைகள் எதுவும் கிடையாது, அவர்களுக்கு தண்ணீர், நெருப்பு போன்ற தேவையாப் பொருட்கள் இல்லாது போகும், ஏனெனில் நாம் மெய்யாகவே முனைப்பார்வமுள்ள சோஷலிஸ்டுகள், ஷெய்டெமன் மற்றும் காவுத்ஸ்கி பாணியில் ஆனவர்கள் அல்ல.
இதைத்தான் புரட்சிகர மார்க்சியவாதிகளான “நாங்கள்”, கூறினோம், இனிமேலும் கூறுவோம். இதனால் தான் ஒடுக்கப்பட்ட மக்கள் நம்மை ஆதரிப்பார்கள், நம்முடன் இருப்பார்கள், அதே போதில் ஷெய்டெமன்கள் மற்றும் காவுத்ஸ்கிகள் போன்றதுரோகிகள் கழிவுநீர் தொட்டியில் அடித்துச் செல்லப்படுவார்கள்.”
காவுத்ஸ்கி போன்று, பின்பற்றிய சித்தாந்தத்தை கைவிட்டு ஓடியதுடன் அதனை காட்டிக் கொடுத்த துரோகிகளை, கம்யூனிஸ்ட் கட்சியில் இனம் கண்டு களைந்தெறிய வேண்டும். காவுத்ஸ்கி கருத்தின் அடிப்படையில் செயல்படும் கட்சியையும் இனம்காண வேண்டும். மார்க்சும் எங்கெல்சும் லெனினும் வகுத்தளித்த மார்க்சியத்தை புறக்கணிக்கும் கட்சி கம்யூனிஸ்ட் கட்சியே இல்லை. அப்படிப்பட்ட கட்சி, தமக்குரிய சித்தாந்தத்துக்குப் பொருத்தமானவகையில் கட்சிக்கு பெயர் சூட்டிக் கொள்ளலாம். கம்யூனிஸ்ட் கட்சி என்பது மார்ஸ் கூறிய கம்யூனிச வழியில்தான் செல்ல முடியும்.
7.சர்வதேசியம் என்றால் என்ன?
காவுத்ஸ்கி தாம் ஒரு சர்வதேசியவாதி என்று முழுவதுமாக நம்பிக்கொண்டுள்ளார் என்று இந்த அத்தியாயத்தை லெனின் தொடர்கிறார்.
1915ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் மென்ஷிவிக்குகளும்கூட கலந்து கொண்டனர் என்று, அவர்களுக்கு காவுத்ஸ்கி சான்றளிக்கிறார். காவுத்ஸ்கி, தாம் உடன்பட்டு ஏற்கும் மென்ஷிவிக்குகளின் கருத்துக்களை லெனின் மேற்கோளிட்டு காட்டிய பின்பு கூறுவதை இங்கே பார்ப்போம்.
காவுத்ஸ்கியின் கருத்துப்படி போல்ஷிவிக்குகள் ஆட்சி அதிகாரத்தை மேற்கொண்டிருக்கக் கூடாது, ஓர் அரசியல் நிர்ணய சபையோடு திருப்தி அடைந்திருக்க வேண்டும்.
காவுத்ஸ்கி, மென்ஷிவிக்குகள் ஆகியோரின் சர்வதேசியவாதம் என்பது எது என்பதை லெனின் எடுத்துக்காட்டுகிறார்.
“ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசாங்கத்திடம் சீர்திருத்தங்களைக் கோருவது, ஆனால் அதைத் தொடர்ந்து ஆதரிப்பது, இந்தப் போரில் இறங்கியுள்ள அனைவரும் பிரதேச கைபற்றல்களோ இழப்பீட்டுத் தொகைகளோ எதுவும் கூடாது என்கிற சூத்திரத்தை ஏற்றுக் கொள்ளும்வரை இந்த அரசாங்கம் நடத்திவரும் போரைத் தொடர்ந்து ஆதரிப்பது.
…
கோட்பாட்டளவில், இது சமூக-பேரினவாதிகளிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ள முழுமையாக இயலாமல் இருப்பதையும், தாய்நாட்டைப் பாதுகாப்பது குறித்த கேள்வியில் முழுமையான குழப்பத்தையும் காட்டுகிறது. அரசியல் வழியாக, இதன் பொருள் சர்வதேசியத்திற்கு பதிலாக குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தைப் புகுத்துவதும், சீர்திருத்தவாதிகளின் முகாமுக்கு, துறந்தோடி புரட்சியைக் கைவிடுவதாகும்.”
இவ்வாறு காவுத்ஸ்கியின் கருத்தின் சாரத்தை லெனின் முழுமையாக அம்பலப்படுத்துகிறார்.
பொதுவாக மனிதர்களுக்கு எதிரான வன்முறையை சோஷலிசம் எதிர்க்கிறது. பொதுவாகக் கூறப்பட்டதை மனதில் கொண்டு சோஷலிசம் அனைத்து வன்முறையை எதிர்க்கிறது என்று பொருள் கொள்ளக்கூடாது. பிற்போக்கு வன்முறையை புரட்சிகர வன்முறையில் இருந்து சோஷலிசம் வேறுபடுத்திப் பார்க்கிறது. சோஷலிச வன்முறை எதிர்ப்பை, காந்தியவாதிகள் வகைப்பட்ட வன்முறை எதிர்ப்பாக புரிந்து கொள்ள முடியாது.
டால்ஸ்டாயின் சீடர்தான் காந்தி, அதனால் டால்ஸ்டாய்வாதிகளைப் பற்றி லெனின் கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“தேசங்களுக்கு எதிரான வன்முறையை சோஷலிசம் எதிர்க்கிறது. இது மறுக்க முடியாதது. ஆனால் சோஷலிசம் மனிதர்களுக்கு எதிரான வன்முறையைப் பொதுவாக எதிர்க்கிறது. எனினும் இதில் இருந்து சோஷலிசம், புரட்சிகர வன்முறையினை எதிர்க்கிறது என்ற முடிவுக்கு கிறித்தவ அராஜகவாதிகள் டால்ஸ்டாய்வாதிகள் ஆகியோர் நீங்கலாக வேறு எவருமே இதுவரையில் வந்ததில்லை. எனவே பிற்போக்கு வன்முறையை புரட்சிகர வன்முறையில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் நிலைமைகளைப் பரிசீலனை செய்யாமல் பொதுவாக ‘வன்முறை’ குறித்துப் பேசுவது, புரட்சியைக் கைவிட்டுவிட்ட அற்பவாதியாக இருப்பதாகவே பொருள்படும், அல்லது குதர்க்கவாதம் மூலம் ஒருவர் தன்னையும் பிறரையும் அப்படியே ஏமாற்றிவருவதாகப் பொருள்படும்.”
"எதிரியின் படையெடுப்பின் போது என் நாட்டைப் பாதுகாப்பது ஒரு சோஷலிஸ்டாக எனது உரிமை மற்றும் கடமை" என்று கூறுகிற காவுத்ஸ்கியின் வாதமானது, ஒரு சோஷலிசவாதியின் வாதமாகாது, ஒரு சர்வதேசியவாதியின் வாதமாகாது, ஒரு புரட்சிகரப் பாட்டாளியின் வாதமாகாது என்கிறார் லெனின். உண்மையில் இது குட்டி முதலாளித்துவ தேசியவாதியின் வாதமாகும். ஏனென்றால், மூலதனத்துக்கு எதிரான தொழிலாளர்களின் புரட்சிகரமான வர்க்கப் போராட்டத்தை, இது புறக்கணிக்கிறது, இதன் மூலம் தேசியவாதத்தில் மூழ்கிவிடுகிறது. உண்மையாக இது சர்வதேசியவாதத்தைப் புறக்கணித்து, தேசிய வெறியினை வெளிப்படுத்துகிறது.
கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை சர்வதேசத் தன்மை கொண்டதாகும். கம்யூனிஸ்டுகள் செயல்பாடு, சொந்த நாட்டில் இருந்தாலும் அனைத்து நாடுகளுக்கானதாக இருந்தாலும் சர்வதேசிய அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
சர்வதேசியத்தை மட்டும் பேசிவிட்டு சொந்த நாட்டைப் புறக்கணிப்பது, அல்லது சொந்த நாட்டை மட்டும் பேசிவிட்டு சர்வதேசியத்தைப் புறக்கணிப்பது என்பது கம்யூனிச வழிப்பட்டப் போக்காகக் கொள்ள முடியாது.
8.”பொருளாதாரப் பகுத்தாய்வு” எனும் வேடத்தில் முதலாளித்துவ வர்க்கத்துக்கு அடிமைப்படல்
காவுத்ஸ்கி தமது நூலுக்கு “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” என்று பெயர் வைத்துள்ளார், உண்மையில் “போல்ஷிவிக்குகள் மீதான முதலாளித்துவத் தாக்குதல்களின் புதுவடிவம்” என்று பெயர் வைத்திருக்க வேண்டும் என்கிறார் லெனின்.
சோவியத் ஆட்சி அதிகாரம் என்பது ஒரு சர்வாதிகாரம் என்பதை மறுக்க முடியாது என்கிறார் காவுத்ஸ்கி, ஆனால் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமா? என்று கேள்வி எழுப்புகிறார். அவரைப் பொருத்தளவில் இது ஒரு விவசாயிகளின் சர்வாதிகாரம் ஆகும்.விவசாயிகளின் சர்வாதிகாரத்தை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக முன்வைப்பதாக போல்ஷிவிக்குகள் மீது காவுத்ஸ்கி பழி சுமத்துகிறார். ஆனால் அதே நேரத்தில் போல்ஷிவிக்குகள் கிராமப்புற மாவட்டங்களில் உள்நாட்டுப் போரை புகுத்துவதாகவும் ஆயுதமேந்திய தொழிலாளர் படைப்பிரிவுகளை நாட்டுப்புறங்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
இதன் வழியில் காவுத்ஸ்கி, “பாட்டாளி வர்க்கம் மற்றும் ஏழை விவசாயிகளின் சர்வாதிகாரத்தை” செயல்படுத்துவதாக பகிரங்கமாகக் கூறுகிறார். ஏன் இவ்வாறு கூறுகிறார் என்றால், ஏழை விவசாயிகள் அடங்கிய சர்வாதிகாரத்தால், ஏழை விவசாயிகளுக்கு உதவுகின்றனர், கொள்ளை லாபக்காரர்களிடம் இருந்தும் செல்வந்த விவசாயிகளிடம் இருந்தும் தானிய ஏகபோகச் சட்டத்தை மீறிப் பதுக்கி வைத்திருக்கும் உபரி தானிய இருப்புகளை பறிமுதல் செய்கின்றனர்.
காவுத்ஸ்கி தமது பொருளாதாரப் பகுத்தாய்வுக்கு பதில் ஒரு முதல்தரமான கலவைக் கூளத்தை அதாவது கலவையானக் குப்பையை அளித்துள்ளார். மார்க்சியத்துக்கு மாறாக, துண்டுதுக்காணியான தாராளவாத போதனைகளும் முதலாளித்துவ வர்க்கம் மற்றும் பணக்கார விவசாயிகளான குலாக்குகளிடம் அடிபணிவது குறித்த போதனைகளும் காவுத்ஸ்கியிடம் கிடைப்பதாக லெனின் கூறுகிறார்.
காவுத்ஸ்கியின் குழப்பங்கள் எப்படி இருக்கிறது என்பதை லெனின் சரியாக அம்பலப்படுத்துகிறார். ஒருபுறம் ஒப்புக் கொள்ள முடியாமல் இருப்பதால் ஒப்புக் கொள்கிறார், மறுபுறம் தவறு என ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார். காவுத்ஸ்கி மார்க்சியத்தைவிட்டு விலகியப் பிறகு இந்த தடுமாற்றம் அவரின் கருத்துகளில் வெளிப்படுகிறது.
நம்நாட்டிலும் பலர் மார்க்சியத்தை ஒப்பக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதால், மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டதைப் போல நடித்துவிட்டு, நடைமுறையில் அதற்கு எதிராக செயல்படுகின்றனர். மார்க்சியத்தில் உறுதியின்மை என்பது நடைமுறையில் எதிரான விளைவுகளையே ஏற்படுத்தும்.
ருஷ்யாவின் பிரத்யேக நிலைமையை காவுத்ஸ்கி புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்.
முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்கும் இடையே கறாரான வேறுபாட்டைக் காட்டியவர்கள் போல்ஷிவிக்குகள்தான், முந்தியதைச் செய்து முடித்தது மூலம் அவர்கள் பிந்தியதற்கு மாறிச்செல்வதற்கான கதவைத் திறந்து வைத்தார்கள். போல்ஷிவிக்குகளின் இந்தக் கோட்பாடு மட்டுமே புரட்சிகரமான மார்க்சியக் கோட்பாடாகும் என்று லெனின் தெளிவாக காவுத்ஸ்கி போன்றோர்களுக்கு பதிலளிக்கிறார்.
காவுத்ஸ்கி உண்மையாகக் கோருவது எதை என்பதை லெனின் சரியாகத் தொகுத்தளிக்கிறார்.
புரட்சியில்லாமல், கடுமையானப் போராட்டம் இல்லாமல், வன்முறை இல்லாத புரட்சி என்பதுதான் காவுத்ஸ்கி உண்மையாக கோருவதாகும். இது தொழிலாளர்களும் முதலாளிகளும் பதட்டமடையாத வேலை நிறுத்தங்களைக் கோருவதற்குச் சமமாகும்.
காவுத்ஸ்கியின் இத்தகையக் கருத்துடைய சோஷலிசத்துக்கும் தாராளவாதிகளின் கருத்துக்கும் இடையில் வேறுபாடு இல்லாத வகையில் இருப்பதை நாம் காண முடிகிறது.
இன்று மார்க்சியம் பேசிக்கொண்டே வன்முறையில்லாத புரட்சி தேவை என்று கூறுகிற அனைவரும், நூற்றாண்டு பழைமையான காவுத்ஸ்கியின் வாதத்தையே இப்போது, புதியது போன்று முன்வைக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
காவுத்ஸ்கி பற்றி லெனின் தொகுத்தளிப்பதை அறிவதோடு முடித்துக் கொள்வோம்.
கோட்பாட்டைப் பொறுத்தவரை, ஒரு நம்ப முடியாதகலவையான கருத்தை காவுத்ஸ்கி அளித்துள்ளார். இது மார்க்சியத்தை முற்றிலும் கைவிட்டுவிடும் செயலாகும். நடைமுறையைப் பொறுத்தவரை, முதலாளித்துவத்திற்கும் அவர்களின் சீர்திருத்தவாதத்திற்கும் அடிமைப்பட்டதான ஒரு கோட்பாட்டை அளித்துள்ளார்.
காவுத்ஸ்கி போன்ற, பின்பற்றிய மார்க்சியத்தை கைவிட்டு ஓடியதுடன் அதனைக் காட்டி கொடுக்கும் துரோகிகளை இனம் கண்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அவர்களை வெளியேற்ற வேண்டும்.
பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமல்லாத வர்க்கப் போராட்டத்தை ஏற்கும் காவுத்ஸ்கி போன்றோர்களின் கருத்து ஒரு தாராளவாத முதலாளித்துவக் கோட்பாடே ஆகும்.
மார்க்சியத்தை சொல்லளவில் ஏற்றுக் கொண்டு நடைமுறையில் மாறாகச் செயல்படும் தலைவர்கள் காவுத்ஸ்கி வகையினத்தைக் சேர்ந்தவர்களே ஆவர் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சொல்லளவில் வர்க்கப் போராட்டம் என்று பேசிக் கொள்ளும் தலைவர் யாராக இருந்தாலும் உண்மையில் காவுத்ஸ்கி போன்று புரட்சிகரமல்லாத வர்க்கப் போராட்டத்தையே விரும்புகின்றனர், அப்படிப்பட்டவர்களின் கருத்து தாராளவாத முதலாளித்துவக் கோட்பாடே ஆகும்.
சொல்லளவிலும் செயலளவிலும் மார்க்சியவாதியாகச் செயல்படும் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் வழி நின்று, இன்றைய சமூகத்தை மார்க்சிய வழியில் மாற்றுவோம் என்று கூறி வகுப்பை நிறைவு செய்கிறேன்.
அ.கா.ஈஸ்வரன்
9884092972
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு